Tuesday 28 February 2023

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 78 -- கேதார் தாஸ், பீகார் தொழிற்சங்கத் தலைவர்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 78


                            கேதார் தாஸ் – வலிமையான தொழிலாளர் இயக்கத்தைக் கட்டியவர்

                                                                        --அனில் ரஜீம்வாலே


        கேதார் தாஸ் என்ற பெயர் இந்திய மற்றும் பீகார் உழைக்கும் வர்க்கம் மற்றும் தொழிற் சங்க இயக்கத்துடன் பிரிக்க முடியாதபடி ஒன்றிணைந்தது. புகழ்பெற்ற 1958 ஜாம்ஷெட்பூர் போராட்ட வரலாற்றுப் பக்கங்களில் அவர் நிறைந்திருக்கிறார்.

பீகார் மாநிலத்தின் தர்பங்கா (இன்றைய மதுபானி) மாவட்டத்தின் குர்மகா (பச்சரி) கிராமத்தில் கேதார் லால் தாஸ் கீழ்மட்ட நடுத்தர வர்க்க கிராமப்புறக் குடும்பத்தில் 1913 ஜனவரி 4ம் நாள் பிறந்தார். தந்தை ஸ்ரீஹரிநந்தன் தாஸ், தாய் திருமதி சுகவதி. அவர்களது மோசமான பொருளாதார நிலைமையால், கேதார் 1934லேயே ஜாம்ஷெட்பூரில் தனது ஒன்று விட்ட சகோதரர் ஷியாம் பெகாரி லால் தாஸ் உடன் வேலைக்குச் செல்ல நேரிட்டது. முலாம் பூசிய தகரம் தயாரிக்கும் கம்பெனியில் எழுத்தராகப் பணியாற்றினார். கேதார் மெட்ரிக் வரை மட்டுமே படித்தார்.

தொழிற் சங்க இயக்கத்தில்

        ஈயம் பூசி தகரம் தயாரிக்கும் (டின்பிளேட்டு) கம்பெனி நிர்வாகம் கடும் தொழிலாளர் விரோத அணுகுமுறை கொண்டது. புகழ்பெற்ற தொழிற்சங்கத் தலைவர் பேராசிரியர் அப்துல் பாரி என்ற காங்கிரஸ்காரருடன் கேதார் தாஸ் தொடர்பு கொண்டார். கேதார் தாஸும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அவர்களுக்கிடையேயான நெருக்கத்தில் பிளவு ஏற்படுத்த நிர்வாகம் மற்ற தொழிலாளர்களைவிட கேதாரின் ஊதியத்தை உயர்த்தியது. ஆனார் கேதார் தாஸ் அதை ஏற்க மறுத்ததால், சீற்றமடைந்த பிரிட்டிஷ் கம்பெனி நிர்வாகம் கேதார் தாஸை வேலையிலிருந்து நீக்கியது. அதன் பிறகு கேதார் தாஸ் முழு நேர தொழிற்சங்க இயக்கச் செயல்பாட்டாளர் ஆனார்.  

       பெரும் புரட்சியாளர் ஹஜரா சிங், பஞ்சாபின் ஹோஷியார்பூர் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் (உத்ரகாண்டில் கலாபாணி ஆற்றின் கரைகளின்) ‘கலாபாணி’யில் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்டு ஜாம்ஷெட்பூர் வந்தவர், தொழிலாளர்களைத் திரட்டினார். 9மாதங்கள் நீடித்த ஜாம்ஷெட்பூர் வேலைநிறுத்தம் 1939, ஜூலை-1 நிகழ்வுகளில் உச்சம் தொட்டது. வேலை நிறுத்தத்தை உடைக்கும் முயற்சிகளைத் தடுக்க ஹஜரா சிங் மற்றும் பியாரா சிங் ஆலை வாயிலின் கதவுகள் முன் படுத்தனர். கம்பெனியின் டிரக் வாகனம் அவர்கள் மீது ஏறி அவர்கள் இருவரையும் கொன்றது. அவர்கள் 1939 ஜூலை 2ல் டாடா மெயின் மருத்துவமனையில் மரணமடைந்தனர். வயர் பொருட்களைத் தயாரிக்கும் கம்பெனியில் அமைதியான மறியல் நடைபெற்றது. துயரகரமான அந்தச் சம்பவத்திற்குப் பின் கேதார் தாஸ் தனது வாழ்வைத் தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காக அர்ப்பணிக்கத் தீர்மானித்தார், அதன்படியே இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார்.

1942 இயக்கத்தில்

      1942ல் மகாத்மா காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார். அதனை ஆதரித்து நாடுமுழுவதும் நடத்தப்பட்ட தார்மிக இயக்கத்தில் கேதார் தாஸும் இணைந்தார். அதைத் தொடர்ந்து கைதாகி ஆறு மாதங்கள் சிறை தண்டனை பெற்றார். விடுதலையான பின் டின்பிளேட் தொழிலாளர்கள் சங்கத்தில் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், டாக்டர் அப்துல் பாரி சங்கத்தின் தலைவர்.

சிபிஐ கட்சியில் இணைதல்

       1943ல் கேதார் தாஸ் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். ஜாம்ஷெட்பூர் மட்டுமின்றி பீகார் முழுவதும் அவர் தீவிரமான கட்சிப் பணி ஆற்றினார்.

தொழிற்சங்க இயக்கத்தில்

      1952ல் கேதார் தாஸ் ஜாம்ஷெட்பூர் மஸ்தூர் யூனியனை நிறுவினார். அந்த அமைப்பு 1957ல் ஏஐடியுசி பேரியக்கத்தில் இணைப்புச் சங்கமானது. சுனில் முகர்ஜி மஸ்தூர் சங்கத்தின் தலைவராகவும், கேதார் தாஸ் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். டாடா நகர் ஃபௌண்ட்ரி கம்பெனி (உலோக உருக்கு மற்றும் வார்ப்பட ஆலை)யின் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் கேதார் தாஸ் தலைமையில் நடைபோட்டனர். சுரேஷ் பிரஸாத் என்ற தொழிற்சங்கச் செயல்பாட்டாளரை நிர்வாகம் வேலைநீக்கம் செய்தது. பேச்சு வார்த்தை தோல்வி அடைந்த பிறகு, கேதார் தாஸ் ஜாம்ஷெட்பூர் கோல்முரி மைதானத்தில் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தில் அமர்ந்தார். நிர்வாகம் சுரேஷை மீண்டும் பணியில் அமர்த்தும் கட்டாயம் ஏற்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க 1958 வேலைநிறுத்தம்

        ஜாம்ஷெட்பூர் மஸ்தூர் யூனியன் (JMU) 1957 --58ல் தொழிலாளர் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்தை மீண்டும் ஸ்தாபிக்கும் அற்புதமான போரைத் தலைமையேற்று நடத்தியது. மஸ்தூர் யூனியன் மிக வலிமையானது, டாடா அயர்ன் அண்ட் ஸ்டீல் கம்பெனி (TISCO)யில் மட்டும் 33ஆயிரம் தொழிலாளர்களில் 19ஆயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்களை உடையது. அடிப்படை ஊதிய மாற்றம், கிராக்கிப் படி உயர்வு மற்றும் அங்கீகாரம் கோரியது. 1957அக்டோபர் அந்தக் காலத்திலேயே முறையான பணிக் குழு (ஒர்க்ஸ் கமிட்டி), மற்றும் ஒர்க்ஸ் கமிட்டிகளில் யூனியன் பிரதிநிதிகளை அனுமதிக்கவும் தொழிலாளர் ஆணையருக்கு (லேபர் கமிஷனர்) கடிதம் எழுதியது. 15வது இந்தியத் தொழிலாளர் மாநாடு இரும்பு எஃகு ஆலைகளில் ஊதியங்களை மாற்றி அமைக்க சிபார்சு செய்தது. இது தொழிலாளர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது எனக் காட்டியது.

        ஜாம்ஷெட்பூர் மஸ்தூர் யூனியன் 1958 பிப்ரவரி 26ல் பிரதமரிடம் கோரிக்கை மனு ஒன்றைச் சமர்ப்பித்தது. எஸ்ஏ டாங்கே தலைமையில் சென்ற ஏஐடியுசி தூதுக் குழு பிரதமர் மற்றும் தொழிலாளர் அமைச்சரைச் சந்தித்தது.

          வேலை நிறுத்தம் தவிர்க்க இயலாததாயிற்று, டிஸ்கோ நிறுவனத் தொழிலாளர்கள் கேதார் தாஸ் தலைமையில் 1958 மே 12ல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர். 1200 தன்னார்வத் தொண்டர்கள் ஜெஎம்யு பேட்ஜ் அடையாளப் பட்டையுடன் முக்கியமான சேவைகளை நடத்தினர். கேதார் தாஸுடன் இந்த வேலைநிறுத்தத்த்தில் பரின் தே, அலி அம்ஜத், சத்யநாராயணா சிங், ஓ கோபாலன், ராம்அவதார் சிங் போன்ற புகழ்பெற்ற பல தலைவர்கள் கலந்து கொண்டனர். டிஸ்கோ நிர்வாகம் மே 15 தொடங்கி 400 தொழிலாளர்கள் சிலரை வேலை நீக்கம் செய்து தண்டித்தது. ஜாம்ஜெட்பூர் தொழிலாளர்கள் மே 16ல் முழுமையான வேலைநிறுத்தம் செய்து ஆதரவு தெரிவித்தனர். ஜெஎம்யு 1958 மே 2ல் தார்மிக வேலைநிறுத்தம் செய்ய அனைத்துத் தொழிலாளர்களும் காலவரையற்று வேலையை நிறுத்தினர். ஜெஎம்யு சங்க அலுவலகமான புகழ்பெற்ற சாக்ஷி* கட்டடத்திற்குள் நுழைந்த போலீஸ் அலி அம்ஜத், சத்யநாராயணா சிங் உள்ளிட்ட பிறரைக் கைது செய்தது. கேதார் தாஸ் அப்போது அங்கில்லை. கைது நடவடிக்கையைத் தொழிலாளர்கள் எதிர்க்க போலீஸ் தடியடி நடத்தியதுடன், துப்பாக்கிச் சூட்டிலும் இறங்க இரண்டு தொழிலாளர்கள் மாண்டனர்.

     [*சாக்ஷி, வடகிழக்கு இந்திய சிங்பூம் பகுதியில் இருந்த ஒரு கிராமம். அந்த இடத்தை                   ஜாம்ஷேட்ஜி டாடா தனது ஸ்டீல் சிட்டி அமைக்கும் திட்டத்திற்கான இடமாகத் தேர்வு               செய்தார். அது 1919ல் ஜாம்ஷெட்பூர் ஆனது. சாக்ஷி தற்போது ஸ்டீல் சிட்டிக்கும், முன்பு              காளிமதி என்று அழைக்கப்பட்ட சுபர்நரேகா ஆற்றிற்கும் இடையே உள்ளது.]

மே 18 தொடங்கி நிர்வாகம் பெருமளவிலான ஆத்திரமூட்டலில் ஈடுபட்டது. நகரம் முழுமையும் 1958 மே 21ல் ஹர்த்தால் போராட்டம் செய்தது. கேதார் தாஸ், அம்ஜத் அலி, பாலி தே, ஹபிபுர்

ரஹ்மான, கோபாலன், குர் பக்ஸ் சிங், கர்த்தார் சிங், சத்திய நாராயண் சிங் போன்ற பலர் மீதும் புதிதாகச் சிறப்பு வழக்குகள் புனையப்பட்டன. ஆலைகளில் வெடி வைத்து சிதறடித்தது, வெடிப்பு ஊது உலைகளை (ப்ளாஸ்ட் ஃபர்னஸ் படம்) அழித்தல், சொத்துகளைச் சூறையாடுவது முதலான சதிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டனர். சாக்ஷி சிறப்பு நீதி மன்றத்தில் 135க்கும் அதிகமான வழக்குகள் தொடுக்கப்பட்டன. கேதார் தாஸ், பரீன் தே, அம்ஜத் அலி மற்றும் ஓ கோபாலனுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

     நிர்வாகம் சில தொழிலாளர்களுக்குச் ‘சிகப்பு அட்டை’ (பிங்க் கார்டு) வழங்கத் தொடங்கியது. அந்தத் தொழிலாளர்கள் ஆலை வளாகத்திற்குள் நுழைய முடியாது என்பது அதன் பொருள். ஆனால் பிங்க் கார்டை நிர்வாகம் திரும்பப் பெற வைத்தனர் தொழிலாளர்கள். இப்போராட்டத்தில் இராணுவமும்கூட ஜாம்ஷெட்பூர் வீதிகளில் வரவழைக்கப்பட்டனர்.

     கேதார் தாஸ் தலைமறைவானார். அவரைத் தேடிக் கண்டு பிடிக்க அரசு பெருமளவில் போலீஸ் குழுக்களை அமைத்தது. அவரைக் கைது செய்ய மேஜிஸ்ட்ரேட்டுகள், ஐஜி, டிஐஜி, எஸ்பி புடைசூழ ஆயிரக் கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டனர். தொழிலாளர் அமைச்சர் வினோத் ஆனந்த் ஜா ஜாம்ஷெட்பூர் வந்தார். பல இரவுப் பொழுதுகளில் கேதார் தாஸின் உறவினர் கமலபதிதாஸ் வீடு போலீசால் சோதனையிடப்பட்டது.

இரகசியமாகச் சட்டமன்றத்தை அடைதல்

        கேதார் பாபு இரகசியமாகப் பாட்னாவின் சட்டமன்றக் கட்டடத்தை அடைந்து, தன் மீதான குற்றச்சாட்டு விவாதங்கள் மற்றும் நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பிலும் கலந்து கொள்ளத் தஞ்சம் புகுந்தார். அவர் அங்கே இருந்த இரண்டு நாட்களும் அவரது ‘தரிசன’த்தைக் காண்பதற்காக நூற்றுக் கணக்கான போலீசார் வந்தனர். மே 27 நள்ளிரவு சட்டமன்ற வளாகத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

    இதற்கு முன் இல்லாத வகையில் உழைக்கும் வர்க்கம் ஒன்று திரண்டு ஒற்றுமையை வெளிப்படுத்த, நிர்வாகமும் அரசும் அவரச அவசரமாக நடவடிக்கையில் பின்வாங்கினர். சொல்லொண்ணா அடக்குமுறைகளைச் சந்திந்த பிறகு அவர்களுடைய பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. சுமார் 800 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். பொதுத் தேர்தல்களில் அதற்குப் பழி தீர்க்க சபதம் செய்த தொழிலாளர்கள் அதைச் செய்தும் காட்டினர்.

    ஜெஎம்யு சங்கம் 1958 மே 29ல் பணிக்குத் திரும்ப அழைப்பு விடுத்தது. தொழிலாளர் குடும்பங்களுக்கான நிவாரணம் திரட்ட ஏஐடியுசி நாடுதழுவிய அறைகூவல் தந்தது.

   ஆனால் முன்னணித் தலைவர்களுக்கு எதிரான ‘ஜாம்ஷெட்பூர் சதி வழக்கு’ இழுத்தடிக்கப்பட்டு நீண்டு கொண்டே இருந்தது. 1958 ஆகஸ்ட் 5 தேதியிட்ட போலீஸ் குற்றப்பத்திரிக்கை, ‘சிபிஐ மற்றும் ஜெஎம்யு’ தலைவர்கள் கேதார் தாஸ் மற்றும் பிறர் ‘சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு அமைதியைக் குலைத்தனர்’ என்றும் வன்முறைக்குத் தூண்டி பிரச்சாரம் செய்தனர் எனவும் குற்றம் சாட்டியது. விசாரணை நடைபெற்ற சிறிய அறையில் போலீஸ் துப்பாகிகளுடன் கும்பலாகக் கூடினர். 1960 –61ம் ஆண்டில் தலைவர்களுக்குச் சிறை தண்டைனை விதிக்கப்பட்டது. கேதார் பாபு 1962 பொதுத் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. எனவே சிபிஐ சுனில் முகர்ஜியைச் சட்ட மன்றத்திற்கு வேட்பாளராக நிறுத்த முடிவு செய்தது. அவர் 7ஆயிரம் வாக்குகளுக்கு மேல் வாங்கி பிரம்மாண்டமான வெற்றி பெற்றார். சட்டமன்றத்தில் சிபிஐ 12 இடங்களை வென்றது. சிபிஐ கட்சியைச் சேர்ந்த டாக்டர் உதய்கர் மிஸ்ரா இந்தத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    டாடா தொழிலாளர்களுக்கும், நாடு முழுவதும் எஃகு ஆலை தொழிலாளர்களுக்கும் சம்பளம் உயர்த்தப்பட்டது.

தேர்தல்களில் போட்டி

    1957 தேர்தல்களில் கேதார் தாஸ் சிபிஐ வேட்பாளராகப் பீகார் சட்டமன்றத்திற்கு ஜாம்ஷெட்பூர் தொகுதியிலிருந்து போட்டியிட்டார். பேராதரவு தந்த உழைக்கும் வர்க்கம் சாதனை வாக்குகள் அளித்து அவரைச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்தனர். அவர் மீண்டும் 1969 மற்றும் 1972 தேர்தல்களிலும் வென்றார்.

      தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் போராட்டங்களைத் தொடர்ந்தார், ஜாம்ஷெட்பூர் மற்றும் பீகார் ஆலைத் தொழிலாளர்களுக்காகப் பாடுபட்டார். டெல்கோ (டாடா என்ஜினியரிங் & லோக்கமோடிவ் கம்பெனி) மற்றும் டின்பிளேட் தொழிலாளர்களுக்காக 7 நாட்கள் நீண்ட வேலைநிறுத்தத்தை 1957ல் தலைமையேற்று நடத்தினார்.

        1964ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டது. தொடர்ந்து இறுதி வரை கேதார் தாஸ் சிபிஐ கட்சியிலேயே நீடித்தார்.

மற்றுமொரு சரித்திர வேலைநிறுத்தம், 1969

      1960களில் டாடா தொழிலாளர்கள் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது. கேபிள் கம்பெனி பொது அலுவலகத்தை 1967ல் முற்றுகையிடும் போராட்டத்தைக் கேதார் தாஸ் தலைமை ஏற்று நடத்தினார். பாதுகாப்பு அலுவலர்கள் அவர்கள் மீது பிரம்படி நடத்தினர். கேதார்‘தா அவர்களைப் பாதுகாக்க ஜூவாலா சிங்கும் சலீமும் தங்கள் மீது அடிகளை வாங்கினர், இருப்பினும் கேதார்‘தா –வும் காயமடைந்தார்.

    1969ல் பொறியியல் ஊதிய போர்டு சிபார்சுகளை அமலாக்கக் கோரி ஒரு கூட்டுப் போராட்டக் குழு அமைக்கப்பட்டது. கேதார் தாஸ், டாக்டர் அகோரி மற்றும் பேராசிரியர்
பிராஜ்நந்தன் கிஷோர்
அதன் முக்கிய தலைவர்கள். 1969 நவம்பர் 17ல் டின்பிளேட் மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் உரையாற்றிய கேதார் தாஸ் பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்ததாக அறிவித்தார். அடுத்த நாள் நவம்பர் 18லிருந்து கால வரையறையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. 40ஆயிரம் தொழிலாளர்கள் 48 நாட்கள் தொடர்ச்சியாக வேலையை நிறுத்தினர்.

எஸ் ஏ டாங்கே, இந்திரஜித் குப்தா, ஜகன்நாத் சர்கார், சதுரானந்த் மிஸ்ரா, சந்திரசேகர் சிங், இராம்நாத் திவாரி, ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் (படம்) முதலிய பெரும் தலைவர்கள் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களைச் சந்தித்தனர்.

     பிரதமர் இந்திராகாந்தி தலையிட்ட பிறகே வேலைநிறுத்தம் விலக்கி கொள்ளப்பட்டது. அந்தச் செய்தி, பகவத் ஜா ஆஸாத், தொழிலாளர் துறை அமைச்சரால் அகில இந்திய ரேடியோவில் (ஏஐஆர்) அறிவிக்கப்பட்டது.

       ஜாம்ஷெட்பூர் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் கேதார் தாஸ் தலைவராகவும், திலீப் கோஷ் பொதுச் செயலாளராகவும் கொண்டு 1971 டிசம்பர் 29ல் அமைக்கப்பட்டது. எல்லா ஒப்பந்தத் தொழிலாளர்களும் நிரந்தரத் தொழிலாளர்களாக ஆவர் என்ற உடன்பாடு 1979 ஆகஸ்ட் 17ல் ஒப்புக்கொள்ளப்பட்டது. கடுமையாக நோய்வாய்ப்பட்ட கேதார் தாஸ் மருத்துவச் சிகிச்சைக்காக மாஸ்கோ சென்றார். அவர் திரும்பி வந்த பிறகே உடன்பாடு எட்டப்பட்டது. அதன் விளைவாக, 1980 ஜனவரி 14 முதல் 2600 ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரமானார்கள்.

ஏஐடியுசி மாநாடு, 1981

    ஏஐடியுசி பேரியக்கத்தின் 30வது அமர்வு ஜாம்ஷெட்பூரில் 1970 அக்டோபர் 13 முதல் நடைபெற்றது. இந்தியா முழுவதிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் 7ஆயிரம் பிரதிநிதிகளும் மற்றவர்களும் கலந்து கொண்டனர். கேதார்‘தா அதன் முன்னணி அமைப்பாளராக இருந்தார்.

ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம், 1981

        டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவன (TISCO) நிர்வாகம் 10ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நிரந்தரப் பணி வழங்க மறுத்தது. அதன் விளைவாய்

தொழிலாளர்கள் கேதார் தாஸ் தலைமையில் மின்னல் வேக அதிரடி வேலைநிறுத்தத்தில் 1981 பிப்ரவரி 11 முதல் இறங்கினர். தொழிலாளர் ஆணையர் முன்முயற்சியில் கூட்டப்பட்ட முத்தரப்பு பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்ள நிர்வாகம் மறுத்து விட்டது. எனவே கேதார் தாஸ் தலைமையில் 1981 பிப்ரவரி 15ல் தொழிலாளர்கள் பாரி மைதானத்திலிருந்து மாபெரும் ஊர்வலமாகச் சென்றனர். பிரம்படியும் கல்வீச்சும் தொடர, அதில் கேதார் தாஸ் காயமடைந்தார். பிப்ரவரி 18ல் நடைபெற்ற கூட்டத்தில் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார். அந்த அறிவிப்புத் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்க வேண்டாம் என ஒவ்வொருவரும் அவரைக் கேட்டுக் கொண்டாலும், அவர் தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

            1981 பிப்ரவரி 19ல் முகம் மழித்துக் கொண்டிருந்தபோது அவர் திடீரென்று கீழே விழுந்தார், மூளைக்குள் இரத்தக் கசிவால் பாதிக்கப்பட்டார். அதே நாள் 1981 பிப்ரவரி 19ல் அவர் தமது 71வது வயதில் மரணமடைந்தார். அவரது புகழுடம்பு சிபிஐ அலுவலகத்திற்கு எடுத்து வரப்பட்டது. பிப்ரவரி 20ல் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்க அவரது இறுதி ஊர்வலம் நடந்தது.

      டிஸ்கோ ஆலையின் ஊது உலை (ப்ளாஸ்ட் ஃபர்னஸ்) அதன் இயங்கு காலத்தில் மூன்று முறைதான் நிறுத்தப்பட்டது; 1948ல் பாபுஜி மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட போழ்தும், 1958 மற்றும் 1981 போராட்டங்களின் போழ்து மட்டுமே –அந்த இரண்டு போராட்டங்களும் கேதார் பாபு தலைமை ஏற்று நடத்தியவை.

     கேதார் தாஸ் தமது அன்றாட வாழ்வில் மிக எளிமையாக, அளந்து சிக்கனமாகச் செலவு செய்பவராக, மென்மையான குறைவான பேச்சு -- எனினும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தவல்ல பேச்சுக்குச் சொந்தக்காரராகவும் இருந்தார். மிகப் பெரும் பலன் அளிக்கும் அந்தத் திறனை -- கேதார் தாஸ், பாரின் தே, அலி அம்ஜத், டாக்டர் உதய்கர் மிஸ்ரா, ஓ கோபாலன் மற்றும் பிற தலைவர்கள் நிறைந்த வான்பரப்பின் -- ஆற்றல்மிகு தொழிலாளர் வர்க்கத் தலைமை வழங்கியது. எளிமையும் சிக்கனமும் மிகுந்த முன்னுதாரணக் கம்யூனிஸ்ட் வார்ப்பில், கேதார் தாஸ் அல்லது கேதார் பாபு எளிமையாக உடுத்துவார், சிறிதளவே உண்பார். பேசுவதும் குறைவுதான், ஆனால் அவர் பேசினால் மக்கள் காது கொடுத்துக் கேட்டனர்.

      கேதார் தாஸைத் தீவிரமாகப் பின்பற்றுபவரான பாரிதோஷ் பட்டாசாரியா “மோடிஃப்” என்ற கலை வடிவத்தில் ஒரு முன்னணி வார இதழில் (‘அவந்த் கார்டே’ முன்னணி என்பதற்கான பிரெஞ்ச் வார்த்தை)  எழுதினார்: “சுழன்றடிக்கும் பேய்க்காற்றின்போது மக்களுடன் இருப்பது

வாழையடி வாழையாய் மரபுவழி வந்த ஒரு தொடர்ச்சி, பூமிப் பந்தின் எல்லா இடத்தும், ஒவ்வொருவருக்கும், மகிழ்ச்சியான மேன்மையான வாழ்வை உறுதி செய்ய கேதார் தாஸ் போன்ற சுயநலமற்ற மனிதர்களால் புதுப்பிக்கப்பட்டு வருகிறது”. அந்தக் கட்டுரையில் பட்டாசாரியா, இரண்டாம் உலகப் போரின்போது நாஜி துப்பாக்கிப் படைக்குழுவால்  சுட்டுக் கொல்லப்பட்ட இளம் பல்கேரிய கவிஞர் நிக்கோலாய் வாப்ட்ஸரௌவ் (Nikolai Vuptsarov படம்) எழுதிய குறுங் கவிதையைத் தான் மிகவும் நேசித்த, இப்போது அந்த நேசத்திற்குரிய கேதார் தாஸை இழந்து தவிக்கும் பெருந்தவிப்போடு அக்கவிதையை மீண்டும் உயிர்ப்பித்து அவருக்கு அர்ப்பணித்துப் பாடினார்:

“துப்பாக்கிப் படைக்குப் பின்பு, புழு பூச்சிகள்,

அப்படித்தான் செல்கிறது வாழ்க்கை,

ஆனால் அந்தப் புயலுக்கு மத்தியில் உங்களுடன் நான் இருப்பேன்,

எனது மக்களே, நான் உங்களை அப்படி நேசிக்கிறேன்!”

கேதார்‘தா என்றும் வாழ்வார்!!

--நன்றி: நியூஏஜ் (ஜன.8 –14)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

பின் இணைப்பு

    வாப்ட்ஸரௌவ் 1942ல் கைது செய்யப்பட்டார். மனிதத்தன்மையற்ற கொடூரங்களுக்கு ஆட்படுத்தப்பட்டு இறுதியில் 1942 ஜூலை 23ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடைசி அந்த நேரம் வரை அவர் தொடர்ந்து எழுதினார். உண்மைதான், தனது மனைவியை விளித்து அவர் எழுதிய கடைசி கவிதை, உணர்ச்சிகளால் நெகிழச் செய்வது, ஊக்கமளிப்பது:

            போர் கடுமையாக, இரக்கமற்று இருந்தது

            காவியப் போர் என அவர்கள் கூறுவர்

            நான் வீழ்ந்தேன். எனது இடத்தில் மற்றொருவர் வந்தார்

            ஏன் ஒரு பெயரைத் தனித்துக் கூற வேண்டும்?

 

துப்பாக்கிப் படைக்குப் பின்னே -- புழு பூச்சிகள்.

அப்படித்தான் செல்கிறது வாழ்க்கை.

ஆனால் அந்தப் புயலுக்கு மத்தியில்

 நாங்கள் உங்களுடன் இருப்போம்,

எனது மக்களே, நாங்கள்

உங்களை அவ்வளவு நேசிக்கிறோம்!”

மதியம் 2 00மணி, 1942 ஜூலை 23

 

 

 

 

 

 

No comments:

Post a Comment