Friday 30 April 2021

மேதினி போற்றும் மேதினம் ஒரு வரலாற்றுப் பார்வை --

 மேதினி போற்றும் மேதினம் ஒரு வரலாற்றுப் பார்வை --

மே நாள், செங்கொடி மற்றும் 21ம் நூற்றாண்டு

--அனில் ரஜீம்வாலே

நன்றி: நியூஏஜ் (ஏப்ரல் 25 –மே1)

1832 ஜூன் மாதம் தங்கள் கோரிக்கைகளுக்காகக் கிளர்ச்சி செய்த பாரீஸ் தொழிலாளர்கள் போலீஸ் தடுப்பு அரணுக்குள் தடுத்து நிறுத்தப்பட்டபோது, (கிருஷ்ண பகவான் சிறைச்சாலையில் பிறந்தது போல), அங்கேயே அப்போது செங்கொடி பிறந்தது. செங்கொடி ஆர்வத்தைத் தூண்டக் கூடிய வரலாறு உடையது; அதன் தலைமையிலும் ஊக்கத்தினாலும் தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை போன்ற கோரிக்கைகள் இறுதியில் 1886 மேதின நிகழ்வுகளை வந்தடைந்தது.

பிரெஞ்ச் புரட்சியும் செங்கொடியும் 

செந்நிறம் பிரெஞ்ச் புரட்சியோடும் அன்றைய காலத்தில் நிலவிய நிலஉடைமைச் சமூக முறைகளோடும் ஆழமான தொடர்புடையது. உண்மையில் செங்கொடி அபாயம் அல்லது எச்சரிப்பதற்கான அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது.  மக்களை எச்சரிக்க அல்லது அறிவிப்புச் செய்ய மன்னர் நகரம் முழுவதும்  சிவப்பு நிற சிறு கொடிகளை நட்டார். பிற்காலத்தில் புரட்சியின் அடையாளமான செந்நிறம் அப்போது அப்படி இல்லை. 1789 பிரெஞ்ச் புரட்சிக்குப் பின்னர் 1789 அக்டோபர் 21ம் நாள் இராணுவச் சட்டத்தை அறிவிக்கச் செங்கொடிகள் நடப்பட்டன; அந்த நடைமுறையே பிறகு எங்கெல்லாம் சட்டத்தைப் பிரயோகிக்க வேண்டுமோ அங்கெல்லாம் மக்களுக்கான அடையாளமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். இதனைச் செய்ய பாரீசின் டவுன் ஹால் முக்கிய சன்னலில் ஒரு செங்கொடி ஏற்றப்பட்டு அனைத்து வீதிகள் மற்றும் சதுக்கங்களிலும் நாட்டினர். சில ஆண்டுகளுக்குப் பின்னர் ‘இறையாண்மையுள்ள மக்களின் இராணுவச் சட்டம்’ என்று பொறிக்கப்பட்ட செங்கொடியின் கீழ் கிளர்ச்சியாளர்கள் அணிவகுத்து வந்ததாகச் சொல்லப்பட்டது. 1793ல் மக்கள் பரவலாகச் சிவப்பு நிறத் தொப்பிகளை அணிந்தனர், இது குறித்து புகழ்பெற்ற இராபஸ்பியர் (Robespierre) என்பாரின் “மூவண்ணத்திற்கெதிராகச் சிகப்பு தொப்பிகள்” என்ற விவாதத்திற்குரிய கூற்றும் உண்டு. முற்போக்கான குடியரசுவாதிகள் (ரிபப்ளிகன்ஸ்) செங்கொடியை ஒரு அடையாளமாக ஒப்புக்கொண்டனர். பிரெஞ்ச் புரட்சியின்போது ’சான்ஸ்-க்லோட்ஸ்’ முன்னணியில் இருந்தனர்; அவர்கள், இன்னும் ஒரு வர்க்கமாக உருவாகாத, தொளதொளப்பான இயல்புகளோடான உழைக்கும் பெருந்திரள் மக்கள் – அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட ஆலைத் தொழிலாளர் வர்க்கத்தைவிட அதில்  அதிகம் கைவினைஞர்கள் இருந்தனர். (சான்ஸ்-க்லோட்ஸ் ‘sansculottes’ என்ற சொல் கப்பலில் சுமை ஏற்றும் தொழிலாளர்கள் போன்று பட்டையான கோடுகள் உள்ள நீண்ட கால்சட்டை அணிந்தவர்கள் என்று நேரடிப் பொருள்படும், அதாவது தாழ்ந்த வர்க்கத்தினர் –அவர்கள் பிரெஞ்ச் புரட்சிக்குப் பெரும் ஆதரவாக இருந்தனர்) 

சிகப்பு குருக்கள்கள் (‘Red priests’)

பிரெஞ்ச் புரட்சியின்போது பாரம்பரியமான மதக் குருக்கள்களிடமிருந்து முரண்பட்ட, தங்கள் சொற்களிலும் செயல்களிலும் நவீன முற்போக்கு எண்ணமுடைய, மதக் குருக்கள் சிகப்புப் பூசாரிகள் என அழைக்கப்பட்டனர். அவர்கள் தத்துவ மற்றும் சமூகத் தளங்கள் இரண்டிலும், ஒரு சீரான தொடர்ச்சி இல்லாவிடினும், போராடினர். அவர்கள் போராடிய காலம், இருண்மை பிற்போக்கு பழக்க வழக்கங்கள் நிறைந்த நடைமுறைகளிலிருந்து விடுதலையடைய விரும்பிய மத்திய காலம்.

சிகப்புக் குருக்கள்மார்களின் புரட்சிகர நடவடிக்கைகள் தொடர்ச்சியாக --பிரெஞ்ச் புரட்சியின் முத்திரையான‘ --  நேரடி ஜனநாயத்தை நோக்கி நடந்தது. பெட்டிட் ஜீன், ஜாக்கஸ் ரௌஸ், டோலிவர், க்ரோய்சி மற்றும் பிறர் ரெட் ப்ரீட்ஸ்கள் ஆவர். 

பிரான்சில் தொழிலாளர்களின் செங்கொடி

பிரான்சில் 1830ல் நடந்த புரட்சி தொழிலாளர்கள் நடத்திய முதலாவது பெருந்திரள் நடவடிக்கையாகும்; அதில் அன்றைய இணைந்த நிலப்பிரபுத்துவ -- முதலாளித்துவ அரசியல் ஆட்சி அதிகாரம் தூக்கி எறியப்பட்டது. அது முதலாளித்துவம் ஆட்சிக்கு வரச் செய்தது. ஆகஸ்ட் ப்ளாங்கி அதன் முன்னணி தலைவராவார்.  இவ்வாறு முந்தைய சான்ஸ்-க்லோட்ஸ் மரபுரிமையைப் பாட்டாளிகள் முன்னெடுத்துச் சென்றார்கள். பிரான்சின் இரண்டாவது பெரிய நகரான லியான்ஸில் தொழிலாளர்கள் 1831 நவம்பரில் நடத்திய கிளர்ச்சி பிரான்ஸ் நாட்டைக் குலுக்கியது. 30ஆயிரம் நெசவாளர்களும் 70ஆயிரம் பிற தொழிலாளர்களும் நகரின் அனைத்து ஐந்து வாயில்களையும் மறித்து அடைத்துவிட்டனர். வரலாற்றில் முதலாளித்துவத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே முதலாவது ஆயுதம் தாங்கிய மோதல் 1831 நவம்பர் 21ல் நடைபெற்றது. அடுத்த நாள் தொழிலாளர்கள், ‘பணியாற்றி வாழ்வது அல்லது போராடி மடிவது’ என்ற வாசகம் பொறித்த கறுப்புப் பதாகையை ஏற்றினர். இரண்டு நாட்களுக்குப் பிறகு தொழிலாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் நகரம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அரசியல் ரீதியில் அவர்களால் மேற்கொண்டு செல்ல இயலவில்லை – ஆனால் இங்கிலாந்தில் பின்னர் சாசன இயக்கத்தினர் அதனைச் சாதித்தனர். 1834 ஏப்ரல் 9ம் நாள் லியான்ஸில் இரண்டாவது எழுச்சி வெடிக்க கிளர்ச்சியாளர்கள் ‘குடியரசு அல்லது சாவு’ என்று பொறிக்கப்பட்ட சிகப்புப் பதாகையை உயர்த்தினர். 

1832, ஜூன் 25ம் நாள் பாரீஸ் தொழிலாளர்கள் லூயிஸ் பிலிப் ஆட்சியை எதிர்த்து கிளர்ந்தெழ அவர்கள் தடுக்கப்பட்டபோது செங்கொடியை உயர்த்தினர். 

இங்கிலாந்தில் சாசன இயக்கம்

பிரெஞ்ச் இயக்கம் பலபோழ்து ஆயுத மோதலான ஒன்றாக இருந்தபோது, தெளிவான அரசியல் நோக்கங்களோடு, வலிமையான அமைதியான பெருந்திரள் தொழிலாளர் போராட்ட  அலைகள் 1830–40களில் இங்கிலாந்தை அடித்துச் சென்றது. 1834 இறுதியில் தொழிற்சங்களின் ஒருங்கிணைக்கப்பட்டத் தேசிய மகா அமைப்பு (கிராண்டு நேஷனல் கன்சாலிடேட் டிரேடு யூனியன்) 50 லட்சம் உறுப்பினர்களோடு அமைக்கப்பட்டது; 1836ல் லண்டன் உழைக்கும் ஆண்கள் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது; மேலும் ஜனநாயக அஸோசியேஷன் மற்றும் மாபெரும் வடக்கு யூனியன் செயல்படத் தொடங்கின. இவையனைத்தும் ஒன்றிணைந்து சில பத்து லட்சங்களில் தொழிலாளர்கள் திரண்டனர். முதலாவது சாசன இயக்க மாநாடு (சார்ட்டிஸ்ட் கன்வென்ஷன்) 1839 பிப்ரவரியில் நடந்தது. தொழிலாளர் வர்க்கத்தின் முதலாவது பெருந்திரள் அரசியல் அமைப்பு தேசிய சாசன அஸோசியேஷன் ஆகும். அப்போது நிலவிய நிர்வாக முறைமையை எதிர்த்து 1842ல் தொழிலாளர்கள் கிளர்ச்சி செய்ய வெளிப்படையாக வீதியில் இறங்கியபோதும், அந்த கிளர்ச்சிப் போராட்டங்கள் அமைதியாக நடத்தப்பட்டன. 

சாசன இயக்கம் இரண்டு முக்கியமான அரசியல் கோரிக்கைகளை எழுப்பியது: ஒன்று, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நாடு தழுவிய பொதுவான வாக்குரிமை; இரண்டு, பத்து மணி நேர வேலை நாள். தேசிய அளவில் மனுஅளித்தல் (நேஷனல் பெட்டிஷன்) இரண்டாவது மாநாட்டில் பாராளுமன்றத்தில் சமர்பிக்க 33 லட்சம் கையெழுத்துகள் திரட்டப்பட்டன. முதன் முறை பத்து லட்சத்திற்கும் மேல் கையெழுத்துகள் மட்டுமே பெறப்பட்டன. பொது வேலைநிறுத்தங்கள், பேரணிகள், மனு அளித்தல் மற்றும் பாராளுமன்றம் நோக்கிப் பேரணி எனப் போராட்ட இயக்கங்கள் இங்கிலாந்து முழுவதும் அலையலையாய் நடந்தன. இங்கிலாந்தைக் குலுக்கிய    பாராளுமன்றத்தை நோக்கிப் பேரணி அதன் உச்சத்தை 1842ல் அடைந்தது. முதலாளித்துவ ஆட்சி முறைமையை எதிர்த்து முதலாவது முக்கியமான கிளர்ச்சி, வாக்குரிமை கோரிய பாட்டாளிகளின் அமைதியான இயக்கமாகும்.

10 மணி வேலைநாள் சட்டபூர்வமான வழிமுறைகள் மூலம் 1847ல் நிலைநாட்டப்பட்டது.

ஜெர்மன் தொழிலாளர் வர்க்கத்தின் மாபெரும் தேர்தல் வெற்றிகள் 

ஜெர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபி) தொழிலாளர் வர்க்கத்தின் முதலாவது அரசியல் கட்சியாகும். 19ம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதின் தொடக்கத்திலும் அக்கட்சியின் வென்ற வாக்குகள் மற்றும் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் எண்ணிக்கையையும் தொடர்ச்சியாக அதிகரித்து வந்தது. 1878 முதல் 1890 வரை கட்சி தடைசெய்யப்பட்டாலும் அந்நடவடிக்கையால் கட்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஒருமுறை நான்கில் ஒருபங்கும், ஏன் மற்றுமொரு முறை மூன்றில் ஒரு பங்கு வாக்குகளைப் பாராளுமன்றத்தில் பெற்றது. 107க்கும் அதிகமான தினசரி செய்திப் பத்திரிக்கைகளை அக்கட்சி பதிப்பித்து வெளியிட்டது. சோஷலிசம் நோக்கி முன்னேறுவதற்கு வாக்குப் பெட்டி தேர்தல் முறையை அது பயன்படுத்தியதை மார்க்சும் பின்னர் ஏங்கெல்சும் வெகுவாக மதிப்பிட்டு புகழ்ந்துரைத்தனர். ஏங்கெல்ஸ் இன்னுமொரு படி மேலே சென்று அந்த வாக்காளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களைச் சர்வதேசிய தொழிலாளர்கள் இயக்கத்தின் முன்னணிக் காவல் படை என்றழைத்தார்.

அமெரிக்காவில் போராட்டங்கள்

1791ல் பிளடெல்பியாவில் தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி வேலைநாள் கோரி வேலைநிறுத்தமும், 1835ல் அங்கே அனைத்துத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்தனர். அப்போது அவர்கள் உயர்த்திப் பிடித்த பதாகையில் “6 மணியிலிருந்து 6 மணி, இரண்டு மணி நேர உணவு இடைவேளையுடன் 10 மணி நேர வேலை’‘ என்று பொறித்திருந்தனர். 1836ல் எட்டு மணி நேரக் கோரிக்கை எழுப்பப்பட்டது; போஸ்ட்டன் கப்பல் தச்சுத் தொழிலாளர்கள் அதனை 1842லேயே வென்று சாதித்தனர். 1864ல் சிக்காகோ தொழிலாளர்கள் எட்டு மணிநேரக் கோரிக்கையை மையமானதாக வைத்தனர். 

அமெரிக்காவில் பத்து மணிநேர வேலை நாள் சட்டம் 1847ல் நியூ ஹேம்ஸ்பியரில்  முதன் முறையாக நிறைவேற்றப்பட்டது. 1829 தேர்தல்களில் தொழிலாளர்கள் 28 சதவீத வாக்குகளைப் பெற்றார்கள், ஸ்கிட்மோர் என்பவர் நன்கறிந்த தலைவராக எழுந்தார். 1873ல் ஒர்க்கிங்மென் பார்ட்டி இல்லினாய்சிலும், வட அமெரிக்காவின் சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சி 1874லிலும் உருவாயின. தொழிலாளர்களின் ஆர்டர் ஆஃப் நைட்ஸ் என்ற தொழிற்சங்கம் 1869ல் அமைக்கப்பட்டது. 1870களில் முக்கியமாக எட்டு மணி வேலைநாள் கோரி வேலைநிறுத்தங்கள் பல நடைபெற்றன. அமெரிக்கா மற்றும் கனடாவின் தொழில் மற்றும் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பிலிருந்து ‘தொழிலாளர்களின் அமெரிக்கக் கூட்டமைப்பு’ (AFL) 1881ல் உருவானது. 

ஒர்க்கிங்மென் பார்ட்டி, ஜனாதிபதி ஜான்சனைச் சந்தித்து 8மணி வேலைநாள் கோரிக்கையை வற்புறுத்தியது. ஜனாதிபதி உலிசெஸ் கிராண்ட் 1869 மே 19ம் நாள் எட்டு மணி வேலைநாள் பிரகடனத்தை வெளியிட்டார். மெக்கானிக்குகள் மற்றும் தொழிலாளர்கள் போன்ற பெடரல் ஊழியர்களுக்கு அமெரிக்க காங்கிரஸ் 1868 ஜூன் 25ம் நாள் எட்டுமணிநேர சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால் அதனை அமல்படுத்த பெருந்திரள் தொழிலாளர் இயக்கங்கள் நடத்த வேண்டியிருந்தது.  

1870களில் எட்டு மணி நேர வேலைநாள் மையமான கோரிக்கையானது. நியூயார்க் நகரத்தின் ஒரு லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து 1872ல் எட்டுமணி நாள் கோரிக்கையை வென்றனர். அல்பர்ட் பார்சன்ஸ் 1878ல் ‘சிக்காகோ 8 மணி லீக்’ அமைப்பின் செயலாளர் ஆனார். ‘தேசிய எட்டுமணி நேர கமிட்டி’ ஒன்று 1880ல் செயல்படத் தொடங்கியது.  

ஒன்று திரட்டப்பட்ட தொழில்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் ( பின்னர் இந்த அமைப்பு AFL எனப்படும் அமெரிக்கன் பெடரேஷன் ஆஃப் லேபர் என்றானது) 1884லில் ஒரு கருத்தரங்க மாநாட்டில் 1886ம் ஆண்டு மே மாதம் முதல் தேதியை ‘8மணி நேர வேலை நாள்’ என அனுசரிப்பது என முடிவு செய்தது. நைட்ஸ் ஆஃப் லேபர் (the Knights of Labor, உழைப்பின் வீரர்கள் என்று பொருள்படும்) அமைப்பின் உள்ளூர் கிளைகள் அக்கோரிக்கையை ஆதரித்தது.  அமெரிக்க நாடு முழுவதும் 1886 மே 1ம் தேதி வேலைநிறுத்தம் நடத்த தொழிற்சங்கங்கள் விடுத்த அழைப்பு வரலாறு காணாத பிரம்மாண்ட வெற்றி அடைந்தது. (நைட்ஸ் ஆஃப் லேபர் அமைப்பின்) ஆல்பர்ட் பார்சன்ஸ், அவருடைய மனைவி லூசி பார்சன்ஸ் மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகள் 80 ஆயிரம் தொழிலாளர்களுக்குத் தலைமை தாங்கி சிக்காகோ, மிச்சிகன் அவின்யு வீதிகளில் மே 1ம் தேதி பேரணி நடத்தினர். அடுத்து வந்த நாட்களில் அமெரிக்கா முழுவதும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். “எங்கள் படைகளை அறைகூவி அழைக்கிறோம், கப்பல் தளங்கள், கடைகள், ஆலைகளிலிருந்து… அழைக்கிறோம்” என்ற ஜெஜி பால்சார்டின் “எட்டு மணிநேர பாடல்” பின்னே தேசம் ஒன்று திரண்டது.

‘ஒர்க்கர்ஸ் நியூஸ்பேப்பர்’ இதழின் ஆசிரியர் ஆகஸ்ட் ஸ்பைஸ், சிக்காகோ மேக் கார்மிக் ஆலையின் தொழிலாளர்களிடையே மே 3ம் நாள் சொற்பொழிவாற்றினார். வேலைநிறுத்தத்திற்கு எதிரான ஆலையின் கருங்காலிகள் காரணமாக பதற்றம் நிலவியது. போலீஸ் துப்பாக்கியிலிருந்து சீறிய தோட்டாக்கள் நான்கு தொழிலாளர்களைக் கொன்றன. மே 4ம் நாள் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் கூட்டத்தின் இறுதியில் குண்டு ஒன்று வெடித்தது; அது போதாதா, தலைவர்கள் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தி போலீஸ் கைது செய்வதற்கும், தூக்கு தண்டனை விதிக்க நீதிபதிகளுக்கும் ஒரு சாக்குப் போக்கு கிடைத்தது.

எட்டு தலைவர்களைத் தூக்கிலிட தண்டனை : பார்சன்ஸ், ஸ்பைஸ், ஏங்கல், ஃபிஷ்சர், ஃபீல்டன், ஸ்ச்வாப், லிங் மற்றும் ஆஸ்கர் நீபி. முதல் நான்கு பேரும் 1887 நவம்பர் 11ல் தூக்கிலிடப்பட்டனர். இல்லினாய்ஸ் கவர்னர் ஜான் பி ஆல்ட்கெல்டு, நடந்த விசாரணை முழுவதும் தவறானது, ஜோடிக்கப்பட்டது என்பதை வெளிப்படுத்தினார்; மீதம் உள்ள கைதிகளை விடுவித்து, “மனநோய், திணிக்கப்பட்ட ஜூரிகள் மற்றும் ஒருதலைச் சார்பான நீதிபதி” காரணமாகப் பலியானவர்களே தூக்கிலிடப்பட்ட அந்த மனிதர்கள் என்று அவர் குறிப்பிட்டார். 

“எட்டு மணி நேர உழைப்பு, எட்டு மணிநேர மன மகிழ்வு மற்றும் எட்டு மணி நேர ஓய்வு” என்பதைப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் சோஷலிஸ்ட்டுமான இராபர்ட் ஓவன் முதன் முதலான வடிவமைத்தார். 

1888 டிசம்பரில் ஏஎஃப்எல் சங்கம் தொழிலாளர்கள் 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யக் கூடாது என்று முடிவெடுத்தது. 1889ல் இரண்டாவது சர்வதேச அகிலம் 1890ம் ஆண்டு தொடங்கி ஆண்டு தோறும் மே 1ம் தேதியைச் சர்வதேசத் தொழிலாளர் தினமாக அனுசரிக்க முடிவு செய்தது.  

மேதினமும் செங்கொடியும்

நாம் மேலே கண்டதுபோல செங்கொடியின் வரலாறு 1886ம் ஆண்டிற்கும் வெகு காலத்திற்கு முன்பே பழைமையானது; அந்த ஆண்டில் அனைவரும் அறியும் வகையில் பொதுவானதாக ஆனது. உண்மையில் பாரம்பரியமாக ‘உழைப்போர் தினம்’ அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் கொண்டாடப்பட்டு வந்தது. வணிகச் சுழற்சி உள்ளிட்ட சில காரணங்களால் 1884ல் அது மே மாதத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கமாக உழைப்போர் தினம் கொண்டாட்டமான விழா தருணமாகும்; அப்போது சிகப்பு ரிப்பன்கள், பேனர்கள், கொடிகள், தோரணங்களோடு குடும்பம் குடும்பமாக வெளியே வந்து கொண்டாடுவது வழக்கம். 1840கள் தொடங்கியே சிகப்பு பேனர்கள் பயன்படுத்துவது தொடங்கிவிட்டது. 1886ல் நிகழ்ந்த மேதின நிகழ்வுகள் அதனை உலகம் முழுவதும் பரவச் செய்தது. 

இந்தியாவில் முதன்முதலாக மே தினக் கொண்டாட்டம் 1923ல் சென்னையில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தலைமையில் நடந்தது. 1925ல் கராச்சியிலும், 1927ல் பாம்பே மற்றும் 1928ல் பிற இடங்களிலும் விழா நடந்ததாகச் செய்திக் குறிப்புகள் உள்ளன. சென்னையில் செங்கொடிகள் ஏற்றப்பட்டன.

21ம் நூற்றாண்டில் பாட்டாளி வர்க்கம்

1886 மேதினத்திலிருந்து ஒரு முழு வரலாற்று சகாப்தம் கடந்து விட்டது, மேலும் முதலாளித்துவம், சோஷலிசம் மற்றும் தொழிலாளி வர்க்கத்திலும் பெரும் மாற்றம் நடந்துள்ளது. புதிய சமுதாயம் படைப்பதற்குப் போராடும் ஒரு வர்க்கமாகச் சர்வதேசிய தொழிலாளர் வர்க்க இயக்கம் வரலாற்றில் தடம் பதித்துள்ளது. தொழிலாளர் தினம் அல்லது மேதினம் ஒரு சர்வதேசிய விழாவாகியுள்ளது.

தாவிப் பாய்ச்சலில் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் தகவல் தொலைத் தொடர்பு புரட்சி நடைபெற்றுவரும் காலத்தை நாம் கடந்து வருகிறோம்; இப்புரட்சி தொழில்புரட்சியைவிட  உயர் மட்டத்திலும் ஆழத்திலும் நடைபெறுவதாகும். தகவல் தொலைத்தொடர்பு மற்றும் உற்பத்திச் சாதனங்களில்  அடிப்படையான மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே நாம் ஆலைத்தொழில் சகாப்தக் காலத்தில் உருவாக்கிய பல கோட்பாடுகளை மாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளது.  

தொழில்நுட்பவியல் மற்றும் கருவிகளின் இயல்பின் அடிப்படையில் வர்க்கங்கள் மற்றும் சமூகக் கட்டமைப்பு முக்கியமாக நிர்ணயிக்கப்படுகிறது. இன்றைய நாளில் சமூக விழா நிகழ்வுகள் கணினி, எலெக்ட்ரானிக் இணையவழியில் நடைபெறும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சேவைகள் மற்றும் தகவல் வலைப்பின்னல் அடிப்படையில் நகரமயமாதல் புதிய அம்சங்களாகச் சேர்ந்து கொள்கிறது. 

விஞ்ஞானத் தொழில் நுட்பப் புரட்சி (STR), நமது சமூகத்தின் சேர்மானக் கட்டமைப்பையே மாற்றி வருகிறது. தொழிலாளர் வர்க்கத்தின் கட்டமைப்பே (காம்போசிஷன்) தீவிரமான மாறுதல்களுக்கு உள்ளாகி வருகிறது. அதன் வீச்சு அகலமாகிப் பரவலாகும்போது தகவல் பிரிவு, சேவைப் பிரிவு ஊழியர்கள், பொறியாளர்கள், கணினி நிரலர்கள் (ப்ரோகிராமர்ஸ்), மேலாண்மையாளர்கள், கணினி கன்ட்ரோலர்கள் முதலானவர்களையும் தொழிலாளர்களாக உள்ளடக்குகிறது. நடுத்தர வர்க்கம் தொழிலாளி – ஊழியர் போன்ற குணாம்சங்களைத் தழுவுகிறது. 

சமூகம், உற்பத்தியிலிருந்து சேவை மற்றும் தகவல் தொடர்பு நோக்கி அடிப்படையில் மாறிச் செல்கிறது என்று 1970களில் டேனியல் பெல் சுட்டிக் காட்டியுள்ளார். டோஃப்ளர், போஸ்டர், ரீச்ட்டா, ரிஃப்கின் முதலான பல அறிஞர்கள், உருவாகி முகிழ்த்து வரும் பல (மாறுதல்) அம்சங்களைக் குறிப்பிட்டுச் சுட்டிக் காட்டியுள்ளனர். 

தொழிலாளர் வர்க்கத்தில் ஏற்பட்ட அடிப்படையான மாற்றம்: உற்பத்தியிலிருந்து சேவைப் பிரிவுக்கு மாறியது; அதாவது, உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்கள் விகிதாச்சாரம் வீழ்ச்சியடையும்போது சேவைப் பிரிவுகளில் அதிகரிக்கிறது. தொழிலாளர் கட்டமைப்பில் பொருள் உற்பத்தியில் ஈடுபடாத தொழிலாளர்கள் 70 சதவீதத்திற்கும் மேல் உள்ளனர். பல நூறு கிலோ மீட்டர்களுக்கு இந்தியாவில் நூற்பு மற்றும் நெசவு இணைந்த ஆலைகளைக் காண்பது அரிது. (நூற்பு ஆலை தனி, நெசவு ஆலை தனி); பிரம்மாண்டமான பழைய பாணியில் அமைந்த தொழில் மையங்கள் இருந்த இடங்களில் சேவை, எலெக்ட்ரானிக்ஸ், தொலைத் தொடர்பு, தகவல் பரிமாற்றம் முதலிய புதிய மையங்கள் ஏற்பட்டுள்ளன. 

புதிய தொழிலாளர்கள் எழுப்பும் முழக்கங்கள், கோரிக்கைகள், (போராட்டத்) தந்திர உத்திகள் அனைத்தும் வித்தியாசமானவை என்பது தெளிவாகத் தெரிகிறது. புதிய வரலாற்று, அரசியல் மாற்றங்கள் லத்தின் அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ், ஐரோப்பா முதலான நாடுகளில் நிகழ்ந்து வருகின்றன. எதிரே கண்ணில் காணும் காட்சியிலிருந்து பழைய பாணி ஆலைத் தொழிலாளர்கள் மெல்ல மறைந்து அருகி வரும்போது, அந்த இடங்களில் புதிய தொழிலாளர்கள் பதிலியாக அமர்த்தப்படுகின்றனர். 

ஒரு நாளின் பணி நேரம் எவ்வளவு என்ற கேள்வி மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளது. இந்தியா உட்பட சில வலதுசாரி ஆட்சியாளர்களின் தாக்குதல் பணி நேரத்தை நீட்டிப்பதிலும் தொழிலாளர்கள் உரிமைகளை இழக்கச் செய்வதிலும் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது. மேலும் ‘பணி’த் தன்மையிலும் (‘work’) மாற்றங்கள் நிகழ்வதால், கூட்டாக உழைக்கும் பணி நேரத்தை நிர்ணயிப்பதையும் அடையாளம் காண்பதையும் கடினமாக்கி உள்ளது. 

21ம் நூற்றாண்டின் இத்தகைய புதிய கேள்விகளுக்கு விடை கண்டு தொழிலாளி வர்க்கம் தீர்வு காண வேண்டும்.

அனைவருக்கும் மேதின புரட்சி தோழமை வாழ்த்துகள்!    


--தமிழில் : நீலகண்டன், 

NFTE தொலைத் தொடர்பு சங்கம், கடலூர்


No comments:

Post a Comment