Monday 4 July 2022

இல்லாத ஊருக்குப் போகாத வழிகாட்டும் அக்னிப் பாதை -- டாக்டர் யுகல் ராயலு

 

      இல்லாத ஊருக்குப்                         போகாத வழிகாட்டும்             அக்னிப் பாதை

--டாக்டர் யுகல் ராயலு

 

        இராணுவ ஆளெடுப்பு முகாம்கள் வடஇந்திய சில மாநிலங்களில் ‘திருவிழா கொண்டாட்ட நேரம்’. தகுதித் தேர்வுகளுக்குக் கலந்து கொள்ளச் செல்லும் இளைஞர்களைக் கிராமத்துப் பெரியவர்கள் வாழ்த்துவார்கள். கிராமத்துப் பெண்கள் தங்கள் மகன்களை (இப்போது மகள்களையும்கூட) நல்வாழ்த்துக் கூறி நெற்றியில் திலகமிட்டு அனுப்புவார்கள். கிராமத்தின் சில குடும்பங்களில் ‘வார்தி’ (விழையும் இராணுவச் சீருடை) அணிய விரும்பும் அவர்கள் மூன்றாவது அல்லது நான்காவது தலைமுறையாக இருப்பார்கள். ‘ஃபௌஜ்’ (இராணுவம்) ஏறத்தாழ அவர்களின் இரண்டாவது மதம்போல. இவ்வுணர்வுகளைப் பாலிவுட் சினிமாக்கள் பல நன்கு பிரதிபலிக்கும். இராணுவ வீரர்கள் தங்கள் கிராமங்களுக்கு மதிப்பை மட்டுமல்ல, செழிப்பு மற்றும் வளர்ச்சியையும் கொண்டு வருகிறார்கள். கீழே தென்னிந்தியாவிலும் சில பகுதிகளில் வழக்கமாக இராணுவத்திற்கு ஆளெடுப்பு நடக்கிறது.

    இவை அனைத்தையும் அப்படியே மாற்றிவிட்டது என்டிஏ அரசின் சமீபத்திய முப்படைவீரர்கள் ஆளெடுப்பு முறை உத்தரவு. அவர்களது எல்லாத் திட்டங்களையும்போல இந்தத் திட்டமும் பெரும் கூச்சல் சப்தத்துடன், ஆனால் உள்ளே உருப்படியாய் ஒன்றும் இல்லாமல், வந்துந்துள்ளது. புதிய திட்டத்தை ‘அக்னிபத்’ என்றழைக்கிறார்கள், நெருப்பின் பாதையாம்! அப்பெயர் இந்து தத்துவத்திலிருந்து வந்தது, கடினமானது எனினும் புனிதமான பாதை என்று பொருள்படும். இந்தப் பாதையில் செல்ல ஆளெடுக்கப்பட்ட இளம் வீரர்கள் “அக்னிவீர்”, நெருப்பு வீரர் என்று பெயர் பெறுவர்! அனைத்தையும் ஒரு பிரச்சாரமாகச் செய்யும் அரசின் தனித்துவமான சிறப்பு அது, எதைச் செய்தாலும் முதலில் அது பற்றி வானளாவக் கூரைமீது ஏறிக் கூச்சலிடு!            

        இம்மாபெரும் தேசத்தின் நகரங்கள், கிராமங்களிலிருந்து பலபலப் பத்தாண்டுகளாக வீரர்கள் இராணுவத்திற்கு எடுக்கப்பட்டார்கள். நமது வீரர்கள் தங்கள் முன்னுதாரணமான தியாகங்கள் மற்றும் ‘வில்லுக்கு விஜயனென’ ஆக உச்சபட்ச வீரம் இவற்றால் தங்களின் ஆகச் சிறந்த சேவைகளைத் தாய்நாட்டிற்கு அளித்து வருகிறார்கள்! இருப்பினும் மிகுந்த தன்னடக்கத்துடன் அவர்கள் தங்களைத் தேசத்தின் சாதாரண குடிமக்கள் என்றே அழைத்துக் கொண்டனர். மேலும் நன்றி உணர்வு பொங்கும் நாடு இந்த வீர மகன்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை இறுதிவரை கவனித்துக் கொண்டது. வீரத் தியாகிகளின் குடும்பங்களை அரசு ஓய்வூதியம் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கி கவனித்துக் கொண்டது. நாம் அனைவரும் ஒரு பெரிய குடும்பம்போல வாழ்ந்தோம். ஆனால் இப்போது அப்படி அல்ல!

    மோடி அரசு மிகக் கறாராகச் சொல்கிறது, அக்னிவீர்களுக்குப் பென்ஷன் இல்லை! அவர்களது அனைத்துத் தனியார்மயத் திட்டங்கள்போலவே பாஜக சொல்கிறது, “வீரர்களின் நலவாழ்வு அல்லது அவர்களுடைய குடும்பத்தினரின் நலவாழ்வு”க்கு ஒரு மிகப் பெரிய கிடையாது என்ற பட்டை நாமம். ‘உங்களை நீங்களே பாதுகாத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்’, என்பது புதிய அரசு ஜெபிக்கும் மந்திரம்.

தாறுமாறாக, தலைகீழான திட்டம்

         ஆயுதங்களின் வலிமையால் மட்டுமே ஓர் இராணுவம் வெற்றிபெறுவதில்லை. (“வேலன்று வெற்றி தருவது” என்பார் திருவள்ளுவர்). மாறாக அது அவ்வாறாயின், உலகின் எல்லா இராணுவங்களின் செயல்பாடுகளும் அதன் திறனைப் பொருத்து ஒன்றாய் இருக்கும். ஆனால் பிறகு இராணுவம் ஒரு போரில் வெல்வது, அதன் வீரர்களின் உறுதிப்பாட்டின் பலம் மற்றும் இலட்சிய உற்சாக மட்டங்களைப் பொருத்தே சாத்தியமாகிறது. வீரர்களின் அந்தப் பண்பு புதிதாக ஆளெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு அளிக்கப்படும் இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமாக நீளும் சோர்விலாத பயிற்சியால் கைவரப்படுவது.

      அக்னிபத் திட்டம் முதலில் நான்கு ஆண்டுக்கு மட்டுமே ஆனதால், முறையான பயிற்சி அளிக்கப்படாத நிலையில், வீரர்களின் இலட்சிய உற்சாக மட்டம் மற்றும் உறுதிப்பாட்டைக் குறித்துப் பல நிபுணர்களும் கவலை தெரிவிக்கின்றனர். ஓய்வுபெற்ற லெப்டினட் ஜெனரல் D.S. ஹூடா, 2022  ஜூன்24 தேதியிட்ட தி இந்து நாளிதழ் பேட்டியில் தனது கவலையை வெளிப்படுத்தினார்: “…நான்கு ஆண்டுகளுக்காக மட்டுமே படையில் சேரும் இளைஞர்கள், இராணுவப் பணியைத் தங்களின் எதிர்கால வாழ்விற்குப் படிக்கல்லாகக் கருதும் சாத்தியமே இருக்கிறது; அப்படிப்பட்ட இளைஞர்களிடம், இராணுவத்தில் நிரந்தரமாகப் பணியாற்றிய / பணியாற்றிவரும் வீரர்களிடம் நாம் பார்க்கும் சுயமரியாதை தன்னம்பிக்கை மற்றும் இலட்சிய உற்சாக மட்டங்களின் பண்புகள் எப்படி இருக்க முடியும்?”

இராணுவக் குடும்பங்கள்

    இதற்கு முன் இளைஞர்கள் வாழ்நாள் முழுவதற்குமாக இராணுவத்தில் சேர்ந்தார்கள். அவர்களின் குடும்பம் முழுமையும் இராணுவக் குடும்பம் ஆனது. இராணுவ நிர்வாகத்தின் நலவாழ்வு வழங்கு அமைப்பின் உறுதியான ஆதரவு பின்னணியில் இருக்க, நெஞ்சுரம் மிக்க படைவீரர்கள் தங்கள் இன்னுயிர்களைத் தாய் மண்ணின் சேவைக்காக அர்ப்பணிக்க ஒரு கணம்கூட தயங்குவதில்லை. இப்பண்பு, உச்சபட்ச அர்ப்பணிப்புமிக்கப் பற்றுறுதி மற்றும் தலைச்சிறந்த தொழில்நுட்பப் பணித் திறனை இந்தியத் தரைப் படை, கப்பல் மற்றும் வான் படைகளுக்குக் கொண்டுவந்து சேர்த்தது. தேசம் தனது பாதுகாப்பு வீரர்களைக் கவனித்துக் கொண்டது, வீரர்கள் தங்களின் ஆகச் சிறந்த சேவையைத் தேசத்திற்கு அளித்தனர்.

       அக்னிபத் திட்டம் நான்கு வருடங்களுக்கான ஒப்பந்தம் போன்றது. புதிதாகச் சேர்ந்தவர்கள் சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பட்டாலியன் அல்லது கமாண்டர் குழுக்களின் மூத்த வீரர் மேற்பார்வை மற்றும் வழிகாட்டலில் செயல்படுவார்கள். இந்த அமைப்பு முறைமைகளில் நம்பிக்கை கொள்ள மக்களுக்கு நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் ஆகலாம் என்பது சில ஓய்வுபெற்ற அதிகாரிகளின் கருத்து.  

அக்னிபத் திட்டத்தில் வான்படை வீரர்கள் அல்லது வீராங்கனைகள் (விமானம் குறித்த) தங்கள் கற்றலை நிறைவு செய்யும் நேரத்தில், துரதிருஷ்டவசமாக, அவர்களில் 75 சதவீதத்தினர் ஏர் போர்ஸ் பிரிவுக்குக் ‘குட் பை’ சொல்லி வெளியேற வேண்டிய கட்டாயத்தில் தயாராக இருப்பார்கள். கற்றல் திறன் பெருமளவில் வீணடிக்கப்படும், மேலும் அவர்களுக்கு அக்கலைத் திறனை அளிக்கச் செலவிட்ட பெரும் தொகையும் கூடுதலாக வீணடிக்கப்படும். எனவே எல்லா நேரத்திலும், தரைப்படை, கப்பல் அல்லது வான்படை வீரர்களில் பெரும்பாலோனோர் பயிற்சி பெறாத பச்சை மண்ணாகவே இருப்பர். படைகளின் தாக்கும் திறனுக்கு என்ன நேரும்? இதுவரை புதிய அக்னிபத் திட்டத்தைப் பொருத்தவரை அது சோதித்தறியப்படாத கேள்வி.

மாற்றாந்தாய் அணுகுமுறை

            இராணுவத்தில் அக்னிவீர்கள், அதுதாங்க நம்ப ‘நெருப்பு வீரர்கள்’, தங்கள் இராணுவ உடுப்புக்களில் வித்தியாசமான முத்திரை அடையாளச் சின்னத்தை நான்கு ஆண்டுகளுக்கு அணிந்திருப்பார்கள் என்பதை அறிய பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கும். நான்காண்டுக்குப் பிறகு, முப்படைகளில் தொடர்ந்து பணியாற்ற யாரெல்லாம் அனுமதிக்கப்படுவார்களோ அந்த 25 சதவீதத்தினர் மட்டுமே அதன் பிறகு அப்படைகளின் முறையான அடையாளச் சின்னத்தை அணிய முடியும்.

முன்பு இராணுவத்தில் பேதமில்லை

இம்மாதிரியான வேறுபடுத்தும் பிரிவினைகள் இந்திய இராணுவத்தில் ஒருபோதும் நிகழ்ந்ததில்லை. அங்கே மதம், இனம், சாதி, மொழி என்ற வேறுபடுத்தும் தடைகளைக் கடந்து சமத்துவம் என்ற கொள்கையின்படியே எப்போதும் பெருமிதமாக ஒன்றாக நின்றார்கள். தற்காலிக அக்னிவீர்கள் மற்றும் நிரந்தரப் படைவீரர்கள் இடையே இது போன்ற பேதம் அவர்களின் நம்பிக்கை, துணிவு, மனஉறுதி உணர்வைக் குலைத்து உற்சாகமிழக்கச் செய்யும். பேதப்படுத்தி பிரிப்பதன் தாக்கத்தை அற்றுப்போகச் செய்ய ஏராளமாக உழைக்க வேண்டும். இந்த அமைப்பு முறையின் தாக்கவிளைவு குறித்து நிபுணர்கள் கருத்து வேறுபடுகிறார்கள்.

       மற்றுமொரு கவலைக்குரிய பகுதி, நான்காண்டு பணிமுடிந்த பிறகு உள்ள காலம். இப்போது இராணுவத்தில் எடுக்கப்படுபவர்களில் நான்கில் மூன்று பங்கினர் கையில் ஒரு தொகை அளிக்கப்பட்டு வெளியேற்றப்படுவர் (கவனிக்க, இது வெளியேற்றப்படுதல், ஓய்வு பெறுதல் இல்லை). அக்னிவீர்களுக்கு ஓய்வூதியமில்லை, சமூக ஆதரவு இல்லை மற்றும் அடையாளமே இல்லை. விரைவிலேயே இளைஞர்களிடம் இராணுவத்தில் சேர வேண்டும் என்ற துடிப்புமிக்க ஆர்வம் தேயும், இதனால் நமது முப்படைகளுக்கு உடல் ஆரோக்கியம், தகுதி திறமையுள்ள ஆண் / பெண் வீரர்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும்.

உண்மையில் ஆதாயம் அடைபவர்கள்

            திறமையான பாஜக செய்தித் தொடர்பாளர்கள் எவ்வளவு முயன்றாலும் அவர்களாலும் திட்டத்தின் உண்மையான நோக்கத்தை மறைக்க முடியவில்லை. அவ்வவ்போது அவர்கள் சொல்லிவிடுவதைப்போல இன்னும் பல இரகசியங்களைக் கூறுவார்கள். படையில் நான்கு ஆண்டுகள் இருந்த பின் வெளியேற்றப்படும் 75 சதவீதமானவர்கள் தனியார் பிரிவில் காவல் காக்கும் செக்குரிட்டி வேலைகளில் முன்னுரிமை அளிக்கப்படுவர். (மந்திரி அவர்களுக்குக் கட்சி அலுவலகத்தில் சௌக்கிதார் பணி வழங்குவேன் என்றார்; தனியார் முதலாளிகளும் போட்டியிட்டுத் தங்கள் நிறுவனங்களில் பணி தருவோம் என்கிறார்கள்.) இவ்வாறு அக்னிபத் திட்டத்தில் உண்மையான பலனடைவோர் கார்ப்பரேட் பகுதியினர்; அவர்களுக்குக் காசு செலவில்லாமல், அரசின் வரி கட்டுவோர் பணத்தில், முழுமையாகப் பயிற்சியளிக்கப்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுவனங்களுக்குக் கிடைப்பார்கள். இன்றைய அரசின் கார்ப்பரேட் நண்பர்களுக்கு ஒரு ரூபாய் செலவில்லாமல் திறன்மிக்க பயிற்சி அளிக்கப்பட்ட பாதுகாவலர்கள் அவர்களின் வாயில் கேட்’டுகளுக்குக் காவல் செய்யக் கிடைப்பார்கள்!

  ஆர்எஸ்எஸ் ஷாகா‘க்களின் உறுப்பினர்களிடம் அக்னிபத் திட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் சேர ஊக்கப்படுத்தப்படுகிறார்கள் எனச் சொல்லப்படுகிறது. (ஷாகா என்பதற்குக் கிளை அமைப்பு என்று பொருள். குறிப்பிட்டத் தத்துவத்தில் ஒருசார்பு நம்பிக்கை உடையவர்கள் ஒன்றுகூடிப் படிக்கும் இடம், பள்ளி என்பது முந்தைய பொருள். தற்போது ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினர்கள் நாள்தோறும் ஒன்றுகூடி ஆயுதம் உட்பட உடல் பயிற்சிகள், பிரச்சனைகள் விவாதித்தல் முதலியன நடைபெறும் கிளை என்பதைக் குறிக்கும்). இது ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிப்பது.

முதலாவதாக, இது இளைஞர்கள் இத்திட்டத்தை ஏற்றுக் கொண்டார்கள் எனவும், நரேந்திர மோடி மற்றும் அவரது அரசின் திட்டங்களில் முழு நம்பிக்கை வைத்துள்ளார்கள் எனக் காட்டுவதற்கான சமிக்ஞை. இரண்டாவது, இந்திய இராணுவத்தின் முப்பிரிவுகளுடன் ஆர்எஸ்எஸ் ஆழமான உறவை ஏற்படுத்திக் கொள்ள வழிவகை காண இயல்வதாகும். இரண்டாவது அபாயகரமான பின்விளைவுகளை உண்டாக்க வல்லது. மோடி ஆட்சி ஏற்படும்வரை, நமது இராணுவம் அரசியல் ரீதியில் நடுநிலையாக இருந்து வந்தது. இராணுவத்தின் விஸ்வாசம் தாய்நாட்டுடன் மட்டுமே. பாஜக அரசு இவை அனைத்தையும் தலைகீழாக மாற்றிவிட்டது. இன்றைய நாட்களில் இராணுவத் தலைமைத் தளபதிகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் மொழியைப் பேசுகிறார்கள். இது மிக மிக ஆபத்தானது!

சமூகரீதியான தாக்கம்

       நீண்ட கால அடிப்படையிலான வேலைவாய்ப்பு, அமைதியையும் செழிப்பையும் சமூகத்தில் கொண்டுவரும் எனச் சமூகவியலாளர்கள் நம்புகிறார்கள். ஒரு சமூகத்தில் குற்றங்களைக் குறைப்பதற்கான ஆகச் சிறந்த வழி, சமூகத்தின் அனைத்து இளைஞர்களுக்கும் கல்வி அளித்து வேலையில் அமர்த்துவதேயாகும். நீண்டகால அடிப்படையில் அர்த்தமுள்ள பயனுள்ள வகையில் இளைஞர்களை ஈடுபடுத்துவதே குற்றங்களைப் பெருமளவு குறைக்கும்.

   இதற்கு முன்பு 15 அல்லது 20 ஆண்டுகள் சேவையாற்றிய பிறகு ஓய்வுபெறும் ஓர் இராணுவவீரர், அவரது குடும்பம் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டிற்கு உறுதியான அடித்தளம் அமைத்திருப்பார். ஓய்வூதியம் குடும்ப அடிப்படைத் தேவைகளைக் கவனித்துக் கொள்ளும்போது, இராணுவம் வழங்கும் நலவாழ்வு ஆதரவு அவரது குழந்தைகள் மற்றும் பெற்றோர்களைக் கவனித்துக் கொள்ளும். சமூகத்தில் ஒரு முன்னாள் இராணுவ வீரர் கண்ணியமான வாழ்க்கையை நடத்துவார், புதிய தலைமுறைக்கு ஒரு முன்னுதாரணமான மாதிரியாக விளங்குவார்.

      (நான்கு ஆண்டு தற்காலிக பணி முடித்த பிறகு) அக்னிபத் திட்டத்தின் காட்சி குறித்த சமூகவியலாளர்களின் மிகப் பெரிய கவலை என்ன தெரியுமா? ஆயுதப் பயிற்சி பெற்ற பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள், அந்தக் கண்ணிய வாழ்க்கைக்கான எந்த உத்தரவாதமும் இல்லாது, சமூகத்தில் நுழைவதே ஆகும். அவர்கள் எந்தப் பாதையை தேர்ந்தெடுப்பார்கள் என்பது அப்போது நிலவக்கூடிய சமூக அரசியல் நிலையைப் பொறுத்தது.

          வேலையில்லாது இருக்கும் அவலத்தின் அழுத்தம்  மிக எளிதாகச் சமூகக் கட்டுகள் மற்றும் நியதிகளின் சமூக இழைப் பின்னல் கட்டமைப்புகளை அறுத்தெறியும். இதனுடன் ஆயுதப் பயிற்சியின் திறனும் இணைந்து கொள்ளும். நிரந்தர இராணுவச் சேவை ஓய்வுக்குப் பிறகு உறுதியளிக்கப்பட்ட கண்ணியமான வேலைவாய்ப்பின் காரணமாக முன்னாள் இராணுவவீரர்கள் சமூகத்தில் அரிதாகவே தெருச் சண்டைகளில் ஈடுபடுவர். அப்போதும் அவர்கள் ஒருபோதும் துப்பாக்கிகளைத் தூக்குவதில்லை. பொதுவாகப் பிரச்சனைகளிலிருந்து விலகியே இருப்பர். உறுதியளிக்கப்பட்ட சமூக நலவாழ்வு எல்லா டென்ஷன்களையும் அவர்களிடமிருந்து விலக்கி வைக்கும்.

            ஆனால் (வித்தியாசமான கட்சியான பாஜக அரசின்) அக்னிபத் திட்டம் முற்றிலும் வித்தியாசமான திட்டம். ஓய்வுக்குப் பிந்தைய பலன்கள் எதுவும் இல்லை. உண்மையில் அவர்கள் ரிட்டையர் செய்யப்படுவதில்லை. அது பலன்கள் ஏதுமின்றி வெறுமே ‘போ என கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவது’. நான்காண்டுகளுக்குப் பிறகு இராணுவத்தில் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளப்படாதவர்களுக்குக் கையில் ஒரு தொகை கொடுப்பதாக விளம்பரம் செய்கிறார்களே, அது உண்மையில் அக்னிவீரர்கள் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படுவதே. அது அவர்களின் பணம், அதனுடன் அரசு தனது பங்களிப்பையும் அளிக்கிறது, அவ்ளவுதான். ஒவ்வொரு மாதமும் ஊதியத்தில் கழித்துக் கொள்ளப்படும் அந்தப் பிடித்தத் தொகை ரூ9ஆயிரத்துடன் அதே அளவு தொகையை அரசும் பங்களிப்புச் செய்கிறது. அதைத்தான் இறுதியில் கொடுக்கப்படும் பெருந்தொகை என்கிறார்கள்.

            25 வயதில் ஓர் இளைஞன், எந்தவித முறையான திட்டமிடுதலும் இல்லாது, பெறுகின்ற 11 லட்சம் ரூபாய் உண்மையில் அந்த முன்னாள் அக்னிவீரனுக்கும் சமூகத்திற்கும் மிகப் பெரும் ஆபத்து. அதுவே அந்த இளைஞனுக்குச் சரியான வழிகாட்டலும் இல்லாது போயின் அவன் பண்பு எடுப்பார் கைப்பிள்ளையாகிப் போகும். அப்படிப்பட்ட தீங்கு நேராது காக்கும் ஒரே உத்தரவாதம் அத்தகு முன்னாள் வீரர்கள் அனைவருக்கும் உடனடியாக வேலைவாய்ப்பு வழங்குவது மட்டுமே.

            சில தொழிலதிபர்கள் கூரையில் ஏறிக் கூச்சலிடுகின்றனர், ’நான்காண்டுகளுக்குப் பின் வெளிவரும் 75 சதவீத அக்னிவீர்களில் பெரும்பான்மையோரை எங்கள் நிறுவனங்களில் இணைத்துக் கொள்வோம்.’ (அதனால்தான் போலும்) முன்னாள் இந்தியக் கடற்படை முதன்மை அட்மிரல் அருண் பிரகாஷ் சரியாகவே தொழிலதிபர்களை நோக்கி, ‘சமீப ஆண்டுகளில் நீங்கள் உங்கள் நிறுவனங்களில் எவ்வளவு முன்னாள் இராணுவவீரர்களுக்கு வேலை அளித்துள்ளீர்கள் என்ற சரியான எண்ணிக்கையை வழங்குங்கள்’ என்று  கேட்டார்.

          ‘அறிவுள்ளவர்களே நல்ல யோசனைக்குக் காது கொடுப்பார்கள்’ என்பது ஒரு முதுமொழி. இதைத்தான் ‘முதலையும் மூர்க்கரும் கொண்டது விடா’ என்பர். இது அக்னிபத் திட்டத்திற்கு மிகவும் பொருந்தும். இந்தியா கடுமையான வேலையில்லாத் திண்டாடத்தில் தவிக்கும்போது இந்திய இராணுவம் சிறிது நம்பிக்கை அளித்திருக்க முடியும். ஆனால் அப்படி இருந்த நம்பிக்கைகளையும் கொன்று குழிதோண்டிப் புதைப்பது இந்திய இராணுவம் இளைய தலைமுறைக்கு இழைக்கும் துரோகம்.

         இந்திய இராணுவம் எப்போதுமே எல்லா நெருக்கடியான தருணங்களிலும் தன்னால்

இயன்ற நன்மைகளையே செய்திருக்கிறது, ஏனெனில் இத்தேசமும் சமூகமும் இராணுவத்தின் வீர வீராங்ககைளை மதிக்கிறது. இன்று அந்த மதிப்பும் மரியாதையையும் அவர்களிடமிருந்து, கார்ப்பரேட்டுகளை ஆதரிக்கும் குறுகிய பார்வை கொண்ட, அரசியல்வாதிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களால் பறிக்கப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் தேச நன்மைகளைச் சீரழிக்கும். சமச்சீராக வகுக்கப்படாத இத்திட்டத்தின் விளைவுகள் நாட்டிற்குத் தெரியவரும்போது அது காலம் கடந்ததாக, கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்வதாய், இருக்கும். திரும்பி வருதற்கான பாதை இராது, ஆறாக் காயங்கள் அப்படியே இருக்கும்.

            அக்னிபத், நெருப்பின் பாதை, இல்லாத ஊருக்குப் போகாத வழிகாட்டும் பாதை, எங்கும் அழைத்துச் செல்லாது!

                                                                                                --நன்றி : நியூஏஜ் (ஜூலை 3 –9)                                           

                                                                                                --தமிழில் : நீலகண்டன், என்எப்டிஇ, கடலூர்

 

              

 

 

 

 

No comments:

Post a Comment