Tuesday 18 May 2021

இந்தியாவுக்கு மார்க்ஸ், அம்பேத்கர் இருவரும் தேவை

 

இந்தியாவுக்கு மார்க்ஸ், அம்பேத்கர் இருவரும் தேவை

--டாக்டர் யுகல் ஜெ ராயலு

“இதுவரையான தத்துவ ஞானிகள் உலகை வியாக்கியானம் செய்தார்கள். கேள்வி இப்போது எப்படி மாற்றுவது என்பதுதான்!” – காரல் மார்க்ஸ்

இந்தியா ஒரு தனித்துவமான நாடு, இதில் ‘பொங்குபல நதிகளெல்லாம் புகுந்து கலந்து ஒன்றாய்.. கங்குகரை காணாத கடல்’ போல வேறுபட்ட கருத்துகள் மற்றும் தத்துவங்கள் தம்முள் கலந்து ஓர் அற்புதமான எண்ணங்களின் விரி வானத்தின் ஓவியத் திரையாய் காலங்காலமாக நம்மை வழிநடத்துகிறது. பன்முகம் என்பதே இந்திய சமூக – கலாச்சார அடையாளத்தின் மதிப்புமிக்க பகுதி. 

ஆழமான ஜனநாயக உணர்வோடும் ஒவ்வொரு பிராந்தியமும் அதனதன் சமூக கலாச்சார அடையாளங்களோடும் இன்றைய இந்தியா, நெடுந்தூரம் கடந்து வந்திருக்கிறது. உலகத்தின் எங்கிருந்தும் வரும் தத்துவப் போக்குகள் மற்றும் சிந்தனை எண்ண ஓடைகளுக்கு இந்தியா எப்போதுமே திறந்த மனதோடு இருந்து வருகிறது. நமது அரசியலமைப்புச் சட்டமும் அதனையே பிரதிபலிக்கிறது. ஆனால் தத்துவச் சிந்தனைகளை இந்தியத் தத்துவம், அயல் நாட்டுத் தத்துவம் (இந்தியத்துவம் அல்லாதது) என்று தவறுதலாகச் சிலர் பிளவுபடுத்துகின்றனர். அத்தகைய எண்ணம், உண்மையில் தனித்துவமான இந்தியப் பண்பாட்டு உணர்வுக்கு எதிரானது; ஏனெனில் நம்முடைய பழம்பெரும் ஞான நூல்கள் ஜகத் குறித்தும், உலகமே ஒரு குடும்பம் என்னும் ‘வசுதைவத குடும்பகம்’ (மகா உபநிஷத்) குறித்தும் பேசுகிறது. அவை கூறும்போது, நல்ல கருத்துகள், சிந்தனைகள் –அதன் பிறப்பிடம் குறித்து கவலைப்படாது – நம்முள் வந்து ஒன்று கலக்கட்டும், மேலும் மலர்ச்சிக்கு அது தவிர்க்க முடியாது என்று வலியுறுத்துகிறது: ‘ஆ னோ பத்ர க்ரத்வோ எந்து விஸ்வதா’ (மேன்மையான சிந்தனை கருத்துகள் எல்லா திசைகளிலிருந்தும் வரட்டும்) என்பது ரிக் வேதத்தின் 1.89.1வது வாக்கியம்.

மார்க்சும் அம்பேத்கரும் 

‘காலத்தின் மணல்வெளியில் பெரும் ஆளுமைகள் தங்கள் தடங்களைப் பதித்துச் செல்கிறார்கள்’ என்பது புகழ்பெற்ற வாக்கியம். நீண்டகாலமாக மனித குலம் அவர்களின் தளர்வற்ற முயற்சிகளாலேயே முன்னேறி வருகிறது. மாற்றமும் வளர்ச்சியும் ஓர் இரவில் மந்திரத்தால் நடந்துவிடுவதில்லை. மனிதர்களின் தொடர்ச்சியான பாடுகளாலேயே வளர்ச்சி சாத்தியமாகிறது.

இந்தியப் பாட்டாளி வர்க்கம் மார்க்ஸ், அம்பேத்கர் என்ற இரு பெரும் சிந்தனையாளர்களின் செல்வாக்கிற்கு ஆட்பட்டது. தொழிற்சங்கங்கள் மார்க்சைத் தங்களின் வழிகாட்டும் ஒளிவிளக்காக வரித்துக் கொண்டன; சமூகத்தின் விளிம்புநிலை பிரிவு மக்களைக் கைதூக்கிவிடும் அமைப்புகள் அண்ணல் அம்பேத்கரைத் தங்கள் அடையாளமாக்கிக் கொண்டன. 

உலகின் வேறு எந்தப் பகுதிகளையும் போலவே இந்தியாவிலும் தலைமுறை தலைமுறையாக உழைக்கும் வர்க்கத்தின் தலைவர்கள் மார்க்சியத்தால் ஊக்கமும் உற்சாகமும் பெற்றனர். நாட்டின் அனைத்து மொழிகளிலும் மார்க்சிய இலக்கியங்கள், நூல்கள் மொழிபெயர்க்கப் பட்டன; மார்க்ஸ், மார்க்சியம் குறித்த நூல்கள் இல்லாத நூலகம் எதுவும் இம்மண்ணில் இல்லை.

அதுபோலவே டாக்டர் பி ஆர் அம்பேத்கர் குறித்து எண்ணாமல் இந்தியாவை நினைத்துப் பார்க்க முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவுக் குழு தலைவராக இருந்து அண்ணல் அம்பேத்கர் நவீன இந்தியாவைக் கட்டமைப்பதற்கான சாத்தியமான அனைத்து எண்ணங்களையும் திட்டமிட்டு அரசியலமைப்புச் சட்டத்தில் உட்பொதிந்து பொறித்துள்ளார்!

  உலகின் மிகச் சிறந்த எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை –சமத்துவம், அனைவருக்குமான நீதி மற்றும் மதச் சார்பின்மை கோட்பாடுகளைச் சாசனத்தின் ஆன்மாவில் செதுக்கிய அரசியலமைப்புச் சட்டத்தை -- இந்தியா பெற்றிருக்கிறது என்பதில் ஐயமில்லை.

மிக நீண்ட சமய மரபுகள் மற்றும் நம்பிக்கைகளின் வரலாற்றைக் கொண்டதாயினும், இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம், மனித வாழ்வு குறித்த தனது அணுகுமுறையைப் முழுமையாகப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தோடு, மனித வாழ்வு மற்றும் சமுதாயம் குறித்து நவீன விஞ்ஞான புரிதல்களின் அடிப்படையில் கொண்டிருக்கிறது. 

உலகம் மற்றும் சமூகம் குறித்த பொருள்முதல்வாத விளக்கத்தின் மாக்சிய கோட்பாடுகளை நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை பிரதிபலித்து ஒளிவீசுகிறது. எனவேதான் அது, எந்தவித மதச் சடங்காச்சாரம், சமய அடையாளங்கள் மற்றும் சமயம் சார்ந்த விளக்கங்களிலிருந்து தன்னை விலக்கியே வைத்துள்ளது. 

இந்திய மக்களை அரசாட்சி செய்யத் தொடங்கிய முதல் நாளிலிருந்தே பெண்களும் பாட்டாளிகளும், சமூகத்தின் அனைத்து பிற பகுதியினரைப் போலவே சமூக மற்றும் அரசியல் வாழ்வில் சம உரிமை அளிக்கப்பட்டார்கள். ஒரு தலித் குடும்பத்தில் பிறந்த அவமானங்களை அனுபவித்துத் துன்பப்பட்ட காரணத்தால் எந்த ஒரு சமூகத்திலிருந்தும் வெறுத்தொதுக்கி வைக்கப்படும் வலிகளையும் வேதனைகளையும் டாக்டர் அம்பேத்கர் நன்கு உணர்ந்திருந்தார். மக்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ சமூகத்திலிருந்து ஒதுக்கிப் பிரித்து வைக்கும் அனைத்துச் சாத்தியப்பாடுகளையும் அவர் நீக்கினார்; மேலும் அரசியலமைப்புச் சட்டத்தில் முகவுரையில் அவர் சமத்துவம், நீதி மற்றும் மதச்சார்பின்மை கொள்கைகளைப் பொருத்தி வைத்தார்.

அவர்களின் போதனைகளை நினைவூட்டிக் கொள்வது இருவருக்குமே பொருத்தமான புகழ் வணக்கம் செலுத்துவதாய் இருக்கும், அதுவும் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் அது மிகப் பொருத்தமான புகழஞ்சலியாகும்.

காரல் மார்க்சின் வாழ்வும் பணியும் 

 மார்க்ஸ் 1818 மே 5ம் நாள் ஜெர்மன் (அப்போதைய புருஷ்யா) நாட்டின் டிரியர் நகரில் பிறந்தார். பல்கலைக்கழக மாணவராக அவர் இருந்தபோது புகழ்பெற்ற ஜெர்மன் தத்துவவாதி ஹெகல் சீடராக இருந்தார்; பின்நாட்களில், ஹெகலின் இயக்கவியல் தத்துவத்தை மேலும் வளர்த்து இயக்கவியல் பொருள்முதல்வாதமாகத் தன் தத்துவத்தை நிறுவினார். மார்க்ஸின் வழிமுறை ஆழமான விஞ்ஞான அடிப்படையில் அமைந்தது; அதன் காரணமாக --விஞ்ஞான உண்மைகள் விஞ்ஞானத்தின் பிற பிரிவுகளுக்கும் பொருந்துவது போலவே -- மார்க்ஸியத் தத்துவம் உலகளாவிய பொருத்தப்பாடு பெற்றுள்ளது. 

முதலீடுகளின் முழுமையான கட்டமைப்பு மற்றும் அது செயல்படும் முறையை மார்க்ஸ் ஆழமாகக் கற்றறிந்து, உலகப் புகழ்பெற்ற “மூலதனம்” (தி கேப்பிடல், ஜெர்மன் மொழியில் ‘தாஸ் கேப்பிடல்’) என்ற நூலை எழுதி உலகுக்கு அளித்தார். மனிதகுல நாகரீகத் தோற்றத்தின் துவக்கம் முதலான உற்பத்தி நிகழ்முறைகளின் அடிப்படை கொள்கையை விளக்கினார். உற்பத்தி உறவுகள் மாறும்போது சமூகத்தின் அமைப்பும் மாறுகிறது என அவர் விளக்கினார். கருவிகளில் ஏற்படும் மாற்றம், (ஒட்டுமொத்தமாக வர்க்க சமூக அமைப்பு என்று அழைக்கப்படும்) சமூகத்தின் மேல்கட்டுமானத்தில் மாற்றங்கள் விளைய ஏதுவாகிறது என்பதை விஞ்ஞானிகளும் ஏற்கின்றனர். உற்பத்தி கருவிகளின் வளர்ச்சிக்கும் மனித சமூகப் பரிணாமத்திற்கும் இடையேயான உறவை மார்க்ஸ் கண்டுபிடித்து வெளிக்கொண்டு வந்தார்.

உற்பத்தியில் தொழிலாளர்களின் உழைப்புச் சக்தி, மனிதகுல நாகரீகத்தை வடிவமைப்பதில் வகித்த உச்சபட்ச பங்கை மிகத் திறமையாக மார்க்ஸ் எடுத்துரைத்தார். அந்த உழைப்புச் சக்தியைப் பற்றியும், அவர்கள் உழைத்துக் குவிக்கும் பொருட்களின் “உபரி மதிப்பு” குறித்தும் பேசினார். பெரும்பான்மையான மக்கள் கூட்டத்தின் ஏழ்மைக்கும் சமூகத்தின் ஒரு சிலர் கைகளில் செல்வம் குவிவதற்குமான காரணத்தின் புதிரை விடுவிப்பதில் அவர் வெற்றி பெற்றார். 

விஞ்ஞானப் பொருள்முதல்வாதத் தத்துவமாக மார்க்ஸ் பிரச்சாரம் செய்த கோட்பாட்டின் மூன்று கூறுகள், இயக்கவியல் பொருள்முதல்வாதம், அரசியல் பொருளாதாரம் மற்றும் விஞ்ஞான சோஷலிசம் ஆகும். மார்க்சியத்தின் எதிரிகள் இம் மூன்று கூறுகளைப் பற்றியும் அதன் முக்கியத்தும் மற்றும் இந்தப் பெரும் சிந்தனையாளர் அதற்களித்த பங்களிப்புகளையும் அறிய மாட்டார்கள். 

இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்பது நமது உலகத்தைப் பொருள் சார்ந்த உலகியல் ரீதியில் புரிந்து கொள்வது. மார்க்சியத்தின் விஞ்ஞான ரீதியிலான அடிப்படையின் காரணமாகவே பெரும்பாலான மதத்தலைவர்களும் மதநிறுவனங்களும் மார்க்சியத்தை எதிர்க்கிறார்கள். இந்த நேரத்தில்தான் சார்லஸ் டார்வின் ஆப்ரிக்காவுக்கான தனது பயணத்தை மேற்கொண்டு பல்வேறு உயிரினங்களையும் அவற்றின் பரிணாம வளர்ச்சி மாற்றத்தையும் ஆய்வு செய்தார். புகழ்பெற்ற அவரது நூல் 1860ல் வெளியானது; மார்க்சின் இணை பிரியாத நண்பர் பெடெரிக் ஏங்கல்ஸ் மனிதர்களின் பரிணாமத்தைக் கண்டறிந்தார்.  டார்வின் மதத் தலைவர்களால் நீண்ட காலம் அடியோடு மிகக் கடுமையாக எதிர்க்கப்பட்டார். இயக்கவியலின் அடிப்படையில் உதித்ததே பரிணாமத்தற்கான விஞ்ஞான முறை; அதனோடு இயற்கையும் சமூகமும் இணைந்த வரலாற்று நிகழ்முறை சேர்ந்து கொண்டது. இவ்வாறு வரலாற்றுப் பொருள்முதல் வாதம், மனிதகுல சமூகத்தின் பயணத்தை, அது பல்வேறு காலகட்டத்தின் ஊடாகப் பயணித்து மனித சமூகத்தை வடிவமைத்ததில் விளைவித்த மாற்றங்களை விளக்குகிறது. அதுதான், இயக்கவியல் விதிகள் சமூக பொருளாதார பரிணாமத்தில் அமலாக்கப்படுவது என்பது.  

அரசியல் பொருளாதாரம் மார்க்சியத்தின் வெடி மருந்து, முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள் எவரும் அதனைச் சந்திக்க ஒருபோதும் விரும்புவதில்லை. மனிதகுல வரலாற்றில் அது ஒரு திருப்புமுனை, பொருட் செல்வ உற்பத்தியின் உண்மையான இரகசியங்களை அரசியல் பொருளாதாரம் மனித குலத்தின் முன் முதன் முறையாக எடுத்து வைத்தது. வளர்ச்சியின் முழுமையான நிகழ்முறையில் உழைப்பின் பங்களிப்பு உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டது, அதன் பிறகே “நலவாழ்வு அரசு” என்ற கோட்பாடே பிறந்தது.

உண்மையாகப் பார்க்கும்பொழுது அவர், மனிதகுல வாழ்கை குறித்தான அனைத்துப் பரிமாணங்களையும் ஆழமாக, அதே நுண்மான் நுழைபுலத்துடன் ஆராய்ந்தார்; அவற்றைப் போதிய ஸ்தூலமான சான்றாதாரங்களுடன் எழுதியுள்ளார். பரந்து விரிந்த மார்க்சின் எழுத்துக்களிலிருந்து மார்க்ஸ் ஒரு சமூக விஞ்ஞானி, கோட்பாட்டாளர் மற்றும் பொருளாதார நிபுணர் என்பதைச் சுலபமாக நாம் புரிந்து கொள்ள முடியும். தனது உற்ற தோழர் பெடரிக் ஏங்கெல்ஸ் உடன் இணைந்து “கம்யூனிஸ்ட் அறிக்கை”யை 1848ல் வெளியிட்டபோது மார்க்சுக்கு வயது 30 மட்டுமே. அரசியல் பொருளாதாரம் குறித்த அவரது தியரி உலகின் மிகப் பெரிய பனிமலையை உருட்டிவிட்ட தாக்கத்தை உண்டாக்கியது; ஏழ்மை மற்றும் செல்வக் குவிப்பு குறித்த அதுவரையிலான அனைத்து புரிதல்களையும் சுக்கல் சுக்கலாக உடைத்தெறிந்தது. ‘கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணங்கள் இவை என்னும் அறிவுமிலார்’ என்ற நிலையிலிருந்து முதன் முறையாக மக்கள் தங்கள் ஏழ்மைக்கான உண்மையான காரணத்தை அறிய முடிந்தது. 

மார்க்ஸ் இந்தியா குறித்தும் எழுதியுள்ளார். 1857 சிப்பாய் கலகம் என்று எல்லோரும் குறிப்பிட்ட போது அவரே முதன் முறையாக அதனை “இந்தியாவின் முதலாவது சுதந்திரப் போர்” என்று அழைத்தார். ஆங்கிலேயர்கள் அமைத்த இரயில்வே பாதைகளைக் குறித்து எழுதும்போது அதுவே அவர்களின் சாம்ராஜ்யத்தை எதிர்காலத்தில் ஒருநாள் மூடுவதற்காக அவர்கள் தோண்டும் இடுகாட்டுப் படுகுழி என்றார். (எவ்வாறெனில், அந்த ரயில்வே இந்தியாவையும் சுதந்திரப் போராட்டத்தையும் ஒன்றிணைத்தது). சாபகேடான இந்திய சாதிய முறைமையை “உறைந்து போன வர்க்கச் சமூகம்” என அவர் வர்ணித்ததன் பொருள், அந்த முறைமையில் எந்தவிதமான மாற்றமும் சாத்தியமில்லாத ஒன்று என்பதே; காரணம் அச்சமூகத்தில் மனிதனின் சமூக அந்தஸ்து அவன் அல்லது அவளின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுவதே.

இறந்த தன் குழந்தைக்குச் சவப்பெட்டி வாங்கவும் வக்கற்று வறுமையில் வாழ்வைக் கழித்த மார்க்ஸ்தான் உலகெங்கும் உள்ள ஏழை உழைப்பாளி மக்களுக்கு, நம்பிக்கை ஏதுமற்ற மக்களுக்கு நம்பிகையை அளித்து, கம்யூனிஸ்ட் அறிகையில் அறைகூவி அறிவித்தார்:

“உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்! நீங்கள் இழப்பதற்கு ஏதுமில்லை, பசி பட்டினி ஏழ்மை என்ற அடிமைச் சங்கிலிகளைத் தவிர! நீங்கள் வெல்வதற்கான பொன்னுலகம் உண்டு!”

டாக்டர் அம்பேத்கர் வாழ்வும் பணியும்

இந்த நிகழ்முறையை மேலும் முன்னெடுத்துச் சென்ற டாக்டர் பி ஆர் அம்பேத்கர் ஒரு முறை, “மக்களுக்கான அதிகாரம்தான், உண்மையில் அதிகாரம்” என்று செம்மாந்து உரைத்தார். 

டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் மத்திய இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள சிறிய மாவ் நகரின் அம்பாவாதே என்ற கிராமத்தில் ஏழ்மையான தலித் குடும்பத்தில் பிறந்தார். அந்தக் காலங்களில் தலித் சிறுவர்கள் பள்ளிக் கூடங்களில் படிக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் அம்பேத்கரின் தந்தை பிரிட்டீஷ் இராணுவத்தில் பணியாற்றியதால் தன் குழந்தைகளுக்கான கல்வியைத் தர எவ்வாறோ முயன்று படிக்க வைத்தார்.

 அவரது 14வது குழந்தையான பீம்ராவ், உயர்சாதி மக்களின் கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்தே கல்வியைப் பூர்த்தி செய்தார். பள்ளியில் உயர்சாதி மாணவர்கள் பீமாவுடன் (இளம்வயதில் அவர் அப்படித்தான் அழைக்கப்பட்டார்) வகுப்பறையைப் பகிர்ந்து கொள்ள மறுத்தனர். வகுப்பின் தண்ணீர் பானையைத் தொட அனுமதி மறுக்கப்பட்டதால் நாள் முழுவதும் தாகத்தோடே நடைவழியில் உட்கார்ந்து வகுப்பறை ஜன்னல் வழியே பாடங்களைப் படித்தார். இது எவ்வாறாயினும், அவரது ஆசிரியர்கள் அவரைப் பெரிதும் உற்சாகப்படுத்தினர். பின்னர் இந்தியத் தாயின் புதல்வர்களில் மிகமிக கல்வி கேள்விகளில் உயர்ந்ததொரு புதல்வனாக கொலம்பியா பல்கலைக் கழகத்திலிருந்து (முனைவர்) டாக்டர் பட்டத்தையும், லண்டன் பொருளாதாரக் கல்விக் கூடத்திலிருந்து D.Sc எனும் ஆய்வறிஞர் பட்டத்தையும் பெற்றார்.  

தனது வாழ்நாளில் டாக்டர் அம்பேத்கர் சுமார் ஐம்பதாயிரம் நூல்களுக்கு மேல் படித்துள்ளார் என்பார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவு குழுவின் உறுப்பினர்களான கற்றறிந்த பல அறிஞர்களுடன், அக்குழுவின் தலைவராக டாக்டர் அம்பேத்கர் பணியாற்றி அரசியலமைப்புச் சட்டத்தை இறுதிசெய்தார். அவரது உழைப்பால் உருவான அரசியலமைப்புச் சட்டம், காலத்தின் சோதனைகளைத் தாண்டி, அதன் மதிப்புறு நல்ல அம்சங்களுக்காகப் புகழப்படும் ஒன்றாகச் செம்மாந்து நிற்கிறது. இன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் உலகத்தில் தலைச்சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. 

அவரது புகழ்பெற்ற மொழிதான், “சமுதாய மக்களின் ஒன்றிணைப்பு இல்லாமல், அரசியல் ஒற்றுமையைச் சாதிப்பது முடியாத ஒன்று.”

 தலித் பிரிவினருக்கு (சூத்திரர்கள், தீண்டத்தகாதோர்) மறுக்கப்பட்ட சமஸ்கிருத மொழியைக் கற்று பாண்டியத்தோடு விளங்கிய அம்பேத்கர் வேதங்களையும் மனுஸ்மிருதியையும் கட்டுடைத்து மூடப்பட்ட அதன் மாயத் திரையை நீக்கி அம்பலப்படுத்தினார். மனித மாண்பைக் குலைத்து, குறிப்பாகப் பெண்களையும் தலித்களையும் கீழ்மைப்படுத்தி, கல்வி கற்பதிலிருந்து அவர்களை விலக்கி வைத்த மனுஸ்மிருதியை எரிக்கும் நெஞ்சுரம் அவருக்கு இருந்தது.

சமூகத்தில் நிலவும் அநீதிகளுக்கு எதிராகத் தம் வாழ்நாள் முழுவதும் அண்ணல் அம்பேத்கர் தொடர்ந்து போராடி வந்தார். அனைவருக்குமான சமத்துவமான உரிமை கோரி 1927 டிசம்பரில் மகத் என்ற இடத்தில் அவர் நடத்திய சத்யாகிரகம் புகழ்பெற்றது. அந்தப் போராட்டம் இயற்கை ஆதாரங்களிலிருந்து சுத்தமான தண்ணீரைப் பெறுவது உள்ளிட்ட மனித உரிமைகளுக்கானது. அந்த இயக்கத்தின்போது டாக்டர் அம்பேத்கர் முன்மொழிந்த பின்வரும் தீர்மானங்களிலிருந்து அவரது நோக்கங்களையும் இலட்சியங்களையும் புரிந்து கொள்ள முடியும்: அனைத்துக் குடிமக்களுக்கும் சமத்துவம், அனைவரது மனித உரிமைகளுக்கும் மதிப்பளிப்பது, மக்களுக்கு அதிகாரம், அனைவருக்கும் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, தொழிலாள வர்க்கத்திற்கு, உழைப்பிற்கு மரியாதை.

“எந்தவொரு நாடும் தனது மிக ஏழைகள் மற்றும் நலிந்த சிறுபான்மையினரை எவ்வாறு நடத்துகிறது என்பதை வைத்தே தீர்மானிக்கப்படும்” என அவர் பிரகடனம் செய்தார். அனைத்து பெரும் ஆளுமைகள் போலவே அம்பேத்கரும் மலைபோல எழுதிக் குவித்தார். பலதுறை சார்ந்த விரிந்த பல்வேறு பொருள் பற்றிய அவரது எழுத்துகளில் சில வருமாறு: தீண்டத்தகாதோரின் துயரங்கள், மகர் மற்றும் அவர்களது தேசம், மொழிவாரி மாநிலங்கள், சாதியை ஒழிப்பது, அரசும் மைனாரிட்டிகளும், இந்தியப் பிரிவினை (1940), இந்துயிசத்தின் புதிர்கள், புத்தரும் அவரது தம்மபதமும் (1950).

தமது வாழ்நாள் முழுவதும் (தலித் மக்களுக்கு நியாயம் பெற வேண்டி) இந்து சமுதாயத்தைச் சீர்திருத்த முயன்று பார்த்த பிறகு இறுதியாக டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு விலகினார். 1956ம் ஆண்டு அக்டோபர் 14ம் நாள் தமது இரண்டு லட்சம் ஆதரவாளர்களோடு அவர் நாக்பூரின் புகழ்பெற்ற தீக்‌ஷா பூமியில் புத்தமதத்தைத் தழுவினார். இந்து மதத்தின் கொடுமையான சாதிய ஒடுக்கு முறையின் அடிமைத் தளையிலிருந்து லட்சக் கணக்கான விளிம்புநிலை தலித் மக்களை அவர் விடுவித்தார்.

இந்தத் தேசத்தின் ஆண்களும் பெண்களும் விடுதலை பெற கல்வி அறிவு பெறுதலே முதன்மையான முக்கியத்துவம் உடையது எனக் கருதினார் டாக்டர் அம்பேத்கர். இந்திய மக்களுக்கு அவர் வழங்கிய மந்திரம், “கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய் ”

வரலாற்றையும் சமூக நிலைகளையும் விளக்க மார்க்சும் அம்பேத்கரும் விஞ்ஞான முறைகளையே பின்பற்றிய பொருள்முதல்வாதிகள். பழைய சமூக அமைப்புகளைப் பிரித்தெறிந்து புதிய சமூகத்தை நிர்மாணிக்க விரும்பியவர்கள். இருவருமே கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை தந்து மனிதர்களிடையே பாலினம் உட்பட எல்லாவித சமத்துவத்திற்காக நின்றவர்கள். 

சூழும் உலக நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள மார்க்ஸ் “இயக்கவியல்” கோட்பாட்டை முன்வைத்தார். அவர் தனக்குமுன் இருந்த பொருள்முதல்வாத அறிஞர்களின் படைப்புகளின் மீது தொடர்ந்து தனது ஆய்வுகளை நடத்தி மனித சமூக வளர்ச்சியின் பல்வேறு அம்சங்களை விளக்க விஞ்ஞான முடிவுகளை வந்தடைந்தார். அப்படி வந்ததுதான் ‘வரலாற்றுப் பொருள்முதல் வாதம்’; அந்தக் கோட்பாட்டைக் கொண்டு மனிதகுல சமூகம் மிகவும் புராதன நிலையிலிருந்து மிகவும் முன்னேறிய நிலைக்குப் பரிணாமம் அடைந்ததை அவர் நமக்கு விளக்கினார். இதனை விளக்கும்போது, ‘மனிதன் கடவுளால் தனியாகப் படைக்கப்பட்ட ஒரு மிருகம்’ என்ற நிலைபாட்டை உடைய இறையியல் கோட்பாடுகளுக்கு மார்க்ஸ் சவால் விடுத்தார். டார்வினைப் போலவே மார்க்சும் மனிதன் என்பவன் (கடவுளால் படைக்கப்பட்டவன் அல்ல, மாறாக) இயற்கை பரிணாமமாக, இயற்கை சக்திகளாலும் மனிதனின் சொந்த தாக்குப் பிடித்தல் மற்றும் போராட்டத்தால் வடிவமைக்கப்பட்டவன் என்றே கருதினார்.  

குடிமக்கள் விஞ்ஞான மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளவும் விஞ்ஞான பகுப்பாய்வின் மூலம் சமூகத்தைப் புரிந்து கொள்ளவும் டாக்டர் அம்பேத்கர் அழைப்பு விடுத்தார். அனைத்துவிதமான மூட நம்பிக்கை மாய மந்திரச் சக்திகளையும் அவர் நிராகரித்தார்; அத்தகைய கோட்பாடுகளைக் கேள்வி கேட்டு வாழ்நாளெல்லாம் அவர் பொருள்முதல்வாதியாகத் திகழ்ந்தார். டார்வின் கோட்பாட்டைப் பின்பற்றி டாக்டர் அம்பேத்கரும் இனங்கள் அல்லது சாதிகளுக்கு இடையே எவ்வித பாகுபடுத்தலையும் நிராகரித்தார். இந்த அம்சத்தைப் பொருத்தவரையில் மார்க்சும் அம்பேத்கரும் ஒரே பக்கம் நின்றனர். 

மார்க்ஸ், பாட்டாளிகளை ஒன்று சேரவும் அனைத்துவித பொருளாதாரச் சுரண்டலும் அற்ற புதிய உலகைப் படைக்கப் போராடவும் அழைத்தார். அவரது புதிய சமூகம் ‘சோஷலிச சமுதாயம்’ என அழைக்கப்படுகிறது. டாக்டர் அம்பேத்கர் அரசு சோஷலிசத்தை (ஸ்டேட் சோஷலிசம்) ஆதரித்தார். உற்பத்திச் சாதனங்கள் அரசின் உடைமையாய் இருப்பதை அவர் ஆதரித்தார். இவ்வகையிலும் அவர்கள் இருவரும் மீண்டும் ஒரே பக்கத்தில். 

பொருளாதாரப் புரட்சியைத் தவிரவும், இந்தியாவில் சமூகப் புரட்சிக்கு டாக்டர் அம்பேத்கர் அழைப்பு விடுத்தார்; சமூகப் புரட்சியின் மூலம்தான் சாதிய முறைமையின் இரும்புச் சுவர்களைத் தகர்த்துச் சமத்துவ அடித்தளத்தில் ஒரு சமூகத்தைக் கட்டமைக்க முடியும் என்றார். அத்தகைய சமூகப் புரட்சியைக் கல்வியின் மூலம் கொண்டுவர விரும்பினார். மார்க்சும் அவரைப் பின்பற்றியவர்களும் ஜனநாயகப் புரட்சி குறித்து எழுதினார்கள்; அரசியல் புரட்சியின் காரணமாய் விளைந்த உற்பத்தி உறவுகளில் ஏற்படும் மாறுதல்களுக்குப் பிறகு ஜனநாயகப் புரட்சி தவிர்க்க முடியாதது. உற்பத்திச் சாதனங்கள் சோஷலிசமயமானதற்குப் பிறகு சுரண்டல் முடிவுக்கு வரும் என மார்க்சியவாதிகள் நம்புகிறார்கள். தொழிலாளர் கைகளில் பொருளாதார அதிகாரம் வந்தால், தானே சுரண்டல்களின் அனைத்துச் செயல்முறைகளும் உடைந்து நொறுங்கும். 

இந்திய நிலைமைகளைப் பொருத்தவரை, (அரசியல் மூலமாக) ஒரு பொருளாதாரப் புரட்சியோடு ஒன்றிணைந்த சமூகப் புரட்சி, சாதிய முறைமையின் அச்சுறுத்தல்களை ஒழிக்கத் தேவைப்படுகிறது என்று நாம் கூறலாம். இதன் பொருள் இந்தியாவில் மார்க்ஸ் மற்றும் அம்பேத்கர் இருவரும் நமக்குத் தேவை. இந்தியாவில் தொழிலாளர்கள் என்றால் அது தலித்கள் மற்றும் ஆதிவாசிகளையும் உள்ளக்கியது; அவர்கள் பொருளாதாரச் சுரண்டல் மற்றும் சமூக அந்தஸ்து மறுப்பு இரண்டினாலும் துன்பப்படுகிறார்கள்.  

சிந்தனைகளில் ஒரே போன்ற ஒத்ததன்மைகள் பல இருப்பினும் மார்க்சியம் அம்பேத்கரியம் இரண்டிற்கும் இடையே ஓர் அம்சத்தில் வேறுபாடு உள்ளது. அது மதம், சமயம் குறித்தானது! புரட்சிப் பாதையில் சமயக் கோட்பாட்டு நூல்களால் ஆகப் போகும் உதவி யாதொன்றும் இல்லை என்பது மார்க்ஸ் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களின் நம்பிக்கை. ஒரு பொருள்முதல்வாதச் சிந்தனையாளராக மார்க்ஸ், ஏனைய அனைத்து விஞ்ஞானிகளைப் போலவே, அனைத்து அற்புதங்கள் மற்றும் இயற்கை இயல்பு தாண்டிய மாய மநதிர நிகழ்வுகளை நிராகரித்தார். மார்க்ஸ் மற்றும் மார்க்சியவாதிகளைப் பொருத்தவரையில் சமயம் என்பது, புரட்சிப் பாதையில் எவ்விதப் பொருத்தமோ சம்பந்தமோ இல்லாத, அதிக பட்சம் ஒரு தனி நபரின் சொந்தத் தேர்வு, அவ்வளவுதான்.  

சமயம் குறித்து டாக்டர் அம்பேத்கர் வேறுவிதமான கருத்தைக் கொண்டிருந்தார். பொருள் முதல்வாதியாக இருந்த போதிலும், அவரைப் பின்பற்றுபவர்களுக்காக இந்தியாவில் டாக்டர் அம்பேத்கருக்கு, ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக, ஒரு மதம் தேவைப்பட்டது. மூவாயிரம் ஆண்டுகளாக இந்து சமூகத்தில் தலித்கள் அனைத்துவித மதச் சடங்குகளிலிருந்தும் ஒதுக்கித் தள்ளி வைக்கப்பட்டனர். (தலித்களைச் ‘சூத்திரர்’கள், அதாவது தீண்டத்தகாதோர் என்றழைத்தனர்). இந்தியாவில் மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாக இங்கு இல்லை. ஆலையத்திற்குள் நுழைவது என்பது தலித்களைப் பொருத்தவரை மிகப் பெரிய போராட்டமாக இருந்து வருகிறது. கல்வி மறுக்கப்பட்ட சூழ்நிலையில், சமூக மறுப்புக்கு ஆளான இம்மக்களுக்குப் பொருள்முதல் வாதக் கண்ணோட்டத்தில் இந்த உலகைப் புரிந்து கொள்வது சிரமம். பிராமணிய இந்து சமூகம், சமூக அமைப்பை அவ்வாறுதான் கட்டமைத்துள்ளது; அதில் சூத்திரர்கள் மதம் சார்ந்த பழக்க வழக்கங்களில் ஈடுபட அனுமதிக்கவில்லையாயினும், எப்போதும் அவர்கள் பிராமணர்கள் நடத்தும் சடங்குகளின்படியே நடத்தப்பட்டார்கள்! பிராமணிய இந்து சமூக அமைப்பு அத்தகையது.

இத்தகைய மத அடிமைத்தன விலங்குகளை டாக்டர் அம்பேத்கர் உடைத்தார். நவீனக் கல்வி, பொருள் முதல்வாதப் பகுப்பாய்வை செய்யும் சக்தியை அவருக்கு வழங்கியது. பரந்து விரிந்த எண்ணிக்கையிலான பாட்டாளிகள் மீது ஒரு சிறு இனக்குழு மேல்சாதியினர் செலுத்திய ஆதிக்கத்தை உடைக்க டாக்டர் அம்பத்கருக்கு விஞ்ஞானப் புரிதல்களுக்கான கருவிகள் செயலாற்றல் தந்தன.  

தலித் மக்களுக்கு நியாயமும் சமத்துவமும் பெற வேண்டி இந்து சமுதாயத்தைச் சீர்திருத்த இந்து மத அமைப்புகளின் தலைவர்களைச் சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்ட பிரிவினர் அவரோடு எதையும் அனுசரிக்க மறுத்தது. இறுதியாக டாக்டர் அம்பேத்கர் எதிர்த்துக் கிளர்ந்தெழுந்து, சாதி அடிப்படையிலான சமத்துவமின்மை மற்றும் அநீதியை ஒழிக்க, பெரும் ஆதரவாளர்களோடு இந்து மதத்தை விட்டு விலகினார். 1956ம் ஆண்டு அக்டோபர் 14ம் நாள் அவர் நாக்பூரின் புகழ்பெற்ற தீக்‌ஷா பூமியில் தமது இரண்டு லட்சம் ஆதரவாளர்களோடு புத்தமதத்தைத் தழுவினார். இந்து மதத்தின் கொடுமையான சாதிய ஒடுக்கு முறையின் அடிமைத் தளையிலிருந்து லட்சக் கணக்கான விளிம்புநிலை தலித் மக்களை அவர் விடுவித்தார். இந்தியாவில் பௌத்தத்தை மீண்டும் மலரச் செய்தவர் என்ற பெருமை நியாயமாக டாக்டர் அம்பேத்கருக்கு வழங்கப்பட்டது.

உண்மையில் டாக்டர் அம்பேத்கரே “மார்க்ஸா அல்லது புத்தரா?” என்ற ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு மார்க்சியதிற்குப் பதிலாக ஏன் பௌத்தத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பதை அதில் விளக்கியுள்ளார். அந்தக் கட்டுரை மிகவும் ஆர்வத்தைத் தூண்டக் கூடியது. மார்க்சியம் ஒரு மதமல்ல. பௌத்தமோ (கடவுள் அற்ற) ஒரு மதம். பிறகு ஏன் அம்பேத்கர் இந்தப் புத்தகத்தை எழுதினார்? தன் ஆதரவாளர்களுக்கு இதைத் தெளிவுபடுத்த விரும்பி, “ஒரு பொருள்முதல்வாதியாக, விஞ்ஞான மனோபாவம் உடைய மனிதராக இருந்தும் ஏன் பௌத்தத்தைத் தேர்ந்தெடுத்தார் எனில், சனாதன இந்துயிசத்திற்கு எதிரான ஒரு மதமாக அதைத் தேர்ந்தெடுத்தேன்” என்று அவர் கூறினார்.

ஆனால் அரசியல் வெளியைப் பொருத்த அளவில் அவருக்கு மார்க்சியத்தோடு எந்தப் பிரச்சனையும் இல்லை. 

“சமூக அமைப்பில் தவிர்க்க முடியாத பின்விளைவாக அதிகாரப் போட்டிகளையும் வர்க்கத்தையும் புத்தர் அங்கரித்தபோதும், தனிநபர் ஆன்ம ஈடேற்றம் அடைவதில் கவனம் குவிப்பதையே அவர் தேர்ந்தெடுத்தார்” என்று டாக்டர் அம்பேத்கர் தனது காட்மண்டு உரையில் மேலும் விளக்கியுள்ளார். 

வர்க்கப் போராட்டத்தின் பிரச்சனைகளைக் கையாளுதல், பொதுச் சொத்து மற்றும் தனிச் சொத்து குறித்தான பிரச்சனைகள், உலக ஒழுங்கு மறுகட்டமைப்பு மீதான பார்வைகள் போன்ற மார்க்சியத் தத்துவத்தின் அடிப்படையான சில கருதுகோள் நம்பிக்கைகள் அப்படியே இறுக்கமாகவும் பொருத்தப்பாடு உடையதாகவும் நீடிக்கிறது என்பதை டாக்டர் அம்பேத்கர் ஒப்புக் கொள்கிறார். 

நாம் என்ன செய்ய வேண்டும்?

தொகுத்துக் கூறுமிடத்து, ஒரு வர்க்க சமூகத்தில் பிரிவினைகள் இருப்பது முதலாளித்துவ வர்க்கத்திற்கு மிகவும் உவப்பான ஏற்புடையதாக உள்ளது என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். சமூகத்தின் மையத்திலிருந்து விலக்கி வைத்து, எப்போதும் உழைப்பாளர்களைக் கைகட்டி இருப்பவர்களாக வைத்திருக்க உலகம் முழுவதுமுள்ள முதலாளிகள் மதம், பிராந்தியம் மற்றும் மொழி அடையாள வேறுபாடுகளைப் பயன்படுத்தி வருகிறார்கள்; மிக கவனமாக அவர்கள் ஒருபோதும் கிளர்ச்சி செய்ய எழுந்துவிடக் கூடாது என்பதையும் பார்த்துக் கொள்கிறார்கள். 

இந்தியப் பாட்டாளிகள் இந்த அபாயத்தின் உண்மை பற்றி விழிப்புடன் இருத்தல் வேண்டும். சகல வடிவங்களிலான சுரண்டல்களையும் எதிர்த்த போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையே உயர்ந்தபட்ச முக்கியத்துமுடையது. இந்தியா பல்வேறு வேறுபாடுகளின் பூமியாக இருப்பதால் தொழிலாளர் வர்க்கத் தலைவர்கள் அனைத்து பிளவுபடுத்தும் அரசியலிருந்து விலகி இருக்க இது குறித்து எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

மார்க்ஸ் மற்றும் அம்பேத்கர் குறித்த விவாதத்தைப் பாட்டாளிகளின் ஒற்றுமை என்ற வெளிச்சத்தில்தான் பார்க்க வேண்டும், நிச்சயம் வேறுமாதிரியாக இருந்துவிடக் கூடாது. பாட்டாளி வர்க்கப் புரட்சி குறித்த மார்க்சிய கருத்துகள், சாதியப் பிளவுபடுத்தல்களை, பிரித்துவைத்தலை ஒழிக்க வேண்டும் என்பதற்கான அம்பேத்கரின் சமூக மாற்றச் சிந்தனை கருத்துகளோடு ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். ஒன்றன் பின், ஒன்றை அடுத்து ஒன்றல்ல; ஏக காலத்தில்! 

கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலான சுதந்திர இந்திய அனுபவம் ஒரு முக்கிய பாடத்தை நமக்குக் கற்பித்துள்ளது; சிகப்பும் நீலமும் ஒன்று சேர வேண்டும்; சுரண்டல்காரர்களை வீழ்த்த மார்க்சியமும் அம்பேத்கர் கருத்துகளும் ஒன்றாய் வரவேண்டும். அவ்வாறு ஒன்றுபடவில்லை எனில், சுரண்டல்காரர்கள் வலிமையானவர்கள் நினைவில் கொள்க. பிளவுபட்ட தொழிலாளர் வர்க்கம் ஒருபோதும் முதலாளித்துவத்தை வீழ்த்த முடியாது! மார்க்ஸ் மற்றும் அம்பேத்கரைப் பின்பற்றுபவர்கள் தம்முள் ஒற்றுமையை ஏற்படுத்த இயலவில்லை எனில், வரலாறு அவர்களை மன்னிக்காது. எந்தச் சக்திக்கும் முன்னால் நமது ஒற்றுமை அசாத்திய வலிமையானது!

தொழிலாளர் வர்க்க ஒற்றுமை என்றும் வாழ்க!

--நன்றி : நியூஏஜ் (மே16—22) இதழ்

--தமிழில் : நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர்

 

No comments:

Post a Comment