Saturday, 18 January 2025

முன்னே முன்னே முன்னோக்கி நாம் அணிவகுப்போம் தோழர்களே! -- --பினாய் விஸ்வம்

 

                                                                                                                     --பினாய் விஸ்வம்

    உலக மக்கள் அனைவரும் ஏராளமான நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளுடன் புத்தாண்டை வரவேற்றார்கள். போர், இனவாத ஆதிக்கம் மற்றும் சுரண்டல் சக்திகளுக்கு எதிராக ஒற்றுமையை விரிவாக்கி நமது போராட்டங்களை வலிமையாக்குவது நமது புத்தாண்டு சபதமாகட்டும்!

 கிருஸ்துமஸ் விழாவை ஒட்டி போப் ஃபிரான்ஸிஸ் வெளியிட்ட செய்தி, அமைதி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகப் போரிடும் அனைவரிடமும் எதிரொலிப்பது மிகவும் தேவை. “உலகின் ஒவ்வொரு இடத்திலும் உள்ள ஏழைகளின் வாழ்க்கை நிலை மீது அக்கறை கொள்ளும் அரசியல்வாதிகளே மேலும் நமக்குத் தேவை” என்றார் போப். அவரது வார்த்தைகள் கம்யூனிஸ்ட்கள், இறை நம்பிக்கையாளர்கள் இடையே --பிரபஞ்சத்தின் தோற்றம் முதலான இன்ன பிறவற்றில் கருத்து வேறுபாடு, உடன்பாடின்மை இருப்பினும்– உழைக்கும் மக்கள் கூட்டத்தின் பாடுகள் குறித்த அக்கறைகளைப் பகிர்வதில் ஒரு பொதுவான களத்தை வழங்குகிறது. இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட்கள் அந்த நம்பிக்கை உணர்வு, அழகை உயர்த்திப் பிடித்து எவ்விதத் தயக்கமுமின்றி புத்தாண்டில் நுழைகிறார்கள்.

            இந்த ஆண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டை நாம் அனுசரிக்கிறோம். இந்த நூறாண்டுகள், தேச விடுதலைப் போராட்டத்தில் இரத்தமும் வியர்வையும் கண்ணீருடனும் கூடிய மாபெரும் காவியங்களில் எழுதப்பட்டுள்ளது. முழுமையான சுதந்திரம் என்ற ‘பூரண சுயராஜ்’ முழக்கம், முதன் முதலாகக் கம்யூனிஸ்ட்களால் தேசிய இயக்கத்தின் நிகழ்ச்சி நிரலில்

எழுப்பப்பட்டது. அந்த வரலாற்றுத் தீர்மானம், உறுதியான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியான மௌலானா ஹஸ்ரத் மொஹானியால் 1921ல் காங்கிரசின் அலகாபாத் அமர்வில் முன் வைக்கப்பட்டது. அந்த நேரத்தில் டோமினியன் அந்தஸ்தை மட்டுமே கோரிவந்த மகாத்மா காந்தியடிகளுக்குக்கூட மொஹானியின் முழக்கத்தை ஏற்பதற்குக் கடினமாக இருந்தது. இந்திய தேசியக் காங்கிரஸ் பூரண ஸ்வயராஜியம் என்ற லட்சியத்தைப் பிரகடனப்படுத்த அதனுடைய லாகூர் அமர்வு வரை (1929) காத்திருக்க வேண்டியிருந்தது.

   இதற்கிடையில் நாடு முழுதும் நடந்து வந்த மக்கள் போராட்டங்களின் கொதி கலன்களிலிருந்து 1925 டிசம்பர் 26ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிறந்தது. மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக மௌலானா ஹஸ்ரத் மொஹானியே இருந்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்த அமைப்பு மாநாட்டுக் கூட்ட நிகழ்வின் மையமான முக்கியக் கொள்கைகளில் ஒன்றாக பூரண சுயராஜியம் இருந்தது தற்செயலான உடன் நிகழ்வு அல்ல.

    கான்பூரில் கம்யூனிஸ்ட்கள், தங்கள் சொந்த அரசியல் அடித்தளத்தில் உறுதியாக நின்று, பூரண சுயராஜியத்திற்காகப் போராடும் தங்கள் உறுதிப்பாடு, தயார்நிலையைத் தேசத்திற்கு அனைத்து வலிமையுடன் பிரகடனம் செய்தார்கள். சுதந்திரம் என்பது முக்கியமாகத் தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட சமூகத்தின் ஒடுக்கப்பட்ட எல்லா பிரிவினரின்

விடுதலையுடன் இணைந்து வருவது கட்டாயம் என அவர்கள் மக்களுக்குக் கற்பித்தார்கள். அமைப்பு மாநாட்டிற்குக் கான்பூரில் எம் சிங்காரவேலு வரவேற்புக்குழு தலைவராக இருந்தார். அவர் மெட்ராஸ் கம்யூனிஸ்ட் குழுவின் தலைவரும், ஏஐடியுசி தொழிற்சங்க நிறுவனர்களில் ஒருவருமாவார். ‘தேச விடுதலை தாகத்துடனும், சுரண்டலற்ற ஓர் உலகுக்காகக் கனவு காண்பவர்கள் அனைவருக்குமான கட்சியே, கம்யூனிஸ்ட் கட்சி’ என்றார் மாநாட்டுத் தலைவர் சிங்காரவேலர். (1923ல் இந்தியாவில் முதன் முறையாக மேதினத்தை மெட்ராஸில் செங்கொடி ஏற்றிக் கொண்டாடிய) தொழிலாளர்களின் அப்பெரும் தலைவர் மாநாட்டின் தொடக்க அமர்வில் தனது தலைமை உரையை நிறைவு செய்யும்போது (அமெரிக்கக் கவிஞர்) வால்ட் விட்மனின் புரட்சிகர கவிதையை மேற்கோள் காட்டினார்.

    கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு மாநாடு ஏதோ வானத்திலிருந்து திடீரென்று தோன்றி நடந்துவிடவில்லை. அந்த டிசம்பரில் எப்போதும்போல கான்பூர் தாங்கமுடியாத கடுங்குளிர் நிலவியது. இருந்தும், சிலரின் அயராத உழைப்பின் விளைவு, இந்தியச் சமூகத்தின் முழுமையான எண்ண நிகழ்முறையை விடுதலைக்கான பெரும் தாகத்துடன் கூடியதாக அதிரச் செய்தது. இந்தியாவுக்குள் பல நகரங்களிலும் மற்றும் தாஷ்கண்ட் போன்று வெளிநாட்டில்கூட செயல்பட்டு வந்த சிறிய கம்யூனிஸ்ட் குழுக்களின் உழைப்பின் விளைவு கான்பூர் மாநாடு. மாபெரும் அக்டோபர் புரட்சி வெற்றியும், அதன் புயல்போன்ற மாற்றங்களின் செல்வாக்கும் இந்தியாவில் அந்த அரசியல் நிகழ்முறைக்கான வேகத்தை அளித்தது. நாட்டிற்குள் வீரம் செறிந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்கள் மேலும் நமது மண்ணை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பதற்குத் தயார்ப்படுத்தின.

   இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் ஒன்றுபட்ட முதலாவது தேசிய அமைப்பான, அனைத்திந்தியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (ஏஐடியுசி) ஏற்கனவே 1920ல் அமைக்கப்பட்டு விட்டது. நாட்டின் பல பகுதிகளிலும் தொழிலாளர்கள், விவசாயிகளின் போராட்டங்கள் வலிமைபெறத் தொடங்கின. இவை சந்தேகமின்றி காலனிய ஆட்சியை அச்சுறுத்தின. 1908ல் லோகமான்ய பால கங்காதர திலகரைப் பிரிட்டிஷ் அரசு கைது செய்தபோது, பம்பாய் தொழிலாளர்களின் வேலைநிறுத்த அறைகூவல் ஒவ்வொருவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அவர்களின் அந்தப் போராட்டக் கிளர்ச்சி தங்களுக்கான எந்தச் சொந்த பணப் பலன்களுக்காகவும் அல்ல. அவர்கள் உரத்து முழங்கியது ஒரே அரசியல் கோரிக்கை –‘திலகரை விடுதலை செய்! தொடுவானத்திற்கு அப்பாலிருந்து தோழர் லெனின் எழுதினார், “இந்தியத் தொழிலாளர் வர்க்கம் வளர்ந்து முதிர்ச்சி பெற்று விட்டது.” அந்த அரசியல் முதிர்ச்சி, இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் கட்டமைப்பையும் போராட்ட உற்சாகக் குணத்தையும் வடிவமைத்தது.

    இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத் தோற்றத்தின் நீண்டகால அர்த்தத்தை முதலில் சரியாக உணர்ந்தது வேறு யாரும் அல்ல, காலனிய எஜமானர்கள்தாம். கட்சியை முளையிலேயே கிள்ளி எறிய அவர்கள் ஒன்றன் பின் ஒன்றாகப் பல பொய் வழக்குகளைப் புனைந்து கம்யூனிஸ்ட்களை நசுக்கத் தொடங்கினார்கள். ஆளும் வர்க்கம் பெஷாவர் (1922-27), கான்பூர் (1924), லாகூர் (1929-30) மற்றும் மீரட் (1929-33) போன்ற சதி வழக்குகளைத் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்தும், அவதூறு பிரச்சாரங்கள் மற்றும் ஒடுக்குமுறை மூலமும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை ஒழித்துக் கட்ட நினைத்த அவர்களின் எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. தனது தத்துவக் கருத்தியலுடன் உயிர்ப்புடன் கட்சி அனைத்துச் சவால்களையும் தாக்குப் பிடித்து நீடிக்கும் போதிய வலிமையுடன் இயங்கியது. ஒடுக்கப்பட்ட மக்கள்திரளிடமிருந்து பெற்ற ஊசலாட்டமில்லாத ஆதரவு, அனைத்துத் தடைகளையும் மீறி, இந்தப் புரட்சிகரக் கட்சிக்கு வலிமையை அளித்தது. கருத்தியலில் தெளிவு மற்றும் தியாகம் செய்யத் தயக்கமில்லாது முன்வரும் விருப்பம் நமது கட்சியின் பெருநிதியச் சொத்து.

    ஒரு கருத்தை மக்கள் ஏற்கும்போது அது காரியசாத்தியமான சக்தியாக மாறுகிறது என்பதைக் கம்யூனிஸ்ட்கள் அறிவார்கள். மக்கட் சமூக எல்லாப் பிரிவு அமைப்புகளையும் ஒன்று திரட்டுவதன் மூலம் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை வேகம் கொள்ளச் செய்ய முடியும் எனவும்; மேலும் அவ்வாறே விடுதலை மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான தங்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்தவும் முடியும் எனக் கம்யூனிஸ்ட்கள் நம்பினார்கள். கம்யூனிஸ்ட்கள் முன்முயற்சியில்தான் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF), அனைத்திந்தியக் கிசான் சபா (AIKS), இந்திய மக்கள் நாடக மன்றம் (IPTA) மற்றும் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் (PWA) போன்ற அமைப்புகள் 1936லிலும், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) 1959லும் அமைக்கப்பட்டன.

    தேச விடுதலையை நனவாக்கவும், ஒடுக்கப்பட்ட பிரிவினர் விடுதலைக்காகவும் நடத்தப்பட்ட போராட்டங்களில் கம்யூனிஸ்ட்கள் சிந்திய குருதியையும், செய்த உயிர்த் தியாகங்களையும் யார்தான் அளவிடமுடியும்! கையூர், கரிவேலூர், வயலார், புன்னபுரா, தெலுங்கானா மற்றும் தேபங்கா –இவையெல்லாம் வெறும் இடங்களின் பெயர்கள் அல்ல. தொழிலாளர்களும் விவசாயிகளும் நடத்திய எண்ணற்றப் போராட்டங்களிலும், இராயல் இந்தியக் கப்பற்படை வீரர்கள் (RIN) நடத்திய கிளர்ச்சி உள்ளிட்ட போர்க்களங்களிலும் கம்யூனிஸ்ட் தியாகிகளின் இரத்தத்தால் தேசத்தின் விடுதலை வரலாறு எழுதப்பட்டது.

    விடுதலைப் போராட்ட இயக்கத்தில் காந்தி, நேரு மற்றும் காங்கிரஸ் இயக்கம் வகித்த பங்கினைக் கம்யூனிஸ்ட்கள் ஒருபோதும் மறுக்கவில்லை. ஆனால், அகிம்சைப் போராட்டத்தின் முலம் விடுதலையைச் சாதித்தது காங்கிரஸ் மட்டுமே என்ற வாதத்தை நாங்கள் கறாராக நிராகரிக்கிறோம்.

   இந்தியா அடிமைச் சங்கலியை, அகிம்சை சத்தியாகிரகம் முதல் ஆயுதப் போராட்டம் வரையான பல்வேறு போராட்டங்கள் மூலம் அறுத்தெறிந்தது. அவர்கள் மத்தியிலிருந்து அச்சமற்று தங்கள் தனிப்பாதையைப் பின்பற்றிய பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் தீவிரவாதிகள் வகித்த பங்கு குறித்துக் கம்யூனிஸ்ட்கள் எப்போதும் பெருமிதம் கொள்கிறோம். ஆனால் தாய்நாட்டு விடுதலைக்கான இந்தத் தீவிரப் போராட்டங்களில் வெறும் பார்வையாளர்களாக இருந்து காணும் பங்கை ஆற்றவும் தவறியவர்கள், தங்களைத் தாங்களே “கலாச்சார அமைப்பு” என்று அழைத்துக் கொண்ட அரசியல் போக்குடன் இந்தியாவில் இருந்தனர். அவர்களே, ஆர்எஸ்எஸ் தலைமையிலான “விச்சாரதாரா” (தத்துவக் கருத்தியலைப்) பின்பற்றியவர்கள். 

    அவர்கள் கலாச்சாரத் தேசியம் என்ற போர்வையில் கோழைத்தனமாகப் பதுங்கிக்  கொண்டு, ஏகாதிபத்தியத்தைத் தூக்கி எறிவதற்கான எல்லாப் போராட்டங்களையும் ‘அரசியல் சார்ந்தது’ என முத்திரை குத்தினர். காலனிய எஜமானர்கள் கேட்டுக் கொண்ட போதெல்லாம் அவர்கள் தங்கள் எஜமானர்களுக்கு அவ்வாறு சேவை செய்யவும் தயங்கவில்லை. அவர்களின் கதாநாயகன் சவார்க்கர், ஒரு முறை அல்ல ஏழு முறை, வெட்கமற்ற மொழியில் ஏகாதிபத்திய ஏஜமானர்களுக்கு மன்னிப்புக் கோரி மனு செய்தார். இப்போது அவனது வழிவந்தவர்கள் தேசபக்திக்கு ஏகபோக உரிமை கோருவது மட்டுமல்ல, தேசத்தை அன்பு செய்வது எப்படி என நாட்டு மக்களுக்குப் பாடம் எடுக்கவும் துணிந்து விட்டார்கள். வரலாறு அவர்கள் செயலைக் கண்டித்து ஏளனமாக எள்ளி நகையாடும் என்பது மட்டும் நிச்சயம்.

    கடந்த நூறாண்டுகளில் கம்யூனிஸ்ட்கள் எப்போதும் மக்களுடன் நின்றார்கள். சுதந்திரத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி கம்யூனிஸ்ட்களின் அடையாளம் ஒன்றேதான்; தேசத்திற்காகவும் மக்களுக்காகவும் போராடி தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தவர்கள் எவரோ அவர்கள்தான் கம்யூனிஸ்ட்கள் என அறியப்படுகிறார்கள். தொழிற்சாலைகளில், வயல்வெளிகளில், கல்வி வளாகங்களில், வீதிகளில் கம்யூனிஸ்ட்கள் மக்கள் நலன் பாதுகாவலர்களானார்கள். நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியிலும் மக்கள் குரலை அவர்கள் எழுப்பினார்கள். எப்போதாவது எங்காவது தலை கவிழ்ந்து வணங்கினார்கள் எனின், அது மக்களின் முன்பு மட்டுமே இருக்க முடியும் என்பதை அவர்களின் எதிரிகள்கூட புரிந்து கொண்டனர்.

   கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு வரலாறு ஏற்ற இறக்கங்கள் நிரம்பியது, அதில் வெற்றிகளும் உண்டு தோல்விகளும் உண்டு. வெற்றிகளில் தலைகனமோ, தோல்விகளில் ஏமாற்றமோ  கொண்டதில்லை கம்யூனிஸ்ட் கட்சி. அதன் நூற்றாண்டு நீண்ட பயணத்தில் பெரும் வெற்றிகளின் சாதனைகளுடன் பின்னடைவுகளையும் அடையாளப்படுத்தியது. வெள்ளையனே வெளியேறு (குவிட் இந்தியா) இயக்கத்தில் கட்சியின் நிலைபாடு, இந்திய விடுதலை இயக்கப் பொது நீரோட்டத்திலிருந்து கம்யூனிஸ்ட்களைத் தனிமைப்படுத்தியது. 1948ல் கட்சி தழுவிய கல்கத்தா தீசிஸ் பாதை மற்றும் 1975ல் தேசிய அவசரநிலை குறித்த அணுகுமுறை ஜனநாயகச் சக்திகள் மத்தியில் மனக்கசப்புக் கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை வரலாறு, தவறுகளைத் திருத்திக் கொள்ள அதன் உட்பொதிந்த ஆர்வத்தின் மூலம், தீர்மானிக்கும். பிற எல்லா கட்சிகளும் தங்கள் தவறுகளை மூடி மறைக்க சால்ஜாப்புக் காரணங்களைத் தேடியலையும்போது, சிபிஐ மட்டும் செய்த தவறுகளையும் அதைத் திருத்திக் கொள்வதைப் பற்றியும் மக்களிடம் வெளிப்படையாகச் கூறுகின்ற ஈடு இணையற்ற துணிச்சலைக் காட்டியது.

  கம்யூனிஸ்ட் கட்சி ஜமீன்தார்களிடமிருந்து உபரி நிலங்களைக் கைப்பற்றி நிலமற்றவர்களுக்குப் பிரித்துக் கொடுக்க பல்வேறு நிலமீட்புப் போராட்டங்களை ஏற்பாடு செய்து நடத்தியது.   1970களின் தொடக்கத்தில்

 கட்சி பொதுச் செயலாளர் சி ராஜேஸ்வர ராவ் தானேமுன்னின்று அப்போராட்டங்களை நடத்தினார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மக்கள் வாழ்க்கை கஷ்டங்களைச் சந்தித்தபோது சிபிஐ டெல்லியை நோக்கிப் பேரணிகள் நடத்தியது. பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராகக் கட்சி நடத்திய போராட்டங்களில் 400கும் மேற்பட்ட கட்சித் தோழர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தனர். 1990களின் தொடக்கத்தில் பாபர் மசூதியை இடித்து அழிக்க சங்பரிவார் அச்சுறுத்தியபோது அயோத்தியில் சிபிஐ, “அன்பின் சுவர்” என்ற பெருந்திரள் மக்கள் இயக்கத்தை அமைத்து நடத்தியது. தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பழங்குடியின மக்கள் மற்றும் பெண்கள் நடத்திய
போராட்டங்களுக்குக் கட்சி வழங்கிய ஊசலாட்டமில்லாத உறுதியான ஆதரவு என அனைத்தும் வரலாற்றில் பதிவாகி உள்ளன. சிபிஐ தலைவர் சி அச்சுத மேனன் தலைமையின் கீழ் கேரளா, இந்தியாவில் நிலப்பிரபுத்துவத்தைச் சட்டபூர்வமாக ஒழித்த முதல் மாநிலமானது, அது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் பெருமிதம் மிக்க தருணமாகும்.  

            (கட்டுரை இரண்டாவது பகுதியில் நிறைவடையும்)

--நன்றி : நியூஏஜ் (2025, ஜன.12 –18)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர் 


         



          



No comments:

Post a Comment