Saturday 28 January 2023

'மகாத்மா காந்தியடிகள்' என்ற தலைப்பில் ஒரு மாணவியின் உரை

 


மகாத்மா காந்தியடிகள்

          முதலில் ‘வாழ்விக்க வந்த காந்தி’ என்பதைவிடவும் இன்றும் நல்வழியில் ‘நம்மை வாழ்வித்து வரும் காந்தி'யை வணங்கி என் உரையைத் தொடங்குகிறேன்.

பேராசிரியர் ஒருவரின் கட்டுரையில் குறிப்பிட்ட செய்தி: அவர் தென்னாப்பிரிக்கா பயணம் செய்தபோது, அங்கிருந்தவர்கள் “நீங்கள் காந்தி பிறந்த மண்ணிலிருந்து வந்திருக்கிறீர்கள்; உங்களை நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்களாம். எவ்வளவு பெருமையாக இருக்கிறது. காந்தியைச் செதுக்கியது அவரது தென்னாப்பிரிக்க வாழ்க்கை. இன்று அந்த மக்கள் காந்தி குறித்து அவர்களது அன்பிற்குரிய தலைவர் நெல்சன் மண்டேலா உரைகளிலிருந்துதான் அறிந்து கொண்டார்கள்.

    ஆனால் நம் மண்ணில் பிறந்த எம்மான் காந்தியை நாம் எந்த அளவு தெரிந்திருக்கிறோம். பெரும்பாலானவர்களுக்கு வருத்தம் இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி ஞாயிற்றுக் கிழமை வந்து விட்டதே என்று. அந்தப் பேராசிரியர் தனது அனுபவத்தை வருத்தத்துடன் மேலும் கூறுகிறார்: டெல்லி விமான நிலையம் வந்திறங்கி டாக்ஸி டிரைவரிடம், 'ராஜ்காட் செல்ல வேண்டும்’ என்று கூறினேன். டிரைவர், ‘ராஜ்காட் எங்கே இருக்கிறது’ என்று கேட்டார். அகமதாபாத் ரயில் நிலையச் சர்வோதயா புத்தக ஸ்டாலில் காந்தி குறித்த புத்தகம் கேட்டேன். கடையில் இருந்த முதியவர் ஏற இறங்கப் பார்த்து ‘இப்போ யார் சார் காந்தியைப் படிக்கிறார்கள்’ என முணுமுணுத்தபடி தூசு படிந்த புத்தகக் குவியலில் இருந்து தேடி காந்தி சுயசரிதையைத் தந்தாராம். இந்நிலையை இத்தகைய விழாக்கள், போட்டிகள் நடத்துவதன் மூலம் நிச்சயம் மாறும். வாய்ப்புக்கு நன்றி கூறி தொடர்கிறேன்.

          காந்தி என்றதும் எவர்க்கும் அவரது சத்தியம், அகிம்சை, மற்றும் சத்தியாகிரகம் நினைவுக்கு வரும். சத்தியம்தான் காந்தியடிகளுக்குக் கடவுள். ஆனால் இதனோடு மட்டும் அவரது ஆளுமையை யாரும் குறுக்கிவிட முடியாது. இதனை அடிப்படையாகக் கொண்டு அவர் கட்டமைத்த இயக்கங்கள் பல. ஆனால் எந்த இயக்கத்திலும் அவர் எந்த எதிரியை எதிர்த்தும் போராடவில்லை. அவருக்கு எதிர்தரப்பு மட்டுமே உண்டு. அவர்களின் மனங்களை மாற்றுவதற்கே அவர் போராடினார். ஜனநாயகவாதி, மாற்றுக் கருத்துடையவர்களையும் மதித்த பண்பாளர் அவர், அதற்கான உதாரணங்கள் பல.

          லண்டனில் பாரிஸ்டர் பட்டப் படிப்பு மாணவராக இருந்தபோது ‘தாவர உணவு உண்போர் சங்க’த்தில் உறுப்பினராக இருந்தார். சங்கத்தின் கொள்கைகளுக்கு மாறாக டாக்டர் தாமஸ் அலின்சன் செயற்கை கருத்தடையை ஆதரித்து நூல் வெளியிட்டபோது அவரை சங்கத்திலிருந்து நீக்கினார்கள். ஆனால் காந்தியோ அந்த நூலின் கருத்துக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் டாக்டர் தாமஸ் அவர்களுக்குத் தனது கருத்தைக் கூறும் உரிமை உண்டு என வாதாடினார்.

    காந்தியடிகளின் மிக முக்கிய சாதனையும் பெருமையும் அவர் இந்துகள் –

முஸ்லீம்களை இணைத்ததையும், விடுதலைப் போரில் சாதாரண மக்களையும், பெருமளவில் பெண்களையும் ஈடுபடச் செய்ததுதான். இந்து மற்றும் இஸ்லாமிய மக்களை இணைத்ததுடன் திருப்தி அடையாத மகாகவி தாகூர், காந்திக்கு ஒரு யோசனை கூறினார்: “இந்து இஸ்லாமிய மக்களை இணைத்தது சரி, கிழக்கையும் மேற்கையும் இணைக்க வேண்டாமா?”

     காந்தி அதற்கு தனது ‘யங் இந்தியா’ இதழில் பதில் கூறினார்: “மகாகவி நினைப்பதைப் போல மானுட சமுதாயத்தையே இணைக்க விரும்புபவன் நான். எனது வீட்டின் கதவுகளும் சன்னல்களும் எப்போதும் திறந்திருக்கும். எத்திசையிலிருந்தும் காற்றும் ஒளியும் வரலாம். ஆனால் வெளியிலிருந்து வீசும் காற்று என்னை வீழ்த்திவிட அனுமதிக்க மாட்டேன்” என்றார்.  தாகூரின் கருத்தை மதித்தாலும் காந்தி தன் தேச நலனை, தன் தனித்துவத்தை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை என்ற உறுதியை வெளிப்படுத்தினார்.

    அதேபோல நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அப்பழுக்கற்ற தேச பக்தியை மதித்தாலும் விடுதலைக்காக அவரது ஆயுதப் போர் முறையை ஆதரிக்கவில்லை, தனது அகிம்சை கொள்கையைக் கைவிடவும் இல்லை. மற்றொரு உதாரணம், மாவீரன் பகத் சிங் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய மகாத்மா காந்தி முயற்சிக்கவில்லை என்று சொல்லப்படுவதும் ஆகும். உண்மையில் காந்தியடிகள் தூக்கு தண்டனையை ரத்து செய்ய பலமுறை வைஸ்ராய்க்குக் கடிதம் எழுதினார், இறுதியில் நேரில் சென்றும் வாதிட்டார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. இவ்வாறு அனைத்துத் தருணங்களிலும் மாற்றுக் கருத்துக்கு மதிப்பளித்தவர் காந்தி.

          மற்றொரு முக்கியமான பெருமை பொது இயக்கங்களில் பெருமளவு பெண்களை ஈடுபடச் செய்தது. காந்தியடிகள் வருவதற்கு முன்பும் போராட்டங்கள் நடந்தன. முக்காடிட்டு வீட்டிற்குள்ளே அடைபட்டுக் கிடந்த பெண்கள் அவற்றில் கலந்து கொள்ளவில்லை. பெண்களின் பங்கேற்பின்றி எந்த இயக்கமும் வெற்றி பெறாது என்பதைக் கூறியவர் காந்தி. சாதாரண பெண்களும் அவரது சொற்களைக் கேட்டு மாபெரும் எண்ணிக்கையில் இயக்கங்களில் கலந்து கொள்ளவும் செய்தனர். அதற்கான பெருமை காந்தியடிகளையே சாரும்.

    காந்தியடிகள் நாட்டு விடுதலைக்காக மட்டுமின்றி சமூக விடுதலைக்காகவும் போராடினார், அதற்கு அவர் நம்பியது விடாப்பிடியான உறுதி மற்றும் மக்களைத் திரட்டி அவர்களின் ஒற்றுமையைக் கட்டிக்காப்பதே. அதிலும், அந்த இயக்கங்களில் பெண்கள் பங்கேற்பதை அவர் பெரிதும் வற்புறுத்தினார்.

      உப்புச் சத்தியாகிரகம் என்ற தண்டி யாத்திரை மிகவும் புகழ்பெற்றது, நாம்

அறிவோம். ஆனால் காந்தியடிகள் அதில் ஆஸ்ரமத்தின் ஆண்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி கொடுத்து ஆண்கள் பங்கேற்புடன் நடத்தினாரே தவிர, பெண்களை அனுமதிக்கவில்லை. பெண்கள் கலந்து கொள்ளும் நேரம் வரும் என்றார். அதைச் செய்தும் காட்டினார்.

உப்புச் சத்தியாகிரகத்தைவிட பிரம்மாண்டமானது 1933 –34ல் அவர் நடத்திய தீண்டாமைக்கு எதிரான யாத்திரை. நவம்பர் 7ல் தொடங்கிய யாத்திரை மறு ஆண்டு ஆகஸ்ட் 2ல் நிறைவடைந்தது, ஒன்பது மாதங்கள் நடைபெற்ற இயக்கம். அந்த ஒன்பது மாதங்களும் வேறு எந்தச் செயல்பாடுகளிலும் அவர் ஈடுபடவில்லை. அதைவிட முக்கியம், அந்த இயக்கத்தில் பெருமளவு பெண்கள் பங்கேற்றதாகும்.

       விராஜ்பூரில் பெண்களுக்கான பிரத்தேகக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு

இடையூறுகள் ஏற்படுத்தப்பட, கூட்ட இடத்திற்குப் பெண்கள் 20 மைல் சுற்றி வந்தனர். அதுமட்டுமா, விடியற்காலை நாலே கால் முதல் நாலே முக்கால் வரை நடைபெறும் பிராத்தனைக் கூட்டங்களிலும் பெண்கள் ஆயிரக் கணக்கில் கலந்து கொண்டனர். மீராபென் குழு ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு பெண்களைத் திரட்டினார். பெண்களிடையே உரையாற்றினார்.

          தீண்டாமைக்கு எதிரான இந்த யாத்திரையின் மற்றுமொரு சிறப்பு, இயக்கத்திற்கு நன்கொடை கோரியபோது, பெண்கள் தாங்கள் அணிந்திருந்த நகைகளைக் கழற்றி அளித்ததாகும். அப்படி நிதி கொடுப்பவர்கள் பின்பு மீண்டும் நகை அணியக் கூடாது என்று வேறு நிபந்தனை விதித்தார். இதில் முக்கியமான ஒரு கோட்பாடு உள்ளது.

பெண்கள் அழகுப் பதுமைகளாகவும், நகைகளை மாட்டிக் கொள்ளும் நகை ஸ்டாண்டாகவும் இருக்கக் கூடாது என்ற இந்தக் கருத்தையே நம் தந்தை பெரியாரும் வலியுறுத்தினார். அவர்கள் பெண் விடுதலைக்காக நின்றார்கள், சமூகத்தில் பெண்களின் சக்தியை மதித்தார்கள். அதைத் தெரிந்து கொண்டே அத்தனை அத்தனை பெண்களும் நகைகளை  வாரி வழங்கினர்.

அந்த யாத்திரையில்தான் எத்தனை எத்தனை அற்புதமான காட்சிகள். நாக்பூர் தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்புக்கு ஒருமுறை சென்றபோது அங்கிருந்த அய்யங்கர் என்ற பெண்மணி தன் வாழ்நாள் சேமிப்பான தங்க வளையல்களைக் கழற்றித் தந்தார். ஒரிஸாவில் பல மாணவிகள் அந்த யாத்திரையில் கலந்து கொண்டனர், களப்பணி ஆற்றினர். அந்த மாணவிகள் 21 நாட்கள் அந்தப் பயணத்தில் உடன் சென்றனர். ஆனால் நம் துரதிருஷ்டம், தண்டி யாத்திரை போல, கள்ளுக்கடை மறியல், அன்னியத் துணிகள் புறக்கணிப்பு இயக்கங்கள் ஆவணப்படுத்தப்பட்டது போல காந்தியடிகள் நடத்திய தீண்டாமை ஒழிப்பு இயக்கம் பதிவுசெய்யப்படாமல் போனது.

உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், அடிமைப்படுத்திய அன்னிய ஆட்சியை விரட்டி விடுதலை பெறுவதற்கு இந்த இயக்கங்கள் எல்லாம் எதற்கு? அதுதான் மகாத்மா காந்திஜி. விடுதலை பெறுவதற்கும், பெற்ற விடுதலையைப் பேணிக் காக்கவும் தகுதி உடையதாகச் சமூகத்தைத் தயார்ப்படுத்தவும், பெண் விடுதலை மற்றும் சமூக விடுதலை பெறவும் நம்மை அவர் தயாரித்தார்.

சபர்மதி நதிக்கரையில் அவர் அமைத்த ஆசிரமத்தில் தொடக்கத்தில் 25 பேர்களே இருந்தனர். காந்தியிடம் ஒரு பத்திரிக்கை நிருபர் ‘இந்த 25 பேர்களை வைத்துக் கொண்டு நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள்?’ என்று கேட்டார். கோபப்படாமல் சிரித்துக் கொண்டே காந்தி, “இந்த 25 பேர்களை வைத்துக் கொண்டுதான் இந்தியா பயணிக்கும் திசையை மாற்றப் போகிறேன்” என்றார். அப்படித்தான் இந்தியா காந்தி தேசமானது. சொன்னபடி நடந்தும் காட்டினார்.  தனது வாழ்வே தான் வழங்கும் செய்தி என்றார்.

ஆனாலும் சமூகத்திலும் உலகிலும் சாந்தி நிலவவில்லை. ஏற்றத் தாழ்வுகள் நீங்கி சமத்துவமும் மலரவில்லை. அதைத்தான் நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளும் உரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட பேராசிரியரின் அனுபவங்களும் ஆகும். ஆனாலும் நாம் சோர்வடையத் தேவையில்லை. காந்தியடிகளின் தொடக்க காலப் போராட்டங்களில் அவர் தோல்வியே அடைந்தார். இருப்பினும் தன் முயற்சிகளை அவர் கைவிடவில்லை.

அப்படித்தான் நமக்கும் காந்தியடிகள் கொள்கைகள் இன்று நமக்கு ஒளிவிளக்காகத் திகழும்.  “கருணை, ஒற்றுமை, கதிரொளி பரவி சாந்தி நிலவ வேண்டும், உலகிலே சாந்தி நிலவ வேண்டும். கொடுமை செய் தீயோர், மனமது திருந்த நற்குணம் அது புகட்டிடுவோம்! மடமை அச்சம் அறுப்போம், மக்களின் மாசிலா நல்லொழுக்கம் வளர்ப்போம்! மகாத்மா காந்தி கட்டளை அதுவே – கடமை மறவோம், அவர் கடன் தீர்ப்போம்!”

நன்றி, வணக்கம்!

 

No comments:

Post a Comment