Monday 14 June 2021

இஎம்எஸ் : முதலாவது கம்யூனிஸ்ட் முதலமைச்சர்

 நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து : 

சில சித்திரச் சிதறல்கள் -38

இஎம்எஸ் : முதலாவது கம்யூனிஸ்ட் முதலமைச்சர் 

--அனில் ரஜீம்வாலே

--நியூஏஜ் (மார்ச் 28 –ஏப்ரல் 3)

1951—52ல் நடந்த நாட்டின் முதலாவது பொதுத் தேர்தல்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய எதிர்கட்சியாக உருவானது; 1957ன் இரண்டாவது பொதுத் தேர்தல்களிலும் அதே நிலையைத் தக்க வைத்துக் கொண்டதுடன் கேரளா மாநிலத்தின் ஆளும் கட்சியாகவும் மாறியது. தேர்தல்கள் மூலம் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வருவது அதுவே உலகில் இரண்டாவது முறை, இந்தியாவில் முதன் முறை. அரசியல் வட்டாரங்கள் மற்றும் மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது மட்டுமல்ல, ‘
முதலாளித்துவ
’ தேர்தல்கள் மூலம் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வரமுடியாது எனக் கருதிய கம்யூனிஸ்ட்களையே தங்கள் வறட்டுப் புரிதல்களை மாற்றியமைக்க நிர்பந்தித்தது. கேரள மாநிலத்தில் கட்சி இஎம்எஸ் அவர்களை முதலமைச்சராக நியமித்தது, வரலாற்றில் அழியாத அடையாளமாயிற்று. 

விடுதலை இயக்கத்தில் ‘இஎம்எஸ்’

ஏளங்குளம் மனக்கால் சங்கரன் (EMS) நம்பூதிரிபாட், பரமேஸ்வரன் நம்பூதிரிபாட்டுக்கும் விஷ்ணுததா அந்தர்ஜனம் அம்மையாருக்கும் நான்காவது மகனாகப் பிரபுக்கள் குடும்பத்தில்  மலப்புரம் மாவட்டம் பெரிதாள்மன்னா தாலுக்காவின் குந்தி நதிகரைகளில் அமைந்த எர்ணாகுளத்தில்  1909 ஜூன் 13ம் நாள் பிறந்தார். சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் வளர்ச்சி பெற நம்பூதிரி குடும்பங்களில் காலங்காலமாக நீடித்த மிகக் கடுமையான பழமைவாதம் மெல்ல மெல்ல எதிர்ப்புக்களைச் சந்தித்தது. முற்போக்கு இளைஞர்களின் ‘யோகசேஷம சபா’ (LIC முத்திரையில்கூட யோகசேஷமம் இடம் பெற்றிருக்கும்; அது கீதை ஸ்லோகத்தின் உபநிடத வாக்கியம். யோகசேஷமம் என்பது பாதுகாப்பு மற்றும் நலவாழ்வு எனப் பொருள்தரும்) மற்றும் பிற அமைப்புகள் உருவாகத் தொடங்கின. சபா நடத்திய பத்திரிக்கையில் இஎம்எஸ் ‘பிரெஞ்ச் புரட்சியும் நம்பூதிரி சமூகமும்’ என்றொரு கட்டுரைகூட எழுதியுள்ளார். 

ஆரம்பக் கல்வியை ஒரு தனியார் பயிற்றுநரிடம் கற்ற பிறகு இஎம்எஸ் 1925ல் மூன்றாவது ஃபாரத்தில் பள்ளியில் சேர்ந்தார். 1929ல் எஸ்எஸ்சி தேர்வு பெற்றபோது சமஸ்கிரதத்திலும் ஆங்கிலத்திலும் சிறப்புற்றிருந்தார்.

அவர் 5வது ஃபாரம் படித்தபோது 1927ல் மெட்ராஸ் காங்கிரஸ் அமர்வு நடைபெற்ற காங்கிரஸ் நகரைச் சுற்றிப்பார்த்தபோதுதான் தேசியம் அவருக்கு முதலில் அறிமுகமானது. மாநாட்டு நிகழ்ச்சிகளை, சொற்பொழிவுகளை உன்னிப்பாக கவனித்தார். சுதந்திரப் போராட்ட வீரர் எம்பி நாராயண் மேனன், கொச்சியின் தீப்பொறி சொற்பொழிவாளர் வி ஜெ மதாய் போன்றவர்களின் உரைகளால் ஈர்க்கப்பட்டு ஆழமான செல்வாக்குக்கு ஆளானார்; அவர்கள் உரைகளை மீண்டும் கேட்க ஐந்து முதல் எட்டு கிலோமீட்டர் பயணித்தார். இஎம்எஸ் தங்கியிருந்த லாட்ஜுக்கு வட்டாரக் காங்கிரஸ் கமிட்டியின் இரண்டு உறுப்பினர் குழு விஜயம் செய்தது. அவரிடம் புறக்கணிப்பு குறித்த மாநாட்டுத் தீர்மானத்தை ஆங்கிலத்திலிருந்து மலையாளத்திற்கு மொழியாக்கம் செய்துதர ஒப்படைத்தது.

1928 –29 கல்வியாண்டில் பாலகாடு  பள்ளியில் சேர்ந்து பின்னர் ஜூன் 1929ல் திருச்சூர் செயின்ட் தாமஸ் கல்லூரியில் சேர்ந்தார். ராஜகோபாலாச்சாரியாரும் ஜம்னாலால் பஜாஜும் இந்திப் பிரச்சாரம் செய்ய பாலகாடு வந்தபோது கல்லூரி முதல்வர் அதனை எதிர்த்தார். இஎம்எஸ் மற்றும் நண்பர்கள் இந்தி இயக்கத்தில் சேர்ந்து அவர்கள் இருவரையும் சந்தித்து கிருஷ்ணசாமி அய்யரின் சபரி ஆஸ்ரமம் சென்றனர். (ஈவெ) ராமசாமி நாயக்கரோடு சேர்ந்து (பகுத்தறிவு இதழான) ‘யுக்திவாடி’ (ரேஷனலிஸ்ட், பகுத்தறிவாளர்) இதழில் அவர் பணியாற்றினார். 

சிஎஸ்பி மற்றும் கேபிசிசி கட்சிகளில்

காந்திஜியின் சட்டமறுப்பு இயக்கத்தில் சேர்வதற்காக இஎம்எஸ் கல்லூரியைவிட்டு வெளியேறினார். தேசிய மற்றும் சமூகச் சீர்திருத்த இயக்கங்களோடு சேர்ந்து பணியாற்றும்போது ஜிடிஹெச் கோல் (GDH Cole) போன்றோர் நூல்களின்வழி அவர் கம்யூனிசத்திற்கு நெருங்கிவரத் தொடங்கினார். கத்தோலிக்க இயக்கத்தோடும் அவருடைய ஆசிரியரும் (பின்னாட்களில் 1957 கம்யூனிச அமைச்சரவையில் அமைச்சரானவருமான) ஜோசப் முண்டச்சேரியோடும் நெருக்கம் அதிகமானது. சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கேற்றதால் இஎம்எஸ் கைதானார்; அவரைப் பாராட்டியதற்காக அவருடைய ஆசிரியர் எம்பி பால் கல்லூரியைவிட்டு வெளியேற நேர்ந்தது. 

ஏழை மக்களுக்கான போராட்ட இயக்கங்களை ‘நம்பூதிரி யுவஜன் சங்கம்’ (நம்பூதிரி இளைஞர்கள் சங்கம்) ஏற்பாடு செய்து நடத்தியதோடு, தண்டி யாத்திரையைப் போன்று மாநிலம் தழுவிய பேரணிகளையும் நடத்தியது.  அந்த நேரத்தில் இஎம்எஸ், ஜவகர்லால் நேரு பற்றிய ஒரு சிறிய வாழ்க்கை சரித்திர நூல் எழுதினார். மிகுந்த உற்சாகத்தோடு காதி விற்பனை, கதர்ஆடைகள் அணிவதில் ஈடுபட்டு, அன்னியத் துணிக்கடைகளுக்கு முன் மறியல் நடத்துவது மற்றும் வெளிநாட்டுத் துணிகள் பகிஷ்கரிப்பு இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கேற்றார்.

காந்தி – இர்வின் உடன்பாட்டிற்குப் பின் பையனூர் மற்றும் படகரா அரசியல் மாநாடுகளில் இஎம்எஸ் பங்கேற்றபோது அதில் ஜெஎம் சென்குப்தா, கேஎஃப் நரிமன் முதலானவர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலரும் பின்னாட்களில் அவருடைய சகாக்கள் ஆனார்கள்.

1931 நவம்பர் 1ல் தொடங்கிய குருவாயூர் கோயில் நுழைவு சத்தியாகிரகத்தில் இஎம்எஸ் தீவிரமாக ஈடுபட்டார். அவரது கல்லூரியில் பகிஷ்காரம் முழுமையாக நடைபெற்றது தீவிர இயக்கச் செயல்பாடுகளுக்குக் . கல்லூரிப் படிப்பு இடையூறாக இருப்பதாகக் கருதிய இஎம்எஸ், 1932 ஜனவரி 4ம் தேதி கல்லூரியைவிட்டு விலகினார். ‘உன்னி நம்பூதிரி’ வாரஇதழில் தனது வாசகர்களுக்கு எழுத்துபூர்வமான ஒரு தகவலை எழுதி வைத்துவிட்டு, காங்கிரஸ் சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்கேற்பதற்காகத் திருச்சூரிலிருந்து காலிகட் (கோழிகோடு) சென்றார். அவரைக் கைது செய்து காலிகட், கண்ணணூர்  மற்றும் வேலூர் உள்ளிட்ட பல்வேறு சிறைகளில் அடைத்தனர். அங்கே புகழ்பெற்ற கிருஷ்ணப்பிள்ளை மற்றும் பின்னர் ஏகே கோபாலனைச் சந்தித்தார். மேலும் கேஎன் திவாரி, கிரண் தாஸ், ஆர்எம் சென்குப்தா, ஆர்சி ஆச்சார்யா, என்ஜி ரங்கா மற்றும் பிறரைச் சந்தித்தார். 1933 –34ல் கண்ணணூர் சிறையில் காங்கிரஸ்காரர்கள் இடதுசாரிக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. 

விரைவில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி(சிஎஸ்பி)யில் சேர்ந்தவர் பின்னர் அதன் அனைத்திந்தியச் செயற்குழுவில் இடம் பெற்றார். கோழிக்கோடு இடதுசாரி காங்கிரஸ்காரர்கள் 1934ல் கட்சியின் கேரளா குழுவை ஏற்படுத்தினர். அந்தக் கூட்டத்திற்குக் கேளப்பன் தலைமை வகித்தார். 1934 மே பாட்னாவில் நடந்த சிஎஸ்பி-யின் முதலாவது அனைத்திந்திய மாநாட்டில் இஎம்எஸ் பங்கேற்றார். 

ஜெயபிரகாஷ் நாராயணன் (ஜெபி) எழுதிய ‘ஏன் சோஷலிசம்’ நூல் இஎம்எஸ்-சிடம்  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜெபியின் இந்த ஆக்கம் குறித்துக் கம்யூனிஸ்ட்கள் முன்வைத்த விமர்சனம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்பால் இஎம்எஸ் நெருங்கிவர உதவியது. 1935ல் மெட்ராஸில் கிருஷ்ணப்பிள்ளை, எஸ்வி காட்டே மற்றும் சுந்தரையாவைச் சந்தித்த பிறகு 1936 ஜனவரியில் அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகத் தன்னை இணைத்துக் கொண்டார். குறிப்பிட்ட அந்தக் காலகட்டத்தில் இஎம்எஸ் தீவிரமான காங்கிரஸ்காரர், காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் தலைவர் மற்றும் ஒரு கம்யூனிஸ்டாகவும் இருந்தார்.

கேரளாவில் சிபிஐ 1937 ஜூலையில் அமைக்கப்பட்டபோது கிருஷ்ணப்பிள்ளை செயலாளராகவும் கே தாமோதரன், என்சி சேகர், இஎம்எஸ் மற்றும் சிலர் தலைமைக்குழு உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1937 – 38ல் கேரளபிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (KPCC) அமைப்புச் செயலாளராகவும், 1938 - 40களில் அதன் செயலாளராக இரண்டு முறையும் பொறுப்பு வகித்துள்ளார். 

பம்பாய், மெட்ராசில் காங்கிரஸ் அமைச்சரவைகள் அமைத்தது கட்சி வெளிப்படையாகச் செயல்பட ஓரளவு வசதியானது என இஎம்எஸ் (பின்னர்) எழுதியுள்ளார். ‘பிரபாவம்’ (புகழ், கீர்த்தி எனப் பொருள்படும்) என்ற வார இதழைச் சிஎஸ்பியின் மலபார் கிளை வெளியிட்டபோது இஎம்எஸ் அதன் ஆசிரியராக இருந்தார். அந்த நேரத்தில் கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி, கம்யூனிஸ்ட்கள் மற்றும் சிஎஸ்பி உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இம்முயற்சியில் ‘தேசிய முன்னணி’ மற்றும் ‘காங்கிரஸ் சோஷலிஸ்ட்’ இதழ்கள் பெரிதும் உதவிகரமாக இருந்தன. 

மலபார் விவசாயிகள் இயக்கம் 

மலபார் அக்காலத்தில் மெட்ராஸ் ராஜதானியின் ஒருபகுதியாக இருந்தது. மெட்ராஸ் சட்டமன்றத்திற்கு இஎம்எஸ் வேட்புமனு 1937 மற்றும் 1938ல் இருமுறை நிராகரிக்கப்பட்டாலும், 1939 பிப்ரவரியில் இஎம்எஸ் போட்டியின்றி சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத்தின் குத்தகை விசாரணைக் குழு உறுப்பினரானார். குழுவின் மாற்றுக் கருத்துடைய உறுப்பினர்கள் மலபார் குத்தகைச் சட்டத்தில் தீவிரமான திருத்தங்களை ஆதரித்து மோசமான நிலப்பிரபுத்துவ ‘ஜென்மி’ முறையை ரத்து செய்தனர். (ஜென்மி என்பது முன்பு கேரளாவில் நிலவிய நிலப்பிரபுத்துவ மேட்டுக்குடி நம்பூதிரி மற்றும் நாயர் சமூகத்தினரைக் குறித்தது. அவர்களும் கோயில் நிலங்களை அரசர்களும் 20ஆயிரம் ஏக்கர் வரை வைத்திருக்க அனுமதிக்கப்பட்டனர்). அவருக்கு இந்த அனுபவம் மலபார் மற்றும் பிறபகுதிகளில் நிலப்பிரபுத்துவ கொச்சின் மற்றும் திருவிதாங்கூர் மாகாணங்களில் நிலவிய விவசாயம் சார்ந்த உறவுகளை ஆய்வுசெய்வதற்கு உதவியாக இருந்தது. தொடக்கத்தில் இந்த இயக்கங்களை இஎம்எஸ் ‘சோஷலிச பர்தோலி’ என்றழைத்தார். (குஜராத் மாநில சூரத் பகுதியின் ‘பர்தோலி’யில் ஆங்கில அரசின் அநியாய நிலவரியை எதிர்த்து சர்தார் பட்டேல் தலைமையில் நடந்த நிலவரி செலுத்த மறுத்த விவசாயிகளின் சத்தியாகிரகம், ஜூன் 1928).

இடதுசாரி காங்கிரஸ்காரர்கள் மலபாரிலிருந்து திருவிதாங்கூர் வரை நடத்திய மாபெரும் விவசாயிகள் பேரணியில் (கிசான் ஜதா) இஎம்எஸ் தீவிரமாகச் செயல்பட்டார். 

1940ல் சிஎஸ்பியின் செயற்பாட்டாளர்கள் நடத்திய மாநாட்டில் சிஎஸ்பி கிளைஅமைப்பை முழுமையாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைப்பது என்று முடிவெடுத்தனர். இக்கால கட்டத்தில்தான் இஎம்எஸ் ‘கேரள விவசாய இயக்கத்தின் சுருக்கமான வரலாறு’ என்பதை எழுதினார்.  1942 மத்தியில் கட்சி மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. 1943 மார்ச்சில்    கையூர் கிளர்ச்சி நிகழ்வில் (நிலப்பிரபுக்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டம், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும் மதகில் அப்பு, கோயித்தாரில் சிறுகண்டன், பொடுரா குஞ்ஜாம்பு நாயர் மற்றும் பள்ளிகல் அபுபக்கர் ஆகிய) நான்கு விவசாயப் போராளிகள் 1943 மார்ச் 29ல் தூக்கிலிடப்பட்டனர்.

1943 பம்பாயில் நடைபெற்ற முதலாவது கட்சி காங்கிரஸில் இஎம்எஸ் மத்திய குழுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அம்மை நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்த இஎம்எஸ் 1947 ஜனவரியில் கைதுசெய்யப்பட்டு 7 9மாதங்கள் வேலூர் சிறையில்  அடைக்கப்பட்டார்.

 ‘பிடிஆர் கால’மும் இஎம்எஸ்சும்

1946 – 51 காலகட்டத்தில் கட்சியின் எதிர்காலம் ஊசலாடிக்கொண்டிருந்தபோது தனது நிலையைச் சுருக்கமாக விவரித்த இஎம்எஸ் இவ்வாறு கூறினார்: ‘‘1946க்கு முன் நான் ஜோஷி பாதையைத்தான் பின்பற்றினேன். 1946ல் ‘புன்னப்புரா வயலூர்’ மற்றும் தெலுங்கானா (ஆயுதப் புரட்சி) நிகழ்வுகளுக்கு வித்திட்ட ‘கூடுதல் தீவிரவாதத்தை நோக்கிய மாற்ற’த்தை முழு மனதோடு ஆதரித்தேன். கல்கத்தாவில் (1948) ஏனைய தோழர்களுடன் மாற்றத்தை ஆதரித்தேன்.”  பின்னர் மீண்டும் அவர் ‘ஆந்திரா பாதை’யை ஆதரிக்க மாறினார். இதனால்தான் ‘ரணதிவே அல்லது ராஜேஸ்வர ராவ் பொலிட் பீரோ’விலோ தான் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என உணர்ந்ததாக அவர் கூறினார். ‘பிடிஆர் பாதை’யை ஆதரிப்பதா இல்லையா என்பதைக் குறித்துக் கறாரான நிலைபாட்டை  அவர் எடுக்கவில்லை. 

நான்கு உறுப்பினர் சிபிஐ குழு 1950ல் மாஸ்கோ சென்றபோது கட்சி மையத்தின் பொறுப்பு இஎம்எஸ்-யிடம் அளிக்கப்பட்டது. விரைவில் அஜாய் கோஷ் கட்சியின் பொதுச் செயலாளரானார். 1951ல் இஎம்எஸ் கட்சி பொலிட்பீரோவில் இணைத்துக் கொள்ளப்பட்டார். 1953 -54 மதுரை மாநாடு மற்றும் 1956 பாலகாடு மாநாட்டில் அவர் பொலிட்பீரோவிலும் 1958 அமிர்தசரஸ் மற்றும் 1961 விஜயவாடா மாநாட்டில் மத்திய நிர்வாகக் குழுவிலும் இடம் பெற்றார். 

கட்சிப் பத்திரிக்கையான ‘நியூ ஏஜ்’ இதழின் ஆசிரியராகச் சிலகாலம் பொறுப்பேற்றார். 

முதலாவது கம்யூனிஸ்ட் முதலமைச்சர், 1957 

கேரளா மாநிலம் அமைக்கப்பட்டதும் 1957ல் நடைபெற்ற முதலாவது சட்டமன்ற தேர்தலில் கேரள மக்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை அளித்தது நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வெற்றி, அதுவரை கம்யூனிஸ்ட்கள் ‘முதலாளித்துவ’ தேர்தல் முறை மூலம் ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியாது என்று கருதிய அவர்களின் முந்தைய கொள்கை புரிதலின் வறட்டுத்தன்மையை மாற்றிக் கொள்ள நிர்பந்தித்தது. (ஆனால் மார்க்சும் ஏங்கெல்சும் ஜெர்மன் நாட்டின் தொழிலாளர் கட்சி (SDP) தேர்தல்களில் பெற்ற வெற்றிகளைக் குறித்தும், பாராளுமன்றத் தேர்தல்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையையும் வலியுறுத்தி உள்ளனர். ஆயுதப் புரட்சி ஒன்றே மாற்றத்திற்கான வழி என அவர்கள் வரையறுக்கவில்லை என்பதை அவர்களது எழுத்துகள் உணர்த்துகின்றன. – அனில் ரஜீம்வாலே எழுதிய ஏங்கல்ஸ் 200வது பிறந்தநாள் சிறப்புக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு மொழிபெயர்ப்பாளர் இணைத்தது). நன்கு பரிசீலித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இஎம்எஸ் அவர்களை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்தது.

நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் கல்வி மசோதாகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1959ல் இஎம்எஸ் அமைச்சரவை ஒன்றிய அரசால் கலைக்கப்பட்டது.

1967ல் மறுமுறை மீண்டும் இஎம்எஸ் முதலமைச்சராகி ஏழு கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சிக்குத் தலைமை வகித்தார். 1969 வரை முதலமைச்சராக நீடித்தார். 1969ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சி அச்சுதமேனனன், கட்சி பிளவுக்குப் பின் சிபிஐயைச் சேர்ந்த முதலாமவராக,  முதலமைச்சரானார். (இஎம்எஸ்-சின் இருமுறை முதலமைச்சர் வரலாறு, அதன் சாதனைகள் தனிக் கட்டுரையாக எழுதப்பட வேண்டியது)

அமிர்தசரஸ் கட்சி காங்கிரஸ், 1958

சிபிஐ தனது அமைப்புவிதிகளில், திட்டங்கள் சார்ந்த கோட்பாடுகள் மற்றும் அமைப்பு நிலை கட்டமைப்புகளில் முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வந்தது. ‘பாட்டாளிகளின் சர்வாதிகாரம்’ என்ற கோட்பாட்டைக் கைவிட்டு, சோஷலிச இந்தியாவில் எதிர் கட்சிகள் என்ற கோட்பாட்டை முன்னிறுத்தியது; அமைப்புநிலையில் இரண்டடுக்கு நிர்வாக முறையை மூன்று அடுக்காக மாற்றியது. கட்சிக் காங்கிரஸ் முடிந்த உடன் நியூஏஜ் இதழில் இஎம்எஸ் எழுதிய முக்கியமான கட்டுரை ஒன்றில் மாநாட்டின் முடிவுகளைப் புகழ்ந்து வரவேற்றதுடன் நில்லாமல், இம்முடிவுகள் மூலம் சிபிஐ மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுச் செயலாளராக

1962 ஜனவரியில் அஜாய் கோஷ் மரணமடைந்ததும் இஎம்எஸ் நம்பூதிரிபாட் சிபிஐ கட்சி பொதுச்செயலாளராகவும் எஸ் ஏ டாங்கே கட்சியின் தலைவராகவும் ஆனார்கள்

சிபிஎம் கட்சியில் இணைதல்

1964ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு இஎம்எஸ் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) CPI-M கட்சியில் சேர்ந்தார்; 1964 ஏப்ரலில் நடைபெற்ற தேசியக் குழு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த 32 தோழர்களில் இஎம்எஸ்-சும் ஒருவர். தோழர் பி சுந்தரையா ராஜினாமா செய்த பிறகு 1977ல் இஎம்எஸ் சிபிஐ-எம் கட்சியின் பொதுச் செயலாளரானார். 1992 வரை அந்தப் பொறுப்பில் அவர் நீடித்தார். 

தோழர் இஎம்எஸ் நம்பூதிரிபாட் தமது 89வது வயதில் 1998 மார்ச் 19ம் நாள் மறைந்தார். 

எழுத்தாக்கங்கள்

விவசாயிகள் பிரச்சனைகள் உட்பட பல தலைப்புகளில் இஎம்எஸ் விரிவாக எழுதியுள்ளார். ‘ஒரு இந்தியக் கம்யூனிஸ்ட்டின் நினைவலைகள்’ என்ற தலைப்பில் தனது வாழ்க்கை சுயசரிதையை எழுதியுள்ளார். இந்திய விடுதலைப் போராட்டம், மகாத்மா காந்தியும் அவரது ‘இசமு’ம் போன்ற நூல்களையும் பொருளாதாரப் பிரச்சனைகள் மற்றும் பல பொருள்சார்ந்த படைப்புகள் மற்றும் கட்டுரைகளை ஆங்கிலம் மற்றும் மலையாள மொழிகளில் எழுதியுள்ளார். அவருடைய எழுத்துகளின் தொகுப்பு நூல் ஒன்று மலையாளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலாச்சார பண்பாட்டுத் துறையிலும் அவர் தீவிரமாகச் செயலாற்றினார். 

நேருவுக்குப் பிறகு யார் என்ற கேள்விக்கு விடையாக ஒரு சொல்லாடல் நமது நாட்டில் இருந்தது. அது, ‘நேருக்கே பாத், நம்பூதிரிபாட் ’ (நேருவுக்குப் பிறகு நம்பூதிரிபாட்) என்ற புகழ்பெற்ற முழக்கமாக விளங்கியதென்றால், அத்தகைய சிறப்புக்குரியவர் அவர். வாழ்க இஎம்எஸ்!

--தமிழில் : நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர்


No comments:

Post a Comment