Wednesday 26 May 2021

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 32பாலாஜி ஹட்டர்: ஆர்எஸ்எஸ்--லிருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு

 நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து : 

சில சித்திரத் சிதறல்கள் -32

பாலாஜி ஹட்டர்: ஆர்எஸ்எஸ்--லிருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு 

--அனில் ரஜீம்வாலே

--நியூஏஜ் (பிப்.14 --20)

பாலாஜி ஹட்டர் என்று புகழார்ந்து அறியப்படும் கோபால் முகுந்த் ஹட்டர், இந்திய மற்றும் சர்வதேசியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஒரு அசாதாரணமான ஆளுமை; ஆர்எஸ்எஸ் அமைப்பை உதறி ஸ்பானிஷ் உள்நாட்டுப் போரில் கலந்து கொண்டவர், போர்க்களத்திலிருந்து இந்தியா திரும்பியதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தவர்.

ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர்

கோபால் முகுந்த் ஹட்டர் 1902ல் தற்போது மத்தியப் பிரதேசத்தில் உள்ள மண்ட்லா என்னுமிடத்தில் பிறந்தார். அவருக்கு நான்கு வயது இருந்தபோது உதோஜி என்ற பிராமண விதவை ஒருவரால் தத்து எடுக்க வேண்டி நாக்பூர் அழைத்து வரப்பட்டார். நாக்பூர், மோரீஸ் கல்லூரியில் படித்துப் பெண்கள் மிஷன் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். 1920ல் மாணவர் தலைவரானார். அவருடைய இளமைக்காலம், கல்வி குறித்து அதிகம் தெரியவில்லை. அவருடைய மனைவி மனோரமா.

ஹட்டர் தனது தொண்டுகளை இந்து மகாசபாவில் தொடங்கினார்; டாக்டர் ஹெக்டேவார் 1925ல் ஆர்எஸ்எஸ் (ராஷ்ட்டிரிய சுயம் சேவக் சங்) அமைப்பைத் துவக்கியபோது, அவர் தேர்ந்தெடுத்த ஒரு சிலரில் ஹட்டரும் ஒருவர். இந்து மகாசபா மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் டாக்டர் பிஎஸ் மூஜ்சே-வுக்கு நெருக்கமானவராக இருந்தார். விரைவில் ஹட்டர், ஆஸ்எஸ்எஸ் அமைப்பின் ‘சர் கார்யவாஹ்’ (பொதுச்செயலாளர்) பொறுப்புக்கு உயர்ந்தார். ஆனால், இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும்போது, ஆர்எஸ்எஸ்-ன் குறுகிய இந்து வகுப்புவாத, குழுவாத செக்டேரியன் போக்கு அவருக்குத் திருப்தி அளிக்கவில்லை.  

விரைவிலேயே அவர் புரட்சிகர இயக்கங்களால் ஈர்க்கப்பட்டு, வங்கத்தின் ‘யுகாந்தர்’ புரட்சி இயக்கத்தோடு  தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். 1931ல் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சேகரிப்பில் ஈடுபட்டதால் ‘பாலகாட் சதி வழக்கில்’ கைதானார். 1935ல் விடுதலையானார். ‘சாவ்தான்’ (கவனம், எச்சரிக்கை எனப் பொருள்படும்) வாரப்பத்திரிக்கையைச் சிலரோடு சேர்ந்து அவர் நாக்பூரிலிருந்து வெளியிட்டார். தொடர்ந்து விரைவாக ஆர்எஸ்எஸ் அமைப்பிலிருந்து விலகத் தொடங்கினார்.  

இதழியல் மற்றும் இராணுவ விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டவராகத் தனது அறிவை விரிவாக்க இங்கிலாந்து பயணமானார். அதற்கு அவருடைய நண்பர்கள் உதவினர்; குறிப்பாகப் பவானி சங்கர் நியோகி ரூ 1000 தந்து உதவினார் – நல்ல செயல்களுக்காக எப்போதுமே நியோகி உதவுவது வழக்கம். 

இங்கிலாந்தில் 

முழு உலகிற்குமே கடுமையான விளைவுகளை ஏற்படுத்திய நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் பாலாஜி இங்கிலாந்து சென்றடைந்தார். இத்தாலியின் முசோலினிக்குப் பிறகு, 1933ல் ஜெர்மனியில் ஹிட்டலரும் நாஜிக்களும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தனர் --ஐரோப்பாவுக்கு, ஏன் உலகம் முழுவதற்கும் இருண்ட காலம் தொடங்கியது. 

இங்கிலாந்தில் இருந்தபோது பிரிட்டிஷ் உளவு அமைப்பான எம்-15, ஹட்டரின் நடவடிக்கைகளை மிக நெருக்கமாகப் பின்தொடர்ந்தது. அவருடைய கடிதப் போக்குவரத்துகளை இடைமறித்தது. பிரிட்டிஷ் இராணுவப் படைவீரர்களின் நம்பிக்கையைப் பெற முயற்சி செய்து இந்தியா முழுவதும் இருக்கும் பிரிட்டிஷ் கன்டோன்மெண்ட் (குடியிருப்பு) பகுதிகள் மீது தாக்குதல் தொடுக்க ஹட்டர் திட்டமிட்டதாக அவர் குறித்து அறிக்கை தந்தது. 

நாடு திரும்பியதும் இந்திய விடுதலைக்காகப் போராட பாலாஜி ஹட்டர் முடிவு செய்தார்.

ஸ்பானிஷ் உள்நாட்டுப் போர் (1937 – 39)

இன்று ஸ்பானிஷ் உள்நாட்டுப் போரைப் பற்றி யாருக்கும் அதிகம் தெரிவதில்லை. 1936 பிரெஞ்ச் மற்றும் இங்கிலாந்து தேர்தல்களில் பாபுலர் முன்னணிகள் ஆட்சிக்கு வந்தன. ஸ்பெயினில் அமைந்த குடியரசு (கட்சி) அரசில் முற்போக்கு, இடதுசாரி மற்றும் ஜனநாயகச் சக்திகள் இணைந்திருக்க பாசிஸ்ட்டுகளை ஒதுக்கி ஓரம் கட்டியது. ஆனால் ஜனநாயக பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்க்க பாசிஸ்ட்டுகள் இராணுவ ஜெனரல் ஃபிரான்ஸிஸ்கோ ஃபிராங்கோ தலைமையில் ஆயுதக் கலகத்தில் ஈடுபட ஸ்பெயினில் உள்நாட்டு யுத்தம் தொடங்கியது. ஃபிராங்கோவை ஜெர்மன் மற்றும் இத்தாலிய பாசிஸ்ட்கள் தீவிரமாக ஆதரித்தனர்; மொரோக்கன் மற்றும் ஸ்பானிய படைகளை மத்திய தரைக்கடல் வழியாக அவர்கள் ஏற்றுமதி செய்து அனுப்பினர். குடியரசு கட்சியின் அரசு 1939ல் தோற்கடிக்கப்பட்டு இராணுவச் சதி மூலம் ஃபிராங்கோ ஆட்சிக்கு வந்தார். 

(‘அறத்தினால் வீழ்ந்து விட்டாய்’ என வீழ்ந்துவிட்ட பெல்ஜியத்திற்குப் பாரதியார் வாழ்த்திசைத்தது போல) ஸ்பெயின் குடியரசுக்கு ஆதரவாக உலகமெங்கும், குறிப்பாக ஐரோப்பாவில் சக்திமிக்க தார்மிக ஆதரவு இயக்கங்கள் வெடித்தெழுந்தன. பல நாடுகளிலிருந்து தன்னார்வத் தொண்டர்கள் ஸ்பெயின் குடியரசு அரசைப் பாதுகாக்கப் போராட முன்வந்தனர். அவர்கள் அனைவரும் இணைந்து அமைத்ததுதான் வரலாற்றில் ‘இன்டர்நேஷனல் பிரிகேட்ஸ்’ என அறியப்படும் சர்வதேச படைப்பிரிவு அமைப்பை ஏற்படுத்தினர்.

ஹென்றி பர்பூஸ், ஜோலியட் கியூரி, ஆல்பர்ட் ஐன்ஸ்டின், ஜார்ஜ் டிமிட்ரோ, ஆன்ரே மல்ராக்ஸ், எர்னஸ்ட் ஹெமிங்வே போன்ற சர்வதேசப் புகழ்பெற்ற மிகப் பெரிய ஆளுமைகள் பலரும் ஸ்பெயின் குடியரசுக்கு ஆதரவாக வந்தனர். பிரிட்டிஷ் மற்றும் பிற கம்யூனிஸ்டுகள், ரால்ப் ஃபாக்ஸ், கிரிஸ்டபர் கட்வெல் போன்றவர்கள் ஸ்பெயினுக்காகப் போராடி உயிர்த் தியாகம் செய்தனர். 

அப்போது காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவராக இருந்த ஜவகர்லால் நேரு குடியரசு ஸ்பெயினுக்கு ஆதரவாக மக்கள் கருத்தைத் திரட்டுவதில் மிகப்பெரிய பங்கு வகித்தார்.

1936 செப்டம்பரிலிருந்து பல்வேறு நாடுகளின் தன்னார்வத் தொண்டர்கள் ஸ்பெயினில் குவியத் தொடங்கினர். சர்வதேசப் படைபிரிவுக்கு இத்தாலிய கம்யூனிஸ்ட் தலைவர் லூய்கி லாங்கோ ‘கமிசார் ஜெனரல்’ எனும் தலைமைக் கமாண்டர் ஆனார்.

இன்டர்நேஷனல் பிரிகேடு அமைப்பில் ஹட்டர்

நிகழ்வுகள் பாலாஜி ஹட்டரை ஆழமாகப் பாதித்தது. பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்கள் மற்றும் பிற பாசிச எதிர்ப்பாளர்கள் ஏற்பாடு செய்த கூட்டங்களில் பங்கேற்றார். (Duchess of Atholl) அதோல் அரசகுலச் சீமாடடியைத் தலைவராகக் கொண்ட இணைந்த தேசியக் குழு, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பிரிட்டனில் அமைக்கப்பட்டது – அதில் ஆங்கிலிகன் சர்ச் (Anglican Church) மதப் பிரிவும்கூட இணைந்து கொண்டது. 

பிரிட்டிஷ் அரசு அவர்கள் பாதையில் பல தடைகளை ஏற்படுத்தியும், அவற்றை மீறி பல்வேறு ஏமாற்றுப் பாதைகளில் பிரிட்டனிலிருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஸ்பெயின் சென்றடைந்தனர். பல்வேறு நாடுகளிலிருந்து சுமார் 32 ஆயிரம் இளைஞர்கள் ஃபிராங்கோவை எதிர்த்தப் போராட்டத்தில் இணைந்தனர். 

ஸ்பெயின் சென்ற ஆறே இந்தியர்களில் ஹட்டரும் ஒருவர். 1937 அக்டோபர் 17ல் அங்கே சென்ற ஹட்டர், அல்பாசிட்(டே) நகரில் ஒரு தன்னார்வத் தொண்டராக ‘ஜான் ஸ்மித்’ என்ற பெயரில் கையெழுத்திட்டு இணைந்தார். ஏனெனில் பல நாடுகளும் அப்போது தொண்டராகச் செல்வதைத் தடை செய்திருந்தன. அறுவரில் மற்ற இந்தியர்கள் கம்யூனிச இலக்கிய ஆளுமை முல்க் ராஜ் ஆனந்த் மற்றும் அடல் மென்ஹன்லால், அயூப் அகமது கான் நக்ஸ்பண்டி, மேனுவல் ரோசா பின்டோ எனும் மூன்று டாக்டர்கள், ராமசாமி வீரப்பன் என்னும் ஒரு மாணவனும் ஆவர். 

மென்ஹன்லால் ஸ்பெயினில் கனடாவின் நார்மன் பெத்யூன் என்பவரோடு சேர்ந்து அவரைப் பின்பற்றி ஜப்பான் படைகளை எதிர்த்து சீனா சென்றார். சீனாவிலேயே குடியேறிய அவர் அங்கே 1957ல் தமது 71வது வயதில் இறந்தார்.  நக்ஸ்பண்டி 1947க்குப் பிறகு லாகூரில் மயோ மருத்துவமனை எலும்பு சம்பந்தப்பட்ட மருத்துவத் துறை முதலாவது பேராசிரியரானார்.  

அங்கே அப்போது குறைந்த பட்சம் நான்கு ‘ஜான் ஸ்மித்கள்’ இருந்தனர். அதில் ஒரு ஜான் ஸ்மித்தான ஹட்டரை அடையாளம் காண்பதற்கு அவரை ‘ஈராக்கியன் ஜான்’ என அழைத்தனர்! ஸ்பெயின் செல்லும் வழியில் பிரான்சை அடைந்து, பிரெஞ்சு–ஸ்பானிஷ் எல்லையைப் பைரிநீஸ் மலைகள் வழியாகக் கடந்தார். அந்தப் பயணம் பெரும் சாதனை, மிக மிகக் கடினமான ஒன்றாகும்.

சக்லத்வாலா படை’ என்று பெயரிடப்பட்ட பிரிட்டிஷ் படைப்பிரிவில் சேர்ந்து ஹட்டர் போரிட்டார். போர்க் களத்தில் பல சண்டைகளில் அந்தப் பிரிவு தனித்துவமாகச் சிறப்புற்று விளங்கியது. 15வது படைப் பிரிவான, அமெரிக்கர்கள் ஆதிக்கம் செலுத்திய ‘ஆப்ரகாம் லிங்கன் படையணி’ என்ற பிரிகேடில் அவர் போரிட்டார். அப்பிரிவில் பால்கன் பகுதி மற்றும் (பிரான்ஸ்-பெல்ஜிய எல்லை பகுதியிலிருந்து வந்த) ஃபிராங்கோ பெல்ஜியர்களும் இருந்தனர். 

போராட்ட இயக்கத்தை ஆதரிப்பதற்காகச் சக்லத்வாலாவின் 18வயது மகள் சேக்ரா சக்லத்வாலா, ‘ஸ்பெயினுக்காக இந்திய மாலைப் பொழுது’ என்ற நிகழ்ச்சியை லண்டனில் 1937 மார்ச்சில் ஸ்பெயின் – இந்தியா குழுவின் சார்பாக ஏற்பாடு செய்து நடத்தினார். அதில் கலந்து கொண்டவர்களில் ஜவகர்லால் நேருவும் ஒருவர்; குடியரசு ஸ்பெயின் தேசத்தைப் பாதுகாக்க அதற்கு ஆதரவாக மிகப் பெரிய தீவிரப் பங்காற்றினார். அதற்காக ஜெனரல் என்ரிக் லிஸ்டரின் தலைநகருக்குத் தானே  முன்னின்று ‘முனையிலே முகத்து நின்’றார். மேலும் ஸ்பெயினின் கேடலோனியா பிராந்தியத்தின் பிரிஸிடெண்ட் லூயிஸ் கம்பெனிஸ் அவர்களை நேரு சந்தித்தார்’; அப்போது (பின்னர் இந்திரா காந்தியான) இந்திரா அவரோடு இருந்தார். 

பயிற்சிக்காக ஹட்டர் 1938 பிப்ரவரி 11ம் நாள் வடக்கு ஸ்பெயினின் தரஸோனா சென்றார். பார்சிலோனாவுக்கு 100 மைல் தெற்கே, கட்டலோனியாவின் கண்டேசாவைப் பாதுகாக்க 25வது பிரிவுக்கு அவர் பொறுப்பளிக்கப்பட்டார். படையணியின் தொண்டர்கள் எப்ரோ நதியைக் கடக்க மறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டபோது அவர்களிடையே நேருவும் கிருஷ்ண மேனனும் உரையாற்றினர். இதற்கு முன் நேரு ‘ஸ்பெயினுக்கு உதவுவோம்’ என்ற பேரணியில் ஸ்பானிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டொலோரெஸ் எபர்ரூரியுடன் தோன்றினார். 

ஹட்டர் சிறைபிடிக்கப்படுதல்

பாலாஜி ஹட்டரின் படை பார்சிலோனா நோக்கித் திரும்பிச் செல்லும்போது, ஹட்டர் ஃபிராங்கோவின் வீரர்களால் சிறைபிடிக்கப்பட்டார். அவரது வார்த்தைகளில் சொல்வதானால், அவர் பெருமிதத்துடன் கூறினார்: எங்களது படை கண்டேசாவுக்குப் பின்புறமுள்ள குன்றுகளைச் சிலநாட்கள் துப்பாக்கிகள் துணையோடு தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது, ஆனால் இறுதியில் சுற்றி வளைக்கப்பட்டது.’ கைதான ஒரே இந்தியரான ஹட்டர் ‘போர் கைதி’யானார். மற்றவர்களோடு அவர் சான் பெட்ரோ டி கார்டீனாவில் சிறையிலடைக்கப்பட்டார். மற்றொரு கைதியான இவார் ஹிக்மேன் அவரை ‘ஈராக்கினா நண்பர்’ எனக் குறிப்பிட்டார். ‘கை ரேகை பார்ப்பவர்’ (!) என ஹட்டரைச் சிறைத்தோழர் கார்ல் கெய்சர் குறிப்பிடுவது மேலும் ஒரு புகழ் சிறப்பு. இந்தியச் சுதந்திரப் போராட்டம், காந்தி, நேரு பற்றி சிறையில் ஹட்டர் உரையாற்றுவது வழக்கம். 

பிரிட்டிஷ் பிரிகேடைச் சேர்ந்த உறுப்பினர்களை விடுவிக்கப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசின் மீது அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியது. பிரிட்டிஷ் கைதிகளை அடையாளம் காண ஒரு குழு ஸ்பெயின் சென்றது. குழுவில் ஓய்வுபெற்ற ஒரு கர்னலும் இருந்தார், அவருடைய மகனும் அப்போது ஒரு சிறைக் கைதியாக இருந்தார். அவர் சிறை முகாமைப் பார்வையிட்டு தனது மகனைச் சந்தித்தார்; அவர் பார்த்த ஒரு ‘ஜான் ஸ்மித்’, இந்தியர் போன்று இருந்தார். திரும்பத் திரும்ப விசாரித்தபோது ‘ஜான் ஸ்மித்’, தான் உண்மையிலேயே நாக்பூரிலிருந்து வந்த ஹட்டர் என்பதை வெளிப்படுத்தினார். 

அந்தக் கர்னல்தான் நாக்பூருக்கு அருகே கேம்ப்டீ என்னுமிடத்தில் ஒரு ரெஜிமெண்டுக்குத் தலைமை வகித்தவர் என்பது அபூர்வ ஓர்மை நிகழ்வு! அவர்கள் இருவரும் நாக்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார சொந்த இடத்தின் பழம் நினைவுகளில் மூழ்கினர். கர்னல், பிரிட்டிஷ் சிறைவாசிகள் விடுதலையோடு ஹட்டரின் விடுதலை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார். அதுதான் ஸ்பெயின் சிறையில் நிலவிய சர்வதேசியம்.

விடுதலையானதும் ஹட்டர் பிரிட்டன் திரும்பினார். ஸ்பெயினிலிருந்து திரும்பி வந்த சர்வதேச பிரிகேட் உறுப்பினர்களை வரவேற்க 1938 நவம்பர் 12ல் லண்டனின் வடக்கு தேம்ஸ் நதிகரையில் உள்ள எஸ்எக்ஸ் ஹாலில் இந்திய சுயராஜ் லீக் ஒரு பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது. அந்தக் கூட்டத்தின் சிறப்பு விருந்தினர் கோபால் முகுந்த் ஹட்டர். வரவேற்புக் கூட்ட அழைப்பிதழில் அவரைச் சர்வதேசப் படைப்பிரிவில் இடம்பெற்ற “ஒரே இந்தியர்’‘ எனக் குறிப்பிட்டாலும், உண்மையில் படையில் ஆறு இந்தியர்கள் இடம்பெற்றிருந்தனர். அன்றைய கூட்டத்தின் தலைவர் புகழ்பெற்ற பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் ரஜினி பால்மே தத் (ஆர்பிடி).

இந்தியா திரும்புதல்

ஒரு மாதத்திற்குப் பிறகு பாலாஜி ஹட்டர் 1938ல் பம்பாய் திரும்பியபோது துறைமுகப் பகுதியில் அளிக்கப்பட்ட எழுச்சிமிக்க வரவேற்பில் பெரு எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு சங்கங்கள் மற்றும் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கூட்டங்களை ஏற்பாடு செய்தன. ஸ்பெயினில் அவர் பெற்ற அனுபவம் மற்றும் பாசிச எதிர்ப்பு, மார்க்ஸியத் தத்துவம் முதலியன அவரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமாக அழைத்து வந்தது. முறையாக அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் 1940ல் இணைந்து நாக்பூரில் இருந்து பணியாற்றினார்.  ஸ்பானிய உள்நாட்டுப் போர், இயக்கவியல், வரலாற்றுப் பொருள் முதல் வாதம் பற்றி பல சொற்பொழிவுகளை ஆற்றினார். 

1952க்குப் பிறகு மெல்ல அவர் தீவிர அரசியலில் இருந்து விலகத் தொடங்கினார். 1972ல் ஏ பி பரதனின் ஒரு சகா பெர்லின் விஜயம் செய்தபோது, சர்வதேச பிரிகேடு அமைப்பின் ஒரு மூத்த ஜெர்மானியரைச் சந்தித்தார். மரியாதைக்குரிய அந்த ஜெர்மன் மூத்த வீரர் ஒரு பேட்ஜையும் தையில்மேன் பட்டாலியன் (படைப்பிரிவு) பதக்கத்தையும் ஹட்டருக்காக ஒப்படைத்தார். பல பத்தாண்டுகளைக் கடந்த பிறகும் ஜெர்மன் பிரிகேடியர் ஹட்டரை ஞாபகம் வைத்திருந்தது வியப்பிற்குரியது! ஏபி பரதன் தானே நேரில் சென்று பதக்கத்தை ஹட்டரிடம் நேரடியாகக் கையளித்தார். 

அந்த வீர மகன், கோபால்முகுந்த் (பாலாஜி) ஹட்டர் 1981ல் மறைந்தார். ஸ்பெயின் மற்றும் இந்திய விடுதலைக்காகவும் பாசிசத்தை எதிர்த்தும் போராடிய ஒரு கம்யூனிஸ்ட் போராளியின் சாகசம் நிறைந்த கதை எவ்வளவு வியப்புடையதாக விறுவிறுப்பாக இருக்கிறது! செவ்வணக்கம்

--தமிழில் : நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர்  

No comments:

Post a Comment