Monday, 20 January 2025

முன்னோக்கி நாம் அணிவகுப்போம் தோழர்களே! (பகுதி 2) --பினாய் விஸ்வம்

 

 முன்னே முன்னே முன்னோக்கி          
நாம் அணிவகுப்போம் தோழர்களே!
 

                             (பகுதி 2)

                             --பினாய் விஸ்வம்

உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம்

   சர்வதேசக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனித்த அங்கீகாரத்துடன் விளங்குகிறது. 1960களின் தொடக்கத்தில் காட்சியில் வந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் துரதிருஷ்டவசமான பிளவைத் தொடங்கி வைத்தது. அது முன்வைத்த கருத்தியல மற்றும் அரசியல் நிலைபாடுகள் பின்னர் மாவோயிசம் என்றழைக்கப்படலாயிற்று. அதன் மையமான முக்கிய சாராம்சம் குறுகிய தேசியவாதமும் கண்மூடித்தமான சோவியத்யிச எதிர்ப்புமே. மாவோயிசம், இந்தியா உள்பட உலகம் முழுதும் உள்ள பல கம்யூனிஸ்ட் கட்சிகளில் பிளவின் அழிவு விதைகளை விதைத்தது. மாவோயிசம் என்பது மார்க்சியத்தின் சிதைக்கப்பட்ட தவறான விளக்கம் என்று முதலில் அறிவித்தது சிபிஐ கட்சியே. தீவிர வலதுசாரி சக்திகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட பாசிசத் தாக்குதலைத் தொடர்ந்து சிபிஐ, ‘‘கொள்கைசார்ந்த அடிப்படையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒற்றுமை” என்ற முழக்கத்தை உயர்த்திப் பிடித்தது.

கட்சியின் அமைப்புநிலை மாநாடுகள்

    புத்தாண்டு நமது கட்சியின் அமைப்புநிலை மாநாடுகளைச் சந்திக்க உள்ளது. சிபிஐ 25வது கட்சிக் காங்கிரஸின் ஒரு பகுதியாகக் கிளை மாநாடுகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அதன்பிறகு, உள்ளூர் தாலுக்கா, மண்டல, மாவட்ட மற்றும் மாநில மாநாடுகள் நடத்தப்படும். இதே ஆண்டில் சண்டிகார் நகரில் செப்டம்பர் 21 முதல் 25வரை நடைபெற உள்ள கட்சிப் பேராய (கட்சி காங்கிரஸ்) மாநாட்டிற்கான தயாரிப்புகள் தொடங்கிவிட்டன. 2025ம் ஆண்டு என்பது மாநாடுகள் மற்றும் கட்சிக் காங்கிரஸின் ஆண்டு என்பதன் பொருள், மக்களுக்கான போராட்டத்தில் கட்சியை அசைக்க முடியாத சக்தியாக கட்சியை மேலும் வலிமையாக்குவதற்கான நேரம் என்பதே. “வலிமை பெறச் செய்வது” என்பது தத்துவக் கருத்தியல், அரசியல் மற்றும் அமைப்புரீதியான தாக்கங்களை உள்ளடக்கியது. மாநாடுகளை நோக்கி செல்லும்போது அதனை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

மாநாட்டில் கருத்தில் கொள்க

    மாநாடுகளில் நமது நாட்டு மக்களின் பிரச்சனைகள் தீவிரமாக விவாதிக்கப்படும், மேலும் இந்த வரலாற்றுச் சூழலில் கம்யூனிஸ்ட்கள் ஆற்ற வேண்டிய கடமை பொறுப்புகள் திட்டமிடப்படும். மாநாட்டின் முன்பு பிரதிநிதிகள் விவாதிக்க வேண்டிய ஆவணங்கள் முன் வைக்கப்படும். தோழர்கள் அனைவருக்கும், அமைப்புரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இருக்க வேண்டிய உயரிய கம்யூனிஸ்ட் உணர்வுடன், தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த உரிமை உண்டு. போதுமான விவாதங்களுக்குப் பிறகு கட்சியின் முடிவு எடுக்கப்படும்; கட்சி முடிவு எடுத்த பிறகு அதற்குப் பற்றுறுதியாக அனைவரும் நிற்க வேண்டும்.

    கட்சி வலிமையின் அடிப்படை, அதன் ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு. கட்சியின் அரசியல் முதிர்ச்சியின் மைல்கல், (இந்நிகழ்முறையில், வள்ளுவர் எச்சரிக்கும் ‘நுனிக்கொம்பு ஏறினார்’ என்ற) அராஜகவாத இறுதி முனை அல்லது உச்சபட்ச அதிகாரத்துவப் போக்கு இறுதிமுனை ஆகிய பாதை விலகல்களுக்கு நகர்ந்துவிடாமல் தடுக்கும் கண்காணிப்பு விழிப்புணர்வு காட்டப்படுவதில் உள்ளது. (அதாவது, கட்சியில் விவாதங்களை அனுமதிக்காது தலைமை அதிகாரத்துவத்துடன் நடந்து கொள்வது; மற்றும் விவாதங்களைத் தொடர்ந்து முடிவு எடுத்த பிறகு, தோழர்கள் முடிவுக்கு மாறுபட்ட தங்கள் நிலைபாட்டில் பிடிவாதம் காட்டுவது என்ற இருவேறுபட்ட இறுதிமுனைகள், extremities தவிக்கப்பட வேண்டும் என்பது கருத்து)

வலதுசாரி அரசியல் ஊடகங்கள்

  கம்யூனிஸ்ட் மாநாடு நடக்கும் காலத்தைத் தங்கள் தகிடுதத்தத் தந்திரங்களை அரங்கேற்றுவதற்கான நல்ல நேரம் என்று எண்ணும் கேரள ஊடகம்போல நாட்டில் எண்ணற்ற பல ஊடகங்கள் உள்ளன. அவை வலதுசாரி அரசியல் மற்றும் அதன் வர்க்க அடிப்படையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. கம்யூனிஸ்ட் இயக்கம் மக்களிடம் அங்கீகாரம் பெறுவதையும், சக்திவாய்ந்த இயக்கமாக ஆவதையும் அவர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை. ஆனால் கருத்தியல் மற்றும் அரசியல் ரீதியில் பலவீனமான சில தோழர்கள், அறிந்தோ அறியாமலோ,

பல நேரங்களில் வலதுசாரி ஊடகங்கள் விரிக்கும் வலையில் வீழ்கிறார்கள். தாங்கள் செய்து வருவது இயக்கத்தைப் பலவீனப்படுத்தும் கட்சி விரோத நடவடிக்கை என்பதை அந்தத் தோழர்கள் உணர வேண்டும். சமூக ஊடகம் இரு முனைகளிலும் கூர்மையான கத்தி என்ற விழிப்புணர்வு நம் அனைவருக்கும் வேண்டும். தத்துவக் கருத்தியல் போராட்டத்தில் அதனைத் திறமையாகப் பயன்படுத்த முடியும். அதே நேரத்தில் அதுவே கட்சி அமைப்பைச் சீர்குலைக்கும் வல்லமை உடையதும் கூட என்பதை நாம் மறக்கக் கூடாது.

நமது பொறுப்பு 

 கட்சி அமைப்புகளில் விவாதிக்க வேண்டிய விஷயங்களைப் பொதுவெளியில் வெளிப்படையாக விவாதிக்கும் போக்கு என்பது, அரசியல் முதிர்ச்சி மற்றும் அமைப்புக் கட்டுப்பாடு பற்றாக்குறையின் வெளிப்பாடு. அந்தப் போக்கு களைந்து நீக்கப்பட வேண்டும். நமது மத்தியில் அரிதாக இருப்பினும், அத்தகைய கட்சி விரோதப் போக்கு உடையவர்களைக் கட்சியிலிருந்து வெளியேற்றவும் கூட 24வது கட்சி காங்கிரஸில் திருத்தப்பட்ட கட்சி அமைப்பு விதிகள் அனுமதிக்கிறது. மாநாடுகளில் அச்சமற்ற விவாதங்கள் கட்சிக்குள் நிச்சயமாக நடக்கின்றன. அத்தகைய விவாதங்கள் இயக்க வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்காக இருக்க வேண்டும். அதற்கான இடம் கட்சியின் அந்தந்த அமைப்புகளே (தவிர பொது வெளிகளோ, ஊடகங்களோ அல்ல). நம்முடைய கட்சி போன்ற ஒரு புரட்சிகரமான கட்சி, பிரச்சனைகளைக் கட்சி அமைப்புகளில் விவாதிப்பதற்கு மாறாக, பொது(வெளியில்) அறிக்கைகள் விடுபவர்களுக்கு எந்த இடமும் அளித்திடக் கூடாது. 

ஒரு கேரள உதாரணம்

    கேரளாவில் ஒரு முன்னணி செய்திப் பத்திரிக்கை கட்சி மாநாடுகள் தொடங்குவதை ஒட்டி ஒரு தவறான கட்டுக்கதையுடன் வெளி வந்தது என்றால், அது காரணமில்லாமல் சாதாரணமாக நடந்திருக்க முடியாது. அத்தகைய கட்டுக் கதைகளைப் படித்து அதை உண்மை என்று நம்பி ஏமாறுபவர்கள் இருப்பார்கள் எனின், அந்தப் பத்திரிக்கைகளுக்கு அவர்கள் தான் இலக்குகள்.

கேரள மாநிலக் கட்சி அலுவலகம் (கேரள சிபிஐ முதல் மாநிலச் செயலாளர் எம் என் கோவிந்தன் நாயர் பெயரில் அமைந்த) ‘எம் என் ஸ்மாரகம்’ (நினைவக) கட்டடத்தில் செயல்படுகிறது; அக்கட்டடம் புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்பு விழா செய்தியை வெளியிட்ட அந்தப் பத்திரிக்கை, ‘திறப்பு விழாவின்போது கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜா காணப்படவில்லை என அவர்கள் வருந்துவதாக’ இரண்டகம் செய்யும் நோக்கத்தில் செய்தி வெளியிட்டது. அதே கட்டுரையில், ‘தோழர் ராஜா தமிழகத்திலிருந்து மக்களவை வேட்பாளராக மோசமான வழியை நாடிய’தாக மற்றொரு பொய்க் கட்டுக்கதையையும் அவிழ்த்து விட்டது. 

உண்மை என்ன?

    புதுப்பிக்கப்பட்ட எம்என் நினைவகத்தின் திறப்பு விழா, கட்சியின் பிறந்த நாளான 2024 டிசம்பர் 26ல் நடத்துவதாகத் திட்டமிடப்பட்டது. அதே நாளில் கட்சி பிறந்த இடமான கான்பூரில் மாபெரும் பேரணி மற்றும் மாநாடு நடத்துவது எனத் தேசியக் குழு முடிவெடுத்து இருந்தது. சாதாரண பகுத்தறிவுள்ள எவரும், ஒரே நேரத்தில் ஒரே நாளில் கான்பூரில் ஒரு விழாவிலும், திருவனந்தபுரத்தில் மற்றொரு விழாவிலும் ஒரு மனிதர் கலந்து கொள்வது என்பது முடியாத ஒரு செயல் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். தங்கள் தலையில் கம்யூனிஸ்ட் விரோத நஞ்சுடன் பொய்க் கட்டுக்கதை புனைய முடிவு செய்தவர்களிடம் இந்தப் பொதுவான பகுத்தறிவை எதிர்பார்க்க முடியாது. அவர்களுடைய ஒரே எண்ணம், கட்சி மாநாடுகளில் கலந்து கொள்ளும் பலகீன மனதுடைய எவராவது தாங்கள் எதிர்பார்த்தபடி அதை நம்பி மாநாட்டில் நடந்து கொண்டால் அதுவரை நல்லது என்பதே. இந்த மனிதர்களின் கேடுகெட்ட புத்தியில் இதுபோன்ற கதைகளை உற்பத்தி செய்து உலவ விடக்கூடும். இத்தகைய வலதுசாரி ஊடகங்களால் விரிக்கப்படும் வலைகளில் கம்யூனிஸ்ட் கட்சியின் அணிகள் இரையாக மாட்டார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளட்டும். 

முன்னோக்கி அணிவகுப்போம்!

  கம்யூனிஸ்ட் மதிப்புறு விழுமியங்களுக்காகப் பற்றுறுதியுடன் நாம் முன்னோக்கி அணிவகுப்போம். அனைத்து வகையான அத்தகைய அவதூறுகள் நிச்சயம் பின்வாங்கி ஓட்டம் பிடிக்கும். கட்சிதான் நமது பெருமிதம், கட்சிதான் நமது உணர்வு மற்றும் வழிகாட்டி என்ற அசைக்க முடியாத பற்றுறுதியை நெஞ்சில் நிறுத்தி கம்யூனிஸ்ட்கள்  தீர்மானகரமாக முன்னோக்கி நடப்போம்! கட்சியின் நூற்றாண்டு விழாகள், 25வது கட்சிக் காங்கிரஸ் காண உள்ள சூழலில் புலரும் புத்தாண்டில் இதுவே நமது சபதமும் பிரகடனமுமாக இருக்கட்டும்!

வாழ்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி!

வாழ்க செங்கொடி!

இன்குலாப் ஜிந்தாபாத்!   

--நன்றி : நியூஏஜ் (2025, ஜன.12 –18)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர் 


No comments:

Post a Comment