Friday 27 January 2023

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் இந்தியா குறித்த அவரது கண்ணோட்டம்

 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும்
இந்தியா குறித்த அவரது கண்ணோட்டம்

--கார்க்கி சக்ரவர்த்தி

இது சிலை அரசியல் சகாப்தம், அது அரசியல் பிரமுகர் சிலையோ அல்லது புராண தெய்வ உருவங்கள் சிலையோ எங்கெங்கும் சிலைகள். அப்படித்தான் சமீபத்தில் டெல்லியின் முக்கியமான ‘இந்தியா கேட்’ அருகில் நம் நாட்டின் மிகப் பிரபலமான விடுதலைப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர

போஸ் சிலையை அவருடைய இராணுவச் சீருடையில் அமைத்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. சிலையை நிறுவிய, தத்துவார்த்த ரீதியில் வெளிப்படையான வலதுசாரி கூட்டமைப்பான, ஆளும் தரப்பு நடவடிக்கையின் பின்னால் ஓர் உள்நோக்கம் இருக்கிறது: அது, தெளிவான இடதுசாரி சார்புடன் இருந்த உண்மையான ஒரு தேசபக்தனை அபகரிப்பதே ஆகும் –இன்று கண் முன்னே காண்பதற்கு நேர் முரணானது, நேதாஜியின் இந்தியா குறித்த கருத்துகள். இது தவிரவும் சுதந்திரப் போராட்டம் பற்றி மிக விரிவாக எழுதப்பட்ட வரலாற்றை மறுத்து, அதனை மீண்டும் எழுதும் முயற்சியும் நடக்கிறது.

     நாட்டில் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும், காலனியச் சுரண்டல்களுக்கு எதிராகவும் நிகழ்த்தப்பட்ட ஆயுதப் போராட்டங்கள் குறித்துப் பேசப்பட்டாலும், அன்று நிலவியதற்கு மாறான பார்வையிலிருந்து அவர்கள் முயற்சி உள்ளது. ‘இந்திய விடுதலை இராணுவம்’ (ஆஸாத் ஹிந்த் ஃபௌஜ்) மூலம் சுபாஷின் இராணுவமயமாக்கலுக்கு வலதுசாரிகளுடைய ஆதரவு என்பது அவர்கள் தேர்ந்தெடுத்த நேதாஜியின் வாழ்வு மற்றும் பங்களிப்பு குறித்த சித்தரிப்பின் ஒரு பகுதியே. இப்படி ஒற்றைப் பரிமாணப் பார்வையில் நேதாஜியை முன்னிறுத்துவதற்குப் பின்னுள்ள அவர்களது நோக்கம், காந்தி மற்றும் நேரு மீதான மக்களின் கவனக் குவிப்பிலிருந்து நகர்த்துவதும், நேதாஜிக்கும் காங்கிரசுக்கும் இடையே முன்பு இருந்த விரிசலைக் குவிமையமாக்குவதே ஆகும்.

காங்கிரஸ் அமர்வுகளும் நேதாஜியும்

    எவ்வாறாயினும், 1939 திரிபுரி காங்கிரஸ் அமர்வுக்குப் பின் காந்தி போசுக்கு இடையே என்னவெல்லாம் நடந்திருந்தாலும் அவை காங்கிரசுக்கு உள்ளேயும் வெளியேயும் வலதுசாரி –இடதுசாரி இடையேயான தத்துவார்த்த வேறுபாடுகளின் பின்விளைவுகளே ஆகும். திரிபுரி அமர்வில் அதிகாரபூர்வ அல்லது காந்தியின் வேட்பாளரான பட்டாபி சீத்தாராமையாவை எதிர்த்து நேதாஜி மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சுபாஷின் உறவு காந்தி, நேரு இருவருடன் இறுக்கமாகி பாதிக்கப்பட்டது. சுபாஷ் போட்டியிட்டதை, அத்தருணத்தில் வலதுசாரி பிரபலங்கள் தந்த அழுத்தம் காரணமாக காந்தி -- இரவீந்திரநாத் தாகூரின் வேண்டுகோளையும் நிராகரித்து-- எதிர்த்தார். தத்துவார்த்த ரீதியில் தனக்கு நெருக்கமாகவும் இடதுசாரிகளுடன் இருந்தவருமான நேரு அப்போது நடுநிலை வகித்ததும் நேதாஜிக்கு மிகக் கடுமையான அதிர்ச்சியைத் தந்தது.

          இங்கு நாம் ஞாபகம் கொள்ள வேண்டியது, காங்கிரசுக்குள் இருந்த இடதுசாரிகள், கம்யூனிஸ்ட்களின் முழுமையான ஆதரவுடன்தான் சுபாஷ் முதலில் 1938 அரிபுராவிலும் அடுத்து 1939 திரிபுரி அமர்வில் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்தார் பட்டேல் போன்ற வலதுசாரி அணியினர் சுபாஷுக்கு எதிராக உரத்து குரல் எழுப்பிய தருணத்தில் நேருவின் எதிர்பாராத மௌனம் குறித்த தனது வேதனையை வெளிப்படுத்தி நேதாஜி 1939 மார்ச் 28ல் நேருவுக்கு நீண்ட கடிதம் எழுதினார்; அதில், “தேர்தல் பரப்புரைப் பயன்களுக்காக மகாத்மா காந்தி பெயரையும் அவரது அதிகாரத்தையும் சர்தார் பட்டேல் முழுமையாகப் பயன்படுத்தியதில் எந்தத் தவறும் இல்லையா? நான் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது தேசத்தின் நலன்களுக்குக் கெடுதல் நிறைந்ததாகிவிடும் எனச் சர்தார் பட்டேல் கூறியதில் எந்தத் தவறும் இல்லையா?” என்று வேதனையை வெளிப்படுத்தினார். நாடு நெருக்கடியான முக்கிய கட்டத்தில் இருக்கும்போது காங்கிரஸ் இயக்கத்திற்குள் ஏற்படக்கூடிய பிளவு குறித்த ஐயுறவில், நேரு எந்தப் பக்கமும் ஆதரிக்காது இருந்து விட்டார்.

          இடதுசாரிகள்பால் தனது நட்பான அணுகுமுறையைக் காந்தியர்கள் ஒப்பவில்லை என நேதாஜியே உணர்ந்தார். அவர்களைப் பொருத்தவரை அது “நியாயமற்ற அதிகப்படியான நட்பு.” 1938 முதலே காங்கிரசிடம் சுபாஷ், “குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் விடுதலையைக் கோரி பிரிட்டிஷ் அரசுக்கு இறுதி எச்சரிக்கை அனுப்பவும், ஒரு தேசியப் போராட்டத்திற்குத் தேசத்தைத் தயாரிப்படுத்தத் தொடங்கவும்” வற்புறுத்தி வந்தார். “காந்தியம் புரட்சிகரச் செயல்பாடுகளை நிறுத்தி விட்டது” என்று கருதிய சுபாஷ், “காங்கிரசுக்குள் இடதுசாரி செல்வாக்கை நிறுவுவது” எப்படி என்பது குறித்த கருத்தில் மூழ்கி இருந்தார். காந்தியம் தேங்கத் தொடங்கிவிட்டது என்ற கருத்துக்கு வந்தவர், இறுதியில் 1939 மே மாதத்தில் ‘பார்வர்டு பிளாக்’ என்ற இடதுசாரி அமைப்பை நிறுவினார். விரைவில் கல்கத்தாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பிலிருந்தும் சுபாஷ் சந்திர போஸ் விலகினார்.

ஆயுதப் போராட்ட வழியைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

      வெளிநாட்டுச் சக்திகள் உதவியுடன் அவர் ஆயுதப் போராட்டப் பாதையை அமைக்க எவை காரணமாக அமைந்தன என்ற கேள்விகள் எழுகின்றன. காந்திய அகிம்சை வழி போராட்ட உத்தி மற்றும் தேசியத் தலைவர்களின் அசட்டையான அணுகுமுறையுடன் அவர் நம்பிக்கை இழந்தார் என்பது உண்மை. (அதற்காக ஆயுதப் போராட்டத் தேர்வா? இருக்காது) எனினும் முஸ்லீம் லீக் தலைவர் ஜின்னா, இந்து மகாசபா தலைவர் சவார்க்கர் இருவரையும் பிரிட்டிஷ் அரசுடன் பேரம் நடத்த ஐக்கிய முன்னணி அமைக்கச் சம்மதிக்கச் செய்வதில் அவர் அடைந்த தோல்வி குறித்த அம்சம் இதுவரை முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. சிலபல பேட்டிகளில் ஜின்னா அவர்களுக்கு ஒன்றுபட்டப் போராட்டத்திற்கு அவர் வழங்கிய ஆலோசனைகள் அர்த்தமற்றுப் போயின. “அத்தகைய ஓர் ஒன்றுபட்டப் போராட்டம் நடைபெறும் எனில், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக ஜின்னா இருப்பார்” என்ற சுபாஷின் முன்மொழிவுக்கு ஜின்னா எந்த முக்கியத்துவமும் தரவில்லை. அதுபோலவே சவார்க்கருடன் அவர் ஏமாற்றம் அடைந்தார்: சவார்க்கர் பற்றி சுபாஷ் “இந்தியப் போராட்டம்” என்ற தனது புத்தகத்தில், “இந்தியாவில் பிரிட்டிஷ் இராணுவத்தில் நுழைந்து இந்துகள் இராணுவப் பயிற்சியை எப்படிப் பெறுவது என்பதைக் குறித்து மட்டுமே திரு சவார்க்கர் சிந்திப்பதால், அவர் சர்வதேச சூழ்நிலைகளைக் குறித்த அறியாமையில் இருக்கிறார்” என்று குறிப்பிட்டார். இந்தப் பேட்டிகளின் அடிப்படையில், “உபயோகமான எதையும் முஸ்லீம் லீக் இடமிருந்தோ அல்லது இந்து மகாசபாவிடமிருந்தோ எதிர்பார்க்க முடியாது” என்ற முடிவுக்கு சுபாஷ் வந்தார். மேலும், “முகமதியர்கள் மற்றும் இந்துகள் இரு சாரார்களுக்குள்ளும் இருக்கும் பிரிட்டிஷ் ஆதரவாளர் குழுகள் மதவாதக் கட்சிகளாகத் திரண்டுவிட்டனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர்கள் மக்களைப் பிரதிநிதித்துவப்படுவதாக மதிக்க முடியாது” என்று சுபாஷ் உணர்ந்தார்.

    நாட்டின் தேசியச் சூழலுடன் வெறுத்துப் போனவராக, இந்திய விடுதலை ஒன்றும் “எதிர்காலத்தில் பிரிட்டனில் அமைய உள்ள தொழிலாளர் அரசிடமிருந்து ஒரு பரிசுப் பொருளாக” வந்துவிடாது என்று சுபாஷ் புரிந்து கொண்டார்; எனவே பிரிட்டிஷ்காரர்களைத் தூக்கி எறிவதற்கு வெளிநாட்டு உதவியுடன் ஆயுதப் போராட்டத்தைத் தொடுக்க வேண்டி இந்தியாவிலிருந்து தப்பிச் செல்ல அவர் திட்டமிட்டார். அது 1941 ஜனவரி 16 இரவு, முகமது ஜியாவுதீன் என்ற மாறுவேடத்தில் அவர் இறுதியில், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில். காபுல் வழியாக ஐரோப்பாவுக்குத் தப்பிச் சென்றார்.

நேதாஜியின் மதசார்பற்ற உணர்வு

    அவருடைய ‘இந்திய விடுதலை இராணுவம்’ (ஆஸாத் ஹிந்த் ஃபௌஜ்) குறித்து விவரிப்பதற்கு முன், ‘மதசார்பற்ற உணர்வு நிலையுடன் ஒன்றுபட்ட இந்தியா’ குறித்துத் தனது வாழ்வின் இறுதிவரை நேதாஜி கொண்டிருந்த கண்ணோட்டத்தை விவரிப்பது மிக மிக முக்கியமானது. இந்த அம்சம் பெரிதும் அறியப்படாததாக நீடிக்கிறது. பல்வேறு மதங்கள் உள்ள இந்தியா போன்றதொரு நாட்டில் மதச்சார்பின்மை என்பது மதம் இல்லாத நிலை என்று பொருள்படாது; மாறாக, மதம் குறித்து அரசின் நடுவுநிலைமை என்றும், அதாவது அனைத்துச் சமயக் குழுக்களுக்கும் இருப்பிட வெளியும், ஏற்பும் என்றே பொருள்படும். “விடுதலை பெற்ற இந்தியாவும் அதன் பிரச்சனைகளும்” என்ற கட்டுரையில் சுபாஷ் விடுதலை பெற்ற இந்தியாவுக்குத் தனது கண்ணோட்டம் குறித்துப் பேசுகிறார்: (சுதந்திர இந்தியாவில்) “அரசு மதம் என்ற ஒன்றுக்கு இடம் இல்லை” மற்றும் அங்கே “தனிநபர்களுக்கும் குழுக்களுக்கும் முழுமையான மதம் சார்ந்த மற்றும் பண்பாட்டுச் சுதந்திரத்திற்கு உறுதி அளிக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.

       ஆழமான மத உணர்வு உள்ள ஒரு மனிதராகவும் சுவாமி விவேகானந்தரின் பிரச்சார போதனைகளின் செல்வாக்கில் ஆட்பட்ட நேதாஜி தனது மத நம்பிக்கைகளைத்

தனிப்பட்ட தன் சொந்த வாழ்வியல் வட்டத்தில் வைத்துக் கொண்டு, அந்த நம்பிக்கைகளை மக்களைத் திரட்ட ஒருபோதும் பொதுவெளியில் பயன்படுத்தவில்லை. தத்துவப் பாடத்தின் மாணவராக நேதாஜி பல்வேறு மதங்களின் சமய நூல்களைக் கற்று, அவை அனைத்தின் சாராம்சங்களை உட்செறித்து ஊக்கம் பெற்றார். அவரது ‘எனது நம்பிக்கை (தத்துவம்)’ எனும் தலைப்பிலான கட்டுரையில் தீர்மானகரமாக உணர்ந்து, “உண்மையின் மிக முக்கியமான இயல்பு அன்பு. அன்பே பிரபஞ்சத்தின் சாரம், அதுவே மனித வாழ்வின் முக்கிய கோட்பாடு” என்றுரைத்தார்.

      1928ன் தொடக்கத்திலேயே ‘கலாச்சார ஒன்றிணைவு புரிதல்’ என்ற கருத்தின் மீது அனைத்து மதச் சமூகத்தினருடன் அவர் பேசினார். பூனாவில் ஆற்றிய உரை ஒன்றில், “(சொந்த மதத்தின் மீது கொண்ட) தீவிரவாதம், வெறியான பற்று என்பது நெருக்கமான கலாச்சார உறவுப் பாதையில் மிகப் பெரிய முட்கள்; வெறியான தீவிர பற்றிற்கு நல்லதொரு மாற்று மருந்து, மதச்சார்பின்மையும் அறிவியல் கல்வியையும் தவிர வேறொரு நல்ல தீர்வு இருக்க முடியாது!” என்று கூறினார்.

     இவற்றிலிருந்து சுபாஷ் மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கோ அல்லது பல மதச் சமூகத்தினரிடையே ஒன்று கலப்பது குறித்தோ ஒவ்வாமை உடையவர் அல்ல என்பது தெளிவாகிறது. கட்சி நடத்திய ஏறத்தாழ எல்லாக் கூட்டங்களிலும் பதற்றமும் கசப்பும் தலைகாட்டிய தருணங்களில் அவர் இந்த உரையை ஆற்றினார். ‘‘இன்றைய நிகழ்வுப் போக்கு செல்லும் நிலையில், இந்தியாவை வசிப்பிடமாகக் கொண்டு வாழும் வேறுபட்ட சமூகங்கள் மிகவும் தனித்து (பிரத்தேகக் குழுக்களாகப் பிரிந்து) கிடக்கின்றன” என்று அவர் வருந்தினார்.

    நேதாஜி வாழ்வில் பெரிதும் அறியப்படாத பல சம்பவங்கள், நடைமுறையில் முஸ்லீம்களை நெருக்கமாகக் கொண்டுவரும் கருத்தை எவ்வாறு அவர் அமல்படுத்தினார் என்பதைக் காட்டும். 1924ல் கல்கத்தா கார்ப்பரேஷன் தலைமை நிர்வாக அதிகாரியாக நேதாஜி பணியாற்றியபோது காலியாக இருந்த 33 இடங்களில் 25 இடங்களுக்கு முஸல்மான்களைத் தேர்வு செய்தார். அந்நடவடிக்கை அக்காலத்தின் வலதுசாரி இந்துகளால் வெளிப்படையாக விமர்சிக்கப்பட்டது. எனினும், நேதாஜி தனது நிலைபாட்டை உறுதிப்படுத்தி, “இந்துகள் இதுவரை ஒரு வகையில் ஏகபோகமாக” என்னும் அளவு அனுபவித்துவிட்டார்கள் என்று கூறி விட்டார். (இதனால்) சுபாஷ் முஸ்லீம்களைத் தாஜா செய்கிறார் என்று எவரும் துணிந்து சொல்லிவிட முடியாது! அவரது இந்நடவடிக்கை “போற்றத்தக்கச் செயல்பாடு” என்று காந்தியால் பாராட்டப்பட்டது. முஸ்லீம்கள் மற்றும் பிற அனைத்து வகுப்பினர்களுடனும் நட்பாக இணைந்து செயல்படுதல் என்ற காந்தியின் அரசியல் செய்தி, சுபாஷிடம் ததும்பும் அன்பின் இழையாகப் பதிந்தது. 1938 அரிபுரா காங்கிரஸ் அமர்வில் நேதாஜி ஆற்றிய தலைமை உரை மற்றும் அவரது பல உரைகளில் இந்து –முஸ்லீம் உறவை மேம்படுத்துவதற்கான தேவையை வலியுறுத்தின.

இந்தியா குறித்த கருத்தோட்டம் மற்றும் மத ஒருமைப்பாடு

     விடுதலை பெற்ற இந்தியா குறித்த சுபாஷின் கண்ணோட்டம் இதுவரை பேசப்படவே இல்லை. மதச்சார்பின்மை மற்றும் விஞ்ஞானக் கல்வி கருத்துகளைத் தவிர அவர் சோஷலிசக் கட்டமைப்பையும்கூட தனது எதிர்காலக் கண்ணோட்டத்தில் கற்பனை செய்தார். “அரசியல் விடுதலை அடைந்த பிறகு, இடதுசாரித்துவம் என்பது சோஷலிசத்தைக் குறிக்கும், அதன் பிறகு மக்களின் கடமை தேசிய வாழ்வைச் சோஷலிச அடிப்படையில் மறுகட்டமைப்பு செய்வதாகும்“ என்று எழுதினார். எனினும் அதே கட்டுரையில் அவர், “நமது அரசியல் விடுதலையைச் சாதிப்பதற்கு முன்பு சோஷலிசம் அல்லது சோஷலிச மறுகட்டமைப்பு என்பது ஒட்டுமொத்தமாக (உரிய காலத்திற்கு முன்) முதிராத நடவடிக்கையாகிவிடும்” என்று அவர் கூறினார்.

      அவருடைய ‘இந்திய விடுதலை இராணுவம்’ (ஆஸாத் ஹிந்த் ஃபௌஜ்) ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட போழ்திலும்கூட வகுப்பு ஒற்றுமை குறித்த அவரது கண்ணோட்டம் வலதுசாரி வரலாற்றாளர்கள், அரசியல்வாதிகளால் சிறப்பாகப் புகழ்ந்துரைக்கப்படவில்லை. தென்கிழக்கு ஆசியாவில் இறங்கும் முன் அவருடைய

இராணுவத்தின் கொடி ‘பாயும் புலி’ சித்திரத்தைத் தாங்கி இருந்தது –அது, பிரிட்டிஷ்காரர்களுடன் ஸ்ரீரங்கப்பட்டணம் போரில் போரிடும்போது வீரமரணம் அடைந்த திப்பு சூல்தான் இலட்சினையை நினைவுபடுத்துவதாக ஒத்து இருந்தது. பின்னர் தென்கிழக்கு ஆசியாவில் இந்திய தேசிய இராணுவத்தின் கொடியில் காந்தியின் சர்க்கா இலட்சினையாக இடம்பெற்றது. ஆனால் திப்பு சூல்தானின் பாயும் புலி இராணுவ வீரர்களின் தோள் பட்டை இலட்சினையில் தொடர்ந்து நீடித்தது. திப்புவின் பாயும் புலி இலட்சினை நேதாஜியால் தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு விபத்து அல்ல.

      அதுபோல, முகலாயர்களை ஒருபோதும் அவர் வெளிநாட்டவர்களாகக் கருதவில்லை என்பதையும் வெளிப்படுத்தும் மற்றொரு நிகழ்வு கட்டாயம் சுட்டிக்காட்டப்பட வேண்டும். தனது இந்திய தேசிய இராணுவத்தின் (ஐஎன்ஏ) ‘டெல்லியை நோக்கி அணிவகுப்போம்’ செய்தியை அறிவிப்பதற்கான மரபார்ந்த அணிவகுப்பை நடத்த ரங்கூனில் கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஸாஃபர் கல்லறை உள்ள வளாகத்தைத் தேர்ந்தெடுத்தார். அந்நிகழ்வின் போழ்து, 1943 செப்டம்பர் 26ல் சுபாஷ் முழங்கினார், “இந்தியர்களாகிய நாம், சமய நம்பிக்கை வேறுபாடுகளைக் கருதாது, பகதூர் ஷா நினைவைப் போற்றுகிறோம் …காரணம், அந்த மாமனிதரின் கொடியின் கீழ்தான் எல்லா மாகாணப் பிராந்தியங்களிலிருந்தும் இந்தியர்கள், வேறுபட்ட சமய நம்பிக்கைகளைப் பின்பற்றும் இந்தியர்கள், போராடினார்கள்…”

    சிங்கப்பூரில் இடைக்காலச் சுதந்திர இந்திய (ஆஸாத் ஹிந்த்) அரசை அமைத்துப் பிரகடனம் செய்தபோது அனைத்துக் குடிமக்களுக்கும் மதச் சுதந்திரம், சமமான உரிமைகள், சமமான வாய்ப்புகள் உறுதியளிக்கப்பட்டன. அவரது ஐஎன்ஏ காலத்தின்போது இந்திய தேசிய இராணுவத்திற்கு வீரர்களைத் தேர்ந்தெடுத்தபோது அவர்கள் எல்லா மதங்களின் சமூகங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் சுபாஷ் உறுதியாக இருந்தார். வீரர்கள் சம பந்தியாக சேர்ந்து உணவு உண்ணல், அவர்களுக்கு இடையே கலாச்சார நெருக்கம் பிணைப்பு இவற்றை அவர் அறிமுகப்படுத்தியதுடன், ‘‘இந்தியாவின் ஒற்றுமை -- கடந்த காலம் மற்றும் நிகழ்காலம்’’ குறித்த உரைகளையும் ஆற்றினார். அந்த உரைகளில் முகலாயர் ஆட்சியில் இந்துகளும் முஸ்லீம்களும் எப்படிச் சகோதரர்களாக வாழ்ந்தார்கள் என்பதை அவர் எடுத்துக் கூறினார்.

போரின்போது சுபாஷின் கொள்கை நிலைபாடு

     ஜெர்மன் நாஜிகளின் கொடூரங்களைச் சுபாஷ் நன்கு அறிந்திருந்தும், அவர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக மாற்றமுடியாத பிடிவாதகாரராக இருந்த காரணத்தால், போர் நெருக்கடியைப் பிரிட்டிஷ்காரர்களைத் தூக்கி எறிய வாய்ப்பாகப் பயன்படுத்த விரும்பினார். ஜெர்மன் நாஜிகளின் கூட்டாளியான ஜப்பானிய பிரதமர் டோஜோவிடமிருந்து உதவி பெறலாம் என்பது அவரது கொள்கை நிலைபாடு. அந்த நிலைபாட்டை இடதுசாரி காங்கிரஸ்காரர்கள் மற்றும் குறிப்பாகப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைவிட ஜெர்மன் நாஸிசம், ஜப்பானிய ஃபாஸிசம் அதிக ஆபத்தானவை என்று கருதிய கம்யூனிஸ்ட்கள் ஏற்கவில்லை. நேசஅணி படைகள் போரில் இறங்க, ஹிட்லருக்கு எதிராகச் சோவியத் யூனியனும் போரில் ஈடுபடவும் உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட்களின் நிலைபாடு மாறியது.

       அந்த மாறுதல், அதாவது ஏகாதிபத்தியப் போர் என்பதிலிருந்து மக்கள் யுத்தம் என்று போரின் தன்மை மாறியது இந்திய மக்கள் திரளுக்குத் தெளிவாக விளங்கவில்லை. சுபாஷின் வாதத்திற்கு எதிராக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய பொதுச்

செயலாளர் பிசி ஜோஷி பின்வருமாறு எழுதினார்: “இந்தியா மற்றும் கீழைக் காலனிய நாடுகளில் உள்ள மக்கள், ‘ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து விடுதலை ஒரு பரிசுப் பொருளாக வழங்கப்படாது’ என்பதைத் தங்கள் அனுபவங்களால் கற்றிருக்கிறார்கள்; அவர்கள் மற்றொன்றையும் நன்கு அறிவார்கள், அது ஜப்பானிய ஃபாஸிஸ்டுகளின் இரத்தக் கறை படிந்த வாள் முனையிலும் அவர்களுக்குச் சுதந்திரம் வந்துவிடாது என்பதையும் அறிவார்கள்.” இந்தியாவின் கிழக்கு எல்லையில் கவிந்து சூழ்ந்து வரும் ஜப்பானிய ஃபாஸிசத்தின் ஆபத்தை பிசி ஜோஷி சுட்டிக் காட்டினார். மேலும் அவர் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி  ஜப்பானுடன் கூட்டுச் சேரும் சுபாஷின் அணுகுமுறை உத்தியை எதிர்த்தார்.

    வங்கத்தின் கிழக்கு எல்லையில் சிட்டஹாங் மீது 44முறை குண்டுவீசித் தாக்கப்பட்டது, அதுபோல கல்கத்தா, விசாகப்பட்டினம் முதலியன 40களின் தொடக்கத்தில் குண்டுவீச்சைச் சந்தித்தன. சுபாஷ் தனது இடைக்கால அரசை சிங்கப்பூரிலிருந்து ரங்கூனுக்கு மாற்ற சிட்டஹாங் வழியாக டெல்லி நோக்கிய அணிவகுப்புப் பாதையை அறிவித்தபோது, ஜோஷி தனது கவலையை வெளியிட்டார். உண்மையில், நேதாஜியின் பழைய நண்பரும் பர்மிய விடுதலைப் போராட்ட வீரருமான போ அவுங் சன் பழிபாவம் அஞ்சாத ஜப்பான் அரசின் கொடூரத் தன்மை குறித்து எச்சரித்தாலும் சுபாஷ் சந்திர போஸ் தனது நிலைபாட்டை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை, அவர் ஜப்பானியர்களை இந்தியாவின் நண்பர்களாகக் கருதினார்.

தேசிய இயக்கத்துடன் தொடர்பு

      எனினும், சுபாஷ் இந்திய தேசிய இயக்கத்துடன் தொடர்பில் இருந்தார், காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்குத் தனது மனப்பூர்வமான ஆதரவை நல்கினார். பொதுவாக முஸ்லீம் சமூகத்தினரை ஈர்க்கத் தவறிய நிலையில் அந்த இயக்கத்தின் வரையறைகளை புரிந்து கொண்டாலும், ஹிருஷக் பிரஜா கட்சி உட்பட அச்சமூகத்தின் பல்வேறு முற்போக்கு முஸ்லீம் குழுக்களைப் பரந்துபட்ட தேசபக்த முன்னணி அமைக்க சுபாஷ் வற்புறுத்தினார். அவர் தனது ஆஸாத் ஹிந்த் ரேடியோ மூலம் இந்திய மக்களுடன் தொடர்பில் இருந்தார்.

தன்னகத்தே எப்போதும் காந்தி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் மீது அவர் எந்தத் தவறான உணர்வையும் கொண்டிருக்கவில்லை; சொல்லப் போனால் தனது படைப் பிரிவுகளுக்குக் காந்தி பிரிகேடு, ஆஸாத் பிரிகேடு, நேரு பிரிகேடு (படையணிக் குழு) எனப் பெயரிட்டார். பெண்கள் படைப் பிரிவு, ராணி ஜான்சி ரெஜிமெண்ட் என்று அழைக்கப்பட்டது. 1944 ஜூலை 6ல் ரங்கூன் ரேடியோ மூலம் அவர் ஒலிபரப்பிய உரையில் காந்தியின் ஆசிகளை வேண்டினார். நேதாஜிதான் முதன் முதலாக காந்தியைத் “தேசப் பிதா” என்று விளித்து அழைத்தார். அவர் தனது உரையை, ‘இந்திய விடுதலைக்கான இந்தப் புனிதப் போரில் நாங்கள் உங்கள் ஆசிகளை, நல்வாழ்த்துகளை வேண்டி நிற்கிறோம். ஜெய் ஹிந்த்!’ என்ற வார்த்தைகளுடன் நிறைவு செய்தார். உண்மையில், இந்தக் காலக் கட்டத்தின்போது, ‘ஜெய் ஹிந்த்!’ என்பதைத் தேசிய வாழ்த்துப் பேரொலி முழக்கமாக அவர் பயன்படுத்தினார்.

போர் முடிந்தது

    1945 மே 9ல் பெர்லின் வீழ்ச்சியுடன் ஹிட்லர் முறியடிக்கப்பட போர் முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து ஜப்பான் தோல்வியுடன் சுபாஷ் 1945 ஆகஸ்ட்டில் பின்வாங்க நேர்ந்தது. ஒரு விமான விபத்தில் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணமடைய அவரது மறைவு இந்திய மக்களுக்கு மாபெரும் இழப்பானது. இந்தத் துயர சம்பவத்திற்கு அவருடைய கடைசி தோழர் ஹபிபுர் ரஹ்மான் மற்றும் மருத்துவமனையில் இருந்த செவிலியர் மட்டுமே சாட்சி. எனினும் மரணமடைவதற்கு மூன்று நாட்கள் முன்பு, 1945 ஆகஸ்ட் 15ல் இந்தியர்களுக்கு அவர் விடுத்த செய்தி வெல்ல முடியாத ஊற்றெடுக்கும் அவரது உற்சாக உணர்வைப் பிரதிபலிக்கிறது. பின்வாங்கிய தனது செயலை ஒரு ‘தற்காலிகத் தோல்வி’ என்றே கருதினார், எதிர்கால நம்பிக்கையுடன் இருந்தார்.

அவருடைய சுய தியாகத்தால் ஈர்க்கப்பட்ட காந்தி ஹரிஜன் பத்திரிக்கையில், என்னுடைய புகழ்தலும் வியத்தலும் இதற்கு மேல் செல்ல முடியாது” (எல்லையற்ற

புகழ்ச்சிக்கும் வியப்புக்கும் உரியவர் சுபாஷ்) என்று எழுதினார். நேதாஜி தனது கடைசி செய்திகளில் ஒன்றில் இந்திய தேசிய இராணுவப் படையின் மூத்தோரை –அவர்கள் திரும்பிய பிறகு– காங்கிரஸின் வழிகாட்டலின் கீழ் அகிம்சை வழியில் தேச ஒற்றுமைக்காகப் பாடுபடுங்கள் என்று கேட்டுக் கொண்டார் என்பதைப் பின்னர் அறிய வந்தபோது மகாத்மா மீண்டும் உறுதியளிக்கப்பட்டவராக உணர்ந்தார்.

நேதாஜியை அபகரிக்கும் முயற்சி

     காங்கிரசுடன் சுபாஷுக்கு இருந்த மிகக் கசப்பான உறவைப் பெரிதுபடுத்திக் காட்டும் முயற்சிகள் இப்போதும் செய்யப்படுகின்றன. 1946 விசாரணைகளின்போது காங்கிரஸ் தலைவர் நேரு, புலாபாய் தேசாயுடன் இணைந்து மூன்று மூத்த ஐஎன்ஏ போர் வீரர்களைப் பாதுகாக்க –அவர்கள் ஒவ்வொருவரும் இந்து, சீக்கியம் மற்றும் முஸ்லீம் என வேறுவேறு மத நம்பிக்கை உடையவர்களை-- ஆதரித்த காட்சியைக் காண நேதாஜி உயிருடன் இல்லாதது துரதிருஷ்டமே. காந்தி மற்றும் நேருவுடன் கருத்தோட்ட வேறுபாடுகள் சுபாஷுக்கு உண்டு, ஆனால், வலதுசாரிகள் மற்றும் நாட்டில் இருந்த மதவாதக் கட்சித் தலைவர்களுடன் அவருக்கிருந்த கருத்து வேறுபாடுகளோ மிக மிகக் கூடுதலாகக் கடுமையானவை மற்றும் ஆழமாக வேரோடியவை ஆகும். உண்மை இவ்வாறு இருக்க, பாஜக போன்ற வலதுசாரி ஆட்சியாளர்கள் இன்று சுபாஷ் சந்திர போசை அபகரித்துச் சொந்தம் கொண்டாட முயற்சிப்பது ஒரு வரலாற்று முரண்நகை!

காதலாகிக் கசிந்த பேரிலக்கியக் காதலன்

சுபாஷ் குறித்து அவரை ஓர் இலட்சிய இலக்கியக் காதலனாக நினைவில் நிறுத்த வேண்டிய தேவை உள்ளது; அந்த அளவு அவருக்குத் தன் உதவியாளரான ஆஸ்திரிய சுருக்கெழுத்தாளர் எமிலி ஷென்கல் (Emilie Schenkl) உடன் ஆழமான உறவு இருந்தது.

1936 டிசம்பர் 26ல் அவரைச் சுபாஷ் இரகசியமாக மணந்தார். தனது எதிர்காலம் குறித்து நிச்சயமில்லாது இருந்த சுபாஷ், எமிலிக்கு எழுதிய கடிதத்தில், “…ஆனால் என் அன்பே, என்னை நம்பு, நீ என் இதயத்தில், என் எண்ணங்களில், எனது கனவுகளில் எப்போதும் வாழ்வாய். இந்த வாழ்வில் விதி நம்மை அவ்வாறு பிரிக்குமென்றால், எனது அடுத்த பிறவியில் உனக்காக நான் ஏங்கிக் காத்திருப்பேன்.” (படம் நன்றி :  NETAJI RESEARCH BUREAU )     [குறுந்தொகையில் அம்மூவனார் எழுதிய  பாடல் 49ல் தலைமகள், “இம்மை மாறி மறுமை ஆயினும் / நீயா கியர் என் கணவனை / யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே” என்று கசிந்துரைத்த அதே உணர்வைத் தலைமகனாகச் சுபாஷ் எமிலியிடம் வெளிப்படுத்துகிறார் எனில் சுபாஷ் செவ்விலக்கியக் காதலர்தாமே –மொழிபெயர்ப்பாளர் இணைப்பு)

          இந்தியாவில் இன்று சில மாநிலங்களில் வேறுபட்ட மத நம்பிக்கை உள்ளவர்கள் இடையே கலப்பு மணத்தைத் தடை செய்யும் சட்டங்களைக் கொண்டுவர எத்தனிக்கும்போது, ஒருபோதும் அத்தகைய உறவுகளை எதிர்க்காத, வேறுபட்ட மொழி

பேசும், வேறுபட்ட பழக்க வழக்கங்கள் உள்ள, வேறொரு நாட்டின் பெண்மணியைத் தேர்ந்தெடுத்து அன்பு செய்த சுபாஷை நாம் ஞாபகம் கொள்ள வேண்டிய தேவை உள்ளது, அவருடைய காதல் அழிவில்லாத என்றுமுள நித்தியமானது. அந்த அன்பின் அடையாளத்தைத் தாங்கி அவர்களுடைய ஒரே செல்வ மகள் அனிதா நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

          பரவலாக அங்கீகாரம் பெற்ற இந்திய தேசிய இராணுவத்தின் ஆயுதம் தாங்கிய போருக்காக மட்டுமல்லாமல், சோஷலிசக் கட்டமைப்புடன் மதசார்பற்ற உள்ளுணர்வை உயர்த்திப் பிடித்த அவருடைய ஒன்றுபட்ட இந்தியா குறித்த கருத்தோட்டத்திற்காகவும் இந்திய மக்கள் மாவீரர் நேதாஜி அவர்களை நெஞ்சில் நிறுத்தி ஞாபகம் கொள்ள வேண்டும். இறுதியாக அதனுடன்கூட இந்தியத் திருமகன் நேதாஜியை, எமிலிக்காக அவர் கொண்டிருந்த நித்தியப் பேரன்பிற்காகவும்கூட நாம் அவரை என்றும் நினைவில் நிறுத்துவோம். அத்தகைய பேரன்பின் உருவகமான சுபாஷ் சந்திர போஸ் எமிலிக்கு ஒரு கடிதத்தில் எழுதினார், “நான் காதலித்த முதல் பெண் நீதான். நீயே இறுதியாக இருக்கவும் கடவுள் எனக்கு அருளட்டும்! என்னுடைய பேரன்பிற்கு உரியவளே, சென்று வருகிறேன்!”               

--நன்றி : நியூஏஜ் (ஜன.22 --28)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment