சி அச்சுத மேனன்
–நம்மை எப்போதும் வழி நடத்தும் விழுமியங்களின் மரபு
–கவிதா ராஜன்
கேரள அரசியல் வரலாற்றுப் பக்கங்களில் சி அச்சுத மேனன், அவரது
தொலைநோக்குப் பார்வையடன் கூடிய தலைமை மற்றும் சமூகச் சீர்திருத்தத்திற்கான உறுதிப்பாட்டிற்காகப்
பெரும் ஆளுமையாளராகப் புகழார்ந்த இடத்தை வகிக்கிறார். அவர் 1913 நவம்பர் 23 கோட்டயத்தில்
பிறந்தார். மேனன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் முன்னணி உறுப்பினராக உயர்ந்தார்.
1960 முதல் 1962 வரை கேரள முதலமைச்சராகப் பணியாற்றினார். சமூகத்தில் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட
சமத்துவமின்மைகளை ஒழிப்பதையும், விளிம்பு நிலை மக்கள் நலவாழ்வை அதிகரிப்பதையும் நோக்கமாகக்
கொண்ட பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய கொள்கைகளை, ஒரு முதலமைச்சராக வகுத்த சிற்பி அவர்.
குறிப்பாக அவரது பதவிக்காலம், நிலச் சீர்திருத்தச் சட்டம்
என்ற முன்னுதாரண மைல்கல் நாட்டியதைக் குறிக்கிறது. இந்தச் சட்டம் நிலம் இல்லாதவர்களுக்கு
நிலத்தைப் பகிர்ந்து அளித்தது. மேலும், மக்களுக்குக் கல்வி மற்றும் (சுகாதாரக் கட்டமைப்புகளை
ஏற்படுத்துவது உள்ளிட்ட) சுகாதாரப் பாதுகாப்புக் கிடைப்பதை விரிவாக்குவதற்காகவும் பாடுபட்டார்.
சமூகச் சமத்துவத்திற்கு இந்தச் சீர்திருத்தங்கள் ஆட்சி நிர்வாகத்தில் தர அளவு கோல்களை
ஏற்படுத்தியது. சல்லி வேர் ஜனநாயகம் மற்றும் கூட்டு அதிகாரமளித்தலுக்கு ஆழமான உறுதிப்பாட்டின்
மூலம் மேனனின் பாரம்பரியம் பண்பினைப் பெறுகிறது. மக்கள் குரலுக்கு முன்னுரிமை தந்த
தலைவர் அவர்.
சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் புரையோடிய சாதியத்
தடை கற்கள் கேரளாவில் பரவலாகத் தலை விரித்தாடியபோது, அச்சுத மேனனின் தொலைநோக்குப் பார்வை
அணுகுமுறை வந்தது. அவரது முன்னோடி சீர்திருத்தங்களில், உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம்
அதிகாரப் பரவலை ஏற்படுத்தியது மிக முக்கியமானது. இந்தச் செயல் திட்ட உத்தி, விளிம்பு நிலை சமூகங்களின்
குரலை மேம்படுத்தி, பங்கேற்பு ஜனநாயகத்தை ஊக்கப்படுத்தியது. இந்த மாற்றம், உள்ளாட்சி
அமைப்புகளை உள்ளூர் பிரச்சனைகளைத் தீர்க்கவும் பல்வேறு சமூக வகுப்புகளின் தேவைகளைப்
பூர்த்தி செய்யவும் வைத்தது. மேலும் இது, மக்கள்திரள்
மத்தியில் தாங்கள் ஓர் அமைப்பின் பிரதிநிதி என்ற பொறுப்புணர்வு பண்பை வளர்த்தது.
மேனன் சீர்திருத்தங்களில் கல்வி அடுத்த திருப்புமுனை. அறிவுதான்
சமத்துவத்தை ஏற்படுத்தவல்ல ஆற்றல் மிக்கது என்பதை அங்கீகரித்த அவர், சமூகத்தின் அனைத்து
மட்ட பிரிவினர்களுக்கும் கல்வி கிடைக்கச் செய்யவும், கல்வி/ எழுத்தறிவு விகிதத்தை உயர்த்துவதற்குமான
முன்னெடுப்புகளைத் தலைமை ஏற்று நடத்தினார். மாநிலம் முழுவதும் கல்வி நிறுவனங்களை மேம்படுத்தியதன்
மூலம், கல்வியறிவில் கேரளாவின் ஈடு இணையற்ற சாதனைகளுக்கான அடித்தளத்தை மேனன் அமைத்தார்.
இதன் விளைவாய் மக்கட் சமூகம் மேல்நிலைப்படுத்தப்பட்டதை இத்தகைய
முதலீடுகளின் நேரடிப் பலனளிப்பு என்பதைக் காணலாம்; இது, முற்போக்குச் சமூகத்தின் அடித்தளமாகவும்,
சமூகம் அடுத்தடுத்த படிநிலைக்கு நகர்வதன் முக்கிய காரணியாகவும் கல்வி உள்ளது என்ற அவரது
நம்பிக்கையை வலியுறுத்துகிறது. மேலும் இதன் மூலம் (அறிவு, ஆற்றல், ஆரோக்கியம் முதலானவை
உள்ளிட்ட) மனிதவள மூலதனத்தை மேம்படுத்தப்படுத்தி திறன்மிக்க முறையில் பொருளாதாரத்தில்
பங்கேற்கச் செய்ய முடிகிறது.
மேலும் சமூக நீதிக்கு அவரது தளர்வில்லாத ஆதரவின் விளைவாய்
இறுதியில், சமூகத்தைப் பீடித்த சாதியப் படிநிலைகளை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட கொள்கைகள்
வகுப்பதில் முடிந்தது. நிலச்சீர்திருத்தங்களில் அவரது நிர்வாகத்தின் பற்றுறுதி, வேளாண்
செல்வாதாரங்கள் மீது பிரபுத்துவக் கொடும்பிடிப்பை விடுவித்தது; குத்தகை விவசாயிகள்
மற்றும் நிலமற்றவர்களுக்கு நிலங்களைப் பகிர்ந்து அளித்ததன் மூலம், சமூகப் படிநிலையில்
அடிமட்ட மக்கள் மத்தியில் பொருளாதார அதிகாரம் அளிக்கப்பட்ட ஒரு புதிய சகாப்தம் ஊக்கம்
பெற்றது. இந்த அசாதாரணமான சாதனை முயற்சி, ஏழ்மையை மட்டும் குறைக்கவில்லை; மாறாக, வரலாற்று
ரீதியாக விளிம்பு நிலை வகுப்பினர்களின் மத்தியில் சுயமதிப்பு மற்றும் ஒரு கௌரவ உணர்வையும்
ஏற்படுத்தியது. கொள்கையைத் தாண்டி நீண்ட மேனனின் பாரம்பரியம், சமூகச் சமத்துவம் மற்றும்
திறன்மிகு ஆட்சி நிர்வாகத்தில் கேரளாவின் உறுதிப்பாட்டை வடிவமைத்தது.
மக்கள் தொகையில் செம்பாதியாக அமைந்த பெண்களின் தேவைகளை உணர்ந்து
அங்கீகரித்த அவரது தொலைநோக்குப் பார்வையில் உருவானவைதான், உழைக்கும் பெண்களுக்கும்
மாணவிகளுக்கும் தங்கும் விடுதிகள் –அவை அவர்களுக்கு மேம்பட்ட கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களை
அடைவதைச் சாத்தியமாக்கின. கூட்டுறவுச் சங்க அமைப்புகளை வலிமை பெறச் செய்தும்; பொருளாதார
நடவடிக்கைகளில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவித்ததன்
மூலமும், தான் ஆர்வமாகத் தழுவிய முற்போக்குத் தத்துவங்களை அவர் தீவிரமாக ஆதரித்துச்
செயல்படுத்தினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய கொள்கைகளான சல்லி வேர் ஜனநாயகம்,
ஆட்சியில் பங்கு பெற குடிமக்களை அதிகாரமுடையவர்கள் ஆக்குவது மற்றும் விளிம்பு நிலை
மக்களின் குரல்களைச் செவி மடுப்பது மட்டுமின்றி, அவர்கள் குரலை மேலும் ஓங்கி ஒலிக்கச்
செய்வதாகிய கட்சிக் கொள்கைகளுடன் அவரது தலைமை நெருக்கமாக ஒன்றிணைந்து இருந்தது. இந்தப்
பற்றுறுதி இன்றும் பொருத்தம் உடையதாக விளங்கி, பங்கேற்பு ஜனநாயகத்திற்கு வலுவான சட்டக்கத்தை
வழங்குகிறது. கல்வி நிறுவன அமைப்புகளைச் சமூகச் சமத்துவத்தை ஏற்படுத்தும் கருவிகளாக
அவர் பார்த்தார்; அனைவருக்கும் கல்விக்காகவும், கல்வியறிவின் மூலம் தனிநபர்களுக்கு
அதிகாரமும் அளிக்கவும் அந்நிறுவனங்களுக்கு அவர் ஊசலாட்டம் இல்லாத ஆதரவு அளித்தார்;
அதன்வழி அவர், பங்கேற்பு ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள
வகையில் கலந்து கொள்ளவல்ல குடிமக்களை ஆதரிக்கும் சிபிஐ-யின் நீடித்து நிலைத்த லட்சிய
செயல்திட்டத்தை அமலாக்க முயன்றதை அது பிரதிபலிக்கிறது.
சி அச்சுத மேனனைக் கேரளச் சமூக மேம்பாட்டின் முக்கிய சிற்பியாக
அங்கீகரிப்பது முக்கியம். ஒரு நூற்றாண்டு காலமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்திய
நீதி, சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளிணைக்க பாடுபடுவது உள்ளிட்ட விழுமியங்களை மேனனின்
மரபு பிரதிபலிக்கிறது.
சிபிஐ நூற்றாண்டை நாம் கொண்டாடும்போது, மேனன் வரலாற்று நாயகராக
உயர்ந்து நிற்பது மட்டுமின்றி சமூக நீதிக்காகக் கட்சியின் தொடரும் பற்றுறுதிப்பாட்டின் அடையாளமாகவும் திகழ்கிறார். அதிகாரப் பரவலாக்கல்,
கல்வி மற்றும் நிலக் கொள்கைகளில் அவரது சீர்திருத்தம், விளிம்பு நிலை மக்களை மேம்படுத்துவது
மற்றும் உள்ளூர் சமூகங்களை அதிகாரப்படுத்துவதற்கான சி பி ஐ -யின் முக்கிய லட்சிய நோக்கத்
திட்டத்துடன் ஒன்றிணைந்து இருந்தது. மேனனின் எதிர்காலக் கண்ணோட்டம் மற்றும் அனைவரையும்
உள்ளிணைத்த வளர்ச்சிக்கான ஆதரவு, கேரளாவை முற்போக்கு ஆட்சி நிர்வாக முன்மாதிரியாக நிறுவுவதற்கு
உதவியது. அவரது மரபு சோஷலிசம், ஜனநாயகம் மற்றும் சமூகச் சமத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும்
மாற்றத்தின் தாக்கத்தை நமக்கு நினைவுறுத்தி தொடர்ந்து நம்மை உற்சாகப்படுத்துகிறது
சி அச்சுத மேனனின்
நலவாழ்வு நடவடிக்கைகள் –வரையறுக்கப்பட்ட, நகரத்தை மையமாகக் கொண்ட– குடிமை பொருள் பொது விநியோக முறையை, கிராமப்புற வகுப்புகளையும்
சென்றடையும் வகையில் மாற்றி அமைத்தது. உணவுப்
பாதுகாப்பை அடிப்படை உரிமையாக வலியுறுத்தியதன் மூலம் அவர், அத்தியாவசியப் பொருட்களைச் சலுகை விலையில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும்
வழங்குகின்ற பரவலான பொது விநியோக முறையை ஏற்படுத்தினார். இந்த அணுகுமுறை சந்தை விலைகளை
நிலைப்படுத்தி பொருட்கள் சமமாகக் கிடைப்பதை உறுதிப்படுத்தியது; மற்றும் அரசின் தலைமையிலான
நலவாழ்வு நடவடிக்கைகள் எவ்வாறு கண்ணியத்தையும் சமூக நீதியையும் உயர்த்திப் பிடிக்க
முடியும் என்பதை எடுத்துக் காட்டியது. அவரது சீர்திருத்தங்கள், கேரளாவின் உயர்வான மனித
மேம்பாட்டு குறியீடுகளிலும், முன்மாதிரியான நலவாழ்வு அரசு என்ற அதன் நற்பெயரிலும் பிரதிபலிக்கின்றன.
மேனன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பரவலாக்கப்பட்ட ஜனநாயகம், கல்வியறிவு மற்றும் பெண்களின்
பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளித்து, கேரளாவின் தொடரும் சமூக முன்னேற்றத்திற்கு நெடுநோக்குப்
பார்வை கொண்ட தலைமையின் முக்கியத்துவம் மீது சிறப்பான கவனத்தை ஈர்க்கிறார்.
இந்தச் சாதனை மைக்கல்களைக் கொண்டாடும்போது நாம் எதிர்காலத்திற்கான
மேனனின் பார்வையைத் தழுவி கொள்ள வேண்டும். இன்றைய சவால்களுக்குப் பங்கேற்பு ஜனநாயகம்
மற்றும் சமூக சமத்துவத்திற்கான அவரது உறுதிப்பாடு பொருத்தமான சட்டகத்தை வழங்குகிறது.
பொருள் பொதிந்த மாற்றத்தை சாதிப்பதில் கொள்கை வழிப்பட்ட தலைமையின் தாக்கத்தை மேனன்
முன்னுதாரணமாக திகழ்ந்து எடுத்துக் காட்டுகிறார். இந்நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின்போது,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை விழுமியங்களுக்கும், நியாயமான, சமத்துவச்
சமுதாயம் நோக்கி வழிநடத்தவும் நமது பற்றுதியை நாம் மீண்டும் உறுதி செய்வோம். அச்சுத
மேனனின் பங்களிப்புகள் கேரள வரலாற்றின் பகுதி மட்டுமல்ல, மாறாக இந்தியக் கம்யூனிஸ்ட்
கட்சியின் லட்சியங்களை எதிர்வரும் ஆண்டுகளில் நனவாக்க நம்மை ஊக்குவிக்கும் உற்சாகத்தின்
ஊற்றும் ஆகும்!
வாழ்க சி அச்சுத மேனன் புகழ்!
–நன்றி: நியூ ஏஜ் (ஆகஸ்ட் 24 –30)
–தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்.
No comments:
Post a Comment