Monday 10 April 2023

சுகாதார உரிமையை அடிப்படை உரிமையாகப் பிரகடனம் செய்க!

 

                                                

                   
சுகாதார உரிமையை அடிப்படை உரிமையாகப் பிரகடனம் செய்க!

--டாக்டர் அருண் மித்ரா

        இராஜஸ்தான் சட்டமன்றம் நிறைவேற்றிய சுகாதார உரிமை மசோதா, நீண்ட காலமாகச் சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகள் வற்புறுத்திய கோரிக்கையும் குடிமக்களின் தேவையுமாகும், வெகு தாமதமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் இராஜஸ்தானில் வசிப்பவர்களுக்கு

இலவச சுகாதாரப் பராமரிப்பு உரிமையை வழங்குகிறது. சுகாதார உரிமை இவ்வாறு நியாயபூர்வமானதாக ஆகி இருப்பதுடன், சட்டத்தின் பார்வையில் அரசைப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பில் வைத்துள்ளது. ஊட்டச் சத்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிவுநீர் அகற்றல் வசதிகள் முதலியவற்றின் மூலம் மக்களுக்கான சுகாதாரப் பராமரிப்பை உறுதிப்படுத்தும் கடமைப் பொறுப்பை   இச்சட்டம் பிரதானமாக அரசின் மீது சுமத்தியுள்ளது. நோயாளிகள் பொதுசுகாதாரக் கட்டமைப்புகளில் வெளிப்புற நோயாளியாகவோ அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவராகவோ -- கட்டணம் ஏதுமின்றி—இந்த வசதியைப் பெறுவதற்கு இச்சட்டம் வகை செய்துள்ளது.

      நமது நாட்டில் பெரும் பகுதி முக்கியமான சுகாதாரப் பராமரிப்பு வசதிகள் தனியார் துறையில் வளர்ச்சி பெற்றுள்ளதால், இச்சட்டம் தேவையானவர்களுக்கும் மற்றும் ஒரு மனிதன் அவசர நிலையில், கட்டணத்தைக் கட்ட முடியாத நிலையிலும் நிலையிலும்கூட

அவசரகால மருத்துவ வசதியை வழங்குவதில் தனியார் பிரிவையும்கூட ஈடுபடுத்துகிறது. (இதனால்) இராஜஸ்தான் மருத்துவர்கள் இச்சட்டத்திற்கு எதிராகப் போராடி வந்தார்கள். அதைப் பரிசீலித்த மாநில அரசு, மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று, 50 படுகை வசதிகளுக்குக் குறைவாக உள்ள தனியார் மருத்துவ மனைகள் மற்றும் அரசிடமிருந்து எந்த மானிய உதவிகளையும் பெறாத மருத்துவமனைகளையும் இச்சட்ட வரம்பிலிருந்து விலக்கி உள்ளது.

      இராஜஸ்தான் வழிகாட்டியுள்ளது; ஒன்றிய அரசின் மட்டத்திலும் இத்தகைய சட்டம் நிறைவேற்றப்படுவதும் சுகாதாரத்தை அடிப்படை உரிமையாகப் பிரகடனப்படுத்துவதும் தற்போது முக்கியமாகியுள்ளது.

சுகாதார உரிமையின் தேவை

            இது மிக முக்கியமானது, ஏனெனில் நமது நாட்டின் ஒட்டுமொத்த சுகாதாரப் பராமரிப்புத் தரத்தின் மதிப்பீடு பற்றிய குறியீட்டு எண்கள் படு மோசமாக உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் மக்கள் தொகையில் 36.11 நபர்கள் காச நோயால் மரணம் அடைகின்றனர்; (1) பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகள், மூளை அழற்சி, வ்யிற்றுப் போக்கு (டயேரியா), மலேரியா மற்றும் பல பிற தொற்றும் நோய்களுக்குப் பலியாவது ஆழ்ந்த கவலைக்கு உரியது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட குழப்பங்களை, பீதிகளைச் சொல்லத் தேவை இல்லை –அப்போது நாம் பல்லாயிரக் கணக்கான சாவுகளைத் தடுக்கத் தவறிவிட்டோம், தவறான நிர்வாகக் கையாளல் மற்றும் கோணலான நமது முன்னுரிமைகளே அதற்குக் காரணம். தொற்றிப் பரவாத நோய்களும் கூட அதிகரித்தபடி உள்ளன. 29.8 சதவீத இந்தியர்கள் உயர் இரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உலகத்தில் மிக விரைவில் இந்தியா நீரழிவு நோயின் தலைநகராகக் கூடும்.

உச்சநீதி மன்றத்தின் பார்வையில்

            ஓர் அவசர சூழ்நிலையில், பணம் இல்லாதது அன்றி, சில தொழில்நுட்ப நடைமுறைகள் காரணமாகவும் ஒருவருக்கு மருத்துவச் சிகிச்சை மறுக்கப்படுவது மிகவும் துரதிருஷ்டமானது. இது ஒப்புக்கொள்ள முடியாததும், மனித அடிப்படை உரிமையான உயிர்வாழும் உரிமையை முற்றாக மீறியதும் ஆகும். வெகுகாலம் முன்பு 1989லேயே நமது உச்சநீதிமன்றம் பரமானந்த கடாரா எதிர் இந்திய ஒன்றிய அரசு வழக்கில் (வழக்கு எண் AIR 1989 SC 2039) பின்வரும் கருத்தைக் கூறியது: ‘விபத்துகள் 

நிகழும்போது, பாதிக்கப்பட்டவர்கள் அருகில் இருக்கக் கூடிய மருத்துவ மனை அல்லது மருத்துவத் தொழில் செய்பவரிடம் எடுத்துச் செல்கையில், மிகச் சரியாகக் கூறுவதெனில், அந்த விபத்து  ஒரு மருத்துவ –சட்ட சம்பந்தமுடைய வழக்கு என்று காரணம் கூறி, தேவையான அவசர மருத்துவச் சிகிச்சை அளிக்க மறுத்துக் காயமடைந்தவர்களை அரசு மருத்துவ மனைக்குச் செல்லுமாறு சொல்லப்படுகிறார்கள்.’ மருத்துவ மனைகளுக்கும் மருத்துவர்களுக்கும் அவசர மருத்துவப் பராமரிப்பை வழங்குவதைக் கட்டாயம் ஆக்க வேண்டிய தேவையை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. சிகிச்சை மறுக்கப்பட்டதற்கு இது மட்டுமே காரணம் அல்ல என்ற உச்சநீதிமன்றம் மேலும் கூறியது, ‘சில நேரங்களில் அவசரச் சிகிச்சைக்காக அப்படி வருபவர்கள் உடனடியாகப் பணத்தைக் கட்டமுடியாத நிலையில் இருப்பார்கள் அல்லது, அவர்களிடம் மருத்துவக் காப்பீடு இராது அல்லது, மருத்துவச் செலவைத் திரும்ப அவர்களுக்கு வழங்கும் எந்தத் திட்டத்தின் கீழும் அவர்கள் உறுப்பினராக இல்லாது இருப்பார்கள்.’ (2)

சுகாதாரக் கமிட்டி மற்றும் WHO பிரகடனம்

       மேலே சொல்லப்பட்ட தகவல்களைச் சுகாதார விஷயங்களுக்குப் பொறுப்பானவர்கள் நன்கு அறிந்திருந்தும், அனைத்துக் குடிமக்களுக்கும் சுகாதார வசதிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதில் நாம் தோல்வி அடைந்து

உள்ளோம். (இந்தியாவின் சுகாதார நிலையை ஆராய பிரிட்டிஷ் இந்திய அரசு 1943ல் வளர்ச்சிக் குழுவின் சார்பில் சர்வே நடத்த அமைத்த) ஜோஸப் வில்லியம் போர் கமிட்டியின் அறிக்கை வெகுகாலம் முன்பு 1946லேயே ஒரு நபரின் கட்டணம் செலுத்தும் தகுதியைப் பாராமல் அனைத்துக் குடிமக்களுக்கும் சமமான மருத்துவ வசதியை உறுதிப்படுத்துவது தேவை என்று சிபார்சு செய்துள்ளது.

  மேலும் உலகளாவிய 1978 அல்மா ஆட்டா பிரகடனத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. அதன் மூலம் நமது இந்திய நாடு 2000 ஆண்டிற்குள் அனைவருக்கும் சுகாதாரத்தை  உறுதிப்படுத்த  உறுதி  மொழிந்த  கடப்பாடு  உள்ளது.   ஆனால்  அதில்  நாம் தோல்வி அடைந்துள்ளோம்.

(அல்மா ஆட்டா பிரகடனம் என்பது 1978ஆம் ஆண்டில் கசகஸ்தானில் அல்மா ஆட்டா எனும் இடத்தில் நடந்த மாநாட்டில் உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரகடனமாகும். இது, ஆரம்ப சுகாதார கவனிப்பு அல்லது முதல்நிலை சுகாதார கவனிப்பை மேம்படுத்துவதன் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அனைத்துலகப் பிரகடனம் ஆகும்.)

கழுத்தை நெரிக்கும் மருத்துவச் செலவு

        தற்போது 75 சதவீத சுகாதாரப் பராமரிப்புச் செலவீனங்களை வீடுகளில் இருப்போர் தங்கள் சொந்த சேமிப்பிலிருந்தே செய்கிறார்கள். (சுகாதார வசதிகளைப் பெறுகின்ற தருணத்தில் மக்கள் நேரடியாகப் பணம் செலத்த வேண்டிய கட்டாய நிலையில் அவர்கள் செய்யும் செலவை ‘அவுட்–ஆப்—பாக்கெட் எக்ஸ்பென்டிசர்’ என்பர்.) இதனால் ஒவ்வொரு ஆண்டும் 6 கோடியே 30 லட்சம் இந்திய மக்கள் ஏழ்மையில் தள்ளப்படுகிறார்கள் என்ற உண்மையை ஹெல்த் பாலிசி 2017 ஒப்புக் கொண்டுள்ளது. அழிவேற்படுத்தும் இம்மருத்துவச் செலவு ஏழ்மைக்கு முக்கியமான காரணம் என்பது மட்டுமல்ல, அது மேலும் உடல்நலக் குறைவுடையவர்களின் எண்ணிக்கையைக் கூட்டுகிறது. பொது சுகாதாரத்திற்காக நமது அரசு செலவிடுவது உலகிலேயே மிகக் குறைவானது. உலகச் சுகாதார அமைப்பு (WHO) அரசுகள் சுகாதாரத்திற்காகக் குறைந்தபட்சம் 5 சதவீதம் செலவிட பரிந்துரை செய்துள்ள நிலையில், நமது நாடோ ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபியில் வெறும் 1.1 சதவீதமே செலவிடுகிறது.

தவறான தீர்வு

            நம்முடைய தேவையும் எதிர்பார்ப்பும் இவ்வாறு இருப்பதற்கு மாறாக, சுகாதார வசதிகள் விஷயமாக நமது அரசின் அணுகுமுறையில் அடிப்படை மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேசியச் சுகாதாரக் கொள்கை 2017 நாட்டின் சுகாதார நிலைமை குறித்துக் கவலை தெரிவித்தாலும், அதற்கு அவர்கள் தரும் தீர்வு  இன்ஷூரன்ஸ் அடிப்படையிலான மருத்துவப் பராமரிப்பு என்பதே. (அதாவது, அரசே சுகாதாரத்தைக் கவனித்துக் கொள்வது அல்ல.) தற்போதைய காப்பீடு அடிப்படையிலான திட்டங்கள் மருத்துவமனை உள்சிகிச்சைகளுக்கு மட்டுமே பொருந்துகிறது. ஆனால் 67 சதவீதமான மருத்துவச் செலவுகள் ஓபிடி கவனிப்பு என்னும் வெளிப்புற சிகிச்சை செலவுகளால் நேரிடுகிறது. மருத்துவப் பராபரிப்பு சிஸ்டத்தில் கார்ப்பரேட் பிரிவு நுழைவால், மருத்துவப் பராமரிப்பு ஒரு சமூகப் பொறுப்பு என்பதற்கு மாறாக, ஒரு வணிகமாகிவிட்டது. மேலும் அரசின் எந்தக் காப்பீடு திட்டங்களின் கீழும் வராதவர்கள், பெருந்தொகையைக் காப்பீட்டிற்காக ஒதுக்க வேண்டிய நிர்பந்தம். இதில் மூத்த குடிமக்களே மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள். அரசின் தேசியச் சுகாதாரக் கொள்கையின் தீர்வான காப்பீடு அடிப்படையிலான திட்டம் உண்மையில் பொதுப் பணத்தைக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வாரி வழங்குவதாக மாறியுள்ளது.

சுகாதார உரிமையும் நமது அரசியலமைப்புச் சட்டமும்

    சுகாதாரம், 1966லேயே மனித உரிமையாக அங்கீகரிக்கப்பட்டு விட்டது. முன்பிருந்த சோவியத் யூனியன் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதாரத்தை உரிமையாகவும், அரசின் பொறுப்பாகவும் 1936ல் பிரகடனப்படுத்தியது. பிரிட்டிஷ் அரசு அதே போன்ற நடவடிக்கை எடுத்து 1948ல் ‘தேசியச் சுகாதாரச் சேவை’ (நேஷனல் ஹெல்த் சர்வீஸ்) என்ற அமைப்பை நிறுவியது. ஆனால் முரண்பாடாக (பல உரிமைகளை வழங்கிய) இந்திய அரசியலமைப்புச் சட்டம், அடிப்படை சுகாதார உரிமைக்கான உத்தரவாதத்தை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. எனினும்,

மக்களின் ஆரோக்கிய நலனுக்கான அரசின் பொறுப்பைச் சுட்டிக் காட்டும் பல குறிப்புகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாகம் 4ல் வழிகாட்டு நெறி கொள்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை நிச்சயம் சுகாதார உரிமைக்கான அடிப்படையை வழங்குகின்றன. சட்ட ஷரத்து 42, நியாயமான மற்றும் மனித நேயப் பணியிடச் சூழலை ஏற்படுத்த அரசைப் பணிக்கிறது; சட்ட ஷரத்து 47 மக்களின் ஊட்டச் சத்து மற்றும் வாழ்வியல் தரத்தின் மட்டங்களை உயர்த்தி பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தும் கடமையை அரசின் மீது சுமத்துகிறது; சட்ட ஷரத்து 21 உயிர் வாழும் உரிமைக்கு உத்தரவாதமளிக்கிறது.

அடிப்படை உரிமையாக்க வற்புறுத்துவோம்

       ஆரோக்கிய, சுகாதாரப் பராமரிப்பு போன்ற ஒரு விஷயத்தைச் சந்தை சக்திகளிடம் மட்டும் விட்டுவிட முடியாது. அது, தரமான சுகாதார வசதிகளைப் பெறுவதிலிருந்து குறைந்த வருமானம் உள்ள பிரிவினர்களை மேலும் விலக்கிவிடும். ‘சமாதானம் மற்றும் வளர்ச்சிக்கான இந்திய மருத்துவர்கள்’ (IDPD) மற்றும் ‘நெறிசார்ந்த சுகாதாரப் பராமரிப்புக்கான மருத்துவர்களின் கூட்டணி’ (ADEH) போன்ற அமைப்புகள் சுகாதாரத்தை அடிப்படை உரிமையாகப் பிரகடப்படுத்தும் அத்தகைய ஒரு சட்டத்தை நீண்ட காலமாக ஒன்றிய அரசிடமிருந்து கோரிவருகிறார்கள். சுகாதாரத்தின் பாதுகாவலர்கள் என்ற முறையில் அனைத்து மருத்துவர்களும் சுகாதாரத்தை அடிப்படை உரிமையாக்கக் கோருவது பிரதானமான கடமையாகும். இது இன்னொரு வகையில் மருத்துவர்களுக்கும் மருத்துவச் சிகிச்சை பெறுபவர்களுக்கும் இடையே உள்ள நம்பிகை பற்றாக்குறையைக் குறைக்க  உதவிடும்.

      இராஜஸ்தான் மருத்துவ உரிமைச் சட்டம் அமலுக்கு வந்ததுடன், அதையே ஒன்றிய அரசும் பின்பற்றுவதற்கு இதுவே தருணம்.

--நன்றி : நியூஏஜ் (ஏப்.9 –15)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

     

     

 

No comments:

Post a Comment