Wednesday 29 March 2023

வைக்கம் பாரம்பரியம்

 

வைக்கம் பாரம்பரியம் : இந்துத்துவா சக்திகளை முறியடிப்பீர்

சாதியத்துடன் போராட

உழைக்கும் மக்களே எழுக!

                                            கானம்ராஜேந்திரன்   கேரள மாநிலச் செயலாளர், சிபிஐ 

             வைக்கம் சத்தியாகிரகம், சாகசம் நிரம்பிய எதிர்ப்புப் போராட்டக் கதை; கேரளாவின் அரசியல் மற்றும் சமூக வளர்ச்சியில் அதற்கு இணையான நிகழ்வு வேறெதுவும் இல்லை. 1924ல் தொடங்கிய அப்போராட்டத்தின் நூற்றாண்டை நாம் கொண்டாடுவோம். அகிம்சை அடிப்படையிலான வைக்கம் போராட்டம் முதன் முறையாகத் தீண்டாமை மற்றும் முறையற்ற பழக்க வழக்கங்களுக்கு எதிராகக் குரல் எழுப்பிய இயக்கம்; இந்தியாவில் முக்கியமான போராட்டத்தில் அத்தகு விஷயங்கள் போராட்டத்தின் மையப் பிரச்சனையாக ஒருபோதும் இருந்ததில்லை. மேலும் கேரளாவில், ஏன் இந்தியா முழுமையிலுமே முதலாவது வெற்றிகரமான போராட்டம் அது, உழைக்கும் மக்கள் சமூகச் சீர்திருத்தத்திற்காக ஆர்வமுடன் தீவிரமாக முன்வந்து கலந்து கொண்ட இயக்கம் அது.

       கேரளா கோட்டயம் மாவட்டத்தின் வைக்கம் தாலுக்காவில் நிலவிய சமூக அநீதிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஒரு போராட்ட வடிவமே, அதன் அத்தனை பரிமாணங்களுடன் கூடிய வைக்கம் சத்தியாகிரகம். சுதந்திரப் போராட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பு ஏற்கனவே

சமூக விடுதலைக்கான நன்கு கட்டமைக்கப்பட்ட போராட்டங்கள் கேரளாவில் நிகழ்ந்தன. அந்த விவாதங்களின் வரிசையில் முன்னே வரும் போராட்டம், பெண்கள் மார்பை மூடி தங்கள் மானத்தைக் காத்துக் கொள்ள உரிமை கோரி சாணார் சமூகத்தினர் நடத்திய ‘தோள் சீலைப் போராட்டம்.’ அந்த இயக்கத்தின் லட்சியம் தாழ்ந்த சாதியாகக் கருதப்பட்ட சாணார் பெண்களுக்கு மானத்தைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் விரும்பும் வகையில் ஆடை உடுத்தச் சுதந்திரம் வேண்டும் என்பது மட்டுமே. ஆனால் அது முழுமையான சாதி முறைமையை எதிர்த்த ஒன்றல்ல.

மாறாக சாதி முறைமையின் நம்பிக்கை அடித்தளத்தை 1888ல் ஸ்ரீநாராயண குரு நிறுவிய அருவிபுரம் பிரதிஷ்ட்டா (சிவன் கோயில்) ஏற்கனவே அசைத்து விட்டது. [கேரள மாநிலத்தில்

தீண்டத் தகாதவர்களுக்குக் கடவுள் வழிபாடு மறுக்கப்பட்ட காலத்தில், அருவிப்புரம் என்கிற மலைகளும் காடுகளும் சூழ்ந்த நெய்யாறு ஓடும் இடத்திற்கு அருகில் ஸ்ரீநாராயண குரு அமைத்த அருவிப்புரம் சிவன் கோவில் ஒரு புரட்சிகர செயல். இது போன்று அவர் கட்டிய பலகோயில்களிலும் அனைத்துச் சமூகத்தினரும் வழிபடும் வகையில் ஆலய நுழைவிற்குப் புதிய வழி முறை கண்டார். மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவரது படைப்பில் இதை ஈழுவ சிவன் கோவில் என்று குறிப்பிட்டுள்ளார். --இணையத்திலிருந்து]

     ஸ்ரீநாராயண குருவின் செயல்பாடு கேரளாவின் சமூக இயக்கங்களுக்குக் குறிப்பிடத்தக்க அளவு ஊக்கத்தையும் வேகத்தையும் சேர்த்தது. சடங்குகளை அனுசரிப்பதில் புதிய மேம்பாடுகளை அமல்படுத்தியும், எழுத்தறிவு மற்றும் கல்வியைப் பரப்புவதிலும் ஈடுபட்ட மறுமலர்ச்சி இயக்கத் தலைவர்கள் ஸ்ரீநாராயண குருவின் பாதையைத் தொடர்ந்தனர்.

      ஸ்ரீநாராயண குரு, அய்யன்காளி (படம்), சட்டாம்பிசுவாமி, அய்யா வைகுண்ட சுவாமி, (மதிய உணவு வழங்கி ஏழை தலித்களுக்குக் கல்வியை வழங்கிய) ஃபாதர் சவரா குரியாகோஸ்

எலியாஸ், (தலித் கிருஸ்துவ மத போதகர், சமூக சீர்திருத்தவாதி, கல்வியாளர், பொய்க்கைல் அப்பச்சன் எனப்படும்) பொய்க்கைல் யோகண்ணன், (ஆயுர்வேத மற்றும் அலோபதி) டாக்டர் வேலுக்குட்டி ஆரயன் போன்ற பெருமக்கள் கேரள சமூகத்தைச் சமூக நீதி மற்றும் அதைத் தொடர்ந்து வழக்கொழிந்த பழமைவாத பழக்க வழக்கங்களிலிருந்து விடுதலை பெறவும் வழி நடத்தியவர்கள்.

        சாதியால் பிரிக்கப்பட்டிருந்த சமூகத்தை, சமூக நீதி மற்றும் மானுடச் சமத்தன்மையை முற்றிலும் புறக்கணித்து, அன்று அநீதியே நிலவி ஆட்சி செய்தது.

          சாதிய முறைமையின் தடைகளைப் பிரித்தெறிய, தாழ்த்தப்பட்ட சமூகத்தின் வேலுக்குட்டி ஆரயன் போன்ற அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் நடந்தன.

    கேரளாவில் சாதி அடிப்படையிலான சமத்துவமின்மை வைக்கம் சத்தியாகிரகத்தின் விளைவாய் கழன்று வீழத் தொடங்கியது, அதன் பாரம்பரியம் உயிர்ப்போடு வைக்கப்பட்டது. மற்ற இடங்களுக்கும் அது ஓர் உதாரணமாகி, சமூக மாற்றத்திற்கு பாதை சமைக்கப்பட்டது.

கேரள முதலாவது கம்யூனிஸ்ட் அரசின் சாதனை

         கேரள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் தேசிய இயக்க முற்போக்கு இடதுசாரி குழுவினரும் தொழிலாளர்கள் விவசாயிகள் உரிமைகளுக்காகப் போராட்டங்களை முன்னெடுத்தனர்; அதில் சமரா சத்தியாகிரக இயக்க முன்மாதிரிகளைப் பின்பற்றி சமூகப் புரட்சிக்கும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரின் விடுதலைக்காகவும் பாடுபட்டனர்.

        கேரள மாநிலத்தில் ஜனநாயகத் தேர்தல் முறையின் கீழ் 1957ல் தேர்ந்தெடுக்கப்பட்ட சிபிஐ அரசு தேச வரலாற்றில் முதன் முறையானது, உலக வரலாற்றில் அது இரண்டாம் முறை. அந்த சரித்திர நிகழ்வு எந்த அளவு ஆழமாகக் கட்சியின் செல்வாக்கு இருந்தது என்பதன் வெளிப்பாடு. இவ்வாறு மறுமலர்ச்சியிலிருந்து மரபுரிமையாக ஸ்வீகரித்துக் கொள்ளப்பட்ட கேரளச் சமூகத்தின் அனைத்து அரசியல் விழுமியங்களும், மாநிலத்தின் முதலாவது கம்யூனிஸ்ட் அரசால் அதன் ஆதாரக் கொள்கைகளாக  உள்ளார்ந்து இணைக்கப்பட்டன.

     கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை கட்சிக்குள்ளேயும்கூட அதன் அமைப்பு மற்றும் மதிப்புறு விழுமியங்களில் தீவிர மாற்றங்களைக் கொண்டு வந்தது. வேளாண்மை, கல்வி, சுகாதாரம், சமூக நீதி, சமூகப் பாதுகாப்பு இவற்றில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது. அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பகுதிகளில் கட்சி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் தொடர்ச்சியாக விடாப்பிடியாகப் பின்பற்றப்பட்டன.

வைக்கம் சத்தியாகிரகப் பின்னணி

     மலபாரின் தீயர்கள் இன மக்களைவிட திருவாங்கூரின் ஈழவ இனத்தவர் இன்னும் மோசமான நிலையில் இருந்தனர். குடிமை உரிமைகள் குறித்த உரையாடல்கள் பிரபலமடைந்ததற்கு ஸ்ரீநாராயண குரு, மகாகவி குமாரன் ஆசான் மற்றும் சிவி குஞ்சிராமன், ட்டிகே மாதவன் போன்ற தீவிரமான அரசியல் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களுக்கே நன்றி கூற வேண்டும். வைக்கம் சத்தியாகிரகத்தில் மற்றொரு கேள்விப்படாத பாரம்பரியம் அதில்

நேரடியாக ஸ்ரீநாராயண குரு, மகாத்மா காந்தி மற்றும் (தந்தை பெரியார் எனும்) ஈவெ ராமசாமி நாயக்கர் ஈடுபட்டதாகும். அத்தகைய மாபெரும் சமூகச் சீர்திருத்தவாதிகள் அந்தச் சத்தியாகிரகத்தில் ஈடுபடுபட வேண்டிய தவிர்க்க முடியாத நிலைக்குக் காரணம், வைக்கம் மகாதேவச் சேஷத்ர (சிவாலயம்) சுற்றுப்பகுதியின் பொதுச் சாலைகள் தீண்டத்தகாத மக்களுக்குப் பயன்படுத்த முடியாத நிலையே நீடித்தது. அதுவும், திருவாங்கூர் சமஸ்தானத்தின் பொது வழித்தடங்கள், சாலைகள் 1865ல் சாதி, இன வேறுபாடு இன்றி மக்கள் அனைவருக்கும் திறந்துவிடப்பட்ட பிறகும் கோயில் வளாகத்தில் தீண்டத்தகாதோருக்குத் தடை. கோயிலைச் சுற்றிய நான்கு வீதிகளில் அவர்ணாக்கள் (நான்கு வர்ண முறைக்கு வெளி வைக்கப்பட்ட வனவாசிகள் போன்ற தீண்டத்தகாதோர்) சுதந்திரமாக நடந்து செல்லும் உரிமை மறுக்கப்படவே, ஸ்ரீநாராயண குரு அவர்களே தடை பிரச்சனையைக் கையாள நேர்ந்தது.

      1923ல் காக்கிநாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி ஆண்டு அமர்வில் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அம்மாநாடு மௌலானா முகமது அலி

தலைமையில் 1923 டிசம்பர் 28 முதல் 1924 ஜனவரி 1 வரை நடைபெற்றது. TK மாதவன் வழிகாட்டலில் தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவு, அந்த முரண்பாடு தேசிய கவனத்தை ஈர்த்தது. 1924 செப்டம்பர் 27ல் ஸ்ரீநாராயண குருவின் வருகை போராட்டக்காரர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி ஒரு திருப்புமுனை ஆனது. 1925 மார்ச் மாதம் காந்தி முதன் முறையாக வைக்கம் வந்தார். மரியாதைக்குரிய ‘இந்தம்துருத்தி மனா’வில் (உயர்சாதி நம்பூதிரி பிரிவினரின் இல்லம்) சாதி அடிப்படையிலான கொடுமைகளுக்கு எதிராகக் காந்திஜி பேசினார்.

நம்பூதிரிகள் வாதம்

        இந்தம்துருத்தியில் மனையில் வசித்த, வைக்கத்தின் பிற 48 இல்லங்களின் மீது உரிமையை வைத்திருந்த, பழைய மரபின் வந்த (நம்பூதிரி) பிராமணர்கள், ஜனநாயகத்தில் நம்பிக்கை

இன்மை காரணமாகத் தாங்களே கடவுளின் தெய்வீகச் சட்டங்களைப் பாதுகாப்பவர்கள் என்று எண்ணி விட்டனர். இந்தம்துருத்தி மனைக்கு (படம்) விஜயம் செய்த காந்தி இதனைத் தானே நேரில் காணும் வாய்ப்புப் பெற்றார். ‘தீண்டத்தகாதோர் தங்கள்  முந்தைய பிறவிகளில் செய்த பாவங்களின் காரணமாகத் தீண்டத்தகாத சாதிகளில் பிறந்து விட்டனர்என்றும்;எனவே இந்தப் பிறவியில் அதற்காகக் கடவுளால் விதிக்கப்பட்ட தண்டனையை (கர்மவினையை) அவர்கள் அனுபவிப்பதே விதிஎன்றும்’;பிராமணர்களும் அரசரும் அந்தத் தண்டனையை நிறைவேற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்என்றும் இந்தம்துருத்தி நம்பூதிரி காந்திஜியுடன் விவாதம் செய்தார். பிராம்மணியத்தின் கர்மா வினைக் கொள்கை கோட்பாட்டில் நம்பிக்கை உள்ளவர்களுடன் விவாதிப்பது சாத்தியம் இல்லை.

உண்மையும் புரட்டும்

     காந்திஜி அவரே முன்வந்து ஆட்சேபம் தெரிவித்தார், ‘தீண்டாமை இந்து கொள்கை அல்ல.’ ஆனால் பலன் ஏதும் இல்லை. அவர்கள் காந்திஜியையே தங்கள் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. (வைசியரான காந்தி பிராமணர்கள் வீட்டுக்குள் நுழையக் கூடாதாம். எனவே) மனைக்கு வெளியே தனியே இதற்காகப் பந்தல் அமைத்து காந்தியுடன் விவாதங்கள் நடந்தன. ஆனால் இந்த வரலாற்று நிகழ்வைப் பாஜக,மகாத்மாஜி தான் ஒரு பிராமணர் அல்லாதபடியால் அவரே வீட்டிற்குள் வருவதை மறுத்து விட்டார்’ என்று வரலாற்றுப் புரட்டை நிறுவ முயற்சிக்கிறது. (சங்பரிவார் கும்பல் தோன்றிய நாள் முதலாக இப்படி இந்தியாவின் உண்மை வரலாற்றையும் போராட்டத்தையும் மாற்றி எழுதுவது அவர்களின் நிகழ்ச்சி நிரலில் ஒன்று.) அவர்கள் எப்போதும் இதைச் செய்ய முயற்சிப்பர்.

      இந்தம்துருத்தி மனை சொத்து தற்போது கம்யூனிஸ்ட் கட்சியிடம் உள்ளது. வரலாற்றுச் சக்கரச் சூழற்சியில் அங்கே நமது கட்சி அலுவலகம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அந்த முரண்நகை தொடர்கிறது. 


 அதனை ஏஐடியுசி சங்கத்திடமிருந்தும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்தும் திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சங்பரிவார் கும்பல் வாதிடுகிறது. தற்போது அந்தச் சொத்து ஏஐடியுசி மற்றும் கட்சியின் வசம் உள்ள நிலைமை வரலாற்றின் பழிவாங்கல் மற்றும் சாதிய சக்திகளுக்கு அவற்றின் தோல்வியின்  நினைவூட்டல்.

மதத் தீவிரவாதிகளின் நோக்கம்

      சாதாரண மக்கள் பொதுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்துவதைத் தடுத்த, நான்கு வர்ணத்திற்கு வெளியே வைக்கப்பட்ட மலைசாதி மக்கள் போன்ற தாழ்த்தப்பட்டவர்களை (அவர்ணா) கல்வி பெறுவதிலிருந்து தடுத்த --பிராமணியச் சடங்குகளைக் கட்டாயமாக்கிய-- அதே சாதிய ஆதிக்கவாதிகளை மகிழ்விப்பதே பாஜக-வின் இலக்கு. கேரள மறுமலர்ச்சி இயக்கத்தின் மரபுகள் மற்றும் விழுமியங்கள் மீது எதிர்மறையான சாயம் பூசும் அணுகுமுறைகளைப் பாஜக மற்றும் சங் பரிவார் சக்திகள் கடைபிடிக்கின்றன. மதத் தீவிரவாதம் மற்றும் வகுப்புவாத நஞ்சைப் புகுத்தி, இடது ஜனநாயக முன்னணியைத் தூக்கி எறிய பாஜக அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறது. இதனுடன், நரேந்திர மோடி தலைமையிலான என்டிஏ நிர்வாகத்தால் கட்டற்ற சுதந்திரம் வழங்கப்பட்ட தீவிர வலதுசாரி வகுப்புவாதக் குழுக்களால் நமது ஜனநாயகம் ஒட்டுமொத்த ஆபத்திற்கு உள்ளாகியுள்ளது.

        மதத் தீவிரவாதக் குழுக்களால் இடது ஜனநாயக முன்னணிக்கு மட்டுல்ல, பொருளாதாரச் சுதந்திரம், மதச்சார்பின்மை, அனைவருக்கும் சமமான சட்டத்தின் ஆட்சி, மற்றும் நாடாளுமன்ற ஜனநாயக முறைமை உள்ளிட்ட  மக்களால் இதுவரை ஆக்கப்பட்ட அனைத்து வெற்றிகளுக்கும் ஆபத்து. சங் பரிவார் அமைப்புகளால் ஆதரித்து ஊக்கப்படுத்தப்படும் இந்து வகுப்புவாதம், மக்களின் பரவலான கடும் எதிர்ப்பைச் சந்தித்தே ஆக வேண்டும். ஜனநாயக விரோத பாசிசக் கருத்துக்களுடன் அவர்கள் நமது அற்புதமான தேசத்தின் பன்மைக் கலாச்சாரம் மற்றும் (வேற்றுமையில் ஒற்றுமை என்ற) பன்மைத்துவத்தையும் ஒழித்துக் கட்ட கடைசி முயற்சிகளைச் செய்கிறார்கள்; அதுமட்டுமா அதன் மூலம் அவர்கள் இந்திய தேசிய ஒற்றுமையையும், மக்களின் சகோதரத்துவ உணர்வையும் உழைக்கும் மக்களின் மதசார்பின்மை ஒற்றுமையும் நமது பன்மைத்துவப் பண்பாட்டின் சீர்மிகு அடையாளங்களை அழிக்கவும் முயற்சி செய்கிறார்கள். அவர்களால் நாட்டின் தலித்கள் மற்றும் மதச் சிறுபான்மையினர்களைப் பாதிக்கும் நெருக்கடிகள் ஏராளம். வெறுப்பை விதைத்து, சிறுபான்மையினர்களை அடக்கி ஒடுக்கி அவமதித்து, சாதி மற்றும் பசு பாதுகாப்புப் பெயரால் பெருந்திரள் படுகொலைகளை நிகழ்த்தி இந்தியாவைப் பிரதிநிதித்துவப்- படுத்துவதை அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடித்தளமாகிய மதச்சார்பின்மை அவர்களது நிர்வாகத்தால் மதிக்கப்படுவதே இல்லை.

   ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்துத்துவா அரசியல் கருத்தோட்டம் மனுஸ்மிருதியை அடிப்படையாகக் கொண்ட மதத் தேசியவாதத்தின் வடிவம். இந்துத்துவா மற்றும் அதன் ஒற்றுமையை ஆதரித்துப் பராமரிப்பதுடன் இந்து ராஷ்ட்டிராவை வளர்த்தும், தலித்கள் மற்றும் ஆதிவாசிகளை இரண்டாம் தரக் குடிமக்களாகவும் பாஜக நிர்வாகம் நடத்துகிறது. இந்துத்துவா கற்பனை செய்யும் சமூகத்தின் அம்சங்களுக்குச் சாதி அடித்தளமாகச் செயலாற்றினால், மனுஸ்மிருதி அதனை உறுதிப்படுத்தும் சக்தியாகச் செயலாற்றும். தலித்கள், தலித் பெண்கள் மற்றும் தலித் சிறுமிகளுக்கு எதிரான கொடுமையான வன்முறை நிகழ்வுகள் இனரீதியான ஆழமான கவலைகளை எழுப்புகிறது. ஒரு பசுவைக் கொன்றதற்காக அவர்கள் தூக்கில் தொங்கவிடப்படுவதே இந்து மேல்சாதி அதிகாரத்தின் கீழ் தலித்கள் நடத்தப்படும் விதத்திற்கு அடையாளம்.

        படுபாதகமான அநீதியில் ஈடுபட்டவர்களை ஆதரிக்கவே முடியாத நிலைகளில் அரசு, அந்த இந்து உயர் சாதி தனிநபர்களை வெளிப்படையாக ஆதரிக்கிறது; மேலும், ஹாத்ராஸில் ஆதரவற்ற சிறுமி மற்றும் பலருக்கு அவர்கள் இழைத்த கொடுமைக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைப் பலவீனப்படுத்துவதிலும் அரசு இறங்குகிறது. தலித்கள் மற்றும் மலைசாதியினர்களைக் கொலை செய்ததாகவும் பாலியல் அத்துமீறில்களில் ஈடுபட்டதாகவும் ஆர்எஸ்எஸ் –பாஜக தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்ட எண்ணிறந்த நிகழ்வுகள் உள்ளன. அந்தத் துன்பியல் நிகழ்வுகள் நம் வாசலில் கொண்டுவரப்படுகின்றன. நாம் என்ன செய்ய வேண்டும்?

      அந்தப் படுபாதகங்களை நிகழ்த்தும் வகுப்புவாதப் பாசிசத்தை முறியடிக்க ஒன்றுபடுவோம். அனைத்து இயக்கங்கள், மதசார்பற்ற கட்சிகள் ஒன்றாக இணைந்து, வகுப்புவாதப் பாசிசத்திற்கு எதிரான உறுதியான நிலைபாட்டை எடுக்கும் ஐக்கிய முன்னணி மூலம் மட்டுமே அதனைத் தோற்கடிக்க முடியும். மதசார்பற்ற இந்தியா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்த இந்தத் தருணத்தின் கட்டாயத் தேவை பாசிசத்திற்கு எதிரான அத்தகைய ஐக்கிய முன்னணி. ஆனால் பாஜக பிரதிநிதித்துவப்படுத்தும் வகுப்புவாதத்துடன் அனைத்திந்திய அளவில் வெற்றிகரமாக மோதிச் சண்டையிட தனித்த ஒரு கட்சியால் இயலாது. எனவே அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே முன்னணியாக ஒன்றுபட வேண்டும், அதுவே தற்போதைய அரசியல் சகாப்தத்தின் கடமையும் பொறுப்பும் ஆகும். அதைத்தான் வைக்கம் சத்தியாகிரகத்தின் பாரம்பரியம் நம்மிடம் கோருகிறது. அந்த இலட்சியத்தைச் சாதிப்பதை நோக்கி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அயராது பாடுபடுகிறது. ஏனைய கட்சிகளையும் அறைகூவி அழைக்கிறது, வைக்கம் பாரம்பரியம்!

-- நன்றி : நியூஏஜ் (மார்ச்.26 –ஏப்ரல் 1)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

பின்குறிப்பு

          இக்கட்டுரை வைக்கம் பாரம்பரிய நூற்றாண்டு தொடக்கப் பின்னணியில் நமது இன்றைய கடமையை வலியுறுத்துவதே. வைக்கம் போராட்டக் குறிப்புகள், ஆய்வுகள் குறிப்பாகத் தந்தைப் பெரியாரின் பங்களிப்பு என எழுதுவதற்கும், அந்தப் புகழார்ந்த வரலாற்றை மீள் வாசிப்பு செய்வதற்கும் ஏராளம் உண்டு. அவற்றைத் தேடிப் படிப்போம்.


(https://www.hindutamil.in/news/opinion/columns/531749-periyar-in-vaikkam.html இந்து தமிழ் 24-12-2019 இதழில் வெளியான பழ அதியமான் எழுதிய வைக்கத்துக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்? தலைப்பிலான கட்டுரையின் இணைய முகவரி. 


அதில் ஒரு செய்தி: “1924-25-ல் வைக்கம் போராட்டம் நிகழ்ந்த தருணத்தில் ஈ.வெ.ராமசாமி நாயக்கரை ‘வைக்கம் வீரர்’ என்று எழுதினேன். அவருக்கு அது ஒரு பட்டப் பெயராகவே பிற்காலத்தில் ஆகிவிட்டது’ என்று திரு.வி.க. குறிப்பிட்டுள்ளார்.)


வைக்கம் சத்தியாகிரக நூற்றாண்டைக் கொண்டாடுவோம். கேரள அரசு சத்தியாகிரகம் நடந்த 603 நாட்களைக் குறிக்கும் வகையில் 603 நாட்கள் விழா எடுத்துக் கொண்டாட உள்ளது.

          (மொழிபெயர்ப்பாளர் இணைப்பு)

                                 

No comments:

Post a Comment