Saturday, 2 August 2025

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 127 ஏ பி பரதன் – கட்சி புதிய திட்டத்தைத் தொடக்கம் செய்தவர்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 127 

ஏ பி பரதன்

கட்சி புதிய திட்டத்தைத் தொடக்கம் செய்தவர்

                                                –அனில் ரஜீம்வாலே

ஆர்தெந்து பூஷண் ஹேமேந்திர குமார் பரதன், தற்போது பங்களாதேஷில் உள்ள சில்கேட் என்ற இடத்தின் அஜோலி புட்டி ஜெர்ரி என்ற கிராமத்தில் 1925 செப்டம்பர் 25ல் பிறந்தார். தந்தை பெயர் ஸ்ரீ ஹேமேந்திர குமார் பரதன், தாய் ஸ்ரீமதி சரளாதேவி.  பரதன் குடும்பத்தின் முக்கிய கிராமம் தற்போது பங்களாதேஷில் உள்ள கைரல் கிராமம். ஜமீன்தார் குடும்பமான அதில் ஒவ்வொரு உறுப்பினரும் அவரவர் துறையில் சிறந்த கற்றறிந்தவர்- களாக விளங்கினர். தந்தையான ஹேமேந்திர குமார் உயர்கல்வியை முடித்த பிறகு அரசு சேவையில் சேர்ந்தார். பின்னர் அவர் மத்திய மாகாண அரசின் முக்கிய அதிகார மையமான நாக்பூர் அக்கவுண்டென்ட் ஜெனரல் அலுவலகத்திலும், பெரர் மாகாணத்திலும் (Berar) பணியாற்றினார். பின்னர் அவர் மத்திய பிரதேச அக்கவுண்டண்ட் ஜெனரல் ஆனார்.

எட்டு சகோதர சகோதரிகள் மத்தியில் ஆர்தெந்து ஏழாவது குழந்தை. பின்னர் முழு குடும்பமும் நாக்பூருக்கு மாறியது. அவர் ‘பாய் பரதன்’ (சகோ பரதன்) என்று புகழோடு அறியப்படலானார். 

கல்வி

ஆர்தெந்து நாக்பூரில் செயின்ட் ஜான் உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார், இது ஆங்கில மொழி மற்றும் இலக்கியத்தில் அவருக்கு ஒரு பிடிப்பை ஏற்படுத்த உதவியது. அப்பள்ளியின் முதல்வரான பாதர் டி’ கோஸ்ட்டா தீவிரமான இந்திய எதிர்ப்பாளர். அப்பள்ளியில் அதே அளவு சமமாகப் பிரிட்டிஷ் எதிர்ப்பாளரான ஒரு ஐரிஷ் ஆசிரியர், அடிக்கடி வகுப்பறையில் தனது கருத்துக்களைப் பேசுவார். இது மாணவர்கள் மத்தியில் பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வுகளைத் தட்டி எழுப்ப உதவியது.

ஆர்தெந்து ஐந்தாம் வகுப்பில் அனுமதிக்கப்பட்டார். புத்திசாலியான மாணவரான அவர் எப்போதும் கல்வி உதவித்தொகை பெற்றார். ஒருமுறை காரணமின்றி அவரை ஒரு ஆசிரியர் அடித்து விட்டார். எனவே அவரது தந்தை அந்தப் பள்ளியைவிட்டு அவரை நாக்பூரில் பட்வர்த்தன் உயர்நிலைப் பள்ளியில் சேர்த்து விட்டார். 1939 –40ம் ஆண்டில் நடந்த தேர்வுகளில் ஆர்தெந்து முழு விதர்பா மாவட்டத்தில் இரண்டாவதாக வந்தார். அவர் நாக்பூர் அறிவியல் கல்லூரியில் சேர்ந்தார்.

அரசியல் தாக்கம்

வங்காளம் மற்றும் மத்திய மாகாண பேரர் பகுதிகளில் உச்சத்தில் இருந்த அரசியல் இயக்கங்களும் கோட்பாடுகளும் ஆர்தெந்துவின் கருத்தோட்டப் பார்வைகளை வடிவமைத்தன. அவர் வங்கத்திற்கு விஜயம் செய்தபோது வங்கப் புரட்சியாளர்களின் கதைகளைக் கேட்டார்; அதுமட்டுமின்றி பகத்சிங், சந்திரசேகர் ஆசாத் போன்ற வட இந்தியப் புரட்சியாளர்கள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

நாக்பூரில் இந்து மகா சபாவின் டாக்டர் மூஞ்சே, காங்கிரசின் அபயங்கர், மற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஏஐடியுசி-யின் தலைவர் ராம்பானுவ் ரூய்க்கர் போன்றோரின் உரைகளை ஆர்தெந்து கேட்டார். அறிவியல் கல்லூரியில் பெரிய சிறந்த நூலகம் ஒன்று இருந்தது; அதில் ஆர்தெந்து லெனின் வாழ்க்கை குறித்தும் வரலாற்றுப் பொருள்முதல் வாதம் மற்றும் பல்வேறு பிற புத்தகங்களைப் படித்தார்.

நாக்பூர் அறிவியல் கல்லூரி தீவிர அரசியல் நடவடிக்கைகளின் மையமாகவும் இருந்தது. அங்கே அவர் மாணவர் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களான பிஎல் சர்மா மற்றும் கேஎச் வியாஸ் அவர்களைச் சந்தித்தார். சர்மா பஞ்சாபில் இருந்தும் வியாஸ் ராஜஸ்தானில் இருந்தும் வந்தவர்கள். ‘வந்தே மாதரம்’ இயக்கத்தின் மீது நடத்தப்பட்ட கடுமையான ஒடுக்குமுறைக்குப் பிறகு பல மாணவர்கள் ஹைதராபாத்தில் இருந்து வந்தனர். சர்மா எண்ணற்ற புத்தகங்களை அவரிடம் தந்து ‘அனைத்தையும் படிக்கும்படி’ கூறினார். அவர் தானே ஒருபோதும் சொற்பொழிவு ஆற்றவோ அல்லது பெருந்திரள் பணிகளைத் தொடங்கவோ இல்லை; ஆனால் மற்றவர்களைப் படிக்கவும் பணியாற்றவும் ஊக்கப்படுத்தினார். பரதன் அவரது ஆழமான செல்வாக்குக்கு ஆட்பட்டார்.

1937 தேர்தலுக்குப் பிறகு பெரும்பான்மையான மாகாணங்களில் காங்கிரஸ் மந்திரி சபைகள் அமைக்கப்பட்டன. சாதகமான ஜனநாயகச் சூழ்நிலைகள் ஏற்படுத்தப்பட்டு இந்த காலகட்டத்தில் பல சிறை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் “பூனதா (Bhuna‘da) என்று புகழோடு அறியப்பட்ட புரட்சியாளர் பி என் முகர்ஜியும் ஒருவர்.  கவர்ந்திழுக்கும் ஆளுமையும் அழகும் நல்ல ஆறடி மூன்று அங்குல உயரமும் உடையவர். அவரது இருப்பே கூடியிருப்பவர்கள் மீது ஆழமான தாக்கத்தைச் செலுத்தும். நாக்பூர் சட்டக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட அவர், பரதனிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினார் பரதனும் அவருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். பரதனும் அதே கல்லூரியில் இரண்டரை மாதங்களுக்கு முன்பே அனுமதிக்கப்பட்டிருந்தார். முகர்ஜி உடனடியாக அவரை அழைத்து அங்கே புரட்சிகரப் பணிகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறினார்.

மாணவர் இயக்கத்தில்

நாக்பூரில் டிசம்பர் 1940ல் அனைத்திந்திய மாணவர் சம்மேளனத்தின் வரலாற்று புகழ் பெற்ற நான்காவது மாநாடு நடைபெற்றது, அதில்தான் அந்த மாணவர் அமைப்பு இரண்டாக உடைந்தது. அதே ஆண்டு ஜூலையில் முகர்ஜி தலைவராகவும் HK வியாஸ் செயலாளராகவும் கொண்டு ஒரு வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. 15 வயதான பரதன் AISF அமைப்பின் இணைச் செயலாளராக ஆக்கப்பட்டார். இப்படித்தான் அவரது தீவிர அரசியல் வாழ்க்கை தொடங்கியது. அடுத்த எட்டாண்டுகளுக்கு அவர் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்துடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்தார். மேலும் அவர் மற்றவர்களுடன் இணைந்து AISFன் ‘தி ஸ்டூடென்ட்என்ற  மாணவர் இதழையும் கவனித்து வந்தார்.

ஆர்தெந்து அவரது பெற்றோர்கள் உட்பட குடும்பத்தினரிடம் இருந்து ஏராளமான எதிர்ப்பைச் சந்தித்தார். தனது குடும்பத்தினர் அனைவரையும் நேசித்த போதும் அவர் குடும்பத்தில் இருந்து விலகுவதாக முடிவு செய்தார். இது எதார்த்தத்தில் குடும்ப உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக இருந்தது. வாழ்க்கையில் தனது சுதந்திரமான பயணத்தைத் தொடங்கி கட்சி அலுவலகத்தில் வாழத் தொடங்கினார்.

(இன்றைய நாள் மகாராஷ்டிராவில் உள்ள) அம்ரோட்டியில் (Amraoti) கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்திற்கு எதிராக மாபெரும் மாணவர் போராட்ட இயக்கம் நடந்தது; அப்போராட்டத்தின்போது ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். ஆர்தெந்து தலைமையிலான மாணவர்கள் கல்லூரியை இழுத்துப் பூட்டினர். அவர் ஆற்றல் மிக்க மாணவர் இயக்கத் தலைவராக உருவானார். 1940ல் இளம் வயதிலேயே கட்சியில் இணைந்தபோது அவருக்கு வயது வெறும் 15மட்டுமே.

அவர் தனது அறிவியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தியால் அழைக்கப்பட்டார். வருகைப் பதிவு குறைவால் அவர் தேர்வு எழுத முடியாது என முதல்வர் எச்சரித்தார். (தான் தேர்வு எழுதப்பட முடியாவிட்டால்) கல்லூரி தன் தரத்தின் பெருமையை இழக்கும், நஷ்டம் கல்லூரிக்குதான் என்று ஆர்தெந்து பதில் அளித்தார்! முதல்வர் மிகக் கோபமடைந்தாலும், வெற்றி பெறும் மாணவர்களில் முதல் மூன்று இடங்களுக்குள் அவர்  வர வேண்டும் என்ற நிபந்தனையில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்! தேர்வில் பரதன் இரண்டாவதாக வந்தார். பின்னர் அரசியல் பணிகளுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்குவதற்காக ஆர்தெந்து அறிவியல் கல்லூரியை விட்டு விலகி  AISF பணிகளுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்க வசதியாகக் கலைக் கல்லூரியில் சேர்ந்து அங்கே அவர் முதுகலை எம்ஏ (பொருளாதாரம்) படித்தார்.

பாட்னா AISF மாநாடு

ஏஐஎஸ்எப் மாநாடு பாட்னாவில் 1941 டிசம்பரில், இரண்டாம் உலகப் போர் மற்றும் பாசிசம், நாசிசத்தின் உண்மையான அச்சுறுத்தல் பின்னணியில் நடைபெற்றது; இது

மாணவர்கள் மற்றும் பரவலான அரசியல் வட்டங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. ஆர்தெந்து மத்திய மாகாணம்பேரர் (CP-Berar) பகுதியிலிருந்து பிரதிநிதியாக மாநாட்டில் கலந்து கொண்டார். போரின் தன்மை குறித்து மாநாடு ஆழமாக விவாதித்தது. அங்கே ஆர்தெந்து சத்தியபால் டாங் அவர்களைச் சந்தித்தார்.

ஆர்தெந்து மற்றும் AISFன் பிற அணிகள்  தொடக்கத்தில் 1942 இயக்கத்தில் கலந்து கொண்டனர். அவரது கல்லூரியில் தொந்தரவுகள் இருந்தன ஆனால் கல்லூரி முதல்வர் மாணவர்களுடன் உறுதியாக நின்று போலீசைக் கல்லூரி வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. ஆர்தெந்து இந்த இயக்கத்தின்போது இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவரால் தேர்வு எழுத முடியவில்லை.

1946-ல் காங்கிரஸ் அந்த மாகாணத்தில் அரசு அமைத்தது. பண்டிட் ரவிசங்கர் சுக்லா முதலமைச்சரானார். 1942ல் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படாதவர்கள் மீண்டும் தேர்வு எழுத சிறப்புத் தேர்வு நடத்த வேண்டும் என ஏஐஎஸ்எப் கோரியது. அரசு கோரிக்கையை ஏற்றது, ஆர்தெந்துவும் தேர்வு எழுதினார்.

நாக்பூர் பல்கலைக் கழக மாணவர்கள் சங்கத்திற்கு 1947ல் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன; பரதனும் மற்றவர்களும் ஏஐஎஸ்எப் சார்பாகப் போட்டியிடும் பட்டியலை அமைத்தனர். பண்டிட் ரவிசங்கர் சுக்லாவின் மகன் சியாமா சரண் சுக்லா தலைமையில் காங்கிரஸ் பட்டியலை அமைத்தனர். ஏஐஎஸ்எப் அணியினர் போற்றத்தக்க வெற்றியைச் சாதித்தனர். பரதன் மாணவர் சங்கத்தின் தலைவர் ஆனார்.

பம்பாய் ஏஐஎஸ்எப் மாநாடு

1947 டிசம்பரில் பாம்பே (மும்பை)-யில் ஏஐஎஸ்எப் மாநாடு நடைபெற்றது. ஆனால் போலீஸ் இரக்கமற்று தாக்குதல் நடத்தியது, மாநாடும் அனுமதிக்கப்படவில்லை. அப்போதைய முதலமைச்சரான மொரார்ஜி தேசாய் சிறைக் கைதிகளை விடுவிக்க முடியாது என்றும், மாநாடு நடத்த அனுமதிக்க முடியாது என்றும் ஏஐஎஸ்எப் பிரதிநிதிகளிடம் கூறினார். பிரதிநிதிகள் குழுவில் பரதன், கீதா முகர்ஜி மற்றும் பிறர் அடங்கியிருந்தனர். ஏஐஎஸ்எப் மாநாடு தடை செய்யப்பட்டது. மாணவர்கள் மீது பெருமளவில் மிருகத்தனமாக லத்தியடியும் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. அருகில் இருந்த தொழிலாளர் குடியிருப்புகள் (chawls) மற்றும் சேரிகளில் இருந்து ஆலைத் தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு வந்து கொடூரமான லத்தியடிகளைப் பொருட்படுத்தாமல் வீரத்துடன் மாணவர்களைக் காப்பாற்றியும் பல மாணவர்களைப் போலீஸ் பிடியிலிருந்தும் விடுவித்தனர்.

தொழிற்சங்கப் பணி

பரதன் மாணவர் இயக்கத்துடன் தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளர் வர்க்க இயக்கங்களிலும் தனது இளம் வயதிலிருந்து பணியாற்றினார். கிர்ணி (டெக்ஸ்டைல்), பீடி, சஃபாயி (சுகாதாரப்பணி), முனிசிபல், ரயில்வே மற்றும் பிற தொழிலாளர்கள் மத்தியில் அவர் பணியாற்றினார். அவர் தொழிற்சங்கத் தலைவர் ராம் பாபு ரூய்க்கர் தலைமையின் கீழ்ப் பணியாற்றினார், ரூய்க்கர் மாபெரும் பொதுக்கூட்ட சொற்பொழிவாளரும்கூட. அவர் பேசும்போது மக்கள் முழு அமைதியாக இருந்து அவரது பேச்சைக் கேட்பது வழக்கம். அவரது பேச்சாற்றல் மற்றும் பணியாற்றும் திறமையைப் பரதனே புகழ்ந்து எழுதி உள்ளார்.

மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற தொழிற்சங்க வாதி PD மராத்தே உடனும்கூட பரதன் பணியாற்றினார். கம்யூனிஸ்டுகள், நாக்பூர் மற்றும் பண்டாராவில் பீடி தொழிலாளர்களின் வலிமையான தொழிற்சங்கங்களைக் கட்டினர்; அதில் பரதன் தீவிரமாகப் பணியாற்றினார்

பிடிஆர் காலகட்டமும் கைதுகளும

பிடி ரணதிவே காலகட்டம், தலைமையின் சுயஅழிப்பு சாகசக் கொள்கைகள் காரணமாகக் கட்சிக்கு மிக் கடினமான காலகட்டம் என்பதை நிரூபித்தது. கைதாவதைத் தவிர்ப்பதற்காகப் பரதன் தலைமறைவாக வேண்டியிருந்தது. HKவியாஸும் கூட அவருடன் இருந்தார். இருவரும் போலீசாரால் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டு ராய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைச்சாலை நிலைமைகளை மேம்படுத்தக் கோரி கைதிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். பரதனும் உண்ணாவிரதப் போராட்டத்தில் 45 நாட்கள் கலந்து கொண்டார். உண்ணாவிரதப் போராட்டத்தை முறியடிக்க அவர்களைக் கட்டாயமாக உண்ண வைத்தனர். அவர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட, சிறை மருத்துவமனையில் அவரைத் தனித்து வைத்தனர். மருத்துவமனையின் சிவில் சர்ஜன் டாக்டர் ஆபிரகாம், புகழ்பெற்ற சினிமா ஆளுமை டேவிட் அவர்களின் சகோதரர். பரதன் சிகிச்சைக்காக அகோலா சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், சிறை அதிகாரிகள் அவரை விடுவிக்கத் தயாராக இல்லாத போது டாக்டர் ஆபிரகாமின் முயற்சியின் காரணமாக இது சாத்தியமாயிற்று.

 தான் மீண்டும் சிறைக்குத் திரும்ப அனுப்பப்படுவது உறுதி என்பதால் பரதன் மருத்துவமனையிலிருந்து தப்பினார். சாலை மார்க்கமாக நாக்பூரில் அவரது வீட்டிற்குத் திரும்பினார். அவரது மோசமான உடல்நிலை குறித்துக் குடும்பத்தினர் மிகக் கலக்கமடைந்தாலும் அவரைச் சந்தித்ததில் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. பூனதா (BN முகர்ஜி)யும் வேறு சில குடும்ப உறுப்பினர்களும் அவரைக் காண ஓடி வந்தனர். குடும்பத்துடன் தங்குவது குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்ததுஅவரைத் தேடி வந்த போலீசார் வீட்டைச் சுற்றி வளைத்தனர். மீண்டும் தப்பிச் செல்லும் திட்டத்தில் அவருக்கு ஒவ்வொருவரும் உதவினர், பூனதா மற்றும் பிறர் உதவியால் இரவில் அவர் நழுவி மறைந்தார்.

கல்கத்தாவில்

பரதன் கல்கத்தா தப்பிச் சென்றார். ஒரு பத்திரிக்கையில் செய்திக் கட்டுரை பத்திகள் எழுதும் பணியை மேற்கொண்டார். மேலும் அவர் கிட்டர்பூர் இன்ஜினியரிங் தொழிலாளர்கள் உட்பட ஆலைத் தொழிலாளர்கள் மத்தியிலும் பணியாற்றினார். நாக்பூர் திரும்ப வரும்படி அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார் அங்கேயும் அவர் காவல் நிலையத்தில் தினமும் வருகையைப் பதிவு செய்ய வேண்டி இருந்தது. சில மாதங்கள் அவர் கைது செய்யப்பட்டாலும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார். மாங்கனீசு தாது மற்றும் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர் சங்கத்தின் மத்தியில் பணியாற்றி, மத்தியப் பிரதேசத் சுரங்கத் தொழிலாளர் சங்கத்தின் (ம.பி. கதான் ஒர்க்கர்ஸ் யூனியன்) முதல் தலைவராக ஆனார். அவர் பெருமளவில் சந்திராபூர் மற்றும் பிற இடங்களின் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றினார். அவர் காகித மில் தொழிலாளர்கள் சங்கத்தை அமைத்தார்.

மத்திய பாரதத்துக்குத் திரும்புதல்

நெசவாளர்கள் மற்றும் மின்சார தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றி வலிமையான தொழிற்சங்கங்களைப் பரதன் ஏற்படுத்தினார். சம்யுக்த மகாராஷ்டிரா இயக்கத்தின் போதும், பிற வகைகளிலும் (காந்தியவாதி நிர்மலா தேஷ் பாண்டேவின் தந்தையான) PY தேஷ் பாண்டே, எஸ் ஏ டாங்கே, ரூயிக்கர், ஆச்சாரிய PK ஆத்ரே மற்றும் பிறரிடம் இருந்து அவர் பெருந்திரள் மக்கள் கூட்டத்திடையே சொற்பொழிவு ஆற்றக்  கற்றுக்கொண்டார். சுதான் தேஷ்முக் சிறப்பிடம் வகித்தார்.

திருமணம்

பத்மா தேவ் என்ற அறிவியல் கல்லூரி மாணவியுடன் 1948ல் பரதனுக்கு அறிமுகம் ஏற்பட்டது; கல்கத்தாவில் பிறந்த மராட்டியரான அவர், வங்கமொழியும் நன்கு அறிந்தவர். அவரும் ஒரு கட்சி உறுப்பினர். பத்மாவும் பரதனும் 1952ல் திருமணம் செய்து கொண்டனர். பத்மாதான் அவர்களது மகனையும் மகளையும் படிக்க வைத்து கவனித்துக் கொண்டார். மூளை பக்கவாத (பிரெயின் ஸ்ட்ரோக்) பாதிப்பால் 1989ல், நான்கரை மாதங்கள் கோமா நிலையில் கிடந்த பிறகு, அவர் மரணம் அடைந்தார்.

சட்டமன்றத்திற்குத் தேர்வு

AB பரதன் 1957 பொது தேர்தலில் பம்பாய் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார். பம்பாய் அப்பொழுது இரு மொழி மாநிலமாக இருந்தது. மிக நெருக்கமான கடுமையான போட்டியில் காங்கிரஸ் 134 இடங்களையும் சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி (SMS) 130 இடங்களையும் பெற்றன. SMS வேட்பாளராகப் போட்டியிட்டு பரதன் வெற்றி பெற்றார். அதன் பிறகு பல சட்டமன்றத் தேர்தல்கள் பாராளுமன்றத் தேர்தல்களில் அவர் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியவில்லை

மின்சாரத் தொழிலாளர்கள் சங்கமும் ஏஐடியுசி- யும்

மின்சாரத் தொழிலாளர் இயக்க முன்னணித் தலைவராகப் பரதன் உருவானார். வலிமையான MSEB (மகாராஷ்டிரா மாநில எலெக்ட்ரிசிட்டி போர்டு) தொழிலாளர்கள் சம்மேளனத்தைக் கட்ட அவர் உதவினார். அந்த அமைப்பு ‘மின்சாரத் தொழிலாளர்களின் அகில இந்தியச் சம்மேளனத்தின் ஒரு பகுதியாக விளங்கி, மின்சாரத் தொழிலாளர்களின் அகில இந்திய கோ-ஆர்டினேஷன் கமிட்டியில் முக்கிய பங்கு வகித்தது.

மகாராஷ்டிராவில் AITUC பேரியக்கத்தைக் கட்டியவர்களில் பரதனும் ஒருவர். ஏஐடியுசி-யின் 1994 பாட்னா அமர்வில் அவர் AITUC பொதுச் செயலாளரானார்.

கட்சிப் பொறுப்புகள்

1968 பாட்னா கட்சி காங்கிரஸில் அவர் சிபிஐ தேசியக் கவுன்சில் உறுப்பினராகவும் 1978 பட்டிண்டா காங்கிரஸில் மத்திய செயற்குழுவுக்கும் (CEC) தேர்ந்தெடுக்கப்பட்டார். 1982 வாரணாசி காங்கிரஸில் கட்சியின் மத்திய செயலகக் குழுவில் சேர்க்கப்பட்டார்.

கட்சியின் 16வது அமர்வின்போது 1995 அக்டோபரில் சிபிஐ துணை பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பரதன் 1996 இல் சிபிஐ பொதுச் செயலாளர் ஆனார். அப்போது AITUC பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தவர் அந்தப் பொறுப்பை விட்டு விலகினார்.

சி பி ஐ கட்சியில் பிளவு

1964இல் கட்சியில் ஏற்பட்ட பிளவு துரதிஷ்டமானது, அது கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பலவீனப்படுத்தியது. சிபிஐஎம் கட்சிக்குச் சென்ற பல தோழர்களின் தத்துவார்த்த அரசியல் நிலைப்பாடுகளுடன் அவர் உடன்பட்டாலும், கட்சியைப் பிளவுபடுத்துவது தவறானது மற்றும் கேடு விளைவிக்க கூடியது என்று பரதன் கருதினார்.

கம்யூனிஸ்ட் ஒற்றுமைக்கான முயற்சிகள்

CPI-CPM ஒற்றுமைக்கு உறுதியான ஆதரவாளரான பரதன் இரு கட்சிகளையும் ஒன்றுபடுத்த தொடர்ந்து முயற்சி செய்து வந்தார். பல நேரங்களில் அவரது நிலைப்பாடுகள் நேர்மை உணர்வால் உந்தப்பட்டாலும், மாறாக அவை கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஒன்றுபடுத்தும்

அகவயப்பட்ட ஆசையால் செலுத்தப்பட்டதால் அவை எதார்த்த உண்மைநிலைக்கு எதிராகச் சென்றன. பொதுச் செயலாளரான பிறகு இந்த இறுதி இலக்கை நோக்கியே அவர் ஒவ்வொரு முயற்சியும் செய்தார்: ஆனால் பிற கம்யூனிஸ்ட் அமைப்புகள் அதைப் பிரதிபலிக்கவே இல்லை, மாறாக அவை தங்கள் தனித்த இருப்பை நியாயப்படுத்தின. இந்த முயற்சிக்காகப் பரதன் பிற கம்யூனிஸ்ட் கட்சிகளின் கேலிக்கும்கூட ஆளானார். இதன் விளைவாய் அவர் மிகவும் ஏமாற்றமடைந்து மனச்சோர்வடைந்தார். மேற்குவங்க இடது முன்னணி ஆட்சியின்போது சில அனுபவங்களும்கூட அவரை அதிர்ச்சி அடையச் செய்தன. எப்பொழுதும் ஒரு கொள்கை அடிப்படையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஒன்றுபடுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. எனினும் பிற கம்யூனிஸ்ட் அமைப்புகளிடமிருந்து அதற்குச் சாதகமான பதில் இல்லை.

கட்சித் திட்டம் வரைதல்

1992 ஹைதராபாத் கட்சி காங்கிரஸில் திட்ட ஆவணம் (புரோகிராம் டாக்குமெண்ட்) நிறைவேற்றப்பட்ட பிறகு நீண்ட காலமாகச் சிபிஐ கட்சிக்கு முழுமையான நிகழ்ச்சி நிரல் கட்சித் திட்டம் இல்லை. பரதன் அதற்கான முன்கை எடுத்து கட்சித் திட்ட வரைவு அறிக்கையைத் தயாரிக்க தொடங்கினார்.  2012 பாட்னா கட்சி காங்கிரஸில் அந்த வரைவு திட்ட ஆவணம் முன் வைக்கப்பட்டது. அது இறுதியில் 2015 புதுச்சேரி கட்சி காங்கிரஸில் நிறைவேற்றப்பட்டது. கட்சி அமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு நிரந்தரமான திட்டக் கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. பரதன் அந்த கமிஷனின் முதல் தலைவராகச் செயல்பட்டார்.

பரதன் எண்ணற்ற புத்தகங்களையும், சாதி மற்றும் வர்க்கம், திட்டம், வகுப்புவாத ஆபத்து, பாஜக கொள்கைகள் மற்றும் பிற பிரச்சனைகள் குறித்த சிறு கையேடுகளையும் எழுதிக் குவித்தார். ‘கார்ப்பரேட் முதலாளித்துவத்தின் நெருக்கடி என்பது அவர் இறுதியாக எழுதிய புத்தகம்.

மூளை ரத்தக்கசிவு நோயால் நீண்ட காலம் பாதிக்கப்பட்ட பிறகு ஏ பி பரதன் தமது 91ஆம் வயதில் 2015 ஜனவரி 2ம் நாள் புதுடெல்லியில் இயற்கை எய்தினார். “இடதுசாரியின் மிக மூத்த மனிதர்என்று இடதுசாரி வட்டங்களில் பெரிதும் மதிக்கப்பட்ட அவர் பிற கட்சிகள் மத்தியிலும் மதிப்புடையவராக இருந்தார். அவரது நேர்மை மற்றும் உண்மை உணர்வுக்காக ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இடையேயும் கூட அவர் மரியாதைக்கு உரியவராக இருந்தார்.

வாழ்க பரதன் புகழ்!

வளர்க கம்யூனிஸ்ட் இயக்க ஒற்றுமை!

--நன்றி : நியூ ஏஜ் (2025 ஏப்ரல் 20 –26)

தமிழில் : நீலகண்டன்,

என் எஃப் டி இ கடலூர்.

No comments:

Post a Comment