Thursday 3 June 2021

BV காக்கிலாயா : மக்கள் பெரிதும் அன்பு காட்டிய தலைவர்

 நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து : 

சில சித்திரத் சிதறல்கள் -34   

  BV காக்கிலாயா

                        மக்கள் பெரிதும் அன்பு காட்டிய தலைவர்

--அனில் ரஜீம்வாலே

--நியூஏஜ் (பிப்.28 –மார்ச் 6)

கர்நாடகா மற்றும் அதற்கு வெளியே மிகவும் புகழ் வாய்ந்த தலைவர்களில் ஒருவரான பிவின்ஜி விஷ்ணு காக்கிலாயா, வடக்குக் கேரளா, காசர்கோடு தாலுக்கா சேர்கலா அருகே பயஸ்வினி (சந்திரகிரி) ஆற்றங்கரையில் உள்ள பிவின்ஜி என்ற இடத்தில் 1919 ஏப்ரல் 11ல் பிறந்தார். அந்நதி மலையாளம் மற்றும் துளு பேசும் மக்கள் இடையே பாரம்பரியமாக எல்லை வகுப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அப்பகுதிகள் கன்னடா பேசும் ஆட்சியாளர்கள் கீழ் இருந்தன. பணக்கார நிலவுடைமையாளரான விஷ்ணு காக்கிலாயா மற்றும் கங்கம்மாவின் கடைசி மகனாகப் பிறந்த பிவி காக்கிலாயாவுக்கும் தந்தையின் பெயரே வழங்கப்பட்டது.  

‘காக்கிலாயா’ என்ற பெயர் காசர்கோடு தாலுக்கா மூளியார் கிராமத்தில் உள்ள காக்கோல் (Kakkol) என்ற இடத்திலிருந்து வந்ததாக எண்ணப்படுகிறது. காக்கிலாயாகள் ‘கும்பளே சீம்’ (‘Kumbale Seeme’) ராஜாக்களுக்கு ஆலோசகர்களாக இருந்தவர்கள்.

இளமை வாழ்வும் கல்வியும் 

விஷ்ணு காக்கிலாயா மூன்று வயதாக இருந்தபோது தந்தையை இழந்து, தாயின் அரவணைப்பிலும் மூத்த அண்ணன் சுப்பராயா காக்கிலாயா ஆதரவிலும் வளர்ந்தார். பள்ளிக் கல்வியைக்(SSLC) காசர்கோட்டிலும், இன்டர் (அரசியல்) கல்வியை 1937 மங்களூர் அலியோசியஸ் கல்லூரியிலும்; பின் அங்கேயே 1942 வரை தங்கி, இரசாயனப் பாடத்தில் இளங்கலை பட்டத்தையும் பெற்றார். கர்நாடகாவில் தங்கியிருந்தது முதலாக நாட்டின் எல்லா பகுதிகளிலும் சுதந்திரப் போராட்ட உணர்வு கொழுந்துவிட்டு எரிய, காக்கிலாயாவும் அதன்பால் ஈர்க்கப்பட்டார். மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டபோது கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு தொடர்பு ஏற்பட்டது. 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு மாணவனாகக் கலந்து கொண்டு அவர் கைதானார். ஏஐஎஸ்எஃப் மாணவர் அமைப்பில் தீவிரமாகச் செயல்பட்ட காக்கிலாயா அதன் மாவட்டச் செயலாளராக இருந்தார். 1946ல் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 

இதன் மத்தியில் யூசுப் மெஹ்ராலே, அசோக் மேதா, சோலி பாட்லிவாலா போன்றோரால் மங்களூரில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி (CSP) அமைக்கப்பட்டது. அந்தக் கட்சி கமலாதேவி சட்டோபாத்தியாயா செல்வாக்கின் கீழ் இருந்தது. காக்கிலாயாவும் அதில் சேர்ந்தார். மங்களூர் பகுதியைச் சேர்ந்த எஸ்வி காட்டே அங்கேயே தங்கி பணியாற்றியதால் காக்கிலாயா உள்ளிட்ட மாணவர்கள் மீது பெரும் செல்வாக்கு செலுத்தினார். மாணவச் செயற்பாட்டாளர்களும் பிறரும் தொழிலாளர் இயக்கங்களில் இணைய, சக்திமிக்கத் தொழிற்சங்க இயக்கம் எழுந்தது. டைல்ஸ், பீடி, காப்பி, முந்திரி, கைத்தறி முதலான தொழில்களில் 1935- 45 காலகட்டத்தில் பலம் பொருந்திய அமைப்புகள் உருவாயின.

காக்கிலாயா முறையாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் 1939ல் இணைந்து, தொழிற்சங்கம் மற்றும் விவசாய இயக்க அரங்குகளில் பணியாற்றினார்.

மக்கள் மத்தியில் பணியாற்றல்

வங்கப் பஞ்ச கால நாட்களில் காக்கிலாயா ஏராளமான நிவாரணப் பணிகளை ஆற்றியது மட்டுமின்றி, பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தைக்காரர்களுக்கு எதிராக மக்களை அணிதிரட்டினார்.

1946ல் ரேஷன் அளவை 2 அவுன்ஸ் வெட்டிக் குறைத்த நேரத்தில் மெட்ராஸ் கவர்னர் ஆர்சிபால்டு நே மங்களூரு விஜயம் செய்தார். அப்போது அதனை எதிர்த்து சிபிஐ தலைமையில் நடைபெற்ற இயக்கத்தில் காக்கிலாயா கலந்து கொண்டார். கவர்னர் நே விஜயத்தை எதிர்த்து மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் காவல் நிலையத்தை நோக்கிப் பேரணியாகச் சென்ற பிறகு கைதானவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். 

இந்தியா விடுதலை பெற்ற நாளில் காக்கிலாயா கண்ணூர் சிறையிலிருந்து விடுதலையானார். 

‘பிடிஆர் பாதை’ நிகழ்வுகளுக்குப் பின் சிபிஐ தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் 1948ல் அவர் தலைமறைவு வாழ்க்கைக்குச் சென்றார். தேவங்கரேயில் 1950ல் அவர் கைதானார். பிரிக்கப்படாத தட்சிண கன்னடா மாவட்டத்தில் கட்சியை ஒற்றுமையாய் வைத்திருக்க அவர் தன்னாலான பெரும் முயற்சிகளை எடுத்தார். 

சட்ட மன்றத்தில்

1952–54ல் மெட்ராஸ் சட்டமன்றத்திலிருந்து கர்னாடகா (அப்போதைய மைசூர்) பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி மாநிலங்களவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1972 –78ல் பந்த்வால் சட்டமன்ற உறுப்பினராகப் பெரும் வாக்குகள் வித்தியாசத்திலும் 1978 –83ல் வித்தல் தொகுதி எம்எல்ஏவாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கர்னாடகா மாநில மறுசீரமைப்பு மற்றும் மறுஇணைப்பு பற்றிப் பாராளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பினார். 

கர்னாடகா நிலச் சீர்திருத்தச் சட்டம், 1974 உருவாக காக்கிலாயா பெரும் காரண கர்த்தாவாக இருந்தார். இந்தத் துறையில் முதலமைச்சர் தேவராஜ் அர்ஜூடன் நெருக்கமாகப் பணியாற்றினார். முதலமைச்சர் அமைத்த நிலச் சீர்திருத்த ஆலோசனைக் குழுவுக்கு அவர் தலைமை வகித்தார். பந்த்வால் நில டிரிபியூனல் (தீர்ப்பாயம்) உறுப்பினராக இருந்தார். கர்னாடகா சட்டமன்றப் பொதுக் கணக்குக் குழு தலைவராகவும் பொறுப்பு வகித்தார். 

நிலச் சீர்திருத்தங்களுக்கான போராட்டம்

நிலச் சீர்திருத்த இயக்கத்தில் பிவி காக்கிலாயா ஆற்றிய மிகப் பெரிய பங்களிப்பின் காரணமாகப் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டு அதனால் தட்சிண கர்னாடகா மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்துள்ளனர். அந்தக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் பிற வசதிகள் கிடைத்துள்ளன. இம்மாற்றத்தின் மூலம் பல படித்த நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் உருவாயின.

பெங்களூரு, கோலார், ஸ்ரீரங்கப்பட்டணம், ஹம்பி மற்றும் குல்பர்க்காவில் அகில இந்திய கிசான் சபா மாநாடுகளைக் காக்கிலாயா ஏற்பாடு செய்து நடத்தினார். மாநில அளவிலான அமைப்பு ‘கர்னாடகா ராஜ்ய ராயத் சங்கா (KRRS) என்றழைக்கப்படுகிறது. சிபிஐ கட்சியைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ்குடி மற்றும் காக்கிலாயா இணைந்து தட்சிண கர்னாடகா உட்பட பல மாவட்டங்களில் அமைப்புக்களை ஏற்படுத்தினர். அவ்வமைப்பு நெல், கரும்பு, நிலக்கடலை, பருத்தி முதலான பயிர்களுக்குக் கட்டுப்படியான ஆதாய விலை நிர்ணயிக்கக் கோரி 1979 ஜனவரி பிப்ரவரி மாதங்களில் மாநிலம் தழுவிய போராட்ட இயக்கத்திற்கு அழைப்பு விடுத்தது.

ஏராளமாக எழுதிக் குவித்தவர்

மக்கள் மத்தியில் களப்பணிகளில் ஈடுபட்டாலும் காக்கிலாயா ஏராளமாக எழுதிக் குவித்துப் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவருடைய இலக்கியப் படைப்புகளுக்காக, கன்னடா சாகித்திய அகாதெமி விருது உட்பட,  பல விருதுகளைப் பெற்றுள்ளார். எம் எஸ் கிருஷ்ணன் மற்றும் எஸ்எம் நாயக் உடன் சேர்ந்து அவர் செல்வாக்குமிக்க ‘நவகர்னாடகா பதிப்பகம் (பி) லிட்’, ஒன்றை நிறுவி இறுதிவரை அதன் தலைவராகச் செயலாற்றியுள்ளார். 

அவரது படைப்புகளில் சில: கம்யூனிசம், பாரதிய சிந்தனா, இந்து தர்மா, கம்யூனிசம், பூமி மது ஆகாஷா (‘Bhoomi mathu akasha’) முதலியன. சச்சார் குழு அறிக்கை மற்றும் பல பிற நூல்களைக் கனடா மொழியில் மொழியாக்கம் செய்துள்ளார். அவர் தனது சுயசரிதையை (‘Bareyada Dinachariya Mareyda Putagalu’) ‘எழுதப்படாத நாட்குறிப்பிலிருந்து மறக்க முடியாத பக்கங்கள்’ என்ற பெயரில் கன்னட மொழியில் எழுதியுள்ளார். 

1983 –86 காலகட்டத்தில் அவர் காரல் மார்க்ஸ் மற்றும் ஃபெடரிக் ஏங்கெல்ஸ் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதினார். காரல் மார்க்ஸ் படைப்புகள் பற்றி காக்கிலாயா எழுதிய நூல் 1986ல் சோவியத் லாண்டு நேரு விருதைப் பெற்றது. ஏங்கெல்சின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகள் பற்றி காக்கிலாயாவின் ஆக்கம் கர்னாடகா சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றுள்ளது.

அவருடைய மனைவி அகல்யா 1998 ஜூன் 31ல் இயற்கை எய்தினார். அவர் சுதந்திரப் போராட்ட வீரரான ஸ்ரீநாராயண சோமயாஜியின் இளைய மகள் ஆவார். அவர்தான் அவர்களது நான்கு மகன்களையும் முக்கியமாகக் கவனித்து வளர்த்தார்.

தொழிற்சங்க இயக்கத்தில் 

தங்கள் நியாயமான உரிமைகளுக்காகப் போராடிய பீடித் தொழிலாளர்கள் போராட்டத்தில் காக்கிலாயா முன்னணியில் இருந்தார். அவர்களுக்குப் பல உதவிகள் செய்து பல உரிமைகளையும் சட்டங்களையும் பெற்றுத் தந்தார். மங்களூரு ஓடு செய்யும் தொழிலாளர்களின் நிலைமையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர். மேலும் ஏலக்காய், காப்பி எஸ்டேட்டுகள் மற்றும் தோட்டத் தொழில் போன்ற பிரிவுகளின் தொழிலாளர்களுக்காகவும் உழைத்தார். 1943 முதலாகவே நெசவாளர்கள், பீடி மற்றும் டைல் ஓடு தொழிலாளர்கள் அமைப்புகளைத் தட்சிண கன்னடா மாவட்டத்தில் அமைப்பதில் பாடுபட்டார்.

மாநிலங்கள் மறுசீரமைப்புப் போராட்டம்

அகண்ட கர்னாடகா ராஜ்ய நிர்மணா பரிக்க்ஷத் (ஒன்றிணைந்த கர்னாடக மாநில அமைப்புக் குழு) அமைப்பின் பொதுச் செயலாளராகக் காக்கிலாயா செயல்பட்டார். கன்னட மொழி பேசுவோர் வாழும் பகுதிகளைக் கர்னாடக மாநிலமாக ஒன்றிணைத்து அமைக்கப் போராடினார். பிரிட்டிஷ் ஆட்சியின்போது காசர்கோடு தாலுக்கா முந்தைய தென் கன்னடா மாவட்டத்தில் இருந்தது; அது புதிதாக அமைக்கப்பட்ட மாநிலத்தில் விடுபட்டு 1956ல் கேரளாவுடன் இணைந்தது. 

2006 நவம்பர் 1ம் தேதி ‘சுவர்ண கர்னாடக ஏகிகாரணா அவார்டு’ (தங்க கர்னாடகா ஒன்றிணைப்பு விருது) வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டார். விருது வழங்கும் விழாவில் பேசும்போது கர்னாடகாவை ஒன்றிணைப்பதற்காக ஆட்சியாளர்கள், அரசர்கள் மற்றும் அரசுகளை எதிர்த்து நடத்தப்பட்ட புகழ்பெற்ற போராட்டங்களை நினைவு கூர்ந்தார். சின்னச் சின்ன அற்ப விஷயங்களுக்காக மாநிலத்தின் ஒற்றுமையில் சமரசம் செய்யலாகாது என அவர் வேண்டினார்.

கோவா விடுதலைப் போராட்டம்

பெரும் பேரணியைப் பெங்களூரிலிருந்து கோவாவிற்கு 1955 ஆகஸ்ட் 15ல் காக்கிலாயா தலைமையேற்று மேற்கொண்டபோது போர்த்துகீசிய போலீசாரின் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்கொண்டார். ரகசியமாக இந்துஸ் என்னும் கோவா கிராமத்திற்கு அவர் நழுவிச் சென்று தேசியக் கொடியை ஏற்றினார். அதன் பிறகு அவர் மிருகத்தனமாக அடித்து நொறுக்கப்பட்டார். 

சிபிஐ மாநிலச் செயலாளராக நீண்ட வருடங்கள் பொறுப்பு வகித்ததுடன், கட்சியின் வாரப் பத்திரிக்கையான ‘கெம்பாவுதா’ (Kembavuta’) ஆசிரியராக 1986 முதல் 1991 வரை இருந்தார். 

1962ல் எம்எஸ் கிருஷ்ணன், எம்சி நரசிம்மன், சிஆர் கிருஷ்ணா ராவ், வாசன், கோவிந்தன் மற்றும் சிலரோடு காக்கிலாயா கைது செய்யப்பட்டார். 

சிபிஐ மாநிலச் செயலாளராக

1964 சிபிஐ கட்சி பிளவிற்குப் பிறகு பிவி காக்கிலாயா இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளரானார், 1972 வரை அப்பொறுப்பில் நீடித்தார். 1964 டிசம்பரில் பம்பாயில் நடைபெற்ற சிபிஐ 7வது கட்சிக் காங்கிரஸ் மாநாட்டின் சார்பாளர் தேர்வுக்குழுவின் (க்ருடென்ஷியல் கமிட்டி) உறுப்பினராக அவர் இடம்பெற்றார். அவர் தொடர்ச்சியாக 5வது அமிர்தசரஸ் (1958), 6வது விஜயவாடா (1931), 7வது பம்பாய் (1964) மற்றும் 8வது பாட்னா (1968) கட்சிக் காங்கிரஸ் மாநாடுகளில் தேசியக் குழுவிற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

1980களில் எண்ணிறைந்த மக்கள் திரள் போராட்டங்களைத் திரட்டி அமைத்து அவற்றில் பங்கேற்றார். உதாரணத்திற்கு 1982ல் நரகுண்டிலிருந்து பெங்களூருக்கு ஏராளமான விவசாயிகள் நடத்திய பேரணியில் தேவராஜ் அர்ஜ், டிபி சந்திராகவுடா மற்றும் மற்றவர்களோடு காக்கிலாயா முன்னணியில் பங்கேற்றார். 

கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அவர் ஆற்றிய பெரும் பங்களிப்புக்காகத் தார்வாட்டில் உள்ள மார்க்சிய கோட்பாட்டிற்கான இந்திய நிறுவனம் அவருக்குக் காரல் மார்க்ஸ் விருது வழங்கியது.

2009 மார்ச் 22ல் பெங்களூரில் எம்எஸ் கிருஷ்ணன் நினைவு அறக்கட்டளை சார்பில் ஓர் எளிய விழாவில் அவருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. ‘நிரந்தரா’ என்ற தலைப்பில் ஒரு பாராட்டு மலரை அவருக்கு என்சி நரசிம்மன் வழங்கினார். அந்தத் தொகுப்பு மலரில் காக்கிலாயா வாழ்வு மற்றும் பணிகள் குறித்த கட்டுரைகளும்; அவருடைய பிறந்த நாளில் நடத்தப்பட்ட “காக்கிலாயா 90: இளம் தலைமுறையினருடன் ஓர் உரையாடல்” என்ற நிகழ்வில் ஆற்றப்பட்ட சொற்பொழிகள் மற்றும் கட்டுரைகளும் இடம் பெற்றன. 

துளு மொழி, துளு இலக்கியம் மற்றும் கலாச்சாரத்திற்கு அவரது பங்களிப்பிற்காக காக்கிலாயாவுக்குத் துளு சாகித்திய அகாதெமி சார்பிலும் 2006 அக்டோபர் 25ல் பாராட்டு விழா நடத்தப்பட்டது. 

உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் சிபிஐ-யின் கண்டன எதிர்ப்பு இயக்கத்தில் அவர் கலந்து கொண்டார். அந்தக் கண்டனப் போராட்டம் இருவர் விடுதலை தொடர்பானது. நக்சலைட்டுகளுடன் தொடர்பு வைத்திருந்தனர் எனக் குற்றம்சாட்டிக் கைதுசெய்யப்பட்ட மங்களூரு பல்கலைக்கழக மாணவர் விட்டல மாலேகுடியே, அவருடைய தந்தை லிங்கண்ணா மாலேகுடியே இருவரையும் விடுதலை செய்யக் கோரிய போராட்டமே காக்கிலாயா பொது அரங்கில் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சியாகும். 

‘பிவி காக்கிலாயா நூற்றாண்டு விழா’ இரண்டு நாள் நிகழ்வாக 2019 ஆகஸ்ட் 10 மற்றும் 11 தேதிகளில் மங்களூரில் நடைபெற்றது. அந்தச் சிறப்புக் கருத்தரங்கில் அவருடைய பங்களிப்பு, வெகுஜன இயக்கங்களின் பல்வேறு அம்சங்கள், அவருடைய எழுத்துகள் புத்தகப் படைப்புகள் குறித்துச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. முதல் பொழிவு, ‘பிவி காக்கிலாயா, மலபாரிலிருந்து கர்னாடகா சட்டமன்றத்திற்கு’ என்ற தலைப்பில் சிபிஐ மாநிலத் தலைவர் சித்தங்கவுடா பாட்டில் நிகழ்த்தினார். விழா எம்எஸ் கிருஷ்ணன் நினைவு அறக்கட்டளை, கொசத்து மாத இதழ், நவகர்னாடகா பதிப்பகம் மற்றும் சமதர்ஷினி வேதிகே அமைப்புகளின் சார்பில் இணைந்து நடத்தப்பட்டது. விழாவில் அமர்ஜித் கவுர், கன்னையா, பேராசிரியர் (ஆனந்த்) டெல்டும்டே, பேராசிரியர் சந்திரா பூஜாரி, தினேஷ் மட்டூ, பிபி லோகேஷ், டாக்டர் டிஎஸ் வேணுகோபால், டாக்டர் விஜய் தம்பந்தா, டிஎம் கிருஷ்ணா மற்றும் பலர் உரையாற்றினர்.

நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டு, மூளை இரத்தக் கசிவு காரணமாக பிவி காக்கிலாயா தமது 93வது வயதில் மங்களூரில்  2012 ஜூன் 4ம் நாள் இயற்கையெய்தினார்.

பிவி காக்கிலாயா அவருடைய படைப்புகள் நூல்கள் வழி என்றென்றும் வாழ்வார்!

--தமிழில் : நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர்  

No comments:

Post a Comment