Sunday, 26 October 2025

நியூ ஏஜ் தலையங்கம் -- சுயமரியாதை இயக்கத்திற்கு இது நூற்றாண்டு


 
நியூ ஏஜ் தலையங்கம் (அக். 26 –நவ. 1)

சுயமரியாதை இயக்கத்திற்கு

இது நூற்றாண்டு

வர்க்கங்களால் ஆன சமூகத்தில் ஒரு வர்க்கம், அடியாழத்தில் வாழும் மற்றொன்றின் மீது எப்போதும் ஆதிக்கம் செலுத்தும். வழிகாட்டும் விளக்கைச் சுமப்பவர்கள் அவர்கள், ஆனால் சுமக்கும் அந்த ஜ்வாலை பல நேரம் அவர்களையே எரிக்கும். பாதிக்கப்- பட்டவர்கள் கிளர்ந்து எழுந்து எதிர்க்கத் துணியும்போது, தன்னலவாதிகள் வன்முறையைக் கையில் எடுப்பர். நிலப்பிரபுக்கள் அல்லது முதலாளிகள் யாருக்கு எதிரான போராட்டம் எனினும், அந்த வன்முறை சுரண்டப்பட்டவர்களைக் கட்டுப்படுத்தும் அச்சுறுத்தலாக மாறும். –‘இல்லாதஅவர்கள், உழன்று உழைத்து உருக்குலைந்து ‘இருப்பவர்க்கு வளங்களை வாரிக் குவித்தவர்கள். எனினும் எந்தக் குற்றமும் இழைக்காத போதும்கூட அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அது நமது ஜனநாயகக் குணப் பண்பிற்கு ஓர் அச்சுறுத்தல்; சமூகம் முழுமையும் ஒருங்கிணைக்கப் போராட முயற்சிக்கும்போதே, மக்கள் மத்தியில் உள்ள ஒற்றுமையை அது பிளவுபடுத்தும்.

எனினும், சமூக பொருளாதார இல்லாமையின் கீழ் வாழும் மக்களுக்கு அது தொடர்ச்சியாகத் தீங்கிழைக்கும். இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண பல்வேறு பெரும் ஆளுமைகள் மற்றும் இயக்கங்கள், சமூகத்தில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை உறுதியளிக்கும் நியாயமான முறைமையைத் தேடி, ஈடுபட்டு வருகிறார்கள். அத்தகைய இயக்கங்களில் ஒன்றுதான் சுயமரியாதை இயக்கம். இந்த ஆண்டு அந்த இயக்கம் நூற்றாண்டை நிறைவு செய்கிறது. சுயமரியாதை இயக்கமும் அதன் இலட்சிய நோக்கங்களும் இளம் தொழிலாளர்கள் மற்றும் மாணவர் திறளை ஈர்த்து, செல்வாக்கு செலுத்தி, இறுதியில் சோசலிசம் நோக்கி நகர்த்தியது.

உண்மையில் காலனிய ஆட்சியின் இறுதி 25 ஆண்டுகள் தமிழ்நாட்டில், (பெரியார் தலைமையிலான திராவிட இயக்கத்திற்கு முன்னோடியான) சுயமரியாதை இயக்கம் மற்றும் கம்யூனிஸ இயக்கம் என இரு இயக்கங்கள் மலரக் கண்டது.

மெட்ராஸ் மாகாணத்தில் ஈ வே ராமசாமி பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்திற்கு, முன்னோடி கம்யூனிஸ்டும், சமூக சீர்திருத்தவாதியுமான சிந்தனை சிற்பி எம் சிங்காரவேலர் முக்கியமான கூட்டாளி, 1920கள் மற்றும் 1930களில் அவர்களின் நெருங்கிய நட்பு, சுயமரியாதை இயக்கத்திற்குச் சோசலிச விஞ்ஞான பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தை  உட்பகுத்தியது.

1920களில் காங்கிரஸ் கட்சிக்குள் சிங்காரவேலரும் பெரியாரும் நெருங்கிய கூட்டாளிகள். சோசலிசத் தத்துவக் கருத்துகளைப் பெரியார் ஏற்றுத் தழுவியதில் சிங்காரவேலர் முக்கிய செல்வாக்கைச் செலுத்தினார்; அவர் 1923 மே முதல் நாள் இந்துஸ்தான் லேபர் அண்ட் கிசான் பார்ட்டி (தொழிலாளர் விவசாயிகள் கட்சி)யை மெட்ராஸில் நிறுவியவர்.  சிங்காரவேலர், தந்தை பெரியாரின் குடியரசு தமிழ் வார இதழில் சமூகச் சீர்திருத்தம், விஞ்ஞானம், பகுத்தறிவு சிந்தனை மற்றும் சோசலிசம் குறித்த தலைப்புகளில் கட்டுரைகளை எழுதுவது வழக்கம்

1932ல் தந்தை பெரியாரின் சோவியத் யூனியன் விஜயத்திற்குப் பிறகு அவர், சிங்காரவேலர் மற்றும் பிற சுயமரியாதை செயல்பாட்டாளர்களுடன் ஈரோட்டில் ஒரு கூட்டத்தை

கூட்டினார். அவர்கள் அனைவரும் இணைந்து “ஈரோட்டுத் திட்டம் வகுத்து, இயக்கத்திற்குச் சோஷலிசக் கண்ணோட்டத்தை வழங்க ‘தென்னிந்திய சமதர்மக் (சோசலிஸ்ட்) கட்சி அமைத்தனர்  –அக்கட்சி சிறிது காலமே செயல்பட்டது. அதே ஆண்டு, சட்ட மறுப்பு இயக்கத்தில் இணைந்த சுயமரியாதை இயக்கச் செயல்பாட்டாளர்- கள் பகத்சிங்கின் நெருங்கிய தோழரான பட்டுக்கேஷ்வர் தத் செல்வாக்குக்கு ஆட்பட்டனர். உண்மையான விடுதலைக்கு இட்டுச் செல்ல சோஷலிசம் ஒன்றே வழி என்ற உணர்வை ஜீவானந்தம் மற்றும் பலரிடம் அவர் ஆழப் பதிய வைத்தார். 

அர்ப்பணிப்புள்ள அறிவியல் ஆதரவாளரான சிங்காரவேலர் இயக்கத்திற்கு விஞ்ஞானபூர்வ மார்க்சிய வரையறையை அறிமுகம் செய்தார். அவரது அணுகுமுறை, வெறுமே சடங்குகளைக் கேள்வி கேட்பதற்கு அப்பால் சென்று, சுரண்டல் மற்றும் அநீதியின் (அடிப்படைக் காரணமான) பொருளாதார வேர்களை நாடிச் சென்று தீர்ப்பதாக இருந்தது. இந்தக் காலத்தை ஒட்டிதான் சுயமரியாதை இயக்க செயல்பாட்டாளர்கள் மத்தியிலும் தந்தை பெரியார் ஈவேரா அவர்களிடத்தும் --குறிப்பாக அவரது சோவியத் யூனியன் பயணத்திற்குப் பிறகு அதுவரை-- சீர்திருத்த இயக்கமாக மட்டுமே இருந்த சுயமரியாதை இயக்கத்தின் தன்மையை மாற்ற வேண்டும் என்ற தெளிவான விழைவு இருந்தது. (பின்னரே அரசியல் லட்சிய நோக்கங்கள் அதில் சேர்க்கப்பட்டன) 

அப்பொழுது சிங்காரவேலர் மேற்பார்வையின் கீழ் புதிய செயல் திட்டம் வகுக்கப்பட்டது. பெரியாரின் இடமான ஈரோட்டில் கூட்டம் நடத்தப்பட்டு ‘தென்னிந்தியச் சமதர்மக் கட்சி’ என்ற புதிய கட்சி அமைக்கப்பட்டது. எனினும் அடிப்படையில் அது பழைய இயக்கமாகவே இருந்தது. ப. ஜீவானந்தம் கட்சியின் செயலாளராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

காந்திய கருத்துக்களில் தன்னை நிலைநிறுத்தி தனது அரசியல் வாழ்வைத் தொடங்கியவர் ஜீவானந்தம். வைக்கம் மகாதேவர் ஆலயத்திற்குச் செல்லும் சாலையில் தலித்துகள் நடப்பதற்கு இருந்த தடையை எதிர்த்து, உயர்ஜாதி இந்துக்களுக்கு எதிராக 1924ல் நடைபெற்ற வைக்கம் சத்தியாகிரகத்தில் ஜீவா கலந்து கொண்டார். சுசீந்திரம் ஆலயத்திற்குள் தலித்கள் நுழைவைக் கோரி நடைபெற்ற அதுபோன்றதொரு கண்டனப் போராட்டத்தில், அவர் கலந்து கொண்டார். வவேசு அய்யர் நடத்திய சேரன்மாதேவி ஆசிரமத்தில் தலித்கள் மற்றும் உயர் ஜாதி ஹிந்து மாணவர்களுக்குத் தனித்தனி ஹால்களில் உணவு  பரிமாறப்பட்டதைக் கண்டார். இந்தச் சாதிப் பாகுபாட்டு நடைமுறையைப் பெரியார் எதிர்த்ததை ஆதரித்து அவர் ஆசிரமத்தைவிட்டு வெளியேறினார்.

பின்னர் காரைக்குடி அருகே சிறுவயலில் அருட்கொடையாளர் ஒருவர் நிதியளிக்க நடந்தப்பட்டு வந்த ஆசிரமத்தின் பொறுப்பை எடுத்துக் கொண்டார். ஆசிரம வாழ்க்கை ஏராளமான புத்தகங்களைப் படிக்க அவருக்கு வாய்ப்பை வழங்கியது. இந்த அவசரமத்தில் அவர் காந்தியைச் சந்திக்கும் பேறு பெற்றார். காந்திய முறைகளுடன் உடன்படாது ஜீவா அது குறித்துக் காந்திக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

காந்தி மெட்ராஸ் வந்தபோது அவர் வசம் இந்த கடிதம் இருந்தது, அவர் ஜீவாவைச் சந்திக்க விரும்பினார். (ராஜாஜி) ராஜகோபாலச்சாரியார் காந்தியிடம், ‘நீங்கள் பெயரைக் கூறுங்கள்; அந்தக் குறிப்பிட்ட நபரை இங்கே அழைக்க முடியும் என்றார். காந்தி கூறினார், ‘அவரை இங்கே அழைப்பதில் எனக்கு விருப்பமில்லை; எந்த ஆசிரமத்தில் ஜீவா வசிக்கிறாரோ, அந்த ஆசிரமத்திற்குச் சென்று அவரைச் சந்திக்கவே விரும்புகிறேன் என்று குறிப்பிட்டார். காந்தி சிறுவயல் ஆசிரமத்திற்குச் சென்றபோது, தன் முன் நின்ற 25வயது மதிக்கத்தக்க இளைஞர் ஜீவாவிடம் நீங்கள்தானே ‘அந்தக் கடிதம்எழுதியவர் என்று கேட்டார் –ஜீவா ஆம் என்று பதில் அளித்தார்.

(‘ஆசிரமம் நடத்துகிறீர்களே, உங்களுக்கு என்ன சொத்துஎன காந்தி வினவ, “இந்தத் தேசம்தான் எனது சொத்துஎன்றார் ஜீவா. அதை விரைவாக மறுத்த காந்தி, “இல்லை, இல்லை, நீங்கள்தான் இந்தத் தேசத்தின் சொத்துஎன்று கூறிச் சென்றது நம் நெஞ்சில் நிறைந்த வரலாறு அல்லவா! –மொழிபெயர்ப்பாளர் கூடுதல் தகவல் இணைப்பு)

பின்னர் மெட்ராஸ் மாகாணக் காங்கிரஸ் சோசலிசக் கட்சி 1937ல் அமைக்கப்பட்டபோது ஜீவானந்தம் அதன் முதல் செயலாளர் ஆனார். பிறகு இரண்டு ஆண்டுகளில் இயக்கத்தின் மற்றொரு மூத்த செயல் வீரரான  பி ராமமூர்த்தியுடன்,  ஜீவா  இந்தியக்  கம்யூனிஸ்ட்  கட்சியில்

இணைந்தார். சிபிஐ-யில் தன்னை முதல் உறுப்பினராகத் தமிழ்நாட்டில் இணைத்துக் கொள்வதற்கு முன், ஜீவானந்தம் இந்த முந்தைய இரு இயக்கங்களிலும் தீவிரமாகப் பங்கேற்றார். அவரது தேசப்பற்று அவரைத் தேசிய இயக்கத்தில் கொண்டு சேர்த்தது;
தீண்டாமை மற்றும் சாதி அடிப்படையிலான பாகுபாட்டின் பால் அவரது வெறுப்பு, அவரைச் சுயமரியாதை இயக்கத்தை ஆதரிப்பவர் ஆக்கியது.

சிபிஐயில் இணைந்த பிறகு ஜீவானந்தமும் ராமமூர்த்தியும் மார்க்சியப் பாதையில் ரிக்க்ஷா இழுப்பவர்களையும் ஆலைத் தொழிலாளர்களையும் அமைப்பாகத் திரட்டினார்கள். இதில், எம் ஆர் வெங்கட்ராமன் மற்றும் பி சீனிவாச ராவ் போன்ற தலைவர்கள் உதவினர். மார்க்சிய அடிப்படையில் வலிமையான தொழிலாளர் இயக்கத்தைக் கட்டும் முயற்சிகளில் ஜீவா முன்னணியில் நின்றார். இந்தப் பொறுப்பை முழுமையாக்குவதில் அவரது பேச்சாற்றல் மற்றும் எழுத்தாற்றல் அவருக்கு உதவின. ஆனால் இந்தத் தலைவர்கள் போலீஸ் அடக்கு முறையில் துன்பப்பட்டார்கள் மற்றும் பலமுறை சிறை சென்றார்கள். ஜீவா பதற்றமான இடங்களுக்கும் நேரில் சென்று தொழிலாளர்களின் போராட்ட உணர்வுகளைத் துடிப்புடன் வளர்த்தார். ஆலைத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் சிறு விவசாயிகளையும் தஞ்சாவூர் மற்றும் பிற மாவட்டங்களில் அவர்கள் திரட்டினர். ஆற்றல் மிக்க தங்கள் உரைகளால் ஜீவானந்தமும் ராமமூர்த்தியும் ஆயிரக்கணக்கான மக்களை ஊக்குவித்தனர் .

(அத்தகைய தலைவர்கள் பாடுபட்டு வளர்த்த) நூற்றாண்டு காணும் சுயமரியாதை இயக்கத்தின் விழுமியங்களை உயர்த்தி பிடிப்போம்!

தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ கடலூர்

பின்குறிப்பு :

1925ஆம் ஆண்டு நவம்பர் 21, 22ஆம் தேதிகளில் காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு காங்கிரசின் 31வது மாநில மாநாடு. அந்த மாநாட்டில் பெரியார், ‘பிராமணர், பிராமணரல்லாதார், தீண்டாதார் மூன்று பிரிவினருக்கும் ராஜ்ஜிய சபை, பொது ஸ்தாபனங்களில் அவரவர் சமூக மக்கள் தொகை விழுக்காடு இடஒதுக்கீடு அடிப்படையில் தங்கள் பிரதிநிதிகளைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமை கோரி’ கொண்டுவந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. பெரியார் மாநாட்டைவிட்டு வெளியேறினார். சிலர் இந்த நாளையே சுயமரியாதை இயக்கத்தின் துவக்க நாளாகக் கருதுவதும் உண்டு.

ஆனால், சுயமரியாதை இயக்கத்தின் துவக்க விழாவோ, பொதுக்கூட்டமோ நடக்கவில்லை. இந்த இயக்கம் தோன்றியது குறித்து, 1937ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி குடிஅரசு இதழில் ‘சுயமரியாதை இயக்கம்’ என்ற பெயரில் பெரியார் ஒரு கட்டுரையை வெளியிட்டார். அந்தக் கட்டுரையில் “சுயமரியாதை இயக்கம் என்பதாக ஓர் இயக்கம் 1925ல் என்னால் துவங்கப்பட்டது யாவரும் அறிந்ததேயாகும்” என்று குறிப்பிடுகிறார். ஆனால், அந்த இயக்கத்தின் வரலாற்றை அவர் அந்தக் கட்டுரையில் எழுதவில்லை. ஆகவே இந்த இயக்கத்தின் துவக்கப் புள்ளியாக ஒரு தினத்தைக் குறிப்பிட முடியாது.

பெரியாரின் குடிஅரசு இதழின் முதல் படியை 1925 மே 2-ஆம் நாள் சனிக்கிழமை அன்று திருப்பாதிரிப்புலியூர் சைவத் திருமடத்தின் தலைவர் தவத்திரு ஞானியார் அடிகள் வெளியிட்டார். தனக்கென ஓர் இதழாகப் ‘‘பெரியார் குடிஅரசு இதழைத் துவங்கிய காலகட்டத்தையே சுயமரியாதை இயக்கத்தின் துவக்கமாகக் கொள்ளலாம்" என்கிறார் வரலாற்றுத் துறை பேராசிரியர் ஆ. திருநீலகண்டன். 

எனவே இதையெல்லாம் மனதில் கொண்டு 2025ம் ஆண்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவாகக் கொண்டாடப்படுகிறது.

                                                                                            (இணையத்தில் திரட்டியது)






No comments:

Post a Comment