Thursday 1 April 2021

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 29 எஸ் வி காட்டே : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முதல் பொதுச் செயலாளர்

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் -29

 எஸ்  வி காட்டே
              இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 

           முதல் பொதுச் செயலாளர்

--அனில் ரஜீம்வாலே

--நியூஏஜ் (ஜன.10--.16 இதழ்)

            சச்சிதானந்த் விஷ்ணு காட்டே மங்களூரில் மிகுந்த பொருளாதாரச் சிரமங்களில் இருந்த ஒரு கீழ் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் 1896 டிசம்பர் 14ம் நாள் பிறந்தார். அவருடைய தந்தையும் மூத்த சகோதரரும் புரோகிதர்கள்; வீட்டில் பழமைவாத ‘சனாதன’ச் சூழ்நிலையே நிலவியது. அச்சூழலை ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத சச்சிதானந்த் எதிர்த்தார், பழமைவாதத்தைக் கைவிட்டு நாத்திகர்ஆனார்.

கல்வி

            1914 கேஇஎம் பள்ளியில் மெட்ரிக்குலேஷன் தேர்ச்சி பெற்றபின், இன்டர்மீடியட் கல்வி செயின்ட் அல்யோசியுஸ் கல்லூரியில் தொடர்ந்தார். அந்நாட்களில் அன்னி பெசன்டின் புகழ்பெற்ற ஹோம் ரூல் இயக்கம் காட்டுத் தீபோலப் பரவியது. அதில் ஈடுபட்ட சச்சிதானந்த் அவ்வியக்கத்தின் ‘தி நியூ இந்தியா’ இதழை மக்களிடம் பிரபலப்படுத்தினார்.

            அவர் கணிதப் பாடத்தை மிகவும் வெறுத்ததால் பம்பாய் ஸிடென்ஹாம் கல்லூரி பி.காம்., படிப்பில் சேர்ந்தார். உடல்நலப் பாதிப்பிலிருந்து குணமடைந்து தேற 1918ல் அகமதாபாத்தில் இருந்தபோது தனது எதிர்காலத் தோழரான சிஜி ஷாவைச் சந்தித்தார்.  

சோஷலிசம் நோக்கி

            1919ல் பம்பாய் திரும்பிய சச்சிதானந்த் வேலைக்குச் சேர்ந்த காப்பீட்டு நிறுவனம், சில காலத்தில் திவாலாகிப் போனது. இதன் மத்தியில் கிர்காமில் ஸ்ரீகிருஷ்ணா லாட்ஜ் உரிமையாளரான மங்களூரைச் சேர்ந்த ஒரு கோபால் பட் என்பாரைச் சந்திக்க, அவர் காட்டேவை அந்த லாட்ஜின் மானேஜராக நியமித்தார். அந்த லாட்ஜ் உடன் அவருக்கு ஏற்பட்டத் தொடர்பு வரலாற்றுபூர்வமானது. வாடிக்கையாளர்களின் பில்களைத் திரட்டுதல், தஸ்தாவேஜ்களைப் பாதுகாத்துப் பராமரித்தல் முதலிய பணிகளைச் செய்வது மட்டுமின்றி இலவசமாகச் சினிமா படங்களைப் பார்ப்பது முதலானவையும் அவருக்குக் கிடைத்தன!   

            பின்னர் 1923ல் செயின்ட் சேவியர் கல்லூரியில் பிஏ ஹார்னர்ஸ் தேர்வானார். இதன் மத்தியில் ஆர் பி லாட்வாலா என்ற வியாபாரியின் தனிச் செயலாளராகப் பணியாற்றச் சிஜி ஷா பம்பாய்க்கு வந்தார். ஆர்வத்தைத் தூண்டக்கூடிய மனிதரான அந்த வியாபாரி ஆண்டு தோறும் லண்டன் சென்று வருபவர்; வரும்போது மார்க்சிய நூல்கள் உட்பட பல நூல்களை எடுத்து வந்து ஒரு பெரிய நூலகமும் வைத்திருந்தார். அந்நூலகத்தை ஷா அவர்கள்தான் பராமரித்ததால், காட்டே அங்கே இலவசமாகப் பொழுதைக் கழிக்க முடிந்தது. அவர்கள் இருவருமாகச் சேர்ந்து ஒரு படிப்பு வட்டத்தையும் அமைத்தனர்.

            ஒரு நாள், எஸ் ஏ டாங்கே வெளிட்டுவந்த ‘தி சோஷலிஸ்ட்’ என்ற பத்திரிக்கையைக் காட்டே படிக்க நேர்ந்தது; அப்பத்திரிக்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். டாங்கேவை அழைத்துவர ஒரு சிறப்பு தூதரை அவர் அனுப்ப, அது குறித்து முன்னரே தகவல் தெரிவிக்காததால் காட்டேவை அவர் காய்ந்து விட்டார். முதல் முறைதான் சந்தித்தபோதும் அவரை அன்பான விருந்துக்கு அழைத்து, அவரோடு நீண்ட நேரம் உரையாடினார். இப்படியாக அவர்களிடையே வாழ்நாள் முழுவதும் நீடித்த நட்புறவு மலர்ந்தது. அப்போதிலிருந்து சிபிஐ பொருளாளர் மற்றும் பிற அமைப்புகளின் பொறுப்புக்கள் உட்பட, பல பொறுப்புகளை அவர் சுமந்தார்.

            விரைவில் அவர்கள் இருவரும் காங்கிரஸின் பம்பாய் கிளையில் பணியாற்றத் தொடங்கி, காங்கிரசுக்குள் புரட்சிகர குழு ஒன்றை ஏற்படுத்தினர். எப்படிப் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனைகளை மாஸ்கோவிலிருந்து எம்என் ராய் விதிக்க, அதை அவர்கள் ஏற்க மறுத்தனர். காட்டேவின் இருப்பிட லாட்ஜ் தலைமறைவுச் செயல்பாடுகளுக்கான மையம் ஆயிற்று. மற்ற தோழர்களோடு காட்டேவுக்குக் காமின்டர்ன் உடன் தொடர்பு ஏற்பட்டது. காட்டேவும் டாங்கேவும் ஒரு தீவிரச் செயல்பாட்டுக் குழுவை அமைக்க அதில் ஜோக்லேக்கர், மிராஜ்கர், நிம்கர் முதலானவர்கள் இணைந்தனர்; அக்குழு பம்பாய் மற்றும் பிற பகுதிகளின் தொழிலாளர் இயக்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளை வடிவமைத்தது.

            1924ல் போல்ஷ்விக் சதி வழக்கில் டாங்கே கான்பூரில் கைதானார். காட்டே பிற தோழர்களுடன் இணைந்து ஒரு பாதுகாப்புக் குழுவை அமைத்தார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு, கான்பூர் 1925

          கான்பூரைச் சேர்ந்த சத்யபக்த் என்பார் ஓர் அகில இந்திய மாநாட்டிற்காக இந்தியா முழுவதும் பரவியிருந்த கம்யூனிஸ்ட்களைத் தொடர்பு கொண்டார். பம்பாயிலிருந்து காட்டே

மற்றும் தோழர்கள் உட்பட சுமார் 300 தோழர்கள் கான்பூரில் திரண்டனர். 1925 டிசம்பர் 25ம் நாள் மாநாடு தொடங்கி மறுநாள் டிசம்பர் 26 அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது. மாநாடு, கட்சி செயற்குழு மற்றும் பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, கட்சிக் கொடி மற்றும் உறுப்பினர் படிவத்தை முடிவு செய்ததுடன், சிபிஐ கட்சி அமைக்கப்பட்டதை ஓர் அறிக்கையில் அறிவித்து கட்சியின் சுருக்கமான எதிர்காலத் திட்டத்தை அறிவித்தது. மாநாட்டு ஆவணங்கள் 1920 ’தாஸ்கண்ட் பார்ட்டி’ குறித்த பார்வைக் குறிப்பு எதையும் குறிப்பிடவில்லை.

            ஆர்வத்தைத் தூண்டும் வகையில் மூன்று பொதுச் செயலாளர்கள் மற்றும் இரண்டு பொருளாளர்களுக்கு அன்றைய கட்சி அமைப்பு விதிகளின்படி இடம் இருந்தது. எஸ் வி காட்டே மற்றும் ஜெ பி பகர்ஹெட்டா இருவரும் பொதுச் செயலாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் காட்டே செயல்படும் பொதுச் செயலாளர். மாநாட்டின் தலைவர் ம சிங்காரவேலர் கட்சியின் தலைவரானார்.

            1927 மே 31ம் நாள் பம்பாயில் நடைபெற்ற கட்சியின் விரிவடைந்த மத்திய செயற்குழு கூட்டத்தில் கட்சியின் புதிய அமைப்புவிதி நிறைவேற்றப்பட்டு ஏற்கப்பட்டது. அதன்படி, கட்சிக்கு ஒரே பொதுச் செயலாளர்; அவர் காட்டே. இவ்வாறு காட்டே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘முதல் பொதுச் செயலாளர்’ என்று அறியப்படுகிறார். அக்கூட்டத்தில் ஐந்து உறுப்பினர் அடங்கிய தலைமைக் குழுவும் செயற்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் சுருக்கமான கட்சித் திட்டமும் நிறைவேற்றப்பட்டது. வரலாற்று முக்கியத்தும் உடைய நிகழ்வுகளின் ஊடே காட்டே பயணப்படலானார்.

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கட்சி (WPP)

            காங்கிரஸ் கட்சிக்குள் செயல்பட்டுவந்த சோஷலிசக் குழுவை, எஸ்எஸ் மிராஸ்கரைப் பொதுச்செயலாளராகக் கொணடு, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கட்சி (WPP) அமைப்பை 1927ல் அமைத்தனர்.  விரைவில் அந்தக் கட்சி பல பிரதேசங்களிலும் பரவியது. காட்டேயும் இளம் தொழிலாளர்கள் அமைப்பை (யங் ஒர்க்கர்ஸ் லீக்) ஒன்றைத் தொடங்கினார். 1927–28 சைமன் குழுவைப் புறக்கணிக்கும் இயக்கத்தில் அவர் முக்கியமான பங்காற்றினார்.  பம்பாயில் ஏற்பட்ட எழுச்சியைக் கண்டு சைமன் குழு, பூனா செல்லும் வழியில் பம்பாய்க்குள் வருவதைத் தவிர்த்து, சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியிருந்தது. குழுவின் 7 உறுப்பினர்களைக் குறிக்கும் வகையில் ஏழு கொடும்பாவிகள் கொளுத்தப்பட்டன. WPP கட்சியின் தலைமையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கண்டனப் பேரணியில் கலந்து கொண்டனர்.

            (பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினரும் கம்யூனிஸ்ட் தலைவருமான) ஷபூர்ஜி சக்லத்வாலா 1927 ஜனவரியில் பம்பாய் வந்தபோது காட்டேயும் மிராஸ்கரும் அவரைச் சந்தித்தனர்; அவருக்கு மரியாதை தரும் வகையில் மிகப்பெரிய வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.

            1928ல் ஜவுளி ஆலைத் தொழிலாளர்களின் சரித்திரப் புகழ் வாய்ந்த வேலைநிறுத்தம் நடைபெற்றபோது, காட்டே கிர்ணி காம்கர் யூனியனின் ஒரு மையத்தின் பொறுப்பாளராகச் செயல்பட்டார். மத்திய வேலைநிறுத்தக் குழுவில் டாங்கே, ஜோக்லேக்கர், என்எம் ஜோஷி மற்றும் பிறரோடு காட்டேயும் ஓர் உறுப்பினராக இருந்தார்.

            1928 டிசம்பரில் கல்கத்தா, அல்பர்ட் ஹாலில் WPP கட்சியின் அகில இந்திய மாநாடு நடந்தபோது, அதில் காட்டே மையமான முக்கிய பங்காற்றினார். காங்கிரஸ் கட்சி முழு சுதந்திரத் தீர்மானத்தை ஏற்க வற்புறுத்தி WPP கட்சி பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டத்தைக் காங்கிரஸ் (மாநாட்டுப்) பந்தலுக்கு முன்பு நடத்தியது. அவருடைய வழிகாட்டுதலில் கம்யூனிஸ்ட் கட்சியும் அதனுடைய கூட்டங்களை நடத்தியது.

மீரட் சதி வழக்கு, 1929 – 33

            31 பெரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களோடு எஸ் வி காட்டே கைது செய்யப்பட்டார்; நாடுமுழுவதும் பல தொழிற்சங்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களை மனிதத் தன்மையற்றச் சூழலுக்குப் பெயர் பெற்ற மீரட் சிறையில் அடைத்தனர். அவருக்கு 12 ஆண்டுகள் கடும் சிறைதண்டனை வழங்கப்பட்டாலும் பின்னர் தண்டனை காலம் குறைக்கப்பட்டது. மற்ற சக கைதிகளுடன் சேர்ந்து அவர் ஒரு கூட்டு அறிக்கை வெளியிட்டார்.

            1933ல் விடுவிக்கப்பட்ட அவர் 1934 ஜனவரியில் பம்பாய் திரும்பினார். கம்யூனிஸ்ட் இயக்கத்தை மறு சீரமைப்பு செய்வதில் அவர் பங்காற்றினார்; ஆனால் உடனே கைதாக அங்கே உடல்நலம் பாதிக்கப்பட்டார். ஏறத்தாழ தனிமைச்சிறையில் அவர் சத்தாரா ஜெயிலில் அடைக்கப்பட அங்கே டாங்கேவைச் சந்தித்து இருவரும் தப்ப முயன்றனர். விடுதலைக்குப் பிறகு காட்டே மெட்ராசுக்கு நாடு கடத்தப்பட்டார். இதன் மத்தியில் பி சி ஜோஷி கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.  

மெட்ராஸ் ராஜதானியில் ஆற்றிய பணிகள்

            மெட்ராஸில் ஏற்கனவே (அக்னிக் குஞ்சாய்) சிறிய அளவில் கட்சி அமைப்பு இருந்தது; அதில் அமீர்கான், சுந்தரையா, ஏஎஸ்கே அய்யங்கார், கிருஷ்ணப் பிள்ளை மற்றும் அவர்களோடு சிந்தனைச் சிற்பி சிங்காரவேலுவும் இருந்தனர். காட்டேவும் சிங்காரவேலுவும் மிகுந்த நெருங்கிய ஒத்துழைப்போடு பணியாற்றினர். 1936 லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் காட்டே பங்கேற்றார். அங்கே சிபிஐ கட்சியும் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியும் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என பிசி ஜோஷி, ஜெய் பிரகாஷ் நாராயணன் மற்றும் காட்டே முடிவு செய்தனர்.

            காட்டேவின் முயற்சியால்தான் தோழர் இஎம்எஸ் (நம்பூதிரிபாட்) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அப்போது இஎம்எஸ் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியிலும் காங்கிரஸ் கட்சியிலும் இருந்தார்; அவரைப் போலவே (ஏகே) கோபாலனும். காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் தென்னகப் பணிகளில் காட்டே முக்கிய பிரமுகராகப் பணியாற்றினார்; அப்போது காட்டே மெட்ராஸிலிருந்து வெளிவந்த ‘நியூ ஏஜ்’ மாத இதழின் ஆசிரியர். தென்னிந்தியாவில் கட்சி மற்றும் பல தொழிற்சங்கங்களைக் கட்டி எழுப்புவதில் அவர் பெருந்துணையாக இருந்தார்.

வேலூர் சிறை மற்றும் தியோலி காவல் முகாம்

            1940 மார்ச் மாதம் மங்களூரில் காட்டே கைது செய்யப்பட்டு முதலில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டவர் பின்னர் தியோலி தடுப்புக் காவல் முகாமிற்கு மாற்றப்பட்டார்.

            தியோலி முகாமில் காட்டே பஞ்சாப் சிபிஐ தோழர்களுக்கும் ’கீர்தி கம்யூனிஸ்ட்’களுக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த முக்கிய பங்களிப்புச் செய்தார். (கீர்தி கிஸான் பார்ட்டி, 1926ல் சோகன்சிங் ஜோஷ் தலைமையில் செயல்பட்ட பஞ்சாப் ‘தொழிலாளர் விவசாயிகள் கட்சி’யாகும்); கீர்தி கம்யூனிஸ்ட்களில் சோகன் சிங் பக்னா, தேஜா சிங் ஸ்வதந்தர் மற்றும் சிலர் அடங்குவர்.  தன்வந்திரி, சோகன் சிங் ஜோஷ் போன்றோரையும் காட்டே சந்தித்து கலந்து விவாதித்தார். இதன் பலனாகக் கீர்தி பார்ட்டி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்தது.

            விடுதலையான பிறகு 1942ல் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு முதலில் ராஜமுந்திரி சிறைக்கும் பின்னர் வேலூர் சிறைக்கும் அனுப்பப்பட்டார்.

            1943ல் பம்பாயில் நடந்த சிபிஐயின் முதலாவது கட்சி காங்கிரஸில் அவர் கலந்து கொள்ளாதபோதும்,  மத்தியக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விடுதலையானதும் பம்பாய் கட்சித் தலைமையகத்தில் இணைந்து கொண்டார்.

ஆங்கில எழுத்து ‘மூன்று Pகள்’ சேர்ந்த கடிதத்தின் சிற்பி

    அன்னிய ஆட்சியிலிருந்து இந்திய தேசம் விடுதலை அடைந்த சாதனையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றது. விரைவில் கட்சியின் பொதுச் செயலாளர் பிசி ஜோஷி மாற்றப்பட்டு அப்பொறுப்புக்கு BTரணதிவே கொண்டுவரப்பட்டார். அதுமுதல், கட்சியை இடதுசாரி சாகச தற்கொலைப் பாதை பிடித்துக் கொள்ள ஏறத்தாழ கட்சி சிதறியது. காட்டே உறுதியாகப் பிடிஆர் பாதையை எதிர்த்தார். 1948 பிப்ரவரி – மார்ச் கல்கத்தா கட்சி காங்கிரஸ் மாநாட்டிற்கான முன்தயாரிப்புப் பணிகளில் காட்டே தீவிரமாக ஈடுபட்டார். தலைமறைவு வாழ்வுக்குச் சென்றவர் கைதாகி 1950ல் விடுதலையானார். 

            புகழ்பெற்ற ’ஆங்கில மூவெழுத்து கடிதத்தை’ வடிவமைத்து எழுதியவர் காட்டே; மற்ற

இருவர், டாங்கே மற்றும் அஜாய் கோஷ். இவர்கள் மூவரின் தலைமறைவு வாழ்வின் புனைப் பெயர்களின் ஆங்கில முதல் எழுத்துக்களே அவை. இந்தக் கடித ஆவணம் கட்சிக்கு –செக்டேரியன்குழுப் போக்குப் பாதைக்கு மாற்றான -- ஓர் ஆரோக்கியமான பாதையை  அளித்தது. கட்சியின் அந்தப் புதுப் பாதை அஜாய் கோஷ் தலைமையில் 1951 ஏப்ரலில் தலைமறைவாக நடத்தப்பட்ட மாநாட்டில் பெரும் செல்வாக்கு செலுத்தியது. சிபிஐ தனது பழைய தவறான பாதையைச் சரிசெய்யும் வழிமுறையைத் தொடங்கியது.

            சிதறுண்டு பாழ்பட்டுக் கிடந்த கட்சியின் மையத்தைக் காட்டே திரும்ப புனர் நிர்மாணம் செய்ய உதவினார். மெல்ல மெல்ல, படிப்படியாக டாங்கே மற்றும் அஜாய் கோஷ் இருவரோடும் காட்டே கட்சிக்கு புது உற்சாகமளித்து மனவாட்டத்தில் சோர்ந்து போயிருந்த சூழ்நிலையைப் போக்கினார். காட்டே கட்சி வெளியீடுகள் பணியை எடுத்துக் கொண்டதுடன், கட்சியின் பொருளாளராகவும் பொறுப்பு வகித்தார்.

1964 சிபிஐ கட்சி பிளவு

            அக்டோபர் 1962ல் நடந்த சீன ஆக்கிரமிப்பை மிகக் கூர்மையாக காட்டே கண்டித்தார். குழப்பத்தையும் பேரழிவையும் ஏற்படுத்துவதில் மாவோயிசம் முக்கிய பங்கு வகிக்க, உலக கம்யூனிஸ்ட் இயக்கம் பிளவுபட்டது. அதனால் மிகப் பெரிதும் பாதிக்கப்பட்டது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியே. பிளவுபடுத்தும் போட்டியான இணை செயல்பாடுகள் சிபிஐ கட்சியை முடக்கியது. அத்தகைய பிளவு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தயாரிக்குமாறு காட்டே தலைமையிலான கட்சியின் கட்டுப்பாடு குழு கேட்டுக் கொள்ளப்பட்டது.  ஏறத்தாழ ஒன்பது மாத காலம் கடும் பணியாற்றி, அறிக்கை 1964 ஏப்ரலில் தயாரானது; அந்த அறிக்கை பிளவு நடவடிக்கைகளை மிகக் கடுமையாகக் கண்டித்தது. அந்த அறிக்கையைத் தயாரிக்க காட்டே நாடு முழுதும் பயணம் மேற்கொண்டார். 1964ல் கட்சி பிளவுபட்டு விட்டது

            மத்திய நிர்வாகக் குழு உட்பட மத்திய தலைமைப் பொறுப்புகளில் காட்டே தொடர்ந்து பணியாற்றினார். கட்சியின் பொருளாளராகவும் மத்திய கண்ட்ரோல் கமிஷன் (மத்திய கட்டுப்பாட்டுக் குழு)  உறுப்பினராகவும் இருந்தார்.

            இந்தி, மராட்டி, ஆங்கிலம், கன்னடம், வங்காளம், தமிழ் முதலிய பலமொழிகளில் பயிற்சியும் புலமையும் மிக்கவராக அவர் இருந்தார். கட்சியின் வரலாறு, சிபிஐ கட்சியின் அமைப்பு நாள் போன்றவற்றின் மீது ஆதாரபூர்வமான விவரங்கள் அடங்கிய பல கட்டுரைகளை அவர் எழுதினார்.

            நீண்டகாலம் உடல்நலமின்றி இருந்த பிறகு சச்சிதானந்த் விஷ்ணு காட்டே எனப்படும் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் எஸ் வி காட்டே புது டெல்லியில் 1970 நவம்பர் 28ம் நாள் மறைந்தார்.

            அவரது கடும் உழைப்பைப் பறைசாற்றி விண்ணில் ஒளிவீசிப் பறக்கிறது நமது செங்கொடி. வாழ்க காட்டே நாமம்!

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

             

  

No comments:

Post a Comment