Tuesday 4 May 2021

மதம் குறித்துக் கம்யூனிசத்தின் அணுகுமுறை

காரல்மார்க்ஸ் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

மதம் குறித்துக் கம்யூனிசத்தின் அணுகுமுறை

-- ரஜீம்வாலே

--நியூஏஜ் (மே 2—8)

மதம் பற்றி கம்யூனிஸ்ட்களின் அணுகுமுறை யாது? அதனை அவர்கள் எதிர்க்கிறார்களா அல்லது சகித்துக் கொள்கிறார்களா அல்லது ஆதரிக்கிறார்களா அல்லது வெறுமே நடுநிலை வகிக்கிறார்களா? மதத்தையும் வழிபாட்டுத் தலங்களையும் சோஷலிசம் மற்றும் கம்யூனிசம் அழிக்க எண்ணுகிறதா? மதம் மற்றும் கடவுள் நம்பிக்கையாளர்கள் கட்சி உறுப்பினர்களாக அனுமதிக்கப்படுகிறார்களா? இந்தக் கேள்விகள் மீது அதிக அளவில் தவறான புரிதல் நிலவுவது மட்டுமல்ல, சில கம்யூனிஸ்ட்கள்கூட இவ்விஷயங்கள் குறித்துக் குறுகிய பார்வையே கொண்டிருக்கிறார்கள். 

மதம் மற்றும் கடவுளுக்கு எதிரானவர்கள் கம்யூனிஸ்ட்கள், சோஷலிசம் ஒருநாள் மதத்தை அழித்துவிடும் என்றெல்லாம் பரவலான பிரச்சாரம் செய்யப்படுகிறது. உண்மையில் இப்பிரச்சாரம் நம் நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தொடங்கப்பட்டது. இன்று பிற்போக்கு மதவாத மற்றும் பழைமைவாத சக்திகள், அதனையே தொடர்ந்து மேலும் சுமந்து செல்கிறார்கள்.

ஆனால் உண்மைக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அதிதீவிர இடது சூப்பர் புரட்சியாளர்களும்கூட எந்திரத்தனமான குறுகிய குழுவாதப் புரிதல்களால் முதலாளித்துவத்தைத் ’தூக்கி எறியும்’ இலட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாக ‘மதத்தை முதலில் போராடி வெளியேற்றி’ நாத்திகத்தை நிறுவுவது என்று பிரச்சாரம் செய்கிறார்கள்; இச்செயல் மூலம் வலதுசாரி சக்தியினருக்கே அவர்கள் உதவுகிறார்கள். 

தொழிலாளர்கள், விவசாயிகள், கைவினைஞர்கள், கூலிகள், திரட்டப்படாத தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், சிறுவணிகர்கள், கடைக்காரர்கள் என மிகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் திரளும் பொதுமக்களும் மதத்தை நம்புகிறார்கள்; எனவே, கம்யூனிஸ்ட் கட்சி மதத்தைத் தாக்குவது என்பது முட்டாள்தனமானது, நடைமுறைச் சாத்தியமற்றது மற்றும் கோட்பாட்டளவில் தவறானது. நம்முடைய போராட்டம் மதத்திற்கு எதிரானது அல்ல; மாறாக, இவ்வுலக வாழ்வு மற்றும் வானுலக மயக்கக் கற்பிதங்களுக்கு மூலகாரணமான சமூகப் பொருளாதார அடிவேர்களுக்கு எதிரானது. மதரீதியான நம்பிக்கைகளின் ஜனநாயக உரிமைக்காக நாம் போராட வேண்டும்.   

மதம் பற்றி மார்க்சும் ஏங்கெல்சும்

‘மக்களுக்கு அபின்’ என்ற காரல் மார்க்சின் பொன்மொழி, பரவலாக –ஏன் அவரது ஆதரவாளர்கள் உட்பட– பலராலும் தவறாக மேற்கோள் காட்டப்பட்டு, தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. அந்தச் சொற்தொடர் மிக நீண்ட மேற்கோளின் ஒரு பகுதி. (அதற்கு முன்னும் பின்னும் உள்ள பத்திகளை விட்டு விட்டுப் படித்தால் இப்படித் தவறான புரிதல் இடர்பாடு நேரிடும்). ’ஹெகலின் சட்டத் தத்துவம் மீதான விமர்சனப் பங்களிப்பு’ (‘Contribution to the Critique of Hegel’s Philosophy of Law’) என்ற காரல் மார்க்சின் ஆக்கத்தில், ஏன் மற்றும் எப்படி மதம் தோன்றியது என்பதற்கு விஞ்ஞானபூர்வமான விளக்கங்கள் அளிக்கும்போது அவர் அந்த நீண்ட பதிவை எழுதியுள்ளார். (மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ், மதம் பற்றி, மாஸ்கோ பதிப்பகம், 1976 பதிப்பு) 

மார்க்ஸ் கூறுகிறார், “(மதம் என்பது மறுதலையான, அதாவது தலைகீழான, உலகப் பிரக்ஞை ஆகும். ஏனெனில் மதத்தில் தலைகீழான ஓர் உலகமே காணப்படுகிறது.) மதம் என்பது அந்த உலகம் பற்றிய பொதுக் கொள்கை; அதன் பல்களஞ்சியச் சுருக்கத்தின் திரட்டு; அதன் தர்க்க நியாயத்தின் ஜனரஞ்ஜக வடிவம்; மேலான அதன் ஆன்மிக நிலையில் அதன் உற்சாகம், அதன் அற அங்கீகாரமாகும். அதன் மேன்மையான பிற்சேர்க்கை, அதன் உலகளாவிய ஆறுதல் மற்றும் நியாயப்படுத்தலின் ஊற்றுக்கண். அது மனித சாரத்தின் சாத்தியமற்ற கற்பனாபூர்வ அடைதல் நிலையாகும்…” (பக்கம் 38) இங்கே மார்க்ஸ் மதம் பற்றிய கோட்பாட்டை, உலகம் பற்றிய வெகுஜன விளக்கத்தை – (அதாவது இவ்வுலகில் கஷ்டப்படுபவர் மேலுலகில் இன்பமாய் இருப்பர் என்பது போன்ற உண்மையான உலகின் கற்பனாபூர்வ பிரதிபலிப்பை) விளக்குகிறார். அரசும் சமூகமும் உலகப் பிரக்ஞையின் தலைகீழான வடிவமாக மதத்தை உண்டாக்குகின்றன. (அதாவது இம்மண்ணுலகில் உள்ள பொருள்கள் அழியும், இன்பம் காலவரையறைக்குட்பட்டது, அது சிற்றின்பம் என்பனவற்றிற்கு மாறான அழியாத சாஸ்வதப் பொருட்கள், நீடித்த இன்பம், பேரின்பம் என்பது போன்ற மறுதலையான மேல் உலகக் கற்பனை) 

பொதுமக்களின் துன்பதுயரங்களை மதம் எப்படிப் பிரதிபலிக்கிறது என்றும்; மற்றும் அந்தத் துயரங்களுக்கு எதிரான போராட்டமாகவும் (மதம்) எப்படிச் செயல்படுகிறதென்றும் மார்க்ஸ் மேலும் விளக்கிறார்: “மதரீதியான துயரம் (அதாவது மதத்தில் இடம்பெறும் ஆத்ம அவலம்) என்பது ஒரேவேளையில் உண்மையான துன்ப துயரங்களின் வெளிப்பாடாகவும், அந்த உண்மையான துன்பதுயரங்களுக்கு எதிரான போராட்டமாகவும் அமைகிறது”. “மதம் என்பது ஒடுக்கப்பட்ட ஜீவனின் பெருமூச்சு, இதயமற்ற உலகின் இதயம், ஆத்ம உயிர்ப்பற்ற நிலைமைகளின் ஆத்மா. அது மக்களின் அபின்” (மார்க்ஸ், மதம் பற்றி, பக்கம் 39). மேலும் மார்க்ஸ் கூறுகிறார்: “எனவே சரித்திரத்தின் கடமை என்பது …இந்த உலகின் உண்மைநிலையை நிலைநாட்டுவதே.” (அதே நூல்) இந்த இடத்தில் மார்க்ஸ் மானுட விடுதலைக்கான எதார்த்தமான புறநிலைமைகளைப் பற்றிப் பேசுகிறார். (அதாவது பொய்யான, மாயையான இன்பத்தினைத் தரும் மதத்திற்குப் பதிலாக மக்களுக்கு உண்மையான இன்பத்தைத் தர வேண்டும் என்று கோருவதே தவிர, அது மதத்தை அழிப்பது என்று பொருளாகாது.)

மதம் அபினாக இருக்கிறது என்கின்ற மேற்கண்ட செய்திக்கு முன்னும் பின்னும் மதம் பற்றிய ஒட்டுமொத்த ஆய்வுப் பரிசீலனையை மார்க்ஸ் எழுதியுள்ளார். பலநேரங்களில் வலியைக் குறைப்பதற்குப் பயன்படும் அபின் மருந்தாக மதம் பயன்படுத்தப்படுகிறது. எந்த இடத்திலும் மார்க்ஸ் மதத்தின் மீது தாக்குதல் நடத்தவில்லை அல்லது அதன் அழிவு குறித்துப் பேசவில்லை. மாறாக, வரலாற்றுபூர்வமான சமூக பொருளாதார வேர்களைத் தேடி அடைகிறார். மக்கள் கூட்டத்தின் உண்மையான வாழ்க்கை எதார்த்த நிலைமைகளிலிருந்து அவர்களைத் திசைதிருப்ப மதத்தை ஒரு போதை வஸ்துவாக, அபினாகப் பிற்போக்கு பழமைவாதம் எப்படிப் பயன்படுத்துகிறது என மார்க்ஸ், ஏங்கெல்ஸ் மற்றும் லெனின் சுட்டிக் காட்டியுள்ளனர்.

மார்க்ஸியர்கள் அல்லாத பல சிந்தனையாளர்களும் மதத்தை ’அபின்’ எனக் குறித்துள்ளனர். அப்படிக் கூறியவர்களுள், சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் கெனான், சார்லஸ் கிங்க்ஸ்லே; 19ம் நூற்றாண்டின் கருத்தியல் தத்துவச் சிந்தனையாளர்,  ஹெய்ன்ரிச் ஹெய்ன்; ஸ்பானிஸ் எழுத்தாளர், மிக்யூஅல் டி யுனமுனோ மற்றும் பிறர் அடங்குவர். 

மதமும் தொழிலாளர்கள் இயக்கமும் 

ஆரம்பகால கிருஸ்துவத்தை நவீனத் தொழிலாளர்கள் மற்றும் சோஷலிச இயக்கத்துடன் ஏங்கெல்ஸ் ஒப்பிட்டுள்ளார். ‘மதம் குறித்து’ என்ற தமது நூலில் ஏங்கெல்ஸ் பின்வருமாறு எழுதுகிறார்: “ஆரம்பகாலக் கிருஸ்துவ வரலாற்றில் பல குறிப்பிடத்தக்க அம்சங்கள் நவீன தொழிலாளர் வர்க்க இயக்க அம்சங்களோடு பொதுவானதாக உள்ளது. தொழிலாளர் வர்க்க இயக்கம் போலவே கிருஸ்துவமும் தொடக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கமாக இருந்தது: முதலில் அது, அடிமைகள், விடுவிக்கப்பட்ட மக்கள் மற்றும் அனைத்து உரிமைகள் பறிக்கப்பட்ட ஏழைகளின் மதமாகத் தோன்றியது… கிருஸ்துவம் மற்றும் தொழிலாளர்களின் சோஷலிசம் இரண்டும் அடிமைத் தளை மற்றும் துயரங்களிலிருந்து விரைவில் விடுதலை கிட்டும் என்று போதிக்கின்றன.” கிருஸ்துவம் மறுஉலகில் அதனைத் தேடுகிறது; சோஷலிசமோ இவ்வுலகிலேயே அதனைச் சாதிக்க எண்ணுகிறது. (‘தேவன் நமக்குத் தேவனுடைய ராஜ்ஜியத்தையே தருவார்’ என்று கிருஸ்துவமும்; ‘இழக்கப் போவது அடிமைச் சங்கிலி, பெறப்போவது பொன்னுலகு’ என்று தொழிலாளர் இயக்கமும் கூறுவதை உதாரணமாகச் சொல்லலாம். --மொழிபெயர்ப்பாளர்) புதுப்பிக்கப்பட்ட யூதமதம் (ஜூடாயிசம்) “மனிதகுலச் சிந்தனை வரலாற்றில் ஆகப் புரட்சிகரமான ஒன்றாக மாறியது” (பக்கம் 186). மேலும் கிருஸ்துவம் மற்றும் சோஷலிசம் இரண்டும் சாதாரண மக்களின் பெருந்திரள் இயக்கங்கள் (அதே நூல்). இரண்டு இயக்கங்களும் ஒடுக்கப்பட்டவர்களின் இயக்கம் என்ற வகையில் துவக்க கால மத இயக்கத்தை முதலாவது அகிலத்துடன் (1864 –76) ஒப்பிட்டார் ஏங்கெல்ஸ். சொர்க்கம் இந்த மண்ணுலகத்திலேயே படைக்கப்பட முடியும் என மார்க்ஸ்தான் நிறைவாக முத்தாய்ப்புச் செய்தார்.

கட்சித் திட்டத்தில் தீவிர இடதுசாரி, அதிதீவிர புரட்சி மற்றும் கற்பனா சோஷலிசவாதிகள் “நாத்திகத்தை” இணைக்க முயற்சி செய்ததை ஏங்கெல்ஸ் கண்டித்தார். அகஸ்டே பிளான்கியின் பிளாங்கிசம் (அராஜகம்) திட்டம் குறித்து 1874ல் விமர்சிக்கும்போது ஏங்கெல்ஸ், “மதத்திற்கு எதிரான அவர்களுடைய போர் முழக்கம், ‘ஒரு முட்டாள்தனமான துண்டுக் காகிதம்’; அது எதிரிகளுக்கு மட்டுமே உதவும்” என்று கூறியுள்ளார். ஆகப் பரவலான சாத்தியமுள்ள வர்க்கப் போராட்டங்களில் மத உணர்வுள்ள தொழிலாளர்களும் ஈர்க்கப்பட்டு இணைக்கப்பட வேண்டும். தொழிலாளர்களின் கட்சியில் மதம் தடை செய்யப்பட வேண்டும் என்ற டூரிங்கின் போலிப் புரட்சிக் கருத்தை அவர் கண்டித்துள்ளார் (ஏங்கெல்ஸ், டூரிங்குக்கு மறுப்பு நூலில்) 

மதத்தை அபின் என்று கூறும் சுவாமி விவேகானந்தர்

அபின் ஒப்புவமையைப் பயன்படுத்தி சுவாமி விவேகானந்தரும்கூட மதத்தை விவரித்திருக்கிறாரா என்பதை அறிய எவருமே வியப்படைவர்! சுவாமி கூறுகிறார், “இயற்கையிலிருந்து அப்பாற்பட்டு ஒரு தனிநபர் போன்று கடவுளைக் கற்பனை செய்து அவரையே வணங்கி அன்பு செய்யும் கருத்து அற்புதமானது. சில நேரங்களில் இப்படிக் கருதுவது மிகவும் இளைப்பாறுதல் தருவதாகும். ஆனால்… இந்த ஆறுதல் எதுபோன்றதென்றால், அபின் கலந்த (மயக்க) மருந்தின் விளைவைப் போன்றதே தவிர, இயல்பானதில்லை. நீண்டகாலப் பயன்பாட்டில் அது சோர்வையும் உடல்பலகீனத்தையுமே கொண்டுவந்து சேர்க்கும். ” நமக்குத் தேவை வலிமை என்று அவர் வற்புறுத்தினார் (விவேகானந்தர் நூல் திரட்டு, தொகுதி 3, 1990, பக்கம் 107 -108)  

மதம் குறித்து லெனின் 

மதநம்பிக்கையாளர்களைக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர அனுமதிக்கலாமா என லெனினைக் கேட்டபோது, அவர் தெளிவாகப் பதில் கூறினார்: ஒருவர் தனது மதநம்பிக்கையைக் கைவிட வேண்டும் என்பது கட்சியில் சேர ஒரு முன்நிபந்தனை அல்ல. யாரொருவர் கட்சியின் இலட்சியங்கள், நோக்கங்கள், திட்டங்களை ஒப்புக்கொண்டு, மேலும் அவற்றை நடைமுறைப்படுத்துகிறார்களோ அவர் கட்சியின் உறுப்பினராகலாம்.  தத்துவம், மதம் மற்றும் பிற விஷயங்கள் நீண்டகால விவாதங்களுக்கு உரியன. மத நம்பிக்கையைத் துறப்பது, கட்சியில் சேர்வதற்குக் கட்டாயம் அல்ல. 

லெனின் மேலும் தெளிவாகக் கூறுகிறார், “கடவுள் மீதான தங்கள் நம்பிக்கையை உறுதியாகப் பற்றியிருக்கும் தொழிலாளர்களைச் சமூக ஜனநாயகக் கட்சியில் சேர நாம் அனுமதிப்பது மட்டுமல்ல, நாமே தேடிப் பிடித்து அப்படிப்பட்டவர்களைக் கட்சிக்குக் கொண்டுவந்து சேர்த்திடத் திட்டமிட வேண்டும்; அவர்களுடைய மத நம்பிக்கை விஸ்வாசத்திற்குச் சிறிதளவு பாதிப்பது ஏற்படுத்தப்படுவதையும் நாம் முழுமையாக எதிர்க்கிறோம்.” (லெனின், மதத்தின் மீது தொழிலாளர்கள் கட்சியின் அணுகுமுறை, நூல் திரட்டு, தொகுதி 15). ”மதம் ஒழிக, நாத்திகம் நீடு வாழ்க” என்ற கோஷம், மேம்போக்கானது மற்றும் குறுகிய பூர்ஷ்வா பார்வை; ஏனெனில் அது பிரச்சனை (கேள்வி) யின் அடிவேருக்குச் செல்லவில்லை. முதலாளித்துவ ஆட்சிதான் எதிர்க்கப்பட வேண்டும். நாத்திகப் பிரச்சாரம் என்பது சமூகப் பொருளாதார மாற்றம் எனும் முதன்மையான பிரதானக் கடமைக்குக் கீழே அடுத்து இருப்பது மட்டுமே. (அதே நூலில்)

“ஒரு பாதிரியார் (மதக் குருக்கள்) நம்மிடம் வந்து, பொதுவான அரசியல் பணியில் பங்கெடுத்து, கட்சியின் திட்டத்தை எதிர்க்காமல் மனப்பூர்வமாகக் கட்சிக் கடமைகளை ஆற்றினால்” அவர் கட்சி உறுப்பினராக அனுமதிக்கப்படலாம். (லெனின், அதே நூல்). மத எதிர்ப்பு மற்றும் நாத்திகப் பிரச்சாரத்தை வற்புறுத்தும் அராஜகவாதிகளின் போலிப் புரட்சி அணுகுமுறையைச்  சிதறிய குழப்பமான பூர்ஷ்வா பார்வை என்று லெனின் விமர்சிக்கிறார்.

விடுதலைக்காகப் போராடும் பின்தங்கிய கீழை நாடுகளில் மத உணர்வுகள் குறித்துக் கவனமாக இருக்கும்படி லெனின் குறிப்பாக வற்புறுத்துகிறார். முக்கிய எதிரியை எதிர்த்து, அதாவது நிலப்பிரபுத்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, மதங்கள் ஆற்றிய வரலாற்றுப்பூர்வமான பங்களிப்பை லெனின் சுட்டிக் காட்டியுள்ளார். 

மார்க்சியம் மற்றும் மதம் குறித்து காஸ்ட்ரோ

ஏகாதிபத்தியத்தை எதிர்த்தப் போராட்டத்திலும், ஏழ்மை மற்றும் சுரண்டலை இப்புவியிலிருந்து அடியோடு ஒழித்திடும் பணியிலும் மார்க்ஸிஸ்டுகள் மற்றும் கிருத்துவர்கள் இடையே நெருங்கிய கூட்டுறவைக் கியூபா புரட்சியின் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ வெளிப்படையாகச் செயல்படுத்தினார். மிக முக்கியமான கேள்விகள் குறித்து (கிருஸ்துவ மதம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி) இரண்டிற்கும் இடையேயுள்ள பொதுவான பார்வைகளை அவர் வற்புறுத்தினார்.

உண்மையில் இறை நம்பிக்கையாளர்கள் பலரும் கியூபா, சீனா மற்றும் வியத்நாம் புரட்சிகளில் பங்கேற்றுள்ளனர். மேலும் தொடர்ந்து அவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் முதலாளித்துவ எதிர்ப்பில் பங்களிப்புச் செய்து வருகின்றனர்.

மதத்தின் பங்கு / இந்தியாவில் கருத்தியல் தத்துவம்

கம்யூனிஸ்ட்களில் பலரும் பலநேரம் வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தை மதத்திற்கு எதிரானதாகக் கலந்து குழம்பும் தவறினை இழைத்து விடுகிறார்கள். அந்த இரண்டும் வேறு வேறு. மதநம்பிக்கையாளர்களில் அபரிமிதமான எண்ணிக்கையினர் வகுப்பு வாதத்திற்கு எதிரானவர்கள், மதசார்பற்றவர்கள். விடுதலை இயக்கத்தின் மறுக்கமுடியாத தன்னேரில்லா தலைவரான மகாத்மா காந்தியே ஓர் இந்து மத நம்பிக்கையாளரே. காந்தியின் ‘ராம்’, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இராமரிலிருந்து முற்றிலும் வேறானவர். காந்திஜி இந்து முஸ்லீம் ஒற்றுமையை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ததால் அவர் தீவிர இந்துமத வெறியர்களான போலி மதவாதிகளால் கொல்லப்பட்டார். மதவாதத் தாக்குதல் நடத்துபவர்கள் மற்றும் மதத்தைச் சிதைப்பவர்களிடமிருந்து மதஉரிமையைப் பாதுகாப்பவர்களாக உண்மையில் கம்யூனிஸ்ட்கள் திகழ்கிறார்கள். மதம் மக்களின் அடிப்படை உரிமை. வகுப்புவாதக் கருத்தியல் தத்துவம்தான் உண்மையில் மதத்திற்கு எதிரானது. 

இந்தியாவின் சமய மற்றும் தத்துவப் போக்குகள் வரலாற்றில் பலபோழ்து முற்போக்கான பங்காற்றியுள்ளன. உதாரணத்திற்குச் சார்வாகம் / லோகாயதம், சாங்கியம், நியாய வைசேடிகம் முதலானவை தத்துவச் சிந்தனை மரபில் ஆழங்கால்பட்டு வளமான வித்தியாசமான போக்குகளை வழங்கியுள்ளன. ஆரம்பகால இயற்கை விஞ்ஞான பழக்கவழக்கத்தில் பிறந்த சாதாரணமக்களின் ஆயுர் வேதத்தைச் சமூகம் வெறுத்து ஒதுக்கியது. மாபெரும் வரலாற்று அறிஞரான தேவிபிரசாத் சாட்டோபாத்யாயா தனது தீர்க்கமான செல்வாக்குமிக்க ஆய்வுப் படைப்பில் ஏன் எதற்காக இவ்வாறு செய்யப்பட்டது என்பதை விரிவாக விளக்கியிருக்கிறார். ஆயுர் வேதம் என்பது மருத்துவ மதிப்பு மிக்க தாவரங்கள் (வேர், தழை, தண்டு, பட்டை) மற்றும் உயிரினங்களைத் தேடிச் சேகரிப்பதில் ஈடுபடுவதாகும்; (சாதாரணமக்கள் காடுகளில் தேடித் திரியும்) இச்செயலை ஆளும் வர்க்கமும் சுரண்டும் மேல்சாதியினரும் வெறுத்து நோக்கினர். (உதாரணத்திற்குத் தமிழகத்தில் நாவிதர்களே மருத்துவர்களாகவும் இருந்தனர்; அவர்களின் பலபெயர்களில் மருத்துவர் / வைத்தியர் என்பதும் ஒன்று. இருப்பினும் சாதியப் படிநிலையில் அவர்களைக் கீழே வைத்துள்ளது சமூகம் என்பதைக் குறிப்பிடலாம். –மொழிபெயர்ப்பாளர் இணைத்தது)

வரலாற்றில் பக்தி மற்றும் சுஃபி இயக்கங்கள் பெரும்பங்காற்றியுள்ளன என்பதை வகுப்புவாதப் பழமைவாதம் அங்கீகரிக்க மறுத்தது. இவ்வியக்கங்கள் சாதி மற்றும் வகுப்புப் பாகுபாடுகளை எதிர்த்தன; மேலும் கடவுளுக்கு முன் அனைத்து மனிதர்களும் சமம் என்று காட்டியது. கபீர், துக்காராம், சைத்தன்யா, மத்வாச்சாரியர், குருநானக், ஞானதேவர், நிஜாமுதின் சிஷ்டி, ரஹீம், ஜெயதேவர் முதலானவர்கள் (மக்களை/சமூகத்தை) ஒன்றுபடுத்தும் இவ்வியக்கங்களின் மாபெரும் ஞானத் தலைவர்கள் ஆவர். சமயநம்பிக்கை உடைய அவர்கள் முற்போக்கானவர்களாகவும் மனிதாபிமானிகளாகவும் இருந்தனர். அவர்கள் இன்றைய சங்பரிவார் வகுப்புவாதிகளால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

பழமைவாதம், மாயாவாதம் (மிஸ்ட்டிஸம்) மற்றும் மேல்சாதி ஆதிக்கத்தைச் சமூக மற்றும் சமய சீர்திருத்தப் போராட்டங்கள் எதிர்த்தன. ஜோதிபா பூலே, ராஜாராம் மோகன்ராய், சுவாமி விவேகானந்தர் மற்றும் அவர்போன்றோர் அறிவுஒளி கருத்துக்களைப் பரப்பினர். 

நமது விடுதலை இயக்கத்தின்போதுகூட மதம், முக்கியமாக காலனிய எதிர்ப்பு மற்றும் வகுப்புவாத எதிர்ப்பு எனும் முற்போக்கான பங்காற்றியது. பிரித்தானிய ஆட்சியாளர்கள் மக்களை வகுப்புவாத மதவாதம் காட்டிப் பிளவுபடுத்த முயன்றனர். இதனைச் சமயத்தைச் சார்ந்த ஆரோக்கியமான நற்கருத்துடையோர் எதிர்த்தனர். தலைமறைவு புரட்சிகர இயக்கத்தின் ஒரு பிரிவு சமயக் கருத்துகள் மற்றும் பழக்கவழக்கத்தினால் உற்சாகம் பெற்றது.  பிள்ளையார், காளி, சிவா மற்றும்  பிற கடவுள் வழிபாடுகளுக்கு வகுப்புவாத விளக்கங்கள் வெகுகாலத்திற்குப் பிறகுதான் தரப்பட்டது. சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள் மக்களைப் பழமைவாதத்திலிருந்து போதுமான அளவு மீட்பதில் முக்கியமான பங்கு வகித்தன. 

மார்க்சியத் தத்துவம் மற்றும்

 பொருள்முதல்வாத உலகப் பார்வை

மார்க்சியத்தின் மூன்று கூறுகளில் ஒன்று தத்துவார்த்தப் பொருள்முதல்வாதம்; ஏனைய இரண்டும் அரசியல் பொருளாதாரம் மற்றும் விஞ்ஞான சோஷலிசம். மதத்தைக் கைவிட்டு இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை ஏற்பது கட்சி உறுப்பினர் ஆவதற்கான முன்நிபந்தனை அல்ல. (அப்படிக் கட்சியில் சேர்ந்த) கட்சி அணியினருக்கும் உறுப்பினர்களுக்கும் இயக்கவியல், வரலாற்றுப் பொருள்முதல்வாதத் தத்துவம் மற்றும் முறைகளில் பயிற்சி அளிக்க மார்க்சியம் முயற்சி செய்யும். உலகில் நிலவும் வியப்பான நம்பிக்கைகளின் ஆணிவேரை --மூல காரணத்தை-- சுட்டிக்காட்டி, கட்சி உறுப்பினர்களின் விஞ்ஞானப் பார்வை மற்றும் மனோபாவத்தை வளர்த்திட மார்க்சியம் முயலும்.

இதன் பொருள் ஒருவரின் மதம் மற்றும் மத நம்பிக்கைகளைக் கட்சி தாக்கும் என்பதல்ல. மக்களின் சமூக, பொருளாதார விடுதலைக்காகக் கட்சி பணியாற்றுவதே தவிர அவர்களின் சமயத்தை அவர்களிடமிருந்து பறிப்பதற்காக அல்ல. மக்கள் மற்றும் தனிநபர்களின் ஜனநாயக மத உரிமைகளைக் காத்திடும்போது கட்சி அவர்களின் தனிப்பட்ட கருத்துகளில் தலையிடுவதில்லை. அதே நேரம் மதத்தைத் தவறாகப் பயன்படுத்தி வலதுசாரி சக்திகள் மக்களைத் தவறாக வழிநடத்துவது குறித்துக் கட்சி சுட்டிக் காட்டும். நியாயமான சமய நம்பிக்கை மற்றும் பழமைவாதம் சமயத்தை நியாயமற்றமுறையில் பயன்படுத்து இரண்டும் வேறு வேறானவை. உண்மையான மத நம்பிக்கை மதிக்கப்பட வேண்டும்; மாறாக மதத்தை வியாபார விற்பனைப் பொருளாக்குவதும் தவறாகப் பயன்படுத்துவதும் எதிர்க்கப்பட வேண்டும். 

எந்த வகையிலும் மத உணர்வுகள் (காயப்படுத்தி) மீறப்படலாகாது. விஞ்ஞான மனோபாவம் மற்றும் பார்வைகளை ஏற்படுத்துவதற்கான போராட்டம் ஒரு நீண்டகாலப் போராட்டமாகும். ஓர் அரசியல் கட்சி என்றவகையில் நம்முடைய போராட்டம் சமயத்திற்கு எதிரானதல்ல. சுரண்டும் சமூக பொருளாதார அமைப்பிற்கு எதிரானவர்கள் நாம். ஒருவன் அல்லது ஒருத்திக்குச் சமய நம்பிக்கை இருந்தாலும், அவர் கட்சியின் திட்டம், கொள்கைகள் மற்றும் அமைப்பு விதிகளை ஏற்று நடைமுறையில் அமல்படுத்துவாரெனில், அவர் கட்சி உறுப்பினர் ஆகலாம்.  கட்சியின் எந்த ஆவணத்திலும் ஒருவர் சமயத்தைக் கைவிட வேண்டுமென முன்நிபந்தனை விதிக்கப்படவில்லை. இது குறித்து எந்தக் குழப்பமும் இருக்கத் தேவையில்லை. 

மக்கள்திரள் நம்பிக்கை வைத்துள்ள எந்த மதத்தையும் அவர்கள் பின்பற்றுவதற்கான  ஜனநாயக உரிமைகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாதுகாப்பது மட்டுமல்ல, அவர்களது சமய உரிமைகள் மீதான எந்தத் தாக்குதலையும் எதிர்க்கும். ஜனநாயகம் மற்றும் சோஷலிசத்திற்கான நமது போராட்டத்தில் இது பிரிக்க முடியாத பகுதியாகும். மக்களின் மத உரிமைகள் மீது தாக்குதல் தொடுப்பது பிற்போக்கு வலதுசாரி சக்திகள்; அதேநேரம் உரிமைகளைப் பாகாக்க நிற்பது கம்யூனிஸ்ட்கள்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் மற்றும் கட்சியின் அரசியலமைப்பு சட்ட விதிகள் காணும் எதிர்காலச் சோஷலிச இந்தியாவில் சமய சுதந்திரம் மற்றும் பிற சுதந்திரங்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படும்.  

--தமிழில்: நீலகண்டன், கடலூர்

1 comment:

  1. நல்ல கட்டுரை.நல்ல மொழியாக்கம்.
    சரியான நேரம்.
    பாராட்டுக்கள் நீலகண்டன்

    ReplyDelete