Monday 25 July 2022

லேபர் கோடு அமலாக்கம் சிக்கலாகிறது

 
       தொழிலாளர் குறுங்குறிகள்         அமலாக்கம் சிக்கலாகிறது

--ஞான் பதக்

            புதிதாகக் கொண்டுவரப்பட்ட தொழிலாளர் குறுங்குறிகள் (லேபர் கோடு) அமலாவதில் சிக்கல் நீடிக்கிறது, அந்தச் சிக்கல்களை மோடி அரசு தீர்க்கும் என்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை. அமலாக்கத்தின் வழியில் தடைகள் பல. லேபர் பொதுப் பட்டியலில் வருவதால் மாநில அரசுகளும் குறுங்குறிகளுக்கான விதிகளை இயற்றி ஒப்புதல் தர வேண்டும். இன்னும் எல்லா மாநிலங்களும் தேவையான சட்டவிதிகளை வரைவதில் தயாராகவில்லை. மேலும் குறைந்த பட்ச ஊதியம் குறித்து நியமிக்கப்பட்ட எஸ்பி முகர்ஜி கமிட்டி செப்டம்பருக்கு முன்பு தனது அறிக்கையைக் கொண்டுவரும் நிலையில் இல்லை. இரண்டு குறுங்குறிகள் குறித்து முதலாளிகள் மற்றும் தொழில்துறை அமைப்புக்கள் தங்கள் தரப்புக் கவலைகளை எழுப்பி உள்ளன. மத்தியத் தொழிற்சங்கங்கள் குறுங்குறிகளை முற்றாக ரத்து செய்யக் கோரி தங்கள் நிலைபாட்டை மேலும் இறுக்கமாக்கி உள்ளன. குறுங்குறிகள் அமலாக்கத்தால் ஏற்படக்கூடிய அரசியல் விளைவுகள் குறித்தும், அமல்படுத்தும் நேரம் மற்றும் சட்ட விதிகளை வெளியிடும் முறைகள் சம்பந்தமாகவும் ஆளும் அமைப்புக்குள்ளேயே வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

    ஒன்றிய தொழிலாளர் மற்றும் பணியமர்த்தல் அமைச்சரகம் சொல்வதிலும் அதன் தொணியிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை; இந்தக் குறுங்குறிகளின் கீழ் ஏற்கனவே இயற்றப்பட்ட விதிகளின் சில அம்சங்களை-- குறிப்பாக, ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புக் குறுங்குறிகள் சம்பந்தமானவற்றை--  மறுபரிசீலனை செய்ய இப்போது அவர்கள் வெளிப்படையாக இருப்பதாக அறியப்படுகிறது. ஒன்றியத் தொழிலாளர் அமைச்சர் பூபேந்திர யாதவ், “புதிய விதிகள் பொருத்தமான நேரத்தில் அமலாக்கப் படும்” என்று கூறினார். எனினும், அதன் மூலம் உண்மையில் அவர் எதை உணர்த்துகிறார் என்பதை விளக்கவில்லை.

            அப்பொருத்தமான நேரம் ஏற்கனவே இழக்கப்பட்டுவிட்டது என்றே ஆளும் நிர்வாகம் பொதுவாக எண்ணுகிறது. 2017ல் குறுங்குறிகளை உருவாக்கும் நிகழ்முறை தொடங்கி  ஐந்தாண்டுகள் கடந்தாகிவிட்டது. ஊதியம் மீதான குறுங்குறி 2019ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, ஏனைய மூன்றும் -- தொழில் உறவுகள் குறுங்குறி, சமூகப் பாதுகாப்புக் குறுங்குறி மற்றும் பணியிடப் பாதுகாப்பு, சுகாதார நலன் மற்றும் பணிநிலைமைகள் குறித்த குறுங்குறி –2020லேயே நிறைவேற்றப்பட்டன. லேபர் பொதுப்பட்டியல் விஷயம் எனபதால், ஒன்றிய அரசு அமலாக்கத்திற்கான இறுதி அறிவிக்கையை வெளியிடும் முன்பு,  மாநிலங்களும் தங்களுக்கான சட்டவிதிகளை உருவாக்கி தங்கள் அரசிதழ்களில் வெளியிட வேண்டிய கட்டாயத் தேவை உள்ளது. ஆனால் மாநிலங்கள் கோவிட் 19 நெருக்கடியில் இருந்ததால் அவற்றால் அதைச் செய்து முடிக்க இயலவில்லை.

            பல விஷயங்களுக்கான அமலாக்கத்திற்கான இறுதித் தேதி குறிக்கப்பட்டும், அவை தவறவிடப்பட்டன. மிக சமீபத்தில் அவ்வாறு ஜூலை 1 முதல் என்று அறிவிக்கப்பட்டது தற்போது அதன் அமலாக்கம் ‘பொருத்தமான நேரம்’ என்றாகியுள்ளது; என்றாலும், உள்ளார்ந்த தடைகள் மற்றும் அதிகரிக்கும் சிக்கல்களால் அந்த நாள் விரைவில் வர வாய்ப்பில்லை. 2022 ஆண்டின் இறுதி அல்லது 2023 ஆண்டின் தொடக்கம் என்பதாக அது தாமதிக்கப்படலாம்; மேலும் எதிர்மறையான அரசியல் விளைவுகள் குறித்த அச்சம் வலிமையாகும் பட்சத்தில் மோடி அரசு அதன் அமலாக்கத்தை 2024 பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு என ஒட்டுமொத்தமாகத் தள்ளி வைக்கவும் கூடும்.

மாநிலங்களில் வரைவுவிதிகள் தாமதம் 

          இந்நான்கு குறுங்குறிகளுக்கும் 24 மாநிலங்கள் மட்டுமே சட்டவிதிகளை வரைந்துள்ளன. மேற்குவங்கத்தில் நான்கிற்குமான வரைவு விதிகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இராஜஸ்தானில் மூன்று நிலுவையில். ஆந்திரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களிலும் வரைவு விதிகள் தயாராகவில்லை. பெரும்பாலான மாநிலங்களில் சமூகப் பாதுகாப்பு மற்றும் பணிசார்ந்த பாதுகாப்புக் குறுங்குறி சம்பந்தமாகவே விதிகள் வரைவு நிலுவையில்உள்ளது. ஊதியக் குறுங்குறியின் கீழ் 30 மாநிலங்களும், தொழிலகத் தொடர்பு குறுங்குறியின் கீழ் 26 மாநிலங்களும், பணிசார்ந்த பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமை மற்றும் சமூகப் பாதுகாப்புக் குறுங்குறியின் கீழ் 24 மாநிலங்கள் மட்டுமே தேவையான வரைவுச் சட்ட விதிகளை உருவாக்கியுள்ளன. இந்திய நாடு முழுவதும் தொழிலாளர் குறுங்குறிகள் முறையாக அமல்படுத்தப்பட வேண்டுமானால் அனைத்து மாநிலங்களும் தங்கள் மாநிலத்திற்கான விதிகளை வரையறுக்க வேண்டியது மிக அவசியம்.

          நான்கு குறுங்குறிகள் கீழும் ஏற்படுத்தப்பட்ட விதிகள் மோசமாக வரையப்பட்டிருப்பதாக மாநிலங்கள் புகார் தெரிவிக்கின்றன. கேரள மாநிலத் தொழிலாளர் துறை அமைச்சர் கேரள சட்டமன்றத்தில் பேசும்போது, “குறுங்குறிகளின் கீழுள்ள பெரும்பான்மையான ஷரத்துக்கள் ‘தொழிலாளர் விரோத’மாக இருப்பதால் அதற்கான வரைவுச் சட்ட விதிகளை மாநில அரசு மிகுந்த தயக்கத்துடன்தான் தயாரித்தது” என்று அதிகாரபூர்வமாகவே குறிப்பிட்டார்.

       ஒன்றிய அரசு அமைப்புக்குள்ளும் வேறுபாடுகள் உள்ளன. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் கடந்த ஆண்டு அறிக்கை ஒன்றில் நான்கு குறுங்குறிகளும் (முன்பு இருந்த) 29 சட்டங்களின் எளிய கூட்டுத்தொகுப்பே என்றும், அதில் சில முரண்பாடுகள் கருத்தில் கொள்ளப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நான்கிற்குப் பதிலாக, அந்த இடத்தில் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர் குறுங்குறி ஒன்று மட்டுமே இந்தியாவுக்குத் தேவை.

            மேலும் அதன் அமலாக்க முறை குறித்தும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. அரசில் சிலர் அவற்றை ஒட்டுமொத்தமாக ஒரே கட்டமாக அமல்படுத்த வேண்டும் என்று கருதுகின்றனர்; மற்றவர்களோ இன்றுள்ள நிலையில் அவை கட்டம் கட்டமாக மெல்ல அமல்படுத்தப்பட வேண்டும் என்கின்றனர். 

குறைந்தபட்ச ஊதிய நிர்ணய முறை

            ஊதியம் குறித்த குறுங்குறியின் கீழ் தேசியக் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது முக்கியமான ஒன்று. பல தடைகளுக்கு மத்தியில் இதற்கான எஸ்பி முகர்ஜி குழு பணியாற்றி வருகிறது. எதிர்வரும் செப்டம்பருக்கு முன் குழுவின் அறிக்கை தாக்கலாக வாய்ப்பில்லை. குழுவின் உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு, பெரும் உடன்பாடின்மைக்கு மத்தியில் குறைந்த பட்ச ஊதியத்தை கணக்கிடும் முறை மட்டுமே இறுதி செய்யப்பட்டுள்ளது; அதன்படி, அது சத்தான உணவின் தேவை மற்றும் நுகர்ச்சிக்கான செலவின் அடிப்படையில் நிர்ணயிக்கப் படும், அதற்குத்தான் தொழிற்சங்கங்களும் வலியுறுத்தின.

     முகர்ஜி மற்றொரு முறையை (மெத்தடாலஜி) ஆதரித்தார். அது பன்மைக் காரணிகள் அடிப்படையில் முடிவை மேற்கொள்ளும் முறை. (பிரச்சனையை வரையறுப்பது, தேவைகளை அடையாளம் காண்பது, இலக்குகளை நிர்ணயிப்பது, பல்வேறு மாற்றுவழிகளை அடையாளம் காண்பது, காரணிகளை வளர்த்தெடுப்பது மற்றும் முடிவெடுக்கும் நுட்பத்தைப் பயன்படுத்தல் போன்ற ஆறு நிலைகளை உள்ளடக்கியது.) இதன் பிறகும் இடர்பாடுகள் உண்டு, ஏனெனில் தொழிலகங்கள் மற்றும் வணிகக் குழுமங்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் கருத்தில் கொண்டாக வேண்டும். இது தவிர, பத்தாண்டுகளுக்கு முற்பட்ட 2011 –22 பழைய தரவுகளைச் சார்ந்திருக்காமல், 2022ம் ஆண்டின் உணவு விலைவாசி செலவுக் குறியீட்டைக் கொண்டு வந்து அந்தப் புதிய தரவைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

           முதலாளிகளின் அமைப்புக்களான CII (இந்தியத் தொழில்துறை மகாசம்மேளனம்) மற்றும் FICCI (இந்திய வணிக மற்றும் தொழில்துறை அமைப்புச் சம்மேளனம்) குறைந்த பட்ச ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கான முன்மொழியப்பட்ட சட்ட விதிகள் குறித்துத் தங்கள் சந்தேகத் தயக்கங்களை வெளியிட்டுள்ளன. இந்தப் பின்னணி தொடர்பில்தான் ஒன்றிய தொழிலாளர் மற்றும் பணியமர்த்தல் அமைச்சரகம் மேலும் விவாதங்களை நடத்திய பிறகு விதிகளை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்துள்ளது. முதலாளிகள், தாங்கள் பெரும் நிதி நெருக்கடியில் துன்பப்படும் நேரத்தில் குறுங்குறிகள் சட்டங்களை அமலாக்குவது தங்களின் நிதிச் சுமையை அதிகரிக்கும் என கவலை தெரிவித்துள்ளனர்.

            மத்தியத் தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட முன்னணி ஏற்கனவே தங்கள் நிலைபாட்டை இறுக்கமாக்கி உள்ளது. குறுங்குறிகள் அமலாக்கப்பட்டது முதல் அது பெரும்பாலான

தொழிலாளர்களைத் தொழிலாளர் நலச் சட்டங்களின் பயன்களைப் பெறும் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேற்றிவிடும் எனக் கூறுவதுடன், குறுங்குறிகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திக் கோருகிறது. குறுங்குறிகளுக்கு எதிராக அவர்கள் ஏற்கனவே மூன்று பொது வேலை நிறுத்தங்களை நடத்தியதுடன், மேலும் கடுமையான போராட்டத்திற்குத் தங்களைத் தயார்படுத்தி வருகின்றனர். துண்டு துண்டாக அணுகுவதை நிறுத்தி நான்கு குறுங்குறிகளுக்குமான அனைத்துச் சட்டவிதிகளையும் முழுமையாக வெளியிடும்படி மத்தியத் தொழிற்சங்கங்கள் ஒன்றிய அரசைக் கேட்டுள்ளன.

அரசு ஆதரவு பிஎம்எஸ் எதிர்ப்பு

      பாஜக ஆதரவுத் தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங் (பிஎம்எஸ்) அமைப்பும்கூட

தொழில்உறவு குறுங்குறி மற்றும் பணிசார்ந்த பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைமைகள் மீதான குறுங்குறியின் சில ஷரத்துக்களை எதிர்க்கிறது. ஒட்டுமொத்தமாகக் குறுங்குறிகள் அனைத்தையும் ஒரே மூச்சில் அமலாக்குவதையும் பிஎம்எஸ் எதிர்க்கிறது. சம்பந்தப்பட்ட உரிமை உடைய அனைவருடனும் பேச்சு வார்த்தை நடத்தி வேறுபாடுகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும்; தொழிலாளர்கள், முதலாளிகள் மற்றும் அரசு இவற்றின் மத்தியில் ஒருமித்தக் கருத்து உள்ள விதிகள் மட்டுமே முதலில் அமலாக்கப்பட வேண்டும் என்றும் அத்தொழிற்சங்கம் கூறுகிறது. மேலும் தொழில் உறவுகள் குறுங்குறி, குறிப்பாகப் பதிவு செய்வது மற்றும் மத்தியத் தொழிற்சங்கங்கள் செயல்பாடு குறித்த ஷரத்துக்களின் மீது அரசு ஆதரவு பிஎம்எஸ் அமைப்பும்கூட கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

   குறுங்குறிகளை அமலாக்குவது தொடர்பான முன்மொழிகளால் எதிர்பார்க்கப்படும இடர்பாடுகளுக்குத் தீர்வு காணத் தொழிற்சங்கங்கள், ஆலைத் தரப்புப் பிரதிநிதிகள் குழுவினருடன் விவாதங்களை நடத்துவதில் ஒன்றிய தொழிலாளர் மற்றும் பணியமர்த்தும் அமைச்சரகம் ஈடுபட்டுள்ளது. கருத்து வேறுபாடுகளுக்குப் பேசி தீர்வுகாண ஒன்றிய அரசு தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் அமைப்புகளிடம் புதிய வாய்ப்புக்களை வழங்கி உள்ளது.

சீரமைப்புக்கள் தொழிலாளர் நலன்களைச் சீரழிக்க அனுமதிக்க முடியாது.

--நன்றி : நியூஏஜ் ( ஜூலை 24 –30)

--தமிழில் : நீலகண்டன்,
         என்எப்டிஇ, கடலூர்

 

No comments:

Post a Comment