Monday 20 June 2022

நீதிபரிபாலனம், அனைவருக்கும் ஓர்நிறை மற்றும் நீதியை உறுதிப்படுத்த வேண்டும்!

    நீதிபரிபாலனம், அனைவருக்கும் 

          ஓர்நிறை மற்றும் 

நீதியை உறுதிப்படுத்த வேண்டும்!

--நீதியரசர் மதன் பீமாராவ் லோகுர்
உச்சநீதிமன்ற நீதிபதி (பணி ஓய்வு)

நாட்டில் இரண்டு நீதிமுறைகள் நிலவுகிறதா? உண்மையில் உச்சநீதிமன்றம் சொல்லியது: ‘‘இந்தியாவில் – ‘ஒன்று, பணக்காரர்கள், வசதி படைத்தோர் மற்றும் அரசியல் அதிகாரத்தையும் செல்வாக்கையும் வளைக்கத் தெரிந்தோருக்கானது; மற்றது, வசதியற்றவர்கள், நீதியைப் பெறும் சக்தியற்றவர்கள் அல்லது அநீதியை எதிர்க்க முடியாதவர்களுக்கானது’ என இணையான இரண்டு நீதி முறைகள் இருக்க முடியாது.” நல்லது, எதார்த்தத்தில் உண்மை, இரண்டு இணையான நீதி முறைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது. அதைத்தான் டெல்லி முந்த்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள வணிக வளாகத்தில் நிகழ்ந்த துயர்மிகு தீ விபத்தும், புல்டோசர் உதவியுடன் நடத்தப்பட்ட ஜகான்கீர்புரி இடிப்பு நடவடிக்கைகளும் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

அகதிகளாக்கும் புல்டோசர்

டெல்லி மற்றும் அதைச் சுற்றிலும் எண்ணற்ற சட்டவிரோதக் கட்டுமானங்கள், அது போல நாட்டின் பலபகுதிகளிலும் இருப்பது ஊரறிந்த ரகசியம். டெல்லியைப் பொருத்தவரை 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் சட்டவிரோதமானவை மற்றும் பொது இடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டவை என அழைக்க முடியும் என முதல்வர் அரவிந்த் கேசரிவால் கூறியுள்ளதாகத் தகவல்; மேலும் சமீபத்திய புல்டோசர் இடிப்பு நடவடிக்கைகள் தொடருமெனில் 63 லட்சம் மக்கள் வீடு இழந்து அகதிகள் ஆவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வீடு இழந்து நிர்கதியானவர்கள் மிகப் பெரும்பாலும் ஏழைகள், ஏதுமற்றவர்களாகவே இருப்பர் என நான் நம்புகிறேன்; ஏனெனில் பணம், ஆள் படை அம்பு அதிகாரம் அல்லது அரசியல் சக்திமிக்க செல்வாக்குடையவரைத் தொட்டுவிடும் துணிச்சல் மாநகராட்சி அதிகாரிகளுக்கு இல்லை. கடந்த காலச் சமீப உதாரணங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்: எங்கே கட்டுமானங்கள் கட்டப்படக் கூடாதோ, ஆனால் அங்கெல்லாம் கட்டடம் எழும்பி இருக்கும்; துயர நிகழ்வு நேரும் முன் (விதிகளுக்குப் புறம்பான) அவை இடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக அங்கெல்லாம் நடவடிக்கை எடுக்கப்பட்டிராது; காரணம், அந்தக் கட்டடங்களோடு தொடர்புடையவர்கள் பணக்காரர்களாக, அல்லது ஆள் படை அம்பு அதிகாரம் மிக்கவர்களாக, அல்லது அரசியல் செல்வாக்குடையவர்களாக அல்லது இந்த மூன்றும் உடையவராய் இருக்கலாம்.

உப்ஹார் சினிமா தியேட்டர் துயர நிகழ்வு

டெல்லி கீரின் பார்க் பகுதியின் புகழ்பெற்ற உப்ஹார் தியேட்டரில் 1997ல் நடந்த துயர்மிகு தீ
விபத்து இன்றும் தொடர்ந்து நம்மைத் துன்பப்படுத்துகிறது. இந்த ஜூன் 13, மறக்க முடியா பேரழிவின் 25வது ஆண்டு. 59 உயிர்களை இழந்த, நூற்றுக்கும் மேற்பட்டோர் துன்புற்ற தீக்காயங்களின்  நெஞ்சைப் பிழியும் சோகம் நினைவில் ஆடுகிறது. தங்கள் அன்பிற்குரியோரை இழந்த குடும்பங்கள் தூக்கம் தொலைத்த கொடுங்கனவாய் அதிலிருந்து மீள முடியாத துயரம் புரிந்து கொள்ளக்கூடியது. அத்துயருக்குக் காரணமான தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விபத்தை அனுமதித்த அதிகாரிகள் தண்டிக்கப்பட்டார்கள் (7 ஆண்டுகள் சிறை தண்டனை) என்பது உண்மையாயினும், அது அவர்களுக்கு என்ன ஆறுதலை அளிக்க முடியும்?

என்னுடைய கேள்வி இதுதான்: முனிசிபல் அதிகாரிகளுக்குத் தெரிந்தே நடந்த இந்தத் துயரினைத் தடுக்க அந்த அதிகாரிகள் என்ன செய்தார்கள்? ஏன் (கட்டட விதிகள்) சட்டத்தை அமல்படுத்தவில்லை? அந்தக் குற்றச் செயல் அலட்சியத்திற்கு அவர்கள் தகுந்த முறையில் தண்டிக்கப்பட்டார்களா? யாருக்கும் இதற்கான விடை தெரியாது, ஒருக்கால் எல்லா வகையிலும் அவர்கள் எளிதாகத் தப்பி வெளியே வந்திருக்கலாம். நீதிபரிபாலன முறையில் பொறுப்பு (அக்கௌண்டபிலிட்டி) என்பது இல்லை என்பதற்கு உப்ஹார் துயரம்  சிறந்ததோர் உதாரணம்; வருத்தமாக இருப்பினும், இந்தியாவில் நீதிபரிபாலனம் (ஜூரிஸ்-ப்ருடன்ஸ்) நிலவவில்லை (என்பதே எதார்த்தம்)

நீதிபரிபாலனத்தில் பொறுப்பின்மை என்பது நீண்ட காலப் பின்விளைவுகளை உடையது. வருமுன் காக்கும் பாதுகாப்புப் பாடங்கள் கற்கப்படுவதே இல்லை. சில பாடங்கள் கற்றாலும் அதுவும் விரைவில் மறக்கப்பட்டு, தீர்வு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. பிரச்சனை சிறிதாக இருக்கும்போது காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் பின்னர் வருந்தத் தேவையில்லை; முள்செடியை எளிதாகப் பிடுங்கி எறிவதுபோல மரமாக வளர்ந்த பிறகு முடியாது, அது நம் கையைப் பதம் பார்க்கும் என வள்ளுவரும் எச்சரிப்பதை நினைவில் கொள்க. பின்விளைவு பலவகைகளில் மீண்டும் மீண்டும் பெருந்துயராய் வட்டமிட்டுத் தொடர்ந்து நிகழும். நாம் மேலும் சில உதாரணங்களைப் பார்க்கலாம்:

பவானா தொழிலகப் பகுதி பெரும்தீ  

          2018 ஜனவரியில் டெல்லிப் புறநகரின் பவானா தொழிலகப் பகுதியில் நடந்த பெரும் தீவிபத்து 17 உயிர்களைப் பலி வாங்கியது, மிகப் பலருக்குக் கடுமையான தீக் காயம்.

தொழிற்சாலை அதிபர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலையானார். உப்ஹார் துயரச் சம்பவத்திலிருந்து பாடம் கற்றிருந்தால், தீர்வு நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்பட்டிருந்தால், உப்ஹார் பெரும்தீ மீண்டும் நிகழாது தடுக்கப்பட்டிருக்கும் அல்லவா? மீண்டும் உயிர்ப் பலி வாங்கும் தீ விபத்துக்கள் நடக்குமென்றால், மாநகராட்சி மற்றும் சட்டரீதியான அதிகாரமுடைய அதிகாரிகள் தங்கள் பணிகளைச் செய்யவில்லை என்பதே சாதாரணமான பொருள். அவர்கள் கடமையைச் செய்திருந்தால் பவானா துயரம் நடந்திருக்காது. அதிகாரிகளின் மெத்தனம், நடவடிக்கையின்மையே   பவானா பெரும் துயருக்குப் பொறுப்பு என அவர்கள் ஏன் பொறுப்பாளி ஆக்கப்படவில்லை? யாருக்குத் தெரியும், நாமறியோம் பராபரமே!

ஆர்பிட் பேலஸ், சர்தார் பஜார் அனாஜ் மண்டி தீ விபத்துகள்

            ஓராண்டிற்குப் பிறகு மற்றொரு தீ விபத்து மக்கள் கூட்டம் நிரம்பிய கரோல் பாக் பகுதியின்  ஹோட்டல் ஆர்பிட் பேலஸ் இடத்தில் ஏற்பட்டது. 17பேர் பலி, 35 பேர் காயம். (ஹோட்டலுக்கு லைசென்ஸ் வழங்கிய) மாநகராட்சி அதிகாரிகள் கண்ணை மூடியிருந்து நடவடிக்கை எடுக்காது மெத்தனமாக இருந்ததற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

            அதே ஆண்டு 2019 டிசம்பரில் டெல்லி, சர்தார் பஜார் பகுதியின் அனாஜ் மண்டியில் பெரும் தீ விபத்து. அதில் 43 பேர் மடிந்து, 67 பேர் கடுமையாகக் காயமடைந்தனர். இறந்து போனவர்கள் பீகார் மற்றும் உபி யிலிருந்து வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், இப்போது அவர்கள் வெறும் புள்ளிவிபரமாகச் சுருங்கினர். அந்தக் கட்டடத்தில் சட்டவிரோதமான உற்பத்தி அலகுகள் செயல்பட்டு வந்தன. அதற்குத் தீ அணைப்புத் துறையிலிருந்து தடையில்லாச் சான்று இல்லை. அக்கட்டடத்தில் குவிக்கப்பட்டிருந்த எரியக்கூடிய பொருட்கள், ஒரு துயரம் நிகழக் காத்திருந்தது. பரவிய தீ நாக்குகளிலிருந்து அந்தத் தொழிலாளர்களுக்குத் தப்பியோட முடியாதபடி வெளியேறும் வாயில் பொருட்களால் திணிக்கப்பட்டிருந்தது. ஜன்னல்கள் சீல்வைக்கப்பட்டிருந்தால், அபாயகரமான புகை மற்றும் கார்பன் மோனாக்ஸைடு நச்சு வாயு சூழ இறுதியில் பரிதவித்து மூச்சுத் திணறி அவர்கள் மாண்டனர். கட்டட உரிமையாளர்கள் மற்றும் அவர்களது குழாம் கைது செய்யப்பட்டனர்; அதனால் என்ன, பின்னர் பிணையில் விடுதலையானார்கள். கடமை தவறிய மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தீ விபத்துத் தடுப்புக்கான தடையில்லா சான்று வழங்கும் அதிகாரிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அவர்கள் அல்லவா இந்த அத்துமீறல்கள், விதி மீறல்கள் தொடர்வதற்கு அனுமதித்தார்கள். கட்டட உரிமையாளர்களைப் போலவே அவர்களும் அல்லவா அதற்கான பழியை ஏற்க வேண்டும்? அவர்கள் பொறுப்பு இல்லையா அல்லது அவர்கள் கண்களை மூடிக் கொள்ள – தீமைகளைப் பார்க்காதது போல பாவனை செய்ய – ஒருக்கால் கையூட்டு அளிக்கப்பட்டிருக்கலாம் என்பதால் அவர்கள் சுலபமாகத் தப்பிச் சென்றுவிட உரிமை படைத்தவர்களா, என்ன?

கட்டடங்களின் அடிப்படை குறைபாடுகள்

            இது போன்ற பல நிகழ்வுகள். கலெக்டிவ் டெல்லி என்ற மாணவர் இளைஞர் அமைப்பு இந்தத் துயர நிகழ்வுகளை எல்லாம் நன்கு பட்டியலிட்டு ஆவணமாக்கி அதன் ஒரே மாதிரியான புறக்கணிப்பு அலட்சிய குற்றத்தைக் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளனர். பிரதானமாக, வானுயர்ந்த பிரம்மாண்டமான கட்டடங்கள் எந்தவிதக் கட்டட வரைபடத் திட்ட அனுமதியும் பெறாமல் கட்டி எழுப்பப்பட்டுள்ளன. இவை யாருமறியாமல் இருளில் கட்டப்பட்டதல்ல, பட்ட பகலில் சில மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டவை. அப்படிக் கட்டிக் கொண்டிருந்த காலத்தில் மாநகராட்சி அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தனர்? இக்கட்டடங்களுக்குத் தீயணைப்புத் துறையிலிருந்து தடையில்லா சான்றிதழ் இல்லை; அதைவிட அதிர்ச்சி, சிலர் அச்சான்றிதழுக்கு மனுகூடச் செய்யவில்லை; விளைவு, இவை உயிருள்ளோருக்கான சுடுகாடானது. சாதாரணமாக இங்கு தீயை எதிர்த்துப் போரிடும் அடிப்படையான நடவடிக்கைகள் காண முடியாது; தேவையான தீ அணைப்புக் கருவிகளோ, தப்பி ஓடும் அவசரகாலப் படிக்கட்டுகள் போன்ற எவையும் இங்கே இராது; இந்தக் கட்டடங்க்ளில் ஒரே நுழைவாயில் அல்லது வெளியேறும் வழி மட்டுமே இருக்கும் என இவற்றின் போதாமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

முந்த்கா தீ விபத்து

           இத்துயரங்களின் தொடர் நிகழ்வில் சமீபத்திய துயரம் முந்த்கா. நான்கு மாடி கட்டடத்தில் இரண்டு தளங்களில் தொழிற்சாலை உற்பத்தி நடவடிக்கைகள் நடந்து வந்தன. இதற்குத் தீ

விபத்துத் தடையில்லாச் சான்றிதழ் இல்லை, தீயணைப்புக் கருவிகள் இல்லை. தொழிலாளர்களின் பெரும்பாலானவர்கள் பெண்கள். தீ சூழ்ந்து அதில் சிக்குண்டபோது குறைந்தபட்சம் 27பேர் மாண்டனர், சிலர் அடையாளம் தெரியாத அளவு கரிக்கட்டையாய் மோசமாக மடிய, அடையாளம் காண டிஎன்ஏ சோதனை மேற்கொள்ள வேண்டி வந்தது.

            இக்கட்டடத்தில் ஒரே வழி மட்டும் இருந்ததாகத் தகவல். எப்படி நான்கு மாடி கட்டடம் ஒரே உள்நுழைவு அல்லது வெளியேறும் வழியுடன் மட்டும் மேலெழ அனுமதிக்கப்பட்டது? அப்படிக் கட்டப்பட்டதற்குப் பிறகாவது கட்டட விதிகள் மற்றும் தீவிபத்துப் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப் பட்டதா என்பது உறுதிபடுத்தப்பட்டதா? இதற்கான பதில் தெரிந்ததுதான்; பணக்கார, சக்திமிக்க மற்றும் ஒருக்கால் அரசியல் செல்வாக்குடைய உரிமையாளர்கள் அல்லது கட்டட ஒப்பந்ததாரர்கள் மீது என்றாவது நடவடிக்கை பாய்ந்ததுண்டா?

            ‘தொழிற்சாலை’ உரிமையாளர் கைது செய்யப்பட்டார், ஆனால் மிக விரைவில் அவர்கள் பிணையில் வெளியேவந்து விடுவார்கள் என்பது தெரிந்ததுதானே. கட்டட உரிமையாளர் தப்பி ஓடிவிட்டார், அவர் பிடிபட்டு கைதான பிறகு அவருக்கும் பிணை கிடைக்கும். அதிகாரிகளுக்கு? அவர்களில் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் – அவ்வளவுதான். என்ன நடந்துவிட்டது, சமகாலத்து அடிமையாக ஊக்குவிக்கப்பட்டு குறைந்தபட்ச ஊதியத்தில் பாதிக்கும் குறைவாகக் கூலி பெற்றுவந்த 21 பெண்கள் உட்பட வெறும் 27பேர் இறந்தனர். இப்படிச் சர்வ சாதாரணமாகக் குற்றநடவடிக்கைக்கான பொறுப்பு மேம்போக்காக மென்மையாகக் கையாளப்படுவதே எப்படியும் தண்டனையிலிருந்து தப்பிவிடலாம் என்ற கலாச்சாரத்தை வளர்க்கிறது; நாம் இந்தக் கேலிக்குரிய நாடகத்தின் மௌனச் சாட்சிகளாக இருக்கிறோம். பொறுப்பு என்பது அந்த லட்சணத்தில் இருக்கிறது.

தீ விபத்துத் துன்பியலும், புல்டோசர் ‘நீதி’ துன்பியலும்

            ஒரு முரண்பாடான ஒப்பீடு. ‘பணக்கார, எதையும் சமாளிக்கும் ஆள் படை அதிகாரத் திறன்மிக்க’வர்களுக்குச் சொந்தமான சட்டவிரோத மற்றும் அனுமதி பெறாத கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை இன்மையால் விளைந்த இந்தத் தீ விபத்துத் துயரங்களை; டெல்லி ஜகான்கீர்புரியில் “எதையும் சமாளிக்கும் ஆள் படை அம்பு அதிகாரமற்ற சிறிய மனிதர்களுக்கு’ எதிராகப் புல்டோசர்களை ஏவி விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் இப்போது சட்ட அகராதியில் அறிமுகம் செய்துள்ள புல்டோசர் நீதியுடன் ஒப்பிடலாம்!

            முன்னறிவிப்பு நோட்டீஸ் மற்றும் எச்சரிக்கை ஏதும் அளிக்காமல் புல்டோசர்கள் வந்தன; மேலே குறிப்பிட்ட சிறிய மனிதர்களான ஆண்கள் பெண்களின் வீடுகளை, த்ஹிலா என்னும் தள்ளு வண்டி அல்லது கடை/ஸ்டால் இவற்றை இடித்து நொறுக்கி நசுக்கியது. உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்: “அவர்கள் பணக்காரராக, அதிகாரம் மிக்கவராக அல்லது அரசியல் செல்வாக்குடையவராக இருந்திருந்தால் இத்தகைய செயலூக்கமுள்ள அநீதிக்கு அவர்கள் ஆட்படுத்தப்பட்டிருப்பார்களா?” (“சூத்திரனுக்கு ஒரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி எனச் / சாத்திரம் சொல்லிடும் ஆயின், அது சாத்திரமன்று – சதி என்று கண்டோம்” என்று பாரதி சீறுவதுபோல) சட்டங்கள் இரண்டு வகையான இந்தியர்களுக்கு வேறு வேறாக இருக்கிறதா? ஏழையாக இருப்பதுவே ஒரு குற்றம்போலத் தோன்றுகிறது.

            உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள், ஒரு கற்பனைதான்: ‘ஒரு நாள் திடீரென்று உங்கள் வீட்டிற்கு வெளியே புல்டோசர் ஒன்று வந்து நிற்பதைப் பார்க்கிறீர்கள். என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன் --உங்கள் உடமைகளும், உங்கள் அன்றாட ஆடை அணிகலங்கள் போன்ற தனியுடமைகளும் அன்பிற்குரிய சொந்தங்களும் இன்னும் உள்ளே இருக்கும்போதே -- சில மணித் துளிகளில் அந்த ராட்ஷச இயந்திரத்தின் இரும்புக் கரம் உங்கள் சேமிப்பு மற்றும் வியர்வையால் கட்டப்பட்ட இல்லத்தை இடித்து நிர்மூலப்படுத்தத் தொடங்குகிறது. அப்போது உங்கள் மனநிலை எப்படி, என்னவாக இருக்கும்?’

ஜகான்கீர்புரி அட்டூழியமும் அதிகாரிகள் பொறுப்பின்மையும்

                          ஜகான்கீர்புரியில் அரச வன்முறையால் பாதிக்கப்பட்ட உதவ யாருமற்றவருக்கு

முன்னறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்படவில்லை. இடிப்பு நடவடிக்கைகள் தான்தோற்றித்தனமான தன்னிச்சையானவை என்பது தெளிவு. ஆனால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, இடிப்பு நடவடிக்கைக்கு எதிராகத் தடையாணை வழங்கிய பிறகும், அதிகாரிகள் தங்கள் இதயமற்ற நடவடிக்கைகளைத் தொடர்வார்கள் எனில் அவர்களுக்கு அந்தத் துணிச்சல் எப்படி வந்தது? சரி, ஆக்கிரமிப்புக் கட்டட இடிப்பு ஒருபக்கம் இருக்கட்டும், சிறு வியாபாரத் தள்ளுவண்டி (த்ஹிலா) என்பது இடம் பெயரும் சொத்துதானே, அதை அடித்து நொறுக்கியதை மாநகராட்சி அதிகாரிகள் எப்படி நியாயப்படுத்த முடியும்? தள்ளு வண்டி உரிமையாளரை அதை எடுத்துச் செல்லும்படிச் சுலபமாகச் சொல்லியிருக்க முடியுமே? ஆனால் ‘பணக்கார, ஆள் படை அம்பு அதிகாரம், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்த முடிந்த’ மனிதர்கள்போல அல்லாமல், ‘பிரச்சனைகளைச் சமாளிக்க முடியாத, அதற்கான திறன்கள் அற்ற எளிய சிறிய மனிதர்கள்’ எதிர்த்துப் போராட மாட்டார்கள் என்பது ‘ஆண்மையுடைய’ மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தெரியும்.

கவலையில்லா அதிகாரிகள்

            இடித்து நொறுக்கப்பட்ட வீட்டை மீண்டும் முதலிருந்து எடுத்துக் கட்டுவதற்கோ மீண்டும் வாழ்வில் அடியெடுத்து வைப்பதோ எளிய சிறிய மனிதருக்கு அத்தனை எளிதானதில்லை. இது பொருளாதாரம் சம்பந்தப்பட்டதெனில், அம்மனிதர்களின் மனநிலை ஆரோக்கிய அம்சத்தைப் பாருங்கள். அது எப்படி பாதிக்கப்பட்டிருக்கும்? ஆகப் பெரிய துயரும், இடியாய் வந்திறங்கிய திகலும் அத்தனை எளிதாக அகன்று சென்றுவிடாது. ஆனால் புல்டோசரை இயக்கி புளகாங்கித மகிழ்ச்சி அடையும் அதிகாரிகளுக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டா, என்ன? என்னதான் பெருமளவிலான தீ விபத்துக்கான கண்ணிவலை பொறிகளாக அனுமதி பெறப்படாத கட்டடங்கள் மீது அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் அப்படியே இருக்க விட்டுவிட்டாலும், அல்லது சிறிய, அனுமதி பெறாத கட்டடத்தைத் தன்னிச்சையாக இடித்தாலும் அவர்கள் இதற்குப் பொறுப்பாக மாட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். பிறகு ஏன் கவலைப்பட வேண்டும்?

சட்டத்தின் ஆட்சி 

            நீதி அனைவருக்கும் சரிசமமாக வழக்கப்படுவதாக இருக்க வேண்டும். ஆனால் நாம் சந்தித்து வரும் பெரு நிகழ்வுகளின் கடைதல்களைக் காணும்போது அது சட்டப்படியான ஆட்சிக்கு எந்த நன்மையும் செய்யாது என நான் அச்சப்படுகிறேன். உயிர் இழப்பு ஏற்பட்ட இடத்தும் நடவடிக்கை இன்மை என்பது மன்னிக்கப்படுகிறது, தான்தோற்றித்தனமான நடவடிக்கையால் வாழ்வாதாரம் மற்றும் வாழுமிடம் இழந்தாலும் அந்நடவடிக்கை ஏற்கப்படுகிறது. இது எந்த வகையான சட்டப்படியான ஆட்சி?

என்னதான் தீர்வு?

            இழப்பீடு மட்டுமே ஒரே பதில் இல்லை – அது மிகச் சுலபமான பதில். இதற்கான தீர்வு, அனுமதி பெறாத ஒரு கட்டுமானத்தின் ஒப்பந்தரார் மற்றும் கட்டட உரிமையாளர் போலவே நமது அதிகாரிகளையும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் சட்ட விதிகளுக்கும் பொறுப்பாக்குவதேயாகும். அதிகாரிகளின் நடவடிக்கை இன்மை, அலட்சியம் அல்லது குற்ற நடவடிக்கைசார் அலட்சியம் இவற்றிற்காக அவர்களைத் தண்டிக்காத வரை, அகால மரணங்கள் தொடரவே செய்யும் – நாமும் ஒவ்வொரு முறையும் அவலங்களைக் காணும்போது திடுக்கிட்டு விழித்துக் கொள்வோம்.

           மறுபுறம் தான்தோற்றித்தனமான, மேலதிகத் தன்னிச்சை நடவடிக்கைக்காக அதிகாரிகள் தண்டிக்கப்படாவிட்டால், தண்டனையிலிருந்து விலக்குப் பெற்றுத் தப்பிவிடும் கலாச்சாரத்தை நாம் ஊக்கப்படுத்தி வளர்ப்பவர்கள் ஆவோம். நமது நீதி வழங்கும் முறையில் நீதிபரிபாலனப் பொறுப்பு என்பது வேர்பிடிக்க வேண்டும்; அப்போதுதான் தண்டனை விலக்குக் கலாச்சாரத்துடன் வளர்ந்த நம் அதிகாரிகள் அமைப்பு என்பது நமது அகராதியிலிருந்து மறையும். வளர்ந்தோங்கிக் கவ்விப் பிடிக்கும் தீ நாக்குகள் இவ்வளவு உயிர்களைச் சுட்டுப் பொசுக்கிய பிறகாவது, புல்டோசர் நீதியின் தோற்றத்தால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வீடிழந்த பிறகாவது – குறைந்த பட்சம் நாம் இதனைச் செய்ய வேண்டும்!

இப்படித் திருத்துவோம்

            நமது பெரும் சட்ட ஒளிவிளக்குகள் மும்முரமாக சட்டங்களை திரும்ப எழுதி வருவதில்


ஈடுபட்டிருப்பதால் இப்படித் திருத்தி எழுதுவது ஒரு நல்ல யோசனையாக இருக்கும். ஏழைகள் மற்றும் சமூகத்தின் விளம்புநிலை மக்கள் கைகளில் அதிகாரத்தை அளிப்பதாகச் சட்டங்களைத் திருத்தித் திரும்ப எழுதுங்கள்! வெட்கமற்று துணிந்துவிட்ட அதிகாரிகளை அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சட்ட விதிகளுக்குப் பொறுப்பாக்கிச் சட்டங்களைத் திருத்தித் திரும்ப எழுதுங்கள்! பணம், ஆள் படை அம்பு அதிகாரம்நிறைந்த, அரசியல் ரீதியில் செல்வாக்குடையவர்களையும் சட்டத்திற்கு உட்படுமாறு சட்டங்களைத் திருத்தித் திரும்ப எழுதுங்கள், அது நல்ல யோசனையாக இருக்கும்.

            அதன் பிறகுதான் அரசியலமைப்புச் சட்டம் உறுதியளித்த வாழ்க்கைக்கான உரிமை மற்றும் கௌரவத்துடன் உயிர் வாழ்வதற்கான உரிமை என்பது “நிலைமைகளைச் சமாளிக்க முடியாத, நீதியைப் பெறத் திறனற்ற அல்லது அநீதியை எதிர்த்துப் போராட முடியாத எளிய சிறிய மனிதர்களுக்கு (ஆண் பெண் இருபாலரும்)” ஏதாவது அர்த்தமுடையதாக இருக்கும்.

            “சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

             கோடாமை சான்றோர்க்கு அணி”                     --குறள் 118

 “எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை

  எல்லாரும் இந்நாட்டு மன்னர் – ஆம்

  எல்லாரும் இந்திய மக்கள்”                        --மகாகவி பாரதி 

-- நியூஏஜ் (ஜூன் 19 –25) இதழில் வெளியான                              

              நன்றியுடன் The Leaflet கட்டுரை  

                                                                                                                  --தமிழில் நீலகண்டன்,

                                                                                                                      என்எப்டிஇ, கடலூர்


 

No comments:

Post a Comment