Sunday 26 June 2022

இன்றைய சூழலில் ராஜா ராம்மோகன் ராய் --கார்க்கி சக்ரவர்த்தி

 


இன்றைய சூழலில் ராஜா ராம்மோகன் ராய்

                                          --கார்க்கி சக்ரவர்த்தி

            ராஜா ராம்மோகன் ராயின் 250 பிறந்தநாள் 2022 மே மாதம் 22ம் நாள் தலைநகரிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் கவனிப்பாரற்று கடந்து போனது. அவர் புகழ்பெற்ற புள்ளியாக இல்லாமல் இருந்திருக்கலாம், 19ம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் மதம் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாக அவரது மாபெரும் பங்களிப்புகளைச் சாதாரண மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள். தனது சமூகச் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலில் தொடர்புடையவராகப் பெரும்பாலும் அவர் இருந்தார்; அதில் முக்கியமானது கணவர் இறந்த சிதையிலேயே மணப்பெண்ணையும் எரிக்கும் உடன்கட்டை  ஏ(ற்)றும் சதி என்னும் வழக்கத்தை ஒழித்தது. 1828ல், அவர் பிரம்ம சபா என்ற அமைப்பை நிறுவிய ஆண்டில், கல்கத்தாவில் மட்டும் 309 கைம்பெண்கள் சதி என்று சிதையில் எரிக்கப்பட்டனர். சதி வழக்கத்தை ஒழிக்க அவர் முன்னெடுத்த போராட்டம் அவருக்குத் தனியான போர்; அது சனாதனப் பழமையில் ஊறிய இந்து சமூகத்திற்கு எதிரானது மட்டுமல்ல, அவரது தாய் உள்ளிட்ட சொந்த குடும்பத்திற்கு எதிரானது. அவரது சமூகச் சீர்திருத்தங்களும் மத ரீதியான சீர்திருத்தங்களும் பின்னிப் பிணைந்தவை; காரணம், அவரது போராட்டம்  மூடத்தனத்திற்கு, பழமை இருண்மை வாதத்திற்கு, மதச் சடங்குகளுக்கு மற்றும் அவரது காலத்தின் சமூகக் காழ்ப்பு மற்றும் பாரபட்சத்திற்கு எதிரானது.

            அவரது மதம் பற்றிய கோட்பாடு அவரது காலத்திற்கு மிகமிக முந்தி இருந்தது. சடங்குகள் பெயரால் கோலோச்சிய மத குருமார்கள் மற்றும் பிராமணிய மேலாண்மையை ஒழிப்பதற்காக ராம்மோகன் ராய், ஜாதி இன வேறுபாடின்றி மக்கள் தங்கள் சொந்த மத வழக்கத்தை முடிவு செய்ய, எல்லா ஆண் பெண்களுக்குமான புதிய பாதையை விழைந்தார். பதினொரு மொழிகளைக் கற்றுத் துறைபோகிய அறிவாளரான அவர், பல மத நூல்களை அவற்றின் ஒரிஜினல் மூல மொழியில் கற்கக் கூடிய திறமையுடையவராக இருந்தார். அவர் திருக்குரானை அரேபிய மூலத்தில் படித்தார், வேதங்களையும் உபநிடதங்களையும் மூல சமஸ்கிருதத்திலும், பழைய வேதாகமத்தை ஹீப்ருவிலும், புதிய ஏற்பாட்டைக் கிரேக்கத்திலும் படித்தார். அந்த நூல்களின் போதனைகளின் உணர்வு ‘புதுமையான ஒரு பாதையைச் சமைக்க’ அவரைத் தூண்டியது; அதன் விளைவே, பிரபஞ்ச மதம் என்ற கருத்தின் அவரது சமய சமரச இணைப்பு யோசனை. இந்தியா குறித்த அவரது கண்ணோட்டம், பல்வேறு சமயங்கள் மற்றும் பல்வேறு கலாச்சாரங்கள் உடைய இந்தியா போன்ற நாட்டில் ஒத்திசைவு பிணைப்பை ஏற்படுத்தும் ஒருமை மத நம்பிக்கையை (monotheism) உண்டாக்குவது என்பதால் அது மதசார்பற்ற பெருங்குணப் பெருமிதத்தை (செக்குலர் கிரடென்ஷியல்) அவருக்குப் பெற்றுத் தந்தது.

            இன்று நாட்டில் செக்குலரிசம் என்பது, குறிப்பாக இந்து பெரும்பான்மையிச அரசியல் பின்னணியில், பெரிதும் விவாதிக்கப்பட்ட பொருளாக உள்ளது. மேற்குலக ஐரோப்பாபோல அன்றி பல்வேறு சமயங்கள் மற்றும் பல்வேறு கலாச்சாரச் சமூகங்கள் உடைய நாடான இந்தியாவில் செக்குலரிசம் என்பது வித்தியாசமான குறிப்புப் பொருள் உடையது. மதச் சார்பின்மை என்பது பல நேரம் மதம் அற்றது எனத் தவறாகக் கருதப்படுகிறது, ஆனால் இந்தியச் சூழலில் அது அப்படி அல்ல. உண்மையான ஆன்மிக மனிதரான ராம்மோகன் ராய் ஒருபோதும் நம்பிக்கையை அல்லது சமயத்தை மறுத்தவர் அல்லர்; ஆனால் மாறாகப் பொதுவான மத அடிப்படையை, இந்தியாவின் சாதாரண மக்களுக்குப் பொருத்தமான பாதையைத் தேடியவர் அவர்; அப்பொதுமக்கள், வேத சாஸ்திர நூல்களின் அறிவு ஏதுமின்றி, மத குருமார் வர்க்கத்தின் ஆதிக்கப் பற்சக்கரப் பிடியிலிருந்து விடுதலை பெற்றவர்களாகத் தங்களை நேரடியாக இறைவனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளக் கூடியவர்கள்.

            இந்தியாவில் எப்போதுமே மதத்திற்கும் அரசியலுக்கும் இடையிலான செயல்பாட்டு உறவுகள் இருந்தே வருகிறது. எனவே அரசியல் கட்சிகள் மதத்தைப் பயன்படுத்தி “மற்றவர்களுக்கு” எதிராக மத அடையாளத்தைத் தூண்டி சீண்டுவதற்காக அல்லது தேர்தல் ஆதாயத்திற்காகப் பெரும்பான்மையின மக்களை எளிதாகத் தாஜா செய்வதற்காகப் பயன்படுத்துகின்றன. மனம் கல்லாய்ப்போன தீவிர இந்துத்துவவாதிகள் வெறிக்கூச்சல் கூட்டத்தைத் தூண்டிவிட்டு மசூதிகளில் இந்து கடவுள் சிலைகளைத் தேடுவதன் மூலம் மத மோதலுக்குப் பதுங்கு குழி தோண்டுகிறார்கள்; இவர்களின் இச்செயல் வழிபாட்டு இடங்களின் சமயத் தன்மையை 1947 ஆகஸ்ட் 15ல் இருந்தவாறே மாற்றமின்றிப் பராமரிக்க வேண்டும் என்றும், வழிபாட்டு இடங்களை ஒரு மதத்தினரிடமிருந்து மற்றொரு மதத்தினருக்கு அல்லது ஒரே மதத்தின் ஒரு சார்பினரிடமிருந்து மற்றொரு சார்பு குழுவிற்கு மாற்றுவதையும் தடை செய்யும் 1991 மத வழிபாட்டு இடங்கள் சட்டத்தை முற்றிலும் புறக்கணிப்பதாகும்.

            மதத் தீவிர அடிப்படைவாதிகளுக்கு ராம்மோகன் ராயின் பிரபஞ்ச மதக் கோட்பாடு முற்றிலுமாகத் தீண்டத்தகாதது; அக்கோட்பாட்டை அவர்கள் தங்கள் தேர்தல் ஆதாயத்திற்குக் கேடு செய்யும் என்று கருதினார்கள். ஒருமை நம்பிக்கை (Monotheism) இந்து மதத்தின் பன்மை நம்பிக்கைக்கு (Polytheism) எதிராக இருப்பது. தேர்தல் அரசியலுக்காக, பெரும்பான்மை சமூகத்தைத் தாஜா செய்ய மதச்சார்பற்ற தேசியக் கட்சிகள் என அழைக்கப்படுவனவும்கூட அல்லது பல்வேறு மாநிலக் கட்சிகளும் மென்மையான இந்துவவாதி பாதையைப் பின்பற்றுகின்றன.

            நமது மதசார்பற்ற கட்டமைப்பைப் பிரித்தெறியும் சக்திகள், அறிவிக்கப்படாத இந்து ராஷ்ட்டிராவை நோக்கி நகர்கின்றன; ஆலயங்கள் கட்டுவதற்காகக் கோடிக் கணக்கான ரூபாய்கள் செலவிடப்படுகிறது; மசூதிக்குள் இந்து தெய்வ உருவங்கள் காணப்படுவதாக சட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டு, பல நேரங்களில் அவர்கள் தங்களைத் தாங்களே ஒட்டு மொத்த இந்து சமுதாயத்திற்கும் பிரதிநிதிகள்போலக் காட்டிக் கொள்கின்றனர். ஒருவகையான சர்வ அதிகாரத்துவ உத்தரவுகள் சமூகத்தில் புரையோடிப் போனது போன்ற நிலை மிக ஆழமான அபாயகரமான போக்காகும்.   

            ஆனால் இந்துக்களாகப் பிறந்தவர்கள் பல்லாயிர லட்சக் கணக்கானோர், கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக அல்லது நம்பிக்கை உடையவராக இருந்தாலும், அவர்கள் தீவிர இந்துத்துவவாதிகளின் கருத்துகளுக்கு ஆதரவளிப்பதில்லை. இருந்தபோதிலும் மரபுவழி மற்றும் பழமைவாதப் போக்கு இன்றைய இந்தியாவில் தொடர்ந்து நிலவுகிறது. உபி மாநிலச் சாலை ஓரங்களில் பல சதி (மாதா) ஆலயங்கள் இருப்பதை ஒரு என்டிடிவி செய்திஅறிக்கை சுட்டிக்காட்டி ஒளிபரப்பியது. பசு வழிபாடு மற்றும் இந்தி பேசும் பகுதிகளின் பல பள்ளிகளில் சதி பிராத்தனைப் பாடல்கள் தொடர்ந்து முறையாக பாடப்படுகிறது.

            1985 செப்டம்பர் 4ம் நாள் ராஜஸ்தானில் ரூப் கன்வார் என்ற இளம் பெண் கட்டாயப்

படுத்தப்பட்டு உடன்கட்டை ஏற்றி சதி-சிதையில் எரிக்கப்பட்ட நிகழ்வை நாடு முழுவதும் கண்டித்தது. ஆனால் ரூப் கன்வரின் புகழுக்காக பல கோயில்கள் ராஞ்சி மற்றும் பிற இடங்களில் கட்டப்பட்டன. இது எதனைப் புலப்படுத்துகிறது? இந்த நடவடிக்கைகளின் பின்னால் ஒளிந்திருக்கும் மனிதர்கள் யார்? சமூகத்தில் இவற்றைச் சில பிறழ் நிகழ்வுகள் என்று புறக்கணித்துவிட முடியாது. வலிமையான பிற்போக்கு மனநிலை அடிநீரோட்டமாக  இருப்பதை நாம் கண்டும் காணாமல் சென்றுவிடக் கூடாது.

            ஒரு சமூகச் சீர்திருத்தவாதியாக ராம்மோகன் ராய் முதல் மனிதராகப் பெண்களுக்குச் சொத்துரிமை பிரச்சனையை எழுப்பினார். 1832ல், “இந்து பாரம்பரிய வாரிசுரிமைச் சட்டத்தின்படி (நடத்தப்படும்) பெண்களின் வழிவழி வந்த பழமை உரிமைகள் மீதான நவீன அத்துமீறல்கள்” என்ற தலைப்பிலான கட்டுரையை வெளியிட்டார். பரம்பரை பாரம்பரியச் சொத்துக்களிலிருந்து பெண்களுக்குரிய பங்கைத் தருவதற்கு இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் சீர்திருத்தம் வேண்டும் என அவர் விரும்பினார். அவரது அகால மறைவினால் இந்தக் கடமையை அவரால் நிறைவேற்ற முடியாது போனது.

            விடுதலைக்குப் பிறகு, இந்து குறுங்குறி (இந்து கோடு) மசோதாவை நிறைவேற்றுவது சுதந்திர அரசுக்கு மிகக் கடினமானதாக இருந்தது; காரணம், மரபுவழி சடங்குகளைப் பிடித்துத் தொங்கும் பிரிவான அகில இந்திய இந்து மகாசபா, மகள்களின் சொத்து வாரிசுரிமையைக் கடுமையாக எதிர்த்தது. அது ‘இந்து குடும்ப முறையை உருக்குலைத்துச் சிதைக்கும்’ என்று அவர்கள் எண்ணினர். அந்த மசோதாவை எதிர்த்த ஆர்எஸ்எஸ் தலைவர் எம் எஸ் கோல்வால்கர், ‘அது இந்தியக் கலாச்சாரத்திற்குக் கேடு பயக்கும்’ என்று கூறினார்.

            சொத்தைப் பிரிக்கக் கூடாது மற்றும் மகள்களின் திருமணத்தின் மூலமாக வரும் தொடர்புள்ளவர்கள் கைகளில் சொத்து சென்றுவிட அனுமதிக்கக் கூடாது என்பதே அவர்களின் முழுமையான நிலைபாடு. சமூக அழுத்தத்தின் காரணமாக இன்றும்கூட பல மகள்கள் தங்களின் மரபுவழி சொத்துரிமையைத் தங்கள் சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்துவிட நேர்கிறது.  

            இதன் தொடர் விளைவாய், இன்றைய பேராவல் மிக்க இளைஞர்களின் பெரும் பகுதி, வாழ்வில் செல்வம் மற்றும் லாபம்தரும் பதவிகளை அடைவதை இலட்சியமாகக் கொள்கிறது. அவர்களால் பிராண்டட் நுகர்வுப் பொருட்கள் நிரம்பி வழியும் சந்தைப் பொருளாதாரத்திற்கும் பழமைவாத மரபுவழி, அறிவுக்குப் பொருத்தமில்லாதவை, மதத்தின் பெயரால் மூட நம்பிக்கை சடங்குகள், பண்பாடு மற்றும்  பாரம்பரியம் இவற்றுக்கிடையில் எந்த முரண்பாட்டையும் இனம்பிரித்துக் காண முடியவில்லை.

            மேலும் அவர்கள் பிரம்ம சமாஜ் மற்றும் ராம்மோகன் ராயின் தத்துவம் போன்ற பல்வேறு சமூக-சமய சீர்திருத்த இயக்கங்களைப் பற்றி அதிகமாக எதுவும் அறியாதவர்களாக இருக்கிறார்கள். பல நேரங்களில் அவர் ‘இரகசிய கிருஸ்துவர்’ (கிரிப்டோ கிரிஸ்டியன்) அல்லது ஒரு ‘பிரிட்டிஷ் ஏஜென்ட்’ என்றெல்லாம் சமூக ஊடகங்களில் அவதூறாக இழிவு செய்யப்பட்டார். மாறாக யாருக்காவது அவர் ஒரு ஏஜென்ட்டாக இருந்திருப்பார் எனில் அது, டெல்லியின் முகலாயப் பேரரசர் இரண்டாவது அக்பருக்குத்தான்; அவர்தான் பிரிட்டிஷ் அரசிடமிருந்து உரிமைத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற தமது வழக்கில் வாதாடியதற்காக ராம்மோகன் ராய்க்கு 1928ல் ராஜா என்ற பட்டத்தை வழங்கினார். 1830ம் ஆண்டின்போது மொகலாயப் பேரரசரைக் கிழக்கிந்திய கம்பெனி அவமரியாதையாக நடத்தியதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவில் கிங் வில்லியம் IV அவையில்  பேரரசரைப் பிரதிநிதித்துவப்படுத்த ராம்மோகன் ராயை இரண்டாம் அக்பர் லண்டனுக்கு அனுப்பினார்.

            இறுதியாக இந்தியாவில், பத்திரிக்கை சுதந்திரத்திற்குப் பரிவான ராம்மோகன் ராயின் ஆதரவு கருத்துகள் இன்றைக்கும் பொருத்தமானது. 1823 மார்ச் 14ல் கவர்னர் ஜெனரல் குழு ஒரு பிரஸ் அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது; அதன்படி செய்திப் பத்திரிக்கைகள் மற்றும் பிற இதழ்களின் அனைத்து உரிமையாளர்களும் கவர்னர் ஜெனரலிடமிருந்து லைசென்ஸ் பெறுவது கட்டாயமானது. இதனை ராம்மோகன் ராய் எதிர்த்தார், இரு வழக்கறிஞர்களை அமர்த்தி உச்நீதி மன்றத்தில் வழக்காடச் செய்தார். ஆனால் அவர் வெற்றி பெறவில்லை. நல்ல ஆட்சி நிர்வாகத்திற்குப் பத்திரிக்கை சுதந்திரம் மிக முக்கியமான முன் நிபந்தனையென எப்போதும் வலியுறுத்தினார். இருப்பினும், அவரது வெளிப்படையான நிலைபாடுகள் மற்றும் உரையாடல் விவாதங்கள் நம் நாட்டில் சர் சார்லஸ் மெட்கால்ஃப் (Sir Charles Metcalfe) தாராளச் சிந்தனை நடவடிக்கைகளுக்கு 1835ல் வழியமைத்தன.

      (பிரிட்டிஷ் சிவில் அதிகாரியான மெட்கால்ஃப் போன்ற வேறெந்த ஆங்கிலேயரும் இந்தியாவுக்குச் சேவை புரிந்ததில்லை. அவர் 38 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தார். சீர்திருத்தத்திற்கான அவரது வேட்கை, மிகத் தொடக்கத்தில் 1812ம் ஆண்டிலேயே டெல்லி பகுதியில் அடிமை முறை மற்றும் சதி, சிசுகொலை வழக்கங்களுக்குத் தடை விதிக்கத் தூண்டியது. அவர் முற்போக்கு கருத்தோட்டங்களுடன் கூடிய திறமையான சிவில் அதிகாரி. அவரது தாராள பத்திரிக்கை கொள்கை அவர் மீது இந்தியர்களை அன்பு கொள்ளச் செய்தது. அந்த அன்பினால் இந்தியர்கள் அவர்பெயரில் கல்கத்தாவில் மெட்கால்ஃப் ஹால் ஒன்றை ஏற்படுத்தி அங்கே அவரது மார்பளவு சிலையையும் அமைத்துள்ளனர். –இணையத்திலிருந்து)

            இன்றைய நாளின் இந்தியாவில் 154 பத்திரிக்கையாளர்கள் கடந்த பத்தாண்டுகளில்

மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர், பலர் மீது பிணையில் வரமுடியாத குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன. (அரசை விமர்சனம் செய்தார்கள் என்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள) பல பத்திரிக்கையாளர்களுக்குத் தங்கள் வழக்கை நீதிமன்றங்களில் நடத்திப் போராட போதுமான பணம் இல்லை. சமூக ஊடகத்தில் ஆளும் ஆட்சியாளர்கள் குறித்து எழுதினால் ஒருவர் சிறையில்தான் அடைபட வேண்டும் என்ற நிலை. காலனிய ஆட்சியாளர்களின் புத்தியில் பிறந்த தேசத் துரோகச் சட்டம் (ஸெடிஷன் லா) இன்னும் ஒழிக்கப்படாமல் இன்றைய ஆட்சியாளர்களின் மடியில் தவழ்கிறது.

            இன்று ராம்மோகன் ராய் உயிருடன் இருந்தால் நாட்டில் நிகழும் நிகழ்வுகள் குறித்து அவரது எதிர்வினை என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்தால் வியப்பாக இருக்கும். அவருடைய காலத்திற்கு முந்தியிருக்கும் சிந்தனையாற்றல் உள்ளவராக அவர் இருந்தார்; ஆனால் இன்றைய இந்தியாவோ அவர் கருத்தோட்டத்தின்படியான இந்தியாவிலிருந்து மிகவும் பின்னடைந்து நகர்ந்துள்ளது. இன்றைக்கு மிக முக்கியமான கேள்வி அப்படியே இருக்கிறது: ராஜா ராம்மோகன் ராயின் கருத்துக்களின் அடிப்படையில் பெருமளவிலான சமூக விழிப்புணர்வை அடையச் செய்வது இன்று சாத்தியமா? அல்லது இல்லையா?

            கேள்வி அப்படியே இருக்கிறது!

         --நன்றி : நியூஏஜ் (ஜூன் 26 – ஜூலை 2)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

No comments:

Post a Comment