Thursday 16 March 2023

மகளிர் தினத்தில் ரோசா லுக்ஸம்பர்க் நினைவுகள்

 

ஒரு கருத்தியலாளர், நமது காலத்திற்கு ஊக்கம் அளிப்பவர்    மகளிர் தினத்தில் ரோசா லுக்ஸம்பர்க் நினைவுகள்

                                      --டாக்டர் BV விஜயலெட்சுமி

புரட்சிகர சோஷலிசவாதி, மார்க்சிய தத்துவ இயலாளர் மற்றும் போர் எதிர்ப்புச் செயல்பாட்டாளரான ரோசா லுக்ஸம்பர்க் 152வது பிறந்த நாளைக் கொண்டாடி மார்ச் 8 மகளிர் தினத்தில் அவரை நினைவு கூர்வோம்! ‘சீர்திருத்தமா அல்லது புரட்சியா என்ற நூலில், ‘முதலாளித்துவ முறைமையை முழுமையாகத் தூக்கி எறிவதன் மூலம் மட்டுமே உண்மையான மாற்றம் சாதிக்கப்பட முடியும்’ என அவர் எழுதிய கருத்துகளை நினைவு கொள்வது ஆதர்சம் தரும், நம்மைச் செயல்பட உற்சாகமளிக்கும். மேம்பட்ட உலகு குறித்த லுக்ஸம்பர்க்கின் கண்ணோட்டம் இன்னும் அடைந்துவிடக்கூடியதாகவே உள்ளது, அது நனவாக்கப்படுவதை நோக்கி அனைவரும் செயல்பட அவரது உதாரணம் நம்மை ஊக்கம் பெறச் செய்யும்.

            ரோசா 1871 மார்ச் 5ல் போலந்து நாட்டின் சாமொஸ்க்கில் பிறந்தார். ஒரு யூத நடுத்தரக் குடும்பத்தில் வளர்க்கப்பட்டவரின் அறிவாற்றல் ‘வளரும் பயிர் முளையிலேயே தெரிவது’ போல இளம்பருவத்திலேயே சுடர்விட்டது. தமது காலத்தின் மிகச் செல்வாக்குப் பெற்ற சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்களில் ஒருவராகத் திகழ்ந்து, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு இன்று வரை, தொடர்ந்து உற்சாகமளித்து வருகிறார்.

          1887 வார்சா நகரில் படிப்பைத் தொடங்கிய லுக்ஸம்பர்க், பின்னர் சுவிஸர்லாந்து சென்று தனது கல்வியைத் தொடர்ந்தார். அங்கேதான் அவருக்குக் காரல் மார்க்ஸின் எழுத்துகள் அறிமுகமாயின, ஒரு சமூகச் செயற்பாட்டாளர் ஆனார். 1898ல் குஸ்தாவ் லூபெக்-கைத் திருமணம் செய்து ஜெர்மனிக்குக் குடிபெயர்ந்தார். அங்கு ஜெர்மனி சமூக ஜனநாயகக் கட்சியில் (SPD) இணைந்தார். கட்சியில் வெகு விரைவில் புகழ்பெற்று முன்னணித் தலைவராக உயர்ந்தார். சமூக இயக்கத்தில் அவரது குரல் உயரிய மதிப்பு பெறலாயிற்று.

    லுக்ஸம்பர்க், தொழிலாளர்கள் உரிமைகள் மற்றும் சமூக நீதிக்குத் தீவிரமாக ஆதரவு அளித்தார். முதலாளித்துவ முறைமை என்பது இயல்பிலேயே சுரண்டும் தன்மை கொண்டது என்பதிலும் உழைப்புக் கருவிகளின் கூட்டு சொத்துரிமை மூலம் மட்டுமே உண்மையான ஜனநாயகம் சாதிக்கப்பட முடியும் என்பதிலும் லுக்ஸம்பர்க் நம்பிக்கை உடையவர்.

       மேலும், போர் மற்றும் இராணுவமயமாக்கலுக்கு லுக்ஸம்பர்க் தீவிர எதிர்ப்பாளர். முதலாம் உலகப் போரை மிகக் கடுமையாக வெளிப்படையாக அவர் விமர்சித்தார். இந்த அவரது போர் எதிர்ப்புச் செயல்பாடுகளுக்காக 1915ல் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறைப்பட்ட போதும், அங்கிருந்து தொடர்ந்து செயல்பட்டும் எழுதியும் வந்தார், அவரது எழுத்துக்கள் முன்னிலும் அதிகமாகச் செல்வாக்கு செலுத்தத் தொடங்கியது.

            20ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தின் அரசியல் மற்றும் அறிவார்ந்த பெரும் பரப்பில் ரோசா லுக்ஸம்பர்க் அழிக்க முடியாத அடையாளச் சுவட்டைப் பதித்துச் சென்றுள்ளார். அவரது காலத்தின் பெரும் செல்வாக்கு பெற்ற சிந்தனையாளர்கள், செயற்பாட்டாளர்களில் ஒருவராக அவர் உயர்ந்தபடி விளங்கினார் – உலகம் முழுமையிலும் சமூக மாற்றத்திற்கான இயக்கங்களை உற்சாகப்படுத்தினார்.

            லுக்ஸம்பர்க்கின் வாழ்வும் பணியும் அவர் வாழ்ந்த காலத்தில் நிலவிய அரசியல் மற்றும் சமூக நிலைமைகளால் ஆழமாகச் செல்வாக்கிற்கு ஆட்பட்டது. முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியம் எழுச்சி பெற்று வளர்ந்து வந்ததையும், முதலாவது உலகப் போரின் தொடக்கம் மற்றும் ருஷ்யப் புரட்சிக்குப் பிறகு விளந்த கட்டுக்கடங்காத பின்விளைவுகளையும் கண்கொண்டு பார்த்த சாட்சியாக அவர் இருந்தார்.  இந்த அனுபவங்கள் அவருடைய கருத்தியல் நிலைபாடுகளையும், அவர் தலைமை ஏற்ற போராட்டங்கள் மற்றும் இயக்கங்களையும் வடிவமைத்தன.

    மார்க்ஸிய மற்றும் சோஷலிசக் கோட்பாடுகளில் லுக்ஸம்பர்க் ஆழமான பற்றுறுதி கொண்டார், உண்மையான ஜனநாயகம் மற்றும் சமூக நீதிக்கான திறவுகோள் உழைக்கும் வர்க்கத்திடம் இருப்பதாக நம்பினார். தொழிலாளர் உரிமைகளுக்குத் தீவிர ஆதரவாளரான அவர், முதலாளித்துவ முறைமை இயல்பிலேயே சுரண்டும் குணத்தை உள்ளார்ந்து கொண்டிருப்பதாகவும் நம்பினார்.

    போர் மற்றும் இராணுவமயத்திற்குக் கடுமையான எதிர்ப்பாளரான லுக்ஸம்பர்க், போர் என்பதே முதலாளித்துவ முறைமையின் விளைபொருள் என உறுதியாக நம்பினார்; சர்வதேசப் புரட்சி மட்டுமே நிலையான சமாதானத்தைக் கொண்டு வர முடியும் என உரைத்தார். ‘தி ஜுனியஸ் பாம்லெட்’ (‘The Junius Pamphlet,) என்ற புகழ் பெற்ற அவரது கட்டுரையில், “செய்ய வேண்டிய உச்சபட்ச புரட்சிகரமான விஷயம், என்ன நிகழ்கிறது என்பதை எப்போதும் உரத்துப் பிரகடனம் செய்வதே” என்று எழுதினார். (அச்சம் தவிர்த்து, குன்றென நிமிர்ந்து நின்று, நேர்பட, வெடிப்புறப் பேசு.) இந்த உணர்வு அவரது நம்பிக்கையைப் பிரதிபலித்தது. போரின் அநீதிக்கு எதிராக உரத்துக் குரல் எழுப்புவதும், மேலும் நியாயமான, அமைதியான உலகை நோக்கிப் பணியாற்றுவதும் முக்கியம் என அவர் உறுதியாக நம்பினார். [ஜுனியஸ் பாம்லெட் என்ற துண்டறிக்கை லுக்ஸம்பர்க் சிறையில் இருந்தபோது போரை எதிர்த்து எழுதியது. தன்னை மறைத்துக் கொள்ள அவர் ‘ஜுனியஸ்’ என்ற புனைப்பெயர் சூட்டிக் கொண்டார்; ரோமன் குடியரசின் கதாநாயகன் லுஸியஸ் ஜுனியஸ் புரூடஸ் என்ற பெயரை அது குறிப்பதாக இருக்கலாம் –இணையத்திலிருந்து திரட்டியது.]

    தமது வாழ்நாள் முழுமையும் லுக்ஸம்பர்க் சமூக மாற்றத்திந்கான எண்ணிறைந்த போராட்டங்கள் மற்றும் இயக்கங்களில் ஈடுபட்டார். ஜெர்மனி சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) தலைவரான அவர், புரட்சிகர சோஷலிசம் மற்றும் தொழிலாளர்கள் உரிமைகளுக்கு ஆதரவாக நின்றார். மேலும் 1918 –1919ஆண்டுகளில் நடந்த ஜெர்மன் புரட்சியில் முக்கிய பங்காற்றிய சமூக அமைப்பான ‘ஸ்பார்டகஸ் லீக்’ அமைப்பின் நிறுவன உறுப்பினராகவும் அவர் இருந்தார். [1914ல் தொடங்கிய ‌முதல் உலகப் போரில் பிரான்ஸ், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த சோஷலிச அமைப்புகள் தத்தமது அரசுகளுக்கு ஆதரவளித்தன. அதுபோன்றே ஜெர்மனியின் SPD கட்சியும் போருக்கு ஆதரவு அளித்தது. SDPகட்சி எடுத்த இம்முடிவு ரோசாவிற்கு பெரும் அதிர்ச்சியையும் சொல்லொணா வேதனையையும் அளித்தது. எனினும் உலகப்போருக்கு எதிரான எண்ணம் கொண்ட கிளாரா ஸெட்கின் (Clara Zetkin), பிரான்ஸ் மெஹ்ரிங் (Franz Mehring), லியோ ஜோகிசஸ் (Leo Jogiches) மற்றும் தீவிர சோஷலிஸ்டான நாடாளுமன்ற உறுப்பினர் கார்ல் லெய்ப்னெக்ட் (Karl Leibnect) ஆகியோருடன் இணைந்து போருக்கு எதிரான குழுவை (Gruppe internationale) உருவாக்கினார். அதுவே பின்னாளில் "ஸ்பார்டகஸ் லீக்" என்றழைக்கப்பட்டது. இந்தக் குழு உறுப்பினர்களே பின்னர் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவினர்  -–விடுதலை, 2020 ஜூலை 25 இதழிலிருந்து நன்றியுடன்]

    லுக்ஸம்பர்க்கின் இலக்கியப் பங்களிப்புகளும் மிகவும் முக்கியமானவை. அவர் சளைக்காது பெருமளவு எழுதிக் குவித்தவர்.  மார்க்ஸிய தியரி,  பொருளாதாரம்  மற்றும் அரசியல் குறித்த அவரது

 படைப்புகள் இன்றைய நாள் வரை செல்வாக்கு மிக்கதாக விளங்குகின்றன. அவரது ‘மூலதனத்தின் திரட்சி’ நூலில் முதலாளித்துவத்தின் முரண்பாடுகள், தொழிலாளர்களைச் சுரண்டுவது குறித்து அவர் ஆய்வு செய்வார். ருஷ்யப் புரட்சி’ நூலில் சோஷலிசம்பால் போல்ஷ்விக்குகளின் அணுகுமுறையை விமர்சனம் செய்து, கூடுதல் ஜனநாயகம் மற்றும் புரட்சியில் பங்கேற்பு அணுகுமுறைக்காக வாதிடுவார். [படத்தில் ரோசா லுக்ஸம்பர்க் குறித்துத் தோழர் பட்டாபி எழுதிய சிறு நூல், NCBH வெளியீடு]

      அவருடைய பல சாதனைகளையும் மீறி, லுக்ஸம்பர்க்கின் வாழ்க்கை துயரம் மேலிடும் வகையில் அகாலமான முடிவை எதிர்கொண்டது. 1919 ஜெர்மன் புரட்சியின்போது வலதுசாரி துணை இராணுவத்தைச் சேர்ந்த ஒருவனால் சுடப்பட்டு லுக்ஸம்பர்க் படுகொலை செய்யப்பட்டார். மரணமடைந்தபோது அவருக்கு 47வயதே ஆகியிருந்தது. [கொல்லப்படுவதற்கு முந்தைய நாளில் கூட “The revolution will ‘raise itself again clashing’, and to your horror it will proclaim to the sound of trumpets: I was, I am, I shall be.” என "புரட்சி மீண்டும் எழுச்சியுறும். அவை எழுப்பும் எக்காள ஒலி நான் வாழ்ந்தேன், வாழ்கிறேன், வாழ்வேன் என முழங்கி உங்களைத் திகிலுறச் செய்யும்" என எழுதியதில் வெளிப்படுகிறது ரோசா லக்சம்பர்க்கின் வைர நெஞ்சம். –மேலே குறிப்பிட்ட விடுதலை கட்டுரை]

      உலகம் முழுவதும் நடைபெறும் சமூக நீதி இயக்கங்களுக்கு லுக்ஸம்பர்க்கின் மரபு தொடர்ந்து இன்று ஊக்கமளிக்கிறது. தொழிலாளர்களின் உரிமைகள், போருக்கு எதிரான செயலூக்கம் மற்றும் புரட்சிகர சோஷலிசத்தின் பால் அவருடைய பற்றுறுதி, நூறு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படி, இன்றும் பொருத்தமுடையதாக உள்ளன. ‘சீர்திருத்தமா அல்லது புரட்சியா’ என்ற நூலில், “எதிர்காலம் நம்முள் இருக்கிறது, மேலும் அது நமது இன்றைய செயல்களின் மேல் சார்ந்து இருக்கிறது” என்று எழுதினார்.

    அவர் மறைவைத் தொடர்ந்து மலர்ந்த சமூக மாற்றத்திற்கான பல இயக்கங்களில் லுக்ஸம்பர்க்கின் செல்வாக்கு இருப்பதை நாம் காணமுடியும். உலகம் முழுவதும் செயல்படும் சோஷலிசவாதிகள், பெண்ணியலாளர்கள், இனவெறிக்கு எதிரான செயற்பாட்டாளர்களால் அவருடைய கருத்துகள், சிந்தனைகள் ஏற்றுக் கொண்டாடப்படுகின்றன. மேலும் நியாயமும், சமத்துவமும் மிக்க சமுதாயத்தை நிறுவிடும் புரட்சிக்கான அவரது அறைகூவல், ‘கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்த்துப் புதியதோர் உலகம் செய்ய’ உழைக்கும் மக்கள் அனைவரின் காதுகளில் தொடர்ந்து ரீங்காரமிட்டு ஒலிக்கிறது.

       ரோசா லுக்ஸம்பர்க்கின் 152வது பிறந்த நாளில் நாம் அவரது வாழ்க்கை மற்றும் அவர் விட்டுச் சென்ற பாரம்பரியத்தை நினைவு கொள்வோம். அவர் தம் வாழ்வை அர்ப்பணித்த சமூக நீதிக்காகவும், தொழிலாளர் உரிமைகளுக்காகவும் போராட்டங்களைத் தொடர்வதன் மூலம் அவரது நினைவுக்கு நாம் மரியாதை செய்வோம்!

-- நன்றி : நியூஏஜ் (மார்ச் 12 --18)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

           

 

 

 

                                                                                                                                                                 

 

No comments:

Post a Comment