Tuesday 21 February 2023

இந்தியாவின் ஜிடிபி மற்றும் மனித வளர்ச்சிக் குறியீட்டின் போக்கு

 

                                  இந்தியாவின் ஜிடிபி மற்றும் மனித வளர்ச்சிக் குறியீட்டின் போக்கு

                                                                        --வஹிதா நிஜாம்

ஏஐடியுசி தேசியச் செயலாளர்

அரசியல் ரீதியில் 2023ம் ஆண்டு முக்கியமானது, அது 2024 பொதுத் தேர்தலுக்கான களத்தை அமைக்கும். வாக்குகளைத் துருவங்களாகப் பிளவுபடுத்த பாஜக நெறியற்ற எதனையும் செய்யத் துணிந்தது என்பது அறிந்ததே. பொருளாதாரத்தைப் பொருத்த அளவில் அதனைக் கையாள்வதில் அக்கட்சியின் செயல்பாடு மோசமான மதிப்பெண் பெற்றது. தனது தோல்விகளைத் தரை விரிப்பில் மூடிமறைக்கும் கதையாடல்களைக் கட்டியமைப்பதில் அது பலே கில்லாடி. கோவிட் பெருந்தொற்றின் பாதிப்பிலிருந்து இந்தியப் பொருளாதாரம் முழுமையாக மீண்டு விட்டதாகக் கூறும் 2023 –24ம் ஆண்டிற்கான பொருளாதார சர்வே, அதன் வளர்ச்சி 2023 –24ம் ஆண்டில் 6லிருந்து 6.8 சதவீதமாக எதிர்பார்க்கிறது.

        நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மீண்டும் ஒருமுறை உற்சாகமற்ற உதவாக்கரை வெற்று பட்ஜெட்டைச் சமர்பித்துள்ளார். கடந்த எட்டாண்டுகள் ஆட்சியின்போது பாஜக எடுத்த நடவடிக்கைகளின் நிகர பாதிப்பை இல்லாமல் ஆக்குவதோ அல்லது மீட்பதிலோ அதன் எந்தக் கொள்கைகளின் மூலமாகவும் நடத்த முடியாது; காரணம், அதன் ஒவ்வொரு கொள்கையும் அவர்களது கார்ப்பரேட் நண்பர்களின் நலன்களுக்குச் சேவை செய்வதேயாகும். ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை இவ்வுண்மையைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது. தவிரவும், ஜிடிபி அறிக்கையும், பேரழிவாகிய பசியின் எதார்த்த உண்மை மற்றும் சரியும் சுகாதாரக் குறியீடுகள் குறித்து ஐநா வளர்ச்சி திட்ட (UNDP) அறிக்கை வெளிப்படுத்துகிறது. உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத் தரத்தில் இருக்கும் இந்தியா, அதே நேரம் மனித வளர்ச்சிக் குறியீட்டில் (HDI, ஹூமன் டெவலப்மெண்ட் இன்டெக்ஸ்) 132வது தரவரிசையில் உள்ளது. இவற்றிலிருந்து தேசம் எத்திசையில் செல்கிறது என்ற போக்கு தெளிவாகிறது.

    இதுவரை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யைப் பொருத்தவரை அது, நாடு முழுவதும் ஓர் ஆண்டில் நிதி சார்ந்த, அனைத்து இறுதி பண்டங்கள் மற்றும் சேவைகளின் சந்தை மதிப்பு உற்பத்தியாக இருந்தது. ஜிடிபி-யை மொத்த மக்கள் தொகையால் வகுக்கக் கிடைப்பது ஒரு ‘தனிநபர் சராசரி ஜிடிபி.’ இவ்வாறு ஜிடிபி மற்றும் தனிநபர் சராசரி ஜிடிபி இவ்விரண்டும் ஒரு நாடு தனது மக்கள் தொகைக்கான தேசத்தின் பொருளாதார உற்பத்தியின் அளவீடுகள் ஆகும். எனவே இந்த எண்கள் மக்களின் பொருளாதார நலவாழ்வின் முழுமையான அளவீடு ஆகாது. அது ஒரு சராசரி எண், அது வெளிப்படுத்தும் உண்மைகளைவிட மூடி மறைப்பதே அதிகமானதாகும். எனவே நலமாக இருப்பது அல்லது ஜிடிபி அதிகரிப்பு என்பது மனிதனின் நலம் மற்றும் வளர்ச்சியைச் சுட்டிக் காட்டாது.

    அமெரிக்காவின் பெரும் பொருளாதாரப் பின்னடைவின்போது (கிரேட் டிப்ரெஷன்) அமெரிக்கத் தேசிய வருவாய் 1932ல் எந்த அளவு சென்றது என்பதைப் புரிந்து கொள்ள

அமெரிக்கப் பொருளாதார நிபுணர் சிமோன் குஸ்நெட்ஸ் ஜிடிபி முறையைக்
கண்டுபிடித்தார். இரண்டாவது உலகப் போரின்போது
ஜான் மெனார்டு கெயின்ஸ் நவீன ஜிடிபி வரையறை விளக்கத்தை மேம்படுத்தினார். அவரது ஜிடிபி கணக்கிடும் முறையில் தேசத்தின் வருவாயில் அரசு செலவிடுவதும் சேர்க்கப்பட்டது. இந்த முன்னெடுப்பு போர்க்காலத் தேவைகளால் இயக்கப்பட்டது. விரைவில் அந்த முறை ஏற்கப்பட இன்று வரை அதுவே தொடர்கிறது.

            எனவே, தொழிற் புரட்சி காலத்தில் பிறந்து, நவீன முதலாளித்துவத்தை ஆதரிக்கும்

தியரியாக மேம்படுத்தப்பட்ட ஜிடிபி தற்போது, புதிய தாராளமய காலத்தின் எந்த அளவுக்கு ஏழ்மையையும் இல்லாமையையும் மறைக்க முடியுமோ அதற்குப் பயன்பட்டு வருகிறது. மொத்த உற்பத்தி எவ்வளவு என்பதில் மட்டுமே அக்கறைபடும் ஜிடிபி, உற்பத்தியின் பலன்களை யார் அறுவடை செய்கிறார்கள் என அக்கறை படுவதில்லை. மேலும் அதுவே பொருளாதார அந்தஸ்து எந்த மட்டத்தில், ‘சூப்பர் பவரா’, ‘நடுத்தர’ அல்லது உருவாகிவரும் பவரா என்பதைத் தீர்மானிக்கிறது. 21ம் நூற்றாண்டிலும்கூட வளர்ந்த மற்றும் வளர்ந்துவரும் நாடுகளுக்கு இடையில் வேறுபாடு ஜிடிபி-யைக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது. ஜிடிபி அடிப்படையில் பிரிக்ஸ் நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்டது. தனிநபர் சராசரி ஜிடிபி ஒத்து இருக்கும் இரண்டு நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீட்டு தர மதிப்பெண் நிலையில் மட்டும் எப்படி வேறு வேறாக முடிகிறது? உதாரணத்திற்கு மனித வளர்ச்சிக் குறியீடு (HDI)   தரவரிசையில் அமெரிக்கா 21வது இடம், ரஷ்யா 52, சீனா 79, பிரேஸில் 87, இந்தியா 132. இந்த முரண்பாடுகள் அரசுகள் வகுக்கும் கொள்கைகளின் முன்னுரிமை குறித்து விவாதத்தை எழுப்ப முடியும்.

    பொருளாதார வளர்ச்சி மட்டுமே ஒரு நாட்டின் வளர்ச்சி ஆகாது; நாட்டு மக்கள் மற்றும் அவர்களின் ஆற்றல்கள் நாட்டின் வளர்ச்சியை அளவிடுவதற்கு முக்கிய காரணியாக இருக்க வேண்டும். அந்த இலட்சியத்தை நோக்கமாகக் கொண்டு 1990ல் ஐக்கிய நாடுகள், மனித வளர்ச்சிக் குறியீடு  (HDI, ஹூமன் டெவலப்மெண்ட் இன்டெக்ஸ்) என்ற அளவீட்டு முறையை உருவாக்கியது. ஹெச்டிஐ தலைப்பின்கீழ் நான்கு பிரதானமான வளர்ச்சி பகுதிகள் உண்டு. அவை, குழந்தைகளின் சராசரி பள்ளி ஆண்டுகள், எதிர்பார்க்கப்படும் பள்ளி ஆண்டுகள், பிறந்த குழந்தைகளின் உயிர் வாழ்க்கை எதிர்பார்ப்பு மற்றும் ஒட்டு மொத்த தனிநபர் தேசிய வருவாய். இந்த அனைத்துச் சுட்டெண்களில் (இன்டிகேட்டர்ஸ்) 2022ம் ஆண்டில் 191 நாடுகளில் இந்தியாவின் தரவரிசை 132. அதற்கு முந்தைய ஆண்டின் 130வது இடத்திலிருந்து மேலும் இரண்டு இடங்கள் சரிந்து 132வது இடம். எதார்த்தம் இவ்வாறு இருக்க அதே நேரத்தில் நாட்டின் பிரதமர் 5 லட்சம் கோடி டாலர்கள் பொருளாதாரமாக இந்தியாவைக் கட்டி அமைத்து வருவதாக டமாரமடிப்பது பெரும் வியப்பு. இது வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டது இல்லை என்பது வெளிப்படை. 

விடுதலையே வளர்ச்சியாக

       பொருளாதார அறிஞர் அமர்தியா சென் ‘வளர்ச்சி என்பது விடுதலையாக’ (டெவலப்மெண்ட் அஸ் ஃப்ரீடம்) என்ற தமது நூலில் கூறுவார்: விடுதலை என நான் குறிப்பிடுவது வளர்ச்சி

குறித்த பரந்த கண்ணோட்டத்தைப் படம் பிடிக்கும் முயற்சியாகும்; அது வழக்கமான, குறுகிய முறையில் வரையறுக்கப்படும் பொருளாதார இலக்குகளுக்கு மாறானது. இந்தச் சுதந்திரம் ஒரு வகையில் ‘பெரிதினும் பெரிது கேட்கும்’ பேராசை இலக்கு; காரணம், இதில் மனித ஆற்றல்களின் சாத்தியப்பாடுகளை –நோயிலிருந்து விடுதலை மற்றும் கல்வியிலா அறியாமையிலிருந்து விடுதலை போன்ற சாத்தியப்பாடுகளை– உள்ளடக்கியது: இதில் அடையும் வளர்ச்சி மேம்பாடு தனிநபர்களுக்கு நன்மை, அதே நேரதில் சமூகங்களுக்கும் நன்மையானதாகும்

பரிதாபகரமாக இந்தியா 132வது இடத்தில்

       2021ல் இந்தியாவின் மனித வளர்ச்சிக் குறியீட்டின் நான்கில் மூன்று காரணி அளவீடுகளில் வீழ்ச்சி அடைந்துள்ளது, ஒன்றில் மட்டும் சிறிதளவு முன்னேற்றம். கல்வியைப் பொருத்தவரை இரண்டு காரணிகள். ஒன்று எதிர்பார்க்கப்படும் கல்வி ஆண்டுகளில் வீழ்ச்சி, இருப்பினும் சராசரி பள்ளி ஆண்டுகளில் உயர்வு காணப்படுகிறது. பின்னர் வாழ்க்கைத் தரம் உள்ளது –அதில்தான் ஒட்டுமொத்த தேசிய வருமானம் (GNI), தனிநபர் வருமானம் வருகிறது. இந்தியா இதில் 6681லிருந்து 6590 டாலராகச் சரிந்துள்ளது, அதாவது வருமானம் குறைந்துள்ளது.

       எதிர்பார்க்கப்படும் பள்ளி ஆண்டுகள் 11.9 ஆண்டுகளை ஒப்பிட, சராசரி பள்ளி ஆண்டுகள் மனித வளர்ச்சி குறியீட்டின்படி வீழ்ச்சி அடைந்து 6.7 வருடங்களாக உள்ளது. இந்தியக் குழந்தைகள் சராசரியாகப் பள்ளிகளில் சென்று படிப்பது வெறும் ஆறு ஆண்டுகளுக்குச் சற்று கூடுதலாக இருப்பதைச் சமாதானம் கூறி மன்னிக்க முடியாதது. ஸ்ரீலங்காவில் 10ஆண்டுகளுக்கும் அதிகமாகவும், உலகின் பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் இந்தச் சராசரி 12 ஆண்டுகளுக்கு அதிகமாகவும் உள்ளது. பெருந்தொற்று குழந்தைகளின் கல்வியைக் கடுமையாகப் பாதித்த பிறகும் கல்விக்கு அரசு செலவிடுவது வெட்டப்படுகிறது. கல்வி என்பது உற்பத்தி ஆற்றல், அது மனித மூலதனத்தை உற்பத்தி செய்கிறது. இந்தியா கல்விக்குச் செலவிடுவது மிகக் கூடுதலாக அதிகரிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. பாஜக 2014 தேர்தல் அறிக்கை ஜிடிபியில் 6 சதவீதம் கல்விக்குச் செலவிடப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால் அதன் ஆட்சியின் சாதனை கல்விக்கு மூன்று சதவீதத்திற்குக் குறைவாகவே செலவிடுவதாக உள்ளது. கோவிட் 19 பெருந்தொற்று கல்வியில் ஏற்படுத்திய சீர்குலைவு மாணவர்களின் கல்வியில் இழப்பு மற்றும் பள்ளி இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பு எனக் கடுமையாக பாதித்துள்ள நிலையில் 2022 பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீடு ரூ.6ஆயிரம் கோடி வெட்டபடுவது எவ்வளவு குரூரமானது?

       கேந்திரமான பகுதிகளான சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயம் இவற்றிற்குப் பட்ஜெட் நிதி ஒதுக்கீடு கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. இப்பிரிவுகளில் கரோனா கடும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திய பிறகும் அரசு இப்பிரிவுகளில் செலவிடுவது மட்டும் வெட்டிக் குறைக்கப்படுகிறது.

வேலை வாய்ப்பு இல்லாத வளர்ச்சி

    ஒரு சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் வேலைவாய்ப்பு விகிதம் எவ்வளவு சதவீதம் மாற்றமடைகிறது என்ற அளவீட்டை வேலைவாய்ப்பு நெகிழ்ச்சி (எம்ப்ளாய்மெண்ட் எலாஸ்டிசிட்டி) என்று கூறுவர். இந்திய ரிசர்வ் வங்கி 2022ம் ஆண்டில் நாட்டின் வளர்ச்சி 8சதவீதமாக மதிப்பீடு செய்துள்ளபோது வேலை கிடைக்கும் விகிதம் வெறும் 0.01 சதவீதமாக உள்ளது. அதன் பொருள், பொருளாதாரம் வளர்ந்தாலும் எம்ப்ளாய்மெண்ட் எலாஸ்டிசிட்டி வீழ்ச்சி அடைகிறது என்பதே. ஒரு பொருளாதாரம், அதன் வளர்ச்சி நிகழ்முறையில் தனது மக்களுக்கு எந்த அளவு வேலைவாய்ப்புகளை உண்டாக்கித் தரும் திறன் உடையதாக இருக்கிறது என்பதை அது சுட்டிக் காட்டுகிறது. இந்த வகையில், குறிப்பாக உலகளாவிய போட்டி நடைபெறும் முக்கியமான ஆண்டுகளில் இந்தியா மிக மோசமாகச் செயல்படுகிறது.

முன்னுதாரண மாற்றமே இத்தருணத்தின் தேவை

    சுழன்றடிக்கும் வேலையில்லா திண்டாட்டத்துடன் போராட இப்போதைய தேவை வேலைவாய்ப்பு உருவாக்கமே. அதற்குத் தேவை ஒரு கொள்கை மாற்றம், அதனை பாஜக ஒருபோதும் புரிந்து கொள்ளத் தயாராக இல்லை. ஏழ்மையைக் குறைக்க வேலைவாய்ப்பை உருவாக்கும் “கூலி பொருள் முதலீடு மாடல்” என்ற கோட்பாட்டு பொருளாதாரத் தியரிகள் 

உள்ளன. (அதற்கு மாறானது மூலதன முதலீடு, தொழிலைப் பெருக்கப் பயன்படுமே தவிர, உழைப்பாளிகளின் நுகர்வுக்கானது அல்ல.) கூலி பொருள் முதலீடு மாடல் இந்தியாவில் இரண்டாவது, மூன்றாவது ஐந்தாண்டு திட்ட முக்கிய காலகட்டத்தின்போது அமலாக்கப்பட்டது. ஆனால் தற்போது மூலதனப் பொருட்களில் (கேபிடல் குட்ஸ்) திரட்சியாகக் குவிக்கப்படும் முதலீடு வளர்ச்சியைப் பலூனாக ஊதிப்பெருக்கிக் காட்டுவதைத் தவிர, வேலைவாய்ப்பை உருவாக்குவதில்லை. இந்தியச் சமூக பொருளாதாரக் கட்டமைப்பில் மேம்படுத்தப்பட்ட நேருவின் வளர்ச்சி மாடலை நோக்கி ஓர் முன்னுதாரணமான மாற்றமே இன்றைய பிரச்சனைகளைத் திறன்வாய்ந்த முறையில் தீர்க்க முடியும்.

    சமூகக் குறியீடு சுட்டிகள் இந்தியா துன்பத்தில் உழல்வதைக் காட்டுகின்றன. மகிழ்ச்சிக் குறியீடு (ஹெப்பினஸ் இன்டெக்ஸ்) தரவரிசையில் இந்தியா பரிதாபகரமான மதிப்பெண்களுடன் மீண்டும் ஒருமுறை வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்கொலை விகிதம் அதிகரிக்கிறது. தேசிய குற்ற ஆவண பீரோ (NCRB) தகவல்கள்படி விவசாயிகள் மத்தியில் தற்கொலை என்பதில் தற்போது அமைப்பு சாரா பிரிவு தொழிலாளர்களின் தற்கொலைகளும் சேர்ந்துள்ளதாகக் கூறுகிறது.

வறுமை குறித்த ஆய்வின் வறுமை         

    இந்திய வறுமை விகிதம் குறித்த உண்மையான நிலையைப் படம் பிடித்துக் காட்ட முறையான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. பன்முகப் பரிமாண ஏழ்மை 27.9 சதவீதம் நிலவுவதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன, தீவிர பன்முகப் பரிமாண ஏழ்மை 8.8 சதவீதம். இந்த விகிதமே உலகத் தரத்தின்படி மிக அதிகம். உலகில் இந்தியா மிகக் கடுமையான இல்லாமையில் இருப்பவர்களின் வாழ்விடமாக உள்ளது. கொள்கையில் சாரமற்ற வறட்சியே ஏழ்மை உண்டாக்குகிறது. தேடிக் கண்டு பிடித்தால் இதற்கான மிக முக்கிய காரணம், சமூகப் பிரிவு மற்றும் உற்பத்தி பிரிவில் செலவிடுவதில் போதாமையே ஆகும். மருத்துவச் சுகாதாரச் செலவுகளால் ஏழ்மை நிலை மோசமடைகிறது என்கிறது ஓர் ஆய்வு. சாதாரணமான பொது மக்கள் 70லிருந்து 75 சதவீதம் உடல்நலனுக்காக நேரிடையாக தன் 'கையிலிருந்தே மருத்துவச் செலவுகள் செய்ய' நேர்வது (மருத்துவக் காப்பீடு போன்ற வசதி இல்லாமல்) அவர்களின் வறுமையை மேலும் தீவிரமாக்குகிறது. இதற்கு முக்கிய காரணம் பொது சுகாதாரத்தில் அரசு பற்றாக்குறையாகச் செலவிடுவதேயாகும்.

            ஜிடிபி மற்றும் மனித வளர்ச்சிக் குறியீடு இடையேயான போக்கு குறித்த ஒட்டுமொத்த பருந்துப் பார்வை, வளர்ச்சி குறித்த கதையாடலில் சாதாரண மனிதன் ஓர் அங்கமாக இல்லை

என்ற உண்மையை அம்பலப்படுத்துகிறது. “சராசரியாக நான்கடி ஆழமுள்ள ஆற்றைத் தாண்டாதே” (ஆழம் தெரியாமல் காலை விடாதே) என்ற பழமொழி, ஜிடிபி போன்ற தரவுகளின் சராசரிகளின் தன்மையை நிரூபிக்கப் போதுமானது. ஏனெனில் சராசரி என்றால் எல்லா இடத்திலும் ஆழம் நான்கடி என்பதில்லை. அதுபோல ஜிடிபி வளர்ச்சி கடைக்கோடி மனிதனின் வாழ்வில் பிரதிபலிப்பதில்லை. எனவே ஜிடிபி, இந்தியா போன்ற ஒரு நாட்டின் மனித வளர்ச்சியின் (நல்ல உணவு, குடிநீர், வாழ்விடம், சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்புப் போன்ற) அத்தியாவசிய முக்கிய அம்சங்களைக் குறைப்பதாக முடிகிறது. ஆட்சியின் அவலங்கள், தோல்விகளைத் தரைவிரிப்பின் அடியில் கூட்டித் தள்ளுவதில் ஜிடிபி போன்ற புள்ளி விபரங்கள் பாஜகவுக்கு ஒரு வரப் பிரசாதமாக உள்ளது.

வளர்ச்சியில் மனித வாழ்க்கை முக்கியம்

ஏழ்மை மற்றும் பஞ்சங்கள்’ என்ற தமது நூலில் அமர்தியா சென், ‘நகர்ப்புற மேட்டுக்குடிகளுக்காகப் பணியாற்றி கிராமப்புற உழைப்பாளிகளைப் புறக்கணிக்கும்’ ஒரு பொருளாதாரத்தின் அபாயங்களைப் பரிசீலிப்பார். ஜிடிபி வளர்ச்சி அடைவதால் அது, ஜி-20 போன்ற உலக ஆளுகைகளின் மேல் மட்டத்தில் இந்தியாவை வைக்க உதவிடலாம், ஆனால் அது மக்கள் சேவை ஆற்ற வேண்டிய பொருளாதாரம் அவர்களைப் பலி கொடுப்பதாகும். அத்தகைய கொள்கை வகுப்பு இன்னும் பல மக்களைத் தொடர்ந்து கீழே தள்ளி, கை விட்டுவிடும் –இந்தப் புறக்கணிப்பு, பொருளாதாரம் அனைவரது நன்மைக்காக என்று மாறி மனித வாழ்வுகளில் நீண்ட காலத் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய மாறக்கூடிய அம்சங்களில் கவனம் செலுத்தி, சிக்கலான பிரச்சனைகளைத் தீர்க்க முன்வரும்வரை தொடரவே செய்யும்.   

மாற்றத்தை யார் ஏற்படுத்துவது?

      (5 டிர்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம், உலகில் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் போன்று) ஜிடிபியின் வியப்பூட்டும் வளர்ச்சி எண்களைக் கண்டு ஏமாறாமல், மக்கள் உண்மையான வளர்ச்சி என்ன என்பதைப் பற்றிய புரிதல் உணர்வைத் திரட்டுவது முக்கியமானது. தாறுமாறான எண்களை இதயத்தில் வைக்காமல், அங்கே மக்களை வைத்து, மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி மாடலைக் கண்டறிய வேண்டிய நேரம் வந்து விட்டது.

      ஜிடிபி அதிகரிப்பிற்கும், மனித வளர்ச்சி குறியீட்டிற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து இணைக்க, சுகாதாரம், கல்வி போன்ற சமூகப் பிரிவுகளில் அரசுகள் எவ்வளவு தூரம் முதலீடு செய்கின்றன, அந்த முதலீடுகள் எவ்வாறு திறமையான முறையில் ஆக்கபூர்வமான பொருளாதார நடவடிக்கைகளாக மாற்றப்படுகின்றன என்பதில் அதற்கான தீர்வு உள்ளது –அப்படிச் செய்தால்தான் மனித வளர்ச்சிக் குறியீடு மேம்பாடு அடைவது, மேலான ஜிடிபி வளர்ச்சிக்கும் இட்டுச் செல்லும்.

    எனவே, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் செழுமைக்கும் உண்மையான வழி தேசிய வருமானத்தை அதிகரிப்பது, வருமான இடைவெளியைக் குறைப்பது, பாலின அசமத்துவத்தைக் குறைப்பது, மருத்துவ சுகாதாரம் மற்றும் கல்வி தரங்களை மேம்படுத்துவது, தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாப்பது என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசுகள் செயல்படுவதேயாகும்.

    மேற்கண்டவற்றைச் சாதிக்க அரசியல் உறுதிப்பாடு தேவைப்படுகிறது, அது அரசியல் சிந்தனை கோட்பாட்டுகளுடன் பிரிக்க முடியாதபடி தொடர்பு உடையது. இந்த (மக்கள் மைய) வளர்ச்சி மாடலுக்கு நேர் எதிரிடையானது பாஜக அரசியல் கருத்தோட்டம். அந்தக் கட்சியின் கார்ப்பரேட் ஆதரவு மற்றும் முற்றதிகாரச் சிந்தனை கோட்பாடு அடிப்படையில் ஜனநாயக விரோதமானது. இன்று ஜனநாயக ஆதார அடித்தளங்கள் சீர்குலைக்கப்படுவது அதிகரித்து வருவதை இந்தியா பார்த்து வருகிறது. செயல்படும், செழித்து வளரும் ஜனநாயகம் மட்டுமே மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியைக் கொண்டு வர முடியும்!  

--நன்றி : நியூஏஜ் (பிப்.19 --25)

--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்

 

             

No comments:

Post a Comment