Monday 7 June 2021

கீதா முகர்ஜி : பெண்கள் சக்தியின் சாரம், உருவகம்

 சில சித்திரத் சிதறல்கள் -35

கீதா முகர்ஜி : பெண்கள் சக்தியின் சாரம், உருவகம்

-                                                                     ---அனில் ரஜீம்வாலே

                                                                            --நியூஏஜ் (மார்ச் 7 --13)


கீதா முகர்ஜி, அனல் கக்கும் வார்த்தைகளோடு போர்க்குணமிக்கப் பாராளுமன்ற உறுப்பினர் என நன்கு அறியப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர், ஏழு முறை நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேற்கு வங்கத்திலும் இந்தியாவிலும் அகில இந்திய மாணவர் பெருமன்றம் (ஏஐஎஸ்எஃப்) அமைப்பையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியையும் கட்டி வளர்த்தவர்.  

தற்போது பங்களாதேசத்தில் உள்ள ஜெஸ்ஸோர் என்னுமிடத்தில் 1924 ஜனவரி 8ம் நாள் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் கீதா ராய் சொளத்திரியாகப் பிறந்தார். தந்தை ராய் பகதூர். ஜெஸ்ஸோரிலேயே பள்ளிக் கல்வியை முடித்து கல்கத்தா பல்கலைக்கழகத்தின் அஷுதோஷ் முகர்ஜி கல்லூரியில் வங்க இலக்கியத்தில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றார். மாணவர் தலைவரும் சிபிஐ உறுப்பினருமான அவருடைய மூத்த அண்ணன் சங்கர் ராய்சௌத்திரியின் ஆழமான செல்வாக்கிற்கு ஆட்பட்டார். 

மாணவர் இயக்கத்தில்

கீதா படிக்கும்போது 1939ல் ‘பெங்கால் பிரதேச மாணவர் சம்மேளன’மான BPSFல் இணைந்து மாணவர் இயக்கத்தில் முக்கியமான தலைவரானார். அப்போது BPSF சம்மேளனம் அந்தமான் கைதிகளை விடுவித்து அவர்களைத் தாயகம் திருப்ப அனுப்ப வேண்டும் எனக் கோரி போராட்டத்தை நடத்தியது. 1945 ஜூலை 29ல் நடைபெற்ற ஒரு பேரணியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான அஞ்சல் மற்றும் பிற பகுதித் தொழிலாளர்களுக்கு முன்பு, ஒரே மாணவப் பெண் பிரதிநிதியாக உரையாற்றினார்.  

சத்ரி சங் (Chhatri Sangh) அமைப்பாளர்

ஏஐஎஸ்எஃப் ஆதரவின் கீழ் இயங்கிய கேர்ள் ஸ்டூடெண்ட் அஸோசியேஷனை (GSA) வங்காளம் மற்றும் இந்திய மட்டத்தில் அமைக்கக் காரணமாக இருந்தவர்களில் கீதாவும் ஒருவர். அந்த அமைப்பு வங்கத்தில் சத்ரி சங் (மாணவர் சங்கம்) என்று அழைக்கப்பட்டது.  

1938ல் அந்தமான் கைதிகள் விடுதலைக்காக மாணவர் பெருமன்றம் நடத்திய நாடு தழுவிய இயக்கத்தில் எண்ணற்ற பெண் மாணவர்கள் பங்கேற்றனர். அதன் தொடர்ச்சியாகப் பின் மாணவர் பெருமன்ற அமைப்புக்குள் பெண் மாணவர்கள் குழு (சத்ரி சங்) அமைக்கப்பட்டது. 

டெல்லியில் 1940 ஜனவரி 1 மற்றும் 2 தேதிகளில் நடைபெற்ற ஏஐஎஸ்எஃப்—ன் 5வது மாநாட்டில் நடந்த முக்கியமான நிகழ்ச்சி, அந்த அரங்கிலேயே பெண் மாணவர்களின் முதலாவது அகில இந்திய மாநாடும் நடைபெற்றதாகும். நாடு முழுவதிலுமிருந்து மாநாட்டில் எண்ணற்ற பெண் மாணவர்கள் பங்கேற்றனர். அதன் பின் நடந்த மாணவர் பெருமன்ற மாநாடுகளில் அதுவும் ஒரு நிரந்தர அம்சமாக இடம்பெறலாயிற்று. 

வங்கத்தில் BPSFன் கீழ் நடந்த பெண் மாணவர்கள் குழுவின் முக்கிய தலைவர் கீதா ராய்சௌத்திரி, அதன் முதல் பொதுச் செயலாளர் ஆனார். பலபல காரணங்களால் அந்தக் குழு சுதந்திரமான தனி அமைப்பாக வடிவெடுக்கவில்லை (என்று 1988 நவம்பர் 20ல் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறினார்.) 

  கேர்ள் ஸ்டூடெண்ட் அஸோசியேஷன் விரைவாக டெல்லி, பம்பாய், பாட்னா, பஞ்சாப் முதலான இடங்களுக்கும் பரவியது. 1940ல் கீதா இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.  

1940 லக்னோ நகர் ‘பரதாரி’யில் நடைபெற்ற அகில இந்தியப் பெண் மாணவர்களின் முதலாவது காங்கிரஸை (மாநாடு) கவிக்குயில் சரோஜினி நாயுடு துவக்கி வைத்தார். அம்மாநாட்டின் தலைவர் ரேணு சவுத்திரி. மாநாட்டின் பெருங் கூட்டத்தினரிடையே அவர் பேசும்போது தனது ஐரோப்பிய அனுபவங்களைத் தொடர்புபடுத்தியும், ஸ்பானிஷ் உள்நாட்டு யுத்தம் பற்றியும் பேசினார். அந்த மாநாட்டின் முக்கியமான அமைப்பாளர்கள் கீதா, அலோகா மஜூம்தார், நர்கிஸ் பாட்லிவாலா, பெரின், சாந்தா காந்தி, கனக் தாஸ்குப்தா, கல்யாணி முகர்ஜி ஆகியோர். அவர்களில் கீதாதான் மிகவும் இளையவர். கல்யாணி முகர்ஜி (பின்னர் கல்யாணி குமாரமங்களமானவர்) புகழ்பெற்ற மாணவர் தலைவரான விஸ்வநாத் முகர்ஜியோடு உடன்பிறந்தவரின் மகளாவார். விஸ்வநாத் முகர்ஜியும் கீதாவும் 1942ல் திருமணம் புரிந்தனர். அன்றைய பெண் மாணவர்கள் பிற்காலத்தில் பெண்கள் அமைப்பைக் கட்டி உருவாக்குவதில் காரண கர்த்தாக்களாக இருந்தனர். 

கைதான தேசியத் தலைவர்களை விடுவிக்கக் கோரி GSA அமைப்பில் இருந்த பெண் மாணவர்கள் டெல்லியில் ஏஐஎஸ்எஃப் பதாகையின்கீழ் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தியபோது அவர்கள் கண்ணீர் புகை குண்டுகளின் தாக்குதலைச் சந்திக்க நேர்ந்தது. சத்ரி சங் மாணவர்கள் கல்கத்தாவில் பெத்யூன் கல்லூரிக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

சத்ரி சங் கல்கத்தாவிற்கு வெளியே பாரிசால், சிட்டகாங், பங்குரா போன்ற இடங்களிலும் கிளை பரப்பியது. அவர்களை ஒன்று திரட்டுவதில் மற்றவர்களோடு சேர்த்து கீதா முக்கியமான பங்காற்றினார். இரண்டாவது உலகப் போரில் ஜப்பான் படைகள் குண்டு பொழிந்த காலத்தில் சத்ரி சங் மிகத் தீவிரமாகத் தொண்டாற்றியது. மகிளா ஆத்ம ரக்க்ஷா சமிதி (MARS) அமைப்பதிலும் உதவியது. 

1941 –42ல் மாணவர் பெருமன்றத்தின் மாநாடு நடைபெற்றபோது, GSAவின் உறுப்பினர் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்து வளர்ச்சி பெற்றிருந்தது; அங்கேயே GSAவின் இரண்டாவது மாநாடும் நடத்தப்பட்டது. 1946 ஜூலையில் நடைபெற்ற தபால் தந்தித் தொழிலாளர் வேலைநிறுத்தத்தில் கீதா முகர்ஜி முக்கியமான பங்காற்றினார். 1947 முதல் 1951 வரை அவர், ‘பெங்கால் பிரதேச மாணவர் சம்மேளன’மான BPSF ன் செயலாளராக இருந்தார். 

சுதந்திரத்திற்குப் பின்

கட்சியைப் பெரிதும் பாதித்த பிடிஆர் பாதையை அடுத்து 1948ல் சிபிஐ தடை செய்யப்பட்டது. எந்த விசாரணையும் இல்லாமல் கீதா முகர்ஜியைக் கைது செய்து பிரிசிடென்சி சிறையில் ஆறு மாதம் அடைத்தனர். பிறகு அவர் தொழிற்சங்கம், விவசாயிகள் மற்றும் கட்சி முன்அரங்குகளில் பணியாற்றினார். 1964 சிபிஐ பிளவுக்குப் பின் அவர் கட்சியிலே நீடித்து அதனைக் கட்டி உருவாக்கக் கடுமையாக உழைத்தார். 

1967 மற்றும் 1972ல் மிதுனாப்பூர் மாவட்டத்தில் தம்லுக் தொகுதியிலிருந்து மேற்கு வங்கச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  1978ல் பன்ஸ்குரா தொகுதியிலிருந்து அவர் பாராளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுவிற்கு 1978லும், தேசியச் செயற்குழுவிற்கு 1981லும் கீதா முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998ல் சிபிஐ மத்திய செயலகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் மத்திய செயலகத்தின் முதலாவது பெண் உறுப்பினர் என்ற பெருமைக்கு உரியவரானார். 

பெண்கள் இயக்கத்தில்

இந்திய மாதர் தேசிய சம்மேளனம் NFIWன் பெரும் தலைவர்களில் கீதா முகர்ஜியும் ஒருவர். அதன் அமைப்பு மாநாட்டிலேயே 1954ல் அவர் செயற்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்பே அவர் மகிளா ஆத்ம ரக்க்ஷா சமிதியின் தீவிரமாகச் செயலாற்றிய தலைவர்களில் ஒருவர். அதற்குப் பின் மாதர் சம்மேளனத்தின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் அப்பொறுப்பில் 2000ல் தனது வாழ்நாள்வரை நீடித்தார்.

கீதா முகர்ஜி போராடிய பெண்கள் பிரச்சனைகள்

வரதட்சிணை ஒழிப்புச் சட்டம் 1961ன் அமலாக்கம் பற்றி ஆராய 1980ல் பாராளுமன்ற கூட்டுக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கீதா முகர்ஜி அம்மசோதா குறித்து விரிவாக விவாதித்தார். 1980 டிசம்பர் 19 பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் வரதட்சிணை கொடுப்பதோ அல்லது வரதட்சிணை வாங்குவதோ சட்டப்படி நடவடிக்கைக்குரிய ஒரு குற்றமாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். 1981ம் வருடத்தை ‘வரதட்சிணை எதிர்ப்பு ஆண்டு’ எனப் பிரகடனப்படுத்த அவர் வற்புறுத்தினார். அதற்காகத் தேசிய அளவில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ள நிதி ஒதுக்கி, மத்தியிலிருந்து கிராம மட்டங்கள் வரை பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றார். 

1982 ஜூலை 15ல் பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் அப்பட்டமான வரதட்சிணை தொடர்பான குற்றங்களின் எதார்த்த நிலைமைகளை அம்பலப்படுத்தினார். வரதட்சிணை கொடுமையால் ஏற்பட்ட பரவலான சாவுகளை அவர் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.    

குறைந்த பட்ச ஊதியச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள 1978ல் பார்வதி கிருஷ்ணன் பாராளுமன்றத்தில் ஒரு மசோதா தாக்கல் செய்தார். அதே போன்ற மசோதாவை 1980ல் கீதா முகர்ஜி அறிமுகம் செய்தார். 1980ல் மேலும் அவர் வேலையில்லா நிவாரண உதவி வழங்கவும், வயது வரம்பு தவிர்த்தல், பணிகளுக்கு மனு செய்வதற்கான கட்டணத்திலிருந்து விலக்களித்தல் போன்ற சலுகைகளுக்காகவும் மற்றொரு மசோதா கொண்டு வந்தார். வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் தேவையை அவர் வலியுறுத்தினார். மத்திய அரசுப் பணிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கான மசோதாவையும் 1983ல் அவர் தாக்கல் செய்தார். அப்போது பெண்கள் பெருமளவில் வேலையைவிட்டு நிறுத்தப்படுவதைச் சுட்டிக் காட்டினார். 

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் பொருட்டு பாராளுமன்றம் மற்றும் மாநிலச் சட்ட மன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு பெறுவதற்காக அவர் நடத்திய தொடர்ச்சியான தளர்வற்றப் போராட்டங்களுக்காகவே கீதா முகர்ஜியை வரலாறு என்றும் நினைவுறுத்தும். அதற்கு ஆதரவாக நாடு முழுவதும் தொடர்ச்சியாக அவர் பிரச்சார இணக்கங்களை நடத்தினார். பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவைப் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக அம்மசோதாவை உரிய முறையில் தயாரித்து இறுதி செய்வதற்கான பாராளுமன்றத் தேர்வுக் குழு தலைவராக அவர் இருந்தார். 2010 மார்ச் 9ம் நாள் – சர்வதேச மகளிர் தினத்திற்கு அடுத்த நாள்—அம்மசோதாவிற்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்து நிறைவேற்றியது, ஆனால் அந்த மசோதா சட்டமாவதை நாடுமன்ற மக்களவை தடுத்து நிறுத்தியது. 

“பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக ஒன்றுபடுக” (1997) என்ற தலைப்பில் கீதா முகர்ஜி ஒரு துண்டுப் பிரசுரத்தை இந்திய தேசிய மாதர் சம்மேளத்திற்காக அவர் வெளியிட்டார். 

‘தடுப்புக் காவலில் பாலியல் வன்புணர்வு’ என்பதற்கான வரைவிலக்கணத்தைச் சட்டத்தில் மேலும் விரிவாக்க வேண்டும் என அவர் 1983ல் கோரிக்கை விடுத்தார். 1960கள் 1970களில் சம்யுக்த மகிளா சமிதி (ஒன்றுபட்ட பெண்கள் கூட்டமைப்பு) உணவு தானிய வர்த்தகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் கொள்ளை லாபம் அடிப்போர் மற்றும் பதுக்கல் பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி தொடர்ச்சியான இயக்கத்தை நடத்தியது. 1967 ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் இப்பிரச்சனைகள் மீது சமிதி ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. 

ரேணு சக்கரவர்த்தி, கீதா முகர்ஜி மற்றும் பிற தலைவர்கள் வழிகாட்ட பல்லாயிரம் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

1981 மார்ச் 9ல் பாராளுமன்றம் நோக்கிப் பெண்கள் நடத்திய அகில இந்தியப் பேரணியில் கீதாமுகர்ஜி உரையாற்றினார். பஞ்சாபில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கும் வேன்களில் பிற பெண் தலைவர்களுடன் 1986 மே மாதத்தில் அவர் பயணம் மேற்கொண்டார். அவர்கள் 1989ல் மீண்டும் பஞ்சாப் மாநிலத்திற்கு விஜயம் செய்தனர். 

1970 மார்ச் 7, 8 தேதிகளில் கல்கத்தாவில் பச்சிம் பங்கா மகிளா சமிதியின்  (மேற்கு வங்க பெண்கள் கூட்டமைப்பு) 13வது மாநாட்டில் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக ஒரு தீர்மானத்தை அவர் தாக்கல் செய்தார். பெண்கள் அமைப்பில் சீர்குலைவு இயக்கத்தை வலிமை இழக்கச் செய்துவிடும் என அவர் எச்சரித்தார். “எனவே இதற்கு முன்புபோல நாம் ஒற்றுமையாகப் பெண்கள் உரிமைகளுக்காகவும், நமது எதிரிகளை-- ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் ஜாட்தார் (பணக்கார மேல்தட்டு விவசாயிகள்) போன்றோரை-- எதிர்த்து ஒன்றிணைந்து போராடவும் வேண்டும்” என அவர் மேலும் வலியுறுத்தினார். ஆனால் பிரிந்து செல்வதாக முடிவெடுத்துவிட்ட குழு அவருடைய அறிவுரையைக் கேட்கத் தயாராக இல்லை; NFIW மாதர் சம்மேளனம் முறையாகப் பிரிந்தது, பச்சிம் பங்கா கணதந்திரிக் மகிளா சமிதி (PBGMS, மேற்கு வங்க குடியரசு பெண்கள் கூட்டமைப்பு) எனத் தனியாக அமைக்கப்பட்டது. மற்றொரு குழுவும் 1970 சேலத்தில் நடைபெற்ற NFIW மாதர் சம்மேளன 7வது மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. 

மேற்கு வங்கப் பெண்கள் சமிதியின் பத்திரிக்கையான ‘கரே பாய்ரே’ (வீடும் உலகமும்) இதழின் துணை ஆசிரியராகக் கீதா முகர்ஜி பொறுப்பு வகித்தார். (முதன் முதல் இரவீந்திரநாத் தாகூர் ‘வீடும் உலகமும்’ என்ற பெயரில் ஒரு நாவலை எழுதினார்; பின் அந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் சத்யஜித் ரே திரைப்படமாகவும் தயாரித்தார். பெண்களுக்கு அதிகாரமளித்தல் அதன் மையமான கருப் பொருள் –இணையத்திலிருந்து திரட்டியது). 1986ல் கிராமப்புறத் தொழிலாளர் குறித்து ஆராய அமைக்கப்பட்ட தேசிய ஆணையத்திலும், 1988ல் பெண்களுக்கான தேசிய ஆணையத்திலும் அவர் உறுப்பினராக இடம் பெற்றார். பத்திரிக்கை கவுன்சிலிலும் அவர் உறுப்பினராக இருந்தார்.

எழுத்தாளராக

அவர் எழுதிய பல புத்தகங்களில் குழந்தைகளுக்காக எழுதியவையும் அடங்கும். அவர் எழுதிய புத்தகங்களில் சில: பாரதர் உபகதா (இந்திய நாட்டுப்புறக் கதைகள்), சோட்டோதர் இரவீந்தரநாத் (குழந்தைகளுக்காக தாகூர்) மற்றும் ஹி அஜித் கதா கோ (வங்கச் சிறுகதைகள் தொகுப்பு). மேலும், கிழக்கு ஜெர்மானிய எழுத்தாளரான ப்ரூனோ அபிட்ஸ் (Bruno Apitz) எழுதிய ‘ஓநாய்களுக்கு மத்தியில் நிர்வாணமாய்’ (‘Naked among Wolves’) என்ற செவ்வியல் நாவலை வங்கமொழியில் மொழிபெயர்த்தார். அந்த நாவல் ஹிட்லரின் புச்சன்வால்டு வதை முகாமில் (Buchenwald Concentration Camp of Hitler) நிகழ்ந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. ப்ரூனோவே அந்த வதைமுகாமிலிருந்து தப்பி உயிர் பிழைத்தவரே. காஜி நஸ்ருல் இஸ்லாம் மற்றும் இரவீந்திரநாத் எழுதியது உட்பட கவிதைகளைப் படித்து ரசிப்பதிலும், பாடுவதிலும் கீதா முகர்ஜிக்கு விருப்பம் அதிகம்.

மேனாள் பாரதக் குடியரசுத் தலைவர் மேதகு கே ஆர் நாராயணன் அவர்கள் கீதா முகர்ஜியைப் ‘பரிவும் அக்கறையும் நிரம்பிய அரசியல் செயற்பாட்டாளர்’ எனப் புகழ்ந்துரைப்பார். 

கீதா முகர்ஜி தமது 76வது வயதில் 2000ம் ஆண்டு மார்ச் 4ம் நாள் பலமான மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தனது இரங்கல் செய்தியில், “திருமதி கீதா முகர்ஜி உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பின் உருவகமாகத் திகழ்ந்தவர். பெண்கள் சக்தியின் ஒளிவீசும் உதாரணம் அவர். அவருடைய வாழ்க்கை வரலாறு இனிவரும் தலைமுறையினருக்கு, குறிப்பாக இளம் பெண்களுக்கு, உற்சாகம் ஊட்டும் ஆதர்சமாக நீடிக்கும் என்பது திண்ணம்” எனப் புகழ்மாலை சூட்டினார்.

வாழ்க தோழர் கீதா முகர்ஜியின் புகழ்! அவர் வழியில் சாதிக்க வேண்டிய பணிகள் இன்னும் ஏராளம்!

-                                                                         --தமிழில் : நீலகண்டன்,

                                                                                  என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment