Monday, 18 August 2025

புத்தக மதிப்புரை -- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூறு ஆண்டுகள்

 புத்தக மதிப்புரை


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்
நூறு ஆண்டுகள்

திக்காராம் சர்மா

        இந்த ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது அமைப்பு தின நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வருகிறது. அனைத்தையும் ஒழுங்கமைத்துத் தொகுக்கப்பட்ட புத்தகம் என்பதற்கு

ஏற்ப, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு குறித்த இந்நூலை கட்சியில் தத்துவக் கல்வி இலாகாவைக் கவனித்து வருபவரானமார்க்சிய அறிஞர் அனில் ரஜீம்வாலே எழுதியுள்ளார். இது விஷயத்தில் வேறு எந்த நூல்களும் இல்லாத நிலையில் இந்த நூல் மிகத் தேவையான ஒன்று.

1925ல் கட்சி நிறுவப்பட்டதில் இருந்து 2022 விஜயவாடாவில் நடந்த கடைசி கட்சிப் பேராய மாநாடு வரை உள்ளடக்கிய முழுமையான காலத்தை இந்நூல் பேசுகிறது. அனைத்துக் கட்சி காங்கிரஸ்கள் மற்றும் முக்கிய மாநாடுகள் குறித்த விவரங்களை வழங்குவதால் இது கட்சி வரலாறு குறித்துப் படிக்கவும் ஆய்வு செய்வதற்கும் மிக உதவியான நூலாக விளங்குகிறது.

எளிமை, தெளிவு இதனுடன் ஆழமான அறிவாற்றலுடன் இந்நூலை நமக்கு வழங்கிய  நூலின் ஆசிரியர் முதலில் சுதந்திர மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கான  கள யதார்த்தங்களை விளக்குகிறார்; அதில் 1853ல் இந்தியாவில் அமைக்கப்பட்ட முதலாவது
இரயில் பாதையைச் சுட்டிக்காட்டி
, அது
பிரிட்டிஷ் காலனியத்தின் கல்லறையைத் தோண்டும் உழைக்கும் வர்க்கம் இந்தியாவில் உருவான நிகழ்முறை தொடங்குவதை விவரித்துள்ளார். இரயில்வே பாதையை அமைப்பதன் மூலம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவில் சமூகப் புரட்சிக்கான விதைகளை விதைத்துள்ளனர் என்பது எதிர்காலத்தை முன் கணித்த மாமேதை காரல் மார்க்ஸின் தீர்க்கதரிசனம். அந்தக் கணிப்பு 95 ஆண்டுகளுக்குப் பிறகு 1947 ஆகஸ்ட் இந்தியா விடுதலை பெற்றபோது உண்மையானது.

புதிய எந்திரத் தொழிற்சாலைகள், மில்கள் மற்றும் சுரங்கங்கள் முளைத்து எழுவதற்கு இரயில்வே காரணமாயிற்று; இது தொழிலாளர் எண்ணிக்கையை உயர்த்தி உழைக்கும் வர்க்க மற்றும் புரட்சிகர, சோஷலிச, கம்யூனிஸ இயக்கத்தை வலிமை பெறச் செய்ததுடன், நவீன சுதந்திர இயக்கம் உருவாவதற்கும் உதவியது. பொருட்களையும் பயணிகளையும் மட்டும் இரயில்வே சுமந்து செல்லவில்லை; தேசியம், விடுதலை மற்றும் சோசலிசம் குறித்த கருத்துக்களையும்கூட அவை சுமந்து சென்றன. இது தவிரவும், இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் பெரிய அளவில் பரவுவதற்கு நவீனக் கல்வியும் பங்களிப்பு நல்கியது. எனினும் தொழில்மயமும் கல்வியும் பிரிட்டிஷ் காலனியத் தேவைகளை நிறைவேற்றும் அளவிற்கு மட்டும் அப்போது இருந்தன என்பது தெளிவு.

     1917ல் ரஷ்யப் புரட்சி இந்திய மக்கள் திரளையும் வர்க்கங்களையும் மறு அர்ப்பணிப்பு உணர்வைப் பெறச் செய்து, தேசிய இயக்கம் மற்றும் அதன் தலைவர்களிடம் ஆழமான தாக்கத்தைச் செலுத்தியது.

     வலதுசாரி பிரச்சாரத்திற்குப் பதிலளிக்கும் வகையில் ‘சோசலிசம் என்ற சொல், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்படுவதற்கு முன்பே பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பாக நூலாசிரியர் சுவாரஸ்யமான தகவல்களைத் தருகிறார்! அந்தச் சொல் முதன் முதலில் சுவாமி விவேகானந்தரால் 1899–1902-ல் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து திலகர், லாலா ஹர்தயாள், பண்டிட் நேரு, லாலா லஜபதி ராய் மற்றும் பிற தேசியத் தலைவர்களாலும் கூட அந்தப் பதம் பயன்படுத்தப்பட்டது. எனவே, அயல்நாட்டுக் கருதுகோளைக் (கான்செப்ட்) கம்யூனிஸ்டுகள் மட்டுமே பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்ட முடியாது!

            கம்யூனிஸ்ட் குழுக்கள் ஒரே அமைப்பாய்த் திரண்டு வடிவம் பெற்ற நிகழ்முறை, 1925 டிசம்பர் 25 முதல் 29 வரை கான்பூரில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் அமைப்பு மாநாட்டில் உச்சம் தொட்டது. தோழர் சத்யபக்தா முயற்சியில் மாநாடு, இந்தியாவில் இயங்கிய கை நிறைந்த எண்ணிக்கையிலான கம்யூனிஸ்டுகளை ஒன்றாய்க் கொண்டு வந்தது. அவர்களில் ராதா மோகன் கோகுல்ஜி, மௌலானா ஹஸ்ரத் மொஹானி; பம்பாய், லாகூர், கராச்சி மற்றும் கல்கத்தாவின் கம்யூனிஸ்ட் குழுக்கள்; டாங்கே, காட்டே, மிராஜ்கர், சிங்காரவேலர், ஹாசன், முசாஃபர் அஹமத் உள்ளிட்ட மற்றும் சிலரும் அடங்குவர். அதற்கு முன்னதாக, 1920 தாஷ்கண்டில் புரட்சியாளர்களின் ஒரு சிறு குழு, “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி  ஒன்றை அமைக்க எடுத்த முயற்சிகள் அதன் குறிக்கோளை எட்டத்  தவறிவிட்டன. அது இந்தியாவுடன் தீவிரத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதும் இல்லை அல்லது இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்டுகள் அதனை அங்கீகரிக்கவும் இல்லை.

எம்என் ராய் சிபிஐ-யின் ‘நிறுவனர்என்று சிலரால் தவறாகக் குறிப்பிடப்பட்டது. அது அவ்வாறு இல்லை என்பதை நூலாசிரியர் விரிவாக விளக்கி உள்ளார்.

1920ல் காமின்டர்ன் (சர்வதேசக் கம்யூனிஸ்ட் அகிலம்) இரண்டாவது மாநாட்டில் லெனின்ராய் கருத்து முரண்பாட்டை     இந்த இடத்தில் குறிப்பிடுவது தவறாகாது. அம்மாநாட்டில் எம்என்

ராய் அவரது அப்பட்டமான குழுவாத மற்றும் தீங்கு தரக்கூடிய போக்கிலான பாதையைத் (தேவையில்லாது) திணிக்க முயற்சி செய்தார்: ‘தலைமைப் பொறுப்பில் இருந்து முதலில் காந்திஜியின் தலைமையிலான தேசியப் பூர்ஷ்வா தலைமையை அகற்றுவதுஎன்பது அவர் முன்வைத்த கருத்து. ராய் கூறினார்:  “காலனிய நாடுகளில் புரட்சி/ சுதந்திர இயக்கம் தொழிலாளர் வர்க்கத் தலைமையின் கீழ்தான் சாத்தியம்.” லெனின், இந்தக் கருத்தமைவு மற்றும் அதனைத் தொடர்ந்த தந்திரோபாயச் செயல் திட்டப் பாதையை முற்றாக நிராகரித்தார். துரதிஷ்டவசமாக, ராய் தொடங்கி வைத்த குழுவாதப் (செக்டேரியன்) போக்கின் மிச்சசொச்ச ஒட்டுதல் தொடர்கிறது.

இந்தியாவில் வளர்ந்து வந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தை நசுக்க பிரிட்டிஷ் அரசு, முன்னணி கம்யூனிஸ்ட், தொழிலாளர் வர்க்க, தொழிற்சங்கத் தலைவர்கள் 32 பேர் மீது பொய்யான குற்ற விசாரணைகளை புனைந்து, மீரட் சதி வழக்குகளின் கீழ் கைது செய்தது. ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் நோக்கத்திற்கு எதிரான விளைவையே அது ஏற்படுத்தியது. இவ்வழக்கின் விசாரணைகளின் வழியாக, கம்யூனிஸ்ட் தத்துவம் குறித்துச் சாதாரண பொதுமக்கள் அறிந்து கொண்டு அறிவு வெளிச்சம் பெற்றனர்.

1933 வாக்கில் கைதிகள் விடுதலைக்குப் பிறகு, அவர்களில் மிக இளையவரான பிசி ஜோஷி 1935ல் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார். அவரது தலைமை வழிகாட்டுதலின் கீழ் சிபிஐ வரலாற்றில் ஒரு புதிய காலம் தொடங்கியது. 1936-ல், அனைத்திந்திய மாணவர்

பெருமன்றம் (AISF), அனைத்திந்திய கிசான் சபா (AIKS) மற்றும் முற்போக்கு எழுத்தாளர்கள் அமைப்பு (PWA) என இணைந்த மூன்று பெருந்திரள் மக்கள் அமைப்புகள் நிறுவப்பட்டன. சிபிஐ அதனது ‘தேசிய முன்னணி (நேஷனல் ஃபிரண்ட்) என்ற முழக்கத்தின் கீழ் தேசிய இயக்கத்தின் மீது ஓர் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. எதிர்கால நிகழ்வுகளின் மீது செல்வாக்கு செலுத்திய முக்கியத்துவமுடைய முதலாவது கட்சி காங்கிரஸ் மாநாட்டைக் கட்சி  1943ல் நடத்தியது.

இந்தியா, பாகிஸ்தான் என்ற  தேசப்   பிரிவினை மற்றும் அதனைத் தொடர்ந்த மோசமான வகுப்புவாதக் கலவரங்களுடன் 1947 ஆகஸ்ட் 15-ல் இந்திய நாடு விடுதலை பெற்றது. பிசி ஜோஷி தலைமையின் கீழ் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சுதந்திரத்தை மனதார வரவேற்று, நாடு முழுதும் கொண்டாடியது. நம் தேசத்திற்கு முழு சுதந்திரம் என்ற கோரிக்கையை 1921லேயே முதன் முதலில் எழுப்பியது கம்யூனிஸ்டுகளே ஆவர்.

1947 டிசம்பரில் பிசி ஜோஷியை மாற்றிவிட்டு பொதுச் செயலாளரானவரும் 1948 பிப்ரவரி மார்ச் மாதம் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது மாநாட்டில் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான பிடி ரணதிவே (பிடிஆர்)-ன் குழுவாதப் போக்கு காலத்தை

இந்நூல் ஆசிரியர் கூர்மையாக விமர்சிக்கிறார். பிடிஆர் பாதை ஆயுதப் புரட்சிக்கு அறைகூவல் விடுத்தன் மூலம் இயக்கத்திற்குப் பேரளவிலான சேதாரத்தை ஏற்படுத்தியது. சில அதிதீவிர இடதுசாரி சக்திகள் (வரலாற்று அனுபவத்திலிருந்து) இன்னும் பாடம் கற்க மறுக்கின்றன.

கட்சியைத் தேசிய அரசியல் மைய நீரோட்டத்திற்குக் கொண்டுவர உதவியடாங்கே, காட்டே மற்றும் அஜாய் கோஷ் ஆகியோரதுவரலாற்றுப் புகழ் பெற்ற 3 Pகள் கடிதம் குறித்து இந்நூலில் ஆசிரியர் விரிவாக விளக்குகிறார். இது இந்தியாவில் ஆயுதப் புரட்சி பாதை எந்த அளவு தவறானது என்பதைக் காட்டுகிறது.

1956-ல் புதிய உலகம் மற்றும் தேசிய நிலைமையைப் பிரதிபலித்து, குணாம்ச ரீதியில் புதிய பாதை உருவானதை ஆசிரியர் தெளிவாக விளக்கிறார். அது 1955 மற்றும் 1956ம் ஆண்டில் விவாதிக்கப்பட்டது (நான்காவது கட்சிப் பேராயம், பாலக்காடு)

1958ல் நடைபெற்ற அமிர்தசரஸ் ஐந்தாவது காங்கிரஸ் சிறப்பு மாநாடு பல வகையில் கட்சி வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்திய முக்கிய மைல்கல். கட்சி அமைப்புச் சட்டம் மாற்றப்பட்டது; அது ஜனநாயக அம்சத்தை அதற்கு அளித்தது. பாட்டாளிகளின் சர்வாதிகாரம் என்ற கோட்பாடு கைவிடப்பட்டது மற்றும் அமைதியான மாற்றம் வலியுறுத்தப்பட்டது.

1962 சீன ஆக்கிரமிப்பைச் சிபிஐ விமர்சித்தது   

1962ன் சீன ஆக்கிரமிப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி  விமர்சிக்கவில்லை என்ற தவறான பிரச்சாரத்தை இந்நூல் ஆசிரியர் உடைத்தெறிகிறார். உண்மையில், 1962 அக்டோபர் நவம்பரில் நடைபெற்ற தனது மத்திய செயற்குழு மற்றும் தேசியக் குழு கூட்டங்களில் சிபிஐ, சீன ஆக்கிரமிப்பை எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி விமர்சித்தது என்பதை இந்தப் புத்தகம் நிரூபிக்கிறது; மாவோயிஸ்டுகள் மற்றும் (கம்யூனிஸ்டுகளை விமர்சிப்பதற்கான தங்கள் வாய்ப்பை இழந்ததாக அதனைப் பார்த்த) தீவிர வலதுசாரிகளாலும் அந்த விமர்சனம் விரும்பப்படவில்லை. எதார்த்தச் செயல் திட்ட  உத்தி மற்றும் தந்திரோபாயப் பாதையை வகுப்பதற்கு வாய்ப்பான தருணம் ஒன்று இருந்தது; 1964ல் கட்சிப் பிளவிற்கு இட்டுச் சென்ற பிளவு நடவடிக்கைகள் காரணமாக அவ்வாய்ப்பு இழக்கப்பட்டது. இந்நூல் ஆசிரியர், பின்னணி நிகழ்வுகளைச் சுவைபட தந்து, கட்சிப் பிளவு துரதிஷ்டமானது மற்றும் தீங்கு நிறைந்தது எனக் குணாம்சப்படுத்துகிறார்.

வலதுசாரி பிற்போக்கு, ஏகபோக மூலதனம் மற்றும் ஏகாதிபக்தியத்திற்குப் பிளவு உதவுவதாகச் சிபிஐ கருதுகிறது.

இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குப் பிளவு நடவடிக்கைகள் மூலம் மாவோயிசம் பெரும் தீங்கிழைத்ததாக இந்தப் புத்தகம் கருதுகிறது.

இந்நூலை எழுதுவதற்கு இதன் ஆசிரியர் ஏராளமான வரலாற்றுத் தரவுகளைத் திரட்டியுள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முக்கிய பிரச்சினைகளைப் பேசும் இந்தப் புத்தகம், விவாதங்கள் மற்றும் முரண்பாடுகளையும் அறியத் தருகிறது. இந்நூல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு குறித்த அடிப்படை தகவல்களை வழங்குகிறது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த நூற்றாண்டில் இது போன்ற புத்தகங்கள் மேலும் கூடுதலாக வெளிவரட்டும் என நாம் நம்புவோம்!

வாசகர்களுக்கு இப்புத்தகம் மிக உயர்ந்த பயனுள்ள கருவியாக இருக்கும் என நம்பலாம். இந்தி மற்றும் பிற மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட இதன் பதிப்புக்கள் வெளியிடப்பட வேண்டும்; அப்போதுதான் கட்சியின் வரலாறு ஆகக் கூடுதலான பார்வையாளர்களைச் சென்றடையக் கூடியதாக இருக்கும்! இவ்வாண்டில் மொழியாக்கப் பதிப்புகள் மேலும் மேலும் வெளிவரட்டும்!                        


நன்றி: நியூ ஏஜ் (ஆகஸ்ட் 17– 23)

                        தமிழில்: நீலகண்டன்,

என் எஃப் டி இ, கடலூர்.

No comments:

Post a Comment