Thursday 17 June 2021

வரலாற்றுத் தலைவர்கள் வரிசைகல்பனா தத் : சிட்டஹாங் ஆயுதக் கிளர்ச்சியின் கதாநாயகி

 நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து : 

சில சித்திரத் சிதறல்கள் -36

கல்பனா தத் : சிட்டஹாங் ஆயுதக் கிளர்ச்சியின் கதாநாயகி

 --அனில் ரஜீம்வாலே

--நியூஏஜ் (மார்ச் 14 – மார்ச் 20)

கல்பனா தத் (பின்னர் கல்பனா ஜோஷி) தற்போது பங்களா தேசத்தில் உள்ள பெங்கால் பிராவின்ஸ், சிட்டஹாங் மாவட்டம், போல்காளி உபஜில்லாவின் முன்னூறு வீடுகளே உள்ள ஸ்ரீபூர் என்னும் சிறிய கிராமத்தில் 1913 ஜூலை 27ல் பிறந்தார். ஆனால் அவருடையது பழமைவாதம், பாரம்பரியமான பழைய பழக்க வழக்கங்கள் உள்ள நிலச்சுவான்தார் வீடு. தந்தை விநோத் பெகாரி தத்தா, தாய் ஷோபனா தேவி. படித்த அவர்கள் குடும்பத்திலிருந்து பின்னர் சிலர் சுதந்திர இயக்கத்தோடு தொடர்பு கொண்டார்கள். 

கல்வியும் அரசியல் தீவிரச் செயல்பாடும்

வீட்டில் தொடக்கக் கல்வி பெற்ற கல்பனா, அவருடைய குடும்பத்தினர் ஒருவர் நிறுவிய டாக்டர் ஷத்கிர் பாலிகா உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். கல்வியில் சிறந்த கல்பனா எப்போதும் வகுப்பில் முதலிடம் பெற்றார். சரத்சந்திர சட்டோபாத்யாய் எழுதிய ‘பாதெர் தாபி’ (‘பாதைக்கான உரிமை’) என்ற நாவல் (பாதெர் தாபி என்ற இரகசிய சமூகக் குழுவின் நோக்கம் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுதலை செய்வது குறித்த நாவல்) மற்றும் கன்கைலால் கதைகள் போன்ற புரட்சியாளர்கள் கதைகளைப் படித்தார். அவருடைய இரண்டு மாமா ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றது அவரிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அறிவியல் மீது ஆர்வம் கொண்ட கல்பனாவின் ஆதர்ச விஞ்ஞானி ஆச்சார்ய பிரஃபுல்ல சந்திரா ராய் ஆவர். அறிவியல் தவிர கணக்கு மற்றும் சமஸ்கிருத பாடத்திலும் அவர் சிறந்து விளங்கினார்.

இதன் மத்தியில் அவரது குடும்பம் அரசியல் ரீதியாகப் பிரிந்தது. சிட்டஹாங்கில் அவரது குடும்பம் நடத்தி வந்த துணி கடைக்குக் காந்திஜி விஜயம் செய்து பங்கா லெட்சுமி மில்ஸ் தயாரிப்பான சுதேசிப் பொருள்களைப் பார்வைக்குத் திறந்து வைத்தார். அக்குடும்பத்தின் பல பெண்களும் காந்தியைத் ‘தரிசனம்’ செய்வதற்காகச் சென்றது மட்டுமல்ல, தங்கள் அணிகலன் நகைகளையும் அவர் முன்னெடுத்த நல்ல செயல்களுக்கு அவரிடம் நன்கொடையாக அளித்தனர். 

சிட்டஹாங்கிலிருந்து 1929ல் மெட்ரிகுலேஷன் தேர்வில் தேறினார். அதே வருடம் மாணவர்கள் மாநாடு நடந்தபோது, தனது மாமாவின் உதவியோடு அம்மாநாட்டில் கல்பனா உரையாற்றினார். சிட்டஹாங் இளைஞர்கள் புரட்சிகர குழுவை அமைக்கத் தொடங்கியபோது அதன் உறுப்பினர் பூர்னேந்து தஸ்தீதார் அவருடைய குடும்பத்திற்கு வரலானார். கல்பனாவும் அவரிடம் பயிற்சி பெற்றார். 

விஞ்ஞானப் பட்டப்படிப்புக்காக கல்கத்தா பெத்யூன் கல்லூரியில் சேர்ந்து இயற்பியல், கணிதம் மற்றும் தாவரவியல் பாடங்களைப் படித்தார். உடற்பயிற்சி வகுப்புகள் மற்றும் படகோட்டல் முதலிய விளையாட்டுகளிலும் சேர்ந்தார். இந்தியும் பிரெஞ்சும் பயின்றார். சூர்யா சென், ஆனந்த் சிங், கணேஷ் கோஷ் முதலான புகழ்பெற்ற புரட்சியாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. லத்தி, வாள் முதலானவற்றில் ஆயுதப் பயிற்சியும் அவர் பெற்றார்.  ஜவகர்லால் நேரு கைது செய்யப்பட்டதைக் கண்டித்துக் கல்பனாவும் மற்றவர்களும் 1930 ஏப்ரலில் பெத்யூன் கல்லூரியில் வேலை நிறுத்தம் செய்தனர். கல்லூரியின் பெண் முதல்வர் அவர்களிடம் தவறாக நடக்க அவரை இறுதியில் மன்னிப்பு கேட்க வைத்தனர்.

பெண் மாணவர்கள் அசோஸியேஷனான சத்திரி சங் அமைப்பிலும் கல்பனா சேர்ந்தார். அந்த அமைப்பு, பினா தாஸ், பிரிதீலதா வட்டேடார் முதலான புரட்சியாளர்கள் இடம் பெற்ற, ஒரு பாதி புரட்சிகர (செமி ரெவலூஷனரி) அமைப்பாகும். 

சிட்டஹாங் ஆயுதக் கிடங்கு சூறையாடல்

புரட்சிகர இளைஞர்கள் சிட்டஹாங்கில் இருந்த பிரிட்டிஷ் ஆயுதக் கிடங்கை 1931 ஏப்ரல் 18ல் தாக்கினர். அந்தச் செய்தி பிரிட்டிஷ் அரசை உலுக்கியது, செய்தி விரைவாகப் பரவியது. சிட்டஹாங் செல்ல விரும்பிய கல்பனா மாற்றலுக்கு விண்ணப்பித்து ஏப்ரல் இறுதியில் அங்கே சென்றாலும், மாற்றல் கிடைக்காததால் காலம் விரையமாகி அவரது படிப்பைப் பாதித்தது. தனி மாணவராகத் தேர்வு எழுத அவருக்குச் சிட்டஹாங் மையம் கிடைத்தது. சிட்டஹாங் கல்லூரியில் இளங்கலை அறிவியல் (பிஎஸ்சி) பட்டப்படிப்பில் சேர அனுமதிக்கப்பட்டார். 

புரட்சிகரச் செயல்பாடுகளில் ஈடுபட அதிக ஆர்வம் கொண்டு துப்பாக்கிச் சுடுதல் மற்றும் பிற ஆயுதங்களில் பயிற்சி எடுத்தார். அவருடைய பள்ளி இறுதி நாட்களில் சுரபா தத்தா என்ற கம்யூனிஸ்ட் பெண்ணுடன் அவருக்கு ஏற்கனவே தொடர்பு இருந்தது. தன்னையும் செயல் நடவடிக்கைகளில் சேர்த்துக் கொள்ளும்படி ஆனந்த் சிங்கை ஏறத்தாழ கல்பனா நிர்பந்தித்து இறுதியில் குழுவில் சேர்ந்தார். அக்குழுவின் திட்டம் ரயில்வே பாதையைத் தகர்ப்பது. இந்திய குடியரசு ராணுவத்தைச் (இந்தியன் ரிபப்ளிகன் ஆர்மி) சேர்ந்த சூர்யா சென், கல்கத்தாவிலிருந்து ஆயுதங்களுக்குத் தேவையான ஆசிட், இரசாயனப் பொருட்கள் மற்றும் பிறவற்றை ஏற்பாடு செய்யும்படி கல்பனாவைக் கேட்டுக் கொண்டார். தேவையான அனைத்தையும் கல்பனாவே கொண்டு வந்தார். கன்-காட்டன் (துப்பாக்கிக்கான பருத்தி) துணி தயாரிப்பதில் நிபுணராகச் சிறப்புற்ற கல்பனா, நடவடிக்கை குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 

  டைனமைட் வெடியால் சிறை தகர்க்கும் அவர்களது முதல் முயற்சி வெற்றிபெறவில்லை. அச்சிறையில் தினேஷ் குப்தா மற்றும் இராமகிருஷ்ண பிஸ்வாஸ் தூக்கிலிடப்பட இருந்தனர். ஆண்வேடத்தில் இருந்த அவரைச் சிட்டஹாங்கின் பகர்தாலி ஐரோப்பிய கிளப் அருகே 1932 செப்டம்பர் 17ல் கைது செய்தனர். ஒரு வாரத்திற்குப் பிறகு அந்தக் கிளப் மீது பிரிதீலதா தலைமையில் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. முன்பு ஜலாலாபாத்தில் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட நிகழ்வில் பிரிட்டிஷ் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் பதின்வயது இளைஞர்கள் பலர் கொல்லப்பட்டதற்கு எதிர் நடவடிக்கையாக இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது பிரிதீலதா கடுமையாக காயம் அடைய அவர் சையனைடு விஷம் அருந்தி தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார். பிரிதீலதா கல்பனாவின் வகுப்புத் தோழி, உடன்வந்த புரட்சியாளர். 

இந்த வழக்கில் கல்பனாவையும் மாட்டிவிட போலீஸ் முயன்றாலும், போதிய சாட்சியம் இன்மையால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அவரை வீட்டிலேயே அடைத்து வைத்து வெளியே செல்ல முயற்சிக்க வேண்டாமென எச்சரிக்கப்பட்டார். வீட்டைச் சுற்றி போட்டிருந்த பலமான போலீஸ் கட்டுக்காவலை மீறி அவர் தப்பிச் சென்றார். அரசுப் பணியிலிருந்து அவரது தந்தை இடைநீக்கம் செய்யப்பட்டு அவருடைய வீட்டைச் சோதனையிட்டு எண்ணிறந்த பொருள்களைக் கைப்பற்றிச் சென்றனர். கல்பனாவும் சூர்யாதாவும் (சூர்யா தத்தா) போலீஸ் விரித்த வலையிலிருந்து எப்படியோ ஓர் இரவின் இருட்டில் தப்பிச் சென்றனர். ஒரு திடீர் தாக்குதலில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். மனிந்திரா தத்தாவுடன் ஒரு குளத்தில் முழு இரண்டு மணிநேரம் அவர் பதுங்கி இருந்தார். பல மைல்கள் தொலைவு அவர் ஓடிக் கொண்டிருந்தார். சிட்டஹாங் அருகே ஒரு கடற்கரை நகரத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

அவர்கள் எதிர்ப்பை மிஞ்சிய போலீஸ் பலத்தால் அவரும் அவரது வேறுசில தோழர்களும் கைது செய்யப்பட்டனர். ஒரு போலீஸ் அதிகாரி அவர் கன்னத்தில் அறைய, அருகே இருந்த ஒரு இராணுவக் கமாண்டர் அந்த அதிகாரியிடம், “அவருக்கு உரிய மரியாதையைக் காட்டி நடந்து கொள்க” எனக் கண்டித்துக் கூறினார். போலீஸ்காரர்கள் மத்தியிலும், ஏன் பிரிட்டிஷ் அதிகாரிகள் மத்தியிலும் கல்பனா மிகவும் புகழ் பெற்று இருந்தார். 

சூர்யா சென், தாரகேஷ்வர் தஸ்தீதர் இருவருக்கும் தூக்கு தண்டனையும் கல்பனாவுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதற்குக் காரணம் சிறப்பு டிரிபியூனல் நீதிபதியைப் பொருத்து கல்பனாவிற்கு வயது 18 மட்டுமே. இரவீந்திரநாத் தாகூர் மட்டும் தலையிடாமல் இருந்தால், தண்டனையாக அவர்  அந்தமானுக்குக் கடத்தப்பட வேண்டியிருந்திருக்கும். முதலில்  அவர் ஹிஜ்லி மற்றும் ராஜ்ஷாகி சிறைகளுக்கும் பின்பு 1934 செப்டம்பர் முதல் 1935 அக்டோபர் வரை மெடினிபூர் சிறைக்கும் அனுப்பப்பட்டார். பிறகு தினாஜ்பூர் சிறைக்கும் பின்பு மெடினிபூர் சிறைக்குத் திரும்பவும் மாற்றப்பட்டார். 

கம்யூனிஸ்ட் கட்சியில்

கல்பனாவையும் மற்றவர்களையும் விடுதலை செய்வதற்கான அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்தது. தாகூர் மற்றும் காந்திஜியின் தலையீடு மட்டுமல்லாமல் கைதிகள் விடுதலைக்கான இயக்கம் கொடுத்த அழுத்தின் காரணமாகவும் கல்பனா 1939 மே 1ல் விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்குப் பிறகு கல்பனாவிற்கு இரவீந்திரநாத் தாகூரிடமிருந்து எதிர்காலக் கடமைகளைச் சுட்டிக்காட்டி அவரது வெற்றிக்காக ஆசி வழங்கி ஒரு கடிதம் வந்தது. அவரது சக தோழர்கள் பலரும் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். ஆனால் இன்னும் அவருக்கு மட்டும் ஒரு தயக்கம் இருந்தது. அது தவிர, வேதாந்தம் மற்றும் கீதை தத்துவத்தின் செல்வாக்கிற்கு ஆட்பட்டிருந்தார்.

எந்தக் கல்லூரியும் அவரை அனுமதிக்கத் தயாராக இல்லை. இறுதியில் 1940ல் பிஏ தேர்வில் தேர்வாகி எம்ஏ (கணிதம்) பாடப் பிரிவில் சேர்ந்தார். 1940 –41ல் சிட்டஹாங்கில் வீட்டுச் சிறையில் இருந்தார். கல்கத்தா திரும்பி வந்ததும் ஒரு படிப்பு வட்டம் அமைப்பை நிறுவி ‘பதேயா’ (நற்கருணை, இறைப்பிரசாதம்) என்ற கையெழுத்துப் பிரதி இதழை வெளியிட்டார். சில நூறு உறுப்பினர்களோடு ‘நாரி சமிதி’ (பெண்கள் கூட்டமைப்பு) நிறுவினார். அவர் தொடங்கிய இரவு பள்ளி மற்றும் பகல் நேரப் பள்ளிகளில் பின்தங்கிய சமூக மாணவர்கள் படிக்க வந்தனர். ஜப்பானியர்கள் சிட்டஹாங் துறைமுகத்தில் குண்டுவீசித் தாக்கியபோது அவர் கடுமையாகப் பணியாற்றினார்; பாதுகாப்பு பயிற்சி அளிக்க மகிளா ஆத்ம ரக்க்ஷா சமிதியை அமைக்க உதவினார். மேலும் ட்ராம்வே தொழிலாளர்கள் அமைப்பை ஏற்படுத்தி சங்க அலுவலகத்தில் முழுநேரப் பணியாளராகப் பணியாற்றினார். மீண்டும் டைபாயிடு நோய் தாக்க அவர் கடுமையாக நோயுற்றார். 

மக்கள் கூட்டத்துள் பணியாற்ற அவர் விரும்பினார். சிட்டஹாங்கில் சந்தால் பழங்குடி இன தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் துணி வெளுப்போர் காலனிகளில் பணியாற்றும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. 1943 வங்கப் பஞ்சத்தின்போது அவர் தொண்டாற்றினார். கம்யூனிசத்திற்கு வெகு நெருக்கமாக வந்தார். 1942ல் அவர் நோயுற்றிருந்த காலத்தில்தான்  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

கட்சி கல்விக்காக 1942 டிசம்பரில் அவர் பம்பாய் கட்சி பள்ளிக்குச் சென்றார். அங்கே கட்சி பொதுச் செயலாளர் பிசி ஜோஷியைச் சந்தித்தார். பிரதேச மட்டத்தில் கட்சி அமைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார். அவருடைய நான்கு சகோதரிகளும்கூட கட்சி உறுப்பினர்களாக இணைந்தனர். 1943 ஆகஸ்டில் பிசி ஜோஷியும் கல்பனா தத்தும் திருமணம் செய்து கொண்டனர். 

சிட்டஹாங்கிலும் வேறு இடங்களிலும் அவர் பல போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தியுள்ளார். மிகப் பெரிய வேலைநிறுத்தம் மற்றும் ஆர்பாட்டங்களில், 1946 ஜனவரியில் சிட்டஹாங் பாடியா என்ற இடத்தில் நடந்தது ஒன்றுதான் மிகப் பெரியது. அவரும் பிற தோழர்களும் அதைத் தலைமையேற்று நடத்தினர். பிரிட்டிஷ் வீரர்களின் அட்டூழியங்களுக்கு எதிராக நடந்த அப்போராட்டம், யுத்தத்திற்குப் பிறகு நாடு முழுவதும் எழுந்த எழுச்சியின் ஒரு பகுதியாகும். 

1946ல் வங்கச் சட்டமன்றத்திற்குச் சிபிஐ வேட்பாளராகப் போட்டியிட்ட அவர் வெற்றிபெறத் தவறினார்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               ‘பிடிஆர் காலம்’

பிசி ஜோஷி மற்றும் கல்பனா ஜோஷி இருவரும்தான் ஒருக்கால் பிடிஆர் காலத்தில்  மிக மோசமாகத் துன்பப்பட்டவர்கள். 1947 டிசம்பரில் அவசரகோலத்தில் பிசி ஜோஷி கட்சி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டு, பிடி ரணதிவே அந்தப் பொறுப்பில் அமர்த்தப்பட்டார். 1948 பிப்ரவரி - மார்ச்சில் இரண்டாவது கட்சி காங்கிரஸ் கல்கத்தாவில் நடைபெற்றபோது ஆதியோடு அந்தம் குழுப்போக்கு மற்றும் இடது சாகசப் பாதை கட்சியைப் பீடித்தது. முதலாளித்துவத்திற்குச் சரணடைதல் (அதாவது நேருவின் சுதந்திர அரசோடு சமரசம்) உள்பட அனைத்து வகையானவைகளுக்கும் பிசி ஜோஷி குற்றம் சாட்டப்பட்டார். அவரையும் கல்பனாவையும் கீழ்மைப்படுத்தும் பண்பு சிதைத்தல் அவர்களுக்கு எதிரான இயக்கமாகக் கட்டவிழ்த்துவிடப்பட்டது, அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும் என்றனர். அவரை இடைநீக்கம் செய்து சாதாரண உறுப்பினராகக் கீழிறக்கப்பட்டார். அவரோடு கல்பனாவும் அரசியல் மற்றும் தனிவாழ்வில் துன்பப்பட்டார். அவையெல்லாம் அடிப்படை இல்லாத குற்றச்சாட்டுகள்; அவருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட முறையோ அதிகபட்ச ஏதேச்சிகாரமும் தன்னிச்சயான ஜனநாயகமற்ற முறைகளுமாகும். 

1948ல் கல்பனா ஜோஷி தலைமறைவு வாழ்வில் சென்றார். கட்சியின் மீதான தடை 1951ல் நீக்கப்பட்டதும் நிதிச்சுமை மற்றும் அரசியல் நிர்பந்தங்களால் அவர் ஒரு பணியைத் தேடிக் கொள்ள நேர்ந்தது; பேராசிரியர் பிசி மகாலனோபிஸ் கீழே இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் பணியாற்றினார்.முக்கியமாக அவர் தேசிய சாம்பிள் சர்வே (NSS)யில் பணியாற்றினார். மேலும் கல்பனா ஜோஷி ரஷ்ய மொழி படிப்புகளுக்கான நிறுவனத்தை நிறுவிய இயக்குநருமாவார். 

தனது சுயசரிதையைச் ‘‘சிட்டஹாங் ஆயுதக் கிடங்கைச் சூறையாடியவர்கள் : ஞாபகங்கள்” என்ற சுயசரிதை நூலாக எழுதியுள்ளார். அதனைப் பிசி ஜோஷியின் முன்னுரையோடு ஆங்கிலத்தில் பிசி ஜோஷியும் நிகில் சக்ரவர்த்தியும் எழுதியுள்ளனர். கல்பனா எழுதுகிறார், “எங்கள் பள்ளி நாட்களில் எங்களது எதிர்காலம் குறித்து எந்தத் தெளிவான யோசனையும் எங்களுக்கு இல்லை. அப்போது ஜான்சி ராணி எங்கள் கற்பனையைப் பெருந்தீயாய்ப் பற்ற வைத்தார்”

புதுடெல்லியில் 1995 பிப்ரவரி 8ம் நாள் அந்தப் புரட்சி புயல் இம்மண்ணுலகை விட்டு நீங்கியது.

இளைஞர்களின் ஆதர்சமாய் பகத்சிங் போல, பெண்களில் முன்னே நிற்கும் கல்பனா என்றென்றும் இனிவரும் இளைஞர்களின் நெஞ்சங்களிலும் ஒளிவிட்டுப் பிரகாசிப்பார்!

--தமிழில் : நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர்


No comments:

Post a Comment