Wednesday 7 July 2021

ஜூலை 1, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா

 ஜூலை 1, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா

--அனில் ரஜீம்வாலே

--நியூஏஜ் (ஜூன் 27 –ஜூலை3)

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிசி) நிறுவப்பட்ட தனது 100வது ஆண்டு அமைப்பு தினத்தை இந்த ஆண்டு ஜூலை முதல் தேதியில் கொண்டாடுகிறது. ரஷ்யப் புரட்சிக்கு அடுத்த இரண்டாவது முக்கியத்துவம் உடைய சீனப் புரட்சி, ஆசியா மற்றும் உலகில் ஆழமான தடத்தைப் பதித்துள்ளது. சிந்தை கவர்ந்து ஈர்க்கக் கூடிய அப்புரட்சியில் சிபிசியின் தலைமை மற்றும் அதற்கேற்ப மக்களின் பங்கேற்பும் சமமான அளவில் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிப்பன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டதானது, ரஷ்யப் புரட்சியின் கட்டற்ற ஊக்க நிகழ்முறை மற்றும் சீன சமூகத்தில் ஒன்று திரண்டுவந்த முதலாளித்துவ ஜனநாயகப் போக்குகளின் உச்சத்தின் நேரடி விளைவுமாகும். 1919ம் ஆண்டின் மே 4 இயக்கம் மார்க்சியம் மற்றும் பிற புரட்சிகரக் கொள்கைகளைச் சீனாவுக்குள் கொண்டு வந்தது. சிபிசி அமைக்கப்படுவதற்கு முன்னோட்டமாகச் சீனா முழுவதும் எண்ணற்ற மார்க்சிய படிப்பு வட்டங்கள் மற்றும் பெருந்திரள் இயக்கங்கள் நடத்தப்பட்டன. 

தொடக்கத்தில் தொடர்ச்சியான கலந்தாலோசனைகளுக்குப் பிறகு சுமார் 50 கம்யூனிஸ்ட் குழுகள்

 உருவாகி தங்கள் முதல் காங்கிரஸ் மாநாட்டை 1921 ஜூலை 23ல் ஷாங்காயின் ரூ வான்ட்ஸ் 106 என்னுமிடத்தில் நடத்தினர். அந்தக் கட்டடம் தற்போது சிபிசி சரித்திர அருங்காட்சியமாக (முதல்) மாநாட்டின் காட்சிகளை மீண்டும் புத்துயிர்ப்பாக வைத்துள்ளது. ச்சென் தூஸியு (ச்சென்டூ-ஸியு) (பீக்கிங் என்பது பீஜிங் ஆனதுபோல இரண்டுவிதமான ஓசை மற்றும் எழுத்து வடிவில் பெயர்கள் உச்சரிக்கப்படுகின்றன), லீ தசௌவ் (லீ டா சௌவ்), ஸங் கொடோ, டான் பிங்ஷன், ச்சென் காங்போ, டாங் பியூ, ஹீ மெங்சியோங், ஹீ ஷுஹெங் மற்றும் சிலர் உட்பட 13 பிரதிநிதிகள் சந்தித்தனர். ஹுனான் பிரதேசத்திலிருந்து வந்த இரண்டு பிரதிநிதிகளில் ஒருவராக மாவோ இருந்தார். 

வாய்டின்ஸ்கை மற்றும் ஸ்னீவ்லியட் ஆகிய காமின்டர்ன் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட நீண்ட ஆலோசனை உதவியாக இருந்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (‘ZongguoGongchan Dang’) என்ற பெயர் ஏற்கப்பட்டது. ஜூலை 30ல் போலீஸ் தலையிட்டதால் காங்கிரஸ் (மாநாடு) இடம் மாற்றப்பட்டு சவுத் லேக்  (தெற்கு ஏரிக்கு) நகர்ந்து, ஒரு படகில் காங்கிரஸ் தொடர்ந்து நடந்தது.

ச்சென் தூஸியு முதல் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

கேஎம்டி-யுடன் ஐக்கிய முன்னணி ( 1921 –27) 

1919ல் கோமிங்டான் (KMT) அல்லது கோமிங்டாங் (தேசியக் கட்சி) புகழ்பெற்ற டாக்டர் சன் யாட் சென் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டது; சன் யாட் சென் சீனாவின் காந்தியாவார். ஸின்ஹாய் புரட்சி என்றழைக்கப்படும் நிலவுடைமையாளர்களுக்கு எதிரான புரட்சியை 1911ல் தலைமையேற்று நடத்திய டாக்டர் சென் சீன நாட்டின் அதிபரானார்; ஆனால் சில காலத்திற்குப் பிறகு யுவான் ஷீக்காய் என்ற வலதுசாரியைச் சேர்ந்தவர் அதிபரானார். யுவான் 1916ல் இயற்கை அடைய, சீன நாட்டின் அரசியல் அதிகாரம் முக்கியமாக இரண்டு மையங்களாக, வடக்கில் பெய்யாங் அரசு என்றும் தெற்கில் கேஎம்டி-யின் நான்ஜிங் அரசென்றும் பிளவுபட்டது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கேஎம்டி-யுடன் ஐக்கிய முன்னணி அமைத்தபோது, டாக்டர் சன் யாட் சென் மிகுந்த ஒத்துழைப்பு அளித்தார். அவர் ஏறத்தாழ ஒரு மார்க்சியக் கொள்கையராக நெருக்கத்தில் இருந்தார். போர்களில் மூழ்கித் திளைத்த போர் பிரபுகள் அரசை எதிர்த்துக் கேஎம்டி-யும் சிபிசியும் ‘வடக்கு (நோக்கிய) பயணம்’ இயக்கத்தைத் துவக்கினர். டாக்டர் சன் யாட் சென் 1925 மார்ச் மாதம் இயற்கையெய்த அதிபராக அவர் இடத்தற்குச் சியாங் கே ஷேக் வந்தார். சியாங்கே ஷேக் ஷாங்கையிலும் பின்னர் ஊகானிலும் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராகத் திரும்பும் வரை ஐக்கிய முன்னணி நீடித்தது; ஆனால் கம்யூனிஸ்ட் ஜெனரல் இ டிங் எதிர் தாக்குதல் நடத்தினார். (பீக்கிங்) பெய்ஜிங்கில் லீ தாஸோ மற்றும் 19 கம்யூனிஸ்ட்கள் மரணதண்டனைக்கு ஆளாக்கப்பட்டனர். 

 நெடும் பயணமும் இரண்டாவது ஐக்கிய முன்னணியும் (1927--37)

1927 ஜூலை 15ல் கோமிங்டான் கம்யூனிஸ்ட்களை வெளியேற்றியது. சிபிசி தனக்குச் சொந்தமான ‘செஞ்சேனை படை’யை உருவாக்கியது. ஜெனரல் ஜு தே (ச்சூ டெ) தலைமையில் 1927 ஆகஸ்ட் 1ல் நடத்தப்பட்ட நான்சங் எழுச்சி பின்னர் பின்வாங்க நேரிட்டது. மாவோ ‘இலையுதிர் அறுவடை எழுச்சி’யைச் சாங்க்ஷா-வில் நடத்தினாலும் அவரும் பின்வாங்க வேண்டியிருந்தது. கம்யூனிஸ்ட் தளங்களுக்கு எதிராகச் ‘சுற்றி வளைத்து அழித்தொழிப்பது’ இயக்கத்தைக் கோமிங்டான் ஏவியது. ஐந்தாவது ‘சுற்றி வளைத்து அழித்தொழிப்பது’ இயக்கம் சிபிசி மற்றும் செஞ்சேனைப் படையை ஒரு யுத்த தந்திர உபாயமாகப் பின்வாங்கிச் செல்வதை மேற்கொள்ள நிர்பந்தித்தது – இப்படிப் பின்வாங்கிச் சென்றதுதான் சரித்திரத்தில் புகழ்பெற்ற ‘நெடும் பயணம்’ (லாங் மார்ச்) ஆகும். சுற்றி வளைக்கப்படுவதைத் தவிர்க்கப் படைகளும் விவசாய மக்கள் கூட்டமும் தொழிலாளர்களுமாகத் தென்கிழக்கிலிருந்து வடக்கு நோக்கியும் மேற்கு நோக்கியும் நகர்ந்தனர். அப்படிப் பின்வாங்கிச் செல்லும் அதேநேரத்தில் எதிரிகளோடுப் போராடியபடியே சென்றனர். (இந்நிகழ்வைப் பிரபல எழுத்தாளர் ‘ஒரு தேசமே புலம்பெயர்தல்’ என்று குறிப்பிட்டார்.) முக்கியமான பின்நகர்தல் ஜியாங்சீ புராவின்ஸிலிருந்து 1934 அக்டோபர் 16ல் தொடங்கி ஷான்சீ பிராவின்ஸின் யென்‘ஆன் (யெனான்) சென்றடைந்தது, 1935 அக்டோபர் 25ல் – சுமார் 9,000 கி.மீ. தூரத்தை நடந்தே சென்றது. முதல், இரண்டு மற்றும் 4வது செஞ்சேனை படைகள்  பிற பிரிவினர்களோடு இதில் பங்கேற்றனர். (வழியில் ஆயிரக்கணக்கானோர் உயிர்த் தியாகம் செய்தனர்) 

‘நெடும் பயணம்’ அழியாத சித்திரமாக (ஓர் அமெரிக்கப் பத்திரிக்கையாளரும், சீனா குறித்து பல நூல்களை எழுதியவருமான) எட்கர் பார்க்ஸ் ஸ்நோ என்பவர் ‘சீனாவில் ஒரு சிவப்பு நட்சத்திரம்’ என்ற புகழ்பெற்ற நூலைப் படைத்தார்; அவர் அச்சரித்திர நிகழ்வில் பங்குபெற்றவரும்கூட.

1935 ஜனவரியில் ஸூன்இ (சுன்இ)யில் நடைபெற்ற பொலிட்பீரோ கூட்டத்தில் மாசே துங் கட்சியின் சேர்மனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டத்தில் சிபிசி அமைப்பு மாற்றி அமைக்கப்பட்டது, பல்வேறு பாதை விலகல்கள் விமர்சிக்கப்பட்டது. கூட்டம் திருப்புமுனையாக நிரூபணமாயிற்று.

1931ல் சீனா மீது ஜப்பான் தாக்குதல் நடத்தியது, மக்களிடையே ஜப்பானுக்கு எதிரான உணர்வுகளை எழுச்சி பெறச் செய்தது. 1936ல் ஜப்பான் சீனாவை மிகப்பெரிய அளவில் தாக்கி மஞ்சூரியா உட்பட நாட்டின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்தது.

கோமிங்டானின் கம்யூனிச எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பொருட்படுத்தாமல், கோமிங்டான் மற்றும் பிற சக்திகளுடன் தேசம் தழுவிய பரந்துபட்ட ஐக்கிய முன்னணியைக் கட்டுமாறு சீனக் கம்யூனிட் கட்சி தெளிவான உரத்த அறைகூவல் விடுத்தது. கோமிங்டானையும் அதற்குச் சம்மதித்து இணங்கச் செய்த செயல் ஜப்பானியர்களை எதிர்த்துப் போரிட உதவியாக இருந்தது. சிபிசி பல பிராந்தியங்களை ’விடுவிக்கப்பட்ட பகுதி’களாக நிறுவியது. 

இந்தியாவின் பங்கு

இந்திய தேசிய காங்கிரஸ் 1936ல் ஐந்து மருத்துவர்கள் அடங்கிய  ஒரு மருத்துவச் சேவைக் குழுவைச் சீனாவுக்கு அனுப்பி வைத்தது என்பது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும் உண்மையாகும். அக்குழுவில் புகழ்பெற்ற டாக்டர் கோட்னீஸ் (டாக்டர் துவாரகாநாத் கோட்னீஸ்) இடம் பெற்று விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்குச் சேவை செய்தார்; மேலும் அவர் ஒரு சீனப் பெண்மணியை மணம் செய்து, அங்கேயே வாழ்ந்தும் மடிந்தார். அந்நாட்டில் அவருக்கு ஒரு சிலை எழுப்பப்பட்டுள்ளது. அவருடைய கதையைப் புகழ்பெற்ற இயக்குநர் வி சாந்தாராம் ஒரு திரைப்படமாக எடுத்தார். (‘டாக்டர் கோட்னீஸ் கீ அமர் கஹானி’ என்ற அப்படத்தின் கதையைப் புகழ்பெற்ற எழுத்தாளர் கே ஏ அப்பாஸ் எழுதினார்.) 

இரண்டாவது உலகப்போரின்போது சிபிசி

சிபிசி மற்றும் கேஎம்டி-யின் ஐக்கிய முன்னணி விரைவாகப் பரவியது மட்டுமல்ல உண்மையில் சிபிசி தனது தளங்களை உறுதியாக்கவும் உதவியது. ஐக்கிய முன்னணி தந்திரத்தை, சரியாகப் பின்பற்றினால், அது மரியாதையை அதிகரிக்க உதவுவதுடன் அதன் பலனாய் கம்யூனிஸ்ட்களின் அடித்தளம் வளர்ச்சி பெறும் என்பதைச் சிபிசி நிரூபித்தது. ஜெனரல் யீ டிங் தலைமையிலான புதிய நான்காவது படையும், ஜெனரல் ஸூ தேயின் எட்டாவது ரூட் படையும் கேஎம்டியுடன் கூட்டாகச் செயலாற்றி, ஜப்பான் படைகளை விரட்டியடிக்க முக்கிய பங்கு வகித்தன.

இரண்டாவது உலகப் போரின் முடிவும் 1949 விடுதலையும்

1945ல் பாசிசத்தின் மீதான வெற்றி சீனப் புரட்சிக்குச் சாதகமான சூழலை உருவாக்கியது. போர் ஐரோப்பாவில் முடிவடைந்து விட்டாலும் அது வெறியோடு ஆசியாவில் தொடர்ந்தது. ரஷ்யப் படைகள் ஜப்பானிய இராணுவத்தை மஞ்சூரியாவில் எதிர்த்துத் திருப்பித் தாக்கி அவர்களுடைய சிறப்பான க்வாண்டங் பிரிவுகள் உட்பட முக்கியப் படைப் பிரிவுகளைத் தோற்கடித்தது. இது பரந்த இந்தப் பிராவின்ஸில் மக்கள் விடுதலை இராணுவம் அதிக அளவில் நுழைய வாய்ப்பானது. அதே நேரத்தில் லியு ஷாவோகி (லியு ஷாவோ-ச்சீ) மற்றும் பிறர் தொழிற்சாலை மற்றும் நகர்புறப் பகுதிகளை அமைத்து மஞ்சூரியாவைப் புரட்சிக்கான முக்கிய தளமாக மாற்றினர்.  

1945 செப்டம்பரிலேயே சோவியத் படைகள் ஜப்பானியப் படைகளைத் தோற்கடித்து அமெரிக்கா, ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டுகளை வீசுவதற்கு எந்தத் தர்க்கநியாயமும் தேவையுமில்லை என்பதை நிரூபித்தது. 

மாசே துங் முன்முயற்சியில் சிபிசி 1946ல் கோமிங்டானுடன் இணைந்த கூட்டணி ஆட்சி அமைப்பதை முன்மொழிந்தது, இது ஐக்கிய முன்னணி உத்திக்கு  மிகச் சிறந்த உதாரணமாகும். கேஎம்டி மறுத்தது; சிபிசி ஓராண்டு காத்திருந்து பரந்ததொரு முனையில் எதிர்தாக்குதல் நடத்தியது.

சியாங்கே ஷேக் அரசு பின்வாங்கியது, பீக்கிங்கிலிருந்து தப்பி ஓடி நான்கிங் இடத்திற்கும் பின்பு ஃபார்மோசா (தைவான்) ஓடியது. மக்கள் விடுதலைப் படை பீக்கிங்கைச் சுற்றி வளைத்து 1949 செப்டம்பரில் நகருக்குள் நுழைந்தது. சீன மக்கள் குடியரசு 1949 அக்டோபர் முதல் தேதி பிரகடனப்படுத்தப்பட்டது. இவ்வாறு அரசியல் ரீதியில் புதிய ஜனநாகப் புரட்சி நிறைவுபெற்றது. 

சீனப் புரட்சியின் திட்டங்களும் உத்திகளும் 

சீனா அடிப்படையில் ஓர் ஆழமான நிலவுடைமைச் சமூகம், எப்போதும் முரண்பட்டு சண்டையிடும் யுத்தப் பிரபுகள் அவரவர்களுக்கான செல்வாக்கான இடங்களைப் பிரித்துக் கொள்ளப் போரியிடும், பிளவுபட்டச் சமூகம். அங்கே முதலாளித்துவ (வளர்ச்சிக் கட்ட) ஜனநாயகம் இல்லை, தேர்தல்கள் இல்லை, பாராளுமன்ற அமைப்புகள் இல்லை, அதிகாரபூர்வமாகக் கட்சிகள் இல்லை. பத்திரிக்கைச் சுதந்திரம், வெளிப்படையான போராட்டங்கள் உட்பட ஜனநாயக உரிமைகளுக்கு அங்கே சாத்தியமே இல்லை. எனவே முக்கியமான போராட்ட முறை ஆயுதப் போராட்டமாகவே இருந்தது. மத்தியில் அதிகாரம் எப்போதும் வலிமையற்று நோஞ்சானாகவும் போர்ப்பிரபுகள் வைத்ததே சட்டமாகவும் இருந்தது.     

சீனாவில் புரட்சியின் எதிரிகள் முக்கியமாக, ஏகாதிபத்தியம், நிலவுடைமை மற்றும் தரகு முதலாளித்துவம். தரகு முதலாளிகள் என்போர் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தைச் சார்ந்த ஏஜெண்டுகள் ஆதனால் அவர்களுக்கு நாடு தொழில்மயமாவதில் ஆர்வம் இராது. நாடு தொழில்மயம் ஆகாததால் சீனாவின் தேசிய முதலாளிகள் பலமற்றவர்களாக இருந்தனர். எனவே தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர முதலாளிகள் (பெட்டி பூர்ஷ்வா) முதலானவர்களுடன் சீனாவின் தேசிய முதலாளிகள் புதிய (முதலாளித்துவ) ஜனநாயகப் புரட்சியின் ஐக்கிய முன்னணியில் அங்கம் வகித்தனர்.

சீன நாட்டின் தேசியக் கொடியில் உள்ள பெரிய நட்சத்திரம் சீன கம்யூனிஸ்ட் கட்சியையும் நான்கு சிறிய நட்சத்திரங்கள் முறையே தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள், சிறு முதலாளிகள் மற்றும் நடுத்தர வர்க்கத் தேசிய முதலாளிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. 

இப்படியாகச் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே அடிப்படையான குணாம்சரீதியான வேறுபாடுகள் உள்ளன. சீனா பின்பற்றிய வழிமுறையை இங்கே பயன்படுத்த முடியாது. அது மட்டுமில்லாமல் சூஎன்லாய் போன்ற சீனத் தலைவர்களும் மற்றவர்களும் சீன முறைகளைக் காப்பி அடிக்கக் கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் வலியுறுத்தி அறிவுறுத்தினார்கள்.

விடுதலைக்குப் பிறகு

சிபிசியின் கடமை பொறுப்பு, சீனாவைச் சோஷலிச நாடாக ஆக்கும் பாதையில் முதலில் சீனாவின் ஜனநாயக மாற்றத்திற்கு வழிகாட்டுவதாகும். சோஷலிசத்தைக் ‘கொண்டு வருவதற்கு’ எந்த அவசரமும் இல்லை, சோஷலிசம் நீண்டகால எதிர்கால லட்சியம்.

1956வாக்கில் நிலப்பிரபுக்களிடமிருந்து நிலங்களை எடுத்து நிலமற்றவர்களுக்குப் பகிர்ந்தளித்து நிலச் சீர்த்திருத்தங்கள் நிறைவடைந்தன. சில கூட்டுறவுப் பண்ணைகள் மற்றும் சில அரசுப் பண்ணைகளும் நிறுவப்பட்டன. ஆலைகளுக்குத் தேவையான கச்சாப் பொருட்கள், கருவிகள் மற்றும் இயந்திரங்கள், கடன் உதவி, அடிப்படை கட்டமைப்பு முதலியன அரசு உதவியோடு அளிக்கப்பட்டு தொழில்மயமாக்கல் தொடங்கியது. நிலவுடைமையாளர்கள் மற்றும் தரகு முதலாளிகள் ஒரு வர்க்கமாக ஒழித்துக்கட்டப்பட்டனர்.

சிபிசி-யின் 8வது காங்கிரஸில் (1956) காரிய சாத்தியமான லட்சியங்கள் வரையப்பட்டன. மாசே துங் சிறிது நேரமே மாநாட்டில் காட்சியளித்து, சுருக்கமான துவக்கவுரை ஆற்றினார். கூட்டு முயற்சி வெளிப்படையாகத் தெரிந்தது; லியூ ஷோகி நீண்ட அரசியல் அறிக்கையையும் ஸோவ் என்லாய் (சூஎன்லாய்) இரண்டாவது ஐந்தாண்டு திட்ட அறிக்கையையும்; வேறுசில முன்மொழிவுகளும் அறிக்கைகளும் அளிக்கப்பட்டன.

“பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தை நிறைவேற்றி முடித்து” சாதித்துவிட்ட சீனா சோஷலிசத்தை நோக்கிய மாற்றத்தைத் தொடங்கியது என அறிக்கை பிரகடனம் செய்தது.

“சிபிசி, மார்க்சியம்–லெனினியத்தைத் தனது செயல்பாட்டுக்கான வழிகாட்டித் தத்துவமாக வரிக்கிறது” எனக் கட்சி அமைப்பு விதி மீதான அறிக்கை தெரிவித்தது. அதில், ‘மாசே துங் சிந்தனைகள்’ பற்றி ஒரு குறிப்பும் இல்லை, அது பின்னர் சேர்க்கப்பட்டது மட்டுமே. 

8வது காங்கிரஸின் ‘இரண்டாவது அமர்வு’ (1958)

இதற்கு முன் இல்லாத அசாதாரண நடவடிக்கையாக 8வது காங்கிரஸின் ‘இரண்டாவது ப்ளீனம்’ 1958ல் நடத்தப்பட்டது: மிக விநோதமாக ஒரே காங்கிரஸ் மாநாட்டின் (8வது) ‘இரண்டாவது’ அமர்வு. (ஆட்சி/கட்சி) அதிகாரத்தின் சமச்சீர்மையில் (பேலன்ஸ்) ஏற்பட்ட மாற்றம், மாவோ தனது அதிகார அந்தஸ்து நிலையைத் திரட்டிக் கெட்டிப்படுத்திக் கொண்டது மட்டுமே அதன் காரணம். 

1956ம் ஆண்டு (மாநாட்டின்) நிலைபாடுகள் பல மாற்றப்பட்டன. 1956 (தீர்மானங்களின்) புகழத்தக்க நிதானம் மற்றும் (கூட்டுச் செயல்பாட்டின்) சமத்தன்மை குலைக்கப்பட்டது என்பது ‘சோஷலிசம்’ குறித்துக் காட்டிய அள்ளித் தெளித்த அவசரத்தில் பிரதிபலித்தது. ‘மக்கள் கம்யூன்கள்’ மற்றும் ‘தாவிப் பாய்ச்சல்‘ கோட்பாடுகள் தலைகாட்டின. மேற்கத்திய நாடுகளை விரைவாக முந்த வேண்டும் என்பதற்கான அறைகூவல்கள் விடுக்கப்பட்டன. திட்டங்களை நிறைவேற்றி முடிப்பதற்கான கால நிர்ணயங்கள் குறைக்கப்பட்டன; உற்பத்திச் சக்திகளைப் போதுமான மட்டத்திற்கு மேம்படுத்தாமல், உற்பத்தி உறவுகள் நிர்பந்தப்படுத்தி மாற்றப்பட்டன.

கற்பனாபூர்வ சோஷலிச மற்றும் கம்யூனிச (உடோபியன்) கோட்பாடுகள் செல்வாக்கு பெற்றது, மாவோயிசம் வளர்வதற்குத் தேவையான களத்தைக் கட்டியமைத்தது.

‘கட்சி வரலாற்றின் மீதான சில கேள்விகள்’ என்ற சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் 1981, ஜூன் 27 தீர்மானம், 1958ல் நடந்த 8வது காங்கிரஸின் ‘இரண்டாவது ப்ளீன’த்தின் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி பின்வருமாறு கூறியது: “எதார்த்தமான பொருளாதார விதிகளை (புறக்கணித்து) மீறியது…”, ஆகக்கூடுதலான இலக்குகள் நிர்ணயித்ததில் கட்டுப்படுத்தப்படாமல் ‘இடதுசாரி’ தவறுகள் “கம்யூனிசக் காற்றால்” நாடெங்கும் கிளறிவிடப்பட்டன. “தோழர் மாசே துங்கும் பல முன்னணித் தலைவர்களும் …விரைவான பலன்களுக்கு அவசரப்பட்டார்கள்; மேலும் அதனோடு தன்னிலை சார்ந்த விருப்பத்தின் பாத்திரத்தை (ரோல் ஆஃப் சப்செக்டிவ் வில்) கூடுதலாக மதிப்பிட்டார்கள். கிராமப்புற மக்கள் கம்யூன்களின் முன்னோக்கித் தாவிப் பாய்ச்சல்கள், “கவனமானப் பரிசீலனை மற்றும் ஆய்வு இல்லாமல் தொடங்கப்பட்டன.” “கட்சி விரோதக் குழு என அழைக்கப்பட்ட பெங் டெக்ஹாய், குவாங் கெசெங், ஷாங் வென்ஷியன் மற்றும் ஜோ ஸியாஜோ குழுவினருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் முற்றிலும் தவறானவை. அரசியல் ரீதியாக, இப்போராட்டம் உட்கட்சி ஜனநாயகத்தைக் கடுமையாகச் சீர்குலைத்துப் பாதித்தது…”

மாவோயிசத்தின் எழுச்சி

1958 தொடங்கி மாசேதுங் முன்னெடுத்த போக்கு ‘மாவோயிசம்’ என உருவானது; அது ஒரு வகையிலான சாகசம், நிர்பந்தம் மற்றும் உடோபிய கற்பனைவாதம். போருக்குப் பிந்தைய நிலையை உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம் புதிதாக மதிப்பீடு செய்து எடுத்த நிலைபாடுகளை ஆதரிப்பதிலிருந்து, உலக மட்டத்தில், சீன கம்யூனிஸ்ட் கட்சி பின்வாங்கியது. போருக்குப் பிந்தைய உலகில் ஏற்பட்ட மாறுதல்களைக் காண சிபிசி மறுத்தது; மற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீது ‘சீனப் பாதையிலான புரட்சி’ என்பதைத் திணிக்கத் தொடங்கி, அந்தக் கம்யூனிஸ்ட் கட்சிகளில் பிளவுகள் ஏற்படுவதைக் கட்டாயப்படுத்தியது. 

மேற்கு நாடுகளின் பொருளாதாரத்தோடு போட்டியிட்டு அதனைத் தோற்கடிப்பதை மாவோயிசத் தலைவர்கள் லட்சியமாகக் கொண்டு, முதலில் 15 ஆண்டுகளில் சாதிப்பது என்றவர்கள், பின்னர் அதனை 10 ஆண்டுகளாக மாற்றியமைத்து, அதற்குப் பின்னர் மேலும் அதை 3 ஆண்டுகளாகக் குறைத்தனர்: இவையெல்லாம் கற்பனையான ‘கம்யூனிசத்திற்கான’ தயாரிப்புகள்! விவசாய நிலங்கள் 25ஆயிரம் கம்யூன்களாக (சிறு கிராமக் குடியிருப்பு) மறுசீரமைக்கப்பட்டதில், விவசாயிகள் தங்கள் நிலங்களைப் பறிகொடுத்தனர். பைத்தியக்கார இலக்குகளோடு கட்டாயத் தொழில்மயத்திற்காக மக்கள் கூட்டத்தைப் பெரும் எண்ணிக்கையில் திரளாக இடம் மாற்றியது பெரும் இடம்பெயர்வு இடர்பாடுகளை விளைவித்தது. சீனாவின் கிராமப்புறப் பகுதிகளில் 18ம் நூற்றாண்டு ‘ஊதுலைகள்’ (பிளாஸ்ட் ஃபர்னஸ்கள்) திணிக்கப்பட்டதால் அவைகள் பல பத்தாண்டுகளுக்குப் பின்நோக்கித் தூக்கியெறியப்பட்டன!

விவசாய மற்றும் தொழில் உற்பத்தி கடுமையாக வீழ்ச்சியடைந்தது: காரணம், பின்தங்கிய உற்பத்திக் கருவிகளால் சோஷலிசத்தைக் கட்ட முயன்றது. நிலங்களில் 90 சதவீதம் அதுவரை வெறும் ஏர்கலப்பைகளால் உழப்பட்டது. (கருவிகள் போன்ற உற்பத்திச் சாதனங்களை மேம்படுத்தாமல் உற்பத்தி உறவுகளை மேல்நிலைக்கு மாற்றியமைப்பது பயன்தராது; உற்பத்தியும் அதிகரிக்காது.)

‘சோஷலிசம்’ மற்றும் ‘கம்யூனிச’த்தைக் கட்டியமைப்பதில் ஏற்பட்டத் தோல்விக்குக் கட்சியின் உள்ளேயே இருந்த ‘வலதுசாரிகள்’ மற்றும் ‘முதலாளித்துவச் சாலை (பாதை)’யைப் பின்பற்றுவோர் என்றழைக்கப்பட்டவர்களே காரணம் என பழி சுமத்தப்பட்டது; இதன் விளைவு இறுதியில் ‘கலாச்சாரப் புரட்சி’ என்றழைக்கப்பட்ட மோசமான புகழுடைய பிரச்சார இயக்கத்தில் போய் முடிந்தது. மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மோசமாக நடத்துதல், அடக்குமுறை, அடிஉதை மற்றும் சிறைதண்டனை, பதவியிலிருந்து நீக்கல் மற்றும் இழிவுபடுத்தல்களுக்கு இவை வழிகோலியது. ’கலாச்சாரப் புரட்சி’, மாவோவின் கருத்துகளை எதிர்த்தவர்கள் அனைவர் மீதும் நாடுதழுவிய வெறிக்கு இட்டுச் சென்றது. பல இலட்சக்கணக்கான மக்கள் வேரோடு பிடிங்கி எறியப்பட்டு அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டனர். சீனாவின் அதிபர் லியூ ஷோஹிகூட கடுமையாகத் துன்புறுத்தப்பட்டு மிகவும் துயரகரமான சூழ்நிலையில் இறந்தே போனார். இந்த நிகழ்வுகள் எல்லாம் பரிசீலிக்கப்பட்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் 1981 ஜூன் தீர்மானத்தில் விமர்சிக்கப்பட்டது. 

தீர்மானம் கூறியது: “மக்கள் சீனம் நிறுவப்பட்டதிலிருந்து கட்சி, அரசு மற்றும் மக்கள் அனுபவித்த மிகவும் கடுமையான பின்னடைவுகள் மற்றும் பெரும் இழப்புக்களுக்கு, 1966 மே மாதம் முதல் 1976 அக்டோபர் வரை நீடித்த ‘கலாச்சாரப் புரட்சி’யே காரணமாகும். கலாச்சாரப் புரட்சி தோழர் மாசேதுங்கால் தொடங்கப்பட்டு அவர் தலைமையில் நடந்தது”. மேலும், “தோழர் மாசேதுங்கின் முக்கிய கோட்பாடுகள் மார்க்சியம், லெனினியத்திற்கோ அல்லது சீன நாட்டின் எதார்த்தத்துக்கோ இணக்கமாகப் பொருந்துவதாக இல்லை என்பதையே அந்தக் கோட்பாடுகள் தொடங்கிய ‘கலாச்சாரப் புரட்சி’யின் வரலாறு நிரூபிக்கிறது”. உற்பத்திக் கருவிகளில் பெருவாரியான இழப்புகளை ஏற்படுத்தியது, தொழிற்சாலைகள் மற்றும் விவசாயத்தைச் சீர்குலைத்தது, மக்களைக் கூட்டமாக இடமாற்றியது, பேரளவிலான பட்டினி மற்றும் சாவுகள் இவையே கலாச்சாரப் புரட்சியின் விளைவு. உடோப்பிய கற்பனைகளைச் சீனா மீது கட்டாயப்படுத்தித் திணித்த மாவோயிசத் தியரி மற்றும் அமலாக்கத்தைச் சிபிசி கூர்மையாக விமர்சித்தது. ‘மாசேதுங் சிந்தனை’களையே மீறியது இந்த நிகழ்வுகள் எனத் தீர்மானம் கூறியது. ஸென் யீ, பெங் தெஹ்வாய், லீ ஸியான்னியன், ஸென் யூன், ஜூ தே மற்றும் பலர் தவறாகச் சித்திரவதைக்கு ஆளாகி அதிகாரத்திலிருந்து விரட்டப்பட்டனர் எனத் தீர்மானம் கூறியது. 

மாவோ மறைவுக்குப் பின் (1976) சீனா

சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாக்க முயன்ற லின் பியோ தலைமையிலான ‘நால்வர் கும்பல்’ (கேங் ஆஃப் ஃபோர்) மற்றும் சிலர் தங்கள் முயற்சியில் தோல்வி அடைந்தனர். இதன் மத்தியில் சூஎன்லாய் உடல்நலம் குன்ற, 1975ல் அவர் மறைந்தார். டெங் ஜியோபிங் அவர்களிடம் கட்சி பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. 1976 செப்டெம்பரில் மாவோ இயற்கை எய்த டெங் நடைமுறையில் தலைவரானார். அவர் தொடர்ந்து பல பொறுப்புகளை வகித்தாலும் ஒருபோதும் கட்சியின் சேர்மன் அல்லது பொதுச் செயலாளராக ஆகவில்லை; இருப்பினும் தலையாய ‘உச்சபட்சத் தலைவ’ராக அவர் ஏற்கப்பட்டார். 1982ல் சிபிசியின் தலைவர் (சேர்மன்) பதவி ஒழிக்கப்பட்டது. 

டெங் ஜியோபிங் தலைமையின் கீழ் சிபிசி கட்சியும் சீனாவும் மெல்ல மீளத் தொடங்கியது. உற்பத்திச் சக்திகள் மேம்பாட்டை வலியுறுத்திய கட்சி, தனியார் நிறுவனங்களை அனுமதித்தது. உடனடியாகச் சோஷலிசத்தைக் கட்டுவது என்பது கைவிடப்பட்டது. அவருடைய காலம் சீர்திருத்தங்களுக்கான அடித்தளம் மற்றும் மாற்றத்திற்கான தொழில் நுட்ப அடிப்படையைக் கட்டுவதிலும் அஸ்திவாரம் அமைத்தது.

இன்று ஜி ஜின்பிங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி சீனாவை வலிமை வாய்ந்த பொருளாதார நாடாகக் கட்டியெழுப்ப வழிகாட்டுகிறது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது மற்றும் மகிழ்ச்சியான வளமான சீன சமூகத்தை அமைப்பதை லட்சியமாகக் கொண்டுள்ளது. சிறப்புப் பொருளாதார மண்டலம் (ஸ்பெஷல் எக்கனாமிக் ஸோன்) மற்றும் பன்னாட்டு கார்ப்பரேஷன்களின் பெருமளவிலான பொருளாதார நடவடிக்கைகளை இன்று சீனா அனுமதித்துள்ளது. இன்று சீனப் பொருளாதாரம், அமெரிக்காவுக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் உள்ளது. 

சீன குணாம்சங்களுடன் சோஷலிசத்தைக் கட்டுவதாகச் சிபிசி பிரகடனம் செய்துள்ளது. இன்றைய நவீன உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத்தில் மேலும் முன்னேறிச் செல்வது என்பதே அதன் முக்கிய அழுத்தமாகத் தோன்றுகிறது . அவர்களுடைய கொள்கைகளில் பல அம்சங்கள் விவாதத்திற்குரிய சர்ச்சைக்குரியனவாக உள்ளன.

இன்றைய சீனா 20ம் நூற்றாண்டில் இருந்த நிலையிலிருந்து மிகவும் வித்தியாசமானதாக மாறி உள்ளது. 21ம் நூற்றாண்டை நோக்கி சீனா எப்படித் தன்னை வடிவமைத்துக் கொள்கிறது என்பதைத் தொடர்ந்து கவனிக்க மிகவும் ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாகும். 

சீனா தனது லட்சியத்தில் வெற்றியடைய சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதன் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் நமது தோழமை வாழ்த்துகள்!

--தமிழில் : நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர் 



No comments:

Post a Comment