Wednesday 19 May 2021

கேடிகே தங்கமணி : பன்முக ஆளுமை நிறைந்த தலைவர்

 


கேடிகே தங்கமணி : பன்முக ஆளுமை நிறைந்த தலைவர்

--அனில் ரஜீம்வாலே

--நியூஏஜ் (ஜன.31—பிப்ரவரி 6)

அனைவராலும் புகழோடு ‘கேடிகே’ என்றழைக்கப்பட்ட கேடிகே தங்கமணி மதுரை திருமங்கலத்தில் 1914 மே 19ம் நாள் பிறந்தார். இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் இப்பகுதி முன்பு மெட்ராஸ் ராஜதானியில் இருந்தது. அவருடைய தந்தை கூழைய நாடர், தாயார் காளியம்மாள். ராலே இந்தியா லிட்., பிரிட்டிஷ் நிறுவனத்திற்காக இந்தோனேஷிய நாட்டின் ஜாவாவிலிருந்து சர்க்கரை இறக்குமதி செய்து ஏகபோகமாகக் குழைய நாடர் ஒருவரே விநியோகிப்பாளராக இருந்து பெரும் லாபம் ஈட்டினார். அது தவிர அவருக்கு திருமங்கலத்தில் ஒன்று, மற்றொன்று தேனி மாவட்டத்திலுமாக இரண்டு டெக்ஸ்டைல் ஆலைகள் இருந்தன.

கல்வி

கேடிகே, திருமங்கலம் கேஎஸ்ஆர் வித்யாலயாவில் பள்ளிக் கல்வியைப் பெற்று பின் 1935ல் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்று கணிதப் பாடத்தில் பிஏ ஹானர்ஸ் பட்டத்தை முடித்தார். அதே வருடம் பிரிட்டனுக்கு உயர்கல்வி பெறுவதற்காகச் சென்று லண்டன் பல்கலைக் கழகத்தின் மிடில் டெம்பிள் சட்டக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கே 1940 ஏப்ரலில் தனது பார்-அட்-லா பட்டத்தைப் பெற்றார். 

பிரிட்டனில் : கம்யூனிசத்தின் செல்வாக்கு

லண்டனில் படிக்கும்போது கேடிகே எண்ணற்ற இந்திய மாணவர்களுடன் தொடர்பு கொண்டார்; அவர்களில் என்கே கிருஷ்ணன், பார்வதி கிருஷ்ணன், இந்திரஜித் குப்தா, ஜோதி பாசு, நிகில் சக்ரவர்த்தி, மோகன் குமாரமங்கலம் போன்றவர்கள் பின்னாட்களில் பிரபலமான கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆயினர். மேலும் எதிர்காலத்தில் பெரும் இந்திய ஆளுமைகளாக விளங்கிய இந்திரா காந்தி, ஃபெரொஸ் காந்தி, டாக்டர் ஏகே சென் முதலான பலரையும் அவர் சந்தித்தார். 

அப்போது இந்திய மாணவர்கள் அமைப்பான இந்தியன் மஜ்லிஜ் அமைப்பில் என்கே கிருஷ்ணன் செயலாளராக இருந்தார். அதன் செயல்பாடுகளில் கேடிகே தீவிரமாகப் பங்கு பெற்று மார்க்சியத் தத்துவத்தோடு இயைந்து கற்றார். லண்டன் காக்ஸ்டன் ஹாலில் 1940 மார்ச் 13 அன்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் மைக்கேல் ஓ‘டயர், பஞ்சாபின் மேனாள் லெப்டினெட் கவர்னரை, (இந்தியப் புரட்சியாளர்) உத்தம் சிங் சுட்ட சம்பவத்தின் சாட்சியமாகக் கேடிகே இருந்தார்.  இந்த டயர்தான் ஜாலியன் வாலா பாக்கில் கூடிய ஆயுதமற்ற அப்பாவி மக்களை 1919 ஏப்ரலில் ‘சுட்டேன் சுட்டேன்’ என்று ரத்த வேட்டையாடிப் படுகொலை செய்தவன்.  

சுபாஷ் சந்திரபோஸ் 1935 –38ல் ஐரோப்பா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அயர்லாந்து டப்ளின் நகரில் கேடிகே அவரைச் சந்தித்தார். அவர் லண்டனுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

இந்தியா திரும்புதல்

இந்தியா திரும்பியதும் கேடிகே மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் 1940 ஜூனில் தன்னை வழக்கறிஞராகப் பதிவு செய்தார். அவர் அனைத்துத் துறை திறமைகளையும் உடைய பன்முக ஆளுமையாளர். நன்றாக ஹாக்கி விளையாடுவார், மெட்ராஸ் ராஜதானியில் சிங்காரவேலர் மற்றும் மற்றவர்களோடு இணைந்து ‘சுயமரியாதை இயக்க’த்தில் தீவிரமாக ஈடுபட்டவர்.  

சிங்கப்பூரில் வழக்குகளை நடத்திக் கொண்டிருந்த வழக்கறிஞர் சி பா ஆதித்தனார் அழைக்க, 1940 ஆகஸ்ட்டில் கேடிகே அங்கே சென்றார். ஒன்னரை ஆண்டுகளுக்கு மேல் அங்கே தங்கி வழங்கறிஞராகப் பணியாற்றினார். அங்கே பணக்கார வணிகரான ஏ ராமசாமி நாடாரின் மகள் வள்ளியம்மாளை (சிபா ஆதித்தனார் மனைவியின் தங்கை) 1941 அக்டோபர் 31ல் கேடிகே மணந்தார்.

அங்கே மலேஷியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டது. 1942 மத்தியில் ஜப்பான் சிங்கப்பூரின் மீது குண்டுவீசித் தாக்கத் தொடங்கியது. இதனால் அந்த இடத்தைவிட்டு நீங்கி கேடிகே தனது மனைவி மற்றும் ஆதித்தனாருடன் சென்னை ராஜதானிக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. இந்தியாவில் மதுரை மாவட்டம் செஷன்ஸ் நீதிமன்றத்தின் வழக்கறிஞரானார்.  

சிங்கப்பூரில் இருந்தபோது வரலாற்றுப் புகழ்மிக்க வியத்நாம் விடுதலைப் போராட்டத் தலைவர் ஹோசிமின் அவர்களைக் கேடிகே சந்தித்தார். வியத்நாம் விடுதலைக்குப் பிறகு, வியத்நாம் அரசின் தலைவராக ஹோசிமின் இந்தியா விஜயம் செய்தபோது ஹோசிமின் கேடிகேயை மீண்டும் சந்தித்தார்.  

1942 இயக்கத்தில்

இந்தியா முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்த 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றவர்கள் மீது கடுமையான வழக்குகள் புனையப்பட்டன. அவற்றை எதிர்த்து அவர்களுக்கு ஆதரவாகக் கேடிகே தீவிரமாகப் பணியாற்றினார். திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை மற்றும் பிற மாவட்டங்களில் எண்ணற்றத் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலியின் குலசேகரப்பட்டினத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசுக்கும் இடையே மோதல்கள் நடக்க, பிரிட்டிஷ் அதிகாரி டபிள்யு லோன் துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதன் பிறகு ஏற்பட்ட குழப்பத்தில் லோன் கொல்லப்பட்டார். அதில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட காசிராஜன், ராஜகோபாலன் இருவருக்கும் ஆதரவாக அந்த வழக்கை கேடிகே எடுத்துக் கொண்டார். அது நினைவில் நிற்கும் வழக்காயிற்று. மாவட்ட மற்றும் உயர்நீதிமன்றங்கள் தூக்கு தண்டனை வழங்கின. அந்த வழக்கில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரபல வழக்கறிஞரும் பார்-அட்-லாவுமான ஏ இராமச்சந்திராவும் போராடினார்.  

அக்காலத்தில் உச்சநீதிமன்றம் இல்லாத நிலையில் இரண்டாவது மேல்முறையீடு பிரிவி கௌன்சில் முன் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கைக் கேடிகே முயற்சியால் புகழ்பெற்ற பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்டும் வழக்கறிஞருமான டிஎன் பிரிட்(DN Pritt) எடுத்துக் கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சியும்  மெட்ராஸ் ராஜதானியின் (மெட்ராஸ் மாகாண) காங்கிரஸ் கட்சியும் கைது செய்யப்பட்ட இருவரையும் விடுதலை செய்யக்கோரி பெருந்திரள் இயக்கங்களை நடத்தின.

இறுதியில் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது, மிகப் பெரிய வெற்றியாகும்.

தொழிற்சங்க இயக்கத்தில்

கேடிகே கம்யூனிஸ்ட் கட்சியில் 1943ல் இணைந்தார். அதற்கு முன்பே மாபெரும் தமிழ் அறிஞரும் காங்கிரஸ் மற்றும் தொழிற்சங்கத் தலைவருமான திரு வி கல்யாண சுந்தரம் (திருவிக), சிங்காரவேலர் போன்றோரின் செல்வாக்கால் தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபட்டிருந்தார். கேடிகே மதுரை பஸ் போக்குவரத்து தொழிற்சங்கத்தை நிறுவினார்; டிவிஎஸ் பஸ் போக்குவரத்து சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; பிரிட்டிஷ்காரருக்குச் சொந்தமான எஸ்ஆர்விஎஸ் பஸ் போக்குவரத்து தொழிற்சங்கத்தின் தலைவரானார். தொழிற்சங்க இயக்கச் செயல்பாடு காரணமாகப் பலமுறை கைது செய்யப்பட்டார். மேலும் கேடிகே தங்கமணி தூய்மை துப்புரவுப் பணியாளர்கள், டெக்ஸ்டைல் மற்றும் கைத்தறித் தொழிலாளர்களை அமைப்புரீதியாகத் திரட்டினார். 

இந்திய தேசிய இராணுவம் (ஐஎன்ஏ) மற்றும் இந்தியக் கப்பல்படை (ஆர்ஐஎன்) எழுச்சி போராட்டங்களுக்கு ஆதரவாகத் தொழிலாளர்கள் குவிந்தனர். 1945 மதுரையில் நடைபெற்ற ஏஐடியுசியின் மெட்ராஸ் பிராந்திய தொழிற்சங்கக் கூட்டமைப்பு மாநாட்டின் வரவேற்புக்குழு தலைவராக கேடிகே செயல்பட்டார். 1946ல் எஸ்ஆர்விஎஸ் பஸ் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தைத் தலைமையேற்று நடத்தினார். பிரிட்டிஷ் மாவட்டக் காவல் கண்காணிப்பு அதிகாரி வேலைநிறுத்தம் செய்ய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தபோது, கேடிகே அவரிடம் போராடிய பிரிட்டிஷ் தொழிலாளர்களை நேரே பார்த்திருக்கிறேன் என்று கூறி நிச்சயம் வேலைநிறுத்தம் செய்வேன் என்றார். கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் போர்ட் அண்டு டாக் துறைமுகத் தொழிலாளர்கள் மற்றும் பொது ஆலைத் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றத் தொடங்கினார். தொழிற்சங்க இயக்கத்தின் மிக உயர்ந்த தலைவரான எஸ் ஏ டாங்கே தலைமையின் கீழ் பணியாற்றிய அவர், ஏஎஸ்கே, எம் கே (கல்யாணசுந்தரம்) போன்ற ஒளிவீசும் தலைவர்களோடும் இணைந்து பணியாற்றினார். மீண்டும் எஸ்ஆர்வி வேலைநிறுத்தத்தில் அவர் கைது செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்தார். 

சோவித் யூனியன் நண்பர்கள் அமைப்பு

மெட்ராஸ் மாகாணத்தில் 1943ல் ‘சோவித் யூனியன் நண்பர்கள்’ (FSU) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. விடுதலைக்குப் பிறகு அந்த அமைப்பு இஸ்கஸ் (இந்தோ சோவியத் கலாச்சார நட்புறவுக் கழகம் ISCUS) என மாற்றப்பட்டது. உலகறிந்த காங்கிரஸ் தலைவரும் தமிழறிஞருமான திருவிக அதன் முதல் தலைவர் மற்றும் பாலன் என்று தோழமையோடு அழைக்கப்படும் கே பாலதண்டாயுதம் அதன் செயலாளர். அதன் முதல் பிரதேச மாநாடு சிபிஐ மற்றும் காங்கிரஸ் இணைந்த பங்கேற்போடு மதுரையில் 1943ல் நடைபெற்றது. வரவேற்புக் குழுவின் தலைவர் கேடிகே தங்கமணி. அம்மாநாட்டில் மதுரை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி எஸ் ஏ பி அய்யர் ஓவியப் புகைப்படக் கண்காட்சி ஒன்றைத் தொடங்கி வைத்தார். பத்தாயிரம் மக்களுக்கும் அதிகமாகப் பங்கேற்ற இம்மாநாடு மிக வெற்றிகரமான மாநாடாக அமைந்தது. 

மதுரை சதி வழக்கு

ப.மாணிக்கம், பி.இராமமூர்த்தி, சாந்திலால், சுப்பையா, எஸ்.கிருஷ்ணமூர்த்தி முதலான தலைவர்களோடு கேடிகேவும் 1946 டிசம்பரில் புகழ்பெற்ற “மதுரை சதி வழக்கு” தொடர்பாகக் கைது செய்யப்பட்டார். நாடு விடுதலை அடைவதற்கு முதல் நாள் 1947 ஆகஸ்ட் 14ல் விசாரணை நடைபெறாமலேயே அனைவரும் விடுவிக்கப்பட்டனர். விடுதலையான தலைவர்களுக்கு மதுரையில் பல்லாயிரம் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

‘BTR’ காலம் 

டிவிஎஸ் மற்றும் எஸ்ஆர்விஎஸ் பஸ் போக்குவரத்துக் கம்பெனிகளில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தைத் தலைமையேற்று நடத்தியதற்காக கேடிகே கைது செய்யப்பட்டு 1948 ஜனவரி 30ல் சிறையில் அடைக்கப்பட்டார். எனவே 1948 பிப்ரவரி- மார்ச் மாதங்களில் நடைபெற்ற கல்கத்தா சிபிஐ இரண்டாவது கட்சிக் காங்கிரசுக்குக் கேடிகே பிரதிநிதியாகத் தேர்வானாலும் அவரால் கலந்து கொள்ள இயலவில்லை. அது பி டி ரணதிவே தலைமையின் கீழ் இடதுசாரி குழுப்போக்கு மற்றும் சாகசப் பாதையைப் பின்பற்றிய காலம். அதனால் மெட்ராஸ் பிராந்தியத்தில் கட்சிக்கு விளைந்த சேதாரம் ஏராளம். கேடிகே மற்றும் 134 சிபிஐ தலைவர்கள் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் ஏ கே கோபாலன், ஏஎஸ்கே அய்யங்கார், பி இராமமூர்த்தி முதலானவர்களோடு அடைக்கப்பட்டனர். 

1950 பிப்ரவரி 11ம் நாள் சேலம் மாவட்ட மத்தியச் சிறைச்சாலையில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 கம்யூனிஸ்ட் கைதிகள் கொல்லப்பட்டனர். ‘வர்க்கப் போராட்ட’த்தைச் சாகசத் தந்திரோபாயங்கள் மூலம் கட்டாயப்படுத்தி நிகழ்த்திக் காட்டுவது என்ற பிடிஆர் அறிவுறுத்தல்களைச் சிறைச்சாலைக்குள்ளேயே நடத்தியதால் வந்த வினை, சிறை அதிகாரிகள் மேலும் முரட்டுத்தனமான அடக்குமுறைகளை அதிகமாக்குவதில் முடிந்தது. அவர்களும் ஏராளமான சேதாரத்தை ஏற்படுத்த விளைந்தது, தேவையற்ற உயிர்பலியும் தனிமைப்படுத்தலும். கேடிகேவும் பிற சிபிஐ தலைவர்களும் வேலூர் சிறைக்குள் தொடங்கிய காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம் 26 நாட்கள் நீடித்தது. சிறை அதிகாரிகள் வன்முறையைக் கைக்கொண்டு ஏற்கனவே உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்த தலைவர்கள் மீது லத்தியால் கடுமையான தடியடித் தாக்குதலை நடத்தினர். கேடிகே தங்கமணியின் இடது கை மற்றும் காலில் மிக மோசமான எலும்பு முறிவு ஏற்பட அவர் பெரிதும் துன்பப்பட்டார்.

1952ல் அவர்கள் விடுதலையான முதல் வாரத்தில் பிராந்திய ஏஐடியுசியின் தலைமையகமான மெட்ராசில் தொழிற்சங்கச் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க கேடிகே அனுப்பி வைக்கப்பட்டார்.

பொதுத் தேர்தல்களில் பங்கேற்பு

1952 பொதுத் தேர்தலில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கேடிகே சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். ஆனால் அதே தொகுதியிலிருந்து 1957 பொதுத் தேர்தலில் வென்றார். பாராளுமன்றத்தில் தொழிலாளர் வர்க்கம் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளைத் திறமையாக எழுப்பி மிகச் சிறந்த பாராளுமன்றவாதியாக அனைவரையும் ஈர்த்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகளை மக்கள் பிரச்சனை தொடர்பாக எழுப்பி தீர்வுபெற உதவியதன் மூலம் பாராளுமன்றத்தின் “கேள்வி நேர”த்தை மிகத் திறமையாகப் பயன்படுத்திய முதல் பாராளுமன்ற உறுப்பினர் என்ற புகழைப் பெற்றார். பொதுத்துறை நிறுவனங்களை ஆதரிப்பது, வங்கி மற்றும் முக்கியமான தொழில் மற்றும் ஆலைகளைத் தேசியமயமாக்குவதை நியாயப்படுத்தி ஆதரித்தார். 1943 முதலாகப் பொதுப் போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களின் நிறுவனத் தலைவராக இருந்த அவர், மோட்டார் டிரான்ஸ்போர்ட் தொழிலாளர் சட்டம் 1961 நிறைவேறுவதற்குக் காரணகர்த்தாவாக இருந்தார். 

1957 சீனாவின் பெய்ஜிங்  (பீக்கிங்) நகரில் நடைபெற்ற உலக தொழிற்சங்கச் சம்மேளன (WFTU) மாநாட்டில் கேடிகே கலந்து கொண்டார். மாசே துங் மற்றும் சீனக் கம்யூனிஸ்ட்கட்சியின் பிற தலைவர்களோடு இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த சீனா விஜயம் செய்த சிபிஐ குழுவில் அஜாய் கோஷ், பூபேஷ் குப்தா மற்றும் பிறரோடு கேடிகே  1961ல் சீனா சென்றார். (அப்போது யாரோடும் கைகுலுக்காத மாசே துங் இந்தியர் என அறிந்து தனது கையைப் பற்றிக் குலுக்கியதைக் கேடிகே வாழ்நாள் முழுவதும் பெருமிதத்தோடு கூறி வந்தார் – தோழர் டி எம் மூர்த்தி சென்ற ஆண்டு டிசம்பர் ஜனசக்தியில் எழுதிய நினைவஞ்சலிக் கட்டுரையிலிருந்து)

டெல்லியில் இருந்தபோது பிரதமர் நேரு திட்டக் குழுவின் ஆலோசனைக் குழுகளில் ஒன்றில் கேடிகே நியமிக்கப்பட அதில் ஓராண்டு திறமையாகப் பணியாற்றினார்.

1971ல் தமிழ்நாடு சட்ட மன்றத்திற்கு மதுரைத் தொகுதியிலிருந்து கேடிகே தேர்வானார். 1971 முதல் 1976 கால கட்டத்தில் தொழிலாளர்கள் விவசாயிகள் கோரிக்கைகளை அழுத்தமாகச் சட்டமன்றத்தில் எழுப்பினார்.

கேடிகே தங்கமணி தமிழ்நாடு ஏஐடியுசி பேரியக்கத்தின் தலைவர், துணைத்தலைவர் பொதுச் செயலாளர் என பல்வேறு பொறுப்புக்களை 50 ஆண்டுகளுக்கும் மேல் அவரது இறுதி மூச்சுவரை நிறைவேற்றினார். அகில இந்திய ஏஐடியுசியின் துணைத் தலைவர்களில் ஒருவராக அவர் பல ஆண்டுகள் இருந்தார்.  

தமிழ் மாநில இந்தியக் கம்யூனிட் கட்சி மற்றும் ஏஐடியுசி ஒரு சிறப்பு மலரை அவரது 80வது பிறந்த நாளையொட்டி வெளியிட்டது. அவருடைய வாழ்முறையைப் பாராட்டிய மார்க்சிய அறிஞர் பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி, கேடிகே தங்கமணியை எளிமையான காந்திய வாழ்முறைக்குச் சொந்தக்காரர், மார்க்சியமும் காந்தியமும் இணைந்த கவர்ச்சிகரமான கலவை எனப் புகழ்ந்துரைத்தார். அவரது மனைவி இறந்த பிறகு, பெரும் கோடீஸ்வரக் குடும்பத்தில் பிறந்த கேடிகே அவர்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகமான சென்னை “பாலன் இல்ல”த்தின் சிறிய அறை ஒன்றிலேயே தங்கினார். 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தினமான டிசம்பர் 26ம் நாள் 2001ம் ஆண்டு கேடிகே தமது 88வது வயதில் மறைந்தார். என்றென்றும் எம் தோழர்கள் நெஞ்சில் நிறைந்தார். 

--தமிழில் நீலகண்டன், 

 என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment