Tuesday 7 February 2023

அரசியலமைப்புச் சட்ட முன்னுரைகள் (Preambles)

 

                           அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம், தேசத்தைப் பாதுகாப்போம்

--கே சாம்பசிவ ராவ்

சிபிஐ தெலுங்கானா மாநிலச் செயலாளர்

            முன்னுரைகள் (Preambles) அரசமைப்புச் சட்டத்தின் சாரம், அதன் அடிப்படை கட்டமைப்பு. அதில் சுட்டிக் காட்டப்படும் நோக்கங்கள் அரசமைப்புச் சட்டம் மற்றும் தேசத்தின் இதயம். மக்களே இறுதி அதிகாரம் உடையவர்கள் என்று கூறும் அரசமைப்புச் சட்டமே அவர்களிடமிருந்து உருவானதுதான். உண்மையில் அதன் முன்னுரை, ‘அனைத்துக் குடிமக்களுக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியைப் பெற்றுப் பாதுகாக்க, கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம், கருத்தைப் பின்பற்றும் நம்பிக்கை, சமய நம்பிக்கை மற்றும் வழிபாட்டு சுதந்திரம், அந்தஸ்து மற்றும் வாய்ப்புகளில் சமத்தன்மை முதலியன கட்டாயமான தேவை’ எனப் பிரகடனம் செய்கிறது.

முன்னுரைத் தீர்மானம்

            அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரை அறிவிக்கிறது, “இந்திய மக்களாகிய நாங்கள்,

இந்தியாவை (இறையாண்மை, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாய) குடியரசாக அமைக்க இறையாண்மையுடன் தீர்மானித்து, அதன் அனைத்துக் குடிமக்களுக்கும்,

சமூக, பொருளாதார, அரசியல் நீதி;

எண்ணம், பேச்சு, கொள்கை நம்பிக்கை, சமய நம்பிக்கை மற்றும் வழிபாட்டுச் சுதந்திரம்;

அந்தஸ்து மற்றும் வாய்ப்பில் சமஉரிமை … இவற்றைப் பாதுகாக்கவும்,

அவர்கள் அனைவர் மத்தியில் சகோதரத்துவத்தை மேம்படுத்தி தனிநபர் கண்ணியத்தையும், தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தவும்;

எங்களது அரசியலமைப்பு அசம்பளியில் இந்த 1949 நவம்பர் இருபத்தி ஆறாம் நாள் உறுதியுடன் இதன்படி இந்த அரசமைப்புச் சட்டத்தை ஏற்று, சட்டமியற்றி எங்களுக்கு நாங்களே வழங்கிக் கொள்கிறோம்”

    இவ்வாறுதான் இந்த நாட்டின் மக்கள் அரசமைப்புச் சட்டத்தை ஏற்று, சட்டமியற்றி தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொண்டனர். நரேந்திர மோடி தலைமையில் பாஜக கட்சி ஒன்றியத்தில் அதிகாரத்திற்கு வந்த பிறகு இந்தத் தேசம் எவ்வாறு செல்கிறது என்பதை நாம் பரிசீலித்துக் காண்போம்.

    அரசமைப்பு சாசனம் அதன் 74வது ஆண்டில் நுழையும்போது நுழைவாயிலான முன்னுரையின் நோக்க இலக்குகளைப் பரிசீலிப்போம்; அது எவ்வாறு அமலாக்கப்படுகிறது, இன்று ஆட்சியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி அரசமைப்புச் சட்டத்திற்கு எந்த அளவுக்கு மரியாதை தருகிறார் என்பதையும் பரிசீலிப்போம். மேலும் எவ்வாறு அரசமைப்புச் சட்டம் பிய்த்தெறியப்படுகிறது, அதன் அடிப்படைகளில் ஒன்றான அடிப்படை உரிமைகள் எவ்வாறு அழிக்கப்படுகின்றது, அதன் வழிகாட்டுக் கோட்பாடுகள் அமலாக்கப்படுகிறதா என்பதுடன் சேர்த்து ஆராயலாம். அரசமைப்புச் சட்ட முகப்பு நோக்கங்களின் இன்று சீர்குலைக்கப்படும் நிலையைக் காண்போம்.

1.         இறையாண்மை:

அடிமைத்தனத்தின் நுகத்தடியிலிருந்து இந்தியாவை விடுவிக்கவும், சுதந்திரமான தன்னாட்சி, தன்னிறைவு மற்றும் இறையாண்மையைச் சாதிக்கத் தங்கள் நல்லுயிர்களை ஈந்த தியாகிகள் எண்ணிறைந்தோர் நம் வரலாற்றில் உண்டு.  

1947 விடுதலைக்கு முன்பு நம் நாட்டில் வெறும் ஐந்து பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த எண்ணிக்கை சுமார் 400

பொதுத் துறை நிறுவனங்களாக அதிகரித்தன. மோடி பிரதமராக வருவதற்கு முன்பே இந்தியா உலகின் ஐந்து பெரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்தது, சுய சார்புப் பாதையைப் பின்பற்றியது. இன்றைய ஒன்றிய அரசு அதானி, அம்பானி, கார்ப்பரேட் குழுமங்கள் போன்ற மனிதர்களின் நலன்களுக்குச் சேவை செய்ய சட்டங்களைக் கொண்டு வருகிறது; ஒட்டு மொத்த தேசத்தை விற்பனை செய்வதன் ஒரு பகுதியாக நமது இறையாண்மை மற்றும் சுயசார்பைக் காவு கொடுத்து, முன்னோர் கடுமையாக உழைத்து ஈட்டிய பொதுத்துறை நிறுவன அலகுகளை விற்று வருகிறது.

அரசு கேந்திரமான நான்கு பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது. அவற்றில், அணுசக்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு; போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்புகள், எரிசக்தி, பெட்ரோலியம்; நிலக்கரி மற்றும் பிற தாதுகள்; வங்கிகள், காப்பீடு மற்றும் நிதி சார்ந்த சேவைகள். இந்த நான்கு கேந்திரமான பிரிவுகளில் மட்டுமே அரசு தன் வசம் குறைந்தபட்ச அளவே பங்கேற்றுச் செயல்படும். இவை நான்கிலும்கூட பெரும்பான்மை பங்குகளும், பிற பொதுத்துறை அலகுகள் முழுமையும் நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தின்படி விற்பனைக்கு வைக்கப்படும். 2007 –08ம் ஆண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவைத் தொடர்ந்து உலகம் முழுமையும் ‘பொருளாதார உருகுநிலை’ (மெல்ட் டவ்ண்) என்ற பொருளாதாரப் பின்னடைவால் பாதிக்கப்பட்டு வரும்போது அதன் தாக்குதலை நமது பொருளாதாரம் மட்டுமே சமாளித்து நின்றதற்கு ஒரே காரணம் நமது பொதுத் துறை நிறுவனங்களே. தற்போது அனைத்து பொதுத் துறை நிறுவனங்களிலும் பங்கு விற்பனை செய்வது, தனியார்மயமாக்குவது என்ற பாஜகவின் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டிற்கு அழிவை ஏற்படுத்துவதுடன் இந்திய இறையாண்மைக்கும் பெரும் ஆபத்தாகி உள்ளது.

2.         சோஷலிசம், மதச்சார்பின்மை:

நேரு சகாப்தத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கலப்புப் பொருளாதாரம் நாட்டை முன்னோக்கிச் செலுத்த உதவியது. இந்திரா காந்தி ஆட்சியில் 1976ல் அரசமைப்புச் சட்ட 42வது திருத்தத்தின் மூலம் அரசமைப்புச் சட்ட

முன்னுரையில் மதச்சார்பின்மை மற்றும் சோஷலிசம் என்ற பதங்கள் இணைக்கப்பட்டன. வகுப்பு நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பின்மை கொள்கையுடன் இந்தியா துடிப்புடன் செயல்பட இந்தச் சட்டத் திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னுரையின் இந்த நோக்கங்களைப் பின்னடையச் செய்து தலைகீழாக மாற்றவும், நாட்டைப் பன்னாட்டுக் கம்பெனிகளைச் சார்ந்து இருப்பதாக மாற்றவும் இப்போது பாஜக அரசு முயற்சி செய்கிறது. என்டிஏ அரசு ‘சோஷலிச’ மற்றும் ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தைகளை முன்னுரையிலிருந்து நீக்கிக் கைவிட்டுவிட மிக நைச்சியமாக முயற்சி செய்கிறது.

அரசமைப்புச் சட்டத்தின் இடத்தில் மனுஸ்மிருதியைக் கொண்டு வந்து வைத்து மாற்றுவதற்கு மோடி ஆர்வமுடன் காத்திருக்கிறார். அவர் அம்பேத்கரையும் அரசமைப்புச் சட்டத்தையும் புகழ்கிறார், ஆனால் அதே நேரத்தில் மனு ஆதரித்த ‘வர்ண வ்யவஸ்தா’ (நான்கு வருண சமூக அமைப்பு முறையை) அமலாக்கவும் முயற்சி செய்கிறார் –அதைத்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஹெக்டேவார், கோல்வால்கர் போன்றவர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தனர். ஒன்றியத்தின் ஆட்சியாளர்கள், தேசப் பிதா காந்திஜியைப் படுகொலை செய்த கொலையாளி நாதுராம் கோட்சேவுக்கு ஆலயங்கள் கட்ட மக்களை உற்சாகப்படுத்துகின்றனர். பாஜக தலைவர்கள் மறுபுறமோ மிக விரிவாகக் காந்திஜியின் செய்திகளை மேற்கோள் காட்டி மகாத்மாவைக் கடத்த முயற்சி செய்கிறார்கள்.

    தங்கள் வாக்கு அரசியலுக்காக அவர்கள் மாபெரும் மனிதநேயர் விவேகானந்தரையே கடந்தவும் துணிந்தவர்கள். மனித மதிப்புகள் மற்றும் சமூக நல்லிணக்கக் கருத்துகளுக்காக

அறியப்பட்ட விவேகானந்தர், சாதி இனம், நம்பிக்கை மற்றும் மதம் போன்றவற்றைக் கடந்து அன்பிற்குரிய பாரதப் புதல்வராவார். புகழ்பெற்ற சிக்காகோ உரையில் விவேகானந்தர் பெருமிதத்துடன் பிரகடனம் செய்தார், ‘நான் பாரதம் என்று அழைக்கப்படும் தேசத்தைச் சார்ந்தவன்; எனது தேசம் உலகெங்கிலும் இருந்து அவரவர் சொந்தத் தாய் நாடுகளில் கொலைகாரத் தாக்குதல்களைச் சந்தித்த மக்கள் இருக்க இடம் கோரி அகதியாக வந்தபோது அந்த மக்களை அரவணைத்துக் கொண்ட தேசம் எங்கள் தேசம்’ என்று முழங்கினார்.

மதச்சார்பின்மைக்காக நின்ற சத்திரபதி சிவாஜியைக்கூட அபகரிக்க முயற்சிகள் நடந்தன. சிவாஜி தனது இராணுப்படையின் தலைமை தளபதியாக ஓர் இஸ்லாமியரை வைத்திருந்தார்,

படை வீரர்களில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீஸ்களைத் தேர்ந்தெடுத்தார். அதுவே அவரது சமூகக் கட்டமைப்பின் பண்பு. சமீபத்தில் இந்து மதவாதிகள் என அழைத்துக் கொள்பவர்கள் ‘இந்து தர்ம சம்சத்’ (நாடாளுமன்றம்) மாநாட்டை அகமதாபாத்தில் கூட்டினர்; அதில் தற்போதைய அரசமைப்புச் சட்டம் மனுஸ்மிருதியைக் கொண்டு மாற்றப்பட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றினர். மேலும் தற்போதைய தலைநகர் டெல்லி என்பதற்கு மாறாக, உத்தரப்பிரதேசத்தின் காசி (வாரணாசி)யைத் தலைநகராக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றினர். அரசு இவர்களுக்கு எதிராகக் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் பணித்தாலும் ஒன்றிய அரசு அந்த உத்தரவைச் சாதாரணமாகப் புறக்கணித்தது.

            மற்றொரு நிகழ்வில் கர்ப்பிணியான ஒரு முஸ்லீம் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து, மூன்று வயது குழந்தை உட்பட 7பேரைக் கொன்றதற்காக ஆயுள் தண்டனை பெற்ற 11 கேடு கெட்ட குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களது கருணை மனுவைப் பரிசீலித்த குஜராத் மாநில அரசு, அந்தக் குற்றவாளிகள், ‘நல்ல நடத்தை உள்ளவர்கள்’ என்று கூறி அனைவரையும் விடுதலை செய்து விட்டது. விடுதலையானவர்களுக்குப் பிரம்மாண்ட ஊர்வல வரவேற்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அரசமைப்புச் சட்ட முகவுரையிலிருந்து மதச்சார்பின்மை மற்றும் சோஷலிசம் வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று வெளிப்படையாக அறிவிக்கிறார்.

3.    ஜனநாயகம்

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆப்ரகாம் லிங்கன் புகழ்பெற்ற அவரது உரையில், ‘‘மக்களின் அரசு, மக்களால் அரசு, மக்களுக்கான அரசு இம்மண்ணில் இருந்து அழியலாகாது” என்று வற்புறுத்தினார். ஜனநாயகத்தில் அதிகாரம் மற்றும் மாற்று எதிர்க்கருத்து இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது என்பதே இதன் பொருள். அதுவே ஜனநாயகத்தின் அழகு. ஆட்சி முறைகளில் ஜனநாயகமே ஆகச் சிறந்தது என வரலாறு நிரூபித்திருக்கிறது.

மோடி ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, ஜனநாயகத்தின் பொருளையே மாற்றிவிட்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, ஜனநாயகம் என்ற போர்வையில், கவிழ்ப்பதையே வழக்கமாக்கி விட்டார் மோடி. எட்டு மாநிலங்களில் பாஜக அல்லாத கட்சிகளால் ஆளப்பட்ட ஆட்சிகள் ஏற்கனவே கொடுமையாகத் தூக்கி எறியப்பட்டு விட்டன. கவிழ்ப்பு வேலையைச் செய்து முடிக்கும் நிகழ்முறையில், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டிப் பணிய வைக்கவும் ஒன்றியத்தில் ஆளும் கட்சியிடமே மாநில அதிகாரத்தையும் மாற்ற வசதியாக, ஒன்றிய அரசின் அமலாக்கத் துறை, வருமான வரி, புலனாய்வுத் துறை போன்றவற்றின் முகமைகளை அவர் பயன்படுத்துகிறார். இதைத் தவிர எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆளுநர்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் முறையைக் கையாள்கின்றார். குறிப்பாக கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் நிகழ்வனவற்றை நாம் பார்த்து வருகிறோம்.

4.  குடியரசு

உச்சபட்ச அதிகாரம் மக்கள் கையில் வைத்திருக்கும் அரசு முறையே குடியரசாகும். அங்கே அதிகாரம் மன்னர் போன்ற ஒரு தனிநபரிடம் குவிக்கப்படாமல், மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுத்து ஆட்சி நிர்வாகம் நடைபெறும். அந்த ஜனநாயக உணர்வை மனதில் கொண்டு நமது அரசிலமைப்புச் சட்டத்தை உருவாக்கியோர் அதிகாரங்களை ஒன்றியப் பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல் என்று பிரித்தமைத்தனர். இவ்வாறு சட்டமியற்றும் மன்றம், நீதி மன்றம், நிர்வாகம் எனப் பிரித்து அதனதன் எல்லைக்குள் அவற்றிற்கான குறிப்பிட்ட அதிகாரங்களும் –ஒன்று மற்றதன் அதிகாரத்திற்குள் அத்துமீறாமல் அமைத்து -- வழங்கப்பட்டுள்ளன. அரசமைப்புச் சட்டத்தின் கோட்பாட்டிற்கு எதிராக மோடி அரசு கூட்டாட்சி முறையைப் பிய்த்தெறிகிறது. ஒன்றிய அரசு பொதுப் பட்டியலின் கீழ் உள்ள விவசாயம், மின்சாரம், கல்வி, வரி போன்ற விஷயங்களில் தன்னிச்சையாக அதிகாரங்களைப் பறித்து எடுத்துக் கொள்கிறது. மாநிலங்களின் கருத்தைப் பற்றி கவலைப்படாமல் இவை அனைத்தையும் ஒரே மதம், ஒரே மொழி, ஒரே வரிவிதிப்பு, ஒரே தேர்தல், ஒரே தேசம், ஒரே கட்சி, ஒரே நாடு என்ற பெயரில் நடத்துகின்றனர். ஒன்றியத்தின் ஆட்சியாளர்கள் இந்துத்துவ மதவாதச் சக்திகளின் ஆதரவுடன் சமூகத்தைப் பிளவுபடுத்தவும், எதிர்க்கட்சி இல்லாத (எதிர்க்கட்சி ஒழிக்கப்பட்ட) பாரதம் என்ற முழக்கத்துடன் தனிநபர் பிரபுத்துவ அரசை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். இந்தியாவை அதிபர் ஆட்சி முறைக்கு மாற்ற அனைத்து முயற்சிகளையும் மோடி மேற்கொள்கிறார்.

5.  நீதி

அரசமைப்புச் சட்ட முகவுரையில் குறிப்பிடப்படும் சமூக, பொருளாதார, அரசியல் நீதி எதுவும் நரேந்திர மோடி ஆட்சியில் பார்க்க முடியவில்லை. நாட்டின் அனைத்து அரசு நிறுவனங்களையும் தனியார்மயப்படுத்துவதன் மூலம், திட்டமிட்டு இட ஒதுக்கீடும் சமூக நீதியும் ஒழிக்கப்பட்டு வருகின்றன. நீண்ட போராட்டத்திற்குப் பிறகே 44 தொழிலாளர் நலச்சட்டங்கள் கொண்டு வரப்பட்டன, ஆனால் மோடி அரசு அவற்றை நான்கு தொழிலாளர் குறுங்குறிகளாக மாற்றி விட்டது. மொத்த மக்கள் தொகையில் 15 சதவீரமாக உள்ள முஸ்லீம் சமுதாயத்திலிருந்து ஒருவரைக்கூட மோடி தனது அமைச்சரவையில் சேர்க்கவில்லை.

6.  சுதந்திரம்

எண்ணங்களில் சுதந்திரம், கருத்துகளை வெளிப்படுத்த, பேச எனப் பல சுதந்திரங்களை அடிப்படை உரிமைகளாக அரசமைப்புச் சட்டம் குடிமக்கள் அனைவருக்கும் வழங்கியுள்ளது. ஒன்றிய பாஜக அரசு கருத்துகளை வெளியிடவும் பேச்சு சுதந்திரத்தையும் மூர்க்கமாக நசுக்கி வருகிறது, எதிர்க்கட்சிகளை அடக்கி அவர்கள் குரல்வளை நெறிக்கப்படுகிறது. தபோல்கர், தோழர் கோவிந்த் பன்சாரே, பேராசிரியர் கல்புர்க்கி, கௌரி லங்கேஷ் போன்ற பகுத்தறிவாளர்கள், பகுத்தறிவை ஆதரித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப் பாடுபட்டதற்காகக் காட்டுமிராண்டித்தனமாகக் கொலை செய்யப்பட்டனர். மோடி ஆட்சியில் நாம் எதை உண்ண வேண்டும், எதை உடுத்த வேண்டும், எந்த நம்பிக்கையை நாம் பின்பற்ற வேண்டும், எந்த மொழியை நாம் பேச வேண்டும் என்பதற்கெல்லாம் இன்று மக்களுக்கு உத்தரவிடுவதே வழக்கமாகி உள்ளது. பிறகு அரசமைப்புச் சட்டம் போற்றி வழங்கிய சுதந்திரம் நாட்டில் எங்கே இருக்கிறது?

7.   சமத்துவம்

விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகு நாட்டில் அசமத்துவம் முன்பு எப்போதும் இல்லாத அளவு அதிகரித்து விட்டது. சமீபத்தில் ஆக்ஸ்ஃபாம் வெளியிட்ட ஆய்வறிக்கை நாட்டின் பரம ஏழைகளான 50 சதவீதத்தினர் மொத்தமாக வைத்திருப்பதைவிட 40 சதவீதம் கூடுதலான சொத்துகளை அதிபணக்கார ஒரு சதவீத இந்தியர்கள் உடமையாகக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தியது. அதேபோல கீழ்மட்டத்தில் அடியில் கிடக்கும் பாதி மக்கள் தொகையின் 3 சதவீதச் சொத்தைவிட சுமார் 20 மடங்கு அதிகமாக மேல்நிலையில் உச்சத்தில் உள்ள 5சதவீத பணக்காரர்களிடம், 61.7சதவீதச் சொத்து உள்ளது. நெருக்கடியில் இருந்து கைதூக்கிவிடும் மீட்பு நடவடிக்கை என்ற பெயரில் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் குழுமங்களுக்குப் பொருளாதாரத் தொகுப்புகள் லட்ச லட்சம் கோடிகளாக வழங்கும் ஒன்றிய அரசு அதே நேரத்தில், ஒப்பீட்டளவில் அதிபணக்காரர்கள் அடிக்கும் கொள்ளையில் அற்பமான சிறுதொகையான மானியங்களை மக்களுக்கு ரத்து செய்துவிட கொடூரமாக முயற்சி செய்கிறது.

இந்த நாட்டின் பிரதமரே மானியங்களை ரேவடி கலாச்சாரம் (இலவச அறிவிப்புகள் இனிப்பு மிட்டாய் தருவதுபோல தேர்தலில் வாக்குகளைக் கவரும் கலாச்சாரம்) எனக் கேலி பேசுகிறார். குறைந்தபட்ச சமத்தன்மையை ஓரளவாவது ஏற்படுத்தும் மானியங்கள் அனைத்தையும் ரத்து செய்ய முயற்சி செய்யப்படுகிறது. இதன் பின்னணியில், உலகளாவிய பட்டினிக் குறியீடு பட்டியலில் 2022ம் ஆண்டில் இந்தியா 121 நாடுகளில் பாக்கிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளைவிட பின்தங்கி 107வது இடத்தில் இருந்ததைப் பார்க்க வேண்டும். இந்தச் சூழ்நிலையில் தேவையான நிவாரண உதவிகளை ஏழை மக்களுக்கு வழங்குவதற்கு மாறாக அவர்களை வேலையைவிட்டு நீக்கியும், முறையான நிரந்தரப் பணிகளில் மிக அற்ப ஊதியத்தில் ஒப்பந்த முறையிலும், அவுட் சோர்ஸிங் மூலமும் கார்ப்பரேட்களின் கொத்தடிமைகளாக பணிநியமனம் செய்கின்றனர்.

8.  சகோதரத்துவம்

இந்துகள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் போன்ற வேறுபட்ட வகுப்பினரிடையே மத வெறுப்பு உணர்வைப் பரப்பித் தூண்டுபவர்கள் மத நல்லிணக்க அடையாளங்கள் மீதும்

தாக்குதல் நடத்துகின்றனர், நாட்டின் வேற்றுமைக்கிடையில் ஒற்றுமை பேணும் பன்முகக் கலாச்சாரத்தை அழிக்கின்றனர். இந்த நாசகாரச் செயலுக்காக அவர்கள் சமூக ஊடகங்களை, குறிப்பாகத் தேர்தல் நேரத்தில், தீவிரமாகப் பயன்படுத்துகின்றனர். பாஜக கட்சிக்கு அரசமைப்புச் சட்டத்தின் நோக்கங்களைப் பிய்த்தெறிந்து சீர்குலைப்பதே பொதுவான வழக்கமாக உள்ளது.

இந்தத் தருணத்தின் அவசரத் தேவை நாம் தூண்போல் நின்று ஒருமைப்பாடு, இறையாண்மையைப் பாதுகாப்பதும் நமது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு அறைகூவல் விடுத்தபடி தேசத்தை, தேசத்தின் ஒற்றுமையை மற்றும் அதன் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாகாப்பதுமே ஆகும்.        

 --நன்றி : நியூஏஜ் (பிப்.5 –11)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment