அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப் முடிசூட்டு விழா அரங்கு, அமெரிக்க அரசை மட்டுமின்றி பிற நாடுகளின் அரசுகள் மீதும் செல்வாக்குச் செலுத்தும் அதிபணக்காரர்களால் நிறைந்திருந்தது. அவர்களில் பலரும் தொலைவிலிருந்து மக்களின் மனங்களைக் கட்டுப்படுத்தத் திட்டமிடும் தொழில்நுட்பப் பகாசுரர்கள். அவர்களில் சில பிரபலங்கள் கூகுள் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, எக்ஸ் தளத்தின் எலான் மஸ்க் போல மேட்டா, அமேசான், ஆப்பிள் மற்றும் டிக்-டாக் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் அடங்குவர். அதில் கலந்து கொண்ட அதிதீவிர வலதுசாரி அரசியல்வாதிகளில் அர்ஜன்டினா அதிபர் ஜேவியர் மிலய், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஈக்வெட்டார் அதிபர் டேனியல் நோபோவா மற்றும் போலந்து மேனாள் பிரதமர் மாத்யூஸ் மோராவிக் (Mateusz Morawieck) முதலானோர் அடங்குவர்.
பதவியேற்பு உறுதிமொழி நிகழ்ச்சிக்குப்
பின் உடனே, காலவிரயமின்றி டிரம்ப் பல உத்தரவுகளில் கையெழுத்திட்டார். நீண்ட காலத் தாக்கத்தை
ஏற்படுத்தும் மிக ஆழமான கவலைக்குரிய உத்தரவு பாரீஸ் பருவகால மாற்ற உடன்பாட்டிலிருந்து
அமெரிக்க நாட்டை முறைப்படி திரும்பப் பெற்றதாகும். இதுவரை, மனிதர்களால் உருவாக்கப்பட்ட
பருவகால நெருக்கடிகளைக் கணக்கில் எடுத்துக் கொண்ட மிக முக்கியமான உடன்படிக்கயான அது,
பருவநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான உலக ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை முன்னிறுத்திக்
காட்டியது. பருவகால மாற்றத்தின் விளைவுகளை நாம் ஏற்கனவே, உயரும் வெப்பநிலை, அடிக்கடி
வெள்ளப் பெருக்கு, விவசாயப் பயிர் முறைகளில் மாற்றங்கள், உணவுப் பாதுகாப்பில் நெருக்கடிகள்
மற்றும் மூன்றாம் உலக நாடுகளில் ஏழைகள் மற்றும் எளிதில் பாதிப்புக்கு ஆளாகும் எளிய
பிரிவு மக்கள் உடல் ஆரோக்கியத்தின் மீதான தாக்கங்கள் முதலான வடிவங்களில் பார்த்து வருகிறோம்.
டிரம்ப் பதவி உறுதியேற்பு
விழாவில் கலந்துகொண்ட மேற்கண்டவர்கள், டிரம்பின் இந்த உத்தரவை எந்தப் பொது அமைப்புகளிலாவது
எதிர்ப்பார்கள் என எதிர்பார்ப்பது என்றும் நடக்கப் போவதில்லை. அவர்களுக்கு வளர்ச்சி
என்பதன் பொருள், பொது மக்களின் உணவு, இருப்பிடம், உடல்நலப் பராமரிப்பு, கல்வி மற்றும்
வெறும் குறைந்தபட்ச தேவைகள் பற்றிய கவலைகளிலிருந்து வேறுபட்டது. புதைபடிவ எரிபொருள்களைப்
பயன்படுத்தி அல்லது தேவைப்படும் எனில், அதை அணு சக்தி ஆற்றலைக் கொண்டு மாற்றி –அதில்
உட்பொதிந்த ஆபத்துக்களை உணராமல் அதைத் தூய்மையான ஆற்றலின் ஆதார உற்று என்ற தவறான கருத்தில்
அணுசக்தி ஆற்றலைப் பயன்படுத்தி – அதீத தொழில்மயமாக்குவதை நம்புபவர்கள் அவர்கள்.
டிரம்ப் பிறப்பித்த அடுத்த
உத்தரவு உலகச் சுகாதார நிறுவனத்திலிருந்து (WHO) அமெரிக்காவை விலக்கிக் கொள்வது. மக்களின் உடல்நலச் சுகாதாரத்தை
மேம்படுத்தும் உலகளாவிய முயற்சிகளில் பங்கேற்கும் பொறுப்பிலிருந்து இது விட்டு விலகுவதே
ஆகும். டிரம்ப்பின் முடிவு காரணமற்றதும், நிலைக்க முடியாததும் ஆகும்; ஏனெனில், பல்வேறு
விஷயங்களில் உலகச் சுகாதார அமைப்பு பன்னாட்டு கார்ப்பரேஷன் நிறுவனங்களின் கருத்தையே
பின்பற்றி வருகிறது. இந்தக் கார்ப்பரேட் நிறுவனங்களில் பெரும்பாலானவை அமெரிக்க நாட்டைச்
சேர்ந்தவை. மாறாக மறுபுறத்தில் உலகச் சுகாதார நிறுவனம் கொரோனா பெருந்தொற்றைக் கையாண்டதில்
குறைபாடுகள் இருந்தால், இதில் கவனத்தில் குறித்துக் கொள்ள வேண்டியது, அமெரிக்காவின்
தடுப்பூசி தயாரிக்கும் கார்ப்பரேஷன்களே பெரும் லாபங்களைக் குவித்தது என்பது மட்டுமின்றி,
குறிப்பாக ஆப்பிரிக்கா போன்ற சில வளரும் நாடுகளை மிரட்டவும் செய்தன என்பதைத்தான். அமெரிக்க
அரசுகள் உலகச் சுகாதார அமைப்புக்கு நன்கொடை நிதி அளிப்பது என்ற பெயரில் சுகாதாரம் தொடர்பான
அமெரிக்கப் பன்னாட்டுக் கார்ப்பரேஷன்கள் மேலும் பெரும் லாபங்களைக் குவித்தன எனச் சொல்லத்
தேவையில்லை, ஊரறிந்த விஷயமது.
பாலினத்தைப் பொருத்தவரை டிரம்பின்
உத்தரவு (ஆண் பெண் என) இரு பாலினம் மட்டுமே என்பது மிகவும் பிற்போக்கானது. பாலினங்களை
வரையறுப்பதில் மனிதர்களின் (மரபணு) குரோமசோம்கள் அடிப்படையிலன்றி, மாறாக மனிதர்கள்
கருமுட்டைகளுடன் அல்லது விந்துவுடன் பிறக்கிறார்களா என்ற அடிப்படையில், எதிர்வரும்
உத்தரவின் விவரங்களின்படி, வரையறுக்கப்படுவதாகிறது. இது, (திருநங்கை, திருநம்பி போன்ற)
மாற்றுப் பாலின மக்களின் உரிமைகளைப் பாதிக்கும்.
புலம்பெயர்ந்த மக்கள் குறித்த
எந்தக் கொள்கையும் மனிதாபிமான மதிப்புக்களின் அடிப்படையில் வகுக்கப்பட வேண்டும். புலம்பெயர்ந்தோர்
உரிமைகள் மீதான டிரம்பின் நிலைபாடு, அவநம்பிக்கையும் சந்தேக புத்தியும் கொண்டதாகவே
பார்க்கப்படும். லத்தீன் அமெரிக்கா, குறிப்பாக கியூபா குறித்த டிரம்ப் அணுகுமுறையின்
தீவிர மோதல் போக்கு நிலைபாடுகள், தொடரும் ஏகாதிபத்திய தலையீடுகளையே சுட்டிக் காட்டி,
தேசங்களின் சுய நிர்ணய உரிமையை அச்சுறுத்துவதாய் உள்ளது.
கடற்படை முற்றுகை மூலம் பனாமா கால்வாய் மீண்டும்
கைப்பற்றப் போவதாக அவர் வலியுறுத்தினார். ஏற்கனவே (வட அமெரிக்காவின் தென்பகுதியில்
அட்லான்டிக் பெருங்கடலுக்கும் கரிபியக் கடலுக்கும் நீட்சியாக உள்ள) மெக்ஸிகோ வளைகுடாவின் பெயரை அவர் அமெரிக்க வளைகுடா என்று
மாற்றியுள்ளார். (டென்மார்க் இராஜியத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும், வட அட்லான்டிக்
பெருங்கடலில் அமைந்துள்ள, உலகின் மிகப் பெரிய தீவான) கீரின்லாந்து தீவை வாங்குவதற்கான
வெளிப்படையான முயற்சி நடக்கிறது.
அமெரிக்காவை மீண்டும் மாபெரும்
தேசமாக்குவது என்ற பெயரில், உலக விவகாரங்களில் மூர்க்கமான அமெரிக்கக் கொள்கைகளை டிரம்ப்
ஒழிக்க வாய்ப்பில்லை. இஸ்ரேலுக்குத் தொடர்ந்து ஆயுதங்கள் வழங்குவதை அவர் வற்புறுத்தியுள்ளார்.
காசாவில் எவ்வளவு காலம் சண்டை நிறுத்தம் நீடிக்கும் எனப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
தற்போது ஏற்பட்டுள்ளது அமைதி உடன்பாடு அல்ல, மாறாக தற்சாலிகப் போர் நிறுத்தம் மட்டுமே;
ஆனால் அது அமைதிக்கான நீடித்து நிலைக்கும் தீர்வுகள் குறித்து விவாதிப்பதில் ஓரடி முன்னேற்றம்தான்.
அமெரிக்காவுக்குப் பெறுவதற்கும் அல்லது இழப்பதற்கும் மத்திய கிழக்கில் ஏராளம் உள்ளது
என்பதையும் மற்றும் அப்பகுதியில் அவர்களின் உறுதியான பொம்மலாட்ட ஆட்சியாக இஸ்ரேல் இருப்பதையும்
உலகம் நன்றாகவே அறியும்.
அவர் புடினைத் திருப்திப்படுத்த
அனைத்தையும் செய்யப் போவதோ, போரை நிறுத்த ஜெலன்ஸ்கிக்கு அழுத்தம் தரவோ போவதில்லை. அப்படிப்
போரை நிறுத்துமாறு டிரம்ப் கூறினானாலும்கூட, புடினும் அல்லது ஐரோப்பிய நாடுகளும் உக்ரேனிய
அதிபர் தொடர்ந்து போரிடுவதில் உகக்கும்போது, யாரும் அவர் பேச்சைக் கேட்கப் போவதுமில்லை.
அமெரிக்கப் பொருளாதாரம் இராணுவ ஆயுத உற்பத்தித் தொழில் அடிப்படையில் இயங்குவது மற்றும் அவர்கள் ஆயுதங்களை விற்பதன் மூலம் தொடர்ந்து லாபம் ஈட்ட, மக்கள்
உயிரை விலையாகக் கொடுத்துப் போர்களை ஊக்குவிப்பார்கள். டொனால்டு டிரம்ப் பதவியேற்பு விழாவில் ஆற்றிய தொடக்க உரை, உலக அரசியலில் அதிர்ச்சிகர மாற்றங்களைக் குறிக்கிறது. அவரது கொள்கைகள் 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளின் காலனிய மனநிலையைப் பிரதிபலிக்கிறது. உலகு தழுவிய ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவையும், ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கூட்டாகச் செயல்படும் பன்மைத்துவ அணுகுமுறையையும் அவர் மறுக்கிறார்.(புதிதாக இணைந்த இந்தோனேஷியா உள்ளிட்ட பத்து நாடுகள் சேர்ந்த) ‘பிரிக்ஸ்’ அமைப்புக்கு டிரம்ப் விடுத்துள்ள மிரட்டல், நாடுகளின் இறையாண்மை மீது முழுகண்டனத்தைக்
காட்டுகிறது. இது உலக நிலைத்தன்மையை அச்சுறுத்துவதாகும். அவருடைய உத்தரவுகள், நாடுகள் இடையே பரஸ்பர மரியாதை மற்றும் கலந்துரையாடல், கூட்டுறவு முறைக்கு எதிரான (தான் மட்டுமே என்ற) ஒருதலைபட்சமான அவரது தன்னிச்சையான மனநிலையைக் காட்டுகின்றன. சுங்கவரி கட்டணங்கள் போன்ற மூடி பாதுகாக்கப்படும் பொருளாதாரக் கொள்கைகள் (Protectionist economic policies) வளரும் நாடுகளுக்கு எதிரான வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது; உலக சமத்துவமற்ற நிலையையும் திட்டமிட்ட சுரண்டலையும் அதிகரிப்பது. அணுஆயுதப் போட்டி உள்ளிட்ட
ஆயுதப் போட்டியில் செலவிடப்படும் உலகச் செலவீனம் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது, அந்தச்
செலவீனத்தில் அதிகபட்ச பங்கு அமெரிக்கா உடையது. உலகளாவிய அணுஆயுதக் குறைப்புக் குறித்து
டோனால்டு டிரம்ப் ஒரு வார்த்தைகூட உதிர்க்கவில்லை.
அவரைச் சுற்றி அதிபணக்காரர்கள்
சூழந்து நிற்க, அவருடைய நிலைபாடுகளால் உலகின் வருங்காலம் எதிர்வரும் காலத்தில் என்னவாகும்
என்பதை ஒருவர் யூகிக்க முடியும். தங்கள் நலன்களைப் பாதுகாக்க, வளரும் நாடுகள் தங்கள்
செயல்திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.
--நன்றி : நியூஏஜ் (ஜன. 26 –பிப்.1)
--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்



No comments:
Post a Comment