Sunday 19 March 2023

காவிகளின் அச்சுறுத்தலை நாம் எதிர்த்து முறியடிப்போம் --பினாய் விஸ்வம், எம்பி

 

                காவிகளின் அச்சுறுத்தலை நாம் எதிர்த்து முறியடிப்போம்

--பினாய் விஸ்வம், எம்பி

சிபிஐ தேசியக் குழுச் செயலாளர்

      திரிபுரா மாநில ராம் நகர் தொகுதியின் பகுதியான காளிகாபூரில் பாதி எரிக்கப்பட்ட வீட்டின் முன் நாங்கள் நின்றோம். அந்தப் பயங்கர நாளில், திரிபுரா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட தினத்தில் நிகழ்ந்தவற்றை நடுத்தர வயதுள்ள பெண்மணி எங்களிடம் கண்ணீருடன் விவரித்தார். அந்நாளில் தனது 12வயது மகனை ஒருபோதும் விட்டுவிடாதபடி அணைத்துக் கொண்டிருந்தார். அவர்களுடைய முகத்தில் அந்த அனுபவங்களின் துயரங்கள் வெளிப்படையாக அப்போதும் நிறைந்திருந்தது.

    ராம் நகர் தொகுதி சட்டமன்ற இடத்தைப் பாஜக கட்சியிடமிருந்து இடது முன்னணி – காங்கிரஸ் கூட்டு வென்றது. எல்லா தொகுதிகளையும் எந்தக் குறுக்குவழியில் எப்படியாவது கைப்பற்ற முயன்ற பாஜக கட்சி அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்களால் அந்தத் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியவில்லை. விளைவு, அந்த இரவே அதுவரை காணாத மூர்க்கத்துடன் வன்முறையை அரங்கேற்றினர். இருள் கவியத் தொடங்கியதும், ஆர்எஸ்எஸ் – பாஜக குண்டர்கள் விஸ்வஜித் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்டவர் தங்கள் அடையாளங்களைக் கூற இன்னும் அச்சப்படுகிறார்கள்) வீட்டை நிர்மூலமாக்கினர்.

    மேலும் கடுமையான பின்விளைவுகள் வரும் என மிரட்டிய பிறகு, எப்போதும்போல அவர்களுக்குப் பிடித்த ஜெய் ஸ்ரீராம் என வெறித்தனமாகக் கூச்சலிட்டபடி வீட்டுக்குத் தீயிட்டனர். புறப்படும்போது வீட்டினரின் ஒரே வாழ்வாதாரமான ஆட்டோ ரிக்க்ஷாவை அடித்து நொறுக்கவும் அவர்கள் மறக்கவில்லை. அந்த வீட்டினர் செய்த ஒரே குற்றம் ராம்நகரில் போட்டியிட்ட இடது முன்னணி வேட்பாளருக்காகப் பணியாற்றியதுதான். தாயிடமிருந்து பெருகிய கண்ணீர் மகனின் முகத்தை நனைத்தது, அவன் சப்தமிட்டு அழத் தொடங்கினான்.

அங்கே பார்வையிடச் சென்ற எங்களுடன் திரிபுராவின் மேனாள் முதல்வர் மாணிக் சர்க்காரும் இருந்தார். அந்தத் தாயிடமும் மகனிடமும் ஆறுதல் கூறி தேற்றிய அவர், உயிரச்சம் காரணமாகத் தொலை தூர இடத்திற்குச் சென்ற தந்தையைக் குறித்துக் கேட்டார். கண்ணீரைத் துடைத்தெறிந்து உறுதியாக நிற்கும்படி கூறிய மாணிக் சர்க்கார் அவர்களுக்குத் தைரியம் அளித்தார். அது உண்மையில் பலனளித்தது. அந்தப் பையன் எங்களிடம் பேசத் தொடங்கினான், சற்று நேரத்தில் தாயும்கூட தேற்றிக் கொண்டு இயல்பாகச் பேசினார்.

வீட்டிலிருந்து நாங்கள் வெளியே வரும்போது, மாணிக்‘தா அந்தப் பையனின் தோளில் தட்டியபடி, “நீ வளர்ந்ததும் என்னவாக ஆவாய்?” என்று கேட்டார். பதில் மிகத் தெளிவாக வந்தது, “நான் ஒரு தோழன் ஆவேன்.” ஆம், அந்தச் சிறுவன், இன்று வலியும் எதிர்காலம் குறித்த கவலையும் நிறைந்த காலத்தைக் கடந்து கொண்டிருக்கும், திரிபுரா மக்களின் என்றும் இறவாத துணிச்சல், வீரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறான்.

    திரிபுராவில் ஆர்எஸ்எஸ் –பாஜக கட்டவிழ்த்துவிட்ட வன்முறை பின்னணியில், இடது முன்னணி –காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு உண்மை கண்டறியும் நோக்கத்துடன் செல்வதென முடிவானது. அந்நோக்கத்தை மனதில் கொண்டு சிபிஐ (எம்) கட்சியின் தலைவர்கள் இளமாறம் கரீம், பிஆர் நடராஜன், ஏஏ ரஹீம், காங்கிரஸ் தலைவர்கள் ரஞ்சித் ரெஞ்சன், அப்துல் காலிக் மற்றும் சிபிஐ பிரதிநிதியாக நானும் வன்முறை பாதித்த இடங்களுக்கு விஜயம் செய்தோம்.

    மேனாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்ட மாநிலப் பிரிவு கட்சித் தலைவர்கள் எங்களுடன் இணைந்து கொண்டனர். முழுமையாக அடித்து நொறுக்கப்பட்ட வீடுகள், இரப்பர்

தோட்டங்கள், எரிக்கப்பட்ட ஆட்டோ ரிக்க்ஷாகளையும் குளங்களில் செத்து மிதக்கும் மீன்களையும் கண்டோம். வன்முறை போக்கிரிகளின் நோக்கம் மிகத் தெளிவானது. இடது காங்கிரஸ் கூட்டணியைத் தீவிரமாக ஆதரித்து அதன் வேட்பாளர்களின் வெற்றிக்குப் பாடுபட்ட மக்கள் அனைவரையும் முழுமையாக வேதனையில் ஆழ்த்தி அச்சுறுத்துவதே நோக்கம். பெட்ரோல் குண்டுகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. அடித்து உடைக்கப்பட்ட வீடுகளின் உருக்குலைந்த காட்சிகள் நெஞ்சைப் பிளப்பதாக இருந்தன.

    திரிபுராவுக்கு விஜயம் செய்யக் கூடிய எவரும் இந்துத்துவா பயங்கரவாதத்தின் எல்லை இல்லா சாட்சியங்களைக் காண முடியும். வெறிபிடித்த போக்கிரித்தனமான அரசியல் கொள்கையின் வெற்றியைக் காண வேண்டுமானால் நீங்கள் திரிபுராவுக்கு வாருங்கள். ஜனநாயகம் என்பதற்கான அர்த்தத்தை ஒருபோதும் அறியாத அடியாட்கள், ஒன்றிய அரசின் முழுமனதான ஆதரவுடன், மாநிலம் முழுவதும் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டனர். மூன்று பேர் உயிரிழந்தனர், ஆயிரக் கணக்கில் காயமடைந்தனர். நாடாளுமன்ற தூதுக் குழுவினர்கூட தாக்குதலிலிருந்து விட்டு வைக்கப்படவில்லை. இளமாறம் கரீம் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் டாக்டர் அஜய் குமார் பயணம் செய்த வாகனங்களைப் பாஜக – ஆர்எஸ்எஸ் கிரிமினல்கள் தாக்கினர்.

    எங்களது வருகை குறித்து முன்கூட்டியே தகவல் தந்த போதிலும் பாதுகாப்புக்காக வந்த மாநிலப் போலீஸ் தங்கள் மௌனமான ஆதரவைக் குண்டர்களுக்குத் தந்தனர். ஆனால் பாஜக மற்றும் அதனது தகவல் தொழிட்நுட்பக் குழுக்கள் இதற்கு எதிரான பொய்யான கட்டுக் கதைகளைப் பரப்பினர். அதுதான் பொய்களின் கருத்தியல். வன்முறை கோலோச்சுவதன் காரணமாக ஆயிரக் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி தொலைவில் வசிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். தங்கள் தங்கள் வீடுகளில் உண்டு உறங்கி வாழ்வது என்ற மக்களின் அடிப்படை உரிமை திரிபுராவில் தற்போது ஒரு பழங்கதை. மாநிலத்தில் 2018ல் பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது முதல் பொதுமக்கள் திரளின் வாழ்க்கைக்குப் பாதுகாப்பு என்பதற்கு உத்தரவாதமில்லை.

    சட்டத்தின் வீழ்ச்சியும் அராஜகத்தின் எழுச்சியும் குறித்து மாநில ஆளுநருக்குத் தூதுக் குழு விரிவாக எடுத்துரைத்தது. ஆனால் இந்தக் கடுமையான பிரச்சனைக்கு ஆளுநரின் பதில் அப்பட்டமான புறக்கணிப்பே. பாஜக தலைமையிலான அரசு, சட்டமன்றத்தில் தங்கள் எண்ணிக்கையையும் வாக்கு சதவீதத்தையும் குறைத்த மக்களைப் பழிவாங்குகிறது. நடந்து முடிந்த தேர்தலில் பாஜக வென்ற இடங்கள் 11 குறைந்து விட்டது. பதற்றமான ஆபத்தான சூழ்நிலையின் காரணமாக எங்களால், இளம் சிபிஐ வேட்பாளர் சத்தியஜித் ரியாங் போட்டியிட்ட சாந்தி பஜார் தொகுதிக்கு விஜயம் செய்ய முடியவில்லை. கைபேசி மூலமாக அவருடன் உரையாடியபோது பாஜக குண்டர்களின் வன்முறையை எதிர்பார்ப்பதாகக் கூறினார். அவரது குடும்பத்தினரின் ஒரே வாழ்வாதாரமான அவருடைய இரப்பர் தோட்டம் ஏற்கனவே அழிக்கப்பட்டது.

    சிபிஐ, சிபிஐ(எம்) மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தொண்டர்கள் ஜனநாயகத்திற்கான தங்களின் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் எனத் தெளிவாக உறுதிபட உரைத்தனர். திரிபுரா மக்களின் போராட்டம், விஷக் கொடுக்குகளின் வன்முறையையும் வெறுப்பையும் கொண்டிருக்கும், பாசிச அரசுக்கு எதிரானது. இந்தப் போரில் திரிபுரா மக்களை நாம் கைவிட்டுவிடக் கூடாது. இந்த நாட்டின் ஜனநாயக உணர்வு நிலைக்கு திரிபுரா மக்களுடன் நமது அனைத்து வலிமைகளுடன் ஒன்றிணைந்து நின்றிட இதுவே சரியான உகந்த தருணம்.

    பாசிசம் வீழ்த்துவோம், ஜனநாயகம் பாதுகாப்போம், திரிபுரா மக்களுக்கு ஆதரவாய் நின்றிடுவோம்!

--நன்றி : நியூஏஜ் (மார்ச் 19 –25)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

 

No comments:

Post a Comment