Saturday 6 November 2021

நவம்பர் புரட்சி தின வாழ்த்துகள்

தொடர்ந்து உற்சாகமூட்டும் யுகப்புரட்சி

--டி ராஜா

பொதுச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

            ரஷ்யப் புரட்சியைப் போல (1917, அக்டோபர் 25 புதிய காலண்டர்படி நவம்பர் 7) உலகின் மனிதகுல வரலாற்றில் சில நிகழ்வுகள் மட்டுமே மனித சமூகம் பற்றிய நமது புரிதலை மாற்றிடும். மக்களின் புரட்சிகர விழைவுகளைப் பிரெஞ்ச் புரட்சி தூண்டினாலும் பின்னர் எழுச்சிபெற்ற போனபார்ட்டிசம் எனும் (அரச பாரம்பரிய ஆட்சியை மீண்டும் கொண்டுவர விரும்பிய) அரசியல் கருத்தோட்டத்திற்கு அது பலியானது; ஆனால் ரஷ்ய புரட்சி மட்டுமே சரித்திரத்தில் முதன் முறையாகத் தொழிலாளர்களின் ஆட்சியை நிறுவுவதில் வெற்றி பெற்றது. சுரண்டல், சமத்துவமின்மை மற்றும் அநீதி இல்லாத ஒரு சமூகத்தைப் பல தத்துவவாதிகள், கவிஞர்கள் கற்பனை செய்து பார்த்துள்ளார்கள்; ஆனால் மாமேதை லெனின்தான், அவரது தலைமையில் ரஷ்ய மக்கள் –சமூகத்தை விடுவிக்கும் காரல் மார்க்ஸ், பெடரிக் ஏங்கெல்சின் தத்துவத்தைப் பின்பற்றி – உலக வரைபடத்தில் சோவியத்களை ஆட்சி பீடம் ஏற்றினார்கள்.   

            பரபரப்பான நிகழ்வுகளின் சிறப்புமிக்க அந்தத் தருணத்தில் அங்கே இருந்த அமெரிக்கப் பத்திரிக்கையாளர் ஜான் ரீடு அந்த வரலாற்று மாற்றத்தை ‘உலகைக் குலுக்கிய 10 நாட்கள்’ என்ற நூலில் விவரித்துள்ளார். மார்க்சியத் தத்துவக் கருத்துக்களைக் கூர்மையாக ஆய்ந்து, அதனைத் துணிச்சலாக நடைமுறைப்படுத்திய அடித்தளத்தில் ரஷ்யப் புரட்சி கட்டியமைக்கப்பட்டது. மார்க்ஸியப் புரட்சிகரத் தத்துவமே ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோஷலிசம், சர்வதேசியம் என்ற விழுமியங்களை ரஷ்யப் புரட்சிக்கு ஊட்டி, முதலாளித்துவச் சுரண்டல் பிடியிலிருந்தும் (‘இரணியன் போல் அரசாண்ட) ஜார் எனும் பேரிசைந்த பாவி’யின் சர்வாதிகாரத்திலிருந்தும் மக்களை விடுவித்தது. இந்தத் தத்துவார்த்தக் கோட்பாடுகளே ரஷ்யப் புரட்சியை உலக சரித்திரத்தில் புதுயுகம் அமைக்கும் நிகழ்வைச் சாத்தியப்படுத்தி உலகம் முழுவதும் உள்ள விடுதலைப் போராட்டங்களுக்கு புதிய ஊக்கமும் உற்சாகமும் அளித்தது.

புரட்சியின் தருணம் – மார்க்ஸியத் தத்துவம்

            புதிய சமுதாயம் அமைப்பதில் மார்க்ஸியத்தின் பங்கு குறித்து ஐரோப்பா முழுவதும் சூடான விவாதங்கள் நடந்துகொண்டிருந்தபோதே, லெனின்தான் குறிப்பிட்ட ரஷ்ய நிலைமைகளுக்கு ஏற்ப மார்க்ஸித்தை அங்கு அமலாக்கிவிட்டார். அந்நாட்களில் ஆலைத்தொழில்கள் மிகவும் முன்னேறியிருந்த ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளில்தான் புரட்சி நடைபெறுவதற்கான சரியான சூழ்நிலைகள் கனிந்திருக்கும் என மார்க்ஸிய வட்டங்களில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக முதலாவது சோஷலிசப் புரட்சி பின்தங்கிய ரஷ்யாவில் நடைபெறக் காரணம், சுயமான புத்திசாலித்தனத்துடன் லெனின் அதற்குத் தலைமை ஏற்றதும், கொடுங்கோல் சர்வாதிகாரத்தைத் தூக்கியெறியத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கூட்டணிக்கு இணக்கமான தந்துவார்த்தக் கோட்பாட்டை அளித்ததுமே ஆகும்.

            ரஷ்யப் புரட்சி மற்றும் அது தொடங்கி உலகில் நடந்த அத்தனை விடுதலைப் போராட்ட அனுபவங்களிலிருந்தும் நாம் உணர வேண்டிய உண்மை ஒன்று உள்ளது; அது, அனைத்து வகையிலான மற்றும் வடிவத்திலான சுரண்டல், கீழ் மேல் அடுக்கு அமைப்பை அர்த்தமுள்ள திறனுடன் துரத்துவதற்கு (இரண்டு காரணிகள்) கட்டாயமாகத் தேவை; அவை,  நன்கு சிந்தித்து வகுக்கப்பட்ட தத்துவக் கோட்பாடு மற்றும் அதனை இடம் பொருள் ஏவல் என அங்கு நிலவும் சூழல் உணர்வோடு பயன்படுத்துவது என்ற ஞானம்.

தத்துவமும் நடைமுறையும் -- லெனின்         

            மார்க்சியவாதிகளுக்கும் சமூக ஜனநாயகவாதிகளுக்கும் இடையே விவாதங்கள் உச்சத்தில் இருந்தபோது லெனின் எழுதினார்: “புரட்சிகரத் தத்துவக் கோட்பாடு இல்லாமல் எங்கும் புரட்சிகர இயக்கம் இருக்க முடியாது. (ஆனால்) புதுநாகரீகமாகப் பிரச்சாரம் செய்யப்படும் சந்தர்ப்பவாதம், மிகக் குறுகிய வடிவங்களிலான நேரடிச் செயல்பாடுகளில் (அவசரமாக) இறங்கத் துடிக்கும் இளம்பிள்ளைவாதம் இரண்டும் ஒன்றோடு ஒன்று கைகோர்த்துச் செல்லும் தருணத்தில் (அதாவது, கள எதார்த்த சூழல்கள் பக்குவப்படாத நிலையில்) மேற்சொன்ன கருத்தைக் கட்டாயமாக வற்புறுத்த முடியாது” (லெனின், 1902). சுரண்டலுக்கு முடிவு கட்டும் போராட்டத்தில் புரட்சியின் தத்துவம் மற்றும் அதனைச் செயல்படுத்துவது குறித்த இக்கருத்து இனிவரும் தலைமுறைகளுக்கும் பொருத்தமானதும் உற்சாகமளிப்பதுமாகும். புரட்சியின் செய்தி மிகத் தெளிவானது: கோட்பாட்டைக் குறிப்பிட்ட ஸ்தூலமான சூழல்களுக்கு (ஏற்பப்) பயன்படுத்த வேண்டும்.

இந்தியாவில் ரஷ்யப் புரட்சியின் தாக்கம்

            ரஷ்யப் புரட்சி பற்றிய செய்தி இந்தியாவில் உற்சாகத்துடன் வாழ்த்தி வரவேற்கப்பட்டது. அச்செய்தி இந்திய விடுதலைப் போராட்டத்திற்குப் புதிய நம்பிக்கை வாயில்களையும் திட்டங்களையும் வழங்கியது. இந்திய மக்கள் விரைவாகச் செங்கொடியின்பால் ஈர்க்கப்பட்டனர்; நமது நாட்டில் நிலவும் அனைத்து வகையான சுரண்டல்களுக்கு முடிவுகட்ட, வெளிநாட்டு ஆட்சியின் கீழ் நாட்டைப் பீடித்திருக்கும் சமத்துவமின்மை, சாதி, மத வேற்றுமை, பாலினப் பாகுபாடு ஒழிப்பதற்குச் செங்கொடி வழங்கிய உறுதிமொழிகளின்பால் மக்கள் ஈர்க்கப்பட்டனர். மெல்ல மெல்ல ஆயிரக் கணக்கில் இளைஞர்கள் சோஷலிச இந்தியா என்ற நோக்கத்தோடு அடையாளப்படுத்திக் கொள்ளத் தொடங்கினர்; அவர்கள் நமது விடுதலைப் போராட்டத்தில் மிகவும் முற்போக்கான நிலைத்த பங்களிப்புகளைச் செயல்படுத்தலாயினர்.

            சுயேச்சையான அரசியலமைப்பு நிர்ணய சபை, முழுமையான சுதந்திரம், தொழிலாளர் உரிமைகள், ஜமீன்தாரி முறை ஒழிப்பு அல்லது அடிப்படை உரிமைகள் போன்ற கோரிக்கைகளாகட்டும், தன்னலமற்ற களப்பணி மற்றும் உச்சபட்ட தியாகம் இவற்றை ஆற்றுவதிலாகட்டும், அன்று புதிதாய்ப் பிறந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு முனைந்து நின்றது; சிபிஐ மட்டுமின்றி, மற்றவர்களும், பகத்சிங் போன்ற ரஷ்யப் புரட்சியின் லட்சியங்களால் ஆகர்ஷிக்கப்பட்டவர்கள் இவற்றிற்குக் காரணமாக இருந்து நிரூபித்தார்கள். இந்திய எதார்த்த நிலைமைகளின் சிக்கல்களை நமது தலைவர்களும் நன்கு புரிந்து கொண்டிருந்தார்கள்; எனவேதான் 1925ல் முதலாவது கட்சிக் காங்கிரஸ் மாநாட்டிலேயே தீண்டாமை ஒழிப்பு குறித்து உணர்ச்சிகரமான கருத்துகளை வெளியிட்டனர்.

இடதுசாரிகள் தொடங்கிய அமைப்புகள்

           புரட்சிகரக் கோட்பாட்டால் வழிநடத்தப்பட்ட இடதுசாரிகள் முதலில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மூலம் (1920) ஆலைத் தொழிலாளர்களைத் திரட்டினர்; மாணவர்களை அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (ஏஐஎஸ்எப், 1936) மூலமும், விவசாயிகளை அனைத்திந்திய விவசாயிகள் சங்கம் (கிஸான் சபா, 1936) மூலமும், எழுத்தாளர்கள் இலக்கியக் கர்த்தாக்களை முற்போக்கு எழுத்தாளர் அஸோசியேஷன் (1936) மூலமும், கலைஞர்களை இந்திய மக்கள் நாடக மன்றம் (இப்டா 1943) மூலமும் திரட்டி அமைத்தனர். இந்த அனைத்து அமைப்புகளும் காலத்தால் எல்லா சோதனைகளையும் வென்று நிலைத்து நின்று சமூகத்தின் மிகவும் முற்போக்கான பகுதிகளின் பிரதிநிதிகளாக விளங்குகின்றன.

இடதுசாரிகள் முன் இன்றுள்ள கடமைகள்

            புகழார்ந்த இந்த வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்ற இடதுசாரிகள் முன் இன்றிருக்கும் கடமை, விடுதலை இயக்கக் காலத்தில் இருந்தது போலச் சிக்கலானது. நாம் வாழும் தற்போதைய காலத்தில் சாதிப் பாகுபாடு, வகுப்புவாதப் பிளவுபடுத்தல்கள் மற்றும் பாலின ஏற்றத் தாழ்வுகள் பாஜக–ஆர்எஸ்எஸ் ஆட்சியில் புதுப்பிக்கப்பட்ட தீவிரத்துடன் நம்மை வெறிக்கின்றன. அவை பாடுபட்டு வென்ற சுதந்திரங்களையும் விடுதலை இயக்கத்தின் உள்ளார்ந்த பாரம்பரியங்களையும் தின்று தீர்க்கின்றன. அதே நேரம் மக்கள் பணவீக்கம், சமத்துவமின்மை, பசி  பற்றாக்குறையில் உழல்கின்றனர். புதிய தாராளமய முதலாளித்துவத்தின் தாக்குதல் நமது தேசியச் சொத்துக்களை அரித்துக் கபளீகரம் செய்கிறது. பிளவுபடுத்தும் ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளின் சவால் கடந்த சில ஆண்டுகளில் வானளாவிய விகிதாசாரத்தில் அதிகரித்துள்ளது. பற்றி எரியும் அன்றாட முக்கியப் பொருளாதாரப் பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தை ஆர்எஸ்எஸ் இயக்கப் பிரச்சார இயந்திரங்கள் திசைதிருப்ப முயல்கின்றன; அனைத்துவிதமான எதிர் கருத்துக்கள் மீதும்  தேசவிரோதம் என்ற முத்திரையைக் குத்துகின்றனர்.

            இந்நெருக்கடியில் மூழ்கிய நிலையில் தத்துவக் கொள்கையின் முக்கியத்துவம் மற்றும் அதன் போராட்டக் களம் மிகக் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. மதசார்பற்ற, ஜனநாயக, முற்போக்கு எதிர் கட்சிகள் ஒன்று சேர்வதும், பாஜகவைத் தோற்கடிப்பதும்தான் இத்திட்டத்தின் உடனடியான முக்கிய பகுதியாகும்.

ஆர்எஸ்எஸ் – பாஜகவுக்கு எதிரான கொள்கைப் போராட்டம்

            மனுச்சுருதியைப் பக்தியுடன் பின்பற்றும் ஆர்எஸ்எஸ் கொள்கை, பிளவுபடுத்தும், வன்முறை கருத்துக்களிலும் அரசியலிலும் ஆழமாக வேர்கொண்டுள்ளது. நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான அவர்களின் கண்டன வெறுப்பு மற்றும் நாட்டின் அரசியல் கட்டமைப்பை மதம் சார்ந்ததாக நிறுவிடவும், ஆணாதிக்கம், சாதி, மதம் மற்றும் பாலினம் என்ற வழிமுறைகளோடு படிநிலைச் சமூகமாகவும் மாற்றிடவும் விரும்பும் அவர்களின் உறுதியான அணுகுமுறை இவற்றோடு அவர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

            தேசத்தின் இன்றைய சூழல் பாஜக – ஆர்எஸ்எஸ் கூட்டிற்கு எதிரான சமரசமற்ற தத்துவக் கொள்கைப் போராட்டம் நடத்தக் கோருகிறது. இந்தப் போராட்டத்தில் இடதுசாரிகள் முக்கிய பங்காற்ற வேண்டும். அது ஒன்றே நம்மை மக்களுடன் பிணைத்து அரசியல் மற்றும் தேர்தல் களங்களில் நமக்கு வெற்றியைத் தேடித் தரும். இடதுசாரிகள் வகிக்கும் பங்கு, மதசார்பற்ற ஜனநாயகச் சக்திகளிடையேயும் தாக்கத்தையும் தத்துவார்த்தக் கொள்கைப் பிரச்சனைகளில் தெளிவையும் ஏற்படுத்தும்.

நாம் கடமையாற்றத் தொடர்ந்து உற்சாகமூட்டும் யுகப்புரட்சி

            ரஷ்யப் புரட்சி ஆண்டுவிழாவைக் கொண்டாடுவது மற்றும் உழைக்கும் வர்க்கத்தினரை ஒன்றுசேரத் தொழிலாளர்களுக்கு அது விடுத்த அறைகூவலைப் பின்பற்றுவது, இன்றைய நமது காலகட்டத்தில் – தொழிலாளர் வர்க்கம் மற்றும் மதசார்பற்ற ஜனநாயகக் கட்டமைப்பின் மீது மூர்க்கமான தாக்குதல்கள் நடத்தப்படும் இன்றைய சூழலில் -- கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

            யுகப் புரட்சி நாளின் ஆண்டுவிழாவில் நாம் கூடுவது மிக முக்கியத்துவம் பெறுவதற்கான ஒற்றைக் காரணம் உள்ளது; அது, வரலாற்றின் அந்த ஒரே நிகழ்வு மற்றும் அதனை நினைவூட்டும் கொண்டாட்டங்கள் மட்டுமே சுரண்டும் புதிய தாராளமய முதலாளித்துவ அமைப்பு முழுவதற்கும் நடுக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளதேயாகும். (‘ஐரோப்பா முழுவதையும் ஒரு பூதம் பிடித்தாட்டுகிறது’ எனக் கம்யூனிஸ்ட் அறிக்கை கூறுவது போல, ரஷ்யாவின் நவம்பர் புரட்சி மற்றும் அதன் ஞாபகங்கள் உலக முதலாளிகளை நடுக்கம் கொள்ளச் செய்கிறது.)

சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகும், ரஷ்யப் புரட்சி வழங்கிய பாடங்கள் உலகம் முழுவதும் உள்ள மக்களை, ஒரு நூற்றாண்டு கடந்த பிறகும், உற்சாகப்படுத்துகிறது. ‘ஆகாவென்று எழுந்த யுகப் புரட்சி’ இனிவரும் தலைமுறைகளின் புரட்சியாளர்களையும் நீதிக்காகப் போராடும் போராளிகளையும் வரும் காலங்களிலும் தொடர்ந்து உற்சாகப்படுத்தும்!  

உலகம் முழுவதும் உள்ள சமூகநீதிப் போராளிகளுக்கு

நவம்பர் புரட்சி தின தோழமை வாழ்த்துகள்!

--நன்றி: நியூஏஜ் (நவ.07 –13)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

                                              

  

No comments:

Post a Comment