Thursday 22 July 2021

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 41 ஜெகந்நாத் சர்க்கார்

 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் - 41


ஜெகந்நாத் சர்க்கார் :  

பீகாரில் கம்யூனிச இயக்கத்தைக் கட்டியவர் 

--அனில் ரஜீம்வாலே

--நியூ ஏஜ் மே 9-- 15

ஜெகந்நாத் சர்க்கார் 1919 செப்டம்பர் 25ம் நாள் ஒரிசா மாநில பூரியில் பிறந்தார். அவரது தந்தை டாக்டர் அகில் நாத் சர்க்கார் (AN சர்க்கார்) பீகாரில் புகழ்வாய்ந்த மருத்துவர், பீகார் மற்றும் ஒரிசா பிராந்தியத்தின் அசிஸ்டண்ட் சர்ஜன். தாய், பீனாபாணி, மகனை வயிற்றில் கருவாகச் சுமந்தபோது பூரி ஜெகந்நாதர் ஆலையத் தேரை வடம் பிடித்து இழுத்தார் என்பார்கள்; அது புனிதக் கடமை எனக் கருதப்படுகிறது. எனவே மகனுக்கு ‘ஜெகந்நாத்’ எனப் பெயரிட்டார். புகழ் வாய்ந்த வரலாற்றாசிரியர் சர் ஜுடுநாத் சர்க்கார் அவருடைய மாமா ஆவார்.

பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனை (PMCH) ஆலைய மருத்துவப் பள்ளி என்று நிறுவப்பட்டது. 1925ல் அது வேல்ஸ் இளவரசர் மருத்துவக் கல்லூரி ஆனது. 1924ல் பாட்னாவுக்கு மாற்றப்பட்ட டாக்டர் ஏ என் சர்க்கார் ஜுடுநாத் சர்க்கார் வீட்டில் தங்கினார்.

பாட்னாவில் பெருமை வாய்ந்த ராம் மோகன் ராய் செமினரிப் பள்ளியில் படித்த ஜெகந்நாத் 1935ல் தனித்த சிறப்புத் தகுதியுடன் மெட்ரிக் தேர்வானார். தொடர்ந்து முதல்நிலையே பெற்றார். பிறகு பாட்னா அறிவியல் கல்லூரியில் ISc (இந்தியன் ஸ்கூல் சர்ட்டிபிகேட், 12வது வகுப்பு) படிப்பில் சேர்க்கப்பட்டார். அங்கே அவர் ‘ரோல் நம்பர் 13’ என்று புகழ்பெற்றார். அவருடைய மாமா ஆசிரியராக இருந்த பாட்னா கல்லூரியில் பிறகு சேர்ந்து 1937ல் பி ஏ பட்டம் பெற்றார்.

அங்கேதான் எதிர்காலத் தலைவர்களான சுனில் முகர்ஜி, அலி அஷ்ரஃப் போன்ற பிறரும் படித்தார்கள். பாட்னாவில் அவருக்குச் சந்திர ஷேகர் சிங்குடன் தொடர்பு ஏற்பட்டது. விரைவிலேயே ஜெகந்நாத்’தா, அவர் அப்படித்தான் அன்புடன் அழைக்கப்பட்டார், மாணவர் அமைப்பான ஏஐஎஸ்எஃப் மற்றும் கட்சியைப் பற்றி அறிந்து கொண்டார். பாட்னாவிலும் பீகாரிலும் அப்போது ஏஐஎஸ்எஃப் வளர்ந்து எழுச்சிபெற்று வந்தது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைதல்

சிபிஐ சார்பாகப் பிசி ஜோஷியும், காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி சார்பாக ஜெயப்பிரகாஷ் நாராயணனும் பீகாரில் சிபிஐ கிளை அமைப்பதில்லை என்ற உடன்பாடு செய்திருந்தனர்; காரணம், கம்யூனிஸ்ட்களும் சோஷலிஸ்ட்களும் நல்ல புரிதலோடு இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் விரைவிலேயே, குறிப்பாக இரண்டாவது உலக யுத்தம் மற்றும் நடைமுறைத் தந்திரங்கள் வகுப்பது தொடர்பாக, முரண்பாடுகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட்கள் 1939 மூன்கரில் ஒரு கூட்டம் நடத்தி பீகாரில் சிபிஐ கிளை அமைப்பை நிறுவினர். கமிட்டி அமைக்கப்பட்டது. ஜெகந்நாத்’தா அப்போது கட்சி உறுப்பினராகவில்லை. அவரைச் சேரும்படி வேண்டியபோது எம்ஏ தேர்வு எழுதிய பிறகு இணைகிறேன் எனப் பதிலளித்தார். ஆனால் விரைவிலேயே 1940ல் எம்ஏ தேர்வு எழுதாமலேயே கட்சியில் இணைந்தார்.  பாட்னா, கடம்குவான் என்ற இடத்தில் அழுக்கு மண்டிய இருட்டு அறையில் மாணவரான ஜெகந்நாத் சர்க்கார், ஏற்கனவே கட்சி உறுப்பினரான சுரேந்திர ஷர்மா மற்றும் மித்னாபூரிலிருந்து வந்த ‘தேசியப் புரட்சியாளர்’ அஜீத் மித்ரா மூவரும் கூடி முதல் கட்சிக் கிளையைப் பீகாரில் அமைத்தனர். மூன்கரில் அமைக்கப்பட்ட பிரதேச கமிட்டி (PC) சார்பில் அலி அஷ்ரஃப் கலந்து கொண்டார். இப்படியாகப் பாட்னாவில் முதலாவது கட்சி அமைப்பு அமைக்கப்பட்டது.

கட்சி அப்போது தலைமறைவாகச் செயல்பட்டது. தலைமறைவு தொழில்நுட்ப (‘tech’) பிரிவின் பொறுப்பு ஜெகந்நாத்’தாவுக்கு வழங்கப்பட்டு கட்சியின் தலைமறைவு முகவரியாகச் செயல்பட்டார். பம்பாய் தலைமையகத்திற்கு அனுப்ப வேண்டிய தகவல்கள், கடிதங்களும், அங்கிருந்து வருவனவும் அவர் மூலமாக நடந்தது. அப்படிக் கடிதம் சுமக்கும் ‘கூரியர்’களாக பெகுசராயின் தேவ்கி நந்தன் சிங், ஹில்சா பகுதியைச் சேர்ந்த பவுல்வந்த் பிரசாத் மற்றும் மூன்கரின் ஹரி சின்ஹா மூவரும் இருந்தனர்.

சாப்ரா, மூன்கர், தர்பங்கா, பகல்பூர், பாட்னா முதலிய இடங்களில் 1940 ஜனவரி 26ல் மாணவர்களின் பெரும் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றன.  டால்மியா நகரின் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் இறங்கினர்.  

            அனுபவக் குறைவு காரணமாகச் சுனில் முகர்ஜி, ராகுல் சாங்கிருத்யாய்னா, விஸ்வநாத் மாதூர், பிபி முகர்ஜி, ரத்தன் ராய் முதலான பல தோழர்கள் கைதாயினர்.

            எனவே தொடர்ந்து புதிய பிரதேசக் கமிட்டிகள் அமைக்க வேண்டியதாயிற்று. 1940ல் பிசி ஜோஷி ஒரு ‘கூரியர்’ தோழர் மூலம் ஜெகந்நாத்’தாவைக் கட்சி உறுப்பினர்கள் பட்டியலை அனுப்புமாறு தகவல் அனுப்பினார். மற்றுமொரு தகவல் மூலம் பயிற்சி பெறுவதற்காக ஜெகந்நாத்’தாவை உடனடியாகக் கல்கத்தா விரையும்படிக் கூறப்பட்டது. ஜெகந்நாத்’தா எம்ஏ தேர்வை எழுதாது, பிறகு ஒருபோதும் அவர் அத்தேர்வை எழுதவில்லை, அமைதியாக வீட்டைவிட்டுக் கல்கத்தாவுக்குப் புறப்பட்டார்.

            கல்கத்தாவில் பவானி சென் (இவரைப் பற்றி இந்த வரலாற்றுத் தலைவர்கள் கட்டுரைத் தொடரில் 15வது கட்டுரை வெளிவந்தது) தினமும் அவருக்குச் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்குகள்) CPSUB அமைப்பின் வரலாறு பற்றிய பாடத்தில் சொற்பொழிவுகள் நடத்தினார். பாடம் நடத்தி முடித்த பிறகு அவருக்குக் கேள்விகள் கொடுக்கப்பட்டு அதற்கான விடைகளை எழுதும்படி கூறப்பட்டார். பின்னர் நிருபன் சக்ரவர்த்தி (Nripen Chakravarty) மற்றும் பஞ்சு கோபால் பண்டாரி இணைந்து கொண்டனர்.

            பவானி சென்னுக்கு அடுத்து சோமநாத் லாகிரி (இவரைப் பற்றி இந்த வரலாற்றுத் தலைவர்கள் கட்டுரைத் தொடரில் 12வது கட்டுரை வெளிவந்தது) கட்சி மற்றும் தொழில்நுட்ப அமைப்பு குறித்து பாடம் எடுத்தார். இதன் மத்தியில் கட்சி ‘மக்கள் யுத்தம்’ பற்றிய அணுகுமுறையை நிறைவேற்றியது. எனவே சோமநாத் லாகிரி மேற்கொண்டு விளக்க நேரம் இல்லை என்று கூறி ஒரு தடிமனான தொகுப்பு ஆவணங்களை அவரிடம் கையளித்து அவற்றைப் படித்த பிறகு திரும்ப ஒப்படைக்கும்படி கூறினார்.

பிரதேசக் கட்சிச் செயலாளர் (1941)

            பொலிட் பிரோ உறுப்பினர் என்ற முறையில் லாகிரி பீகாரில் மன்ஸார் ரிஸ்வி, ஷ்யாமல் கிஷோர் ஜா, யோகேந்திர ஷர்மா மற்றும் ஜெகந்நாத்’தா உள்ளடக்கிய புதிய புரொவின்சியல் கமிட்டியை அமைத்தார். அண்மையில் கட்சியில் சேர்ந்த, முதுகலை பட்டப்படிப்பைப் பாதியில் விட்ட  22 வயதேயான இளைஞரான ஜெகந்நாத் சர்க்கார், மிகச் சிரமமான காலகட்டத்தில் (1941) கட்சிப் பிரதேசக் கமிட்டியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மத்தியில் ஜெகந்நாத்’தா கிரிதிஹ் மற்றும் பிற பகுதிகளுக்கு கட்சி மற்றும் தொழிற்சங்கப் பணிகளுக்காகச் சென்றார்.

            எஸ் ஜி சர்தேசாய் (இவரைப் பற்றி இந்த வரலாற்றுத் தலைவர்கள் கட்டுரைத் தொடரில் 2வது கட்டுரையாக வெளிவந்தது) மத்திய கமிட்டி பிரதிநிதியாகப் பீகார் வருவது வழக்கம். ஏற்கனவே ஜெகந்நாத்‘தாவுடன் அவருக்கு அறிமுகம் இருந்தது. கல்கத்தாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பார்வையாளராகச் சென்றிருந்த ஜெகந்நாத்’தா அங்கு அவரை முதன் முறையாகச் சந்தித்தார். எஸ் ஜி சர்தேசாயின் மாமா புகழ்பெற்ற வரலாற்று அறிஞரான ஜி எஸ் சர்தேசாய்; அவர் சர் ஜுடுநாத் சர்க்காரின் நெருங்கிய நண்பராவார். ‘மார் பாகவ்’ (பிரிட்டிஸாரை வெளியே அனுப்பு) என்னும் 1946 தீர்மானத்தோடு சேர்த்து பிரதேசக் கமிட்டி உறுப்பினர்களை எஸ் ஜி சர்தேசாய் நன்கு அறிந்து வைத்திருந்தது ஜெகந்நாத்’தாவை ஆழமாகக் கவர்ந்தது. பிறகு ஜெகந்நாத்’தா கிரிதிஹ் மற்றும் ஜாரியா போன்ற இடங்களின் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் சங்கம் உட்பட மற்றவர்களோடு பணியாற்றச் சென்றார். அங்கே அவர் சதுரானன் மிஸ்ரா (பின்னர் ஒன்றிய விவசாய அமைச்சராக இருந்தவர்), சரத் பட்நாயக், கிருபா சிந்து கவுன்டியா மற்றும் பிறரைச் சந்தித்தார். மிகவும் மோசமான பணிநிலைமைகளில் தொழிலாளர்கள் பாடுபட்டனர், அதே போல அவர்களோடு பணியாற்றுவதும் கடினமாக இருந்தது. அங்கே சபலேந்து பட்டாசாரியா முதலான தலைவர்களைச் சந்தித்தவர் பல வேலைநிறுத்தங்களிலும் கலந்து கொண்டார்.

‘பிடிஆர் கால’த்தில் ஜெகந்நாத்’தா

            இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1947 ஆகஸ்ட் 15ல் இந்தியாவின் விடுதலையை வரவேற்றது. பிசி ஜோஷி பிரம்மாண்டமான பேரணிகள், ஊர்வலங்கள், கூட்டங்கள் போன்றவற்றை விடுதலையை ஆதரித்து நடத்தச் செய்தார். ஆனால் 1947 இறுதியில், 1948 தொடக்கத்தில் இடது குழுப் போக்கு சாகசப் பாதை, பி டி ரணதிவே தலைமையில் சிபிஐயில் அதிகாரத்திற்கு வந்தது. அவர் பிசி ஜோஷிக்குப் பதிலாகப் பொதுச் செயலாளர் ஆனார். ‘இந்த விடுதலை ஓர் ஏமாற்று, பொய்’ என்ற முழக்கத்தோடு, சோஷலிச ஆயுதப் புரட்சிக்கு அறைகூவல் விடுத்ததன் கீழ் கட்சியின் அழிவு தொடங்கியது. கட்சி முற்றாகத் தனிமைப்படுத்தப்பட்டு சிதறடிக்கப்பட்டது. மூன்றே ஆண்டுகளில் 90ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட கட்சி வெறும் 9ஆயிரமாகச் சுருங்கியது!

            ஜெகந்நாத்‘தாவும் வேறு சிலரும் அவசர கலந்தாலோசனைகளுக்காகப் பீகாரிலிருந்து கல்கத்தாவிற்கு அழைக்கப்பட்டனர். தலைமையகம் பம்பாயிலிருந்து கல்கத்தாவுக்கு மாற்றப்பட்டது.

            கண்டுபிடிக்கப்பட்டு, கைதாவதிலிருந்து தப்பி பல வழிமுறைகளையும் பயன்படுத்தி திட்டமில்லாத இடங்களில் நின்றும், தங்கியும் ஜெகந்நாத் சர்க்கார், இந்திரதீப் சின்ஹா (இவரைப் பற்றி இத்தொடரில் 3வது கட்டுரை வந்தது) மற்றும் யோகேந்தர ஷர்மா இரகசியமாகக் கல்கத்தா சென்றனர். கல்கத்தா பாக் பஜாரில் உள்ள ஜெகந்நாத்‘தா மாமா இல்லத்தில் அவர்கள் தங்கினர்.

            சில நாட்களுக்குப் பிறகு புதர்களுக்கு மத்தியில் இருந்த பாழடைந்த மசூதிக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்; திடீரென அங்கே பிடிஆர் தோன்றினார். கட்சியின் பாதையை விளக்கியவர், பின்னர் 1949 மார்ச் 9ம் தேதி கட்சி துவக்க உள்ள காலவரையறையற்ற இரயில்வே வேலைநிறுத்தத்தைப் பற்றி விளக்கினார். இறுதியில் பிடிஆர் கூறினார்: “இரயில்வே வேலை நிறுத்தம் தொடங்குவது இந்தியாவில் சோஷலிசப் புரட்சியின் தொடக்கம்.” அந்த மூவரையும் உடனே திரும்பும்படி அவர் கூறினார்.

            அனைத்து ரயில் புகைவண்டிகளும் மகிழ்ச்சியாக எப்போதும்போல் ஓட, இரயில்வே வேலை நிறுத்தம் முழுவதுமாகத் தோல்வியடைந்தது! ஜெகந்நாத்’தாவும் மற்றவர்களும் இரயில்வே பாதைகளைப் பார்த்தபடி இருக்க, ‘சோஷலிசப் புரட்சி’யின் எதிர்காலம் சிதறி நொறுங்கியது! அவர்களுடைய அறைகூவல் அழைப்பைத் தொழிலாளி வர்க்கம் செவிமடுத்துக் கேட்கவில்லை.

            பிடிஆர் கோபம் கொண்டு யாரெல்லாம் இதற்குக் காரணம் எனக் கண்டுபிடிக்க அவர்களுக்கு உத்தரவிட்டார். எந்தத் தகவல்களையெல்லாம் திரட்டமுடியுமோ அவற்றை ஜெகந்நாத்‘தாவும் மற்றவர்களும் அறிக்கையாக அனுப்பினர். இதன் மத்தியில் முஸாஃபர்ஃபூர் சென்ற அவர்கள் அங்கே கிருஷ்ணகுமார் கன்னா என்ற மாணவனின் மறைவிடத்தைப் போலீஸ் சுற்றிவளைத்ததைப் பார்த்தனர். சந்திரஷேகர் சிங் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தார். இயற்கைக் கடன் கழிப்பதைப்போல ஜெகந்நாத்’தா தன்னைச் சோளக்காட்டில் மறைத்துக் கொண்டாலும், கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.  அவர் கல்கத்தா, ராஞ்ஜி முதலான சிறைகளில் அடைக்கப்பட்டார். சிறையில் அரசியல் வகுப்புகளை எடுத்தார். அவர் நிதானமான மென்மையான பேச்சாளர், அவருடைய விளக்கவுரை சொற்பொழிகள் பெரிதும் விரும்பப்பட்டது.

            அந்த நேரத்தில் பினோத் முகர்ஜி (வினோத் முகர்ஜி) பீகார் கட்சிச் செயலாளராக இருந்தார். ஜெகந்நாத் சர்க்காரும் மற்றவர்களும் சிறையிலிருந்து தப்ப உத்தரவிட்ட அவர் தோழர்களை அதற்கேற்பத் திட்டமிடச் சொன்னார். ஜெகந்நாத்‘தாவுக்கு உடன்பாடு இல்லை எனினும் கட்சிக் கட்டளையை ஏற்க வேண்டியிருந்தது. ஏணி, கயிறு, போலீஸ்காரர்களை மயக்கமடையச் செய்ய மருந்துகள், சன்னல் கம்பிகளை அறுக்க அரம் முதலிய அனைத்தும் தயார் செய்து திட்டம் முழுமையானது. ஆனால் திட்டத்தைக் கைவிட வேண்டி வந்தது.

            இதனிடையே LPPDயின் (நீடித்த அமைதிக்காகவும், மக்களுடைய ஜனநாயகத்திற்காகவும், ‘For a Lasting Peace, For People’s Democracy’ ) தலையங்கம் வெளிவந்து எழுச்சியை ஏற்படுத்தியது. LPPD காமின்ஃபார்மின் (கம்யூனிஸ்ட் தகவல் பிரோ அமைப்பின்) அதிகாரபூர்வ இதழாகும். அத்தலையங்கத்தின் பகுப்பாய்வு பிடிஆர் கூறும் கருத்தோட்டத்துடன் பொருந்தவில்லை. ஏற்கனவே கட்சியில் அதிருப்தி நிலவியது, தற்போது தலைமையை மாற்ற வேண்டும் என்ற கோரிகை விரைந்து வலுப்பெற்றது. பிடிஆர் நீக்கப்பட்டு முதலில் சிஆர் (சி ராஜேஸ்வர ராவும்) பிறகு அஜாய் கோஷ் (1951) பொதுச் செயலாளர் ஆனார்கள்.

            சிறையிலிருந்து விடுதலையான பிறகு ஜெகந்நாத்‘தா புதிய சூழ்நிலையில் கட்சியை மறுகட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டார். கட்சியின் பீகார் கிளை பொதுத் தேர்தல்களில் பங்கேற்பது என முடிவு செய்தது.

1952 – 56 காலகட்டம்

            1952ல் மீண்டும் ஜெகந்நாத் சர்க்கார் கட்சிச் செயலாளராகி, 1956 வரை அப்பொறுப்பில் இருந்தார். அவருடைய தலைமையில் கட்சி விரைவாக வளர்ந்து நிலைநிறுத்திக் கொண்டு பல பெருந்திரள் போராட்ட இயக்கங்களை அமைத்து நடத்தியது. பாட்னா பிஎன் கல்லூரியில் 1955ல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் டினா நாத் பாண்டே கொல்லப்பட்டார். அதைக் கண்டித்து கட்சி மாநிலம் தழுவிய பெரும் இயக்கம் நடத்தியது. இதற்காக அனைத்துக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பதில் கட்சி முன்முயற்சி எடுத்தது.

            அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (ஏஐஎஸ்எஃப்) மற்றும் இளைஞர் பெருமன்றம் (ஏஐவொய்எஃப்) ஏற்பாடு செய்த அரசியல் பள்ளிக் கூடங்களில் ஜெகந்நாத்‘தா பல விரிவுரை சொற்பொழிவுகளை ஆற்றினார்.

1967 –78 காலகட்டம்

            1967 பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்த பிறகு மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத ‘சம்யுக்த விதாயக் தள்’ கூட்டணி அரசுகளை அமைப்பது சிக்கல் நிறைந்ததாக இருந்தது. ஜெகந்நாத்‘தா மிகத் திறமையாகக் கட்சியை வழிநடத்தினர். பீகாரில் காங்கிரஸ் அல்லாத (சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி, பிரஜா சோஷலிஸ்ட் கட்சி முதலானவை இணைந்த) கூட்டணி அரசில் இந்திரதீப் சின்ஹா, சந்திரஷேகர் சிங், தேஜ்நாராணன் ஜா என்ற மூன்று கம்யூனிஸ்ட்கள் அமைச்சர்களாக இடம் பெற்றனர். ஜெகந்நாத்‘தா வழிகாட்ட அவர்கள் பாராட்டத்தக்க பணிகளைச் செய்தனர்.

            ஜெகந்நாத்‘தா ஒரு கவர்ச்சிகரமான மேடைப் பேச்சாளர் இல்லை எனினும், கருத்துகளை மிகவும் திறம்பட விளக்குபவர், கட்சிக் கூட்டங்களில் பெரிதும் மதிக்கப்பட்டார். பீகார் முழுவதும் அரசியல் வட்டாரங்களில் மதிப்புக்குரியவராகத் திகழ்ந்தார். அவர் மென்மையானவராக, பதற்றமில்லா அமைதி நிதானத்துடன் கட்சிக்குக் கடினமான காலங்களில் உதவினார்.

            1974 –75களில் ஜெபியின் ‘முழுப் புரட்சி’ இயக்கம் பெரிய சவாலாக இருந்தது. ஜெகந்நாத்‘தா தலைமையில் பீகாரில்தான் ஜெபியின் இயக்கம் திரும்பப் பெற வைக்கப்பட்டது. ஜெபியின் இந்தக் ‘கட்சியற்ற ஜனநாயக இயக்கம்’ ஆர்எஸ்எஸ் தலைவர் நானாஜி தேஷ்முக் தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழுவால் நடத்தப்பட்டது. இந்த வலதுசாரி பிற்போக்கு இயக்கம் பீகாரில் ஜெகந்நாத்‘தா முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டது.

            ஜெகந்நாத்‘தாவின் கீழ் பீகார் கட்சி இந்தியில் ‘ஜனசக்தி’ என்ற நாளிதழை வெளியிடத் தொடங்கியது. அவர் DA ரஜீம்வாலே (இந்தக் கட்டுரையாசிரியர் அனில் ரஜீம்வாலேயின் மறைந்த தந்தையார்) அவர்களிடம் கூறினார்: “எங்களுக்குத் தேவை ஒரு நேர்மையான, உண்மையான, கடினமாக உழைக்கும் ஒரு தோழர் –ஜனசக்தி இதழை மேற்பார்வை செய்யவும் நடத்தவும் தேவை. நீங்கள் உங்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஜனசக்தியின் பொறுப்பை ஏற்க வேண்டும்”. ரஜீம்வாலேயும் உடனே வேலையைத் துறந்து ஜனசக்தி இதழின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பீகாரின் பிரபலமான முன்னணி நாளிதழ் ஆனது ஜனசக்தி.

            ஜெகந்நாத்‘தா பொறுப்பு வகித்த காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், அறிஞர்கள் கட்சியில் சேர்ந்தனர். நடைமுறையில் தலைமையேற்கும் அறிஞராகப் பீகாரில் உருவான டாக்டர் ஏ கே சென், ஏழைகளையும் தொழிலாளர்களையும் ஒன்று திரட்டினார். பாட்னாவில் புகழ்பெற்ற குடிமக்கள் ஃபோரம் அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் அரங்கம் நிறைந்த, நினைவில் நிற்கும் கூட்டங்களை நடத்தினார்.

            ஜெகந்நாத்‘தா பதவிக் காலத்தில்தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 8வது கட்சி காங்கிரஸ் 1968ல் பாட்னாவில் சிறப்பாக நடைபெற்றது. அது ஒரு பிரம்மாண்டமான நிகழ்வு.

கட்சியின் மத்திய செயலகத்தில்

            பின்னர் ஜெகந்நாத்‘தா மத்திய செயலகத்தில் இணைந்துக் கொள்ளப்பட்டதால், கட்சியின் தலைமையகமான அஜாய் பவன் மையத்திலிருந்து செயல்பட டெல்லிக்கு மாறினார். வருவதற்கு அவருக்கு விருப்பம் இல்லை, புதிய பொறுப்பில் அவரால் இயல்பாக இருக்க முடியவில்லை; பீகார் போன்ற பிரம்மாண்டமான பெருந்திரள் கட்சிக் கிளைகளில் செயல்படுவதே அவருக்குப் பெரிதும் பழக்கம். ஒரு முறை சிபிஐ கட்சிப் பொதுச் செயலாளர் பொறுப்புக்குக்கூட அவர் பெயர் அடிபட்டது.

சோஷலிஸ்ட் ஆட்சிகளின் வீழ்ச்சி

            1991-92 வாக்கில் சோவித் யூனியனும் பல கிழக்கு ஐரோப்பிய சோஷலிச ஆட்சிகளும் வீழ்ச்சி அடைய பரவலான குழப்பமும் அதிருப்தி, ஏமாற்றமும் உண்டாகியது. அதுவரை நிறுவப்பட்ட பல கருதுகோள்கள், கோட்பாடுகளை மறுபரிசீலனை செய்ய தயாராக இருந்த பல தலைவர்களில் ஜெகந்நாத்‘தாவும் ஒருவர். திறந்த மனதோடு இருந்த அவர் பல கேள்விக் குறிகளை எழுப்பினார். மிகக் கூர்மையாக ஸ்டாலினிசத்தை விமர்சித்தார். வெளிப்படையான விவாதங்களை அவர் ஆதரித்தார்.

            ஜெகந்நாத்‘தா எண்ணிறைந்த பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதிக் குவித்தார். அவர் ஒரு தீவிரமான வாசகர், புத்தகப் புழு. அவருடைய மனைவி நீலிமாதேவி அவர்களும் கட்சிப் பணிகளில் ஈடுபட்டவர், மிகவும் நட்பானவர், முழுமையாக ஒத்துழைப்பராக இருந்தார்.

            ஜெகந்நாத்‘தா மூளை உறைதல் (brain clots) பிரச்சனைகளோடு இக்காலத்தில் துன்பப்பட்டவர், மிக நீண்டகாலம் பல்வேறு உடல் உபாதைகளோடு சிரமப்பட்டாலும் தொடர்ந்து படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் முடிந்தவரை விவாதித்துக் கொண்டும் இருந்தார்.

            பீகாரில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டியெழுப்பிய அறிவார்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜெகந்நாத் சர்க்கார் பாட்னாவில் 2011 ஏப்ரல் 8ம் நாள் மறைந்தார்.

            அவர் நினைவுகளுக்குச் செவ்வணக்கம்!

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

       

 

        

No comments:

Post a Comment