சிபிஐ வரலாற்றில் அதன் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் குறித்த சுருக்கமான பதிவு
--அனில் ரஜீம்வாலே
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அதன் வரலாற்றுப் பயணத்தில், கட்சியின் தலைவர்கள்
(சேர்மன்), பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட சில தலைசிறந்த ஆளுமையாளர்களைப் பெற்றுள்ளது.
அவர்கள் வாழ்க்கை வரலாற்றின் குறைந்தபட்ச அடிப்படை விபரங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இக்கட்டுரையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டைக் கொண்டாடும் தருணத்தில்
சிபிஐ சேர்மன்கள் மற்றும் பொதுச் செயலாளர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களது படைப்புக்களின்
முக்கியமான சில உண்மைகளை வழங்குகிறோம்.
எம் சிங்காரவேலு : சிபிஐயின் முதல் சேர்மன்
ஒரு வகையில், எம் சிங்காரவேலர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தலைவர். கான்பூரில் 1925 டிசம்பர் 25 முதல்
29 வரை நடந்த சிபிஐ அமைப்பு மாநாட்டிற்கு அவர் தலைமை தாங்கினார். அப்போதைய கட்சி அமைப்பு
விதிகள்படி மாநாட்டின் தலைவராகச் செயல்பட்டவரே ‘மத்திய செயற்குழு’ (CEC) மற்றும் கட்சியின்
சேர்மன் ஆவார். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், ‘தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்’
என்று புகழப்படுகிறார்.
தலைமையுரையில் சிங்காரவேலர்,
சோஷலிசம் மற்றும் கம்யூனிசத்தின் அடிப்படை கோட்பாடுகளைப் பட்டியலிட்டு, சிபிஐ இலட்சியங்கள்,
நோக்கங்களை எடுத்துரைத்தார்.
மெட்ராஸில் 1860 பிப்ரவரி
18ல் பிறந்த சிங்காரவேலர், FA முதல் தேர்வு மற்றும் மெட்ராஸ் பல்கலைக்கழக இளங்கலை பட்டத்
தேர்விலும் தேறினார். மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞரானார்.
1902ல் வணிகத்திற்காக லண்டன் சென்றவர், அங்கே உலக புத்தமதவாதிகள் மாநாட்டில் கலந்து
கொண்டார். சுய மரியாதை இயக்கம் மற்றும் சோஷலிச சுயமரியாதை இயக்கத்துடன் தொடர்புடைய
சிங்காரவேலர் நாடறிந்த சமூக சீர்திருத்தவாதி. காங்கிரஸ் தீவிரவாதத் தலைவர்களான புகழ்பெற்ற
மகாகவி சுப்பிரமணிய பாரதியார், தொழிலாளர் தலைவர் வி சர்க்கரை செட்டியார், வஉ சிதம்பரம்
பிள்ளை (வஉசி) மற்றும் பிறருடன் தொடர்பு ஏற்பட்டது.
டெக்ஸ்டைல் மில் தொழிலாளர்கள்
மற்றும் ரயில்வே தொழிலாளர்கள் இயக்கத்தில் பங்கேற்று, மெட்ராஸ் லேபர் யூனியன் மற்றும்
பிற சங்கங்களை அமைக்க உதவினார்: அதில் (மெட்ராஸ் மற்றும் சதர்ன் மராட்டா இரயில்வே எனப்படும்)
MSM தொழிலாளர்கள், மின்சாரம், டிராம்வே, பெட்ரோலியம், பெயிண்ட், அலுமினியம்
சார்ந்த தொழிற்சங்கங்கள் மற்றும் கோயம்புத்தூர், மதுரை தொழிலாளர்கள் என இன்ன பிற சங்கங்கள்
அமைப்பதிலும் உதவினார்.
காங்கிரஸ் கட்சியின் கயா
மாநாட்டில் 1922ல் கலந்து கொண்டு, எஸ் ஏ டாங்கேவை அங்கே சந்தித்தார். அவரது முன்முயற்சியில்
இந்தியாவில் முதன்முறையாக 1923ல் மே தினம் கொண்டாடப்பட்டது, மெட்ராஸ் கடற்கரையில் இரண்டு
கூட்டங்களில் செங்கொடி ஏற்றப்பட்டது. இந்தக் கூட்டங்களில் லேபர் கிசான் பார்ட்டி (தொழிலாளர்
விவசாயிகள் கட்சி) அறிவிக்கப்பட்டது.
1924 –28 கான்பூர் சதி வழக்கில்
கைது செய்யப்பட்டார்.
1932ல் கம்யூனிஸ்ட் குழு
அமைக்கப்பட்டு, அமீர் ஹைதர் கானுடன் தொழிலாளர் பாதுகாப்பு லீக் அமைப்பு அமைக்கப்பட்டது.
அது கம்யூனிஸ்ட் கட்சி மையம் என்றும் அழைக்கப்பட்டது.
1936 நவம்பரில் ‘சுயமரியாதை
சோஷலிச மாநாட்டில்’ முன்னணி தலைவராகச் சிங்காரவேலருடன் எஸ் ஏ டாங்கே வந்தார். காங்கிரஸ்
சோஷலிசக் கட்சி (CSP)ல் எஸ் வி காட்டேவுடன் சிங்காரவேலரும் ஒத்துழைத்தார்.
1936ல் மெட்ராஸ் வந்த எம் என் ராய், சிங்காரவேலர் இல்லத்தில் தங்கினார். ஜனசக்தி இதழில்
பணியாற்றி சிங்காரவேலர் சோஷலிசத்தைப் பரப்பினார். மீரட் சதி வழக்கில் அவரும்கூட குறறம்
சாட்டப்பட்டார், அவரது உடல்நலமின்மை காரணமாக அவர் கைது செய்யப்படவில்லை.
சிந்தனை சிற்பி ம சிங்காரவேலர்
1946 பிப்ரவரி 11ல் காலமானார்.
எஸ்வி காட்டே: சிபிஐ முதல் பொதுச் செயலாளர்
1894 டிசம்பர் 14ல் பிறந்த காட்டே பம்பாயில் பிகாம் இளங்கலை படித்தார்.
எஸ்ஏ டாங்கேவின் தி சோஷலிஸ்ட் வார இதழுடன் தொடர்பு ஏற்பட கம்யூனிஸ்டானார். இருவரும்
பம்பாயில் காங்கிரஸில் பணியாற்றி, காங்கிரஸ் இயக்கத்திற்குள் ஜோக்லேக்கர், மிராஜ்கர்,
நிம்கார் உள்ளிட்ட தீவிரவாதக் குழுவை அமைத்தனர்; இருவரும் பம்பாயிலும் பிற இடங்களிலும்
தொழிலாளர் இயக்கத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினர்.
1925ல் சிபிஐ பழைய அமைப்பு
விதிகளின்படி கட்சியில் 3 பொதுச் செயலாளர்கள் பொறுப்பேற்க முடியும்; அதன்படி, சிபிஐயின்
முதல் இரண்டு பொதுச் செயலாளர்களில் ஒருவராக காட்டே, ஜெபி பகர்கட்டாவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1927 பம்பாயில் நடந்த விரிவடைந்த மத்திய செயற்குழுவில் (சிஇசி) ஒரே பொதுச் செயலாளராகத்
தேர்வு செய்யப்பட்டார். கிர்ணி காம்கர் யூனியன் மற்றும் தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சியின்
(WPP) முன்னணித் தலைவராக விளங்கினார். 1929 மீரட் சதி வழக்கில் கைதானார். மெட்ராஸ்
மாகாணத்தில் சிபிஐயை நிறுவிய நிறுவனர்களில் அவரும் இருந்தார். 1943 சிபிஐ முதலாவது
கட்சி காங்கிரஸில் மத்திய குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தியோலி முகாமிலும்
வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டார். சிபிஐ வரலாற்றின் புகழ்பெற்ற முக்கிய ஆவணமான
‘3-Pகளின் கடித’த்தை, டாங்கே மற்றும் அஜாய் கோஷ் உடன், வரைந்த சிற்பிகளில் ஒருவர்.
கட்சி கட்டுப்பாட்டுக் குழுவிலும்,
சிபிஐ பொருளாளராகவும் மத்திய செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ள காட்டே புது டெல்லியில்
1970 நவம்பர் 28ல் காலமானார்.
அஜாய் கோஷ் : பகத் சிங்கின் நெருங்கிய சகா
வங்காளத்தின் மிகிஜாமில்
1909 பிப்ரவரி 20ல் பிறந்தார். கான்பூரில் படித்தார். பகத் சிங்,
பட்டுகேஷ்வர் தத், சந்திரசேகர ஆஸாத், பிஜாய் குமார் சின்ஹா முதலான புரட்சியாளர்களுடன்
பணியாற்றினார்.
பம்பாய் 1934 அக்டோபரில் சிபிஐ மத்திய குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு
பிசி ஜோஷி, ஆர்டி பரத்வாஜ் முதலானவர்களுக்குக் கம்யூனிஸ்ட் இயக்கத்தை மீண்டும் ஒன்று
சேர்க்க உதவினார். 1936ல் கட்சி பொலிட் பீரோவுக்குத் தேர்வானார்.
1938 முதல் சிபிஐ பத்திரிக்கை
நேஷனல் ஃபிரண்ட் (தேசிய முன்னணி) இதழை நடைமுறையில் அனைத்து வகைகளிலும் நடத்தினார்.
பிடிஆர் பாதையையும் 1948 –50களின் ஆந்திரா பாதையையும் எதிர்த்தார்.
டாங்கே, காட்டே உடன் இணைந்து
3-Pகள் கடிதத்தை எழுதிய ஆசிரியர்களில் ஒருவர். 1951ல் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாட்டின் முக்கிய நீரோட்டத்தில் இணைந்து செயல்படும் வகையில் கட்சி அணுகுமுறையில் தேவையான
திருத்தங்களைச் செய்து, முக்கிய எதிர்க்கட்சியாகக் கட்சியை வழி நடத்தினார். உட்கட்சி
சூழலில் மிகக் கடுமையான காலத்தில் கட்சியை நடத்திய அஜாய் கோஷ், 1962 ஜனவரி 13ல் மறைந்தார்.
சோமநாத் லாஹிரி : அரசியலமைப்பு நிர்ணய சபையில் ஒரே சிபிஐ உறுப்பினர்
மீரட் சதி வழக்கில் மிராஜ்கர்
கைது செய்யப்பட்ட பிறகு 1934ல் சிறிது காலம் சிபிஐ பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.
வங்கத்தில் 1909 செப்டம்பர் 1ல் பிறந்தார். 1946ல் அரசியலமைப்பு நிர்ணய சபைக்குத் தொழிலாளர்கள்
தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட்
உறுப்பினராகப் புகழ் பெற்றார். 19ம் நூற்றாண்டின் ‘இளம் வங்க இயக்க’த் தலைவரான ராம்தனு
லாஹிரி குடும்பத்தைச் சேர்ந்தவர் சோமநாத். கல்கத்தா பிரிஸிடென்சி கல்லூரியிலிருந்து
பிஎஸ்சி (ஹானர்ஸ்) பட்டம் பெற்றார். பூபேந்திர நாத் தத்தா போன்ற புரட்சிளாளர்களுடன்
தொடர்பு ஏற்பட்டு மார்க்ஸியவாதி ஆனார்.
1931 கராச்சி காங்கிரஸ் மாநாட்டில்
பங்கேற்றார். அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF) மற்றும் தொழிற்சங்கங்களில் உழைத்தார். 1930கள் காலகட்டத்தின்
கம்யூனிஸ்ட்களின் ‘கல்கத்தா கமிட்டி’யின் அங்கமாவார். அனைத்திந்திய காங்கிரஸ் குழு
(AICC) உறுப்பினராக 1936ல் இடம் பெற்றார். ‘ஸ்வதந்திரா’ (வங்கமொழி) இதழ் ஆசிரியராக
இருந்தார். பிடிஆர் காலத்தில் பொலிட் பீரோ உறுப்பினர். 1957ல் மேற்கு வங்கச் சட்டப்
பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1977வரை அதில் தொடர்ந்தார். மாநில அமைச்சரவையில்
1967 மற்றும் 1969ல் அமைச்சராக இருந்தார்.
சோமநாத் லாஹிரி 1984
அக்டோபர் 19ல் இயற்கை எய்தினார்.
எஸ்எஸ் மிராஜ்கர் : பம்பாய் கம்யூனிஸ்ட் மேயர்
1899 பிப்ரவரி 8ல் மகாராஷ்டிராவில் பிறந்தார். மெட்ரிக் படிப்பை முடித்து ஆலைத் தொழிலாளியாகப் பம்பாயில் பணியாற்றினார். AITUC மற்றும் தொழிலாளர் விவசாயிகள் கட்சியில் (WPP) பணியாற்றினார். கிராந்தி (புரட்சி) மராத்தி இதழ் ஆசிரியர். சைமன் குழு புறக்கணிப்புப் போராட்டத்திற்குத் தலைமையேற்றார். 1929 –33 மீரட் சதி வழக்கில் கைதாகி சிறை தண்டனை பெற்றார்.1934ல் யங் ஒர்க்கர்ஸ் லீக் (இளைய தொழிலாளர்கள்) அமைப்பைத் திரட்டினார். 7வது உலக காமின்டர்ன் காங்கிரஸ் (மாநாட்டில்) பங்கேற்க மாஸ்கோ செல்லும் வழியில் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டார். 1940 தியோலி முகாமில் அடைக்கப்பட்டார். தனி மராத்தி மாநிலம் அமைக்கக் கோரிய சம்யுக்த மகாராஷ்டிரா இயக்கத்தின் (ஐக்கிய மகாராஷ்டிரா சமிதி) முன்னணித் தலைவராகச் செயல்பட்டார். கோவா விடுதலை இயக்கத்தில் பங்கேற்றார். 1958ல் பம்பாய் மேயராகத் தேர்ந்தெடுக்கப்-பட்டார்.
1980 பிப்ரவரி 15ல் காலமானார்.
இஎம்எஸ் நம்பூதிரிபாத் : முதலாவது கம்யூனிஸ்ட் முதலமைச்சர்
(கேரளாவின்) மலப்புறம் மாவட்ட எர்ணாகுளத்தில் 1909 ஜூன்13ல்
பிறந்தார். 1925ல் பள்ளியில் சேர்ந்து 1929ல் எஸ்எஸ்சி பள்ளி இறுதித் தேர்வில் தேறினார்.
சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்றார். 1927ல் மெட்ராஸ் அனைத்திந்திய காங்கிரஸ்
கமிட்டிக் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொள்வதற்காகக்
கல்லூரி படிப்பைத் துறந்தார். காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி (CSP) மற்றும் காங்கிரஸ்
AICCல் தீவிரமாக ஈடுபட்டு கோவில் நுழைவு சத்தியாகிரகத்தில் பங்கேற்றார்.
திருவிதாங்கூர் –கொச்சி விவசாயிகள்
இயக்கத்தில் புகழ்பெற்ற முன்னணித் தலைவராக விளங்கினார். 1936ல் சிபிஐயில் சேர்ந்து
அதன் முதலாவது கட்சி காங்கிரஸ் மாநாட்டில்
(1943) சிபிஐ மத்தியக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1951ல் முதல் பொலிட்
பீரோ உறுப்பினர். 1957 பொதுத் தேர்தலில் கேரளாவின் முதல் கம்யூனிஸ்ட் முதலமைச்சரானார்.
1962 –64ல் சிபிஐ பொதுச் செயலாளர். (கட்சி பிளவுக்குப் பின்) 1977ல் சிபிஐ (எம்) பொதுச்
செயலாளர்.
1998 மார்ச் 19ல் காலமானார்
பிசி ஜோஷி : கம்யூனிஸ்ட் இயக்கம் கட்டியவர்
(உத்தர்காண்ட் மாநில) அல்மோராவில்
1907பிப்ரவரி 14ல் பிறந்தார். அலகாபாத் பல்கலைக் கழகத்தில் எம்ஏ முதுகலைப் பட்டம் பெற்றார்.
ஜவகர்லால் நேரு மற்றும் யூசுப் மெஹ்ராலியுடன் இளைஞர் லீக் இயக்கத்திலும் WPP கட்சியிலும்
இருந்தார். மீரட் சதி வழக்கில் கைதானவர்களில் வயதில் மிக இளைய சிறைவாசி. 1933ல் புரொவிஷனல்
மத்திய குழுவில் இருந்தவர்,1935ல் சிபிஐ பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேசிய முன்னணி, AISF, AIKS, PWA, IPTA முதலான அமைப்புகளுக்கு ஆதர்சமாக ஊக்குவிப்பவராக விளங்கினார். தேசிய முன்னணி,
பியூபிள்ஸ் வார், பியூபிள்ஸ் ஏஜ் முதலான கம்யூனிஸ்ட் கட்சி இதழ்களை நிறுவினார்.
1943ல் நடந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது பேராயத்தில் (கட்சி காங்கிரஸ்
மாநாட்டில்) பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1943 –44ல் காந்திக்கும் ஜோஷிக்கும்
இடையில் நடந்த கடிதப் போக்குவரத்து முக்கியமானது. இந்தியாவில் கலாச்சார மறுமலர்ச்சியை
ஏற்படுத்தியவர். 1947 டிசம்பரில் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்
(பிடிஆர் பொதுச் செயலாளராகி, பிடிஆர் பாதை அமலானது. சறுக்கல்களிலிருந்து மீண்டபோது)1958க்குப்
பிறகு கட்சி மத்திய செயலகத்திற்கு ஜோஷி தேர்வானார். நியூஏஜ் இதழின் ஆசிரியராக இருந்தார்.
ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்க ஆவணக் காப்பகத்தை நிறுவினார்.
பிசி ஜோஷி 1980 நவம்பர்
9ல் இயற்கை எய்தினார்.
எஸ் ஏ டாங்கே : தலைச்சிறந்த தொழிலாளர் வர்க்க, கம்யூனிஸ்ட் தலைவர்
குறிப்பாக 1962ல் ஏற்படுத்திய ஏற்பாட்டின் கீழ் ஒருவகையில் அவர் சிபிஐ சேர்மன்.
பம்பாய் நாசிக்கில் 1899 அக்டோபர் 10ல்
பிறந்தார். 1917ல் பம்பாய் வில்சன்
கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரியில் ‘யங் காலேஜியன்’ இதழ் ஆசிரியராக இருந்து, இலக்கிய
மன்றம் நடத்தினார். முதலில் திலகர் மற்றும் மகாத்மா காந்தியால் செல்வாக்கு செலுத்தப்பட்டார்;
இறுதியில் மார்க்சியக் கருத்துகளை முழுமையாக ஏற்று ஒரு மார்க்சியர் ஆனார். ‘காந்தி
எதிர் லெனின்’ (1921) என்ற இந்தியாவின் முதல் மார்க்சிய நூலை எழுதினார், ‘தி
சோஷலிஸ்ட்’ என்ற முதல் மார்க்சிய இதழ் (1922) ஆசிரியர்.
1925லிருந்து சிபிஐ மத்திய
செயற்குழுவில் (சிஇசி) இடம் பெற்றார். 1940 –42ல் தியோலி தடுப்புக் காவல் முகாமில்
அடைக்கப்பட்டார். 1943ல் மத்தியக் குழுவிலும் 1953ல் பொலிட் பீரோவிலும் இருந்தார்.
1958 முதல் மத்தியச் செயலகத்தில் இடம் பெற்றார். கான்பூர் சதி வழக்கில் (1924 –28)
கைது செய்யப்பட்டார். 1928ல் பம்பாயில் டெக்ஸ்டைல்
தொழிலாளர்களின் (கிர்ணி காம்கர் யூனியன்,
GKU) மிகநீண்ட கால வேலைநிறுத்தத்தைத் தலைமையேற்று நடத்தினார்.
(1929 –33) மீரட் சதி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
(சிபிஐ பாதை மாற்றத்திற்குக்
காரணமான புகழ்பெற்ற) 3-Pகள் கடிதத்தை 1950ல் அஜாய்கோஷ் மற்றும் எஸ்வி காட்டேவுடன்
எழுதினார். 1950ல் நால்வர் தூதுகுழுவில் இடம் பெற்று ஸ்டாலினைச் சந்தித்தார். ஏஐடியுசி
பேரியக்கத்தின் பொதுச் செயலாளர். 1963 செப்டம்பர் 13ல் பல லட்சம் மக்களின் கையொப்பங்களுடன்
நாடாளுமன்றத்திற்கு முதலாவது மாபெரும் அணிவகுப்பைத் தொடங்கியவர், ‘பந்த்’, ‘கேரோ’ மறியல்
போன்ற புதிய வடிவங்களில் போராட்ட இயக்கங்களை மேற்கொண்டவர். 1962 முதல் 1982வரை இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சியின் சேர்மனாகச் செயல்பட்டார்.
1946ல் பம்பாய் மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும், 1957 மற்றும் 1967ல் மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கோவா விடுதலை மற்றும் ஒன்றுபட்ட சம்யுக்த மகாராஷ்டிரா இயக்கங்களின் முன்னணித் தலைவர். [1981ல் சிபிஐயிலிருந்து வெளியேற்றப்பட்டவர், 1983ல் அனைத்திந்திய கம்யூனிஸ்ட் கட்சி, AICPல் சேர்ந்தார்; பின்னர் AICP, மொகித்சென்னின் ICPயுடன் இணைந்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியாக, யுசிபிஐ ஆனது --மொழிபெயர்ப்பாளர் இணைப்பு].
‘இந்தியா – ஆதிகாலக் கம்யூனிசத்திலிருந்து அடிமைச் சமூகம் வரை’ என்ற நூலுக்காக டாங்கே அறியப்படுகிறார்.
1991 மே 22ல் தோழர் டாங்கே
இயற்கை எய்தினார்.
டாக்டர் ஜி அதிகாரி – அறிவியலாளர் மற்றும் கம்யூனிஸ்ட்
கங்காதர் மொரேஷ்வர் அதிகாரி
(முனைவர்) மும்பைக்கு அருகே பன்வேலில் 1898 டிசம்பர் 8ல் பிறந்தார். பம்பாய் வில்சன்
கல்லூரியில் சேர்ந்தார். பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISc) ஆய்வறிஞராகச்
சேர்ந்து, உடன் ஜெர்மன் மொழியையும் கற்றார். ஜெர்மனி ஹம்போல்டுட் பல்கலைக் கழகத்தில்
இயற்பிய வேதியல் (பிஸிகல் கெமிஸ்ட்ரி) துறையில் தனது முனைவர் பட்ட ஆய்வை (டாக்டரேட்)
மேற்கொண்டு பட்டம் பெற்றார். விஞ்ஞானி ஐன்ஸ்டீனைச் சந்தித்தார், அவரது விரிவுரை சொற்பொழிவுகளில்
கலந்து கொண்டார், அவருடைய நிறுவனத்தில் பணியாற்றினார்.
ஜெர்மனியில் வீரேந்திரநாத்
சடடோபாத்யாயா மற்றும் பிற புரட்சியாளர்களையும் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி கம்யூனிஸ்ட்களையும்
சந்தித்தார்.1928ல் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். ஜெர்மன் கம்யூனிஸ்ட்
கட்சி பொதுச் செயலாளர் (CPG GS) எர்ன்ஸ்ட் தால்மென் கூட்டங்களில் கலந்து கொண்டார்.
1928ல் இந்தியா திரும்பி,
பம்பாயில் கிர்ணி காம்கர் யூனியன் மற்றும் தொழிலாளர் விவசாயிகள் கட்சியிலும் (WPP) டாங்கே மற்றும்
பிறருடன் செயல்பட்டார். மீரட் சதி வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை விடுதலை செய்ய
அவரை அறிந்த ஐன்ஸ்டீன் வேண்டுகோள் விடுத்தார். சிபிஐ-யில் அனுமதிக்கப்பட்டார்.
தலைமறைவு சிபிஐ மத்திய குழு
உறுப்பினராகவும் 1933ல் சிபிஐ பொதுச் செயலாளராகவும், பொலிட் பீரோ உறுப்பினராகவும் இருந்தார்.
சிறையிலிருந்து தப்பினார். சுபாஷ் சந்திர போஸ் தப்பிச் செல்வதற்கான திட்டத்தில் உதவினார்.
பிடிஆர் பாதைக்குப் பொறுப்பாளராக அவர் நிறுத்தப்பட்டார்.
1958 அமிதசரஸ் கட்சி காங்கிரஸில் கட்சி அமைப்பு விதிகள் மீது அறிக்கை தந்தார். தேசியக் கவுன்சில் மற்றும் மத்திய செயற்குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964 பிளவுக்குப் பிறகு கட்சி செயலகத்தில் இடம் பெற்றார். சிபிஐ வரலாற்று ஆவணங்களைத் தொகுக்கும் பொறுப்பினை ஏற்றார்; அதன் ஐந்து தொகுதிகளின் ஆசிரியராக இருந்தார். ஆய்வு மற்றும் கட்சிக் கல்வி பணிகளில் ஈடுபட்டார்.
1981 நவம்பர் 21ம் நாள் மாரடைப்பால் மரணமடைந்தார்.
சி ராஜேஸ்வர ராவ் : அமைப்பாளர் மற்றும் கட்சியைக் கட்டியெழுப்பியவர்
‘சிஆர்’ என்று புகழோடு அறியப்பட்ட
சந்திரா ராஜேஸ்வர் ராவ், ஆந்திரப் பிரதேசம், கிருஷ்ணா மாவட்டம், மங்களபுரம் கிராமத்தில்
1914 ஜூன் 6ல் பிறந்தார். பெனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் படித்தார், பின்பு விசாகப்பட்டினம்
மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். சோஷலிஸ்ட் படிப்பு வட்டத்தில் இணைந்தார், மார்க்சிய
நூல்களை விரிவாகப் படித்தார். பல்கலைக் கழகத்திலேயே 1934ல் சிபிஐ உறுப்பினரானார். சிபிஐ
கிருஷ்ணா மாவட்டக் குழு செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாணவர்கள், விவசாயிகள், ஆலைத்
தொழிலாளர்களை அமைப்பாகத் திரட்டினார். செல்லப்பள்ளி ராஜாவை எதிர்த்துப் போராடினார்.
விவசாயிகளின் நீண்ட பேரணியை 1937ல் மெட்ராஸ் நோக்கி நடத்தினார். 1938ல் ஏழு உறுப்பினர்
ஆந்திரா குழுவுக்கும் 1943ல் ஆந்திரா மாகாண
சிபிஐ செயலாளராகவும், 1956 ஆந்திரப் பிரதேச மாநிலக் குழுவின் முதலாவது சிபிஐ மாநிலச்
செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1946 –50 தெலுங்கானா ஆயுதம்
தாங்கிய போராட்டத்தின் தலைவர்களில் ஒருவர். ஆந்திர மகாசபாவில் இருந்தார். 1950 –51
(கொரில்லா போராட்ட) ‘ஆந்திரப் பாதை’யின் கதாநாயகர். 1950 –51ல் சிபிஐ பொதுச் செயலாளர்.
ரஷ்யாவில் ஸ்டாலினையும் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி (CPSU) தலைவர்களையும்
சந்திக்கச் சென்ற 4 உறுப்பினர்கள் தூதுக் குழுவில் ஒருவராகச் சென்றார். 1958 –64ல்
மத்திய செயற்குழு உறுப்பினர். 1964 முதல் 1990வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்
செயலாளர். சீன ஆக்கிரமிப்பு, பாக்கிஸ்தான் படையெடுப்பை எதிர்த்தார். எண்ணிறந்த விருதுகளைப்
பெற்றவர். “யாருக்கும் கடன்படவில்லை, தரவேண்டியது எதுவுமில்லை; புத்தகங்கள் கட்சிக்கு,
எனது ஆடைகள் தேவையுள்ளோருக்கு” என்ற புகழ்பெற்ற உயில் மற்றும் ஏற்பாட்டை (Will and Testament) எழுதி வைத்த பேராளுமையாளர்!
1994 ஏப்ரல் 9ல் மறைந்தார்.
இந்திரஜித் குப்தா : தலைச் சிறந்த பாராளுமன்றவாதி
கல்கத்தாவில் 1919 மார்ச்
18ல் பிறந்தார். இந்திய அரசியலில், குறிப்பாக நாடாளுமன்ற அரசியலில் ஆழமான தாக்கத்தை
ஏற்படுத்தியவர். 1937ல் டெல்லி, ஸ்டீபன்ஸ் கல்லூரில் பட்டம் பெற்றார். கேம்ப்பிரிட்ஜ்,
கிங்க்ஸ் கல்லூரியில் உயர் கல்வியைப் பயின்றார். அங்கு இந்திய மற்றும் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்களுடன்
தொடர்பு கொண்டு கம்யூனிஸ்டானார். மார்க்சியத்தை விரிவாகப் படித்தார். 1940 அக்டோபரில்
தாயகம் திரும்பினார்.
கட்சியின் பம்பாய் தலைமையகத்தில்,
பொதுச் செயலாளர் பிசி ஜோஷியின் கீழ் நேரடியாகப் பணியாற்றினார். வங்கத்தில் சணல் ஆலை
தொழிற்சங்கங்களிலும், கப்பல் கட்டும் தளம், துறைமுகம் மற்றும் இரயில்வே தொழிலாளர்களுடன்
பணியாற்றினார். அனைத்திந்திய போர்ட் அண்ட் டாக் ஒர்க்கர்ஸ் பெடரேஷன் அமைப்பின் தலைவர்
மற்றும் பொதுச் செயலாளர். 1948 –49ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
1880ல் ஏஐடியுசி பொதுச் செயலாளர்,
1998ல் உலகத் தொழிற்சங்கச் சம்மேளன (WFTU) தலைவர்.
எழுதிய புகழ்பெற்ற ஆய்வு
நூல் – “சணல் ஆலைத் தொழிலில் மூலதனமும் தொழிலாளர்களும்” (“Capital and Labour in Jute Industry”)
மக்களவைக்கு 11 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு,
1977 –80 காலகட்டத்தின் குறுகிய இடைவெளி தவிர மிக நீண்ட காலம், 37 ஆண்டுகள் சேவையாற்றியுள்ளார்.
10 முதல் 13வது லோக் சபாக்கள் வரை (மூத்த உறுப்பினர் என்ற வகையில்) அதன் இடைக்கால,
ப்ரோ டேர்ம் சபாநாயகர். 1992ல் சிறந்த நாடாளுமன்றவாதி என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
‘மன்றத்தின் தந்தை’ (ஃபாதர் ஆப் தி ஹவுஸ்). முன் மாதிரி கம்யூனிஸ்ட் நாடாளுமன்றவாதி
என்று பெருமை பெற்றவர்.
சிபிஐயைச் சேர்ந்த, அவ்வளவு
ஏன் உண்மையில் இடதுசாரிகளில் ஒன்றிய காபினட்டில் இணைந்த ஒரே அமைச்சர் என்ற வகையில்
சிறப்பைப் பெற்றவர் 1996 –98 அமைச்சரவையில் இவர் ஒன்றிய உள்துறை அமைச்சர், மற்றவர்
சதுரானன் மிஸ்ரா.
1964 டிசம்பரில் பம்பாயில்
சிபிஐ மத்திய செயற்குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971 முதல் சிபிஐ மத்திய செயலகத்தில்
இடம் பெற்று, 1988முதல் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆனார். 1990 ஏப்ரல் முதல்
சிபிஐ பொதுச் செயலாளர்.
2001 பிப்ரவரி 20ல் டெல்லியில்
காலமானார்.
BT ரணதிவே
1904 டிசம்பர் 19ல் மும்பை, தாதரில் பிறந்தார். புத்திசாலியான
மாணவர். 1928ல் சிறப்புத் தகுதியில் முதுகலை எம்ஏ பட்டம் பெற்றார். ஏஐடியுசி மற்றும்
கிர்ணி காம்கர் யூனியனில் சேர்ந்தார். 1939ல் (பல சங்கங்கள் இணைந்து உருவான ‘மாபெரும்
இந்தியத் தீபகற்ப’ எனும் GIP) கிரேட் இந்தியன் பெனிசுலார் இரயில்வே மென் யூனியன் செயலாளர்.
1940 –42ல் தியோலி தடுப்புக் காவல் முகாமில்
இருந்தார். 1943ல் சிபிஐ மத்தியக் குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946ல் ராயல்
இந்தியன் நேவி, RIN, கிளர்ச்சியில்
உதவினார். 1948 சிபிஐ 2வது கட்சி காங்கிரஸில், பிசி ஜோஷியை மாற்றி பொதுச் செயலாளராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார். இடதுசாரி சாகச ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடக் காரணமான அதனை
வகுத்தவர். அதன் காரணமாகவே 1950ல் நீக்கப்பட்டார். 1956ல் மத்திய குழுவில் இடம் பெற்றார்.
கட்சி பிளவுக்குப் பிறகு 1964ல் சிபிஐ(எம்) கட்சியில் இணைந்தார். 1970 மே மாதம் CITU தொழிற்சங்கத்தின்
நிறுவனத் தலைவர்.
1990 ஏப்ரல் 6ல் மரணமடைந்தார்.
ஏபி பரதன்
தற்போது பங்களாதேசத்தில்
உள்ள சில்கெட் என்ற ஊரில் 1925 செப்டம்பர் 25ல் பிறந்தார். பின்பு நாக்பூருக்கு மாறினார்.
1940ல் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் (ஏஐஎஸ்எப்) இணைந்து அதன் பெருந்தலைவர்களில்
ஒருவரானார். சிபிஐ-ல் அதே ஆண்டு சேர்ந்தார். மாணவர் முன்னணியில் முழுநேரப் பணியில்
ஈடுபட்டார். நாக்பூர் பல்கலைக் கழக மாணவர்கள் சங்கத்தின் தலைவர். பொருளாதாரப் பாடத்தில்
முதுகலைப் பட்டமும் சட்டத்தில் பட்டமும் பெற்றார்.
சிபிஐ, மத்திய பாரத் மாகாணக்
குழுவுக்கும், பின்னர் சிபிஐ மகாராஷ்டிரா மாநிலக் குழுவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1968ல் சிபிஐ தேசியக் குழு மற்றும் 1978ல் சிபிஐ மத்திய செயற்குழுவிலும் இடம் பெற்றார்.
பல்வேறு தொழில்களின் தொழிற்சங்க
இயக்கங்களில் பணியாற்றினார். 1957ல் மகாராஷ்டிரா மாநிலச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1994ல் ஏஐடியுசி பொதுச் செயலாளர். 1995 அக்டோபரில் சிபிஐ துணைப் பொதுச் செயலாளர் ஆகி,
1996 ஆகஸ்டில் சிபிஐ பொதுச் செயலாளர் ஆனார். கட்சி திட்டத்தின் வரைவறிக்கைக்கு முன்முயற்சி
எடுத்து, 2015 புதுச்சேரி கட்சி காங்கிரசில் கட்சி செயல் திட்டம் ஏற்கப்பட்டது.
நீண்ட கால உடல்நலமின்மைக்குப்
பிறகு 2016 ஜனவரி 2ல் இயற்கை எய்தினார்.
எஸ் சுதாகர் ரெட்டி : இளைஞர் மற்றும் சிபிஐ அமைப்பாளர்
சுரவரம் சுதாகர் ரெட்டி ஹைத்தராபாத்,
மெகபூஃப்நகர் கொண்டிரவாபள்ளியில் 1942 மார்ச் 25ல் பிறந்தார். கர்னூலில் உயர்நிலைப்
பள்ளி கல்வியை முடித்து, கர்னூல் உஸ்மானியா கல்லூரியில் பிஏ இளங்கலைப் பட்டமும் ஹைத்தராபாத்தில்
எல்எல்பி சட்டப் படிப்பையும் நிறைவு செய்தார். ஆந்திரப் பிரதேச கர்னூலில் மாணவர் இயக்கத்தில்
தீவிரமாக ஈடுபட்டார். 1966ல் ஏஐஎஸ்எஃப் பொதுச் செயலாளராகி, புது டெல்லிக்கு மாறிச்
சென்றார். 1970ல் ஏஐஎஸ்எஃப் தலைவரானார். 1971ல் சிபிஐ தேசியக் குழுவில் இடம் பெற்றார்.
ஆந்திராவில் மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தை நடத்தினார். 1998 மற்றும்
2004ல் நால்கொண்டா நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தொழிலாளர்
குறித்த நாடாளுமன்றக் குழுத் தலைவர்.
2007ல் சிபிஐ துணைப் பொதுச்
செயலாளர் ஆகி, மார்ச் 2012ல் சிபிஐ பொதுச் செயலாளர் ஆனார். உடல்நலப் பிரச்சனை காரணமாக
2019ல் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகினார்.
டி ராஜா : இயக்க அடிமட்டத்திலிருந்து பொதுச் செயலாராக
துரைசாமி ராஜா 1949 ஜூன் 3ல் தமிழ்நாடு, வேலூர் மாவட்ட சித்தாத்தூரில்
பிறந்தார். பெற்றோர் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள். குடியாத்தத்தில் பிஎஸ்சி பட்டமும்
வேலூரில் பிஎட் பட்டமும் பெற்றார். பிள்ளைப் பருவம் கடுமையான ஏழ்மையில் கழிந்தது. மாணவர்
இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். கல்லூரி நாட்களில் ஏஐஎஸ்எஃப் அமைப்பில் சேர்ந்தார்.
1975 –80ல் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) மாநிலச் செயலாளர் ஆனார். அதே காலகட்டத்தில் AIYF பொதுச்
செயலாளராகி டெல்லிக்கு மாறினார். 1994ல் சிபிஐ தேசியச் செயலாளராக (தேசிய செயலக உறுப்பினர்)
ஆனார். 2019 ஜூலை 21ல் நடைபெற்ற தேசியக் குழுவால் சிபிஐ பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2007 ஜூலையில் முதலில் மாநிலங்களவை
உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 2013ல்
மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். (2022 அக்டோபர்
விஜயவாடாவில் நடைபெற்ற சிபிஐ 24வது கட்சிக் காங்கிரஸ் மாநாட்டில் மீண்டும் பொதுச் செயலாளராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.)
(இத்தகைய ஆளுமையாளர்கள் தலைவர்களாகவும், பொதுச் செயலாளர்களாகவும் பொறுப்பு வகித்துச் செம்மாந்து இயங்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது நூற்றாண்டு விழாவைத் தனது வரலாற்றுப் பெருமிதத்துடன் கொண்டாடி வருகிறது.
வாழ்க சிபிஐ! வாழ்க செங்கொடி!)
--நன்றி : நியூஏஜ் (2024 டிச.29 –2025, ஜன.4)
--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்
No comments:
Post a Comment