Wednesday, 23 July 2025

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு --133 எம் கல்யாண சுந்தரம்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு --133


எம் கல்யாண சுந்தரம் – தென்னிந்தியாவில் 
இரயில்வே தொழிலாளர்கள் மற்றும் 
கம்யூனிஸ்ட் இயக்கங்களைக் கட்டியவர்

                                            --அனில் ரஜீம்வாலே

ஒரு காலத்தில் தென்னிந்திய ரயில்வே (SIR) தொழிலாளர்கள் சங்கம் இந்தியாவில் மிக சக்தி வாய்ந்த இரயில்வே சங்கமாக இருந்தது. அதன் முக்கிய ஆதர்சமும் அதனைக் கட்டி எழுப்பிய முதன்மை சிற்பியும் “எம்கே என்று அறியப்பட்ட எம் கல்யாணசுந்தரம் ஆவார்.

மீனாட்சிசுந்தரம் கல்யாணசுந்தரம் 1909 அக்டோபர் 20ஆம் நாள், புகழ்பெற்ற காவிரி ஆற்றின் கரைகளில் அமைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டம் குளித்தலை நகரின் ஒரு பகுதியான கடம்பர் கோயிலில் (தற்போது அந்த இடம் கரூர் மாவட்டத்தின் ஒரு பகுதி) பிறந்தார். அவரது தந்தை திரு மீனாட்சி சுந்தர முதலியார் (மறைவு 1941) தாயார் திருமதி ராஜாம்பாள். அவர்களின் வீடு உறையூர் முதலியார் தெருவில் இருந்தது.

அவரது தந்தை உறையூரில் சுருட்டு கிடங்கின் கணக்குகள் எழுதும் வேலையைப் பார்த்துக் கொண்டே, மலைக்கோட்டை தருமபுர ஆதீன மௌன மடத்தில் பணியாற்றினார். தினசரி மடத்திற்குச் சென்று கவனித்துக் கொண்ட முதலியார் காங்கிரஸ் கூட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றார். அர்ப்பணிப்புள்ள தேசியவாதியான அவர் ஏராளமான சைவ இலக்கியங்களைப் படித்தார்.

கல்யாணத்தின் தாயார் மத நூல்களைக் கற்றவர் மற்றும் தாராளச் சிந்தனைப் போக்குடையவர். கல்யாண் மூன்று சகோதரர்களில் மூத்தவர்.

கல்வி

கல்யாண் ஆறாவது வயதில் (1915) கிருஷ்ண ஐயரின் இம்தாதி பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களைப் படிக்கத் தொடங்கினார். அவர் உறையூர் திண்ணைப் பள்ளியிலும் படித்தார்.

அது, முதல் உலக யுத்தம் மற்றும் அதன் பின் போருக்கு பிந்தைய சூழ்நிலைகளின் நெருக்கடிகள் மிகுந்த காலகட்டம்மண்ணெண்ணெய் மற்றும் அரிசி விலை விண் முட்டியது. கல்யாண் 12 வயதில் (1921) தேசியக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டார். தமிழ் இலக்கியமும் வரலாறும் அவரது விருப்பமான பாடங்கள். திருச்சி புனித ஜோசப் பள்ளியில் சேர்ந்த அவர் 1928ல், எஸ்எல்சி மெட்ரிக் தேர்வில்  மிக நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேறினார்.

19 வயதில் கல்யாண் தனது படிப்பை நிறுத்திவிட்டு டிஸ்ட்ரிக்ட் போர்டில் எழுத்தராகவும், பின்னர் (SIR) தென்னிந்திய ரயில்வேயில் எழுத்தராகவும் பின்பு ஸ்டோர் கீப்பராகவும் பணியாற்றினார்.

அன்னிபெசன்ட் அம்மையாரின் ஹோம் ரூல் இயக்கம் மற்றும் பிற இயக்கங்களின் தீவிர அரசியல் மையமாகத் திருச்சி திகழ்ந்தது; மற்றும் காந்திஜி, ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) முதலான தலைவர்களும் அங்கு நன்கு அறியப்பட்டவர்கள். கல்யாண் அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்ளத் தொடங்கினார்.

அரசியல் செயல்பாடுகள்

17 வயதில் கல்யாண் யூத் லீக் (இளைஞர் அமைப்பில்)  இணைந்தார். அந்நேரத்தில், பிராமண எதிர்ப்பு இயக்கம் பின்னணியில் இருக்க, காங்கிரஸ் மற்றும் நீதி கட்சிக்கு இடையே வெளிப்படையான மோதல்கள் நிகழ்ந்தன. கல்யாண் தானே ஒரு பிராமணர் அல்லாதவராக இருந்த போதும், இரண்டு கட்சிகள் இடையே பெரிய வேறுபாடுகளைக் காணவில்லை.

ரயில்வே துறை பணிகள் அவரது வாழ்க்கையின் திசை வழியை மாற்றியது. அவரது அனுதாபம் ஆதரவு உப்பு சத்தியாகிரகக்காரர்களுடன் இருந்தது. 1930ல் மாதம் 28 ரூ சம்பளத்தில் திருச்சி இரயில்வே நிலையத்தில் ஒரு எழுத்தராக எம்கே பணியை மேற்கொண்டார். பின்னர் ஈரோடு இரயில் நிலையத்தில் ஸ்டோர் கீப்பர் பணியைப் பெற்றார். அங்கே ஒரு யூத்லீக் அமைப்பை ஏற்படுத்தியவர், தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் பிரச்சனைகளுடன் மிக நெருக்கமாக இருந்தார்.

அவரது குடும்பத்தினர் அவரைத் திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்த அதை ஏற்று அடுத்த ஆண்டு 1932-ல் அவர் லோகாம்பாள் அம்மையாரை மணந்தார்.

1938ல் இரண்டாம் உலகப் போர் வெடிக்கும் அச்சுறுத்தல் பின்னணியில் பெருமளவில் ஆட்குறைப்பு செய்யப்பட்டு தொழிலாளர்கள் வேலையைவிட்டு நிறுத்தப்பட்டனர். இதன் மத்தியில்  மார்க்ஸியம் அறிந்த டி கிருஷ்ணமாச்சாரியை அவர் சந்திக்க நேர்ந்தது. அவர் மார்க்சிய நூல்களையும் மார்க்சியக் கையேடு நூல் ஒன்றையும் அளித்தார்.

 தொழிற்சங்க இயக்கம்

     பி ராமமூர்த்தி, ஜீவானந்தம் இருவரையும் தொழிலாளர்கள் உரையாற்றுவதற்காக அழைப்பது வழக்கம். குறிப்பாக, கல்யாண் ஜீவானந்தத்தின் பேச்சில் ஈர்க்கப்பட்டார். 1938ல் மஸ்தூர் சபா (தொழிற் சங்கம்) ஒன்றை யூத் லீக் நிறுவியது; கல்யாண் அதன் தலைவரானார். தென்னிந்திய இரயில்வே தொழிலாளர்கள் மத்தியில் அவர் கடுமையாகப் பணியாற்றி பல இடங்களுக்கும் சென்று அவர்களை ஒன்று திரட்டினார். தென்னிந்திய ரயில்வேயில் பின்பு தொழிலாளர்களின் மத்திய தொழிற்சங்கம் நிறுவப்பட்டது; கல்யாணசுந்தரம் அதன் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருச்சி பொன்மலைக்கு இடமாறுதல் செய்யப்பட அங்கு அவர் ரயில்வே மற்றும் பிற தொழிலாளர்கள் மத்தியில் தீவிரமாகப் பணியாற்றினார். அனைத்து இந்திய ரயில்வே தொழிலாளர்கள் மாநாட்டின் வரவேற்புக் குழு தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    1934ல் எம்கே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 1937ல் இருந்து 9 ஆண்டுகள் திருச்சி தாலுக்கா காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தார். ராஜாஜி, விவி கிரி மற்றும் டிஎஸ்எஸ் ராஜன் ஆகியோருடன் நெருங்கிய நட்பு கொண்டார். 1936 வாக்கில் கல்யாணசுந்தரம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.

கேடி ராஜு, பிஎம் சுப்பிரமணியன் மற்றும் ஜே பி புருஷோத்தமன் ஆகியோருடன் சேர்ந்து அவர் ஜனநாயக இளைஞர் அசோசியேஷன் ஒன்றைத் தொடங்கினார். காங்கிரஸ் தனது பொன் விழாவைக் கொண்டாடிய 1935ஆம் ஆண்டில் ஜனநாயக இளைஞர் அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் காங்கிரஸில் இணைந்தனர்.

பம்பாயில் இருந்து வெளியேற்றப்பட்ட சில தோழர்கள் திருச்சி வந்தனர். எம்கே அவர்களுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொண்டார். சட்டவிரோத கம்யூனிஸ்ட் பிரசுரங்களை வழங்குவதில் அவர்களுக்கு உதவினார், மே தினத்தைக் கொண்டாடினார்.

1939ல் எம்கே (மலபாரில் இருந்து) வெளியேற்றப்பட்ட ஏகே கோபாலன், சுப்பிரமணிய சர்மா மற்றும் (அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட) பாலதண்டாயுதம் ஆகியோருடன் தொடர்பு கொண்டார். அவர்கள் தொழிலாளர்கள் மத்தியில் அரசியல் வகுப்புகளை நடத்தினர்.

இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய மோகன் குமாரமங்கலம் எம்கே-வுக்குப் பெரிதும் உதவினார்.

இரண்டாம் உலகப்போர் வெடித்தபோது எம்கே, “ஒவ்வொரு கிராமத்திலும் செங்கொடி என்ற முழக்கத்தைத் தந்து, ஒவ்வொரு கிராமம் மற்றும் ரயில்வே நிலையத்திலும் செங்கொடியை ஏற்ற உற்சாகப்படுத்தினார்.

ஈரோடு மற்றும் 2500 மைல் நீளமான ரயில்வே பாதையில் அமைந்த விழுப்புரம், மதுரை, கொல்லம் மற்றும் பொன்மலை ஆகிய இடங்களில் எம்கே தொழிற்சங்கம் அமைத்தார். உலகப் புகழ் பெற்ற தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கம் (எஸ்ஐஆர்எல்யூ) 1937ல் நிறுவப்பட்டது; அதன் தொடக்க விழா மாநாடு 1937 நவம்பர் 19ல் பொன்மலையில் நடைபெற்றது. எம்கே துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்- பட்டார். பா ஜீவானந்தம், பி. ராமமூர்த்தி மற்றும் கேஏ சாரி முதலானோரும் ஓய்வின்றி பணியாற்றினர்.

தொழிற்சங்க இயக்கத்தில் ஒரு கம்யூனிஸ்ட் ஆக உருவானவர் ‘தொழில்அரசு’ என்ற இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். ரயில்வே நிர்வாகம் ஊதியம் மற்றும் மதிப்பளிப்பதில் இந்தியர்களை அவமரியாதையாக நடத்தியது. இந்திய ரயில் வண்டி ஓட்டுநர்கள் சாதாரண பாசஞ்சர் ரயில்களை மட்டுமே இயக்க முடியும், விரைவு ரயில்களை அவர்கள் இயக்க முடியாத நிலை இருந்தது. விரைவு ரயில்கள் ‘வெள்ளையர்கள்அல்லது ஆங்கிலோ இந்தியர்கள் மட்டுமே ஓட்ட முடியும். ஆனால் எம்கே தளர்வின்றி தொடர்ச்சியாகப் போராடியதன் விளைவாய் இந்தியர்களும் விரைவு ரயில்களை ஓட்டலாம் என்ற மாறுதல் ஏற்பட்டது!

மூவர்ணக் கொடி ஏற்றல்

1940 ஜனவரி 26 அன்று ரயில்வே தொழிலாளர்கள் சங்கம் சுதந்திரதின விழாவைக் கொண்டாடியது. இரயில்வே பணிமனை நுழைவாயிலான பொன்மலை ஆயுதக் கிடங்கு நுழைவாயிலில் (ஆர்மரி கேட்) மூவர்ணக் கொடி ஏற்றுவதை ரயில்வே நிர்வாகம் தடுத்தது. எம்கே துணிச்சலாக மாபெரும் பேரணியைத் தலைமையேற்று நடத்தி கொடியேற்றினார். எம்கே, தொழிலாளர்களுக்கு மிக மலிவான விலையில் அரிசி கிடைக்கவும், மலிவு விலையில் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் கிடைக்கவும் செய்தார்.

எம்கே-வை ஒரு ‘தீவிரவாதிமற்றும் கம்யூனிஸ்ட் என  வர்ணித்து ரயில்வே பொது மேலாளர் மூர்கெட் (Moorhead) கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதினார். கைது செய்யப்பட்ட எம்கே, 1940 ஏப்ரலில் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனையில்  அலிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார், அந்தச் சிறையின் நிலைமை தாங்க முடியாத கொடுமையாக இருந்தது.

தொழிலாளர்களைக் கட்டாயமாக இராணுவத்திற்கு ஆள் எடுப்பதையும் எம்.கே தலைமையில் தொழிலாளர்கள் எதிர்த்தனர். அவரது தலைமையின் கீழ் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். சிறை நிர்வாகம் அவரைத் தனிமை சிறையில் அடைத்தது. அங்கே அவர் கடுமையாக வேலை செய்யவும் சித்திரவதைகளை அனுபவிக்கவும் நேர்ந்து கடுமையான ஜுரத்தில் துன்பப்பட்டார்.

இதன் மத்தியில் பிற்போக்கு மற்றும் அறிவுக்கு எதிரான கத்தோலிக்க சர்ச் பாதிரியார்கள் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான பிரச்சாரத்தை நடத்தி, பெண்களிடம் அவர்கள் பேச்சைக் கேளாதீர்கள் என்றனர். பிரார்த்தனை ஜெபக் கூட்டங்களிலும் அவர்களிடம் “உங்கள் கணவன்மார்களைக் கம்யூனிஸ்டுகளிடம் சேர விடாதீர்கள்என்று எச்சரித்தனர்.

இரண்டாவது உலகப் போரின்போது எம்கே மீண்டும் கைது செய்யப்பட்டாலும் ஆறு மாதங்களுக்குள் விடுதலை ஆனார். 

SIRLU சங்கத்தின் ஒன்பதாவது மாநாடு 1945 ஜூன் மாதம் 3 நாட்கள் நடைபெற்றது. கண்மூடித்தனமான வேலை நீக்கங்களுக்குத் தடை, 8 மணி நேரம் வேலை மற்றும் உறுதியளிக்கப்பட்ட பதவி உயர்வு கோரிக்கைகளை மாநாடு எழுப்பியது. சங்கத்தில் 26,000 உறுப்பினர்கள் இருந்தனர். நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கம் பிள்ளை, விவி கிரி, பத்திரிக்கை ஆசிரியர் கல்கி, கே பி சுந்தராம்பாள், மலையாளக் கவிஞர் வள்ளத்தோள் மற்றும் பலர் மேடைக்கு வந்தனர். பின்னர் கல்கி எழுதும்பொழுது, “இரயில் வண்டியின் அனைத்துச் சக்கரங்களும் திரும்பத் திரும்ப கல்யாணசுந்தரம், நம்பியார்கல்யாண சுந்தரம், நம்பியார் என்று ஒலித்தது என எழுதினார்!

மத்தியில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டபோதும் ரயில்வே மற்றும் காவல் துறை தொடர்ந்து வெள்ளையர்கள் கையில் இருந்தது. ரயில்வே நிர்வாகம் எஸ்ஐஆர்எல்யூ சங்கத்தைப் பழிவாங்கத் துடித்தது. ஒரு வேலை நிறுத்தத்தின்போது தென்னிந்தியா முழுவதும் ஒரு ரயில் கூட ஓடவில்லை. அதில் எம்கே முக்கிய பங்கு வகித்தார்.

மகளின் மரணம்

எம்கே வேலை நிறுத்தப் பணி தொடர்பாகச் சென்னையில் (அப்போது மெட்ராஸ்) இருந்தபோது அந்தத் துயர நிகழ்வு நடந்தது. அவரது எட்டு வயதேயான ஒரே மகள் வீரபூஷணம் பாம்புக்கடி காரணத்தால் மரணமடைந்தார்.

திருச்சிக்கு விரைந்த எம்கே காலையில் அவரது அன்புக்குரிய மகள் உடலைப் புதைத்துவிட்டு மாலை தொழிலாளர்களின் கூட்டத்திற்காகப் பொன்மலைக்குத் திரும்பினார்! எம்கே உரையாற்ற எழுந்தார், கூட்டத்தினர் கண்கலங்கித் தேம்பினார்களே தவிர, எம்கே அல்ல. எதிர்ப்பை நசுக்கும் நோக்கத்துடன் போலீஸ் அதிகாரி ஹாரிசன் செப்டம்பர் 5ம் தேதி மலபார் போலீசுடன் சங்க அலுவலகத்திற்கு வந்தார்.

தொழிலாளர்கள் சங்க மைதானத்தில் ரேடியோவில் செய்திகள் கேட்டுக் கொண்டிருந்தனர். ஹாரிசன் துப்பாக்கியால் சுட்டதில் 30 வயதுகூட ஆகாத ஐந்து இளைஞர்கள்

அங்கேயே இறந்து போயினர். கடுமையான தாக்குதலுக்கு ஆளான அனந்தன் நம்பியார் இறந்துவிட்டதாகவே கருதினர். ஹாரிசன் துப்பாக்கியால் சுட முயன்றதிலிருந்து எம்கே-வைக் காப்பாற்ற தோழர்கள் கடுமையாக முயன்றனர். துப்பாக்கி தோட்டா ஏற்படுத்திய காயத் தழும்பு அடையாளத்தை அவரது எஞ்சிய வாழ்நாள் முழுதும் காண முடிந்தது. அந்நிகழ்வு தென்னிந்தியாவின் ஜாலியன் வாலாபாக்.

தொழிற்சங்க ஆண்டு மாநாடுகள் பொன்மலையில் பெரும் கலை இலக்கிய மற்றும் அரசியல் மாநாடுகளாக நடத்தப்பட்டன. பொன்மலை தொழிற்சங்கம் எம்கே தலைமையில், மகாத்மா காந்தி, ராஜாஜி, விவி கிரி,  (பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளரான) ஹாரி பொலிட் மற்றும் (பிரிட்டன் அரசியல்வாதியும் கம்யூனிஸ்ட் தலைவருமான) ரஜினி பால்மே தத்  போன்ற தேசிய மற்றும் சர்வதேசத் தலைவர்களை வரவேற்றது.

1946 மாபெரும் பெருந்திரள்  எழுச்சி

அரசியலமைப்பு நிர்ணய சபைக்கான தேர்தலின் ஒரு பகுதியாக (மெட்ராஸ்) மாகாணத்தில் ஒரு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) –வரையறுக்கப்பட்ட வாக்காளர்கள் என்ற போதும் 7 லட்சம் வாக்குகளைப் பெற்று 9 இடங்களை வென்றது.

1946 ஆகஸ்ட் /செப்டம்பரில் தொழிலாளர் வர்க்க வேலை நிறுத்தத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐந்து தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். 1946 நவம்பரில் கோயம்புத்தூரில் நடத்தப்பட்டத் துப்பாக்கி சூட்டில் 11 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

பொன்மலைத் தொழிலாளர்கள் மற்றும் கல்யாணசுந்தரத்தின் வீரகாவிய சகாப்தம்

1946 செப்டம்பரில் 5ம் நாளில்தான் பொன்மலை ரயில்வே காலனி மைதானத்தில் 5 ரயில்வே தொழிலாளர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தொழிலாளர் இயக்க வரலாற்றுப் பக்கங்களில், 1940கள் மற்றும் 50களின் பொன்மலை ரயில்வே பணிமனை தொழிலாளர்களின் இயக்கம் ஒரு வரலாற்று அத்தியாயமாகும். 1918ல் நாகப்பட்டினத்தில் அமைக்கப்பட்ட தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கம் (SRLU) ரயில்வே தொழிலாளர் இயக்கத்தின் முக்கிய மையமானது. 1927 செப்டம்பரில் காந்திஜி சங்க அலுவலகக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் 1928ல் (ஒர்க் ஷாப்) பணிமனை (திருச்சி) பொன்மலைக்கு மாற்றப்பட்டது.  தென்னிந்திய ரயில்வே முழுவதும் ஆட்குறைப்பு மேற்கொள்ளப்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்; அதன் விளைவாய் 1928ல் நடைபெற்ற பத்து நாள் வேலை நிறுத்தம் சர்வதேச நிகழ்வானது. பொன்மலை ரயில்வே சங்கம் ரயில்வே தொழிலாளர் இயக்கத்தின் முக்கிய மையமானது.

சிங்காரவேலர், ஜீவானந்தம், பி ராமமூர்த்தி மற்றும் பின்னர் கல்யாணசுந்தரம் அமைப்பைக் கட்டி எழுப்ப உதவினர்.

ரயில்வே தொழிலாளர்களின் போராட்டம் விடுதலைப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்தது. SRLU முன்னோடித் தலைவரான, ஒரு காங்கிரஸ்காரரும் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சிகாரருமான எஸ் பரமசிவம் 1932 லிருந்து மீண்டும் புனரமைக்கப்பட்ட சங்கத்தைத் தலைமையேற்று நடத்தினார். அதன் பிறகு எம். கல்யாணசுந்தரம் மற்றும் அனந்தன் நம்பியார் சங்கத் தலைமை ஏற்றனர்.

1946ல் தென்னிந்திய ரயில்வே ஊழியர்கள் சில உரிமைகள் திரும்பப் பெறப்பட்டதை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்தனர்; அதில் பொன்மலை தொழிலாளர்கள் மையமாகத் திகழ்ந்தனர். செப்டம்பர் 5 ஹாரிசன் தலைமையில் போலீஸ்காரர்கள் தொழிலாளர்களைத்

தாக்கினர். கல்யாணசுந்தரத்தைத் துரத்திய அவர்களிடமிருந்து தொழிலாளர்கள் அவரைக் காப்பாற்றினர்; நம்பியார் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டார். தொழிலாளர்- களின் தலைவர்களான தங்கவேலு, தியாகராஜன், ராஜு, ராமச்சந்திரன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். தியாகிகளுக்கான நினைவுச் சின்னம் சங்க அலுவலகத்தை அடுத்த மைதானத்தில் நிறுவப்பட்டுள்ளது. நாட்டில் போருக்குப் பிந்தைய எழுச்சியின் ஒரு பகுதியாக, சரித்திரப் புகழ்பெற்ற 1946 ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தம்   விளங்குகிறது. 

விடுதலை பெற்ற இந்தியாவின் தென்பகுதி தொழிலாளர் இயக்கத்தின் கதாநாயகனாகக் கல்யாணசுந்தரம் உருவானார்.

தொழிலாளர்கள் ஓட்டிய  ரயில்கள்

1947க்கு பிந்தைய வெறித்தனத்தில் வட இந்திய வகுப்புவாத கலவரங்களின்போது ரயில் ஓட்டுனர்களின் அச்சம் காரணமாக ரயில்கள் ஓடவில்லை. பிரதமர் நேரு மக்களைக் காப்பாற்ற தொழிலாளர்களுக்கு ரேடியோ மூலம்  வேண்டுகோள் விடுத்தார். SIRLU சங்கம் அந்த வேண்டுகோளை ஏற்று கல்யாணசுந்தரம் முன் முயற்சியில் ரயில் ஓட்டுநர்கள் இரண்டு குழுக்களாக வட இந்தியா அனுப்பி வைக்கப்பட்டனர்; அங்கே அவர்கள் ஐந்து மாதங்கள் ரயில் வண்டிகளை இயக்கி லட்சக்கணக்கான மக்களைக் காப்பாற்றினர். ஈடு இணையில்லா அந்தச் செயல் இதற்கு முன் காணாததும் மாபெரும் தேசபக்த கடமையும் ஆகும்.

விடுதலை பெற்ற இந்தியாவும் தேர்தல்களில் எம்கேவும்

எம் கல்யாணசுந்தரம் 1952 பொதுத்தேர்தலில் திருச்சி தெற்கு அசெம்பிளி தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சிதறிக் கிடந்த சேரிவாழ் மக்களை ஆதரித்ததும் அவர்களின் குடியிருப்புகளைக் காப்பாற்றியதும் அவரது சாதனைகளில் ஒன்று. மதுரை ரோடு, குப்பன் குளம் (தற்போது கல்யாணசுந்தரபுரம்), தேவஸ்தானம் தோப்பு, இனாம்தார் தோப்பு, கண்ணன் தோப்பு, தாரநல்லூர் கல்மந்தை, உறையூர் கல்மந்தை, வராகனேரி, வள்ளுவர் தெரு, அந்தகொண்டான் மற்றும் நாதர்ஷா தர்கா ஆகிய இடங்களில் இருந்த மக்களை விரட்டி காலி செய்ய நிர்வாகம் முயன்றது. ‘போலீஸ் லாரி அல்லது புல்டோசர் மட்டுமே எனது உடலின் மீது ஏறிச் சென்று குடிசையைத் தொடலாம்என்று முழங்கினார் எம்கே. சேரி குடியிருப்புகள் காப்பாற்றப்பட்டன.

நகரத்தில். கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகை கட்டுப்பாடு) பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட அவர் உதவினார்; இதன் மூலம் திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, சேலம் மற்றும் சென்னையில் பல ஆயிரக்கணக்கான சேரி குடியிருப்புகள் காப்பாற்றப்பட்டன.

விவசாயிகள் போராட்டத்தில் நிலத்தை உழுத விவசாயிகளோடு எம்கே தானே ஏர் பிடித்து நிலத்தில் உழுது போராடினார். இந்தப் போராட்டத்தில் அப்போதைய குளித்தலை எம்எல்ஏவாக இருந்த கலைஞர் கருணாநிதி எம்கே உடன் சேர்ந்து போராடினார். பொய்யாமணியில் 5000 விவசாயிகளின் போராட்டத்திற்கு எம்கே தலைமை ஏற்றார்.

1954ல் சட்டமன்றத்தில் கல்யாணசுந்தரம் பின்வரும் கோரிக்கையை எழுப்பினார்: “அரசு ஏழைக் குழந்தைகளுக்குப் புத்தகங்கள், ஸ்லேட் பலகைகள் மற்றும் பிற கல்வி உபகரணங்களை விலையின்றி இலவசமாக வழங்க வேண்டும். எம்கே-வின் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.  

1952, 1957 மற்றும் 1962 தேர்தல்களில் திருச்சி சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 1971–76, 1977 மற்றும் 1980ல் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், 1980–86 இல் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார்.

தமிழ்நாட்டில் எம்ஜிஆர், அஇஅதிமுக என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியபோது எம்கே அவருக்குச் சரியான ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கினார்.

மதுரையில் உயர் நீதிமன்றத்தின் கிளை அமைய உதவினார். 1960லேயே அவர் சென்னையில் (அப்போதைய மெட்ராஸ்) மேம்பாலங்களின் (ஃபிளை ஓவர்ஸ்) அவசியத் தேவை குறித்துப் பேசினார். 1961ல் தென்னக நதிகளைப்  பயன்படுத்துவதற்கு  முதன்மை பெரும் திட்டம் தீட்டப்பட வேண்டிய தேவையை வற்புறுத்தினார். “வளமான தமிழ்நாடு, வலிமையான இந்தியா என்ற முழக்கத்தை அவர் தந்தார்.

சிறை சித்ரவதைகள் காரணமாக விலா எலும்பு முறிவால் பாதிக்கப்பட்ட அவரது உடம்பு ஒரு கார் விபத்ததால் மேலும் சீர் கெட்டது.

கட்சியில் 1968 முதல் 1978வரை தமிழ் மாநிலச் செயலாளராகவும், சிபிஐ மத்திய குழு (CEC) உறுப்பினராகவும்  நீண்ட காலம் பணியாற்றினார். தொழிற்சங்க அரங்கில் ஏஐடியுசி- யின் துணைத் தலைவர்.

மறைவு

1988 ஜூன் 16ல் அவர் பம்பாய் கப்பல் மற்றும் துறைமுக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு கப்பல் மற்றும் துறைமுகத் தொழிலாளர்களின் நான்கு  சம்மேளனங்கள் அறிவித்த வேலை நிறுத்த பேச்சுவார்த்தை தொடர்பாக ஜூன் 19ல் டெல்லி புறப்பட்டார். நெஞ்சுவலி காரணமாக ஜூன் 20 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தோழர் எம்கே அன்று இரவு 8 மணிக்கு இறந்தார். தைலக்காப்பில் பாதுகாக்கப்பட்ட அவரது புகழுடம்பு ஜூன் 21ல் ஏஐடியூசி அலுவலகத்தில் வைக்கப்பட ஏராளமான தோழர்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் மெட்ராசுக்கு விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு மாபெரும் இறுதி ஊர்வலம் நடந்தது.

வாழ்க தோழர் எம்கே புகழ்!

--நன்றி : நியூஏஜ் (ஜூலை 20 –26)    

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ கடலூர்.

 

.

1 comment:

  1. இக்கட்டுரையில் தோழர் எம் கே மறைவு தேதி ஜூன் 20 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது சரியானது அல்ல. தோழர் எம்கே மறைந்த நாள் ஜூலை 27 என்பதே சரியானது என தோழர்கள் தெரிவிக்கின்றனர்

    ReplyDelete