Monday 6 February 2023

பாபுஜியின் இறுதி வெற்றி

 நியூஏஜ் தலையங்கம் (பிப்.5 –11)


பாபுஜியின் இறுதி வெற்றி



   1948, ஜனவரி 30அன்று மகாத்மா காந்தி பிராத்தனைக் கூட்டத்திற்கு விரைந்து வந்து கொண்டிருந்தபோது, நாதுராம் கோட்சே துப்பாக்கியால் சூட, அவனின் தோட்டாக்களுக்குப் பலியாகி மகாத்மா மண்ணில் சரிந்தார்.

எங்கே இம்மண்ணின் மக்கள் கூட்டத்தின் உணர்வு நிலையிலிருந்து தாங்கள் பிடிங்கி எறியப்பட்டுவிடுவோமோ என்ற அவர்களின் உச்சகட்ட அச்சத்தின் வெளிப்பாடே அந்தக் கொலை. பெரும்பான்மைவாதச் சக்திகளின் தனித்துத் தாங்களே எல்லாம் என்ற உரிமைகோரலுக்குப் பெரும் சவாலாக இன்னும் உயிர்ப்புடன் மகாத்மாவின் உணர்வு மக்களிடம் நீடிக்கிறது; அச்சவாலை எதிர்கொள்ள முடியாத அவர்களின் சொந்த இயலாமையும், அதன் அடிநீரோட்டமாக விளைந்த பாதுகாப்பு இன்மை காரணமாக அந்த அச்சமும் விடாது துரத்தும் பூதமாக அவர்களைத் தொடர்கிறது.

      மகாத்மா அஞ்சலி தினம் காந்திஜியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை நமக்களிக்கிறது; நமது நாகரீகத்தின் உட்கூறுகளான வேறுபாடுகளும் பன்மைத்துவத்திற்கும் எதிராக வகுப்புவாதத்தின் பங்கினைக் குறித்தும்; நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பான மதச்சார்பின்மை, ஜனநாயகக் கோட்பாடுகள் மீதான  விவாதப் புரிதல்களைப் பலப்படுத்திக் கொள்ளவும் தியாகிகள் தினம் வாய்ப்பளிக்கிறது. மகாத்மாவின் படுகொலை, பெரும்பான்மைவாத இந்துத்துவா சக்திகளுக்கு எத்தகைய பிரம்மாண்டமான அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதற்கு ஓர் அடையாளம். எந்த அளவு பயம் அவர்களை ஆட்டிப் படைத்திருந்தால் அவரைத் தீர்த்துக் கட்டி இம்மண்ணிலிருந்து ஒழித்தாக வேண்டும் என்ற கொடிய திட்டம் தீட்டியிருப்பார்கள்! அந்த ஒளி அவ்வாறு அணைக்கப்பட்டு விட்டது என்ற உண்மையையும் மீறி, அந்த ஜீவிதப் பிரகாசம் ஏற்படுத்திய சவால் உண்மையாகவும் தூலமாகவும் நீடிக்கிறது – அந்த உண்மை வகுப்புவாதக் கருத்தோட்டத்திற்கு எதிரான சவாலாக என்றும் எப்போதும் நின்று நீடிக்கும்!

    வகுப்புவாதத் தாக்குதலை எதிர்க்கும் முயற்சிகள் எப்போதும் கருத்து மட்டத்தில் தொடுக்கப்படும் போராட்டமாக இருக்கும், அரசு அதிகாரத்திற்கு எதிராகவும் செல்லும்; அந்த அரசு அதிகாரம் அதனைக் கட்டுப்படுத்த புத்தகங்களைத் தடை செய்வது, ஊடகங்களைப் பேசவிடாது குரல்வளையை நெறிப்பது, சீறி எழும் எதிர்ப்பு அலைகளைப் பின்னோக்கி இழுக்க விசாரணையே இல்லாமல் வருடக் கணக்கில் சிறையில் அடைப்பதாக மிரட்டி அச்சுறுத்துவது போன்றவை மூலம் -- அம்முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாத போதும் –கடுமையாக முயற்சி செய்யும்.

    விடுதலை அடைந்த பின்பு இந்தியா தனது பன்மைத்துவக் கலாச்சாரமயத்தை உயிர்ப்புடன் ஒரு தேசமாகப் பாதுகாக்கத் தொடர்ந்து முயன்று வருகிறது. மாறாக, வகுப்புவாதம் ஒரு சவாலாக, ஒரு முக்கிய அபாயமாக நீடிக்கிறது.

     காலனிய சகாப்தத்தில், அரசின் பிரித்தாளும் அரசியலில் தொடங்கப்பட்ட எந்த முயற்சிக்கும் வகுப்புவாதக் கருத்தோட்டம் ஓர் ஆதரவுக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. ‘சாதி மதங்களைப் பாரோம்’ என்று வகுப்பு, சாதி, மத வேற்றுமை கருதாது மக்கள் பெருமளவில் பங்கேற்ற குடிமக்களின் அகிம்சை வழியிலான எந்தச் சட்ட மறுப்பு இயக்கத்தையும் நசுக்கக் கொடூரமான அடக்குமுறைகளைப் பயன்படுத்திய காலனிய அரசு, தனது கடைக்கண் ஆதரவு, உதவிகளை வகுப்புவாதிகளுக்குத் தாராளமாக வழங்கியது. அதற்கான ஈடு இணையற்ற பெரும் உதாரணம் உப்புச் சட்டத்தை எதிர்த்து 1930ல் காந்திஜியால் தொடங்கப்பட்ட தண்டி யாத்திரை! அந்த உப்பு சத்தியாகிரகம் காந்திஜியின் அமைதியான வீரத்தை, அல்லது அகிம்சையையும் அச்சமின்மையையும் –உலகளாவிய சமாதானத்திற்காக அவர் கண்டு பிடித்த ஆயுதங்களை -- வெளிக் கொணர்ந்தது. நமது தேசிய விடுதலைக்கான போராட்டமும் அதன் ஓர் அங்கம்தான்.

      இருபத்தி ஐந்தாயிரம் தன்னார்வத் தொண்டர்கள், தனதருகே தன் கையைப் பிடித்துக் கொண்டுவரும் சக தோழன் எந்த வகுப்பை அல்லது எந்த மத நம்பிக்கையைப் பின்பற்றுபவர் என்ற எண்ணம், வேறுபாடு ஏதுமின்றி ஓர் அணியாக (குஜராத், வால்சாத் பகுதியின் ஒரு நகரமான) தராசனா உப்பள ஆலையை ஏறத்தாழ அடைந்து விட்டனர், அந்நகரம் காந்திஜி உப்பு சத்தியாகிரக யாத்திரையைத் தொடங்கிய தண்டிக்கு அருகே இருந்தது.

      பேரமைதியாக, முழு மௌனமாக அணிவகுத்து நடந்த காந்தியத் தொண்டர்கள் உப்பு சேகரித்து வைக்கப்பட்டிருந்த உப்புக் களஞ்சியத்திற்கு நூறு கஜம் முன்பாக நின்று விட்டனர். அந்தக் கூட்டத்திலிருந்து மறியலுக்கான முதல் வரிசை தொண்டர்கள் குழிகளைத் தாண்டி உப்புக் களஞ்சியத்தின் முள் வேலியை நோக்கி முன்னேறிச் சென்றனர்.

       திடீரென்று அங்கே மங்கலான சப்தம், முன்னேறிவரும் மறியல் தொண்டர்கள் மேல் போலீஸ்காரர்கள் விழுந்தனர், இரும்புப் பூண் கொண்ட தங்கள் லத்திகளால் அவர்கள் மண்டையில் மழையாய் தாக்கத் தொடங்கினார்கள். அந்த அடிகளைத் தடுத்து நிறுத்த ஒரே ஒரு தன்னார்வத் தொண்டர்கூட தன் கையை உயர்த்தவில்லை. பாதுகாப்பின்றி இருந்த அவர்கள் தலைகள் மீது பிரம்புத் தடிகளின் தாக்குதல் மழை தொடர்ந்தது. அணிவகுப்பின் அடுத்த வரிசை, படபடுக்கும் சுவாசத்துடன் தங்கள் முறைக்காகக் காத்திருந்தனர்.

          தாக்கப்பட்டவர்கள் மயக்கமாகி அங்கங்கே விழுந்தனர், அல்லது உடைக்கப்பட்ட மண்டைகள் அல்லது தோள் எலும்புகள் முறிந்தும் சுருண்டு நெளிந்தனர். பிழைத்திருந்தோர் அணிகளில் விடுபடுதல் இன்றி மௌனமாகவும், நெஞ்சுரத்துடனும் --அடிபட்டு வீழும்வரை-- முன்னோக்கி அணிவகுத்துச் சென்றபடி இருந்தனர்.

          அவர்கள் ‘நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சிடாத’ வண்ணம் தலை உயர்த்தி மெல்ல முன்னேறி நடந்தனர். போலீஸ் கூட்டம் பயிற்சிபெற்ற முறைப்படியும் எந்திர கதியிலும் இரண்டாவது அணி வரிசையைத் தாக்கத் தொடங்கினர். அங்கே போரில்லை, எதிர்த்துப் போராட்டங்களும் எதுவும் இல்லை; அணிவகுப்பு வீரர்கள் முன்னேறி நடந்தனர், பேச்சு மூச்சின்றி அடிபட்டு வீழும்வரை.

        அந்த அகிம்சா சத்தியாகிரகிகள் எதை நிறைவேற்றிச் சாதித்தார்கள்? உப்பெடுக்கும் வேலையை அவர்கள் கைக் கொண்டுவிடவில்லை; அதிகாரபூர்வமாக உப்புச் சட்டம் அதன் முழுமையான வடிவத்தில் ஒழிக்கப்படவும் இல்லை. ஆனால் அவை அல்ல முக்கிய விஷயம் என்பதை உலகம் உணரத் தொடங்கியது. உப்பு சத்தியாகிரகம் இந்த உலகத்திற்கு ஏறத்தாழ பிழையற்ற ஒரு புதிய கருவியின் பயன்பாட்டை நிகழ்த்தி எடுத்துக் காட்டியதுஅந்த ஆயுதம் அமைதியான தீவிரப் போர்க் குணம்!

    ‘ஆசியா இப்போது ஐரோப்பாவின் கண்ணை, சற்றும் ஏறவோ இறங்கவோ இன்றி, நேருக்கு நேர் சந்தித்துப் பார்க்கலாம்’ என்றுகூட காந்திஜி சொல்லி இருக்கலாம் – (‘கத்தி இன்றி ரத்தம் இன்றி யுத்தம் ஒன்றை’ நடத்திய புதுமைக்குச் சொந்தக்காரர் அல்லவா அவர்)

    அந்தப் புதுமையின் உச்சம், இறுதி ஈடேற்றம், உப்பு சத்தியாகிரகம் 1930 ஏப்ரல் 6நாள் நிறைவடைந்தது.

    ‘உப்பு வரி ஏழைகளுக்குப் பெரும் இன்னலை ஏற்படுத்தியது’ என்றார் காந்திஜி. எனவே எங்கெல்லாம் உப்பைத் தயாரிக்க முடியுமோ, அங்கெல்லாம் ஏழைமக்கள், தண்டனை ஆபத்தை மீறி தாங்களே நிச்சயமாக உப்பை உற்பத்தி செய்யலாம். இந்த உரத்த உள்ளுணர்வு அச்சமின்மை மற்றும் வன்முறையற்ற வழியான அகிம்சை பலத்தினால் மலர வேண்டும்.

          துன்பத்தில் வருந்தும் மக்கள் கூட்டம் அனைவரையும் எவ்வாறு அவர் ஒன்றாகவே உணர்ந்தார் என்பதற்கு வங்காளத்தில் நவகாளி வகுப்புக் கலவரம் மற்றும் கலவரம் நடந்த இடத்திலே காந்தி இருந்ததும்கூட மற்றுமொரு உதாரணம். “அந்த வகையிலே நான் இங்கு வந்ததும் அந்த மதிப்பை நன்கு எடுத்துக் காட்டவே. நவகாளியை இழந்தால், இந்தியாவை இழந்து விடுவோம்” என்றார் காந்திஜி. மாற்றத்தில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார், ஆனால் காலத்துடன் போட்டியிட்டு ஓடி, அந்த மாற்றத்தைச் சாதிக்கும் ஓட்டப் பந்தயத்தில் எப்போதும் வெறுமையில் அவர் கிழிபட்டார்.

    ‘மகாத்மா காந்தியின் வாழ்க்கை’ என்ற அவரது சுயசரிதையை எழுதிய லூயி ஃபிஷ்ஷர், ‘எதிர்வரும் ஒத்துழையாமை இயக்கத்தை உண்மையில் எவ்வாறு நீங்கள்

பார்க்கிறீர்கள் என்பதை விவரிக்க முடியுமா?’ என கேட்டபோது அவரிடம் காந்தி கூறினார்: “கிராமங்களில் விவசாயி வரிகளைச் செலுத்துவதை நிறுத்துவார். அதிகாரபூர்வத் தடையை மீறி அவர்கள் உப்பு தயாரிப்பார்கள். இது சாதாரண, அற்ப விஷயமாகத் தோன்றலாம், உப்பு வரியின் மூலம் பிரிட்டிஷ் அரசுக்குச் சொற்ப வருவாய் மட்டுமே கிடைக்கிறது. ஆனால் வரியைக் கட்ட மறுப்பது விவசாயிகளுக்குத் தைரியத்தைக் கொடுக்கும், தாங்கள் சுதந்திரமான நடவடிக்கையில் ஈடுபடும் திறன் உடையவர்கள் என்ற தன்னம்பிக்கை எண்ணம் பிறக்கும். அவர்களது அடுத்த கட்ட நடவடிக்கை மண்ணைக் கைப்பற்றுவது. உண்மையில் இந்த நிலம், யார் அதில் பாடுபடுகிறார்களோ அவர்களுக்குச் சொந்தமானது. அங்கே வன்முறை இருக்கலாம், அல்லது வன்முறை இல்லாது போகலாம். பதினைந்து நாட்கள் குழப்பம் அங்கே இருக்கக்கூடும், ஆனால் நாம் அதனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விடலாம் என்று நான் நினைக்கிறேன். அது நிலப்பிரபுக்களுக்கு நிவாரணம் அளிக்காமல் (உரியவர்களே நிலத்தைக்) கைப்பற்றுவதாகலாம்” என்று விடையளித்தார் காந்திஜி.

      மேலும், “நான் உழைக்கும் வர்க்கத்தினரிடம் ஓர் உண்மையை வழங்கி இருக்கிறேன்; அது, உண்மையான மூலதனம் தங்கம் அல்லது வெள்ளியோ அல்ல, (மாறாக) அவர்கள் கை, கால்களின் உழைப்பும் அவர்களின் அறிவுமே (உண்மையான மூலதனம்) ஆகும். அந்தப் புரிதல் விழிப்புணணர்வை உழைப்பாளர்கள் ஒரு முறை மேம்படுத்திப் பெற்றுவிட்டால், அதனால் வெளிப்படும் சக்தியைப் பயன்படுத்த நான் இருக்க வேண்டும் என்ற தேவை அங்கே இராது” என்று கூறினார் நம் தேசப்பிதா.

    அதுதான் காந்திஜியின் சாரமும் நிகழ்வும் ஆகிய இரண்டும் ஆகும். அவர் இன்று இல்லை, ஆனால் மகாத்மா காந்திஜி என்றும் நமக்கு வழி காட்டுவார்!

         “வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்”

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

 

 

 

 

No comments:

Post a Comment