Thursday 7 July 2022

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 66 -- குருசரண் பட்நாயக்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 66

குருசரண் பட்நாயக்--

தலைச் சிறந்த சிபிஐ தலைவர்

மற்றும் இலக்கிய ஆளுமை


--அனில் ரஜீம்வாலே

ஒடிஷா மாநிலத் தொடக்கக் கால கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடித் தலைவராகவும் நாடறிந்த புகழ்பெற்ற சிபிஐ தலைவராகவும் மற்றும் தேசம் புகழும் இலக்கியவாதியாகவும் ஒரே நேரத்தில் திகழ்ந்த தனித்துவமான ஆளுமையாளர்தான் குருசரண் பட்நாயக். ஒரு சிறு நிலக்கிழார் குடும்பத்தில் 1917 அக்டோபர் 31ம் நாள் பிறந்தார். நான்கு மாதக் குழந்தையாக இருந்தபோதே பெற்றோரை இழந்தார். தந்தை இறந்ததும், அவரில்லாமல் உயிர்வாழ விரும்பாத தாயும் தற்கொலை செய்து கொண்டார். குருசரணும் அவரது சகோதரர் ஆனந்தாவும் பாட்டியின் பாதுகாப்பில் விடப்பட்டனர்.

        விரைவில் பூரி அனுப்பப்பட்ட அவர் தனது தாய்வழி மாமாவுடன் வசித்தார். அங்கிருந்த காங்கிரஸ் ஆசிரமம் போலீசாரால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. எனவே அதன் பின்னர் குருசரண் ஜகந்நாதர் ஆலயத்தின் உள்ளே அர்ச்சகர்களுடன் தங்கினார் அவர்களும் இவர் மீது பெரும் அன்பு கொண்டனர்.

          குருசரண் மிக இளம் வயதிலேயே சுதந்திர இயக்கத்தில் ‘வானர சேனா’ (குரங்குப் படையில்) செயல்பாட்டாளராகச் சேர்ந்து கொண்டார். 1930ல் தனது இளம் 13 வயதிலேயே பள்ளி வாயிற் மற்றும் கடைகளின் முன் மறியலில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் அவரும் அவரது மாணவ நண்பர்களும் கடுமையாகப் பிரம்படி தண்டனை பெற்றனர்.

            1932 காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ள அவர் டெல்லிகூட சென்றார், அங்கே கைது செய்யப்பட்டு பல சரித்திரச் சம்பவங்கள் நிகழ்ந்த புகழ்பெற்ற கூனி தர்வாஜா நுழைவாயில் அருகே உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். கட்டாக் திரும்பிய பிறகு மீண்டும் கைதாகி பாட்னா அனுப்பப்பட்டார்; அங்கே கூரை மற்றும் சுவர்கள் தகரத்தால் அடைக்கப்பட்ட நெருக்கடியான சிறு அறைகளில் தகிக்கும் வெப்பத்தில் மூவாயிரம், நான்காயிரம் பேர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். இவ்வளவு மிகக் கடுமையான சூழ்நிலையில் ஒரிசாவிலிருந்து வந்த கைதிகள் அழிந்தனர். குருசரணும் பெரியம்மை வைசூரியால் பீடிக்கப்பட்டார். சிறையிலிருந்து அவர் வந்ததும் அவரது பாட்டியார் அவரைக் காசி வித்யா பீடத்திற்கு அனுப்பிவிட்டார்.

      காசி வித்யா பீடத்தில் பிராண்நாத் பாட்நாயக், சரத் பட்நாயக் போன்ற புரட்சிகர மாணவர்கள் படித்து வந்தனர். குருசரணை ஆச்சார்ய நரேந்திர தேவ் ஈர்க்க, குருசரண் அவரது ஆழமான செல்வாக்கிற்கு ஆட்பட்டார். அவருக்கு நரேந்திர தேவ் சோஷலிசம் குறித்துக் கற்பித்தார். குருசரண் வித்யாபீடத்திலிருந்து பட்டம் பெற்றார். நரேந்திர தேவ் தாக்கத்தால் குருசரண் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் (சிஎஸ்பி) சேர்ந்தார். பெனாரஸிலிருந்து திரும்பியதும் நவ க்ருஷ்ணா சௌத்திரி மற்றும் பகவதி சரண் பாணிகிரகியுடன் சேர்ந்து சிஎஸ்பி கட்சியை அமைக்கும் செயலில் இறங்கினார்.

    குருசரணுடன் சேர்ந்து அவரது மூத்த சகோதரர் ஆனந்த் பட்நாயக்கும் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். அவர் கம்யூனிச இயக்கத்தில் முன்னணிப் பிரமுகரானார்.

முற்போக்கு இலக்கிய இயக்கம்

            ஒரிசாவில் முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கம் மிகவும் முன்னதாக 1934லேயே உருவாகியது என்பது பலருக்கும் வியப்பாக இருக்கும். உண்மையில் அதன் தொடக்கத்தை 1932 –33களிலேயே காணலாம். ‘நவயுக சாகித்திய சம்சத்’ (புதிய சகாப்தத்தின் இலக்கியச் சமூகம்) என்ற அமைப்பு கட்டாக், ரவீன்ஷா கல்லூரி வளாகத்தில் பகவதி சரண் பாணிகிரகி தலைமையிலான எட்டு உறுப்பினர்களால் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பில் ஆனந்த் பட்நாயக், குருசரண் பட்நாயக், வி(பி)ஜய சந்திர தாஸ் மற்றும் சிலர் தீவிரமாகப் பங்கேற்றனர். இவ்வமைப்பு ஒரிசாவில் கம்யூனிச இயக்கம் அரும்பி முளைவிட உதவியது. அதே நேரத்தில் அது சிஎஸ்பி கட்சியின் கலாச்சார அணியாகவும் செயல்பட்டது.

            லக்னோவில் முற்போக்கு எழுத்தாளர் கூட்டமைப்பு (PWA) மாநாடு நடைபெறுவதற்கு ஆறு  மாதங்களுக்கு முன்னதாக 1935 நவம்பர் 29 முதல் டிசம்பர் 6வரை இம்மாநாடு நடைபெற்றது.

உத்கல சாம்யாபதி கர்மி சங்கம் மற்றும் ‘சாரதி’ இதழ்

            (உத்கல இன்றைய ஒடிஷா மாநிலத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியைக் குறிப்பது.

அது முந்தைய கலிங்க தேசம் என்பதால் கலிங்க தேசத்தின் வடக்குப் பகுதி எனச் சுட்டும் வகையில் உத்தர கலிங்கா என்றாகி உத்கல ஆனது எனவும் சொல்வார்கள்) ஒடிஷாவின் முற்போக்கு இலக்கிய மற்றும் சோஷலிச நடவடிக்கைகளுக்கான அடித்தளத்தை நவ க்ருஷ்ணா சௌத்திரி மற்றும் பிறருடன் கூட்டு சேர்ந்து பிராண்நாத் பாட்நாயக் அமைத்ததாக 1970களில் வெளியான சிபிஐ மாநிலக் கட்சிப் பத்திரிக்கை ‘நவ துனியா’ (புதிய உலகம்) இதழ்களில் ஒன்று தெரிவிக்கிறது. 1933ன் தொடக்கத்திலேயே அமைக்கப்பட்ட ஒடிஷா காங்கிரஸ் சாம்யாபதி கர்மி சங்கம் என்ற அமைப்பு பின்னர் சாம்யாபதி கர்மி சங்கம் (‘கம்யூனிஸ்ட் தொழிலாளர்கள் சங்கம்’) என்று மாற்றமடைந்தது. பிறகு இரண்டு மாதங்களில், 1933 மே மாதம், ‘சாரதி’ என்ற இதழை வெளியிட்டது.

            இந்த அமைப்பின் பொதுச் செயலாளரான நவ க்ருஷ்ணா சௌத்திரி 1934 ஜூன் 11 ஆஷா (இதழில்) வெளியிட்ட அறிக்கையில் மகாத்மா காந்தி தலைமையிலான காங்கிரஸ், பெருந்திரள் மக்களின் அரசியல் அமைப்பாக இருப்பதை விளக்கினார். காங்கிரஸ் செயற்பாட்டாளர்கள் பலர் சோஷலிச இயக்கத்தில் சேர்ந்தனர்; காங்கிரஸில் இருந்த சோஷலிசவாதிகள் இயக்கத்தைச் சோஷலிசத்தின்பால் மறுதகவமைக்க முயன்றனர். இதன் விளைவாய் காங்கிரசுக்குள் ஒரு சோஷலிசக் கட்சி உருவானது. சோஷலிச கம்யூனிஸ்ட் சங்கம் (கர்மி சங்கா) விரிவடைய  அனைத்திந்திய காங்கிரஸ் சோஷலிச மாநாடு உதவியது. சில புதிய, முக்கியமான உறுப்பினர்கள் இணைந்தனர். அவர்களில் குருசரண் பட்நாயக், கங்காதர் மிஸ்ரா, கோகுல்மோகன் ரைச்சுதாமணி, கௌரசந்திர தாஸ், மாலதி செளத்திரி, கோவிந் சந்திர மிஸ்ரா, திவாகர் பட்நாயக், பிராண்நாத் பாட்நாயக் போன்றோர் அடங்குவர்.

                           சாம்யாபதி கர்மி சங்கம் ‘சாரதி’ என்ற வாராந்திர இதழை 1934 மார்ச்சிலிருந்து

வெளியிட்டது. அதன் ஆசிரியராக நவ க்ருஷ்ணா இருந்தார் என 1934 மார்ச் 13 இதழில் தெரிவித்த தேசகதா, அந்த இதழ் விவசாயிகள் மற்றும் கூலி வருவாய் உழைப்பாளிகள் குறித்துக் கவனத்தைக் குவித்தது என மேலும் தெரிவிக்கிறது. சாரதியில் பகவதி சரண் பாணிகிரகி, (படம்) பிராண்நாத் பாட்நாயக், மன்மோகன் சௌத்திரி போன்றோர் தொடர்ச்சியாக எழுதினர். பகவதி பாணிகிரகியின் கட்டுரைகள் ‘உலக நெருக்கடியும் அதிலிருந்து தப்பும் வழிகளும்’ என்ற தலைப்பில் 1934 ஏப்ரல் 16 தொடங்கி ஐந்து இதழ்களில் நிறைவடைந்தது. பாணிகிரகி சோஷலிசத் தத்துவத்தை எளிய மொழியில் விளக்கியிருந்தார். சாரதியின் ஆசிரியர் நவ க்ருஷ்ணா சௌத்திரி பல கட்டுரைகள் மற்றும் ஆசிரியர் குறிப்புகளையும் எழுதினார். 1934 ஆகஸ்ட் 27 சாரதி இதழில் மன்மோகன் சௌத்திரி ‘வரலாற்றைக் களங்கப்படுத்தும் முயற்சி’ (இதிகாசகு விக்ரூத கரிபாரா ச்சேஸ்தா) எழுதினார். சாரதி முதல் தொகுப்பிற்குக் குருசரண் பட்நாயக் மற்றும் கோகுலாநந்த மொஹண்டியும்கூட அர்த்தமுள்ள பங்களிப்புச் செய்தனர். இவ்வாறாகச் சாரதி இதழ் ஒரிய மொழியில் மார்க்சியத்தை ஒருங்கிணைந்து படிப்பதற்கு 1930களில் புதிய தலைமுறையைத் தயார்ப்படுத்தியது.

            சமூக மற்றும் இயற்கை அறிவியல், இலக்கியம் மற்றும் பிற துறைகளின் பல்வேறு நிகழ்வுகளை நவயுக சாகித்திய சம்மேளனம் விவாதித்தது. இந்த அமைப்பு 1936 ஏப்ரலில் லக்னௌவில் நிறுவப்பட்ட முற்போக்கு எழுத்தாளர்கள் கூட்டமைப்பில் தன்னையும் இணைப்பு அமைப்பாக இணைத்துக் கொண்டது. ஒரிய மொழியில் முற்போக்கு இலக்கியப் போக்கு (புதுமை, நவீன எனப் பொருள்படும்) ‘ஆதுனிகா’ என்ற சஞ்சிகை 1936 மே மாதம் நிறுவப்பட்டதுடன் இணைந்து உறுதியான தூல வடிவம் பெற்றது. பகவதி சரண் பாணிகிரகி மற்றும் குருசரணின் மூத்த சகோதரர் ஆனந்த பட்நாயக்கும் அதன் ஆசிரியர்களாக இருக்க, குருசரணும் அதனுடன் நெருக்கமாக இருந்தார்.

கம்யூனிஸ்ட் கட்சியில்

            1932ல் குருசரண் பட்நாயக்கும் பிராண்நாத் பாட்நாயக்கும் பெனாரஸ் காசி வித்யா பீடத்தில் படித்துக் கொண்டிருந்தனர். பின்னர் கல்கத்தாவுக்கு மாற்றிக் கொண்ட இருவரும் பகவதி சரணுடன் இணைந்து, அவரைச் செயலாளராகக் கொண்ட, முதலாவது கம்யூனிஸ்ட் கிளைக் குழு (செல்) அமைப்பை நிறுவினர். அந்தக் குழுவில் ஆனந்த் பட்நாயக், விஸ்வநாத் பசயாட், அசோக் தாஸ், வைத்தியநாத் தாஸ், விஜய சந்திர தாஸ் முதலான பலர் உறுப்பினராக இணைய பெரும் குழுவாக ஒன்று திரண்டது. அவர்களில் பலரும் புரட்சியாளர்களின் யுகாந்தர் குழுவிலிருந்து வந்தவர்கள்.

            ஒரிசாவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1936 ஏப்ரல் 1ல் அமைக்கப்பட்டது. சிஎஸ்பி கட்சிக்குள் பகவதி இணைந்த ஒரு பெரிய சிபிஐ குழு அமைக்கப்பட்டது. இந்நிகழ்வைக் குறித்து எம்ஆர் மசானி “சிஎஸ்பிக்கு எதிராக கம்யூனிஸ்ட் சதித் திட்டம்” என்றொரு புத்தகம் எழுதினார்; போலீஸ் அறிக்கைகளின் அடிப்படையில் அதில், சிஎஸ்பியின் உயர்நிலைத் தலைவர்கள் 40 பேர்களில் 34பேர் ‘பகவதியின் சிபிஐ உடன்’ உள்ளதாக எழுதினார்.

            1935 --36ன் ஒரு தருணத்தில் ‘லேபர் மந்த்லி’ இதழிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் முகவரியைக் கண்டறிந்த பிறகு குருசரண் கல்கத்தா சென்றார். அம்முகவரி ஜக்காரியா தெருவில் இருந்த ஒரு வீடு, அங்கே அவர் முஸாஃபர் அகமது மற்றும் நிருபன் சக்ரவர்த்தி இருவரையும் சந்தித்தார். பிறகு அவர் புகழ்பெற்ற பிசி ஜோஷியுடன் தொடர்பு கொண்டார். குருசரண் கல்கத்தாவில் கம்யூனிஸ்ட் கட்சியில் முதலாவது ஒரிய உறுப்பினராகச் சேர்ந்தார். பிசி ஜோஷியுடன் விவாதித்த பிறகு ஒரிய கம்யூனிஸ்ட்கள் 1937 பொதுத் தேர்தல்களில் கம்யூனிஸ்ட் வேட்பாளரைக் காங்கிரஸ் டிக்கெட்டில் நிறுத்தினர். அந்த வேட்பாளர் பிராண்நாத் பாட்நாயக், அவர் குர்தா தொகுயிலிருந்து போட்டியிட்டு வென்றார். குருசரண் தேர்தல்களில் தீவிரமாகப் பங்கேற்றார். அதனுடன், எழுச்சி பெற்று வந்த விவசாயிகள் இயக்கம், கம்யூனிஸ்ட்களுக்கு நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் பெருந்திரள் போராட்டங்களுக்கு  வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

            1936ல் பிராண்நாத் பாட்நாயக், குருசரண் பட்நாயக் மற்றும் பகவதி சரண் பாணிகிரகி ஒரிசாவில் இரகசிய கம்யூனிஸ்ட் கட்சியை அமைத்தனர். 1936 நவம்பர் 29ல் கல்கத்தா, ஆல்பெர்ட் ஹாலில் மிகப் பெரிய கிஸான் மாநாடு நடந்தபோது விநியோகிக்கப்பட்ட ஒரியா மொழி சிறு பிரசுரத்தில் சரத் சந்திர பட்நாயக், குருசரண் பட்நாயக் மற்றும் ஆபர்த்தி சரண் நாயக் ஆகிய மூன்று பெரும் கம்யூனிஸ்ட்கள் கையெழுத்திட்டனர்.

            புகழ்பெற்ற 1938 திரிபுரி காங்கிரஸ் மாநாட்டில் ஜிசி சௌதாமணி, டிசி மொஹண்டி, ராம் கிருஷ்ண ரத் முதலான 10 – 12 பிரதிநிதிகளுடன் குருசரண் பட்நாயக்கும் பங்கேற்றார். அத்தருணத்தில் பிசி ஜோஷி ஒரிசா வந்து பல முன்னணித் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களைச் சந்தித்து சிபிஐ அமைப்பு உருவாக உதவினார். இந்தக் கட்டத்தில் குருசரண் மற்றவர்களுடன் இணைந்து அச்சக ஊழியர்களைத் திரட்டி கட்டாக்கில் குருசரணைத் தலைவராகக் கொண்டு சங்கம் அமைத்தனர். இந்த அச்சக ஊழியர்கள் சங்கம்தான் இந்தியாவில் முதன் முதலாகப் பதிவு பெற்ற சங்கமாகும்.

            1942ல் நிறுவப்பட்ட ‘நவதுனியா’ இதழ் தொடக்கத்தில் உத்கல் சிபிஐ மாகாணக் குழுவின் பத்திரிக்கையாகக் கட்டாக்கிலிருந்து வெளிவந்தது. அதன் ஆசிரியர்களாக மோகன் தாஸ், பிராண்நாத் பாட்நாயக், ராம் க்ருஷ்ண பட்டி, சரத் பட்நாயக் முதலானோர் இருந்துள்ளனர். 1970களிலிருந்து குருசரண் பட்நாயக் நவதுனியா ஆசிரியராக இருந்தார். ‘கோடிகுந்தா’ என்னும் மார்க்ஸிய தத்துவ இதழின் ஆசிரியராகவும் அவர் இருந்தார்.

ஒரிசா கம்யூனிஸ்ட் சதி வழக்கு

            கம்யூனிஸ்ட்களைத் தவிர்த்த காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் தனியான கூட்டத்தை ஜெயபிரகாஷ் நாராயணன் நடத்தினார். அதில் சிஎஸ்பியின் மாகாண முன்னணி அமைப்புகளைக் கலைக்கும் தன்னிச்சையான தீர்மானத்தை அறிவித்தார். நவகிருஷ்ண சௌத்திரி ஏக ‘சர்வாதிகாரி’யாக அறிவிக்கப்பட்டார். இந்நடவடிக்கை சிஎஸ்பி கட்சியை உடைத்தது. இத்தகு நிகழ்வுப் போக்கு வளர்ச்சியின் பிறகே பிரிட்டிஷ் அதிகாரிகள் ஒரிசா கம்யூனிஸ்ட்கள் மீது கம்யூனிஸ்ட் சதி வழக்குகளைப் புனைந்தனர். சிபிஐ மாகாணச் செயலாளர் பகவதி சரண் பாணிகிரகி, குருசரண் பட்நாயக், சரத் பட்நாயக், டிசி மொஹண்டி, ஆனந்த பட்நாயக், வைத்யநாத் ரத் உள்ளிட்ட ஒரு டஜன் கம்யூனிஸ்ட்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். சிறையின் உள்ளே நடைபெற்ற விசாரணை குறித்து விரிவாகப் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாயின.

            1942வரை குருசரண் சிறையில் இருந்தார். ஒரிசா கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் போர் (People’s War line) கருத்தை முழுமையாக ஆதரித்தது. 1945ல் குருசரணும் மற்றவர்களும் ஐஎன்ஏ கைதிகளை விடுதலை செய்யக் கோரிய இயக்கத்தை 1945ல் நடத்தினர். 1946ல் நடைபெற்ற தேர்தல்களில் மாகாண சட்டமன்றத்திற்குக் கம்யூனிஸ்ட் வேட்பாளராக வைத்தியநாத் ரத் தொழிலாளர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

            முழுமையாகத் தனது அரசியல் வாழ்க்கையில் குருசரண் பட்நாயக் 13 முறைகளுக்கும் மேலாகச் சிறை தண்டனை பெற்றார். மேலும் அவர் தெங்கானல், நீல்கிரி முதலான சமஸ்தான அரசுகளுக்கு எதிரான போராட்டங்களிலும், பிரஜா மண்டல் இயக்கங்களிலும் தீவிரப் பங்காற்றினார்.

விடுதலை மற்றும் அதற்குப் பிறகு

            ஆற்றல் வாய்ந்த பொதுச் செயலாளராகப் பிசி ஜோஷி இருந்தபோது சிபிஐ மத்திய கட்சி அலுவலக ஊழியர்களில் ஒருவராகப் பணிவும் பண்பும் கொண்ட அர்ப்பணிப்புமிக்க புரட்சியாளர் குருசரண் இணைந்தார். கட்சி மத்திய தலைமையகத்தில் 1948 –50களிலும் பின்னர் 1952ல் நாடாளுமன்றக் கட்சி அலுவலகச் செயலாளராகப் பொறுப்பேற்கும் முன்பும் அவர் பணியாற்றினார்.

            1947 ஆகஸ்ட் 15 தேச விடுதலையைக் கம்யூனிஸ்ட்கள் வரவேற்றார்கள். குருசரண் பட்நாயக் விடுதலையை வரவேற்பதில் தீவிரமாக இருந்தார். அதேபோல 1948 ஜனவரி 30 அன்று மகாத்மா காந்திஜி படுகொலைச் செய்யப்பட்டதில் மிகவும் மனவருத்தமுற்றார்.

            1948 பிப்ரவரி கல்கத்தாவில் நடைபெற்ற சிபிஐ இரண்டாவது கட்சி காங்கிரஸில் குருசரண் பட்நாயக் ஒரு பிரதிநிதியாகப் பங்கேற்றார். மாநாட்டில் பிடிஆர் பாதையை முழுமையாக ஆதரித்தார். கட்சியின் மத்தியக் குழுவில் பிசி ஜோஷியைச் சேர்ப்பதற்கு எதிராக வாக்களித்தார். இருந்த போதிலும் பிசி ஜோஷி அவமரியாதையாகத் தவறாக நடத்தப்பட்டார் என்பதில் அவருக்குச் சந்தேகமில்லை. (கட்சி தலைமறைவு வாழ்வின்போது புனைப்பெயர் பூண்ட தலைவர்களால் முன்வைக்கப்பட்ட ஆவணமான) மூன்று Pகளின் கடிதத்திற்குப் பிறகு அவரும் மற்றவர்களும் பிடிஆர் பாதை குறித்து மறுசிந்தனை செய்யத் தொடங்கி, அப்பாதையை ஆதரித்த தவறை அவர்கள் உணர்ந்தனர்.

            கட்சி மத்திய குழுவின் விரிவடைந்த ப்ளீனம் கல்கத்தாவில் 1952 டிசம்பர் 30 முதல் 1953 ஜனவரி 10தேதி வரை நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் அஜாய் கோஷ், எஸ்ஏ டாங்கே, இஎம்எஸ், சுந்தரைய்யா, குருசரண் பட்நாயக் மற்றும் பிறரும் அடங்குவர். அனைத்து மாநிலங்களிலிருந்தும் 58 பிரதிநிதிகளும் அழைப்பாளர்களும் பங்கேற்றனர். தலைமைக் குழு தோழர்களாக டாங்கே, காட்டே மற்றும் ஜோஷி தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தின் நோக்கத்தை அஜாய் கோஷ் விளக்கினார். அவருக்குப் பின் டாங்கே மற்றும் இஎம்எஸ் பேசினார்கள். ப்ளீனம் அடுத்த கட்சி காங்கிரஸ் தேதியை நிர்ணயித்தது.

            மூன்றாவது கட்சி காங்கிரஸ் 1953 டிசம்பர் 27முதல் 1954 ஜனவரி 3வரை தமிழ்நாடு மதுரையில் நடைபெற்றது.

            அஜாய் கோஷ் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய குழுவில் புகழ்பெற்ற அஜாய் கோஷ், எஸ்ஏ டாங்கே, இஎம்எஸ், சுந்தரைய்யா, ஜோதி பாசு, அச்சுத மேனன், சி இராஜேஸ்வர ராவ் முதலானவர்களுடன் குருசரண் பட்நாயக்கும் இடம் பெற்றார்.

            அஜாய் கோஷ் கட்சித் தலைமையை ஏற்றுக் கொண்டபின் கட்சி முறைமை சார்ந்த, காரிய சாத்தியமான, நெகிழ்வுத் தன்மையுள்ள அரசியல் பாதையை நன்கு சிந்தித்து, கட்சியைப் புத்துயிர் பெறச் செய்ய மறுதகவமைக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியது. இந்த நிகழ்முறை நடவடிக்கைகள் அனைத்திலும் ஓர் அங்கமாகக் குருசரண் முழுமையாகப் பங்கேற்றார்.

            1958 அமிர்தசரஸ் கட்சி காங்கிரஸ் முதலாக புதியதாக அமைக்கப்பட்ட மத்திய செயற்குழு (சிஇசி)க்குக் குருசரண் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விருதுகளும் இலக்கியச் செயல்பாடுகளும்

            குருசரண் பட்நாயக் அவர்களுக்கு 1971ல் சோவியத் லாண்டு நேரு விருதும், 1985ல்

சாகித்திய அகாடமி வாழ்நாள் சாதனையாளர் விருதும், அவருடைய மாபெரும் தத்துவப் படைப்பான ‘ஜகத் தர்ஷனரே ஜெகந்நாத்’ என்ற நூலிற்காகக் கேந்திரிய சாகித்திய அகாடமி விருதும் வழங்கப்பட்டது. மேலும் அவருக்கு ‘உத்கல் ரத்னா’ விருது உத்கல் சாகித்திய சமாஜ் அமைப்பால் வழங்கப்பட்டது. அவர் சுமார் 55 செவ்வியல் நூல்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட மார்க்சிய லெனிய படைப்புகளின் மொழிபெயர்ப்புகளையும் செய்துள்ளார். அவர் ஏராளமாக எழுதிக் குவித்த எழுத்தாளர். பகவான் ஜகந்நாதருடன் தொடர்புடைய கதைகளின் மீதான தத்துவ விளக்கங்களை அளித்த அவரது நூலுக்காக அவருக்குச் சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.

            கேந்திரிய சாகித்திய அகாடமியுடன் அவர் நெருக்கமாக இணைந்திருந்தார். அவர் ஒருபோதும் தேர்தல்களில் போட்டியிட்டதில்லை.

            புகழ்பெற்ற இடதுசாரி பத்திரிக்கையான ‘மெயின் ஸ்டிரீம்’ இதழுடனும் சிபிஐ தலைவர்கள் மற்றும் கற்றறிந்த அறிஞர்களான நிகில் சக்ரவர்த்தி மற்றும் ரேணு சக்ரவர்த்தியுடனும்  குருசரண் பட்நாயக் நெருங்கிய தொடர்பில் இருந்தார். 

            குருசரண் பட்நாயக் கட்டாக்கின் ஷான்கர்பூரில் உள்ள அவரது ‘ஆனந்த அலோக்’ இல்லத்தில் 2008 நவம்பர் 23ம் நாள் மறைந்தார். அவரது ஒரிய மொழி இலக்கியப் படைப்புக்களிலும் கம்யூனிஸ்ட்கள் மனங்களிலும் குருசரண் பட்நாயக் நீடு வாழ்வார்.

--நன்றி: நியூஏஜ் (ஜூன்5 –11)

                                                                                                               --தமிழில் : நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment