இவ்வாண்டு ஜனவரி 13ல் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்
பகவத், ‘‘இராமர் கோயில் குடமுழுக்கு அயோத்தியாவில் நடைபெற்ற நாள்தான் ‘பாரதத்தின் உண்மை
சுதந்திரம்’ சாதிக்கப்பட்டது” என்று கூறினார். இது ஆர்எஸ்எஸ் நம்மை நம்ப வைக்க முயற்சிக்கும்
பெரும் கட்டுக்கதைகளில் ஒன்று.
பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களுக்கு எதிராக
1857ன் முதல் சுதந்திரப் போருடன் தொடங்கிய நமது விடுதலைப் போராட்டம் ஏறத்தாழ நூறாண்டுகள்
கடந்த பின் நமது தேசம் 1947 ஆகஸ்ட் 15ல் விடுதலை அடைந்தது. அதில்தான் உயிர்த் தியாகங்கள்
எத்தனை, சிறையில் அடைபட்ட ஆண்டுகள் எத்தனை என நமது சுதந்திரம் சும்மா வரவில்லை, இரத்தத்திலும்,
வன்முறை அல்லது சுரண்டல்களின் பாதிப்புகளால் சூழப்பட்டு விடுலையை அடைந்தோம். தனது அத்தனை
வேறுபாடுகளுடன் தேசம் ஒன்றாக எழுந்தது. அப்பெரும் நீரோட்டத்தில் ஒன்று கலந்த ஒவ்வொரு
உபநதிகளும் அப்போராட்டத்தில் தங்கள் பங்கை வகித்தன-- அந்த வரலாற்று நிகழ்முறையை அலட்சியப்படுத்தி
ஒதுங்கி நின்றவர்களைத் தவிர. நாடு, அதன் மக்கள் மற்றும் வகுப்புகள் முழுமைக்கும் சுதந்திரத்தில்
முடிந்த அப்புனிதப் போரில் இந்துத்துவச் சக்திகளுக்கு எந்த ஒரு சிறு பங்கும் கிடையாது.
அப்போராட்டப் பேரலையில் தொடப்படாதவர்கள் யாருமில்லை, தாங்களாக ஒதுங்கி நின்று தங்களைத்
தளையிட்டு வைத்துக் கொள்ள விரும்பியவர்களைத் தவிர. அவர்கள் சுரண்டல் ஆட்சியில் நம்பிக்கை
வைத்து ஏகாதிபத்தியச் சேவையில் இருந்தார்கள். அந்தச் சேவையில் குறியாக இருந்தவர்கள்
தங்களின் அடிமைத்தனத்தை, இந்துத்துவா சக்திகள் என்றழைக்கப்படும், சமூகம் முழுமையின்
அடிமைத்தனமாக வழங்க விரும்பினார்கள். அடிமைத்தனத்தில்தான் விடுதலை இருக்கிறது என்பதையும்
(சண்டைக்குப் பதில்) சமரசமே சிறந்த செயல் திட்டம் என்பதையும் ஒவ்வொருவரும் நம்ப வேண்டும்
என அவர்கள் விரும்பினார்கள்.
பிரிட்டிஷ் காலனிய ஆட்சியிலிருந்து இந்தியர்களாகிய
நமக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றித் தந்த தேச விடுதலையின் பெருமைமிகு புகழை மறைப்பதற்காக
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் 1947 ஆகஸ்ட் 15ம் நாள் “உண்மையான“ சுதந்திர தினம் அல்ல
என நம்மிடம் சாதிக்க முயன்றார். அதற்கு மேலும் அவர், அயோத்தியில் இராமர் கோயில் குடமுழுக்கு
நடைபெற்ற. 2024 ஜனவரி 22ம் நாள்தான் “உண்மையான“சுதந்திரம் சாதிக்கப்பட்டது என்று கூறவும்
துணிந்தார். அவர் விடுதலைக்கு உறுதியளிக்கவில்லை மாறாக, மதவாத இறையியல் ஆட்சி நோக்கி,
அதன் மூலம் வகுப்புவாதத்தை வளர்க்கும் நோக்கில் தேசத்தை எடுத்துச் செல்ல முயன்றார்
– அது ‘மற்றவர்கள்’ எனப்படும் பிற எல்லோருக்கும் சுதந்திரத்தை மறுப்பதாகும். அது நம்
அரசியலமைப்புக்கு விரோதமானது, அதன் முகவுரையையே மீறுவது. அது மட்டுமா, அவ்வாறு சமத்துவம்,
சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம் எனக் குறிப்பிடப்படும் நமது ஜனநாயகத் தூண்களை நிராகரிப்பதாகும்.
சுதந்திரத்திற்கு முந்தைய ஆர்எஸ்எஸ் வரலாறு
குறித்துச் சுதந்திரத்திற்குப் பின் ஆர்எஸ்எஸ் எழுதிய புத்தகங்கள் என்ன உரிமை பாராட்டுகிறது
என்பதை ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தால், அது பற்றிய ஆவணக் காப்பகப் பதிவுகள்,
‘ஆர்எஸ்எஸ் அமைப்பு நிறுவப்பட்டதன் அடிப்படை நோக்கமே பிரிட்டிஷ்க்கு எதிரான இந்துகளின்
கோபத்தை முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிகையாக மாற்றுவதே’ எனக் காட்டுகின்றன. அந்நோக்கத்தைச்
செயல்படுத்த இந்துகளிடம் ஆர்எஸ்எஸ் அமைப்பு, ‘இந்துகளின் நலன்கள் காலனியவாதிகளான பிரிட்டிஷ்காரர்களுடன்
இருப்பதைவிட, சகஇந்தியர்கள் பிரிவான முஸ்லீம்களுடன் கூடுதலாகப் பொருத்தமற்றுள்ளது’
என்று கூறியதன் மூலம் அவர்களைச் சமாதானப்படுத்தி
ஏற்கச் செய்ய முயன்றது. இந்த நோக்கம் இயல்பாகவே, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலைக்கான
போராட்டத்தில் இந்துகள் முஸ்லீம்களை ஒன்றுபடுத்த முயன்ற, சுதந்திரப் போராளிகளுக்கு
எதிராக ஆர்எஸ்எஸ்-ஐ நிறுத்தியது.
முஸ்லீம் வகுப்புக்கு எதிரான வன்முறையில் ஆர்எஸ்எஸ்
இடம் பெறுவதற்கும், தேசிய இயக்கத்தில் அதன் அரைகுறையான ஈடுபாட்டிற்கும் இடையே கவனிக்கத்தக்க
வேறுபாடு உள்ளது. உப்பு வரிக்கு எதிரான சத்தியாகிரகத்தையும் 1930ல் சிவில் சட்ட மறுப்பு
இயக்கத்தையும் மகாத்மா காந்தி தொடுத்தபோது ஆர்எஸ்எஸ், அதன் அணிகள் மத்தியில் சலசலப்பை
உணர்ந்தது; காரணம், அதன் இளம் சாதாரண உறுப்பினர்கள்
சிலர் அவ்வியக்கங்களில் இணைய ஆதரவாக இருந்ததுதான். அந்தச் சலசலப்பைத் தணிக்க, ஹெக்டேவார்
ஆர்எஸ்எஸ் கிளைகளுக்கு --பிரிட்டிஷ்காரர்கள் நல்லெண்ணத்தில் நீடிக்க எண்ணி ஆர்எஸ்எஸ்
தலைகீழாக நின்று முயற்சிக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தாமல்-- பின்வருமாறு எழுதினார்: ‘உறுப்பினர்கள் தங்கள் தனிநபர்
அந்தஸ்தில் சத்தியாகிரகத்தில் கலந்து கொள்ளலாம்; அமைப்பு என்ற வகையில் ஆர்எஸ்எஸ் அந்த
இயக்கத்தில் கலந்து கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளது.’
மேலும், அவ்வியக்கத்தில் தனது குறைபாடான அரைகுறை
ஈடுபாடு எங்கே அணிகளின் பார்வையில், தேசிய நலன்களிலிருந்து ஓடிவிட்டதாக வியாக்கியானம்
செய்யப்பட்டு தனது மரியாதைக்குப் பங்கம் விளைவிக்குமோ என்று கருதிய ஹெக்டேவார், சத்தியாகிரகத்தில்
கலந்து கொண்டார்; ஆனால் கலந்து கொள்ளும் முன், ஜாக்கிரதையாக ஆர்எஸ்எஸ் அமைப்பில் தனது
சர்சங்சாலக் (தலைமை) பதவியை ராஜினாமா செய்தார். அப்படி இல்லை எனில், பிரிட்டிஷ் ஆட்சிக்கு
எதிரான எழுச்சியுடன் ஆர்எஸ்எஸ் முறையாக இணைந்தது போல ஆகிவிடுமே என்பதுதான். இதற்கு
மாறாக, முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையில் ஆர்எஸ்எஸ் ஓர் அமைப்பாக இடம் பெறுவது என்பது
அடிக்கடி நிகழும் ஒரு போக்காக உள்ளது –அப்படி இடம் பெறுவதுதான் ‘ஒன்றன் மீது பயத்தைத்
தூண்டி’ தனது கருத்தியலுக்கு மக்களை மெல்ல மாற்றும் ஓர் அமைப்பின் மையமான முக்கிய
‘இரகசிய சதித் திட்டங்களில் ஈடுபடும் பாணி’ (paranoid style)
செயல்பாடாகும்.
அமைப்பின் அடிப்படையான நோக்கத்தை அக்டோபர்
1935ல், ஆர்எஸ்எஸ் 10ம் ஆண்டு விழாவின்போது, ஹெக்டேவார் வெளிப்படையாக வெளியிட்டார்:
பிரிட்டிஷ் ஆட்சி நாட்டிற்குக் கிடைத்த “கடவுளின் ஓர் அருள் நடவடிக்கை” (‘an act of providence’) என்று அவர் வெளிப்படையாகப் பிரகடனப்படுத்தினார். இது குறித்த செய்தி டைம்ஸ்
ஆப் இந்தியா நாளிதழில் பிரசுரமானது.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இந்தியா 1942
வெள்ளையனே வெளியேறு இயக்க வடிவில் வன்முறை
எழுச்சிகளில் வெடித்துக் கிளம்பியபோது, ஆர்எஸ்எஸ் தனது பிரிட்டிஷ் ஆதரவு நிலைபாட்டில்
நீடித்து ஏகாதிபத்திய ஆட்சியுடன் சுமுகமான உறவைப் பராமரித்து, விடுதலை இயக்கப் போராட்ட
வளர்ச்சிப் போக்கை அலட்சியமாக வேடிக்கை பார்த்து வந்தது.
பம்பாயில் தொடங்கிய இயக்கம் இந்தியாவின் பிற
பகுதிகளில் விரைவில் பரவியது. நாடு முழுவதும் குவிட் இந்தியா ஹர்த்தால் மறியல் நிகழ்ந்தன,
அவற்றில் பல அரசு எதிர்ப்பு கிளர்ச்சிகளாக மாறின. பாதுகாப்புப் படைகள் மிருகத்தனமாக
இயக்கத்தை நசுக்க முயற்சி செய்ய, அது பெரும் எண்ணிக்கையில் மரணத்தை விளைவித்தது. காங்கிரஸ்
தலைவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டதால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடம் முஸ்லீம் பிரிவினைவாத
மற்றும் இந்து மேட்டிமை அமைப்புகளும் நுழைய வாய்ப்பு அளித்தது போலாயிற்று.
இந்துயிசம் என்ற விரோதம் நிறைந்த புதைகுழியாக மாறும் சாத்தியமுள்ள இடத்தில் முஸ்லீம்களை நிராதரவாகக் கைவிட்டுவிட்டு, பிரிட்டிஷ் திரும்பச் செல்வது முஸ்லீம்களின்
நலனுக்கு ஏற்றதல்ல என்று முஸ்லீம் லீக் தலைவரான முகமது அலி ஜின்னா பிரகடனம் செய்தார். எனவே, அவருடைய தர்க்க ரீதியான நிலைபாடு, பாக்கிஸ்தான் என்ற தங்கள் கோரிக்கைக்குச் சம்மதிக்கச் செய்யும் காலம் வரையாவது குறைந்தபட்சம், பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவில் வைத்திருக்க வேண்டும் என்பதே. தனது பங்கிற்கு இந்து மகாசபா, அரசுடன் ஒத்துழைப்பது என்ற தங்கள் நிலைபாட்டில் உறுதியாக இருந்தது.இவ்வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களான இவர்களின்
இன்றைய கட்டுக்கதைதான் – ‘உண்மை சுதந்திரம்’
--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்
No comments:
Post a Comment