Friday 25 June 2021

கே என் ஜோக்லேக்கர் : தொழிலாளர் இயக்கத்தைக் கட்டியெழுப்பியவர்

 


நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து : 

சில சித்திரத் சிதறல்கள் -37

கே என் ஜோக்லேக்கர் : தொழிலாளர் இயக்கத்தைக் கட்டியெழுப்பியவர்

 --அனில் ரஜீம்வாலே

--நியூஏஜ் (மார்ச் 21 – மார்ச் 27)

கே என் ஜோக்லேக்கர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்க இயக்க வரலாற்றில் ஆர்வத்திற்குரிய மனிதராவார். இந்தியாவிலும் பம்பாயிலும் தொழிற்சங்க மற்றும் கம்யூனிச இயக்கத்தை டாங்கே, காட்டே, நிம்கர், ரூய்கர் முதலானவர்களுடன் இணைந்து கட்டியெழுப்பிய தலைவர். ரத்னகிரி மாவட்டம் ரத்னகிரி தாலுக்காவின் வைத்யலாவகோன் என்ற இடத்தில் 1896 ஆகஸ்ட் 7ல் பிறந்தார். அவருடைய முன்னோர்கள் அதே மாவட்டத்தின் குககர் தாலுக்காவின் ஹெட்வி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்களாவர். தபால்காரரான அவர் தந்தையின் வாழ்க்கை சொற்ப ஊதியமான ரூ3 மாத ஊதியத்தில் துவங்கி 35 வருட கால சேவையில் உயர்ந்தது என்னவோ 27 ரூபாய் மற்றும் எட்டணா! ஜோக்லேக்கரின் மூத்த அண்ணன் அப்பல்லோ அண்டு மொரார்ஜி ஆலையில் ஃபிட்டராக வேலை செய்தார். ஜோக்லேக்கர் தனது 13வது வயதில் தன் தந்தையை இழந்தார். 

கல்வியும் வேலையும் 

ஹெட்வி கிராமப் பள்ளியில் மராத்தியில் 4வது வரை படித்தவர், தந்தை மறைவுக்குப் பிறகு 1909ல் பம்பாய்க்கு இடம் மாறுகிறார். மருத்துவரான தனது தாய்வழி மாமாவுடன் தங்கி எல்பின்ஸ்டோன் பள்ளியில் படித்த ஜோக்லேக்கர் 1914 –15ல் மெட்ரிகுலேஷன் தேறினார். 

மெட்ரிகுலேஷனுக்குப் பிறகு கஸ்டம்ஸ் அண்ட் அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் பணியாற்றினார். மேல்படிப்புக்காகப் பொருளைச் சேமித்து 1917ல் பாட்னா சென்று திலகர் நிறுவிய ஃபெர்குசன் கல்லூரியில் சேர்ந்தார். வரலாறு, பொருளாதாரம் மற்றும் அரசியல் விஞ்ஞானம் பாடத்தில் 1921ல் பிஏ பட்டம் பெற்றார். படிக்கும் காலத்தில் இரவு நேரத்தில் ஓர் அச்சகத்தில் பணியாற்றினார்.

முதல் உலகப் போரின்போது திலகரின் ஆலோசனையின்படி இந்திய இராணுவத்தின் யுனிவர்சிட்டி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார்.

பம்பாயில் இருந்தபோது பெரும்பாலும் ஜோக்லேக்கர் டெக்ஸ்டைல் தொழிலாளர்களுடன் தொடர்பில் இருந்தார். முதல் உலகப் போரின்போது பல வேலைநிறுத்தங்கள் நடைபெற்றதை அவர் பார்த்தார். வேலைநிறுத்தத்தில் பல தொழிலாளர்கள் போலீசால் கொல்லப்பட்டது அவரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவருடைய சகோதரரும்கூட வேலைநிறுத்தத்தில் பங்கேற்றார்.

திலகரின் அரசியல் செல்வாக்கு

அவருடைய தாய் மாமா ஷிவ்ராம் கோபால் வைத்யா ஒரு தீவிரமான திலகர் அணிக்காரர். திலகர் வெளியிட்ட ‘கேசரி’ (சிங்கம்) இதழை அவருக்காகப் படித்துக் காட்டச் சொல்வார்: இவ்வாறு அவர் ஜோக்லேக்கரை அரசியல்படுத்தினார். மாண்டலே சிறையிலிருந்து 1916ல் திலகர் விடுதலையடைந்ததும், அரசியல் நிகழ்வுகள் உயிர்ப்பெற்றன. வசந்த வியாக்யான மாலா என்னும் வசந்த காலத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் பூனாவில் நடந்தபோது ஜோக்லேக்கர் தவறாது அவற்றில் கலந்து கொண்டார். மேலும் 1917 நாசிக்கில் நடைபெற்ற காங்கிரஸின் இரண்டு அணி பிரதேச மாநாடுகளிலும், திலகரின் தனித் தொண்டராகவே அவருடன் இணைந்து, ஜோக்லேக்கர் கலந்து கொண்டார். 

மாணவர் இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்ற ஜோக்லேக்கர் விவாதங்களிலும் திலகர் துவக்கிய கணேஷ் உத்சவ், ஜிவாஜி உத்சவ் முதலான விழாக்களிலும் பங்கேற்றார். அவரது செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட திலகர் கேசரி அலுவலகத்திலிருந்து ஜோக்லேக்கருக்கு ரூ 5/- கல்வி உதவித்தொகை வழங்கினார். ‘இந்திய சமூகத்தின் வேலைக்காரர்கள்’ என்ற அமைப்பின் உறுப்பினராகி அவர் அதன் நூலகத்தைக் கவனித்துக் கொண்டார். மேலும் அங்கேயே ரூ15 மாத ஊதியத்திற்கு ‘வேலைக்காரப் பைய’னாகப் (பாய்) பணியாற்றினார். நூலகத்தில் இருந்ததால் சாத்தியமான அனைத்து இலக்கியங்களையும் வேண்டிய மட்டும் சுவைத்தார்; அதில் லண்டன் டைம்ஸ், மான்செஸ்டர் கார்டியன், இந்திய நாளிதழ்கள் மற்றும் புத்தகங்கள் அடக்கம். மேலும் ஆழமாக ரஷ்ய புரட்சியோடு அவருக்கு அறிமுகம் கிடைந்தது.

லாலா லஜபதி ராய் மற்றும் (லோக மான்ய பால கங்காதர) திலகர் இருவரையும் வரவேற்க சாந்தாராம் சாவலில் (Chawl) ஒரு மாபெரும் வரவேற்பு விழாவை டாங்கே மற்றும் பிற மாணவர்களுடன் சேர்ந்து ஜோக்லேக்கர் ஏற்பாடு செய்தார். டாங்கே, ஜோக்லேக்கர், மதோல்கர் மற்றும் பார்வதே ஓர் எடுத்துக்காட்டான குழுவாக (டீம்) அமைந்தனர். மராத்தி மாணவர்கள் இலக்கிய சொஸைட்டி ஒன்றை அமைத்து அதன் சார்பாக ‘யங் கலேஜியேட்’ (காலேஜ் இளைஞர்கள்) இதழையும் டாங்கே, நிம்கர், ஜோக்லேக்கரும் பிறரும் வெளியிடத் தொடங்கினர். 

தபால்காரர்கள் வேலைநிறுத்தம் பம்பாயில் 1919 – 20ல் நடைபெற்றபோது அவருடைய சகோதரர் அதில் கலந்து கொண்டார். அதே காலகட்டத்தில் ரயில்வே மற்றும் டெக்ஸ்டைல் வேலைநிறுத்தங்களும் நடைபெற்றன. 

ஒத்துழையாமைக்கு ஆதரவாக ஜோக்லேக்கர் கல்லூரி மாணவர்களிடமிருந்து 800 கையொப்பங்கள் திரட்டினார். அந்த இயக்கத்தில் அவர் டாங்கேவுடன் பங்கேற்றார். அப்போது ஒத்துழையாமைக்காக அமைக்கப்பட்ட தேசிய பள்ளியில் டாங்கே ஓர் ஆசிரியர் ஆனார். ஜோக்லேக்கருக்கு ஒரு ஃபேபியன் சோஷலிசவாதியும் தொழில் அதிபருமான லாட்வாலாவுடன் அறிமுகம் கிடைந்தது; லாட்வாலா அயல்நாடுகளிலிருந்து இலக்கியங்களை இறக்குமதி செய்து தருவித்தார்.  டாங்கேயின் ‘தி சோஷலிஸ்ட்’ வெளியீட்டுக்கு அதன் மேலாளராக இருந்து உதவினார். கான்பூர் சதி வழக்கில் (1924 --28) டாங்கே கைதானபோது அவர் ’தி சோஷலிஸ்ட்’ இதழின் ஆசிரியரானார். சிறைவாசிகளின் வழக்கில் அவர்களுக்கு ஆதரவாக மற்றவர்களுடன் இணைந்து உதவினார்.

திலகரின் ‘ராஷ்ட்டிர சேவக்’ (தேச ஊழியன்) நாளிதழில் அவரும் சேர்ந்து கொண்டார். லாட்வாலா ஆதரித்த சமூக ஜனநாயக புக் கிளப் அமைப்பைக் கட்டி அமைப்பதில் ஜோக்லேக்கர் தீவிரமாகச் செயலாற்றினார். அவருக்குக் கிடைத்த மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்சின் சில படைப்புகளை அவர் வெளியிட்டார். பிறரோடு இணைந்து 1923ல் ‘லேபர் பிரஸ்’ நிறுவினார்.

பிரதேச காங்கிரஸ் (BPCC) அமைப்பில் 

1921 வாக்கில் பம்பாய் மாகாண காங்கிரஸ் அமைப்பில் (BPCC) இருந்த 75 பேரில் டாங்கே, ஜோக்லேக்கர், எஸ்வி தேஷ்பாண்டே, சாத்தே, ஆர்வி நட்கர்னி முதலானோர் உட்பட 17 இளைஞர்கள் இருந்தனர். அவர்கள் BPCCன் சார்பில் ‘லேபர் கமிட்டி’ அமைத்து டெக்ஸ்டைல் மற்றும் பிற பகுதி தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றினர். புகழ் பெற்ற கிர்ணி காம்கர் யூனியன் (GKU) அமைப்புக்கு முன்னோடியான கிர்ணி காம்கர் மகாமண்டல் (GKM) அமைப்பு 1923ல் அமைக்கப்பட்டது. 

இந்தியாவின் டெக்ஸ்டைல் உற்பத்திப் பொருட்கள் மீது பிரிட்டிஷ் அரசு சுங்கத் தீர்வை விதிக்க, அதன் சுமை ஊதியவெட்டு முதலான வடிவில் தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்டது. 1924 –25ல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து அரசை நிர்பந்தித்து வரியை ரத்து செய்ய வைத்தனர். மகாமண்டல் செயல்பாடுகளில் ஜோக்லேக்கர் தீவிரமாக ஈடுபட்டார். அவ்வமைப்பு ‘காம்காரி’ (தொழிலாளி) என்ற பெயரில் ஓர் இதழை ஆரம்பித்தது. அந்த இதழ்தான் பின்னாட்களில் தொழிலாளர் விவசாயிகள் கட்சி(WPP)யின் கட்சி இதழான ‘க்ரந்தி’ (kranthi) (வெளிச்சம், எழுச்சி, புரட்சி எனப் பொருள்படும்) மராத்தி இதழின் முன்னோடி. ஜோக்லேக்கர் மற்றும் மிராஜ்கர் இருவரையும் கூட்டு ஆசிரியர்களாகக் கொண்டு ‘க்ரந்தி’ 1927 மே 4ம் நாள் WPP கட்சியின் அதிகாரபூர்வ இதழாகத் தொடங்கப்பட்டது. 

கே என் ஜோக்லேக்கர் பம்பாய் மாகாண காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக 1925 -26ல் பொறுப்பு வகித்தபோது காங்கிரஸ் சில காலம் தொழிலாளர் வர்க்க அடிப்படையிலான கட்சியாக ஆனது.

ஏஐடியுசி அமைப்பில்

1920ல் பம்பாயில் நடைபெற்ற ஏஐடியுசியின் முதலாவது அமைப்பு மாநாட்டில் ஒரு மாணவனாக ஜோக்லேக்கர் கலந்து கொண்டார். 1923ல் மீண்டும் பம்பாயில் நடைபெற்ற அதன் 4வது மாநாட்டில் கிர்ணி காம்கர் மகாமண்டல் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். 1927 டெல்லியில் நடந்த ஏஐடியுசி மாநாட்டிலும் கலந்து கொண்டார்.

காலவோட்டத்தில் ஜோக்லேக்கர் ரயில்வே (GIPஎன்னும் கிரேட் இந்தியன் பெனிசுலா அதாவது இந்தியத் தீபகற்பம்) முதலிய அமைப்புகள், டெக்ஸ்டைல், ஆயில், சுரங்கம் மற்றும் பிறபகுதி தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றினார். 

சிபிஐ கட்சி அமைக்கப்படுதல்

(கான்பூர் சதிவழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட) பம்பாய் டிஃபென்ஸ் கமிட்டி வி ஹெச் ஜோஷியை வழக்குக்கு ஆதரவாக முன்னேற்பாடுகளைச் செய்ய கான்பூர் அனுப்பியது. ஹஸ்ரத் மொகானி மற்றும் சத்யபக்தாவுடன் தொடர்பு கொண்டபோது அவர்கள் மூலம் அனைத்திந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டிற்கான தயாரிப்புகள் குறித்து அறிந்தார். ஜோஷி திரும்பி வந்ததும் காங்கிரஸில் இருந்த கம்யூனிஸ்ட் குழு மகாணத்தில் சிபிஐ கட்சியை அமைத்திட தங்கள் கூட்டத்தை நடத்தினர். பம்பாய் குழு கான்பூர் கம்யூனிஸ்ட் மாநாட்டை நடத்துவதில் மொகானி, அர்ஜுன்லால் சேத்தி மற்றும் சத்யபக்தாவுடன் ஒத்துழைப்பது என முடிவு செய்ததில் ஜோக்லேக்கர் முக்கிய பங்காற்றினார்.  காட்டே, ஜோக்லேக்கர் மற்றும் நிம்கர் மாநாட்டில் கலந்து கொண்டனர். கம்யூனிஸ்ட்கள் ஏற்பாடு செய்த காங்கிரஸ் பந்தலை நோக்கிய பேரணியில் ஜோக்லேக்கர் கலந்து கொண்டார். பொதுவெளி அரங்கு கூட்டத்தில் சுமார் நான்கு முதல் ஐந்தாயிரம் மக்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பலரும் கம்யூனிஸ்ட் கூட்ட அமர்விலும் கலந்து கொண்டனர். 

ஜோக்லேக்கர் கூற்றுப்படி, (கான்பூர் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட) கம்யூனிஸ்ட் கட்சி இரு பொதுச் செயலாளர்களில் ஒருவரான பர்கர்ஹட்டாவால் டெல்லியிலிருந்து ஒன்றும் பம்பாயிலிருந்து மற்றொன்று காட்டேவாலும் இரண்டு இணை கட்சி அலுவலகங்கள் செயல்பட்டன. 

1927ல் மெட்ராஸில் காங்கிரஸின் ஆண்டு கூட்டத் தொடர் நடந்தபோது அதில் ஜோக்லேக்கர் காங்கிரஸ் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். மாநாட்டின் பொருளாய்வுக் குழுவில் பூரண சுயராஜ்யம் தீர்மானத்தை ஜோக்லேக்கர் முன் மொழிய அதனை ஜவகர்லால் நேரு ஆதரித்தார். தீர்மானம் பெருவாரியான பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட பொது அரங்கில் ஜவகர்லால் நேரு முன்மொழிய ஜோக்லேக்கர் ஆதரித்த அந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. அவரும் மற்றவர்களும் சைமன் கமிஷனுக்கு எதிராக நடவடிக்கையில் இறங்க வற்புறுத்த பம்பாய் முழுவதும் ஆர்ப்பாட்டங்களுக்கு அது வழியமைத்தது. இரண்டு லட்சம் மக்களுக்கும் மேல் கலந்து கொண்ட பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் மற்றவர்களோடு ஜோக்லேக்கரும் கலந்து கொண்டார். சைமன் குழுவிற்கு எதிரானப் பெரும் போராட்டங்களைத் தொழிலாளர் விவசாயிகள் கட்சி WPP, சிபிஐ  மற்றும் ஏஐடியுசி அமைப்புகள் ஏற்பாடு செய்தன. அந்தப் போராட்டங்களில் ஜோக்லேக்கர் முன்னணிப் பங்குவகித்தார். காங்கிரஸில் செயல்பட்ட சோஷலிசக் குழுவிலிருந்து பம்பாயில் WPP கட்சி அமைக்கப்பட்டது; அதன் தலைமைக்குழு தலைவர்களில் ஜோக்கலேக்கரும் ஒருவராக இடம் பெற்றார்.  

இதன் மத்தியில் ஜோக்லேக்கர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரானார். 

மே தினக் கொண்டாட்டம் 

1925ல் லாகூரில் மேதினம் கொண்டாடப்பட்டது. 1926ல் மே தினத்தை அனுசரிக்க கிர்ணி காம்கர் மகாமண்டல் முன்முயற்சிகளை எடுத்தது. சுமார் பத்தாயிரம் தொழிலாளர்கள் ஊர்வலத்தில் கலந்து கொள்ள பேரணி நடத்தப்பட்டது. பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கு ஒருமைப்பாட்டு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. ஜோக்லேக்கரும் மற்ற தலைவர்களும் தலைமையேற்க 1927ல் காங்கிரஸ் இல்லத்திலிருந்து மாபெரும் ஊர்வலம் புறப்பட்டது. (இந்தியாவில் முதன் முறையாக மேதினம் 1923ல் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் முயற்சியில் மெட்ராஸில் கொண்டாடப்பட்டது)

கிர்ணி காம்கர் வேலைநிறுத்தம், 1928

1928 ஏப்ரலில் வரலாற்றுப் புகழ்பெற்ற டெக்ஸ்டைல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது, அது ஆறு மாதங்களுக்கு மேல் நீடித்தது. காலக் கிரமத்தில் ‘கிர்ணி காம்கர் யூனியன்’ அமைக்கப்பட்டு பெரும் தலைவர்கள் மத்தியில் ஒருவராக ஜோக்லேக்கர்  உருவானார்; மேலும் GKU சங்கத்தில் டாங்கே, மிராஜ்கர், நிம்கர் முதலானவர்களுடன் ஜோக்லேக்கர் முக்கிய பிரமுகராகவும் சங்கத்தின் உதவிச் செயலாளர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். 

1928ல் கல்கத்தாவில் நடந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற்கு ஜோக்லேக்கர் தலைமை வகித்தார். அது ஒரு முக்கியமான கூட்டம்; அக்கூட்டம் இந்திய தேசிய காங்கிரசுக்கு மேலும் தெளிவான வழிகாட்டுதலை வழங்க உதவியது.

WPP கட்சியும் தனது கூட்டத்தை நடத்தியது. அக்கட்சி மிக பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டப் பேரணியை, சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் (வேறு சிலர் கூற்றுப்படி கலந்து கொண்ட மக்கள் எண்ணிக்கை 80ஆயிரமாக இருக்கும்) கலந்து கொண்ட பேரணியைக் காங்கிரஸ் மாநாடு நடந்த பந்தலை நோக்கி நடத்தியது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் மோதிலால் நேரு காங்கிரஸ் பந்தலை இரண்டு மணி நேரம் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்து காங்கிரஸ் பிரதிநிதிகள் உட்பட திரண்டிருந்த மக்களிடையே உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டப் பேரணி முழு விடுதலை தீர்மானத்தைக் காங்கிரஸ் நிறைவேற்ற வற்புறுத்தியது. அந்தக் கூட்டம் ஜோக்லேக்கரால் தலைமை தாங்கப்பட்டது. 

மீரட் சதி வழக்கு ( 1929 –33) தொடர்பாக பிரபலமான கம்யூனிஸ்ட் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் 31 பேருடன் ஜோக்லேக்கரும் கைது செய்யப்பட்டார்.  

பார்வர்டு பிளாக் கட்சியில் இணைதல்

விடுதலையான பிறகும் தொழிற்சங்க அரங்கில் தொடர்ந்து பணியாற்றினார்; ஆனால் விரைவிலேயே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் செல்வாக்கால் ஈர்க்கப்பட்டு சிபிஐ கட்சியிலிருந்து விலகிச் செல்லத் தொடங்கினார். 1946 பிப்ரவரியில் ஜபல்பூரில் நடத்தப்பட்ட பார்வர்டு பிளாக் தொழிலாளர்கள் அசம்பளி அமைப்பில் பாட்லிவாலா முதலானவர்களுடன் ஜோக்லேக்கர் சேர்ந்தார். 1948 முதல் 1952 வரை அனைத்திந்திய பார்வர்டு பிளாக் (AIFB) கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.  ஆனால் பார்வர்டு பிளாக் கட்சி பிளவுபட்டு, பார்வர்டு பிளாக் (மார்க்ஸிஸ்ட்) பிரிவிலிருந்து 1952ல் ‘பார்வர்டு கம்யூனிஸ்ட் பார்ட்டி’ (FCP) தனியே அமைக்கப்பட்டது. அந்த FCP பிரிவும் விரைவில் பிளவைச் சந்தித்து FCP (ஜோக்லேக்கர்) மற்றும் FCP (ஆனந்தி முகர்ஜி) என இரு பிரிவுகளாயிற்று; காரணம், சரத் சந்திர போஸ் தலைமையிலான  இந்திய யுனைட்டெட் சோஷலிஸ்ட் ஆர்கனைசேஷன் (USOI) அமைப்புடன் அணி சேர்வதை ஜோக்லேக்கர் எதிர்த்தார். மேற்கு வங்கம் மகாராஷ்டிரா மற்றும் உபி கிளைகளை ஜோக்லேக்கர் தனது வசம் எடுத்துக் கொண்டார். அவருடைய அணி 1952ல் சிபிஐ கட்சியுடன் இணைந்தது; ஆனந்தி முகர்ஜியின் அணி போல்ஷ்விக் கட்சியுடன் இணைந்தது.

சிபிஐ கட்சியில் மீண்டும் இணைதல்

1952ல் ஜோக்லேக்கர் சிபிஐ கட்சியில் மீண்டும் சேர்ந்தார். அவர் தொடர்ந்து தொழிற்சங்கம் கட்சி மற்றும் பிற முன்னணி அரங்குகளில் பணியாற்றினார்.

கொள்கை பிடிப்புமிக்க ஜோக்லேக்கர் தமது 74வது வயதில் 1970 நவம்பர் 21ல் இயற்கை எய்தினார்.  

--தமிழில்: நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment