Wednesday 14 July 2021

பி சி ஜோஷி : அரசியல் மேலாண்மை (Hegemony), கலாச்சார மறுமலர்ச்சியின் முன்னோடி

 நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து : 

சில சித்திரத் சிதறல்கள் - 40

பி சி ஜோஷி :  அரசியல் மேலாண்மை (Hegemony), கலாச்சார மறுமலர்ச்சியின் முன்னோடி

--அனில் ரஜீம்வாலே

--நியூ ஏஜ் ஏப்ரல் 18 – 24

இந்தியாவில் கம்யூனிச இயக்க வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினோடு பிரிக்க முடியாதபடி இரண்டறக் கலந்த பெயர் பிசி ஜோஷி (PC Joshi). கட்சியையும், அதன் பிற மக்கள் ஸ்தாபனங்களையும் கட்டியமைக்கவும், மக்களிடையே செல்வாக்குப் பெறவும், கட்சியின் அரசியல் பாத்திரத்தைப் பரவலாக அனைவரும் ஏற்கச்செய்யவும் பெரும் பங்களிப்பு செய்தவர்கள் அவரைப் போல வேறுஎவரும் இல்லை எனலாம். அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் என இருசாரரும் இதனை ஒப்புக்கொள்வார்கள். இந்தியாவின் விடுதலைக்குத் தீர்மானகரமாகப் பங்களிப்புச் செய்ய ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியைக் கட்டுவதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை மைய இடத்திற்குக் கொண்டு வந்தவர் அவர். அவருடைய பிறந்த நாளான 1907 ஏப்ரல் 14ம் நாளை அவரை நினைவு கொள்ளவும், மிகுந்த முக்கியத்துவமுடைய அவருடைய சரித்திரப் பங்களிப்புகளிலிருந்து கற்கவும் பொருத்தமான தருணமாகக் கொள்வோம்.

இளமைக் காலமும் அரசியலும் 

பிசி ஜோஷி (பூரண் சந்த் ஜோஷி) உபி மாநில அல்மோரா என்ற இடத்தில் (தற்போது இது உத்தர்காண்ட்டில் உள்ளது) பிறந்தார்; ஹப்பூரில் மெட்ரிக் கல்வியை முடித்து, 1924ல் FA (துவக்கக் கல்வி) தேர்வையும், 1928ல் அலகாபாத் பல்கலைக்கழகத்திலிருந்து முதுகலை எம்ஏ பட்டமும் பெற்றார். தலைச்சிறந்த மாணவராக இருந்தபடியால், மீரட் சதி வழக்கில் (1929 --33) கைதிகளாக இருந்தவர்களின் சட்டம் சம்பந்தமான அனைத்து பணிகளையும் தனது 22வது வயதிலேயே கவனித்துக் கொண்டார். முதுகலைப் படிப்பு முடிந்ததும் கைது செய்யப்பட்டார். ஜவகர்லால் நேரு, யூசுப் மெஹ்ராலி முதலானவர்களுடன் இணைந்து இளைஞர்கள் லீக் அமைப்பை 1928 –29களில் கட்டுவதில் அவர் சிறந்த அமைப்பாளராகத் திகழ்ந்தார். அவரது ஸ்தாபன அமைப்புத் திறமை ஈடு இணையற்றது. 1928 செப்டம்பரில் மீரட்டில் நடந்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி மாநாடு அவரிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த, விரைவில் 1928ல் வெறும் 21 வயதிலேயே அவர், உபி கிளைச் செயலாளரானார். உத்தரபிரதேசத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையை நிறுவ உதவினார். 

மீரட் சதி வழக்கு (1929 –33)

மீரட் சதி வழக்கு தொடர்பாக மற்ற 31 பேருடன் பிசி ஜோஷி 1929 மார்ச் மாதம் அலகாபாத் ஹாலந்து ஹால் ஹோட்டலில் இருந்து கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதை மாணவர்கள் பரவலாகக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஜோஷி இளைய தோழர்கள் லீக்கின் செயலாளராக இருந்தார். அவருடைய வழக்குக்காக நேரு பணம் வசூலித்து உதவினார். மிக இளம் கைதியாக இருந்ததால் நைனி சிறையிலிருந்து முதலிலும் பிறகு மீரட் சிறையிலிருந்தும் அவர் சட்டத் தேர்வை எழுதினார். மீரட் வழக்கில் அவர் அளித்த அறிக்கையில் பிற விஷயங்களோடு, தேசிய முதலாளித்துவமும்கூட மற்ற பிற வர்க்கங்களோடு சேர்ந்து ஏகாதிபத்தியத்துடன் ஆழமான முரண்பாடுகள் கொண்டிருந்ததாகத் தெரிவித்தார். 

மீரட் சதி வழக்கின்போது கிடைத்த நேரத்தை ஜோஷி ஆழமாக மார்க்சியத்தைக் கற்பதற்குப் பயன்படுத்தினார். 

சிபிஐ பொதுச் செயலாளராக

1933ல் விடுதலையான பிறகு பிசி ஜோஷி 1933 நவம்பரில் சிபிஐ புரொவிஷனல் மத்திய கமிட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அஜாய் கோஷ், ஆர்டி பரத்வாஜ் மற்றவர்களோடு கட்சியைத் திரும்பவும் செயல்படும் மையமாக அமைக்க அவர் பாடுபட்டார். 1935ல் நடந்த கட்சி சிறப்புக் கூட்டத்தில் 28 வயதாகும்போதே சிபிஐ பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியைச் ஆற்றல்மிக்க தேசிய சக்தியாக மறுநிர்மாணம் செய்யும் பொறுப்பை ஏற்றார். கட்சி வரலாற்றில் 1947 இறுதிவரை அவரது பதவி காலம், இந்தியாவில் கம்யூனிச இயக்கத்திற்கான அடித்தளத்தை நிர்மாணித்த வகையில், மிகுந்த பயன்மிக்க பலன் அளிப்பதாக அமைந்தது. 

தத்துவார்த்த அரசியல் மேலாண்மையும் கலாச்சார மறுமலர்ச்சியும்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தியரி மற்றும் அமலாக்கப் பயிற்சிக்குப் பிசி ஜோஷியின் தலைச்சிறந்த பங்களிப்பு, அவர் தொடங்கி வைத்த அரசியல் தத்துவார்த்த மேலாண்மை (hegemony, மேலாதிக்கம் என்றும் சொல்வதுண்டு) மற்றும் பண்பாட்டு கலாச்சார மறுமலர்ச்சியாகும். (இத்தாலிய கம்யூனிஸ்ட், எழுத்தாளர், தத்துவவாதி, சமூகவியல், மொழியியல் என பன்முகப்பட்ட மார்க்சிய அறிஞர் அண்டோனியோ) கிராம்ஷியின் பங்களிப்பு குறித்து ஒருவர் சரியாகவே பெரிதும் பேசினாலும், பிசி ஜோஷியின் பங்களிப்பு குறித்து முறையான கவனிப்பு அளிப்பதில்லை; அவருடைய பங்களிப்பு பெருந்திரள் மக்கள் உணர்வில் ஆழமான பதிவை, செல்வாக்கை பதித்துச் சென்றுள்ளது. இப்போதும்கூட அரசியல், கொள்கை, கோட்பாடுகள் மற்றும் அவரது காலத்தின் பண்பாட்டு பங்களிப்புகள் குறித்து மக்கள் ஆழமாகப் பரிசீலிப்பார்கள் எனில் அவர்கள் கம்யூனிஸ்ட்களாக அல்லது ஜனநாயகவாதிகளாக மாறுவார்கள்.

முதலில் ஜோஷி தனது காலங்களின் அரசியல் இயக்கத்தைப் புரட்சிகர உள்ளடக்கம் உடையதாக கொண்டுவந்தது அவரைப்போல வேறுயாருமில்லை. ஏகாதிபத்தியம், காலனியம், மற்றும் பாசிசத்திற்கு எதிராகத் ‘தேசிய முன்னணி’ அமைப்போம் என்ற அவரது முழக்கம் அன்றைய காலத்தோடும், படித்த மக்கள் கூட்டத்தின் ஆசைகளோடும் முழுவதும் பொருந்துவதாக இருந்தது. அவர்கள் அனைவரும் கட்சியில் இணையாவிட்டாலும், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூட்டத்தைக் கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கி ஈர்த்தது. மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள்,  தொழில் சார்ந்த நிபுணர்கள், கலைஞர்கள், அறிவு விளக்கம் பெற்ற முதலாளித்துவப் பிரிவினர் மற்றும் பலர் மார்க்சியத்தின் பல அம்சங்களை அதன் பரந்த பொருளில் ஒப்புக் கொண்டனர். 

அவருடைய தலைமையின்போது கம்யூனிஸ்ட்கள் காங்கிரஸ் இயக்கத்தைப் பலமான இடதுசாரி செல்வாக்கு பொருந்திய பரந்த முன்னணியாக மாற்றினர். காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி (CSP), தொழிலாளர் விவசாயிகள் கட்சி (WPP), இடதுசாரி கன்சாலிடேஷன் மற்றும் இணைந்த மக்கள் ஸ்தாபனங்கள் முதலானவற்றை அமைத்து சமூக உணர்வுடைய பெருந்திரள் மக்கள் பிரிவுகளை, சிபிஐ கட்டமைப்புக்கு வெளியேயும், புரட்சிகர தீவிர செயல்பாடுடையதாக மாற்றினர். தொழில் மற்றும் விவசாயம் போன்று முக்கியமான கொள்கை வடிவமைக்கும் மையங்கள் கம்யூனிஸ்ட்களால் இயக்கப்பட்டன. சோகன் சிங் ஜோஷ், டாங்கே, காட்டே, மிராஜ்கர், சிங்காரவேலர், இசட்.ஏ அகமது முதலான கம்யூனிஸ்ட் தலைவர்களின் நேரடியானத் தலைமையில் அல்லது பங்கேற்பில் பல பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள் செயல்பட்டன; அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் குறைந்தபட்சம் 20 கம்யூனிஸ்ட்கள் இடம்பெற்று, மகாத்மா காந்தி, நேரு, சுபாஷ் சந்திர போஸ் முதலானவர்களோடு தினசரி செயல்படும் உறவைக் கொண்டிருந்தனர். கம்யூனிச இயக்கத்திற்கும் அப்பால் மார்க்சியத்தின் செல்வாக்கு பரவி, அந்தத் தத்துவத்தை மிகவும் முன்னேறிய கோட்பாடாக, அவர்கள் தரும் வேறுபட்ட விளக்கங்களோடு இருந்தாலும், பரவலாக ஏற்கப்பட்ட தத்துவமானது. உண்மையில் மார்க்சிசம் ஒரு ‘ஃபேஷன்’ போல ஆனது. 1930களின் இறுதியிலும் 40களின் தொடக்கத்திலும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மார்க்சியத்தைத் தழுவியதால், தேசிய இயக்கக் கோட்பாட்டிலில் ஓர் ஆழமான தடத்தைப் பதித்தது: அது, காங்கிரஸ், சிஎஸ்பி, இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் ஆர்கனைசேஷன் (HSRA), கத்தார், சிட்டகாங் (ஆயுதக் கிளர்ச்சி) குழு முதலான அமைப்புகளில் மார்க்சியம் தத்துவார்த்த வெற்றிகளை அடைந்தது. சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, (அதன் பெருமை பிசி ஜோஷிக்கே செல்ல வேண்டும்,) காங்கிரஸ் அமைப்பு ஏறத்தாழ ஒரு இடதுசாரி அமைப்பாக மாறியது. நேதாஜி மட்டும் காங்கிரஸைவிட்டு விலகாமல் நீடித்திருந்தால், சுதந்திரம் அடைந்த தருணத்தில் ஒருகால் நாம் வேறுவகையான வித்தியாசமான காங்கிரஸைப் பார்த்திருக்கலாம். 

ஜோஷியின் இரண்டாவது முக்கிய பங்களிப்பு கலை மற்றும் கலாச்சார பண்பாட்டிற்குப் பரந்த ஜனநாயக மற்றும் புரட்சிகர உள்ளடக்க வடிவத்தை வழங்கியது எனலாம். பாடல்கள், நாடகம், கவிதை, இலக்கியம், நாடக மன்றங்கள், சினிமா போன்றவை பெருந்திரள் மக்கள் விழிப்புணர்வையும் புரட்சிகரத் தன்மையையும் சுமந்து செல்லும் வாகனங்கள் ஆயின. அச்சடிக்கப்பட்ட எழுத்து மக்கள் சக்தி ஆயுதமானது (‘நல்ல காகிதம் செய்வோம், ஆயுதம் செய்வோம், கலை வளர்ப்போம், கொல்லர் உலை வளர்ப்போம்’ –மகாகவி பாரதி). இவை எல்லாம் தேசிய அரங்கில் ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கியது. அதன் ஆழமான தாக்கங்களை விடுதலைக்குப் பிறகு பார்க்க முடியும். இந்த ஊடகங்களைப் பலமான அதிர்வுகளை ஏற்படுத்தும் அளவு முதலில் பயன்படுத்தியது கம்யூனிஸ்ட்களே. 

இலக்கியம், கலை, கலாச்சாரம், சினிமா படங்கள் முதலான சமூகப் பண்பாட்டு களத்தை முக்கியமான ஆளுமைகள் நிரப்பி பல தலைமுறைகளைத் தீவிரப் புரட்சிகரத்தன்மை உடையதாக மாற்றினர். சிபிஐ, இந்திய மக்கள் நாடக மன்றம் (IPTA), மற்றும் ஏஐஎஸ்எஃப் மாணவர் அமைப்பு முதலானவை மெய்யான முற்போக்கு இயக்கங்களை ஊக்குவித்தன. மாபெரும் எழுத்தாளர்கள் பிரேம் சந்த், ராகுல சாங்கிருத்தியாயன் புத்தகங்களைப் படித்து பல இளைஞர்கள் கம்யூனிஸ்ட்கள் ஆனார்கள், பெருந்திரள் பண்பாட்டு இயக்கங்களில் பங்கேற்றனர். கம்யூனிஸ்ட் கட்சி, ஒப்பிட்டளவில் சிறிதாயினும், குறிப்பிடத்தக்க தத்துவார்த்த மற்றும் கலாச்சார மேலாதிக்கத்தைச் செலுத்தியது. அவற்றில் தற்காலத்திற்கான பல பாடங்கள் படிப்பினைகள் உள்ளன. 

மக்கள் கூட்டத்தை அரசியல் படுத்தவும், விழிப்புணர்வு பெறச் செய்யவும் கலாச்சாரம் திறன்மிக்க வழிமுறையானது.

பிசி ஜோஷி மக்களின் அரசியல் பண்பாட்டைத் தேசிய விருப்ப விழைவுகளோடு மிக எளிமையாகத் திறம்பட ஒன்றிணைத்தார்.

முதலாவது சிபிஐ காங்கிரஸ், 1943

கட்சி காங்கிரஸ் எந்த அளவு அரசியல் நிகழ்வோ அதேயளவு அது ஒரு பண்பாட்டு கலாச்சார நிகழ்வாகவும் இருந்தது. மாநாட்டு நிகழ்முறைகளில் பெரும் எண்ணிக்கையிலான கட்சி சாராத மக்களும் கலந்து கொண்டு முடிவுக்காகக் காத்திருந்தனர். பிசி ஜோஷியின் உரைக்கு ஆவலாகக் காத்திருந்து மிகுந்த கவனத்துடன் அவரது சொற்பொழிவைக் கேட்டனர்.

பன்முகப்பட்ட போராட்டங்கள்

ஜோஷி மக்கள் கூட்டத்தின் தலைவர், அவர்களின் உணர்வுகளை நன்குணர்ந்து எப்போது செயல்பட வேண்டும், என்ன முழக்கத்தை முன்வைக்க வேண்டும் என அறிந்தவர். வங்கப் பஞ்சத்தின்போது அவர் ஆற்றிய பணிகள் ஈடுஇணையற்றவை. அதிலிருந்து பிறந்ததுதான் இந்திய மக்கள் நாடக மன்றம் IPTA அமைப்பு. பஞ்சத்தின் மூலகாரணத்தை அவர் பகுப்பாய்வு செய்தது பெரிதும் விஞ்ஞான மார்க்சியக் கொள்கை அடிப்படையில் அமைந்தது. ’தேசத் தந்தை’யுடன் அவர் மேற்கொண்ட கடிதப் போக்குவரத்து கம்யூனிஸ்ட்கள் பற்றிய மகாத்மாவின் பல பார்வைகளைச் சமாதானப்படுத்தி ஒப்புக்கொள்ள வைத்தன. 

பல நேரம் ஜோஷி ஒரு சமசரவாதி, வர்க்க (எதிரிகளுடன்) கூட்டுச் சேர்ந்தவர் என்றெல்லாம் சித்தரிக்கப்படுவதுண்டு. இந்த வசைச் சொல்லாடல், அவர் பெரிதும் இழிவு செய்யப்பட்ட பிடிஆர் காலத்தின் வழிவந்த கருத்து. பிசி ஜோஷி அமைதி வழியிலான பெருந்திரள் போராட்டங்களை நடத்தியவர் மட்டுமல்ல, 1946 உட்பட பல தேர்தல்களில் கட்சியைத் தலைமை தாங்கி நடத்தியவர்; அதுமட்டுமல்லாமல் ஆயுதப் போராட்டங்களிலும் கட்சியை வெற்றிகரமாக வழி நடத்தியவர். அவருடைய தலைமையின்போதுதான் கையூர், புன்னபுரா –வயலார், ராயல் இந்தியன் நேவி (RIN) கப்பற்படையினர் எழுச்சி, தேபகா (விவசாயிகள் எழுச்சி) மற்றும் தெலுங்கானா ஆயுதப் போராட்டங்கள் முதலியன நடந்தன. 1946ல் தெலுங்கானாவில் ஆயுதப் போராட்டம் நடத்தப் பச்சைக்கொடி காட்டியவர் அவர்தான்; அப்போராட்டம் நிஜாமை எதிர்த்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நடந்தே தவிர, இந்தியாவில் சோஷலிசப் புரட்சியின் ஒரு பகுதியாக அல்ல. அந்த இரண்டும் வேறு வேறானவை.

அவருடைய சிறப்பான வழிகாட்டல் தலைமையின் கீழ் பல கம்யூனிஸ்ட்கள், அன்று வாக்களித்தல் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டதாக இருந்த நிலையிலும், சட்டமன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். 

ஜோஷியும் பிடி ரணதிவே காலமும் 

1947 -48ல் பிசி ஜோஷியைக் கட்சி பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி, BTரணதிவேயை அப்பொறுபில் அமர்த்தியது கட்சிக்குப் பெரிதும் அழிவு உண்டாக்கியது. அவருடைய வாழ்க்கையிலும் கட்சி வாழ்க்கையிலும் அப்போது மனோரீதியான வருத்தமும் பேரதிர்ச்சிகளையும் பிசி ஜோஷி சந்திக்க வேண்டி வந்தது. செங்கல் செங்கல்லாகப் பார்த்துப் பார்த்து பெரும் உழைப்பில் பன்னிரெண்டு ஆண்டுகளாகக் கட்டி எழுப்பிய கட்சி மாளிகை, இரண்டே ஆண்டுகளில் அழிக்கப்பட்டது. 90ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட கட்சி வெறும் ஒன்பதாயிரம் உறுப்பினர்களாகத் தேய்ந்தது. ‘அதிதீவிர புரட்சிக்கு’ கொடுத்த விலைதான் இதுதான். நியாயமற்ற விமர்சனங்களைச் சந்தித்த ஜோஷி, கட்சி அமைப்புகளில் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். நியாயமற்ற முறையில் அவர் இழிவுபடுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்.

1951ல் தலைமையிலிருந்து பிடிஆர் நீக்கப்பட்ட  பிறகு கட்சி மெல்ல மீட்சியடையத் தொடங்கியது. ஜோஷியைப் பொருத்த அளவில் அது மெல்லக் கிடைத்த மறுவாழ்வு பரிகாரம். அடிப்படையாக ஜோஷி தனது கருத்துகளில் உறுதியாக இருந்தார். மெல்ல அவர் தலைமைப் பொறுப்புகளுக்குத் திரும்பினார். 1956 பாலகாடு காங்கிரஸில் அவர் கட்சி மத்திய கவுன்சிலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; 1958ல் கட்சி ஆங்கில இதழான ‘நியூஏஜ்’ ஆசிரியராக நியமிக்கப்பட்டார். கட்சி மத்திய செயலகத்தில் சில காலம் பணியாற்றினார்.

(கட்சி கல்விக்காக 1942 டிசம்பரில் கல்பனா தத் பம்பாய் கட்சி பள்ளிக்குச் சென்றார். அங்கே கட்சி பொதுச் செயலாளர் பிசி ஜோஷியைச் சந்தித்தார். பிரதேச மட்டத்தில் கட்சி அமைப்பாளராக கல்பனா நியமிக்கப்பட்டார். அவருடைய நான்கு சகோதரிகளும்கூட கட்சி உறுப்பினர்களாக இணைந்தனர். 1943 ஆகஸ்டில் பிசி ஜோஷியும் கல்பனா தத்தும் திருமணம் செய்து கொண்டனர். ..

பிசி ஜோஷி மற்றும் கல்பனா ஜோஷி இருவரும்தான் ஒருக்கால் பிடிஆர் காலத்தில்  மிக மோசமாகத் துன்பப்பட்டவர்கள். …

           தனது சுயசரிதையைச் ‘‘சிட்டஹாங் ஆயுதக் கிடங்கைச் சூறையாடியவர்கள்: ஞாபகங்கள்” என்ற சுயசரிதை நூலாக எழுதியுள்ளார். அதனைப் பிசி ஜோஷியின் முன்னுரையோடு ஆங்கிலத்தில் பிசி ஜோஷியும் நிகில் சக்ரவர்த்தியும் எழுதியுள்ளனர்…

             புதுடெல்லியில் 1995 பிப்ரவரி 8ம் நாள் அந்தப் புரட்சி புயல் இம்மண்ணுலகை விட்டு நீங்கியது.

--வரலாற்றுத் தலைவர்கள் தொடரில் 36வது கட்டுரை ‘கல்பனா தத் : சிட்டஹாங் ஆயுதக் கிளர்ச்சியின் கதாநாயகி’ கட்டுரையிலிருந்து இணைத்தது)

பிற்போக்கு மதவாத சக்திகளிடமிருந்து நம்நாட்டைப் பாதுகாப்பதற்கான உறுதியான வழி ஜனநாயக சக்திகளின் ஒற்றுமை, குறிப்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையோன ஒற்றுமை, என்ற கருத்தில் பிசி ஜோஷி உறுதியாக இருந்தார்; அது நாட்டை மேலும் ஜனநாயகப்படுத்தும் என்பது அவரது கருத்து. 

நாட்டில் பயனுடைய திறன்மிக்க பங்களிப்புச் செய்ய கம்யூனிஸ்ட்கள் பெருந்திரள் சக்தியாக வேண்டும் என்ற கருத்தை அவர் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். கம்யூனிஸ்ட்கள் வர்க்கப் பங்களிப்பு மற்றும் தேசியப் பங்களிப்பு இரண்டையும் சமஅளவில் ஆற்ற வேண்டும். அந்தத் திசை வழியைச் சுட்டிக் காட்டிய அவரது இறுதிக் கட்டுரை 1980ல் பிரசுரமானது. 

அவருடைய கடைசி ஆண்டுகளில், இந்தியாவில் கம்யூனிச இயக்கம் குறித்த வரலாற்று ஆவணங்களைத் தொகுத்துத் தலைச்சிறந்த இந்தியப் பல்கலைக்கழகமான ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜெஎன்யு) ஆவணக் காப்பகத்தைக் கட்டினார்; அங்கே இன்னும் ‘பிசி ஜோஷி ஆவணங்கள்’ திகழ்கின்றன. 1978 படின்டா கட்சி காங்கிரசுக்கு அவர் வந்தபோது அரங்கமே எழுந்து நின்று நீண்ட நேரம் கரவொலி எழுப்பி வரவேற்ற காட்சி அதுவரை முன்பு எப்போதும் காணாதது.

தலைச்சிறந்த அந்த ஆளுமைத் தலைவர் பிசி ஜோஷி 1980 நவம்பர் 9ம் நாள் மறைந்தார்.

வாழ்க பி சி ஜோஷி புகழ்!

--தமிழில் : நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment