Thursday 2 March 2023

சிபிஐ (எம்எல்) விடுதலை கட்சியின் 11வது பேராயத்தில் தோழர் பல்லப் சென்குப்தா

 


சிபிஐ (எம்எல்) விடுதலை கட்சிப் பேராயத்தில் சிபிஐ வாழ்த்துரை

                       பிற்போக்குச் சக்திகளை முறியடிக்க, தேவை பரந்துபட்ட கூட்டணி

--பல்லப் சென்குப்தா

2023 பிப்ரவரி 16ல் பாட்னாவில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் –லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் 11வது கட்சிப் பேராயத்தில் சிபிஐ தேசியக் குழு செயலாளர் பல்லப் சென்குப்தா வழங்கிய வாழ்த்துரை:

            முதற்கண், எனது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக உங்கள் கட்சிப் பேராயத்திற்கு ஒத்துழைப்பையும் மிகுந்த தோழமை வாழ்த்துகளையும் கூறுவதில் மகிழ்ச்சி. பேராயத்தின் தொடக்க அமர்வுக்குச் சிபிஐ சார்பாக என்னை அழைத்ததற்கு நன்றி, இங்கே குழுமியுள்ள பிற இடதுசாரி கட்சி தலைவர்கள், சகோதரப் பிரதிநிதிகள், அறிஞர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது வாழ்த்துகள்.

            நண்பர்களே, வரலாற்றுச் சிறப்பு மிக்க பீகார் மண்ணில் சிபிஐ (எம்எல்) விடுதலை கட்சிப் பேராயத்திற்காக நாம் இங்கே கூடியுள்ளோம். இந்த மண் உயர்கல்விக்கான மிக மூத்த புராதன கல்வி நிறுவனங்கள் செயல்பட்ட இடம், குறிப்பாக அவை இந்திய சிந்தனை மரபின் மிக முற்போக்கான பிரிவுகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களித்தவை. நவீன காலங்களிலும், பீகாரும் அதன் மக்களும் அரசியல் ரீதியிலும் அறிவார்ந்த வகையிலும் தனித்துவமான இடத்தைப் பெற்றவை. இந்த மண், சகஜானந்த சரஸ்வதி, கார்யானந்த் சர்மா, சுனில் முகர்ஜி, சதுரானன் மிஸ்ரா, போகேந்திர ஜா, கணேஷ் சங்கர் வித்யார்த்தி மற்றும் வினோத் மிஸ்ரா முதலான கம்யூனிஸ்ட் பேராளுமைத் தலைவர்களின் கடும் உழைப்பையும் தியாகங்களையும் சந்தித்தது. அன்றும் இன்றும் செங்கொடிக்குச் சொந்தமான இம்மண், சாதியம் ஆணாதிக்கம், மற்றும் நில உடைமையாளர்களுக்கு எதிரான போராட்டங்களில் உறுதியான தலைமை, ஊக்கம் மற்றும் நம்பிக்கைகளை வழங்கியது. கம்யூனிசக் கொள்கை வளர்ச்சிக்காக இம்மண்ணை நம் தோழர்களின் குருதியாலும் வியர்வையாலும் செழுமைப்படுத்திய தியாகிகளுக்கு என் செவ்வணக்கம்!

            உலக வரலாற்றில் ஒரு முக்கிய காலகட்டத்தில் நடைபெறும் உங்கள் பேராயம் தீவிர முக்கியத்துவம் பெறுகிறது. மனிதகுலம் இன்று மோதும் தலையாய பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டிய எப்போதுமில்லாத அவசரத்தில் நாம் சூழப்பட்டுள்ளோம். முதலாளித்துவ லாபத் தேடல் மற்றும் அதிகாரம், செல்வாக்கிற்கு ஆலாய்ப் பறக்கும் ஏகாதிபத்தியப் பேராசையால், சர்வதேசிய சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏகாதிபத்தியத்தின் கருவியான பாசிசம் மீண்டும் தலையெடுத்து, அதன் ஆழமான வேர்களைத் தேட முயற்சிக்கிறது. உலக அமைதியும் சமூக நீதியும் ஆபத்தில் உள்ளன. நாடுகளின் தேசிய இறையாண்மை அரிக்கப்பட்டு, முதலாளித்துவ இணைப்பு நிகழ்முறையில் அச்சுறுத்தப்படுகின்றன. சுற்றுச்சூழலியல் சீர்கேடு அபாயகரமான அளவில் பேரழிவாக உருவெடுத்துள்ளது. உலகம் ஆபத்தான பாதைகளின் சந்திப்பில் நிற்கிறது.

     இந்த உலகச் சூழலில் சிபிஐ (எம்எல்) விடுதலைக் கட்சியின் 11வது கட்சிப் பேராயம் நடைபெறுவது இந்திய அரசியல் வாழ்வில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

    இந்திய வரலாற்றின் இக்கட்டான முக்கிய காலகட்டத்தில் உங்கள் கட்சிப் பேராயம் நடைபெறுகிறது. நமது விடுதலை இயக்கமும், அரசியலமைப்புச் சட்டமும் அடைய விரும்பிய ஒவ்வொன்றிற்கு எதிராகவும் நின்ற சக்திகளால், ஏறத்தாழ கடந்த ஒன்பது ஆண்டுகளாக, நமது மதசார்பற்ற சோஷலிச ஜனநாயகக் குடியரசு முற்றுகையிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் போன்ற சட்டமியற்றும் அமைப்புகள் வழக்கொழிந்து வருகின்றன, நீதித்துறை சுதந்திரம் அச்சுறுத்தலில் உள்ளது. குடியரசின் மதசார்பற்ற நற்சான்று அடையாளங்கள் காவிப் பெரும்பான்மைவாதத்தால் களங்கப்படுத்தப்பட்டு நிற்பதுடன், முழுச் சூழ்நிலையும் வெறுப்பு மற்றும் சகிப்புத் தன்மையின்மை என்ற துர்நாற்றம் வீசுகிறது. எனினும், குறுகிய மனப்பான்மையுள்ள பிளவுபடுத்தும் இச்சக்திகளின் எழுச்சி, எதிர்த்துத் தட்டிக் கேட்கப்படாமல் போகாது; எனவேதான் ஆர்எஸ்எஸ் –பாஜக தீய திட்டங்களை எதிர்க்க இன்று அனைத்துச் சமூகப் பிரிவுகளும் வீதிகளில் இறங்கிப் போராடி வருகிறார்கள்.

       உலகளாவிய பொருளாதாரத்தில் 2008 –09 கீழ்நோக்கி உருகி நிலை குலைந்து போன

பிறகு வலதுசாரி அதிகாரமயத்தின் எழுச்சியை உலகு தழுவிய நிகழ்வாகப் பார்க்கலாம். வலது அல்லது அதிதீவிர வலது ஆகிய இந்தச் சக்திகள் மோதல்களை உருவாக்கி, தேசிய இனங்கள், மதம், ஜாதி, இனம் என்ற அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துகின்றனர்.

        அன்பான தோழர்களே, நமது நாட்டில் மோடி அரசு நாட்டின் 75வது சுதந்திரநாளை ‘அமிர்த காலம்’ என்ற கதையாடலுக்காகத் தீவிரமாகத் திட்டங்களைத் திணிக்கிறது. எனினும் இவ்வளவு காலத்திற்குப் பிறகும் ஏழ்மையும் மிக அதிகமாகச் சமத்துவமின்மையும் நாட்டில் தொடர்கிறது. நரேந்திர மோடி வழிகாட்டலில் நாடு கடந்த ஒன்பது ஆண்டுகளில் அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும் பின்னடைந்துள்ளது. கோவிட் 19 நெருக்கடி புதிய தாராளமய வளர்ச்சி மாடலில் உள்ள குறைபாடுகளை முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளது. லட்சோப லட்சம் மக்கள் அழிந்தனர். ஆனால் இத்தோல்விக்குப் பொறுப்வானவர்கள் யார் என எதிர்த்துக் கேள்வி கேட்வர்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறார்கள், கொடூரமான சட்டங்கள் மூலம் மிரட்டப்படுகிறார்கள். அதற்கு வருமான வரி இலாக்கா, மத்திய புலனாய்வு அமைப்பு சிபிஐ, மற்றும் அமலாக்கத் துறை போன்றவற்றின் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.

       மக்களுக்கு எதிராக ஒன்றிய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பல. பண வீக்கத்தின் கீழ் மக்கள் உழல்கிறார்கள், ஆனால் அரசு அவர்களின் நண்பர்கள் செல்வத்தைக் குவிப்பதற்காக மும்முரமாக ஈடுபட்டுள்ளது. நாட்டின் பொதுக் கல்வி முறையை புதிய கல்விக் கொள்கை அச்சுறுத்துகிறது, ஆனால் அரசு பணக்காரர்களுக்காக அயல்நாட்டு கல்வி நிறுவனங்களை வரவேற்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் க்ரோனி முதலாளித்துவத்துவத்திற்குக் காவு கொடுக்கப்பட்டு, தன்னிறைவு மற்றும் சமூக நீதி கருத்துகள் தோற்கடிக்கப்படுகின்றன. அதானி என்ற பெயரே க்ரோனி கேப்பிடலிசத்திற்கு மாற்றுப் பெயராக மாறி இருக்கிறது. சமத்துவ உணர்வுடைய இந்தியா என்ற கருத்தாக்க மாளிகையிலிருந்து ஒவ்வொரு செங்கல்லாக உருவப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது.

    ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் நடக்கும் அரசு, சிறுபான்மையினரை வெளிப்படையாகப் பாகுபடுத்தி நடத்துவதுடன், அவர்கள் மீது வெறுப்பையும் திட்டமிட்டு ஏற்படுத்துகிறது. மனுவாதி ஆர்எஸ்எஸ் அரசு ஆட்சியில் தலித்கள் மீதான தாக்குதல்கள் பல மடங்காக அதிகரித்துள்ளது. நமது அரசியல் அமைப்புச் சட்டம் ஷெல்யூல்டு 5ம் பாகத்தில் பழங்குடி இன

மக்களுக்களித்த உரிமைகளை மறுக்கிறது. (அவர்களுக்கான இடம் என வகைப்படுத்தப்பட்டு அந்த நிலத்தை மற்றவர்கள் வாங்குவதைத் தடை செய்வதே ஷெல்யூல்டு 5ன் 1996 PESA சட்டம்) ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆணாதிக்க மனப்பான்மையைப் பின்பற்றும் அவர்கள்,  பெண்களிடம் வீட்டிலேயே அடைந்து கிடக்கக் கூறுகிறார்கள். சமூகத்தின் பல பிரிவினர்கள் சம்பந்தமான பிரச்சனைகளைக் கடுமையாக்கும் ஆர்எஸ்எஸ் மற்றும் அவர்களின் சமூக ரீதியான திட்டம் நாட்டைப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னே இழுத்துச் செல்வதேயாகும். அனைவரையும் உள்இணைக்கும் விடுதலைப் போராட்டத்தின் பண்பை இல்லாது ஆக்கவும் இந்திய தேசியம் என்பதை மறுவரையறை செய்யவும் அவர்கள் கடந்த காலத்தின் மீது உக்ரமாகப் போர் நடத்துகிறார்கள்.

      அன்புள்ள தோழர்களே, உங்க அரசியல் தீர்மான வரைவறிக்கைப் படித்தேன், தற்போதைய ஆளும் ஆட்சியைக் குறித்து உங்களுடைய பரிசீலனை மதிப்பீடுகளுடன் நான் முழுமையாக உடன்படுகிறேன். ஆனால் தற்போது நம்முன் உள்ள கேள்வி, எப்படி இந்த வகுப்புவாதப் பாசிச சக்திகளை ஆட்சியிலிருந்து அகற்றி நமது மதசார்பற்ற ஜனநாயக (நாடாளுமன்ற ஆட்சி) அரசியலைக் காப்பாற்றப் போகிறோம் என்பதுதான்.

      நல்லது, கடந்த சில ஆண்டுகளாக இடதுசாரி கட்சிகளுக்குள் புரிதல் வலிமைப்பட்டு வருகிறது, ஒன்றுபட்ட பல செயற்பாடுகள் மேலெடுக்கப்படுகின்றன, ஆனால் அவை போதாது. அதிகாரத்திலிருந்து ஆர்எஸ்எஸ் –பாஜக கூட்டை விரட்ட, அதைத் தாண்டி நாம் மேலே செல்ல செல்ல வேண்டும்.

       மீபத்தில் விஜயவாடாவில் நிறைவடைந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது கட்சிப் பேராயத்தில் இந்த முக்கியமான பிரச்சனை விவாதிக்கப்பட்டு, பின்வரும் முடிவுக்கு வந்தது: “…

இந்தச் சூழலில் அவசரமான தேவை – மத்தியிலும மாநிலங்களிலும் உள்ள பாஜக ஆட்சிக்கு மாற்றாக மதசார்பற்ற ஜனநாயக மாற்றை வளர்த்தெடுப்பதற்காக -- அனைத்து மதசார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி சக்திகளின் ஆகப் பரந்துபட்ட கூட்டணியை ஒன்று திரட்டி அமைப்பதாகும்.

  இந்த இலக்கை நனவாக்க இடதுசாரி சக்திகளை அணிதிரட்டி ஒன்றிணைப்பதும், வீரம் செறிந்த மக்கள் இயக்க நடவடிக்கைகளை நடத்துவதே தீர்மானகரமான முக்கியத்துவம் உடையது. (அப்போது) ஜனநாயக, மதசார்பற்ற, தேசபக்த சக்திகளை அத்தகைய மாற்று அணியின்பால் ஈர்க்க முடியும். அத்தகைய பரந்துபட்ட மாற்று அணி, வகுப்புவாத பாசிச சக்திகள் ஆட்சியில் தொடர வேண்டி தங்களின் விஷம் தோய்ந்த திட்டங்களுடன் சமூகத்தை ஊடுறுவச் செய்யும் முயற்சிகளை, முறியடிக்க வல்லது.”

     இந்தப் பின்னணியில் கம்யூனிஸ்ட் ஒற்றுமை மற்றும் இறுதியில் கோட்பாட்டு அடிப்படையில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் மீண்டும் ஐக்கியமாதல் குறித்த கேள்வி - --இந்திய அரசியலில் வலிமையான, சுதந்திர இடதுசாரி தூணைக் கட்டியெழுப்புவதற்கான-- காலத்தின் கோரிக்கை என நாங்கள் நிச்சயம் நம்புகிறோம்.

            தோழர்களே, நண்பர்களே! இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்ஸிய –லெனினிய) விடுதலைக்


கட்சியின் 11வது கட்சிப் பேராயம் நிச்சயமாக அமைப்பை வலிமையாக்கும், இடதுசாரி, மதசார்பற்ற, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமைக்குப் பங்களிப்புச் செய்யும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தச் செய்திகளுடன் சிபிஐ (எம்எல்) விடுதலை கட்சியின் 11வது கட்சிப் பேராயம் அனைத்து வெற்றிகளையும் பெற நான் வாழ்த்துகிறேன். 
செவ்வணக்கம்!

             மார்க்ஸியம் லெனினியம்  என்றும் வாழ்க! இடதுசாரி ஒற்றுமை நீடு வாழ்க!

--நன்றி : நியூஏஜ் (பிப்.26 –மார்ச் 4)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

              

 

 

No comments:

Post a Comment