Wednesday 28 April 2021

21ம் நூற்றாண்டில் லெனினிய உத்தியின் பொருத்தப்பாடு

 

21ம் நூற்றாண்டில் லெனினிய உத்தியின் பொருத்தப்பாடு

--அனில் ரஜீம்வாலே

நியூஏஜ் (ஏப்ரல் 18 –24)

ஏகாதிபத்தியத்தின் புதிய வளர்ச்சி நிலையைக் கண்டறிந்ததன் மூலம் 20ம் நூற்றாண்டில் புரட்சியின் உத்தியை மறுதகவமைப்புச் செய்தவர் லெனின். (ஏகாதிபத்தியத்திற்கு முந்தைய தொழில் புரட்சி கால) ஆலைமுதலாளித்துவத்தின் வளர்ச்சி நிலையிலிருந்து அடிப்படையில் வேறுபடும் ஏகாதிபத்தியத்தின் ஐந்து புதிய அம்சங்களை அவர் அடையாளப்படுத்தினார். லெனின் தனது புகழ்பெற்ற “ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சபட்ச வளர்ச்சிநிலை”என்ற நூலில் ஏகாதிபத்தியத்தை ஒரு புதிய சமூகப்பொருளாதார வடிவஅமைப்பாகிறது என குணாம்சப்படுத்தினார். 

லெனினியப் பரிசீலனையில் நிதிமூலதனம் என்பது மையமாகும்; அது, தொழிற்சாலை முதலீடு மற்றும் வங்கி முதலீடு இரண்டும் இணைந்த புதிய வகையான முதலீடாகும். இந்த இரண்டு பிரிவுகளிலும் உள்ள முதலீடு ஏகபோகமாகத் திரள்வதன் காரணமாக இந்த இணைப்புத் தவிர்க்க முடியாததாகி இம்மாற்றம் நிகழ்கிறது. 

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வங்கி மற்றும் நிதிப் பிரிவு ஏகபோகமாகக் குவித்து மையப்படுத்தப்பட்டதால், உற்பத்தித்துறை உட்பட குணாம்ச ரீதியில் ஒரு புதிய உயர் மட்டத்திற்குக் கொண்டுவரப்பட்டது. (இந்த இணைப்பின் காரணமாக உருவான) நிதிமூலம் உடனடியாக உற்பத்தித் துறையிலிருந்தும், உற்பத்தித் துறையில் முதலீடு செய்வதிலிருந்தும் விலகிக் கொள்ளும் எனக் கருதுவது பிழையானதாகும். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகும் மிகப்பெரும் அளவில் உற்பத்தியில் அதிக அளவு முதலீடு செய்யப்பட்டதை 1960கள் மற்றும் 70களில் உலகம் முழுவதும் நாம் பார்க்க முடியும். 

ஜனநாயகப் புரட்சி -- லெனினிய உத்தி

ஜனநாயகப் புரட்சி குறித்த லெனினுடைய கோட்பாடு வெறும் ஆசை, விருப்பம் அன்று; மாறாக ஏகபோக மூலதனத்தின் குவிப்பு மற்றும் மையப்படுத்தல் காரணமாக பாதிக்கப்படும் அனைத்துச் சமூக சக்திகளையும் ஒன்றிணைக்க வேண்டியதன் தேவை காரணமாக எழுந்தது. இது ஜனநாயக மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான விஞ்ஞான முறையாகும். ஜனநாயகம் என்பதன் பொருள், பெருந்திரள் மக்கள் மற்றும் வர்க்கங்கள் பங்கேற்பதும், அதனோடுகூட ஜனநாயக உரிமைகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் சார்ந்தது. இதைத்தான் நாம் கற்றுணரவேண்டும். ஏகபோகம் மற்றும் ஏகாதிபத்தியம் உலக ஜனநாயக மற்றும் புரட்சிகர நிகழ்முறைக்கு எதிரான பெரும் தடைகள் என லெனின் அடையாளப்படுத்தினார். இந்தப் பகுப்பாய்வில் பெறப்படும் இயல்பான மறுதலை ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி எனும் முக்கியமான உத்தியாகும்.

லெனின்தான் முதன்முறையாக ஏகாதிபத்திய எதிர்ப்பு, பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியின் விரிவான நுட்ப விபரங்களை வகுத்தளித்தார் –அதுதான், குறுகிய (தன்னல) வட்டமான ஆகக்கூடுதல் ஏகபோக மூலதனக்குவிப்பை ஒதுக்கி அழித்தொழிக்க வல்லது. பரந்ததொரு முன்னணியே அதற்கான விடை. இப்புரட்சி, ஜனநாயக வழிமுறைகள் மற்றும் பாராளுமன்ற வடிவங்களைப் பயன்படுத்துதலையும், அவற்றை வலிமைப் படுத்துதலையும் உள்ளடக்கியது. தீவிர வலதுசாரி மற்றும் பாசிசத்திற்கு எதிராகப் போராடுவதும் பூர்ஷ்வா ஜனநாயகத்தைப் பாதுகாத்து வலிமைப்படுத்த வேண்டியதும் இக்கடமையைத் தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணிகளாகும். லெனின் பாராளுமன்ற அமைப்புக்களின் முக்கியத்துவத்தை, குறிப்பாக மேற்கத்திய அமைப்புக்களை, பெரிதும் வலியுறுத்தினார். 

2015ல் ஏற்கப்பட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் குறித்த ஆவணத்தில் ஜனநாயகப் புரட்சிக் கோட்பாட்டை முன்னெடுத்துச் சென்று பின்வருமாறு தெளிவாகக் குறிப்பிட்டது: “இந்த ஜனநாயகப் புரட்சி நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய, ஏகபோக எதிர்ப்பு குணாம்சம் கொண்டதாக இருக்க வேண்டும்.” (பத்தி 9.1)

உற்பத்தி எதிர் நிதிமூலதனம் : முற்றும் முரண்பாடுகள் 

20ம் நூற்றாண்டின் கடைசி சில பத்தாண்டுகள் மற்றும் 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏகாதிபத்திய உலகில் ஒரு புது போக்கு எழுந்தது. முன்பு எப்போதும் நிகழ்ந்திராத வகையில் முதலீடு நிதிமூலதனமானது மட்டுமல்ல, ஏகபோகமாக்கப்பட்ட மூலதனம் மற்றும் நிதி மூலதனம் இரண்டும் உற்பத்தித் துறையிலிருந்து விலகி யூகப் பங்குச் சந்தையில் ஈடுபடும் அணுகுமுறை வளர்ந்தது. 

செல்வம் வேகமாக வளரும்போதே பற்றாக்குறையும், உற்பத்திக்கான அபரிமிதமான முதலீடும் வளர்ந்தது. தன்னையும் நவீன சமூகத்தையும் எது தாங்கிப் பிடித்ததோ அதே உற்பத்தி வாய்ப்புச் சாத்தியப்பாடுகளிலிருந்து இன்று ஏகாதிபத்தியம் பெருமளவில் விலகத் தொடங்கியுள்ளது. முதலாளித்துவம் இதுவரை முக்கியமாக தொழிலாளர்களையும் விவசாயிகளையும்தான் சுரண்டியது. 20ம் நூற்றாண்டின் முதன் முறையாக, குறிப்பாக 21ம் நூற்றாண்டில் நிதிமூலம், பெரிய, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோர்களுக்கு (முதலாளிகளுக்கு) எதிராக அதிக அளவில் செல்வது மட்டுமல்ல அவர்களை உச்சபட்ச அளவில் சுரண்டவும் செய்கிறது. 

உற்பத்தி மற்றும் நிதிமூலதனத்தின் இடையேயான வரலாற்றுபூர்வ பிளவே சமகால முதலாளித்துவத்தின் குணம்சமாகிறது; அப்பிளவே சமகால ஏகாதிபத்தியத்தின் மையமான நெருக்கடியாகவும் இருப்பதுடன் சமுதாயத்தின் ஜனநாயக திட்ட மாற்றங்களுக்கான புதிய அடித்தளங்களையும் உண்டாக்குகிறது. வரம் கொடுத்தவன் தலையிலே கை வைப்பது போல நிதி மூலதனத்தை உண்டாக்கிய அதே உற்பத்தி முறைகளுக்கு (mode of production) எதிராக நிதிமூலதனம் செல்கிறது. (மார்க்ஸியத்தில் உற்பத்தி முறை என்பது உற்பத்தியில் செயல்படும் உற்பத்திச் சக்திகள், உற்பத்திச் சாதனங்கள், உற்பத்தி உறவு அனைத்தும் சேர்ந்ததைக் குறிக்கும்)

மறுபுறம், உற்பத்திக்கு நேர்ந்துள்ள அபாயம் குறித்துச்  சமூதாயத்தின் பிற பகுதியின் கவலை அதிகரிக்கிறது. நிதிசாராத, சமுதாயத்தின் இந்தப் பகுதியினரின் (கவலையை) பாதுகாப்பை உள்ளடக்கியதே நவீன ஜனநாயகப் புரட்சியின் சாரமாகும்.  

கார்ப்பரேட் சேமிப்பு (அதாவது லாபம்) மற்றும் கார்ப்பரேட் முதலீடுகளுக்கு இடையே இடைவெளி அதிகரிக்கிறது. ஒரே நேரத்தில் மிதமிஞ்சிய நிலையும் பற்றாக்குறையும் இருக்க முடியுமா? ஆனால் அறிஞர்கள் அபரிமிதமான மூலதனமும் (அதேநேரத்தில்) மூலதனப் பற்றாக்குறையும் இருப்பது குறித்துப் பேசுகிறார்கள்; காரணம் முதலீடு செய்யும் போக்கில் வீழ்ச்சி. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபியைச் சார்ந்து செயல்படும் கார்ப்பரேட் முதலீடுகள் உலகம் முழுவதும் 1990களிலிருந்து சரிந்து வருகிறது. (முதலீடுகளுக்கு மாறாக) பங்குகளை (equity buy-backs) வாங்குவது, முதலீட்டாளர்களுக்குப் பட்டுவாடா செய்வது, வாடகை தரும் சொத்துகள், நிதிசார்ந்த சொத்துக்களைக் குவிப்பது போன்ற போக்கு அதிகரித்து வருகிறது. ஒட்டுண்ணி கார்ப்பரேட் மயம் வளர்கிறது.

1990களிலிருந்து மூலதனம் 41 சதம் வளர்ந்துள்ளது, உபரி மதிப்பு விகிதம் 7சதவீதம் அதிகரித்துள்ளது; ஆனால் லாப விகிதம் 20 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது லாபத்தில் வீழ்ச்சி என்று பொருள்படாது, லாப விகிதத்தில் மட்டுமே வீழ்ச்சி. இந்த லாப விகித வீழ்ச்சியை முறியடித்து வெல்ல உற்பத்திச் செலவு யூகத்தின் மூலம்  முயல்கிறார்கள்.

இன்று மூலதனம் ரியல் எஸ்டேட், பங்கு மார்க்கெட்டில் ஈடுபடுத்தப்பட்டு வாடகை ஈட்டும் சொத்துகளில் லாபம் தேடுகிறது. மைக்கேல் ராபர்ட்ஸ் கூற்றுப்படி அந்தக் கால முதலாளித்துவம் ஆலைகளைக் கட்டி லாபம் ஈட்டியது; ஆனால் புதிய முதலாளித்துவம் பயர் (FIRE) செக்டாரில் அதாவது நிதி, இன்ஷுரன்ஸ், ரியல் எஸ்டேட்டில் மையம் கொண்டிருக்கிறது. அடமானங்கள், ஹெட்ஜ் பண்டு, நிகர்நிலை முதலீடுகள் அதன் முக்கியமான பாகங்களாகிறது. சேமிப்புக்களை மறுசுழற்சி செய்து ரியல் எஸ்டேட்டுகள் மற்றும் பங்கு விலைகள் ஆக்குவதால் புதிய செல்வாதாரம் உற்பத்தி செய்யப்படுவதில்லை.  ஐபிஎம் நிறுவனத்தில் நடந்தது போல கார்ப்பரேஷன்கள் தங்களது வருமானத்தைத் தங்கள் சொந்த பங்குகளை வாங்குவதற்கே பயன்படுத்துகின்றன.

ஆலைத் தொழில் சார்ந்த முதலாளித்துவத்தின் கீழ் கூலி உழைப்பின் மூலம் உபரி மதிப்பு உண்டாக்கப்பட்டது. இன்று கூலி உழைப்பும் ஆலை முதலாளிகளும்கூட நிதி மூலதனத்தால் சுரண்டப்படுகின்றனர் – இது புதிய வகை ஜனநாயகப் புரட்சியை அவசியமாக்குகிறது.

ஜனநாயக சக்திகளின் கூட்டமைப்பிற்கான விரிவான களம் உருவாகிறது என்பதையே பின்வரும் கேந்திரமான முழக்கம் அடிக்கோடிட்டு வலியுறுத்துகிறது: (“அவர்கள் வெகு சிலர், நாம் மிகப் பலர் :) “99 சதவீதம் ஒரு சதவீதத்திற்கு எதிராக”

பெருங்கோடீஸ்வரர்கள் பெருக்கம்

உற்பத்தி மூலதனம் நிதிமூலதனம் இரண்டையும் முன்பு எப்போதுமில்லாதபடி அணி பிரித்து நிறுத்தியிருக்கிறது, உலகின் கொரோனா தொற்று நெருக்கடி. உலகப் பொருளாதாரம் நெருக்கடி ஆழத்தில் நழுவி விழும்போது நிதிமூலதன பகாஸ்வரர்கள் முன்பு எப்போதுமில்லாதபடி செல்வத்தை, முக்கியமாக யூக வணிகத்தின் மூலம், குவிக்கிறார்கள். ஹூரன் (Hurun) அறிக்கையின்படி, கொரோனா குழப்பத்திற்கு மத்தியிலும் கடந்த பத்தாண்டுகளில் 2020ம் ஆண்டு மிகப் பெரிய செல்வக் குவிப்பைக் கண்டுள்ளது. அந்த ஆண்டில் ஒவ்வொரு வாரமும் நூறு கோடி டாலர் கோடீஸ்வரர்கள் பட்டியலில் புதிதாக எட்டு பேர் சேர்கிறார்கள்.  முன்பு ஒரே ஆண்டில் இத்தனை செல்வம் உலகில் உண்டாக்கப்பட்டதில்லை. அதேபோல அமைதி காலத்தில் இத்தனை குழப்பங்கள் பொருளாதாரத்தில் ஏற்பட்டதுமில்லை.

உலக அளவில் புதிதாக 412பேர் சேர, தற்போது பில்லியனர்கள் (நூறு கோடி டாலர் சொத்துடையவர்கள்) உலகில் 3228 பேர் உள்ளனர். 

உலகில் மிகப் பெரிய முதன்மை பணக்காரர் எலோன் மஸ்க் (Elon Musk) 197 பில்லியன் டாலர் சொத்துடனும், அடுத்து ஜெஃப் பெஜாஸ் 189 பில்லியன் டாலர், அடுத்தடுத்து பில்கேட்சும் ஜுக்கர் பெர்க்கும். உலகின் ‘பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் மன்னன்’ எனப் புகழப்படும் ஜோங்க் ஷன்ஷான் (Zhong Shanshan), முதன் முறையாக ஒரு சீனர், 85 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளார். 

இந்தியக் கோடீஸ்வரர்கள்

சென்ற 2020ம் ஆண்டில், உலக பில்லியன் (நூறு கோடி) டாலர் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 40 புதிய மகா கோடீஸ்வரர்கள் இணைந்துள்ளனர். தற்போது இந்திய பாரம்பரியத்தைச் சேர்ந்த 209 பில்லியனர்களில் 177 பேர் இந்தியாவில் வசிப்பவர்கள் ஆவர்.

அம்பானியின் சொத்து 24 சதவீதம் ஊதிப் பெருகி 83 பில்லியன் டாலர் ஆகி, உலகின் 8வது நபராகப் பட்டியலில் உள்ளார். 

சீனாவில் 256 புதிய பெருங்கோடீஸ்வரர்கள் இணைய அந்நாட்டில் உலகிலேயே 1056 ‘ஊரறிந்த’ கோடீஸ்வரர்கள் உள்ளனர்; அந்த எண்ணிக்கை அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜெர்மனி மூன்று நாடுகளின் மொத்த எண்ணிக்கையைவிட அதிகம். கடந்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவின் 160 புதிய பில்லியனர்கள் எண்ணிக்கையை ஒப்பிட சீனாவில் 490 புதிய பெருங் கோடீஸ்வரர்கள் உருவாகி உள்ளனர். 

ஏன் மற்றும் எப்படி இது நிகழ்கிறது? 

உற்பத்தித் துறை முதலீட்டிலிருந்து மூலதனம் மறையும்போது இவ்வளவு சொத்து சிலரது கைகளில் மட்டும் அதிகரித்துக் குவிக்கப்படுவது எப்படிச் சாத்தியமாகிறது?  ஒரு காரணம், முதலீடு நிதிமூலதனமாக்கப்படுவது விரைவுபடுத்தப்படுவதாலும் மற்றும் யூகப் பங்குச் சந்தை (ஸ்டாக் மார்க்கெட்) அதிவிரைவாக வளர்ச்சியடைவதாலும் நிகழ்கிறது. இதனோடு பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, ஊரடங்கு தொடர்பான தவறான கையாலுதல் போன்ற அரசே முன்னின்று நடத்தும் நடவடிக்கைகள் மூலம் பணத்தையும் முதலீட்டையும் யூக வணிகத்தில் ஆற்றுப்படுத்துவதும் சேர்ந்து கொள்கிறது. சாதாரண பொது மக்கள் தங்கள் சேமிப்பைக் கார்ப்பரேட்டுகளிடம் இழந்தார்கள்; அதேபோல சிறு குறு நடுத்தர தொழில் முனைவோர் பிரிவினர் மற்றும் சிறு கடைக்காரர்களும் இழந்தனர்.  

பங்குச் சந்தை மதிப்பீடு அல்லது நிதிசார்ந்த சொத்துக்களின் மதிப்பு உயர்வு – அதாவது, கம்பெனிகளின் ஷேர்கள் தாறுமாறாக அதிகரிப்பது, மிகப் பெருமளவிலான யூக வணிகத்திற்கு இட்டுச் செல்கிறது. நாஷ்டாக் நிறுவனத்தின் மதிப்பு 2020ல் 42 சதவீதம் அதிகரிக்க சென்ஷான் (சீன) நிறுவனம் 40 சதவீதமும் ஜப்பானின் நிக்காய் 22.9 சதவீதமும் அதிகரித்துள்ளது. 

இந்த ஆண்டின் மார்ச் 2ல் பிஎஸ்இ சென்செக்ஸ் புள்ளிகள் 50 ஆயிரம் மார்க்கைக் கடந்து, ஷேர்களுக்கு மிகப் பெரிய லாபத்தைத் தந்துள்ளது. பல்வேறு மிகப் பெரிய வணிக நிறுவனங்கள் இணைப்பு நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளது.

21ம் நூற்றாண்டின் இன்றைய வளர்ச்சிப் போக்குகள் நடுத்தர வர்க்கங்கள், கடைக்காரர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், உற்பத்தி முதலீட்டாளர்கள் உள்ளிட்ட நிதிமூலதன எதிர்ப்பு சக்திகள் பரந்த அளவில் ஒன்றுபடுவதற்கான தேவையை வலியுறுத்தி அழைப்பு விடுக்கிறது. சேவைத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிதி மூலதனத்தின் கொடுமையான பிடியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். அப்படி விடுவிக்கப்பட்டால் மட்டுமே சமுதாயத்தில் உண்மையான ஜனநாயகப்படுத்தலும் ஜனநாயக அமைப்புகளும் மலரும். தகவல் தொழில்நுட்பம் இன்றைய சமூகத்தைச் செலுத்துவதால் அது ஜனநாயக நிகழ்முறையோடு ஒத்திசைவாக ஒன்றிணைய வேண்டும். 

ஊரடங்கைப் பயன்படுத்தி சிறு மற்றும் நடுத்தர ஆலைகளும் விவசாயமும் அழித்தொழிக்கப் படுகிறது. சிறுவணிக நிறுவனங்கள் அப்படியே பூட்டப்பட்டு, ஆலைகள் மூடப்பட்டதால் லட்சக் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் வெகுசாதாரணமாக வீதிகளில் வீசப்பட்டனர். சாதாரண தொழிலாளர்கள் போலவே நடுததர வர்க்க ஊழியர்களும் தொழில் முனைவோரும் அதே விதியைச் சந்தித்தனர். கடைகள் வியாபார நிறுவனங்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. 

உற்பத்தித் தரப்பில் ஒரு பக்கம் இப்படி (நெருக்கடியில்) நடக்கும்போது, நிதி மூலதனம் மறு தரப்பில் பொங்கி செழிக்கிறது.  இதுவே நவீன கார்ப்பரேட் முதலாளித்துவத்தின் அடிப்படையான முரண்பாடு. (சாதாரணமாகத் தொழிலகங்களின் முதலாளிகள் லாபம் அதிகரிக்கும்போது, அங்கே பணியாற்றும் ஊழியர்கள் வாழ்வும் ஓரளவு நெருக்கடியின்றி செழிப்பதைப் பார்த்திருக்கிறோம். எனவேதான் தொழில்கள் வளர வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் இன்று நிலைமை தலைகீழ்)

இந்த நிலைமை இதற்கு முன் நிகழாததும் புதியதான நிகழ்வுப் போக்கும் ஆகும். இதனை எதிர்கொள்ள நாம் லெனினின் கோட்பாடுகளை மேலும் வளர்ச்சி பெறச் செய்து மேலெடுத்துச் செல்ல வேண்டும். 

--தமிழில் : நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment