Tuesday 20 July 2021

இளா மித்ரா : அணையா புரட்சி ஜோதி -- தலைவர்கள் வரிசை 39

 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் -39

இளா மித்ரா :  அணையா புரட்சி ஜோதி

--அனில் ரஜீம்வாலே


--நியூ ஏஜ் ஏப்ரல் 11 – 17

            இளா மித்ரா 1925 அக்டோபர் 18ல் கல்கத்தாவில் பிறந்தார். அவருடைய முன்னோர்கள் இன்றைய பங்களாதேசத்தின் ராஜ்ஷாகி மாவட்டத்தின் ஷனாய்தா சப்டிவிஷனின் பஹுஷியா கிராமத்திலிருந்து வந்தவர்கள். அவர் நடுத்தர வர்க்க அரசு ஊழியரின் மகளாவார். தந்தை நாகேந்திர நாத் சென் கல்கத்தா ஏஜிபி அலுவலகத்தின் கணக்காளர். பெத்யூன் பள்ளி மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் கல்லூரியில் படித்து வங்காள இலக்கியத்தில் பிஏ ஹார்னர்ஸ் பட்டத்தை 1944ல் பெற்றார். கல்லூரி இளங்கலை முடித்து, கொடுமையான துன்ப துயரங்களை அனுபவித்து, 13 ஆண்டுகளுக்குப் பிறகு 1958ல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பிரைவேட் மாணவராகத் தேர்வெழுதி இறுதியாக வங்க இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தில் எம்ஏ முதுகலைப் பட்டம் பெற்றார். சிட்டி கல்லூரியில் விரிவுரையாளராகத் சேர்ந்தார். கல்கத்தா பல்கலைக் கழகத்தின் செனட் உறுப்பினராகத் தொடர்ச்சியாக ஐந்து முறை அவர் பொறுப்பு வகித்தார்.

விளையாட்டு வீரர்

            அவரது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் 1935 முதல் 38 வரை வங்க மாகாணத்தின் விளையாட்டு சாம்பியனாகத் திகழ்ந்தார். அவர் நல்ல கூடைப் பந்தாட்ட வீராங்கனையும்கூட. 1930களின் விளையாட்டு உலகின் நட்சத்திரமாக இருந்தார். ஜப்பான் ஒலிம்பிக் பந்தயங்களில் பங்கேற்க இந்தியப் பிரதிநிதியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்; ஆனால் உலகப்போர் காரணமாக ஜப்பான் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை.

அரசியல் செயல்பாடுகள்

            அவரது மாணவப் பருவ நாட்களில் இளா அகில இந்திய மாணவப் பெருமன்றத்துடன் (ஏஐஎஸ்எஃப்) தொடர்பில் இருந்தார். (MARS அல்லது பெண்கள் சுயபாதுகாப்பு அஸோசியேஷன் எனப்படும்) மகிளா ஆத்ம ரக்க்ஷா சமிதி அமைப்பிலும் போர் நடைபெற்ற ஆண்டுகளில் செயல்பட்டார். விரைவில் கம்யூனிட் இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபட்டு 1943ல்


தமது 18 வயதிலேயே கட்சி உறுப்பினானார். 1944ல் ராமேந்திர நாத் மித்ரா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ராமேத்திரா மால்டா மாவட்டத்தின் இராமச்சந்திரபூரின் பணக்கார ஜமீந்தார் குடும்பத்தின் மகனாவார்; ஆனால் அவரோ அம்மாவட்டத்தின் கம்யூனிச இயக்கம் மற்றும் கிசான் சபாவின் அமைப்பாளராக உருவானார். அவர் கட்சி முழு நேர ஊழியரானார். எனவே இளா இராமச்சந்திரபூருக்கு இடம் பெயர்ந்து 1948ல் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.

            அக்காலகட்டத்தில் கல்கத்தாவில் கலவரங்கள் வெடித்தன. நவகாளி (மதக்) கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கட்சி அவரை அங்குச் செல்லப் பணித்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மகாத்மா காந்தி மற்றும் மற்ற தலைவர்களோடு இளா மித்ரா விரிவாகப் பயணம் செய்தார். நிவாரண மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் அவர் பேரளவிலான வகையில் தீவிரமாகப் பங்கேற்றார். முதன்முறையாகப் பெரும் மக்கள் திரளோடு அவர் நேரடியாகத் தொடர்பு கொண்டார்.

            தேசப் பிரிவினைக்குப் பிறகு மித்ராவின் ஜமீன்தார் குடும்பம் கிழக்குப் பாக்கிஸ்தானின் பகுதியானது; எனவே இளா பாக்கிஸ்தான் பகுதியான கிழக்கு வங்காளத்தில் இருந்து விட்டார். உள்ளூர் விவசாயத் தலைவரான அல்டாஃப் ஹுசைன் முயற்சியில் கிருஷ்ணா-கோவிந்தபூரில் அவர்களுடைய இல்லத்திற்கு அருகே ஒரு பள்ளி திறக்கப்பட்டது. அங்குள்ள மக்கள் ‘பதுமாதா’ (புதியதாக மணமான பெண்மணி) அதாவது இளாதான் தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் எனக் கோரினர். மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து அது ஓர் இயக்கமாயிற்று.

            பாக்கிஸ்தானில் கம்யூனிஸ்ட் கட்சி அடக்குமுறைகளைச் சந்தித்ததால் விரைவில் இளா தலைமறைவு வாழ்வில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். அப்போது கர்பிணியாக இருந்த அவர் கல்கத்தாவிற்குத் தப்பிச் சென்று தனது மகன் மோகனைப் பெற்றெடுத்தார். ராமச்சந்ரபூரில் அவருடைய மாமியார் பொறுப்பில் மோகன் வளர்க்கப்பட்டார்.

            இளா கணவரோடு நவாப்கஜ் போலீஸ் சரகத்தின் (பங்களா தேசத்தில் உள்ள) நச்சோல் திரும்பினார். ராஜ்ஷாகியிலிருந்து 35 கிமீ இருந்த நச்சோல் எளிதில் சென்றடைய முடியாத பகுதி. உள்ளூர் தலைவர்கள் அங்குள்ள விவசாயிகளைக் ‘தேபகா போராட்ட’ இயக்கத்திற்காகத் தீவிரமாகத் திரட்டினர். விவசாய இயக்கங்களை நசுக்குவதற்குத் தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் முஸ்லீம் லீக் அரசு எடுத்தது.

            நச்சோல் பகுதிகளில் ஜாட்டேதார் (ஜாட் சமூகத்தைச் சேர்ந்த நிலவுடைமை ஜமீன்தார்கள்) விவசாய விளைபொருள்களின் உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கை எடுத்துக் கொண்டதால் பயிர் செய்து பாடுபட்ட விவசாயிகளுக்கு வெறும் ஒருபங்கு மட்டுமே கிடைத்தது. வடக்கு வங்காளத்தின் மற்ற மாவட்டங்களில் அவர்கள் பாதி உற்பத்தியையே பெறுவது வழக்கம். நெல்லைக் குத்திப் புடைத்து உமி நீக்கி அரிசியாக்கத் தொழிலாளர்களுக்கு 20ல் மூன்று ‘அராஸ்’ மட்டுமே கிடைத்தது. அவர்கள் குறைந்த பட்சம் 7 அராஸ் (‘aras’) தரக் கோரினார்கள்.  

            சாந்திப்பூரை இயக்கத்தின் தனது தலைமையிடமாகக் கொண்டு மூத்த கம்யூனிஸ்ட் சந்தல் (இனத்) தலைவர் மாட்லா மாஜ்கி அவர்களின் வீட்டில்  இருந்து இளா செயல்பட்டார். இளா மித்ரா அப்பகுதிகளில் விரிவாகச் சுற்றுப்பயணம் செய்து பெரும் எண்ணிக்கையிலான விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளைச் சந்தித்தார்.

விரைவில் அவர் ‘ராணி மா’ எனப் புகழ்பெற்றார். அவருடைய செயல்பாடுகளைப் புகழ்ந்துரைத்துப் பாடல்கள்கூட புனையப்பட்டன. போராட்டம் ஆயுதம் தாங்கிய போராட்டமாக மாறி வேகமாகப் பரவியது. விவசாயிகளின் தலைமை மிகவும் எளிமையான திறன்மிக்க அணுகுமுறையைப் பின்பற்றினர். ஒரு குறிப்பிட்ட வயலில் அறுவடை முடிந்ததும் நிலத்தின் சொந்தக்காரரை ஒரு குறிப்பிட்ட நாளில் வரச்சொல்லி இயக்கத்தின் தலைவர்கள், சாதாரண கிராமத்துப் பொது மக்கள் மற்றும் அவ்வயலில் பாடுபட்ட விவசாயிகளும் கூடுவர். உற்பத்தியான விளைபொருள் மூன்று பங்குகளாகப் பிரிக்கப்பட்டு இரண்டு பங்கு விவசாயிகள் பெறுவர். இந்த ஏற்பாட்டை நிலவுடைமையாளர்களும் ஏற்க வேண்டியிருந்தது. 1950ம் ஆண்டின் வாக்கில்  சுற்று வட்டத்தில் இருந்த நிலவுடைமையாளர்கள் அனைவரும்  ‘தேபகா’ (மூன்று பங்காகப் பிரிப்பது) மற்றும் ‘சத் அரி’ (‘Tebhaga’ and ‘sat ari’)முறையை ஏற்க வேண்டி வந்தது.

            ஆனால் நிர்வாகமும் நிலவுடைமையாளர்களும் அமைதியாக இருக்கத் தயாரில்லை. போலீஸ் படையையும் ஆயுதம் தாங்கிய (கூலிப்) படையும் திரட்டி தொல்லைப்படுத்தவும் மக்களைக் கொள்ளையிடவும் தொடங்கினர். பயிர்கள் கொள்ளையிடப்பட்டு பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள், தொழிலாளர்களைக் கைது செய்து சித்தரவதை செய்தனர்.

            1950 ஜனவரி 7ல் இரண்டாயிரம் படைகள் நச்சோல் வந்திறங்கி பல டஜன் கிராமங்களைத் தீயிட்டுக் கொளுத்தின. இராணுவத்தினருக்குப் போலீசும் அன்சார்களும் ‘ஆதரவளி’த்தனர். (அன்சார் என்போர் இஸ்லாமிய உள்ளூர்வாசிகள், மதினாவிலிருந்து மெக்கா வந்த நபிகள் மற்றும் தோழர்களுக்கு ஆதரவளித்தோர் வழிவந்தவர்கள். அன்சார் என்ற இஸ்லாமிய வார்த்தைக்கு ‘ஆதரவளிப்போர்’ ’பாதுகாப்புத் தருவோர்’என்று பொருள்). வீடு வீடாகச் சென்று அடுத்த கிராமத்திற்குச் சென்றனர். நூற்றுக்கணக்கான சந்தால் இனத்தவர்கள் கொல்லப்பட்டனர். இளாவின் தோழர்கள் அவரை அரிசி ஏற்றிச் செல்லும் மாட்டு வண்டிகளில் இரகசியமாக எல்லையைத் தாண்டித் தப்பிச் செல்ல வேண்டினர்; ஆனால் மற்றவர்கள் பாதுகாப்பாக விடுவிக்கப்படும்வரை செல்ல மாட்டேன் என அவர் மறுத்துவிட்டார். ரமீன் மித்ரா வழிநடத்திய குழு, பாதுகாப்பாக இந்திய எல்லைக்குச் சென்றனர்; ஆனால் மற்றவர்களால் இயலவில்லை. இளாவும் நூற்றுக் கணக்கான தோழர்களும் கைது செய்யப்பட்டனர். அவர் சந்தல் இன மக்களின் உடையில் இருந்து அவர்களுடைய மொழியைப் பேசினாலும் உளவுத் துறையினர் அவரைக் கண்டுபிடித்து விட்டனர்.     

            நச்சோல் காவல் நிலையத்தில் தொடர்ச்சியான மனிதத் தன்மையற்ற சித்தரவதைகள் தொடங்கின. நூற்றுக் கணக்கானவர்களை அடித்துத் துவைத்தனர்: இளா மித்ராதான் அவர்களது தலைவர் எனவும் அவர் தூண்டுதலில்தான் போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர் என அவர்கள் ஒப்புக்கொண்டு சொல்வதற்காகத்தான் அத்தனை அராஜகங்களும்  நடத்தப்பட்டன. ஆனாலும் அவர்கள் எதையும் சொல்ல மறுத்தனர். சித்ரவதையில் மட்டுமே சுமார் 100 பேர் இறந்தனர்.

பாக்கிஸ்தானில் கற்பனைசெய்ய முடியாத சித்தரவதைகள்

            இளா மித்ரா மீது அதற்குப் பிறகுதான் கற்பனை செய்ய முடியாத விவரிக்க முடியாத சித்தரவதைகள் நடத்தப்பட்டன: அவர் ஒரு கம்யூனிஸ்ட், பெண் மற்றும் முஸ்லீம்கள் ஆதிக்கத்தில் உள்ள பாக்கிஸ்தானில் ஒரு இந்துவாகவும் இருந்தார். அவரை முறித்துப் போட நடத்தப்பட்ட இந்த எல்லா அம்சங்களும் வெற்றியடையவில்லை. அவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெற பாக்கிஸ்தான் அரசு தனது அரசதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்தியது. அவருடைய தோழிமார் மனோரமா மசீமா மற்றும் பானு தேவி பின்னர் வற்புறுத்தியதால் இளா மித்ரா இந்த முழு விபரங்களைக் கூற மற்றவர்கள் இதை அறிய வந்தது. அவருக்கு உண்ண உணவும் நீரும் கொடுக்கவில்லை, துப்பாக்கிகளின் பின்பக்க மரக்கட்டையால் தொடர்ந்து அடித்தனர், பூட்ஸ் காலால் வயிற்றில் உதைத்தனர், வலதுகால் நகங்களை பிய்த்து எடுத்தனர், எல்லா வகையிலும் அவர் மீது அத்து மீறி விவரிக்க முடியாத கொடுமைகளை நடத்தினர். இந்தச் சித்தரவதை மூன்று நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தி அவரை இரத்தத்தில் நனைத்தனர். பின்னர் அவர் நவாப்கஜ்ச் சிறைக்கு அழைத்துச் சென்றபோது நுழைவாயிலிலேயே கொடூரமாக அடித்தனர். பின்னர் சில அதிகாரிகள், குறிப்பாக அங்கே போலீஸ் அதிகாரியாக இருந்த அவரது கல்லூரித் தோழர்களில் ஒருவர் அவருக்கு இரகசியமாக உதவிட, மேலும் சித்தரவதைகளைத் தடுத்து நிறுத்தினார்.

            சிறைக்குள் நடத்தப்பட்ட சித்தரவதைகளை அவரது விவரமான அறிக்கையாக ‘லியாகத்- நுரூல் அமீன் ஆட்சி’க்கு எதிரான சிறு பிரசுரமாக நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டன. அந்தச் சுற்றறிக்கை பரவலான அதிர்ச்சியையும் கிளர்ச்சியையும் உண்டாக்கியது.

            இயக்கத்தைத் தலைமையேற்றது, போலீஸ் மற்றும் பிற அதிகாரிகள் கொலை, கட்டாயமாகப் பயிர்களைக் கொள்ளையடித்தது மற்றும் சட்டவிரோதமாக விவசாயிகளைக் கூட்டமாகக் கூட்டியது என அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. ராஜ்ஷாகி மத்தியச் சிறையில் அவரது உடல்நிலை மற்றும் மனநிலை உடைந்து போகும் நிலைக்கு வந்தது.

            அவர் எழுதினார், “சில நேரம் மகனைப் பெற்றெடுத்த மகிழ்ச்சியான தருணம் மின்னல் வெட்டாய் வந்து போகும்…ஆனால் விரைவில் மறையும். இனிமையான நினைவுகள் எதையும் என்னால் ஞாபகப்படுத்த முடியவில்லை….எல்லாம் அந்தகார இருளில் முடிந்து போனதாகத் தோன்றும் … நீதிபதியின் குரல் ….ஆனால் அனைத்தும் ஒன்றுமில்லா சூன்யத்திற்குத் திரும்பிவிடும்.”

            டாக்கா மத்திய சிறைக்கும் அங்கிருந்து பிறகு டாக்கா மருத்துவக் கல்லூரிக்கு ஏறத்தாழ சாவின் விளிம்பில் 1953ல் அவர் மாற்றப்பட்டார். நூற்றுக்கணக்கானோர் அவரை வந்து பார்த்தனர். மௌலானா பாஷானி மற்றும் பிற தலைவர்கள் கிழக்கு வங்காளச் சட்டமன்றத்தில் இப்பிரச்சனையை எழுப்பி அவரை விடுவிக்க வற்புறுத்தினர். 

            1954 ஜூன் மாத மத்தியில் பரோலில் விடுவிக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சைக்காக அவர் கல்கத்தா கொண்டுவரப்பட்டார். மெல்ல குணம் அடைந்தார். அவர் மீண்டும் உடல்நலம் திரும்பினார் என்றறிந்த பாக்கிஸ்தான் அரசு வழக்குகளைத் தொடர்ந்து மேலும் நடத்த அவரைத் திரும்ப அனுப்புமாறு இந்திய அரசை நிர்பந்திக்கத் தொடங்கியது. சர்வாதிகார ஆட்சியிடம் அவரை மீண்டும் திரும்ப ஒப்படைக்க அவரது நண்பர்களும் தோழர்களும் மறுத்தனர். டாக்டர் ஷிஷிர் முகர்ஜி மற்றும் பிற மருத்துவர்கள் கவனிப்பில் அவர் இருந்தார். அவருடைய நிலைமையை நாவலாசிரியர் திபேந்திர பண்டோபாத்யாயா மிக விரிவாக விவரித்துள்ளார். மனரீதியான வேதனைகளிலிருந்து அவர் மீண்டுவர சுசித்ரா மித்ரா (தாகூர் பாடல்களை அவர் படுக்கைக்கு அருகில் அமர்ந்து பாடுவார்), சுபாஷ் முகோபாத்யாயா மற்றும் பிறர் உதவினர். அவர் மீது ‘கேனோ பான் பாருல் தாக்கோ ரே’ (‘ஏன் அழைத்தாய் எங்கள் சின்னத் தங்கை, பாரூல்!’), என்ற கவிதையை அவர் இயற்றினார்.

(இப்பாடல் வங்கமொழி சிறுவர் இலக்கியத்தில் ஒரு நாடோடிக் கதையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு காலத்தில் ஒரு அரசன், அவனுக்கு 7 அரசிகள், கடைசி அரசி அழகி பண்பானவர். ஒருவருக்கும் குழந்தை இல்லை. கடைசியில் இளைய அரசி கர்ப்பம். அரசன் தர்பாரில் இருக்கும்போது குழந்தை பிறந்த செய்தியை உடனே தெரிவிக்க ஒரு தங்கச் சங்கிலியை ஏற்பாடு செய்து கட்டியிருந்தான். பொறாமை கொண்ட 6 அரசிகள் அவன் கோபத்தைக் கிளற சூழ்ச்சி செய்தனர். பிறந்த  அழகான 7 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகளை எரித்து சாம்பலை சாம்பல் குப்பை மேட்டில் கொட்டிவிட்ட அவர்கள், அரசிக்கு எலிகளும், தவளைகளும் நண்டுகளும் பிறந்தன என அரசனிடம் பொய் உரைத்தனர். கோபம் கொண்ட அரசன் 7வது அரசியைத் துரத்தி விட்டான். அவளும் சாணி பொறுக்கி, வறட்டியாக்கி அரண்மனைக்கு அனுப்பும் துயரம் நிறைந்த வாழ்வை வாழ்கிறாள்.

            அரசன் பூசைக்கு ஒரு நேரம் நாட்டில் பூ எதுவும் இல்லை. வேலையாள் சென்று அரண்மனை சாம்பல் குழிக்கு அருகே இருக்கும் 7 சாம்பல் மரங்கள் மற்றும் ஒரு பாரூல் மரத்தில் ஒவ்வொரு பூ இருப்பதாகக் கூறுகிறான். தோட்டக்காரன் பறிக்க வருகிறான் என்பதைப் பாரூல் 7 சாம்பல் மரங்களை அவசரமாக அழைத்துக் கூறுகிறது. அப்போதுதான் அவைகள் கேட்பதாக இந்தக் கவிதை வரி வருகிறது: ‘ஏன் அழைத்தாய், எங்கள் சின்னத் தங்கை பாரூல்?’ தோட்டக்காரர் வருகிறார், உங்கள் மலர்களை நீங்கள் கொடுப்பீர்களா? என பாரூல் கேட்க, சாம்பல் மரங்கள், ‘மாட்டோம் மாட்டோம், நாங்கள் மேலே பறந்து விடுவோம்’ என்றன. அதிசயப்பட்ட தோட்டக்காரர் கூற அரசன் நேரே வருகிறான். அப்போதும் அதே கேள்வி பதில், ‘அரசன் வருகிறார், தருவீர்களா? –மாட்டோம் மாட்டோம்’. இப்படியாக 6அரசிகள் வந்து ஒவ்வொருவராக பறிக்க வந்தபோதும் மலர்கள் மேலே மேலே பறந்தன. கடைசியில் அடிமையை அழைக்கும்படி அசரீரி சொல்ல தேடிப்பிடித்து சாணி பொறுக்கிக் கொண்டிருந்த அவளை மரியாதைக் குறைவாகத் தூக்கி வந்து, மலர் பறிக்க உத்தரவிட்டனர். அவள் சென்றபோது அந்த மலர்கள் 7 ஆண் இளவரசர்களாகவும் ஒரு அழகிய இளவரசியாகவும் தாயைக் கட்டிக் கொண்டு இறங்கின. பொறாமை கொண்ட 6 அரசிகளைத் தண்டித்த அரசன் இவர்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து அரசாட்சி செய்தான் என கதை முடிகிறது. இது போன்ற பாடல் சினிமாக்களிலும் இடம் பெற்றுள்ளன.)

            அவர் பாக்கிஸ்தான் திரும்பிச் செல்லவில்லை, மேற்கு வங்கத்தில் கட்சிப் பணியாற்றினார். 1957ல் ஒரு தனித்தேர்வராக வங்கமொழியில் எம்ஏ பட்டத்தை நிறைவு செய்தார்; வங்கமொழிப் பேராசிரியராக சிட்டி கல்லூரி (தெற்கு)ல் பணிசெய்தார். 1962--71 மற்றும் 1972--77 ஆண்டுகளில் மாணிக்தாலா தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

            அவர் திரும்பிச் செல்லாவிட்டாலும் இளா மித்ரா ஒருபோதும் (பின்னர் பங்களாதேசமாக மாறிய) கிழக்கு வங்காளத்தை மறக்கவில்லை. பங்களாதேச விடுதலைப் போரின்போது அவரது வீடு மற்றும் கட்சி அலுவலகம் விடுதலைப் போராளிகளின் மையமாக இருந்தது. ‘என்னுடைய கடமை இது, அந்நாட்டிற்கு நான் கடன் பட்டிருக்கிறேன்’ என்று அவர் கூறினார். 1972 மற்றும் 74ல் அவர் பங்களாதேசத்திற்கு விஜயம் செய்தார். வங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் அவர்களை இளா மித்ரா சந்தித்தபோது, ’மித்ரா இணையர்கள் எனது மகனும் மகளும் ஆவர்’ என்று கூறினார். அவர்களை மீண்டும் பங்களாதேசக் குடிமகன்களாக அழைத்துக் கொள்வேன் என அவர் உறுதிமொழி அளித்தார், ஆனால் இதன் மத்தியில் வங்கபந்துவே படுகொலை செய்யப்பட்டார்.

            1965ல் முஸ்லீம்களுக்கு எதிரான கலவரங்களைத் தடுப்பதில் அவர் பங்கெடுத்தார்.

            பங்களாதேசத்தில் இளாமித்ராவின் முன்னோர்களின் வீடு பராமரிப்பின்றி கிடந்தது. பங்களாதேசம் தினாஜ்பூரின் தேபகா சத்ராவில் இளா மித்ரா முரல் (சுவரோவியம்) ஒன்று உள்ளது.

            இந்திய அரசு இளா மித்ராவுக்குத் தாமிரப் பத்திர விருது அளித்து கௌரவித்தது; மேலும் இலக்கிய மொழிபெயர்ப்பு பணிகளுக்காகச் சோவியத் லாண்டு நேரு விருது வழங்கப்பட்டது.

            மேற்கு வங்கப் பிராந்திய கிசான் சபாவின் தலைவராகவும் இந்தோ சோவியத் கலாச்சாரக் கழகமான இஸ்கஃப் (ISCUF) அமைப்பின் மாநிலத் தலைவராகவும் அவர் இருந்தார்.

            அணையா புரட்சி ஜோதியான இளா மித்ரா கல்கத்தாவில் 2002 அக்டோபர் 13ம் நாள் மறைந்தார்.

            அவர் புகழ் என்றும் சுடர்விட்டுப் பிரகாசிக்கும்!

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

No comments:

Post a Comment