Thursday 30 June 2022

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலா;ற்று வரிசையில் 65 -- தாதி மகந்தா

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 65

தாதி மகந்தா --அஸாம், வடகிழக்கு மாநிலத்தில் கம்யூனிஸ்ட் மற்றும்  இலக்கியஇயக்கம் கட்டியவர்

                                         --அனில் ரஜீம்வாலே

தாதி மகந்தா 1914ல் அஸாம், ஜோர்ஹட் தென்பகுதியில் கரங்காவின் டெல்பானி என்ற இடத்தில் பிறந்தார். தந்தை ஜாதப் சந்திர மகந்தா. கோலஹாட்டில் பள்ளிக் கல்வியைப் பெற்றவர் கோலஹாட் பெஸ்போரோ ஆங்கில உயர்நிலை பள்ளியில் படித்தபோதே ‘புஷ்பாஞ்சலி’ என்ற கையெழுத்துப் பிரதி பத்திரிக்கையை வெளியிட்டார்.

மாணவர் இயக்கத்தில்

            குன்னிங்காம் அறிக்கையை எதிர்த்து அவர் இரண்டு ஆண்டுகள் பள்ளியைவிட்டு விலகினார். (பிரிட்டிஷ்க்கு எதிராக விடுதலை இயக்கங்களில் குறிப்பாக ஒத்துழையாமை இயக்கத்தில் மாணவர்கள் கலந்து கொள்வதை முற்றிலுமாகத் தடைசெய்த 1930ன் அன்றைய பொதுத் தகவல் இயக்குநர் ஜெஆர் குன்னிங்காம் வெளியிட்ட) கண்டனத்திற்குரிய அந்த அறிக்கை அஸாம் மற்றும் கோலஹாட்டை உலுக்கியது. பல மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலிருந்து, சிலர் நல்லதாகப் போயிற்றென்றும், வெளியேறினர். தாதியும் கோலஹாட் அரசு உயர்நிலைப் பள்ளியைவிட்டு, பின்னர் ஜோர்ஹட் அரசு சாரா பெஸ்பாருஹ் உயர்நிலைப் பள்ளியிலிருந்து மெட்ரிக் தேர்வு பெற்றார். இத்தகைய பள்ளிகள் (அரசுக்கு) எதிர் இயக்கத்தின் ஒரு பகுதியாக இணையான கல்வி முறையை நடத்தின. 1929ல் கோலஹாட்டில் அஸாம் சாகித்திய பரிக்ஷத் ஒரு மாநாட்டை நடத்தியது. அம்மாநாட்டில் தாதி ஒரு மாணவத் தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றினார்.

            காலேஜ் படிக்கும்போது காலரா பாதிப்புக் காரணமாகக் கல்லூரியைவிட்டு நீங்கினார். இருப்பினும் பின்னர் அவர் ஜோர்ஹட் ஜகந்நாத் பரூவா கல்லூரியில் சேர்ந்து இந்தியப் பள்ளிச் சான்றிதழ் (ISc) தேர்வானார். அவருடைய முயற்சியால்தான் கல்லூரியில் பிஏ வகுப்புகள் தொடங்கப்பட்டன. அங்கே மாணவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகத் தேர்வாகி பின்னர் அதன் தலைவரானார். 1941ல் பிஏ தேர்வு பெற்றபின் எம்ஏ பட்டப்படிப்பில் சேர கல்கத்தா சென்றார். ஆனால் படிப்பை முடிக்க முடியாமல் வீடு திரும்பினார்.

            தாதி மகந்தா எழுதுகிறார் : “1937 --38ல்  இதை எழுதுபவர் (தாதி) ஜோர்ஹட் சாத்ர சன்மிலான் (Chhatra Sanmilan, மாணவர் சங்கம்) மற்றும் ஜகந்நாத் பரூவா கல்லூரி மாணவர்கள் சங்கச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பேராசிரியர் துளசி நாராயன் சர்மா மற்றும் அன்றைய ஜோர்ஹட் அரசு உயர்நிலைப் பள்ளி உதவித் தலைமையாசியர் மரியாதைக்குரிய லகேஷ்வர் சர்மா பரூவா ஆகிய இருவரும் தேசிய இயக்கம் மற்றும் மாணவர்களின் முற்போக்கு இயக்கத்திலும் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார்கள். இவ்விருவரின் இல்லங்களையும் சன்மிலானின் தற்காலிக அலுவலமாக மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். இந்த இரு பெருமக்கள் அளித்த உற்சாகத்தால் ஜோர்ஹட் சாத்ர சன்மிலான், 1936ல் நிறுவப்பட்ட அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் அமைப்பில் இணைப்புப் பெற செய்த மனு ஏற்கப்பட்டது.

            ஜோர்ஹட் சாத்ர சன்மிலான் சங்கம்தான், அஸாம் மாணவர் பெருமன்றத்தின் முதல் கிளை. பெங்கால் மாகாணப் பிரதேச மாணவர்கள் சம்மேளன (BPSF) வங்கத் தலைவர் பிஸ்வநாத் முகர்ஜியை வரவேற்க சாத்ர சன்மிலான் ஒரு கூட்டத்தை நடத்தியது. அவரது ஆலோசனையை ஏற்றே 1939 ஏப்ரல் மாதத்தில் அஸாம் சாத்ர சன்மிலானின் 24வது ஆண்டு மாநாட்டை ஜோர்ஹட்டில் நடத்த முடிவெடுக்கப்பட்டு ஏப்ரல் 21ல் நடத்தப்பட்டது.

அம்மாநாட்டின் வரவேற்புக்குழுச் செயலாளராகத் தாதி மகந்தா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிற்காலத்தில் இந்தியாவின் கல்வி அமைச்சரான ஹுமாயூன் கபீர் மாநாட்டுக்குத் தலைமை வகித்தார். இந்த மாநாட்டில்தான் சன்மிலான் ஏஐஎஸ்எஃப் உடன் இணைப்புச் சங்கமாக முடிவெடுத்தது. 1939வரை ‘சதவ் அஸாம் சாத்ர சன்மிலான்’ மட்டுமே அசாமின் மாணவர் அமைப்பாக இருந்தது. இந்த மாநாட்டில் தாதியின் பெரும் பங்களிப்பில் அந்த அமைப்பு அஸாம் மாணவர் சம்மேளனமாக மாற்றம் பெற்றது.

ஏஐஎஸ்எஃப் 7வது மாநாடு 1941ல் பாட்னாவில் நடைபெற்றது. ’மக்கள் போர்’ என்ற முழக்கம் இதன் மேடையிலிருந்துதான் முதன் முதலாக அறிவிக்கப்பட்டது. தாதி மகந்தா, கௌரி சங்கர் பட்டாச்சாரியா மற்றும் இரமேஷ் சர்மா அஸாமின் பிரதிநிதிகள் குழுவில் இடம் பெற்றனர். மக்கள் போர் (பியூபிள்ஸ் வார்) தீர்மானத்தை ஆதரித்துத் தாதி சக்திமிக்க வலிமையான சொற்பொழிவை ஆற்றினார்.

1942ல் போர்ச் சூழலில் நடந்த ஜோர்ஹட் மாநாட்டில் ஜோர்ஹட் தேயிலைத் தோட்ட டொக்லாய் ஆய்வு மேம்பாட்டு இயக்குநர் அழைக்கப்பட்டிருந்தார். (தி டோக்லாய் எக்ஸ்பரிமென்டல் ஸ்டேஷன், தேயிலை மேம்பாட்டிற்கான ஓர் ஆய்வு வசதியாகும்.) திடீரென அந்தப் பிரிட்டிஷ் அதிகாரி மகாத்மா காந்திஜி குறித்து, அவரை ஒரு ‘பனியா’ (வியாபாரி) என்று அழைத்தது உட்பட, கேலியாகச் சில ஆத்திரமூட்டும் விமர்சனங்களைச் செய்தார். தாதி உட்கார்ந்த இடத்திலிருந்து விருட்டென்று எழுந்து பிரிட்டிஷ் அதிகாரி தனது சொற்களைத் திரும்பப் பெறவில்லை என்றால் அவரை மேலே செல்ல அனுமதிக்க மாட்டோம் என்றார். அந்த அதிகாரியைக் கட்டாயமாக மன்னிப்புக் கேட்க வைத்தனர்.

ஜவகர்லால் நேரு ஜெபி கல்லூரிக்கு வந்திருந்தபோது தாதி அவரைச் சந்திக்க முடிந்தது. போலீஸ் எச்சரிக்கையையும் மீறி நேரு மாணவர்களிடையே உரையாற்றினார். 1937 பொதுத் தேர்தல்களின்போது தாதி, கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோதே, காங்கிரஸ் கட்சிக்காகப் பணியாற்றினார்.

ஓப்பியம் நுகர்வுக்கு எதிராக இயக்கம்

           போதை வஸ்து ஓப்பியம் நுகர்வுக்கு எதிராகக் காங்கிரஸ் அரசு தொடங்கிய இயக்கங்கள் ஒரு பெரும் தலைவலியானது. வேறு வழியின்றி அமியா குமார் தாஸ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த இயக்கத்தில் தாதி மகந்தா பல மாதங்கள் பணியாற்றினார். இந்தப் போராட்டம் முதலில் கிருஸ்துவ பேப்டிஸ்ட் மிஷனரிகளால் தொடங்கப்பட்டது. இப்போதை பழக்கத்திற்கு எதிராகத் துண்டறிக்கைகள், பிரச்சார ஏடுகள் வெளியிடப்பட்டதுடன், விழிப்புணர்வை ஏற்படுத்த நாடகங்களும் அரங்கேற்றப்பட்டன. பெரும் எண்ணிக்கையில் அறிஞர்கள் பங்கேற்றனர். சில காலத்தில் இந்த இயக்கம் தேசிய இயக்கத்துடன் இணைந்தது.

சிபிஐ கட்சியில் சேர்தல்

            அஸாமில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியவர்களில் தாதியும் ஒருவர்.

            காசி பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே கம்யூனிஸ்ட்டான ஜோர்ஹட்டிலிருந்து வந்த ஜடுநாத் ஸைக்கியாதான் அஸாம் சிபிஐ கட்சியின் முதல் உறுப்பினர்.1938ல் ஏஐஎஸ்எஃப் அமைப்பின் இணைச் செயலாளர் பிஸ்வநாத் முகர்ஜி அஸாம் வந்தார். அவர் தாதி மற்றும் தோழர்களிடம் கோலகாட், ஜோர்ஹட், த்திப்ருஹார்க் முதலிய இடங்களில் சோஷலிஸ்ட் கட்சியை அமைக்கும்படி யோசனை கூறினார்.

    1939ல் இடதுசாரி மனோபாவம் உள்ளவர்கள் கௌஹாத்தி (குவஹாத்தி)யில் ஒரு கருத்தரங்கை நடத்தினர். அது ஜடுநாத் ஸைக்கியா மற்றும் பபித்ரா ராய் அவர்களால் கூட்டப்பட்டது. 1940ல் மிசமோராவில் காங்கிரஸ் மாநாட்டுடன் அதே வளாகத்தில் மற்றுமொரு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. தனது மாணவ நண்பர்களுடன் தாதி தீவிரமாகப் பங்கேற்றார்.

         அந்தக் கருத்தரங்கில் அஸாமில் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பது குறித்து விவாதம் நடந்தது. கடுமையான கருத்து வேறுபாடு இருந்தது. சிலர் அஸாம் சோஷலிஸ்ட் கட்சியை (அஸோம் சமாஜ்தந்த்ரிக் தள்) அமைக்க விரும்பினர், வேறு சிலரோ அஸோம் காங்கிரஸ் சமாஜ்தந்த்ரிக் தள் அமைக்க வேண்டும் என்றனர். இவ்வாறு சோஷலிசவாதிகள் மற்றும் காங்கிரஸ்காரர்களுக்கும் இடையே பிளவு ஏற்பட்டது.

            இறுதியில் அஸோம் காங்கிரஸ் சமாஜ்தந்த்ரிக் தள் அமைப்பது என முடிவானது, அதன் செயற்குழுவில் தாதியும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.  தள் அமைப்பின் முதலாவது செயற்குழு லும்டிங்கைச் சேர்ந்த எஸ்என் பண்டிட் இல்லத்தில் நடைபெற்றது.

     கம்யூனிஸ்ட் கட்சி முறையாக அமைக்கப்படுவதற்கு முன்பு பாரக் பள்ளத்தாக்கில் கம்யூனிஸ்ட் குழு ஒன்று செயல்படத் தொடங்கியது. தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் தேசிய இயக்கத்தில் பங்கேற்ற படித்தவர்கள் கட்சியைப் பலப்படுத்த உதவிக்கரம் நீட்டினார்கள். முன்பு அஸாம் கம்யூனிஸ்ட் குழு வங்காளக் கட்சியின் கீழ் செயல்பட்டது. 1943ல் கோலஹாட்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அஸாம் கிளையின் அமர்வு நடைபெற்றது. அஸாம் பள்ளத்தாக்கு குழு என்ற பெயரில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 1948ல் குவஹாத்தியில் கட்சியின் முதலாவது மாகாண மாநாடு நடைபெற்றது. பிரிட்டிஷ் காலனிய ஆட்சியை எதிர்த்துக் கம்யூனிஸ்ட் கட்சி தேசியக் காங்கிரசுடன் இணைந்து போராடியது. அஸாமில் பிரேஷ் மிஸ்ராவைச் செயலாளராகக் கொண்டு 1943ல் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசக் கிளை அமைக்கப்பட்டது.

            அது முற்போக்கு இலக்கிய இயக்கத்தில் காட்டிய ஈடுபாடு குறிப்பிடத்தக்க குணாம்சம். அவர்கள் மாணவர்கள், விவசாயிகள், தேயிலைத் தொழிலாளர்கள் எனப் பல்வேறு பிரிவினர்களின் சங்கங்களை அமைத்தனர். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களை முற்போக்காகச் சிந்திப்பது குறித்து மறுமலர்ச்சி பெறச்செய்ய அவர்கள் முயன்றனர். செயற்கையான விலை உயர்வு, உணவு நெருக்கடி பிரச்சனை, கருப்புப் பணம் முதலியவற்றிற்கு எதிராக அவர்கள் போராடினர். கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் இலக்கியவாதிகளுடன் கூட்டு சேர்ந்து ஹெமங்க பிஸ்வாஸ் பாரதிய காணத்ய சங்கா’ (பாரத மக்கள் நாடக மன்ற சங்கம்) அமைப்பின் பிரதேசக் கிளையைத் தொடங்கி பள்ளத்தாக்கின் மக்கள் செயல்பாட்டிற்கு ஒரு மேடையை வழங்கினார்.

      கம்யூனிஸ்ட் கட்சி டெர்கௌண் அருகே கோலஹாட்டில் மிசமோராவின் டெலியா சோனாரிகௌண் என்ற கிராமத்தில் முறையாக அமைக்கப்பட்டது. இங்கே 1940 ஜனவரி 27, 28ல் கம்யூனிஸ்ட் சிந்தனையுடைய காங்கிரஸ் உப்பினர்கள் கூடினர். வங்கத்திலிருந்தும் சில தோழர்கள் கலந்து கொண்டனர். பின்னர் 1942 ஜூலை 22ல் ஹார்கேஷ்வர் ஸைக்கியா இல்லத்தில் மற்றொரு கூட்டம் நடத்தப்பட்டது. ஜடுநாத் ஸைக்கியாவைச் செயலாளராகத் தேர்ந்தெடுத்துப் புதியதாகக் கட்சி அமைக்கப்பட்டது.

           உண்மையில், மேல் அஸாமில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்க பிரசாந்த சன்யால்தான் அனுப்பப்பட்டார்.

பிடிஆர் காலம் குறித்து

            தாதி மகந்தா பிடிஆர் பாதையைக் கடுமையாக எதிர்த்தார், பிடிஆர் பாதையை ஏற்பது கட்சியைப் பெரிதும் பாதிக்கும் என்று கருத்துத் தெரிவித்தார். நாடு தனது விடுதலையைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது ஆயுதப் புரட்சியை நாடுவது என்பது தவறானது, கேடு பயப்பது என்றார்.  தேர்தல்களில் பங்கேற்பதை வரவேற்றவர், காங்கிரசுடன் ஒத்துழைப்பதற்கு ஆதரவாக நின்றார். ‘எதனை நீ உண்மையென்று கருதுகிறாயோ, பிறகு அதற்காக நீ போராடத்தான் வேண்டும்’ என்ற காந்திஜியின் அறிவுரையை அவர் நம்பினார். அதுபோலவே தவறுகளும் உடனடியாகத் திருத்தப்பட வேண்டும் என்றார்.

       விரைவில் அஸாம் மற்றும் வடகிழக்கின் சிபிஐ உயர் தலைவராகத் தாதி மகந்தா உயர்ந்தார். பலதரப்பு வட்டங்களில் அவர் உயர்வாக மதிக்கப்பட்டார். மாநிலக் கட்சியின் செயலகத்தில் அவர் நீண்ட பல ஆண்டுகள் இருந்தார், கட்சியின் ‘ஜனமத்’ (மக்கள் எண்ணம்) மற்றும் பிற இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார். குறிப்பாக, தாதி மகந்தா கற்றறிந்தோர் மற்றும் இலக்கியச் செயல்பாட்டாளர்கள் மத்தியில் தீவிரமாகச் செயல்பட்டார். அவர்கள் மத்தியில் அவர் (கட்சிப்) பணிகளைப் பிரபலப்படுத்தவும் ஒன்று திரட்டும் ஏராளமான அமைப்புநிலைப் பணிகளையும் ஆற்றினார்; மேலும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பிற பகுதி மக்கள் மத்தியில் பணியாற்றினார்.

ஆசிரியராக

            தனது மாணவப் பருவ நாட்களில் தாதி மகந்தா ஜெபி கல்லூரியின் ‘ஜெபி-யன்’ இதழின் ஆசிரியராக இருந்தார். கல்லூரி முதல்வர் கிருஷ்ண காந்த ஹண்டிக் வழிகாட்டலின் கீழ் இதழ் ஆசிரியராக இது அவரது முதல் அனுபவம். பின்னர் அஸோம் சாத்ர சன்மிலான் அமைப்பின் குரலான ‘மிலன்’ இதழில் ஆசிரியராக இருந்தார். அந்த இதழ்தான் அஸோம் சாகித்திய சபா அமைப்புக்கு அடித்தளமானது. அவர்தான் ‘நூதன் அஸோம்’ (புதிய அஸாம்) இதழின் நிறுவன ஆசிரியர், அந்த இதழே சிபிஐ கட்சியின் முதலாவது அஸாமிய மொழி பத்திரிக்கை. அவர் டாக்டர் தீனநாத் சர்மா ஆசிரியராக இருந்த ‘ஆவாகன்’ பத்திரிக்கையின் உதவி ஆசிரியர்.

சீனா மீதான கருத்துகள்

           சோஷலிசத்திலிருந்து விலகிச் சென்றதற்காகச் சீனாவை விமர்சனம் செய்த தாதி மகந்தா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுக்குச் சீனாவே பொறுப்பு என்றார். 1962ல் இந்தியா மீது சீனா நடத்திய தாக்குதலுக்குப் பின் கட்சி மோசமாகப் பிரிந்தது, இறுதியாக 1964ல் கட்சிப் பிளவில் போய் முடிந்தது.

        பொம்டிலா பகுதியில் சீனா ஆக்கிரமிப்பால் அஸாம் மோசமாக பாதிக்கப்பட்டது, சீனர்கள் பிடித்துவிடுவார்களோ என்ற பயத்தில் மக்கள் பலரும் டெஸ்பூரை விட்டு ஓடினர். வட கிழக்குப் பிராந்தியமே சீன ஆக்கிரமிப்பு அபாயத்தில் இருந்தது, ஆனால் சீனப் படையினர் பின்வாங்கித் திரும்பச் சென்றனர். இருப்பினும் அவர்கள் கம்யூனிஸ்ட் மற்றும் முற்போக்கு இயக்கங்களுக்குக் கடும் சேதாரத்தை ஏற்படுத்தினர். இவற்றைத் தாதி மகந்தா கடுமையாக விமர்சனம் செய்தார்.

கல்வி, இலக்கியம் மற்றும் கலாச்சாரம் குறித்து

      தாதி மகந்தா கருத்தின்படி விவசாயிகளுக்குப் பொதுக் கல்வியுடன் அறிவியல் கல்வியையும் வழங்க வேண்டும், விவசாயிகள் அனைவரும் எழுத்தறிவு மற்றும் கல்வி கற்றவர்களாக இருக்க வேண்டும். மாமேதை லெனின் மேற்கோளைச் சுட்டிக்காட்டி முந்தைய சமூகம் விட்டுச் சென்ற பொருண்மையிலிருந்து (மெட்டீரியல்) இளைஞர்களின் கல்வி தொடர வேண்டும் என்று தாதி கூறினார். கம்யூனிஸ்ட் கோட்பாடு கொள்கைகளைப் போதிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி கல்வி முகாம்களை நடத்த வேண்டும், சமூகத் தீமைகளை அவர்கள் எதிர்க்க வேண்டும் என்றார்.

           காந்திஜி காட்டிய பாதையிலிருந்து விலகிச் செல்வதற்காக அவர் காங்கிரஸை விமர்சனம் செய்தார். இது சம்பந்தமாக அஸாம் மறுமலர்ச்சித் தலைவர் ஆகப்பெரும் இலக்கிய ஆளுமை ஜோதி பிரஸாத் அக்ரவாலா உணர்வுகளுடன் அவர் உடன்பட்டார்.

       மொழி குறித்தப் பிரச்சனையில் தாதி மகந்தா மிகத் தெளிவாக இருந்தார். கல்வி, தாய் மொழியில்தான் புகட்டப்பட வேண்டும் என்றார். மொழி அடிப்படையில் அஸாம் மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்று 1971ல் சிபிஐ மாநிலக்குழு யோசனை கூறியது. தாதி அதனை ஆதரித்தார். மாநிலக்குழு மேலும் கச்சார் பகுதியைத் தனி நிர்வாக அலகாக ஆக்க வேண்டும் என்றும் யோசனை கூறியது. கட்சியின் ‘ஜனமத்’ இதழில் மகந்தா பல கட்டுரைகளை எழுதியதுடன் அதன் ஆசியராகவும் இருந்தார். சுர்மா பள்ளத்தாக்குப் பகுதிக்குத் தனி அஸ்தஸ்து அளிப்பது ஒரு பிரச்சனையாக இருந்தது. தாதி, சுர்மாவில் அஸாமிய மொழியைத் திணிப்பதற்கு எதிராக இருந்தார். விட்டுக் கொடுத்துச் சமரசமாகச் செல்வதை ஆதரித்த அவர், அதே நேரத்தில் அஸாமின் முக்கிய மொழியாக அஸாமிய மொழி இருக்க வேண்டும் என்றார்.

            சரியாகப் பேசுவதையும் திருத்தமாக எழுதுவதையும் தாதி மகந்தா வற்புறுத்தினார்.

தாதி மகந்தா நூல்கள்

            வீட்டிலேயே தாதி இலக்கியப் பாடங்களைக் கற்றார், அதற்குப் பொருத்தமாக அவரது வீட்டின் சூழல் இலக்கியம் சார்ந்து இருந்தது. அவர் கற்றறிந்த அறிவாளியாக, ஓயாது எழுதிக்

குவிப்பவராக இருந்தார்; மார்க்ஸிய நூல்களைஆழமாகவும் விரிவாகவும் படித்தார். முற்போக்கு இலக்கியம் குறித்து ஏராளமாக எழுதினார். கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு, குறிப்பாக அஸாமில் இயக்க வரலாறு குறித்து எழுதியுள்ளார். அவர் ஒரு வாழ்க்கை வரலாற்றாசிரியர் மற்றும் நாடக ஆசிரியர். கம்யூனிஸ்ட் அறிக்கையை அஸாமிய மொழியில் மொழிபெயர்த்துள்ளார்; மேலும் டாக்டர் ஜாகீர் ஹுஸைன் எழுதிய “அடிப்படை கல்வி” நூல் மற்றும் நேருவின் எழுத்துக்களையும் அஸாமில் மொழிபெயர்த்துள்ளார். தாதி மகந்தாவின் ‘ரச்சனாவளி’ (தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துகள்) 1989ல் அஸாம் கம்யூனிஸ்ட் கட்சியால் பிரசுரிக்கப்பட்டது.

            “யார் ஒருவர் அஸாமின் கலாச்சார வரலாறு குறித்து எழுதினாலும், அத்தகைய எந்த ஒரு ஆய்வாளராலும் தாதி மகந்தாவின் எழுத்துக்களை, இனி வரக்கூடிய நீண்ட காலத்திற்குப், புறக்கணித்துவிட முடியாது” என்று புகழ்பெற்ற அறிஞர் ரஞ்சித் குமார் தேவா கோஸ்வாமி எழுதியுள்ளார்.

மறைவு

            ஒரு கண நேர விபத்தில் தாதி மகந்தா மரணமடைந்தார். மருத்துவச் சிகிச்சை பெற அவர் மருத்துவமனைக்கு ஒரு ரிக்க்ஷாவில் சென்று கொண்டிருந்தார். குவஹாத்தி, சில்புகுரி அருகே தீடீர் விபத்தைச் சந்தித்தார். 1986 ஜனவரி 31ம் நாளில் அஸாமின் புகழ்பெற்ற மைந்தர் தாதி மகந்தா இயற்கை எய்தினார்.

            அரசு “தாதி மகந்தா சமூக விஞ்ஞான ஆராய்ச்சி விருது” என்று அவரது பெயரில் ஒரு விருதை நிறுவியுள்ளது. பல கல்வி நிறுவனங்கள் மற்றும் இடங்களுக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் ஏராளமான ஆய்வுக்குரிய ஒருவராக அவர் விளங்குகிறார்.

            அஸாமிய மண் மணத்துடன் தாதி மகந்தாவின் புகழும் என்றும் மணம் வீசும்!  

--நன்றி : நியூஏஜ் (மே 22 –28)

                                                                                                    --தமிழில் : நீலகண்டன்,  என்எப்டிஇ, கடலூர்

 

 

 

    

 

  

                

 

No comments:

Post a Comment