கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு –120
சி் ராஜேஸ்வர ராவ் –கம்யூனிஸ்ட் இயக்கம் கட்டியவர், அமைப்பாளர்
--அனில் ரஜீம்வாலே
‘சிஆர்’ என்று பிரபலமாக அறியப்படும் சந்திர ராஜேஸ்வர ராவ் 1914 ஜூன் 6ல் ஆந்திரப் ஆந்திரப் பிரதேச கிருஷ்ணா மாவட்ட மங்களபுரம் கிராமத்தில் செழிப்பான விவசாயக்
குடும்பத்தில் பிறந்தார். மச்சிலிப்பட்டின இந்து உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியை
முடித்த பின், வாரணாசி பெனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் அறிவியல் பட்டப் படிப்பில்
சேர்ந்தார். படிப்பை நிறைவு செய்யாமல் பல்கலைக் கழகத்தில் இருந்து வெளியேறி விசாகப்பட்டினம்
மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். மக்களுக்கு மருத்துவம் மூலம் சேவை செய்ய விரும்பிய
அவர், ஆனால் அதைவிட பெருந்திரள் மக்கள் இயக்கம் மூலம் இன்னும் சிறப்பாகச் சேவை செய்ய
முடியும் என உணர்ந்தார்.
படிப்பு வட்டங்கள்
பெனாரஸ் பல்கலைக் கழகத்தில் அவருக்கு மலர்ந்து வந்த பல கம்யூனிஸ்ட்களுடன்
அறிமுகம் கிடைத்தது; 1933ல் அவர் சந்தித்த (1967 வாரணாசி தொகுதி சிபிஐ எம்பி) ரஸ்டம்
சாட்டின், வித்தல் சௌத்ரி உள்ளிட்ட பலர் அதில் அடங்குவர். பரோச்சா விடுதியில் வாழ்ந்த
அவர்களில், விரைவில் சிஆரின் நெருங்கிய தோழரானார் ரஸ்டம். சிஆர் உள்ளிட்ட மாணவர்கள்,
தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாகக் காந்திக் குல்லாய் அணிவது வழக்கம். ‘சோஷலிசப்
படிப்பு வட்டம்’ என்றழைக்கப்பட்ட சிஆர் இருந்த குழு, மார்க்ஸின் ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’யுடன்
தங்கள் பாடத் திட்டப் படிப்பைத் தொடங்கியது. அறிக்கையின் ஒவ்வொரு வரியும் படித்து விவாதிக்கப்பட்டது.
விடுதியின் பொது அறையில் நூற்றுக்கும் அதிகமானோர் படிப்பு வட்டத்தில் கலந்து கொண்டனர்.
தினமும் 2மணி நேரம் என 20 நாட்களில் கம்யூனிஸ்ட் அறிக்கையை நிறைவு செய்தனர்.
கம்யூனிஸ்ட் அறிக்கை மீது (ரஷ்யப் புரட்சியாளர்) டேவிட் ரியஸோனோவ் எழுதிய குறிப்புகள் மற்றும் லெனினின் ‘என்ன செய்ய வேண்டும்’ நூல்களையும் படித்தனர்.
வாரணாசியிலேயே 1934ல் அவர் கட்சி உறுப்பினரானார்.
மீண்டும் ஆந்திரப் பிரதேசம் திரும்பல்
ஆந்திரா பல்கலைக் கழகத்தில் இருந்தபோது, தொழிலாளர்களைத் திரட்டவும்,
தொழிற்சங்கங்களை அமைப்பதிலும் அவர் தீவிர ஆர்வம் கொண்டார். விவசாயத் தொழிலாளர்கள்,
இளைஞர்கள் மத்தியில் பணியாற்ற அவர், தனது சொந்த கிருஷ்ணா மாவட்டத்திற்குத் திரும்பச்
சென்று குடியேறினார். விரைவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கிருஷ்ணா மாவட்டக் குழுவின்
செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கப்பல் கட்டும் தளத் தொழிலாளர்களைத் திரட்டுவதிலும்
அவர் ஈடுபட்டார்.
வரலாற்றுப் புகழ்மிக்க விவசாயிகள் பேரணி, 1937
மிகச் சிறந்த குறிப்பிடத்தக்கப் போராட்டங்களில், 1937–38ல்
நடந்த மாபெரும் விவசாயிகள் பேரணிகளில் சிஆர் தீவிரப் பங்காற்றினார். 1937 ஜூலை 3ல்
தொடங்கிய முக்கிய பேரணி ஒன்று, மாகாணத் தலைநகரான மெட்ராஸில் 1938 மார்ச் 27ல் முடிந்தது.
அப்பேரணியில் அவர்கள் 9 மாவட்டங்களின் வழியாக 1500 மைல்கள் நடந்தும், 525 மைல் பேருந்துகளிலும்
பயணித்தும், 500க்கு அதிகமான கிராமங்களுக்குச் சென்று, 60க்கும் மேற்பட்ட மாநாடுகளில்
கலந்து கொண்டு மக்களிடமிருந்து 1100 மனுக்களைத் திரட்டினர்.
பேரணியில் வந்தவர்கள் தங்களின் கோரிக்கைகளைப் பிரதமரிடமும் (ப்ரீமியர், அன்றைய
மாகாண முதலமைச்சர்) வருவாய்த் துறை அமைச்சரிடமும் சமர்ப்பித்தனர்.
1940களின் தொடக்கத்தில் செல்லப்பள்ளி
ராஜாவை எதிர்த்த போராட்டத்தில் சிஆர் கைது செய்யப்பட்டார். அவரது தளர்வில்லாத முயற்சிகளின்
காரணமாக, கிருஷ்ணா மாவட்டக் கட்சிக் கிளை ஆந்திராவில் சக்திவாய்ந்த கம்யூனிஸ்ட் தளங்களில்
ஒன்றானது. பரம்பரைச் சொத்துக்- களின் தனது பங்கு முழுவையும் விற்று சிஆர் அதனைக் கட்சிக்கு
நன்கொடையாக வழங்கினார்.
கட்சித் தலைவராக
சிபிஐ ஆந்திர மாகாண 2வது மாநாடு 1938ல் விஜயவாடாவில்
நடைபெற்றது. சிஆர் அதன் ஏழு உறுப்பினர் குழுவுக்குத் தேர்வானார். 1943ல் அவர் ஆந்திரா
மாகாண சிபிஐ செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; மேலும் 1948 புத்தவாரம் 4வது மாநாட்டிலும்,
1956ல் ராவந்திரபாடு ஆறாவது மாநாட்டிலும் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சி ஆந்திரப்பிரதேச மாநிலக் குழுவின் முதல் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பந்தர் கால்வாய் பகுதியில் இரண்டு மைல் தொலைவு படிந்த வண்டல் மண்ணை அகற்றக்
கோரி நடந்த பெருந்திரள் இயக்கத்தில் சிஆர் பங்கேற்றார், 1943ல், அதற்கு முன் கண்டிராத
மாபெரும் பெருந்திரள் விவசாயிகள் பேரணியை விஜயவாடாவில்
நடத்தினார்.
தெலுங்கானா பிராந்தியத்தில் கட்சி பரவல்
தெலுங்கானா, ஹைதராபாத் சமஸ்தான அரசின் பகுதியாக, ஒடுக்குமுறை நிஜாம் ஆட்சியின்
கீழ் அப்போது இருந்தது. கொடூரமான வகுப்புவாத நிலப்பிரபுத்துவ அடக்கு முறை
ஆட்சி அது. மக்களைத் திரட்டுவது எளிய பணி அலல. காங்கிரஸ் சோஷலிசக் கட்சி (சிஎஸ்பி)
மற்றும் காங்கிரஸ் கட்சி அமைத்த விசாரணைக் குழுவின் உறுப்பினராக அங்குச் சென்ற சிஆர்,
முனகாலா பகுதியில் விரிவாகப் பயணம் செய்தார்.1939ல் சிஆர் கிருஷ்ணா மாவட்ட துனிகிபாடு-வில்
அரசியல் பள்ளியைத் திரட்டி அமைத்தார்; அதில் ரவி நாராயண ரெட்டி, பந்தம் யெல்லா ரெட்டி
போன்ற பல தலைவர்கள் கலந்து கொண்டனர். போலீஸ்
தாக்குதலைச் சந்தேகித்துப் பள்ளியை ரவி நாராயண ரெட்டியின் சொந்தக் கிராமமான பொல்லேபள்ளிக்கு
மாற்றினர்.
1939 முதல் 1942வரை தலைமறைவாக இருந்தபோது, சிஆர் மாநிலத்தின்
பல பகுதிகளில் கட்சி அமைப்புகளை அமைத்தார். ஒரு சிறு காலத்திற்குச் சிஆர்கூட மெட்ராஸ்
சட்டமன்றக் குழு உறுப்பினராக இருந்தார். ஜமீன்தார்களின் சட்டவிரோதச் செயல்களை எதிர்த்ததற்காக
அவர் 1942ல் ஆறுமாத காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். 1946ல் அவரது தலைமையின் கீழ்
நிலமற்ற, மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் 17,000 ஏக்கர் பண்ணை வீடு நிலங்களைக் கைப்பற்றினர்.
அப்போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் அவரே நேரடியாக அவர்களுக்குத் தலைமை ஏற்றுச்சென்று,
பெரும் நிலப்பிரபுகளின் 3000 ஏக்கர் கரும்பு பயிரிடும் நிலங்களைக் கைப்பற்றினார்.
1946 –50 தெலுங்கானா ஆயுதப் போராட்டம்
தெலுங்கானா ஆயுதப் போராட்டம் இரு கட்டங்களாக நடந்தது : 1946-48, 1948- 50
சிஆர், ரவி நாராயண ரெட்டி மற்றம் பிற தலைவர்கள் முயற்சியால்
கம்யூனிஸ்ட் கட்சியும், ஆந்திர மகாசபாவும்,
சிபிஐ, காங்கிரஸ் மற்றும் பிறரை உள்ளடக்கிய பரவலான பெருந்திரள் அமைப்பும் நிஜாமின்
ஹைதராபாத் சமஸ்தானத் தெலுங்கானா பகுதியிலும் பிற இடங்களிலும் ஆழமாக வேர்கொண்டன. பி சி ஜோஷி சிபிஐ பொதுச் செயலாளர்.
அவரது அனுமதியுடன் 1946ல் தெலுங்கானாவிலும் பிற சமஸ்தானங்களிலும் நிலப் பிரபுக்களுக்கு
எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தைத் தொடங்க சிபிஐ முடிவு செய்தது. நிலப் பிரபுக்களிடமிருந்து
பெரும் பரப்பு நிலங்களைக் கைப்பற்றி அவற்றை நிலமற்ற விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுப்பது
போராட்டத்தின் முக்கிய நோக்கம்.
சிபிஐயும் ஆந்திர மகாசபாவும் தெலுங்கானாவில் நூற்றுக் கணக்கில் கிராமங்களைக் கைப்பற்றி, விடுதலை செய்யப்பட்ட பகுதிகளின் நிலங்களைப் பிரித்துக் கொடுத்தன. ஆயுதம் தாங்கிய ‘தலாம்கள்’ (கொரில்லா படை) நிஜாமின் குண்டர்களான ரஜாக்கர்களை எதிர்த்துப் போரிட்டன. ஆயுதப் போராட்டத்தின் புகழ்பெற்ற தலைவர்கள் மத்தியில் சிஆர் இருந்தார்.
இதனிடையே 1947 ஆகஸட் 15ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது; சிபிஐ பெருமகிழ்வுடன் வரவேற்று பிசி ஜோஷி தலைமையில் நாடு முழுதும் விழா எடுத்துக் கொண்டாடியது. ஹைதராபாத்திலும்கூட அரசு கட்டடங்கள் மீது கம்யூனிஸ்ட்கள், போலீஸ் கண்களில் மண்ணைத் தூவி, மூவர்ணக் கொடிகளை ஏற்றினர். சிஆர் கட்சியின் தலைவராக இருந்து இந்த இயக்கங்களைத் தீவிரமாக ஏற்பாடு செய்தார்.
ஹைதராபாத் --இந்திய ஒன்றிய இணைப்பு முன்தயாரிப்பாக, இந்திய அரசு அப்போதைய நிலையை அப்படியே பாதுகாக்கும் ஓராண்டு கால ஒப்பந்தத்தை (ஸ்டாண்ட் ஸ்டில் அக்ரிமெண்ட்) நிஜாமுடன் செய்தது. ஹைதராபாத் மற்றும் பிற சமஸ்தானங்களை இந்தியாவுன் இணைப்பதைச் சிபிஐ வலியுறுத்தி வந்தது. பொதுவாக அந்த ஒப்பந்தம் நிஜாமால் மீறப்பட்டது. மேலும் இந்துகளுக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் எதிராகப் பரவலான அளவில் வகுப்புவாத வன்முறையை நிஜாம் பயன்படுத்தினார்.
பிடிஆர் பாதையும் தெலுங்கானா போராட்டத்தின் இரண்டாவது கட்டமும்
இதன் மத்தியில், பிப்ரவரி
--மார்ச் 1948ல் நடைபெற்ற இரண்டாவது கட்சிக் காங்கிரஸில், சிபிஐ தலைமை மாறியது. பிசி
ஜோஷிக்குப் பதில் பிடி ரணதிவே (பிடிஆர்) பொதுச் செயலாளரானார்; அவர், நேரு ஆட்சியை ஆயுதம்
தாங்கிய கிளர்ச்சி மூலம் ‘தூக்கி எறியும்’ சோஷலிசப் புரட்சிக்கு அறைகூவல் விடுத்தார்.
அந்த ஆயுதக் கிளர்ச்சிப் பாதை முழுமையாகத் தோல்வி அடைந்தது; அது, இந்தியக் கம்யூனிஸ்ட்
கட்சிக்கும் பெருந்திரள் அமைப்புகளுக்கும் கணக்கிட முடியாத சேதங்களை ஏற்படுத்தியது.
இதன் மத்யில் செப்டம்பர் 1948ல் இதிய இராணுவமும் போலீசும், ‘போலீஸ் ஆக் ஷன்’ என்று
அறியப்படும் நடவடிக்கையாக, ஹைதராபாத் திற்குள் நுழைந்தது. நிஜாமும் அவரது படைகளும்
இந்திய இராணுவத்திடம் சரண் அடைந்தது, புதிய அரசு அங்கே வந்தது. இவ்வாறு ஆயுதப் போராட்டத்தின்
ஒரு பகுதி கோரிக்கை நிறைவேறியதும், பெரிய பிரிவு விவசாயிகள் ஆயுதப் போராட்டத்திலிருந்து
விலகியது. சரியாக இந்தக் கட்டத்தில் ஆயுதப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்க
வேண்டும்.
ஆனால் பெருந்திரள் வேளாண்
மக்களிடமிருந்து தனிமைப்பட்டபோதிலும், ஆயுதப் போராட்டம் தொடரும் என்பதே பிடிஆர் பாதையின்
தர்க்க வாதம். பிடிஆர் தலைமை தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தைப் பரவலாக விரிந்த ‘இந்தியப்
புரட்சி’யின் ஒரு பகுதியாகப் பார்த்தது; அப்போராட்டத்தை நிலப்பிரபுக்களுக்கு எதிராக
நடத்தப்பட்ட ஒன்றாகப் பார்க்கத் தவறியது – இதன் விளைவு, முழுமையாகத் தனிமைப்படுத்தப்பட
நேரிட்டது. இப்போதைய ஆயுதக் கிளர்ச்சி இந்திய இராணுவத்திற்கு எதிரான ஒன்றாக ஆனதால்,
தோல்வி நிச்சயமானது. கம்யூனிஸ்ட் அணிகள் கிராமங்களிலிருந்து காடுகளை நோக்கிப் பின்வாங்கின.
அங்கே அவை வீரம் செறிந்த, ஆனால் தோல்வி அடையும் போராட்டங்களை நடத்தின. அந்த வீரம்,
பிடிஆர் தலைமையின் கீழ் நடத்தப்பட்ட வெறும் சாகசம் காரணமாக, தனிமைப்படுத்தப்- பட்டு தோற்கடிக்கப்பட்டது.
பிடிஆருக்குப் பதில் சிஆர் : ‘ஆந்திரா பாதை’
இதைத் தொடர்ந்து பிடிஆர் விமர்சிக்கப்பட்டு மே 1950ல் மாற்றப்பட்டதுமின்றி
கட்சியை அழிவில் தள்ளியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டார்: கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை
இரண்டே ஆண்டகளில் 90ஆயிரத்திலிருந்து வெறும் ஒன்பதாயிரமாக வீழ்ந்தது. கல்கத்தாவில்
தலைமறைவாக நடந்த மத்தியக் குழு கூட்டத்தில் பிடிஆர் மாற்றப்பட்டு சிஆர் பொதுச் செயலாளராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார். சிஆரும் அவரது சகாக்ககளும், கட்சி அழிவுக்காகப் பிடிஆரைக்
கூர்மையாக விமர்சித்துத் தாக்கினர். மிக துரதிருஷ்டவசமாக, பிடிஆரின் ‘ரஷ்யப் பாதை’
தற்போது சிஆரின் கீழ் ‘சீனப் பாதை’ என்றும், ஆந்திரா பாதை என்றும் அறியப்படும் திட்டமாக
மாற்றப்பட்டது. ஆயுதக் கிளர்ச்சி, ஆயுதம் தாங்கிய கொரில்லா போராட்டத்தால் மாற்றப்பட்டது.
புதிய தலைமை, புதிய மத்தியக் குழு (நியூ CC) ஆனது. இந்தப் பாதையை வகுத்தவர்களில் சிஆர் முக்கியமானவராக
இருந்தார்; தனிமைப்படுத்தப்பட்ட நிலைகளில் ஆயுதப் போராட்டம் தொடர்ந்தது – அது ஒரு முட்டாள்தனமான
தவறு.
டாங்கே, காட்டே மற்றும் அஜாய் கோஷ் ஆந்திரா பாதையைக் கூர்மையாக விமர்சித்து, செப்டம்பர் 1950ல் புகழ்பெற்ற தங்கள் ‘3-Pகள் கடித’த்தை வெளியிட்டனர். (தலைமறைவு வாழ்க்கையின்போது அவர்கள், ஆங்கில P என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை தங்கள் புனைப் பெயர்களாக வைத்திருந்தனர்; எனவே அவர்களது அந்த அறிக்கை ‘3-Pகள் கடிதம்’ எனப்பட்டது.) தனியாக, பிசி ஜோஷி, ‘வெளிநாட்டுத் தோழர்களுக்குக் கடிதம்’ என்ற அவரது அறிக்கையில் ஆந்திரா பாதையையும் பிடிஆர் பாதையையும் கூர்மையாகத் தாக்கினார். உட்கட்சிப் போராட்டம் கூர்மையடைந்தது, கட்சி முட்டுக்கட்டை நிலையில் வந்து நின்றது. சிபிஐ, சகோதரக் கட்சிகளிடமிருந்து, குறிப்பாகச் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி(CPSU)யிடமிருந்து, உதவி கோர முடிவு செய்தது.
ஸ்டாலினுடன் சந்திப்பு
1950ன் இறுதியில், எஸ்ஏ டாங்கே, அஜாய்கோஷ் மற்றும் எம் பசவபுன்னையா அடங்கிய 4 உறுப்பினர் தூதுக் குழுவில் சிஆர் இரகசியமாக மாஸ்கோவுக்குப் பயணம் செய்தார். அதில் பங்கேற்றவர்களால் இப்பயணம் குறித்த விவரங்கள் இன்று வரை இரகசியமாக வைக்கப்- பட்டது, யாருக்கும் எந்த விபரமும் தெரியாது. சிஆரும் பசவபுன்னையாவும் ஆயுதப் போராட்டம் தொடர்வதை ஆதரித்தனர்; டாங்கேயும் அஜாய் கோஷும் அதை எதிர்த்தனர். தூதுக் குழு சுஸ்லோவ், மொலோடோவ், ககனோவிச் முதலான உயர் மட்டத் தலைவர்களையும்
ஸ்டாலினையும் கூட சந்தித்தது. ஸ்டாலின்-- அவரே கணிசமான அளவு குழுவாதப் போக்கு
(செக்டேரியன்) உடையவரே எனினும்-- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுதப் போராட்டப்
பாதையை மிகக் கடுமையான மொழியில் கண்டித்தார். எப்படி நீங்கள், மக்கள் ஆதரவை இழந்தபோதினும்,
வலிமைமிகக இந்திய இராணுவத்தை எதிர்க்க நினைத்தீர்கள்? என்று அவர்களிடம் கேட்டார். முதலில்
மக்களிடம் திரும்பச் செல்லுங்கள் என்று அவர்களிடம் கூறியவர், நேருவின் அயல் உறவுக்
கொள்ளையைப் புகழவும் செய்தார். சிபிஐ தனது பாதையை மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று.
கட்சித் தலைமையில் மாற்றம்
ஸ்டாலினுடன் நடந்த விவாதங்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தை அதன் வேர் வரை பிடித்து ஆட்டியது. ஏற்கனவே (பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்டான) ரஜனி பால்மே தத், சீனக் கட்சி மற்றும் பிறர் சிபிஐ-யுடன் தங்கள் அதிருப்தியைத் தெளிவாக்கினர். தோழர்கள் அதற்கு வெகு முன்னதாகவே ஆயுதப் போராட்டத்தின் பயனின்மையை உணர்ந்தனர். 1951 அக்டோபரில் நடந்த கட்சியின் தலைமறைவு மாநாட்டில் சிஆர் மாற்றப்பட்டு அஜாய் கோஷ் பொதுச்செயலாளராக ஆனார். அதே மாதத்தில் ஆயுதப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்- பட்டது, சிபிஐ பொதுத் தேர்தல்களில் பங்கேற்க முடிவு செய்தது. இதற்கான பெருமை சிஆரையே சாரும், மிக விரைவில் தனது ஆந்திரா பாதையின் தவறை அவர் உணர்ந்தார். விலக்கிக் கொள்வது அவ்வளவு சுலபமான பணியாக இல்லை, தோழர்கள் ஆயுதங்களைக் கைவிடத் தயங்கினர். சிஆர், ரவி நாராயணன் ரெட்டி மற்றும் பிறர் காடுகளில் முகாம் முகாமாக- வும், தலாம் (கொரில்லா படை) தலாமாகவும் சென்று ஆயுதங்களைக் கைவிட வேண்டிய தேவையை விளக்கினர்.
புதிய
சூழ்நிலை
பெருந்திரள் மக்கள் போராட்டங்கள் மற்றும்
நாடாளுமன்ற வடிவப் போராட்டங்கள் என்ற புதிய சூழ்நிலைக்கு அனுசரித்துச் செல்வதில் சிஆர்
விரைவில் பழக்கிக் கொண்டார். 1956ல் மாநிலச் செயலாளர் ஆகி 1961வரை அப்பொறுப்பில் நீடித்தார்.
அமிர்தசரஸ் காங்கிரசுக்கு முன்பு 1948 முதல் 1958 வரை, பொலிட் பீரோ உறுப்பினர்.
1958 முதல் 1964 வரை மத்திய செயற்குழு உறுப்பினர்.1964 கட்சி பிளவுக்குப் பின் அவர்
சிபிஐ பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கட்சி
பிளவு, பொதுச் செயலாளராகச் சிஆர்
கட்சி பிளவால் ஏற்பட்ட நெருக்கடியின்போது
சிஆர் முக்கிய பங்காற்றினார். ஒரு காலத்தில் ஆந்திரா (சீனப்) பாதையின் மூலவராக அதை
வகுத்தளித்த ஒருவர், மாவோயிசச் சாகசம் மற்றும் பிளவுவாத இசத்திற்கு எதிராகத் தீவிரக்
கருத்தியல் தத்துவ, அரசியல் மற்றும அமைப்புநிலை பாதையை அவரே தலைமையேற்று வழிநடத்தினார்
எனில், சிஆருக்கே அந்தப் பெருமையெலாம் சேரும்.
1964ல் இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சி 7வது கட்சிக் காங்கிரஸ் (பம்பாய்) மாநாட்டில் சி ராஜேஸ்வர ராவ் கட்சியின்
பொதுச் செயலாளராகத தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மிகச் சிறப்பாகக் கடசியைத் தலமையேற்று நடத்திச் சென்று, ஒரு போராடும் கட்சியாகப் புகழ் வெளிச்சத்தில்
வைத்திருந்தார். தனது உடல் நலமின்மை காரணமாகப் பதவியை ராஜினாமா செய்யும் வரை அவர் அப்பொறுப்பில்
1990வரை செயல்பட்டார். அவர் ஒரு திறமையான பொதுச் செயலாளர், அவரைச் சுற்றியே கட்சி நடவடிக்கைகள்
சுழன்றன.
அவர் பெருந்திரள் மக்கள் தலைவரும் பேராளுமை உடைய அமைப்பாளருமாவார். அவர்தான், ஏஐகேஎஸ் (அகில இந்தியக் கிசான் சபா)விலிருந்து தனியான ஓர் அமைப்பாக பாரதிய கெந்த் மஸ்தூர் யூனியன் (BKMU) கட்டியெழுப்ப உதவினார். 1960கள், 1970களில் நிலங்களைப் பகிர்ந்தளிக்க பெரும் நிலச் சீர்திருத்தப் போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தினார். தேவை ஏற்பட்டால் அவர் எங்கும் எந்த நேரத்திலும் செல்லக் கூடியவர், தரையிலும் பெஞ்ச்களிலும் படுத்துறங்குபவர், பயணங்களில் வசதிகளற்ற சாதாரணமாகப் பயணிப்பவர். இரயிலுக்கோ பேருந்து நிறுத்தங்களுக்கோ தனது வெறும் படுக்கை விரிப்புக்களைச் சுருட்டி எடுத்துக் கொண்டு நடப்பார். மக்கள் கூட்டத்துடன் எளிதில் ஒன்று கலந்துவிடுபவர். கட்சி அணிகளிடம் எளிமையாகப் பேசி அவர்களது பிரச்சனைகளை அக்கறையுடன் காது கொடுத்துக் கேட்பார். சர்வதேச மாநாடுகளில் இருந்தாலும் சரி, நிலமற்றவர்கள் மத்தியில் இருந்தாலும் சரி, சொந்த வீட்டில் இருப்பதுபோலச் சகஜமாக இருப்பார். கோட்பாட்டு அறிவை வெளிச்சமிட்டு அவர் ஒருபோதும் நடிக்க மாட்டார்; இருந்தாலும் மக்கள் பிரச்சனைகள் அல்லது தேசிய ஜனநாயகம் அல்லது உலகக் கம்யூனிஸ்ட் இயக்கப் பாதை குறித்த விவாதங்களில் அவர் முழுமையாக இயல்பாய்க் கலந்து கொள்வார்.
அவர் மிகவும் எளிமையானர்
மற்றும் தனது பழக்க வழக்கங்களில் சிக்கனமானவர், தன்னலமற்றவர்.
உதியான தேசியவாதி
சி ராஜேஸ்வர ராவ் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றவர். 1964 சீன
ஆக்கிரமிப்பை உறுதியாக எதிர்த்தவர். 1965 பாக்கிஸ்தானிய ஆக்கிரமிப்பின்போது அவர் எல்லைப்
பகுதிகளுக்கு விஜயம் செய்தார், தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்காக உறுதியாக நின்று
நமது ஜவான்கள் மற்றும் மக்களைப் போரிட ஊக்கப்படுத்தினார். பங்களாதேச விடுதலைப் போருடன்
ஒருமைப்பாட்டு உணர்வை மக்களிடம்
புகுத்தினார்.
எழுத்துப் பணிகள்
சிஆர் ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் விரிவாகப் பல நூல்களை எழுதினார்.
அவரது படைப்புக்களில் சில வருமாறு: இந்திய வேளாண் பிரிவு பிரச்சனைகள்; ஆர்எஸ்எஸ் மற்றும் ஜனசங்(கம்)-- ஒரு தொல்லை; வரலாற்றுப் புகழ்பெற்ற
தெலுங்கானா போராட்டம்; லெனின் போதனைகளும் நமது தந்திரோபாயங்களும்; சிபிஐ(எம்) உடன்
உரையாடல்; கம்யூனிச ஒற்றுமைக்காகச் சிபிஐ-யின் போராட்டம்; எஸ்வி காட்டே மற்றும் பவானி
சென் குறித்த நினைவலைகள்; திப்பு சூல்தான் –உண்மைகளும் கட்டுக்கதைகளும், முதலிய நூல்கள்.
விருதுகள்
சிஆருக்கு 1974ல் ஆர்டர் ஆப் லெனின் (USSR) விருது; ஜார்ஜ் டிமிட்ரோ ஆர்டர் (பல்கேரியா) விருது; மக்களுக்கு இடையே நட்புறவு ஆர்டர் (செக்கோலாஸ்வாக்கியா) விருது முதலான பிற விருதுகளும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
நீண்ட காலச் சுவாசப்
பிரச்சனை, சிறுநீரக மற்றும் பிற பிரச்சனைகள் காரணமாகச் சி ராஜேஸ்வர ராவ் ஹைதராபாத்தில்
1994 ஏப்ரல் 9ம் நாள் காலமானார். அவருடைய மறைவுக்குக் கட்சி வித்தியாசங்கள் கடந்து
பலரும் இரங்கல் தெரிவித்தனர். அரசு மரியாதையுடன் நடந்த அவரது இறுதிச் சடங்குகளின்போது
துப்பாக்கி குண்டுகள் வான் நோக்கி ஒரே நேரத்தில் முழங்கப்பட்டன.
சிஆரின் உயிலும் மரண சாசனமும்
தனது இறுதிநாட்கள்
நெருங்குவதை உணர்ந்த சிஆர், 1993 நவம்பர் 6ல் ஐந்து அம்சங்கள் கொண்ட உயில் மற்றும்
ஏற்பாடுகள் குறித்து எழுதினார்: தனக்கு வருத்தம் ஏதும் இல்லை, நிறைவான பயனுள்ள முழு வாழ்வை வாழ்ந்தேன்; தனக்கு உதவிய அனைத்துத்
தோழர்களுக்கும் நன்றி; உடலைத் தூக்கித் திரிய வேண்டாம், ஹைதராபாத்திலேயே எரியூட்டுங்கள்;
தனக்கு எந்தச் சொத்தும் இல்லை, எனவே எதையும் கொடுக்கவும், எடுத்துச் செல்லவும் வேண்டாம்;
அனைவருக்கும் நன்றி.
அந்த உயிலும் ஏற்பாடும் அவருடைய ஆளுமையின் சாரத்தை வெளிப்படுத்துகிறது.
அவர் ஆளுமைமிக்க மாபெரும் மனிதர் என்று சொல்வது மிகையன்று-- அந்த வார்த்தைகளின்படியும்,
நீதி நெறிபடியும் அவர் மாபெரும் ஆளுமைமிக்கப் பேராளர்.
அதன் இறுதியில் அவர் எழுதினார், “நூல்கள் கட்சிக்கு, உடைகள் தேவை உள்ளவர்களுக்கு”
– தனக்கென வாழாப் பெருந்தகையாளர்! வாழ்க சிஆர் புகழ்! வாழ்க கம்யூனிஸ்ட்
இயக்கம்!
--நன்றி : நியூஏஜ் (2024, டிச.8 –14)
--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்
கூடுதல் இணைப்பு
“அவரைப் பார்த்ததும் முதலில் ஒருவக்கு ஏற்படும் மனப்பதிவு
சிஆரின் ‘பேருருவம்’. அவர் பருத்த, உயரமான, கட்டுறுதி உடற்கட்டும் விரிந்த தோள்களும்
புடைத்த நெஞ்சுமாக வலுவான சதுர முகவாயுடன் விரிந்தகன்ற பெரியமுகம் உடையவர். நேருக்கு
நேர் உங்கள் முகத்தைப் பார்த்து உரத்து மணியோசை குரலில் பேசுவார். அவரது பேருருவத்தைவிட
அவரின் இதயம் மிகப் பெரியது.
எப்போதும்
எளிய வாழ்வை மேற்கோள்வார், மிகச் சாதாரண உடை, காலணியை அணிவார். பயன்படுத்தும் உடைகளும்கூட
அவர் மனைவி சாவித்திரி அம்மாவிடமிருந்து வந்தவை.
ஒருமுறை
அவர் வரத் தாமதமாக, நான் அவரது அறைக்குள் சென்று பார்த்தேன், அப்போது சிறிது கிழிந்திருந்த
தனது வேட்டியைத் தைத்துக் கொண்டிருந்தார். என்னை ஐந்து நிமிடம் காத்திருக்கச் சொன்னார்.
அவரிடம் சில ஆடைகளே இருந்தன….
தேவையில்லாமல்
ஒருபோதும் பணத்தைச் செலவு செய்ய மாட்டார்: தனது சொந்த செலவுகளுக்காகக் கட்சிப் பணத்தை
ஒருபோதும் பயன்படுத்த மாட்டார். வழக்கமாகப் புகைவண்டிப் பயணங்களில் எப்போதும் சாதாரண
வகுப்பிலேயே பயணம் செய்வார், சில சந்தர்ப்பங்களில் அரிதாக விமானத்தில் பயணித்துள்ளார்…”.
(--சிஆர் நூற்றாண்டு விழாபோது தோழர் ஏ பி பரதன் எழுதிய கட்டுரையிலிருந்து)
No comments:
Post a Comment