Tuesday 15 February 2022

அணியும் ஆடையும் மதச் சுதந்திர உரிமையும்


அணியும் ஆடையும் 

மதச் சுதந்திர உரிமையும்

--காளீஸ்வரம் ராஜ்

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்

--நன்றி : தி இந்தியன் எக்ஸ்பிரஸ் 7-2-22

        “மதச் சுதந்திரம் பன்மைத்துவத்தின் சிறப்புக் குறியீடு. நியாயமான கட்டுப்பாடுகள் ஏற்கத்தக்கன; மத வழக்கங்களில் அறிவுக்குப் பொருந்தாத் தலையீடு தவிர்க்கப்பட வேண்டும்.”

               கர்னாடக மாநில உடுப்பி கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிந்த மாணவிகளை வகுப்பில் அனுமதிக்காதது பரபரப்புச் செய்தியானது. அதுபோல கேரளாவில் உயர்நீதிமன்ற அறிவுறுத்தலை அடுத்து அங்கு ‘மாணவர் போலீஸ் படை’ யில் (ஸ்டூடென்ட் போலீஸ் கேடட்) முறையான கேடட் சீருடைக்குப் புறம்பான, முகத்தை மட்டும் மூடும் ஹிஜாப் அல்லது முழுமையாக உடல் மறைக்கும் ஆடைகள் அணிய அனுமதி மறுத்து அரசு உத்தரவிட்டது. அரசியலமைப்புச் சட்ட ஷரத்து 25(1) ஹிஜாப் அணியும் தனது உரிமையைப் பாதுகாக்கிறது எனக் கோரி ஒரு மாணவி உயர்நீதிமன்றத்தை அணுக, இப்பிரச்சனையில் அரசு முடிவெடுக்க உயர்நீதிமன்றம் கூறியது. அதன்படி, கேரள அரசும் மத அடையாளங்கள் அனுமதிக்கப்பட முடியாது என உத்தரவிட்டது.

               சமீபத்திய கடந்த காலத்திலும் இதுபோன்ற சர்ச்சைகள் ஏற்பட்டன. 2016ல் அனைத்திந்திந்திய முன் மருத்துவத் தேர்வின்போது விதித்த ஆடை கட்டுப்பாடுகளை எதிர்த்து ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. தேர்வில் பிட் மறைத்தல், காப்பியடித்தல் முறைகேடுகளைத் தடுக்க அக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ஏ முகமது முஷ்டாக் உடை ஒழுங்குமுறைகளில் தலையிட மறுத்தாலும், அக்கட்டுப்பாடுகளைத் தங்கள் (மத) நம்பிக்கை சார்ந்து பின்பற்ற இயலாதவர்களுக்கு எதிராக அமல்படுத்தக் கூடாது என “தடையாணை” உத்தரவும் பிறப்பித்தார். அதுபோன்ற பிறிதொரு வழக்கில் நீதிபதி அந்தத் தாராளச் சலுகை காட்டவில்லை.  ஃபாத்திமா தஸ்நீம் எதிர் கேரள அரசு (2018) வழக்கில் தனியார் உதவிபெறும் பள்ளிக்கு உடைகட்டுப்பாடுகளை விதிக்க எல்லா உரிமைகளும் உண்டு என்று கூறி, வகுப்பறைகளில் தலை முக்காடு (ஸ்கார்ஃப்) மற்றும் கை முழு மறைப்பு சட்டை (ஃபுல் ஸ்லீவ் ஷர்ட்) –அவை விதிக்கப்பட்ட பள்ளிச் சீருடைக்குப் பொருத்தம் இல்லாத காரணத்தால் -- அணிய அனுமதிக்க முடியாது என்று கூற பள்ளிக்கு உரிமை உண்டு என நீதிமன்றம் கறாராக உத்தரவிட்டது. மேலும், “பள்ளி நிர்வாகத்தை நடத்த நிர்வாகத்திற்குச் சுதந்திரம் அளிக்கப்படவில்லை எனில், அது அவர்களின் அடிப்படை உரிமையைப் பறித்ததாகிவிடும்” என்று நீதி மன்றம் கூறியது.

               டிங்கர் எதிர் தெஸ் மோய்ன்ஸ் (1969) வழக்கில் அமெரிக்க உச்சநீதிமன்றம் ஒரு பொதுப் பள்ளியின் அதிகாரிகள் சில மாணவர்கள் குழுவை இடைநீக்கம் செய்த நடவடிக்கை சட்டப்படியானதா என்பதை ஆராய்ந்தது. அந்த மாணவர்கள் வியத்நாம் போருக்கு எதிராக அமைதியாகத் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் அடையாளமாக கையில் கறுப்பு பட்டை அணிந்து வந்ததால் பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. நீதிமன்றம் மாணவர்களுக்குச் சாதகமாக அப்பிரச்சனையில் தாராளப் பார்வை கொண்டு பின்வருமாறு கூறியது: “மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் சுதந்திரமான பேச்சு அல்லது கருத்துகளை வெளியிட அரசியலமைப்பு வழங்கிய அவர்களது உரிமையைப் பள்ளி வளாக வாயில் கதவருகே விட்டுவிட வேண்டும் என எவரும் ஒருக்காலும் வாதாட முடியாது.” (அதே போல) உடை உடுத்தல் என்பதும் கருத்துகளை வெளியிடும் ஒரு வடிவம்தான்; இச்சுதந்திரத்தின் மீது அடிக்கடி அரசியலமைப்புச் சட்டத்திற்கு மேலதிகமான கூடுதல் வரையறை கட்டுப்பாடுகளை விதிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

               அரசியலமைப்புச் சட்ட ஷரத்து 25(1) அதன் உரை அமைப்பில் பெருந்தன்மையும் அதன் நோக்கக் கண்ணோட்டத்தில் தாராளமானதாகவும் அமைந்துள்ளது.    

               மதப்போர்வையின் கீழ் நடத்தப்படும் சுரண்டலைக் கடுமையாக விமர்சிக்கும் டாக்டர் அம்பேத்கர், இந்தியச் சமூகத்தில் அதன் செல்வாக்கைக் குறைத்து மதிப்பிடவில்லை. அதற்கு மாறாக அவர் மதச் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். வழக்கறிஞர் அபினவ் சந்திரசூட் குறிப்பிட்டபடி, நம்முடையது ‘மதத்தின் ஒரு குடியரசு.’ (அதாவது, நமது நாடு பல்வேறு மதங்கள் ஒன்றாக அமைந்த குடியரசு)

               சட்ட ஷரத்து 25ன்படி மனசாட்சி உளச்சான்றின் சுதந்திரம் மற்றும் அதனைச் சுதந்திரமாகப் பின்பற்றுவது, அனுசரிப்பது மற்றும் மதத்தைப் பரப்புவதைப் பொது அமைதி, ஒழுக்கம், சுகாதாரம் மற்றும் அரசியலமைப்பு பகுதி IIIன் கீழ் வரும் நியாயப்படுத்தல்களின் அடிப்படையில் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். சீக்கியர்கள் தங்கள் மதஒழுக்கத்தைப் பின்பற்றுவதில் ஒருபகுதியாக விளங்கும் ‘கிர்பான்’ (வளைந்த கூரான சிறு கத்தி) அணியலாம் அல்லது எடுத்துச் செல்லலாம் என்று இந்த ஷரத்துக்கான முதலாவது விளக்கம் கூறுகிறது. நம்நாட்டின் எல்லைகளுக்கு அப்பாலும் கனடா நாட்டின் உச்சநீதிமன்றம், முல்தானி வழக்கில் (2006) ஒரு சீக்கிய மாணவன் வகுப்பில் பங்கேற்கும்போது, மற்றவர்களைத் துன்புறுத்தாத வகையில், கிர்பான் அணியும் உரிமையைச் சரியென்று உயர்த்திப் பிடித்தது. அதே போன்று சமமாக இந்திய நீதிமன்றங்களின் அணுகுமுறையும்கூட தாராளமானதாகும்.

               பிஜோ இமானுவேல் எதிர் கேரள அரசு (1986) வழக்கில், ஜெகோவா சாட்சியம் எனும் கிருஸ்துவ மதப்பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், தங்கள் மத நம்பிக்கைக்கு முரண்படுவதாக தேசிய கீதம் இருப்பதால் அதைப் பாடி இசைப்பதிலிருந்து விலகி நிற்பதற்கு அனுமதித்தது. எஸ் ஆர் பொம்மை எதிர் ஒன்றிய அரசு(1994) வழக்கில், மதத்தைச் சார்ந்து ஆதரிப்பதிலிருந்து அரசு தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்று கூறியது.

               மதச் சுதந்திரம், பன்மைத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கியதன் சிறப்புக் குறியீடு. அது சமூக நல்லிணக்கம்  மற்றும் பன்மைத்துவத்தை மேம்படுத்திச் செல்வதற்கானது. நியாயமான கட்டுப்பாடுகள் ஏற்கத்தக்கன எனும்போது மத வழக்கங்களில் அறிவுக்குப் பொருந்தாத மற்றும் உள்நோக்கத்துடனான தலையீடு தவிர்க்கப்பட வேண்டும்.

               தனிநபர் பாரபட்சத் தடுப்புச் சட்டங்கள் வலிமையாக உள்ள நாடுகளிலும்கூட மத உரிமைகளுக்கு உரிய உயர் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவ்வகையில் மாஸ்டர்பீஸ் கேக் ஷாப் (பி) லிட் வழக்கில் ரொட்டிக்கடைக்காரர் தன்பாலின இணையர் திருமணத்திற்குக் கேக் வழங்க மறுத்ததை, அவருடைய மத நம்பிக்கைகள் மற்றும் பற்றுறுதியை ஏற்று, அமெரிக்க உச்சநீதிமன்றம் நியாயம் என்றது. இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் ஆஷர்ஸ் பேக்கிங் கம்பெனி லிட் (2018) வழக்கில், மற்றொரு ரொட்டிக்கடைக்காரர் இரு ஆண் இளைஞர்கள் திருமணத்தை  (ஹே மேரேஜ்) ஆதரித்துக் கேக்கில் வாசகங்கள் எழுத மறுத்ததை ஏற்று ஒப்புதல் அளித்தது.

               பேராசிரியர் ஹெய்னர் பிலெஃபெல்டு கூறுவதுபோல மதச் சுதந்திரத்திற்கு “நியாயமான அளவு இடமளிப்பது” என்பது, “மதரீதியான சலுகை அல்லது நம்பிக்கை சார்ந்து சிறுபான்மையினர் விஷயத்தில் (அனைவருக்குமான) சமத்துவக் கோட்பாட்டை விட்டுவிடுவது என்பது பொருள் அல்ல; ஆனால் சமத்துவக் கோட்பாட்பாட்டை முறையாகவும் பாகுபாடு இன்றியும் வேறுபட்ட சமூக எதார்த்த சூழலில் அமலாக்கி வழங்குவது” என்பதேயாகும். (மனித உரிமைகள் காலாண்டிதழ், பிப்ரவரி 2013.)  மக்களிடையே பரஸ்பர மரியாதையையும் சகிப்புத்தன்மை மட்டத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அடிப்படை உரிமை என்ற கருத்தாக்கத்தை நனவாக்க வேண்டிய தேவை உள்ளது.

               ஆனால் இந்தியாவின் துயரம், அத்தகைய சர்ச்சைகளை மதத் தீவிரவாதிகள் தங்கள் குறுகிய குழுவாதப் போக்கு இலக்கை அடைய பயன்படுத்துவதில் மும்முரமாக இருப்பதேயாம். ஹிஜாப் மாணவிகளின் முகங்களை முற்றாக மறைக்கவில்லை எனில், அந்த ஆடையை வகுப்பறையில் தடைசெய்ய வேண்டிய தேவையில்லை. அது மற்றவர்களை எந்தவகையிலும் துன்புறுத்தப் போவதில்லை. அதே நேரம் ஆசிரியர் வகுப்பைத் திறமையாக நடத்த மாணவிகளின் முகங்களைப் பார்த்து பாடம் நடத்த விரும்பலாம். தலையில் அணியும் மறைப்புச் சீலை நிச்சயமாக அனுமதிக்கப்படக் கூடியது என்றாலும் முகத்தை மறைக்கும் திரை அப்படி அனுமதிக்கப்பட முடியாது. எங்கே எது சாத்தியமோ அந்த நிதானத்தை நாம் கண்டடைய வேண்டும். மதங்களால் பிளவுபட்டு அல்லாடும் ஒரு சமூகத்தில் மதச் சுதந்திரம் பற்றிய பிரச்சனையை ஆராயும்போது அரசமைப்பு ஆட்சி முறை பற்றிய சிந்தனைத் தெளிவை மனதில் பதியவைக்க வேண்டும். மதத் தீவிரவாதம் பெரும்பான்மையினருடையதாயினும் சரி, அல்லது சிறுபான்மையினருடையதாயினும் சரி, அது சீர்குலைக்கப் போவது அழகாய் அமைந்த நல்லிணக்கமான மதசார்பற்ற பன்மைத்துவக் கட்டமைப்பையே ஆகும். (மகாகவி பாரதியார் கூறுவதுபோல, அக்கினி குஞ்சோ அல்லது மூப்போ, தழலில் வெந்து தணியப் போவது காடு.)

--தமிழில்: நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

   

 


 

No comments:

Post a Comment