Thursday, 7 August 2025

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 132 --P சுந்தரய்யா

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 132


  P
சுந்தரய்யா –தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தின் முன்னணி வீரர், விவசாயிகள் புரட்சிக்காக அர்ப்பணித்தவர்

அனில் ரஜீம்வாலே

1946 –50களின் சரித்திரப் புகழ்பெற்ற தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தின் முன்னணி வீரர்களின் ஒருவரான பி சுந்தரய்யா, தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டியவர்களில் ஒருவர்.

புச்சலப்பள்ளி சுந்தரய்யா 1913 மே 1ல் ஆந்திரா பகுதி வேலூர் மாவட்டத்தின் கோவூர் தாலுக்கா அலகன்நீபொது கிராமத்தில் பிறந்தார். பெற்றோர்கள் அவருக்கு சுந்தரமி ரெட்டி எனப் பெயர் சூட்டினர். அவரது தந்தை 50 ஏக்கர் நெல் வயல்களைச் சொந்தமாக உடைய‌ ஒரு நில உடமையாளர், தாயார் மிகுந்த மத உணர்வுடைய பெண்மணியான திருமதி சேஷம்மா தன் மகன் மீது ஆழமான பிரியமுள்ளவர். அவருக்கு ஆறு வயதாகும் போது தந்தை இறந்து விட்டார்.

கிராமத்தில் உயர் சாதியினருக்கும் மற்றும் தீண்டத்தகாதவர்களுக்கும் என இரண்டு தொடக்கப் பள்ளிகள் இருந்தன. அந்த இளம் வயதில் சுந்தரய்யா அதன் விளைவுகளைப் பற்றி அறியாமல் இருந்தார். கிராமத்தில் இரண்டு ஆண்டுகள் படித்த பிறகு அவரது மைத்துனருடன் வசித்தார்; முன்சீப் மேஜிஸ்ட்ரேட்டான அவர் அடிக்கடி இடம் மாறிக் கொண்டிருந்தார். அவருடன் சுந்தரய்யாவுமகூட திருவள்ளூர், ராஜமுந்திரி மற்றும் இறுதியாக மெட்ராஸ் (இன்றைய சென்னை) என இடம் மாறினார். சுந்தரய்யா 16ம் வயதில் (1929) ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் இருந்து நுழைவுத் தேர்வில் தேறிய பிறகு லயோலா கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.   

சுந்தரய்யா தனது தாயாரின் தாக்கத்தால் தெலுங்கு ராமாயணம் படித்து பகவான் ராமரின் பக்தரானார். தெலுங்கு இலக்கியங்கள் மீது விருப்பத்தை வளர்த்துக் கொண்டது, தேசியவாதியாக அவருக்கு உதவியது.

அரசியலுடன் தொடர்பு

தலைமறைவு தீவிரவாத இயக்கத்துடன் (தேசிய புரட்சி இயக்கம்) கூட அவருக்கு தொடர்பு ஏற்பட்டது எனினும் அதே நேரத்தில் காந்தியவாதியாகவும் ஆகி ஏராளமான காந்திய நூல்களை விரிவாகப் படித்தார். மேலும் அவர் இராம தீர்த்தர், சுவாமி விவேகானந்தர், திலகரின் கீதா ரகசியம் போன்ற நூல்களையும் படித்ததுடன் யோகா மற்றும் கர்ம யோகா செல்வாக்கிற்கும் ஆட்பட்டார். பிச்சைக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு உதவிய ராமகிருஷ்ணா மிஷன் நடவடிக்கைகளையும் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வந்தார்.

1928ல் சைமன் கமிஷன் மெட்ராஸ் வந்தபோது அதனை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுந்தரய்யா பங்கு கொண்டார். கல்வி பாடங்களைப் பொறுத்தவரை கணிதம், இரசாயனம், பௌதிகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் விஞ்ஞானம் உள்ளிட்ட பரவலான துறைகளில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆந்திராவில் இளைஞர்கள் அமைப்பு ஒன்றிலும் அவர் இணைந்தார்.

காந்திஜின் 1930 உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொள்வதற்காக அவர் தனது படிப்பைக் கைவிட்டார்; மேற்கு கோதாவரி மாவட்ட 200 சத்யாகிரகிகள் அடங்கிய அணிக்கு அவர் “கேப்டன் ஆக்கப்பட்டார். இது குறித்து அவர் தனது தாய் மற்றும் மூத்த சகோதரருக்குக் கடிதம் எழுதினார் மற்றும் பீமவரம் சத்தியாகிரக முகாமில் இணைந்து கொண்டார். திரும்ப வரும் வழியில் அவர் விவசாய தொழிலாளர் உடன் பணியாற்றினார்.

போலீஸ் அவரைக் கைது செய்து தண்டித்து இரண்டு ஆண்டுகள் தஞ்சாவூர் சிறுவர்கள் சீர்திருத்தச் சிறைக்கு அனுப்பியது. சிறையின் மோசமான நிலையைக் கண்டித்து அவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அதன் பிறகு அவரை வேறு இடத்தில் இரண்டரை மாதங்கள் தனிமை சிறையில் அடைத்தனர். சிறையில் அவர் இந்தி மொழியைக் கற்றார்.

1931 மார்ச் காந்தி இர்வின் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து விடுதலை செய்யப்பட்டவர் தனது மைத்துனர் இருந்த பெங்களூர் சென்றார், கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது கிடைத்த கம்யூனிஸ்ட் இலக்கியங்கள் மற்றும் நூல்களையும் படித்தார்.

அமீர் ஹைதர்கான் உடன் சந்திப்பு

1931 ஆகஸ்டில் பெங்களூரில்தான் சுந்தரய்யா புகழ்பெற்ற அமீர் ஹைதர்கானைச் சந்தித்தார். அது அவரது வாழ்க்கையை மாற்றியது, அர்ப்பணிப்புள்ள கம்யூனிஸ்ட் ஆனார்.

சுந்தரய்யாவைச் சந்திக்க அமீர் ஹைதர்கானின் தோழரான ஜெயராமன் அவரைப் பெங்களூர் அழைத்து வந்தார். தனிப்பட்ட விஷயங்களிலும் கூட ஒரு கண்டிப்பான காந்தியரான சுந்தரய்யா, மழிக்கப்பட்ட தலையில் உச்சிக் குடுமியுடன் கதர் உடையில் தோற்றமளித்தது, அவரைக் காண வந்த விருந்தினர்களை அதிர்ச்சி அடைய செய்தது.  அவர் பேச மறுத்தார்: அது மதிய உணவு நேரம், பிறகு வீட்டுப் பணிகளுக்கான நேரம். எனவே “நாம் நாளைச் சந்திக்கலாம் என்றார்!

அவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு பூங்காவில் சந்தித்தனர். அப்போது அமீர் ஹைதர்கான், காந்தியம் மற்றும் ‘தேசிய பூஷ்வாக்கள்மீது கடுமையாக விமர்சனம் செய்தும் கம்யூனிஸ்டுகளை புகழ்ந்தும் பேசியதில் சுந்தரய்யாவின் முகம் தட்டையானது! அவர் சட்டென்று “நான் போக வேண்டும் என்றார். அந்த விமர்சன உரைகள் தோல்வியில் முடிந்ததாகத் தோன்றியது; எனினும் சுந்தரய்யாவின் வலிமையான பாதுகாப்பு கவசத்தில் அவர்களால் துளையிட்டுச் செல்ல முடிந்தது. யூனியன் ஜாக் கொடி பறந்த அந்த பங்களாவை விட்டு அவர் சென்றார், பின்னர் மெட்ராசுக்கு இடம் மாறினார். விரைவில் சுந்தரய்யா தொழிலாளர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் நடவடிக்கைகளில் ஆழ்ந்து போனார்!

1934ல் ஹைதர்கான் சிறையிலிருந்து வெளியே வந்த நேரம், கம்யூனிஸ்ட் நடவடிக்கைகளில் மூழ்கிப் போயிருந்த சுந்தரய்யா, இளம் தொழிலாளர்கள் அமைப்பிலும் (எங் ஒர்க்கர்ஸ் லீக், YWL) இணைந்திருந்தார். YWL அமைப்பில் அமீர் ஹைதர்கானை வரவேற்று சுந்தரய்யா வரவேற்பு உரையாற்றவும் செய்தார். இளைஞர் லீகின் கிளைகள் ‘ஆந்திர தேசத்தில் சுந்தரய்யாவால் அமைக்கப்பட்டன.

YWL அமைப்பு தடை செய்யப்பட்டதும், தொழிலாளர் பாதுகாப்பு லீக் என்ற அமைப்பு ராஜவடிவேலு, அவரது சகோதரர் (ரஷ்ய மாணிக்கம் என்று அறியப்பட்ட) பி. மாணிக்கம், ஏஎஸ்கே (ஐயங்கார்), கே சத்யநாராயணா (சீனியர்) மற்றும் பி சுந்தரய்யாவால் ஏற்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் அமீர் ஹைதர், சிங்காரவேலர், மிராஜ்கர், காட்டே, சுந்தரய்யா முதலானவர்கள் அனைவரும் மெட்ராஸில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பை நிறுவிட எண்ணினர்.

சுந்தரய்யாவின் அந்தஸ்து கிடுகிடுவென வளர்ந்தது; 1934லேயே அவர் சிபிஐ மத்தியக் கமிட்டி(CC)யில் இணைத்துக் கொள்ளப்பட்டார்: 1933–34 மீரட் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட பிறகு, அப்போது  அவருக்கு வயது வெறும் 22,

பி எஸ் (பி சுந்தரய்யா), ஆந்திரா கடற்கரையோர மாவட்டங்களிலும் தெலுங்கானா

 பகுதியிலும் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்ட உதவினார். அதே நேரத்தில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி (CSP)யிலும் அவர் பணியாற்றினார்; கிருஷ்ணப்பிள்ளை, இஎம்எஸ் மற்றும் கேரளாவில் இருந்து வந்த அதன் பிற தலைவர்களைச் சந்தித்தார்.  1937ல் காட்டே மற்றும் பிஎஸ் முன்னிலையில் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை அமைக்கப்பட்டது.

மெட்ராஸ் மாகாணத்தில் சிபிஐயின் முதல் கிளை (மெட்ராஸ் மாகாணத்தின் ஒரு பகுதியான) தமிழ்நாட்டில் பி ராமமூர்த்தி, ஜீவானந்தம், பி சீனிவாச ராவ், ஏஎஸ்கே ஐயங்கார், சுந்தரய்யா மற்றும் பிறருடன் 1936ல் நிறுவப்பட்டது.

1936ல் அகில இந்திய கிசான் சபாவை (AIKS) நிறுவிய நிறுவன உறுப்பினர்களில் பிஎஸ்-ம் ஒருவர். மேலும் அவர் அதன் இணை செயலாளர்களில் ஒருவராகவும் இருந்தார்.

சுந்தரய்யா குறிப்பாக, விவசாயம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் கொண்டிருந்தார். சாதிய அமைப்பு முறை, கிராமங்களில் ஊடுருவிய ஆணாதிக்க உறவுகள் மற்றும் பெண்களின் சமத்துவமற்ற நிலை குறித்து ஆராய அவர் ஏராளமான நேரத்தைச் செலவிட்டார். கிராமப்புற ஏழைகளைப் பொருளாதார ரீதியாகச் சுரண்டும் சுரண்டல் வடிவங்களை அவர் மிக கவனமாகக் கவனித்து வந்தார். விவசாயத் தொழிலாளர்களுக்கு அவர்களின் ஊதியத்தைப் பணமாக அன்றி, அளவிடப் பயன்படுத்தும் சிறிய பானைகள் கொண்டு பண்டமாக எவ்வாறு வழங்கப்பட்டது என்பதை அவர் கவனித்துக் குறித்துக் கொண்டார். தலித்துகளுக்குக் குறைந்த ஊதியம் கூலியாக வழங்கப்பட்டது மட்டுமின்றி, மளிகை பொருட்களும் பண்டக விற்பனைக் கடைகளின் பொருட்களும் அவர்களுக்கு கூடுதல் விலைகளில் விற்பனை செய்யப்பட்டன.

அவர் தனது சுயசரிதை நூலில் ஆந்திரப் பகுதிகளில் கிராமப்புற சமூக அடுக்குகள் (மேல் கீழ் என) எவ்வாறு இருந்தன என்பதை விவரித்துள்ளார்.  நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான போராட்டத்தில் யார் தோழமை சக்தியாக, கூட்டாளியாக இருக்க முடியும் என அடையாளம் காண்பதில் அது உதவியது. வருவாய்த்துறை ஆவணங்களின் அடிப்படையில் கடற்கரைப் பகுதி ஆந்திராவில் வர்க்க அடுக்கு முறையை விளக்கி அவர் 1937ல் நியூ ஏஜ் (மாத இதழில்) ஒரு கட்டுரைகூட எழுதினார்.

தெலுங்கானா போராட்டத்தின் தலைமறைவு வாழ்க்கையின்போது கிராமப்புற வர்க்க அமைப்பு நிலையைப் பரிசீலித்து ஆய்வு செய்வதற்கான தகவல்களைத் திரட்ட ‘புள்ளிவிபர

 தகவல் சேகரிப்பு வினாக்கள் பட்டியல்(the questionnaire)  தயாரிக்கப்பட்டு, “தற்போதைய விவசாய நிலை குறித்த கேள்வி என்ற தலைப்பில் ஒரு கட்டுரைக்கு அடிப்படையாகப் பயன்பட்டது. சி ராஜேஸ்வர ராவ் மற்றும் பசவபுன்னையா முழுவதுமாக அதனை ஏற்கவில்லை. அது ஜனதாவில் பிரசுரமானது.

ஆந்திரப் பகுதிகளில் மக்கள் வாழ்க்கை மற்றும் இயக்கங்களின் அம்சங்கள் குறித்துச் சுந்தரய்யா எழுதிய விரிவான தகவல்கள் அடங்கிய “விசால ஆந்திரா என்ற சிறு கையேட்டைப் பிபிஹெச் பதிப்பகம் 1946 மார்ச்சில் வெளியிட்டது. அக்கையேட்டிற்கான அறிமுகத்தில் ASR சாரி கூறும்போது, அந்தக் கையேட்டின் ஆசிரியரான சுந்தரய்யா ‘சைமன் குழுவுக்கு எதிரான போராட்ட நாட்கள் தொடங்கி, விடுதலை பெற்ற இந்தியாவில் சுதந்திரமும் மகிழ்ச்சியும் நிறைந்த ஆந்திர தேசத்திற்காகப் போராடிய காலம் வரை தமது வாழ்வை அர்ப்பணித்தவர்’ என்று புகழ்ந்துரைத்தார்.

மாணவர், இளைஞர் மற்றும் பெண்கள் இயக்கங்களைக் கம்யூனிஸ்டுகள் எவ்வாறு

கட்டியமைத்தனர் என்றும்; நாட்டுப்புறப் பாடல்கள், பாலே நடனங்கள், புர்ர கதா  (burra-kathas, தம்புராவை வைத்துக் கொண்டு இரண்டு அல்லது மூன்று பேர் குழுவாக வரலாற்றுச் சம்பவம் அல்லது சமூக நிகழ்வு குறித்து நடத்தும் கதை, பாடல், நாடகம் வடிவிலான ஆந்திர கிராமப்புற கலை; அது, ஒருவரே நிகழ்த்தும் ஹரி கதா பாணிக்கு மாறானது) மற்றும் பிற வடிவங்கள் மூலம் புதிய கலாச்சார மறுமலர்ச்சி ஏற்படுத்தியது குறித்தும் பிஎஸ் விவரித்துள்ளார்.

1937ல் இட்சுகபுரம் முதல் மெட்ராஸ் வரை சுமார் 1500 மைல்கள் தொலைவையும் 525 கிராமங்களையும் கடந்து நடைபெற்ற மாபெரும் கிசான் பேரணி குறித்தும்; வழியெங்கும் ஜமீன்தாரி, ராயத்துவாரி விவசாயிகளுக்கும், பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட ராயலசீமா மாவட்டங்களிலும்கூட மக்களுக்கு உணர்வூட்டி எழுச்சி பெற செய்ததையும் அவர் விவரித்துள்ளார்.

இதன் விளைவாய் இறுதியில் மெட்ராஸ் காங்கிரஸ் அமைச்சரவை வருவாய் துறை அமைச்சர் ஸ்ரீ பிரகாசம் தலைமையில் ஆந்திரா தேசத்தில் உள்ள ஜமீன்தாரி முறையை விசாரிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டியதாயிற்று.

கிசான் சபாவின் புதுமைப் பணிகள்

 1942 --45 காலகட்டங்களில் கிசான் சபா, பஞ்சத்தால் பீடிக்கப்பட்டிருந்த ராயலசீமா, வைசாக் மற்றும் மலபார் பகுதிகளின் நிவாரணத்திற்காகப் பாடுபட்டது; விவசாயிகளுக்கு நியாய விலைக்காகப் பிரச்சாரம் செய்தது; (கதிர் அரிவாள், மண்வெட்டி, கடப்பாரை முதலிய) விவசாய ‘இரும்பு கருவிகள் சந்தை’யில் நிலவிய கள்ளச் சந்தைக்கு எதிராகக் கிசான் சபா (AIKS) போராடியது; அக்கருவிகள் விநியோகத்தைக் கையில் எடுத்து 50 சதவீத விவசாய இரும்புக் கருவிகள் கள்ளச் சந்தைக்குப் போவதைத் தடுத்து நிறுத்தியது. வேளாண்மைத் துறையிடம் இருந்து விதை, உரம் முதலியவற்றிற்காக ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ14 லட்சம் கடனாகப் பெற்றுத் தந்தது.

சுய உதவி பிரச்சாரம் மூலம் 9 மைல் நீளத்திற்குக் கிருஷ்ணா கால்வாயில் தூர் வாரும் பணியை மேற்கொண்ட கிசான் சபா, சுமார் 20,000 ஏக்கர் நிலங்களை விவசாய விளை நிலங்களாகக் கொண்டு வந்து சாகுபடி பாசனத்தை அதிகரித்தது.

சுகாதாரப் பணியாளர்கள் சங்கத்தின் மூலம் “தூய்மையான நகரம் பிரச்சாரத்தைக் கட்சி நடத்தியது. இந்தச் சாதனைகள் எல்லாம் கிசான் சபா வரலாற்றுப் பக்கங்களில் குறைவாக அறியப்பட்ட செய்திகள் ஆகும்.

1934ல் விவசாய தொழிலாளர் அமைப்பு தொடங்கப்பட்டது. ரபுக்கா சூரிய நாராயணா, பி வெங்கடேஸ்வர ராவ் மற்றும் சிலர் அதன் தலைவர்களில் சிலராவர்.

தெலுங்கானா ஆயுதப் போராட்டம்

1946 –50 காலகட்டங்களின்போது நடைபெற்ற வீரம் செறிந்த தெலுங்கானா ஆயுதப்

போராட்டத்தில் சுந்தரய்யா முழுமையாக ஈடுபட்டார். இந்தியாவில் ஜனநாயகப் புரட்சியின் மைய ஊற்று விவசாயப் புரட்சி என்று அவர் நம்பினார். தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் 1946ல் தொடங்கி 1950–51ல் முடிவுக்கு வந்தது. அதன் முன்னணி வீரர்களின் சி ராஜேஸ்வரராவ், பத்தம் எல்லா ரெட்டி, ரவி நாராயணன் ரெட்டி, ராஜ் பகதூர் கவுர், பி சுந்தரய்யா மற்றும் பலர் அடங்குவர். அந்த வரலாற்றுப் போராட்டங்களில் மக்களைத் திரட்டுவது, கட்சி மற்றும் ஆயுதம் தாங்கிய குழுக்களை வழிநடத்துவது முதலியவற்றில் சுந்தரய்யா தீவிரமாகப் பங்கேற்றார்..
நிலைமை நன்றாக இருந்தது, ஹைதராபாத் மாநிலத்தின் தெலுங்கானா பகுதியில் நிஜாமுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய போராட்டம் வெற்றிகரமான போராட்டமாக அமைந்தது. நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான, நிஜாமுக்கு எதிரான போராட்டத்தைப் பெருவாரியான விவசாய பெருங்குடி மக்கள் ஆதரித்தனர்.

ஆனால் 1948ல் கட்சித் தலைமை பிடிஆர் வசம் சென்றபோது, அவர் நேரு அரசைத் தூக்கி எறிந்து சோஷலிசப் புரட்சியை நடத்த ‘ரஷ்ய பாதையைப் போல ஆயுதம் தாங்கிய பொது கிளர்ச்சிக்கு அறைகூவல் விடுத்தார்; கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. நீண்டகால கிராமப்புற கொரில்லா யுத்த முறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘சீனப் பாதையின் ஆதரவாளர்கள் தொடக்கத்தில் BTR பாதையை ஆதரித்தனர். இந்த இரண்டு அணியினரும் பிசி ஜோஷிக்கு எதிராக ஒன்றுபட, அவர் (பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து) நீக்கப்பட்டார். ஆனால் 1950 வாக்கில் BTR பாதை நிலைகுலைந்து போகவும், கட்சி பொதுவாக மக்களிடம் இருந்து தனிமைப்பட்டது.

1948 கல்கத்தா கட்சி காங்கிரசில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முழுமையாக எதிர்த்த பிசி ஜோஷி நிலைப்பாட்டிற்கு எதிராக இவ்விரண்டு பாதைகளும் ஒன்றுபட்டன. சுந்தரய்யா, சீனப் பாதையை ஆதரித்த ‘ஆந்திரப் பாதைஎன்று அழைக்கப்பட்ட  அணியில் இருந்தார்.

BTR பாதை தோல்வி அடைந்ததால் கருத்து வேறுபாடுகள் கூர்மை அடைந்து மக்களிடமிருந்து கட்சி தனிமைப்பட்டது. ஹைதராபாத் மாநிலத்திற்குள் இந்திய ராணுவம் 1950 செப்டம்பரில் நுழைய, அதனால் ஏற்பட்ட சூழ்நிலை ஒரு மாற்றத்தைக் கோரியது. விவசாயிகள் இயக்கம் இரண்டாகப் பிளவுபட்டது; பணக்கார மற்றும் நடுத்தர விவசாய மக்கள் போராட்டத்திலிருந்து விலகினர். பிளவுபட்ட இரண்டில் ஒரு பிரிவு ஆயுதப் போராட்டம் தொடர வேண்டும் என விரும்பியது, மற்றொரு பிரிவு இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போராடுவது தற்கொலைக்கு ஒப்பானது; எனவே ஆயுதப் போராட்டம் கைவிடப்பட வேண்டும் எனக் கருதியது. உட்கட்சி வாத பிரதிவாதங்கள் கூர்மை அடைந்து வெடித்தது. சிபிஐ தூதுக்குழு சோவியத் கட்சி தலைவர்களைச் சந்திக்கச் சென்றது. சோவியத் தலைமை, கருத்து மோதல்களைத் தணிக்க உதவியது. (தலைமறைவாக இருந்த) அஜாய் கோஷ், டாங்கே மற்றும் காட்டே தயாரித்து அளித்த “மூன்று Pகள் கடிதம் கள யதார்த்த நிலைக்கு வர கட்சிக்கு உதவியது. [தலை மறைவு வாழ்க்கையின்போது அந்த மூன்று தலைவர்களின் புனைப் பெயர்கள் ஆங்கில எழுத்து P-யில் தொடங்கியதால் அவர்கள் தயாரித்த அறிக்கை ‘Three P’s Letter’ எனப்பட்டது.] இறுதியாக 1950–51ல் ஆயுதப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

தெலுங்கானா ஆயுதப் போராட்டம் குறித்து விரிவான தகவல்களைத் “தெலுங்கானா மக்கள் போராட்டமும் அதன் படிப்பினைகளும் (1972) என்ற நூலில் சுந்தரய்யா எழுதியுள்ளார். ஆயுதப் போராட்டம் திரும்பப் பெறுவதை அவர் தெளிவாகவே எதிர்த்தார் எனினும், அதே நேரம் போராட்டத் தந்திரங்களை நீண்டகால கொரில்லா யுத்த முறையாக மாற்ற வேண்டும் என்பதை ஆதரித்தார்.

சி ராஜேஸ்வர ராவ், எம். சந்திரசேகர ராவ், பசவபுன்னையா, டி வெங்கடேஸ்வர ராவ் மற்றும் பீமிரெட்டி நரசிம்ம ரெட்டி(BN) முதலானவர்களுடன் சுந்தரய்யா தெலுங்கானா மற்றும் ஆந்திரா கட்சிக் குழுக்களில் முன்னணிப் பங்கு வகித்தார். தொடக்கத்தில் ஆந்திரா குழு ஆயுதப் போராட்டத்தை விலக்கிக் கொள்ள மிகவும் தயங்கியது; ஆனால் சூழ்நிலையும் மத்திய கட்சியின் முடிவுகளும் போராட்டத்தை விலக்கிக் கொள்ள அவர்களைக் கட்டாயப்படுத்தியது. சிஆர், பிஎஸ், பத்தம் எல்லா ரெட்டி மற்றவர்கள் வனப் பகுதிகளில் பயணம் செய்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதை மக்களிடம் விளக்கினார்கள்.

ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வதின் பயனற்ற தன்மையை முதலில் புரிந்து கொண்டவர்களில் ஒருவரான ரவி நாராயணன் ரெட்டி ஆயுதப் போராட்டத்தைத் திரும்ப பெற தொடர்ந்து வற்புறுத்தினார். நிகழ்வுகள் அவரது நிலைப்பாடு சரி என நிரூபித்தது.

ஆயுதப் போராட்டத்தைத் திரும்பப் பெற ஆதரவாகவும்; பின்னர் 1952 பொதுத் தேர்தல் உட்பட நாடாளுமன்ற தேர்தல்முறை போராட்டத்தில் பங்கேற்க ஆதரவாக இருந்த ரவி நாராயணன் ரெட்டி, அஜாய் கோஷ், டாங்கே, காட்டே மற்றும் பிற தலைவர்களைச் சுந்தரய்யா கடுமையாக விமர்சித்தார். பிசி ஜோஷி மீது தனிப்பட்ட முறையிலும் கருத்தியல் ரீதியிலும் கொடூர விமர்சனங்களை அவர் செய்தார்.

சட்டமன்றத் துறையில்

அவரது கண்ணோட்டத்திற்கு மாறாகவும் சூழ்நிலைகளால் கட்டாயப்படுத்தப்பட்ட சுந்தரய்யா, பாராளுமன்ற முறை போராட்டம் உட்பட மைய நீரோட்ட அரசியலில் இணைய வேண்டியதாயிற்று.

1952ல் முதல் பொதுத் தேர்தல்களுக்கு பிறகு மெட்ராஸ் தொகுதியில் இருந்து சுந்தரய்யா மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றச் சிபிஐ குழுவுக்குத் தலைவரானார். 1955 இடைத் தேர்தலில் ஆந்திரா ப்ரொவிஷனல் சட்டமன்றத்திற்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆந்திரப் பிரதேச மாநிலம் அமைக்கப்பட்ட பிறகு அதன் சட்டமன்றத்திற்கு நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் 1972 வரை தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத்தில் அவர் சிபிஐ தலைவராகவும் பின்னர் சிபிஐ-எம் குழுவின் தலைவராகவும் விளங்கினார். 1972க்கு பிறகு அவர் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை

கட்சி அமைப்புகளில் பொறுப்புகள்

1943 மற்றும் 1948ல் சிபிஐ மத்திய குழு உறுப்பினராக இருந்தார். 1951ல் அவர் மத்திய குழுவுக்கும் மற்றும் பொலிட் பீரோவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1953 மதுரை மற்றும் 1956 பாலக்காடு கட்சி காங்கிரஸ்களில் மீண்டும் அவர் பொலிட் பீரோவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1958 அமிர்தசரஸ் காங்கிரசில் கட்சி மத்தியச் செயற்குழு (CEC)வுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் CECகும் 1962ல் மத்தியச் செயலக் குழுவுக்கும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்; ஆனால் உட்கட்சி கருத்து வேறுபாடுகள் வெடித்த நிலையில் இந்த அமைப்புகளிடமிருந்து அவர் ராஜினாமா செய்தார்.

1964 கட்சிப் பிளவு

1964ல் சிபிஐயில் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு பி சுந்தரய்யா சிபிஐ-எம் கட்சியில் இணைந்தார். 1964 முதல் 1976 வரை அவர் சிபிஐ-எம் பொதுச் செயலாளராக இருந்தார். சிபிஐ-எம் தலைமையுடன் ஏற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்தப் பதவியிலிருந்தும் பொலிட் பீரோவில் இருந்தும் பதவி விலகிய அவர்  ஆகஸ்ட் 1975லேயே ராஜினாமாவைச் சமர்ப்பித்தார்.

எனது ராஜினாமா

பொலிட் பீரோ மற்றும் மத்திய குழு உறுப்பினர்களுக்கு எழுதிய 22-8-1975 தேதியிட்ட எனது கடிதத்தில் எனது பதவி விலகலுக்கான காரணங்களை நான் சுருக்கமாக விவரித்தேன்.” சிபிஎம் பொதுச் செயலாளர் பதவி மற்றும் பொலிட் பீரோவில் இருந்து விலகிய தனது ராஜினாமா கடிதத்தில் சுந்தரய்யா இவ்வாறு எழுதினார். அதன் பிறகு அவர் தனது ராஜினாமாவுக்கான எண்ணற்ற காரணங்களைப் பட்டியலிட்டார். அவையெல்லாம் 1991ல் பதிப்பிக்கப்பட்ட “மை ரெஸிக்னேஷன் (எனது பதவி விலகல்) என்ற அவரது நூலில் விரிவாக உள்ளன. அவை, 1951 கொள்கை அறிக்கை (பாலிசி ஸ்டேட்மென்ட்) குறித்த அவரது விளக்கம் முதலாக, ஆர்எஸ்எஸ்/ ஜன சங்கத்துடன் கைகோர்ப்பது உள்ளிட்ட அவசரநிலை தொடர்பான பிரச்சனைகளின் பல்வேறு விளக்கங்கள் எனப் பரவலாக உள்ளன.

1950–51 தெலுங்கானா ஆயுதப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்ட முடிவு தொடர்பாகச் சுந்தரய்யா மகிழ்ச்சியாகவே இல்லை; விவசாயிகளின் வரையறுக்கப்பட்ட சில வகையிலான ‘குழுவாத (கொரில்லா) ராணுவ யுத்த முறையை [‘partisan (guerilla) warfare’] தொடர அவர் விரும்பினார். தேர்தல்களில் போட்டியிடுவதோடும் கூட இதுவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் விரும்பினார். அவரது கடிதம், 1948–50 ஆயுதப் போராட்டம் குறித்த முழுமையான பெரும் விவரங்களை விவரிக்கிறது; அடிப்படையில் சில மாறுதல்களுடன் ‘ஆந்திரா பாதையை (‘Andhra Line’) பின்பற்றி தொடர்வது என்பது அதன் சாராம்சம். சிபிஎம் தலைவர் பிரகாஷ் காரத் இது குறித்து எழுதும்போது, “விவசாய புரட்சிக்கான தாகமும் தேடலும் அவரை வேறுபட்ட பாதையில் செலுத்தியது என்ற கருத்தை முன் வைத்தார்.

சுந்தரய்யாவின் புத்தகம் விடுதலைக்குப் பிறகு இந்திய சூழ்நிலை குறித்த, அவரது பார்வையில் அமைந்த, விரிவான மதிப்பீடு ஆகும்; இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து பின்பற்றப்பட வேண்டிய தந்திரோபாயச் செயல்திட்ட யுக்திகளை விவரிப்பது அது.

மறைவு

சிறுநீரகப் பாதிப்பிலிருந்து சில காலம் அவர் நோயுற்று இருந்தார். மெட்ராஸ் மருத்துவமனையில் மே 18ல் அனுமதிக்கப்பட்ட அவர் 1985 மே 19 இயற்கை எய்தினார்.

தோழர் பி எஸ் நினைவைப் போற்றுவோம்!

நன்றி : நியூ ஏஜ் (ஜூன் 29 ஜூலை 5)

தமிழில் : நீலகண்டன்,

என் எஃப் டி இ, கடலூர்.

No comments:

Post a Comment