Saturday 8 May 2021

சுகாசினி சட்டோபாத்யாய்

 நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து : 

சில சித்திரத் சிதறல்கள் -30

சுகாசினி சட்டோபாத்யாய் :

பன்முகத் திறன் வாய்ந்த கம்யூனிஸ்ட் 

--அனில் ரஜீம்வாலே

--நியூஏஜ் (ஜன.17--.23 இதழ்)

சுகாசினி சட்டோபாத்யாய் வரலாற்றில் நன்கு தெரிந்த பெயர், ‘கம்யூனிஸ்ட் ஆன முதல் பெண்’ என்றும் சொல்லப்படுபவர். பலதுறைகளில் திறமை வாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்; தொடர்ச்சியாகப் பாரம்பரிய கட்டுப்பாடுகள், சாதி தொடர்பான மற்றும் பழமைவாதம் உட்பட்டத் தளைகளை உடைத்தவர். அவருடைய தாய் பரத சுந்தரி தேவி, தந்தை அங்கோர் நாத் சட்டோபாத்யாய் –அவர் ஒரு பிரபலமான விஞ்ஞானி மற்றும் ஹைத்தராபாத் கல்லூரி முதல்வர். தேசிய இயக்கத்தோடு நெருங்கிய தொடர்புடையவர். பிற்காலத்தில் பிரிட்டிஷ் நிர்வாகம் அவரை ஆந்திரா மாநிலத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்றி, கல்கத்தாவில் வீட்டுச் சிறையில் வைத்தது; அங்கேயே அவரது இறுதியும் நேரிட்டது. சரோஜினி நாயுடு, வீரேந்திரநாத் சட்டோபாத்யாய், மிருணாளினி, ஹரிந்திர நாத் மற்றும் பிரபலமான சிலரும் புகழ்வாய்ந்த சட்டோபாத்யாய் குடும்பத்தினராவர். சகோதர சகோதரிகள் எட்டுபேரில் சுகாசினி கடைக்குட்டி இளையவர்.

இங்கிலாந்து, ஜெர்மனி செல்லுதல்

ஆரம்பக் கல்விக்குப் பிறகு அவர் ஏசிஎன் நம்பியாரை 1919ல் மணம் முடித்து இங்கிலாந்து புறப்பட்டார். மேல்படிப்புக்காகச் சுகாசினி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர, நம்பியார் இதழியலை எடுத்துக் கொண்டார். இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஜெர்மனி சென்றனர். அங்கு பெர்லின் பல்கலைக்கழகத்தில் ஜெர்மன் மொழி கற்றதுடன், மொழிபெயர்ப்புப் பணிகளை மேற்கொண்டு ஆங்கிலமும் கற்பித்தார். 

விரைவில் பெர்லினில் சுகாசினி இடதுசாரி மற்றும் மார்க்சிய இயக்கங்களுடன் தொடர்பு கொண்டார். அவருடைய மூத்த சகோதரர் வீரேந்திரநாத் சட்டோபாத்யாய் அவர் மீது ஆழ்ந்த செல்வாக்கு செலுத்தினார். தன் சகோதரரைச் சுகாசினி 25 ஆண்டுகளுக்குப் பிறகு பெர்லினில்தான் சந்திக்கிறார். ஏனெனில் சுகாசினி பிறந்த உடன் வீரேந்திரநாத் பெர்லினுக்குச் சென்று விட்டார். ஆக்னஸ் ஸ்மெட்லே எனும் அமெரிக்கக் கம்யூனிஸ்ட் அவர்களது சந்திப்பை விரிவாக விவரித்துள்ளார். ஜெர்மன் கம்யூனிஸ்ட் மற்றும் காமின்டர்ன் அமைப்புடன் வீரேந்திரநாத் தொடர்பில் இருந்தார். 1920 அக்டோபர் தாஷ்கண்டில் ‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி’யை நிறுவ முயன்று அரைகுறையாய் முடிந்து வெற்றி பெறாதுபோன முயற்சியில் பங்கேற்றவர் வீரேந்திரநாத். பிரபல எழுத்தாளர் சாமசெட் மாம் எழுதிய புகழ்பெற்ற ‘Giulia Lazari’ என்ற தலைப்பிலான கதையில் அவரும் ஒரு முக்கிய பாத்திரம். 

மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டதன் வாயிலாகச் சமூக ஜனநாயக, கம்யூனிச மற்றும் அராஜகவாத பார்வையிலான கருத்துகளோடுச் சுகாசினிக்கு அறிமுகம் ஏற்பட்டது. காந்தியச் செல்வாக்கிலிருந்து விடுபட்ட சுகாசினி மார்க்சியத்தைத் தழுவினார். 

கீழைப் பாட்டாளிகளின் பல்கலைக்கழகத்தில்

விரைவில் ‘மாஸ்கோவின் கீழைப் பாட்டாளிகள் பல்கலைக்கழக’த்தில் சுகாசினி சேர்ந்தார். அப்பல்கலைக் கழகத்தில் சேர உதவும்படி எம்என் ராய்க்கு 1927 ஆகஸ்ட்டில் வீரேந்திரநாத் கடிதம் எழுதினார். எம்என் ராய் உதவிட சுகாசினி அதில் சேர்ந்தார். இந்த நிகழ்வுகளின் ஊடே சுகாசினிக்கும் நம்பியாருக்கும் இடையே ஏற்பட்ட மன விரிசல், மண முறிவில் முடிந்தது. 

இந்தியா திரும்புதல் 

மாஸ்கோவிலிருந்து சுகாசினி 1928 டிசம்பர் 17ல் பம்பாய் வந்தார். அவரோடு உடன்வந்த பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட், லெஸ்டர் ஹட்சின்சன், பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். பம்பாயின் ஹர் என்னுமிடதில் அவர் சுகாசினி மற்றும் அவரது சகோதரி மிருணாளினியுடன் தங்கினார். சுகாசினி ‘ஸ்பார்க்’ (தீப்பொறி) என்னும் இதழில் பணியாற்றினார். அவரோடு அங்கு பணியாற்றிய ஹட்சின்சன் ’நியூ ஸ்பார்க்’ இதழை வெளியிட்டு வந்ததார். விரைவில் மீரட் சதி வழக்கில் 1929ல் கைதானார். மீரட் கைதிகளுக்கு உதவிட சுகாசினி எண்ணிறைந்த பணிகளைச் செய்தார். டாக்டர் அதிகாரி, ஹட்சின்சன், பென் பிராட்லே, பிலிப் ஸ்ப்ராட் மற்றும் பிற கைதிகளைச் சிறையில் சந்தித்ததாகச் சுகாசினி மீரட்டிலிருந்து 1929 ஜூன் 20ல் எழுதினார். இது குறித்து அவர் சரோஜினி, மிருணாளினி மற்றும் பிறரோடு கடிதத் தொடர்பு கொண்டார். அங்கே கீழைப் பல்கலைக்கழகத்தில் மாஸ்கோவில் படித்த அவருடைய சகோதரி சுனாலினி பின்னர் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

இக்காலத்தில் 1929ல் சுகாசினி நவ ஜவான் சபா அமைப்பின் அகில இந்திய மாநாட்டின் தலைமையேற்கவும் செய்தார். 

சிபிஐ கட்சியில் இணைதல்

1929ல் சுகாசினி சட்டோபாத்யாய் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். பின்னாளில் அவர் லிட்டில் பாலே நடனக்குழுவை அமைக்க உதவி செய்து ‘இந்திய மக்கள் நாடக மன்ற’ (IPTA)த்தில் தீவிரமாகச் செயலாற்றினார். 1938ல் ஆர்எல் ஜம்பேகர் என்ற பம்பாய் தொழிற்சங்க மற்றும் கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளரைத் திருமணம் செய்து கொண்டார். ‘சோவியத் யூனியன் நண்பர்கள்’ அமைப்பை (FSU) உருவாக்கும் பொறுப்பைச் சுகாசினி மற்றும் சிலரிடம் கட்சி ஒப்படைத்தது. நாஜி ஜெர்மனி சோவியத் யூனியனுக்குள் அத்துமீறி ஆக்ரமித்த நிகழ்வுக்குப் பிறகு சோவியத் நண்பர்கள் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. நாசிக் சிறையிலிருந்து ஜம்பேகர் 1942ல் விடுதலையானதும் சோவியத் நண்பர்கள் அமைப்புப் பணிகளில் உதவினார். அவர்களோடு ஷாஷி பகாயாவும் இணைந்து கொண்டார்.  அவர் காந்தியின் அறைகூவலை ஏற்று பூனா ஃபெர்குசன் கல்லூரியிலிருந்து விலகி சபர்மதி ஆஸ்ரமம் சென்றார். பின் அலகாபாத்தில் எஸ்ஜி சர்தேசாயுடன் சேர்ந்து கொண்டார். மார்க்ஸியத்தோடு அறிமுகம் ஏற்பட அவர்களுக்கு நேரு உதவினார். 

லாகூரிலும் அமிர்தசரஸிலும் பகாயா மற்றும் டாங் குடும்பங்களோடு சுகாசினி மிகவும் நெருக்கமாக இருந்தார். விமலா பகாயா, ரவி பகாயா மற்றும் சத்யபால் டாங் முதலானோருடன் நெருக்கமாகப் பழகினார். அவர் லாகூருக்குச் சென்று, அங்கே கங்கா ராம் பள்ளியின் முதல்வராக இருந்த  தனது சகோதரி மிருணாளினியுடன் தங்குவது வழக்கம். இரண்டு சகோதரிகளும் தங்கள் வட்டங்களில் (‘பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள்’ என்ற) ‘சர்வதேசிய கீத’த்தை (‘The Internationale’) கற்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். 

1944 பம்பாயில் சோவியத் நண்பர்கள் அமைப்பின் முதலாவது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. சரோஜினி நாயுடு தலைவராகவும் ஜம்பேகர் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சுகாசினி அந்த மாநாட்டை ஒருங்கமைப்பதில் தீவிரமாகச் செயல்பட்டார். 

1947 நியூடெல்லியில் தெற்காசிய உறவுகள் மாநாடு நடைபெற்றது. பண்டித நேருவின் முன்முயற்சியில் சுகாசினியும் ஜம்பேகரும் அம்மாநாட்டிற்கு அழைக்கப்பட்டனர். சரோஜினி நாயுடு தலைமையேற்ற மாநாட்டில் மகாத்மா காந்தியும் உரையாற்றினார். 

அமீர் ஹைதர் கானுக்கு உதவுதல்

மேலே குறிப்பிட்டவாறு இந்தியா முழுவதிலுமிருந்து 32 தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் மீரட் சதி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தனர். அதில் அமீர் ஹைதர் கானின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தாலும் போலீஸ் வலையிலிருந்து அவர் தப்பினார். அப்போதுதான் வெளிநாட்டிலிருந்து திருப்பி இருந்த அவர் சுகாசினியின் இடத்தில் ரிஸ்வியுடன் தங்கியிருந்தார். அங்கே அவர் டாங்கே, காட்டே, அதிகாரி முதலான தலைவர்களைச் சந்தித்தார். அவர் பம்பாயில் தங்கியிருப்பது பாதுகாப்பானதில்லை என்று கூறிய சுகாசினி அவரைக் கோவா செல்லும்படி ஆலோசனை கூறினார். அமீர் ஹைதரிடமும் இத்தாலியக் கடவுச் சீட்டு இருந்ததால் அதைப் பயன்படுத்தி கோவா சென்று, அங்கிருந்து நேப்பிள்ஸ் வழியாக ஜெர்மனி சென்றார். இதற்குச் சுகாசினி அவருக்குப் பெரும் உதவி செய்தார். 

1931ல் நாடு திருப்பிய அமீர் ஹைதரை, பம்பாய் பாதுகாப்பானதில்லை என்பதால், மெட்ராஸ் செல்லும்படி கட்சி பணித்தது. மீண்டும் இப்போது சுகாசினியே பணத்திற்கு ஏற்பாடு செய்து உதவி செய்தது மட்டுமின்றி மெட்ராஸில் அவர் தங்கவும் ஏற்பாடு செய்து தந்தார். அங்கே அவர் கைது செய்யப்பட்டபோது சுகாசினி, அவரது சகோதரி மற்றும் ரணதிவே ஆகியோரை (வழக்கு முதலியவற்றில்) பாதுகாப்பு ஏற்பாடு செய்துதர கட்சி அனுப்பி வைத்தது.

மீரட்டிலிருந்து விடுதலையானதும் அடுத்து ஆற்றவேண்டிய பணிகள் பற்றி ஆலோசிக்க  காட்டே மற்றும் மிராஜ்கர், சுகாசினியையும் ஹைதரையும் சந்தித்தனர். இதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து வேலை செய்ய கட்சி முடிவு செய்தது. சுகாசினியும் காங்கிரஸில் சேர்ந்தார். 1940ல் நடைபெற்ற காங்கிரஸ் ராம்கார்க் மாநாட்டில் கலந்து கொள்ள சுகாசினி ஹைதருக்குப் பணம் தந்து உதவினார். 

வீரேந்திரநாத் சட்டோபாத்யாய் துயர முடிவு 

சுகாசினியும் ஜம்பேகரும் 1947ல் கிழக்கு ஐரோப்பா மற்றும் சோவியத் யூனியன் பயணம் மேற்கொண்டனர். 1937ல் காணாதுபோன வீரேந்திர நாத் குறித்து அவர்கள் விசாரிக்கத் தொடங்கினர். அதே நேரத்தில் அபானி முகர்ஜியும் காணாது போயிருந்தார். அவர்கள் இருவரும்  ஜெர்மனியைவிட்டுப் புறப்பட்ட பிறகு சோவியத் யூனியனில் நிரந்தரமாகத் தங்கினர். பண்டித நேரு பிரதமராக இருந்தபோது அவர்கள் இருவரையும் குறித்துச் சோவியத் அதிகாரிகளுடன் ஏராளமான முயற்சி செய்து விசாரித்ததில் சில உண்மைகள் கசியத் தொடங்கின. இன்று முழு உண்மைகளும் வெளிவந்து விட்டன.

அவர்கள் குற்றமேதும் இழைக்காவிட்டாலும் வீரேந்திரநாத்தும் அபானியும் ஸ்டாலினிய அடக்குமுறைக்குப் பலியாயினர். காரணம் கூறாமல் 1937ல் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அடுத்த வருடம் 1938ல் அவர்கள் வெளிநாட்டுக் கைக்கூலிகள், எதிர் புரட்சியாளர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்! தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்குத் தங்கள் தரப்பை எடுத்துக்கூற அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஸ்டாலின் மரணத்திற்குப் பிறகு அவர்கள் மரியாதை மீட்டெடுக்கப்பட்டது. அடுத்தடுத்த தருணங்களில் சோவியத் அதிகாரிகள் இந்த உண்மைகளை இந்திய அரசுக்குத் தெரிவித்தனர்.

ஆனால் சுகாசினியும் ஜம்பேகரும் விசாரித்த நேரத்தில் வீரேந்திரநாத் இருக்கும் இடமோ அல்லது மற்ற செய்திகளோ அவர்கள் அறியவில்லை.

BTR காலமும் குறுகிய அரசியல் பார்வையின் துயரங்களும்

சுகாசினியும் ஜம்பேகரும் ஐரோப்பாவிலேயே மூன்றாண்டுகள் தடைப்பட்டு தங்க வேண்டி நேரிட்டது; அடுத்த உத்தரவு வரை அவர்கள் இந்தியா திரும்ப வேண்டாம் என கட்சி அவர்களைக் கேட்டுக் கொண்டது. காரணம், சந்தேகம்! சுய அழிப்பு, பிடிஆர் சாகசப் பாதையைப் பின்பற்றியதன் விளைவாய் 1948 –50 காலத்தில் கட்சி அமைப்பு உருகுலைந்து போயிருந்தது. 1951ல் கட்சி புதிய தலைமையின் கீழ் வந்தது. சுகாசினியும் ஜம்பேகரும் இந்தியா திரும்பினர். அக்காலத்தில் அவர்கள் மீது அடிப்படையற்ற சந்தேகங்கள் சுமத்தப்பட்டன. பிடிஆர் தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கப் பட்டிருந்தாலும், சந்தேகச் சூழல் விலகியபாடில்லை.

சுகாசினியும் ஜம்பேகரும் சோவியத் நண்பர்கள் அமைப்பு மற்றும் இந்திய சோவியத் கலாச்சார அமைப்பில் (இஸ்கஸ்) பணியாற்றினர். இந்த அமைப்புகளின் தலைமைப் பொறுப்புக்கு அவர்களை வரவிடாது ஒரு பொலிட் பீரோ உறுப்பினரும் வேறு சிலரும் தடுத்தனர். ஆனால் அவர்கள் கட்சியிலும் கட்சியின் வெகுஜன ஸ்தாபனங்களிலும் அர்ப்பணிப்போடு பணியாற்றினர். பின்னர் ஜம்பேகர் கட்சியின் “யுகாந்தர்” மராத்திய பத்திரிக்கையில் பம்பாயில் பணியாற்றினார். சுகாசினி கடுமையான நோய்க்கு ஆளானார். 

சீனா விஜயம் 

1954ல் சுகாசினியும் ஜம்பேகரும் சீனாவுக்கு விஜயம் செய்தனர். சீனாவின் தலைவர் மாசே துங் அவர்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்த வெகுசிலரில் சுகாசினியும் ஒருவர் எனக் கூறப்படுகிறது. அவர்கள் லியு ஷாவோசியையும் (Liu Shaochi) சந்தித்தனர். 

சுகாசினியின் பணியாற்றும் பாணி

சுகாசினி மிகத் திறமை வாய்ந்த தேர்ந்த பிரச்சாரகரும் அமைப்பாளரும் ஆவார். அவர் தனிப்பட்ட நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு விவாதிப்பதைப் பயன்படுத்தி மக்களிடம் தன் செல்வாக்கைச் செலுத்தி, எண்ணிறைந்தவர்களை –குறிப்பாக இளைஞர்களை – சோவியத் நண்பர்கள் அமைப்பு, இஸ்கஸ் அமைப்பு மற்றும் கட்சிக்குக் கொண்டு வந்தார். அவர் பல கண்காட்சிகள், கருத்தரங்குகள், விவாதமேடை நிகழ்ச்சிகளை அமைத்து, திறமைவாய்ந்த பலர் மீது செல்வாக்குச் செலுத்தி ஈர்த்தார். சர்வதேசத் தொழிலாளர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பாடலான ‘சர்வதேசிய கீத’த்தை (‘The Internationale’) பிரச்சாரம் செய்து பரப்பிய ஆரம்ப காலத் தோழர்களில் சுகாசினியும் ஒருவர். அவருடைய சகோதரர் அதனை இந்தியில் மொழியாக்கம் செய்தார். சுகாசினி அந்தக் கீதத்தை பெர்லினில் பாடியிருக்கிறார்.  

தமது இறுதி ஆண்டுகளில் சுகாசினி சட்டோபாத்யாய் (ஜம்பேகர்) சக்கர நாற்காலியில் முடக்கப்பட்டார். 1973 நவம்பர் 26ம் நாள் முற்போக்கான அந்த வீர மங்கை இயற்கை எய்தினார்.

காசினியில் சுகாசினி புகழ் ஒளிவீசிப் பறக்கட்டும்! 

           என்றும் இசைப்போம் அவருக்குப் புகழ் அஞ்சலி!

--தமிழில் : நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment