Sunday 28 February 2021

தனியார்மயத்தின் விளைவு சமோலி பேரழிவு

 

        

தனியார்மயத்தின் விளைவு

சமோலி பேரழிவு


--டாக்டர் சோமு      

       இமயமலைப் பகுதி நந்தாதேவி பனிச்சிகரத்தின் ஒருபகுதி உடைந்ததால் உத்தர்காண்ட் மாநில சமோலி மாவட்டத்தைப் பேரழிவு தாக்கியது. கங்கை பேராறின் தௌலி கங்கா, ரிஷி கங்கா மற்றும் அலகநந்தா துணை ஆறுகளின் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 50க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் உட்பட பலரும் பலியாயினர்; சுரங்கத்தில் பாய்ந்து வந்த வெள்ளநீரில் சிக்கிய இன்னும் பலரையும் காணவில்லை. அங்கே தேசிய தர்மல் பவர் கார்ப்ரேஷன் செயல்படுத்திய தபோவன்–விஷ்ணுகாட் நீர்மின் திட்டம் மற்றும் ரிஷிகங்கா நீர்மின் திட்டம் இரண்டும் வெகுவாக அழிவுக்கு உள்ளானதுடன், சுற்றியிருந்த கிராமங்களையும் சேதப்படுத்தியது.

          சமோலி பேரழிவுத் துயரம், 2013 ஜூனில் சோராபாரி பனிச்சிகரம் உடைப்பால் மந்தாக்கினி நதியில் ஏற்பட்டப் பெருவெள்ளம் கேதார்நாத்தில் 5000 மேற்பட்ட மக்களைப் பலி வாங்கிய துயரத்தை நினைவுபடுத்துகிறது. இந்தத் துயர சம்பவங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக, இமயமலைப் பகுதியின் எளிதில் பாதிக்கக்கூடிய தன்மையைக் கணக்கில் கொண்டு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கின்ற வகையில் அமைந்த, அப்பகுதியை மேம்படுத்துவதற்கான திட்டம்தான் அவசியமான தேவை என்பதை வலியுறுத்துகிறது. மிகவும் நொய்மையான வகையில் எளிதில் பாதிக்கப்படக் கூடிய இமயமலை இயற்கை சுற்றுச்சூழலுக்குப் பொருளாதார வளர்ச்சி முக்கியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த வளர்ச்சி, கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல, சுற்றுச்சூழலை விலையாகக் கொடுத்து வரக்கூடாது. அப்பகுதியின் முக்கியமான செல்வாதாரங்களை அழித்துவிடாது நிலையாகப் பேணுகின்ற வகையில் பயன்படுத்துவதாகவும், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதாகவும்  அமைந்த, வித்தியாசமான வளர்ச்சித் திட்டங்கள் தேவைப்படுகிறது.

எளிதில் உடையக்கூடிய சுற்றுச்சூழல்

          இமயமலைத் தொடர்ச்சி சுமார் 7,41,706 சதுர கிலோ மீட்டர் பரப்பிற்குப் பரந்து விரிந்துள்ளது. சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்ரா போன்ற நதிகளின் தாய் வீடு. அந்நதிகள் இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களா தேஷ் தேசங்களின் வழியாகப் பாய்ந்தோடுகின்றன. பாரதி புகழ்ந்துரைத்த ‘கங்கை நதிப்புறத்து கோதுமை பண்டம்’ விளையும் வடஇந்தியாவில், கங்கை பள்ளத்தாக்கு 1,56,300 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி வழங்குகிறது. பனிச்சிகரங்கள் மற்றும் மலையிலிருந்து ஓடிவரும் நீர்பெருக்கு, புனல்மின்திட்டங்களின் மின்சார உற்பத்திக்குச் செல்வம்மிக்க ஆதாரமாகும். ஆக்கமும் அழிவும் அதனால் என்பதுபோல, இந்தச் செல்வாதாரம் வழங்கக்கூடிய வாய்ப்புகள் மற்றும் அழிவுகள் அடிப்படையிலும் விவாதிக்கப்பட வேண்டும்; அந்த அழிவு, சுற்றுச்சூழலுக்கும் பொருளாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. நதிகளின் நீரோட்ட வேகத்தைப் பயன்படுத்தும் திட்டங்களும், அணைக்கட்டுகளைக் கட்டி நீரைத் தேக்கிப் பயன்படுத்தும் திட்டங்களும் தற்போது அளவுக்கதிகமாகக் கட்டுவதற்கான ஓட்டம் வெறிபிடித்த வேகத்தில் நடைபெறுகிறது. இந்தியா, பாக்கிஸ்தான், நேபாளம் மற்றும் சீனா நான்கு நாடுகளிலும் இந்துகுஷ் இமயமலைப் பகுதியில் 334 கிகா வாட்ஸ் திறனுள்ள நீர்மின் உற்பத்தி நடைபெறுகிறது. (ஒரு கிகா வாட்ஸ் என்பது 109 வாட்ஸ்; அதாவது பத்தைப் பத்தால் ஒன்பது முறை பெருக்குவதால் கிடைக்கும் அளவு). இமயமலைப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களும் நீர்மின் உற்பத்தித் திட்டங்களுக்கான அனுமதியைத் தனியார் கம்பெனிகளுக்குத் தலைபோகும் வேகத்தில் வழங்குகின்றன. உத்தர்காண்ட் மாநிலத்தின் கங்கைப் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டும் 10ஆயிரம் மெகா வாட்ஸ் மின் உற்பத்திக்கான சுமார் 70க்கும் மேற்பட்டத் திட்டங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.  

          மின் உற்பத்தி, மாநில வருவாய் பெருக்கத்திற்கான மிகப்பெரிய செல்வாதாரம்; ஆனால் அது முழுமையாக இயற்கை சுற்றுச்சூழலைப் பாழ்படுத்தி, மக்கள் உயிர் உடைமைகளையும், வாழ்வாதாரத்தையும் அழித்துத்தானா திரட்டுவது? உலகின் பல்லுயிர் பெருக்கத்திற்கு மிகவும் பொருத்தமான மிகப்பெரிய தொட்டிலாக இருப்பது இமயமலைப் பகுதி. அப்படிக் கூறுவதைவிட, பின்வரும் புள்ளிவிபரங்களை அறிந்தால் அதன் பெருமையை உணர முடியும். இமயமலைப் பகுதியில் பத்தாயிரம் தாவர வகைகள், 300 வகையான விலங்கினங்கள், 977 பறவையினங்கள் மற்றும் 269 மீன்வகைகள் தம்இடமாகக் கொண்டு வாழ்ந்து வந்தன. இவற்றில் அளவுக்கதிகமான மனிதத் தலையீடு, காடுகளை அழித்தல், நதிகளைத் திசைமாற்றித் திருப்புதல் காரணமாக 31.6 சதவீதத் தாவரங்கள், 12% விலங்குகள், தூயநீரில் வசிக்கும் மீன்கள் 33% மற்றும் 15 சதவீதப் பறவையினங்கள் ஏற்கனவே இந்தப் புவியிலிருந்து மறைந்து விட்டன.

          பருவநிலை மாற்ற அபாயம் அதிகரித்த போதிலும், நதிகள் போன்ற இயற்கைச் செல்வாதாரங்களைப் பெருமளவில் தனியார்மயப்படுத்த அவசரம் காட்டப்படுகிறது; இந்தப் போக்கின் விளைவு, புதிய தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களின் ஒருபகுதியாக 2000 ஆண்டிலிருந்து வெறித்தனமான நீர்மின் உற்பத்தி அதிகரிக்கும் திட்டங்களில் முடிந்தது; அதுவும் சாதாரணமாக இல்லை, அரசின் நிதி ஆதரவு மற்றும் வரிக்குறைப்புச் சலுகைகளோடு தனியார் முதலீட்டாளர்களுக்குத் தேசத்தின் பொதுவான நதிகள் கான்டிராக்டுக்குத் தாரை வார்க்கப்பட்டன. புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் அமலாக்கத்தில் நதிகள் போன்ற சமூகத்தின் இயற்கை செல்வாதாரங்கள் ஒரு விற்பனைப் பண்டமாக மாற்றப்பட்டு, மிக மலிவான விலையில் அரசு ஆதரவோடு செயல்படும் முதலாளிகளுக்குத் தானமாகத் தரப்படுகின்றன. தனியார் முதலாளிகள் அதனைப் பயன்படுத்தி நீர்மின் திட்டக் கட்டுமானங்களை மேற்கொள்வார்களாம். இந்தியாவின் 2008 நீர்மின் திட்டக் கொள்கைகள்படி அத்திட்டங்களை மேம்படுத்தும் தனியார் கம்பெனிகளுக்குச் சலுகைகள் வழங்கப்படுவதுடன், (நட்டம் போன்ற) எந்தவித ஆபத்தும் சூழாமல் அவர்களது லாபத்தை அதிகரிக்க உத்தரவாதம் வழங்கப்படுகிறது. 

          கடந்த பத்தாண்டுகளில் உத்தர்காண்ட் அரசு 12க்கும் மேற்பட்ட நீர்மின் திட்டக் கட்டுமானங்களுக்கு ஒப்புதல் வழங்கியதில் பெரும்பான்மையும் தனியார் கம்பெனிகளுக்கானது. மேலும் அரசே 17 பெரிய நீர்மின்திட்டங்களைச் செயல்படுத்துகிறது; அதில் ஒன்றுதான் பாகீரதி மீது கட்டப்பட்ட இந்தியாவின் மிக உயரமானதும் உலகின் பத்தாவதுமான டெஹ்ரி அணைக்கட்டும், (புவிஈர்ப்பு விசை பயன்பாட்டில் கட்டப்பட்ட) மனேரிபாலி அணைக்கட்டின் மூலம் (முதலாவது மற்றும் இரண்டாவது  நிலைகளின்)  நீர்மின் திட்டம் செயல்படுகிறது. மேலும் சில்லா நீர்மின் திட்டம் மற்றும் சிப்ரோ நீர்மின் திட்டம் செயல்படுகின்றன. அருகே உள்ள இமாச்சல் பிரதேச மாநிலம் லாஹவுல் மாவட்டத்தில் அரசு 5 மாபெரும் திட்டங்களுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டுள்ளது. (லாஹவுல் என்பது திபேத்திய வார்த்தை, தெற்கு தேசம் அல்லது கடவுளின் தேசம் என்று பொருள். லாஹவுல் மாவட்டம், ஸ்பிட்டி என்ற முந்தைய தனிமாவட்டத்தையும் இணைத்து உருவாக்கப்பட்டது). லாஹவுல் நூற்றுக்கும் மேற்பட்டப் பனிச்சிகரங்களின் தாயகமாகும்; அவற்றில் இமாசலத்தின் மிகப்பெரிய பனிச்சிகரமான பதா சிக்ரி அமைந்துள்ளது. அங்கேதான் 5 மகாபெரிய திட்டங்களைச் ‘சட்லஜ் ஜல் வித்யூத் நிகம் லிட். என்ற SJVNL நிறுனமும் தேசிய தர்மல் பவர் கார்பரேஷனும் செயல்படுத்த உள்ளன. செனாப்  (ஆற்றுப்) பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 16 மகாபெரிய நீர்மின் திட்டங்களுக்கு ஆலோசிக்கப்படுகிறது; விரைவில் பாதிக்கப்படக்கூடிய மிக நொய்மையான இயற்கைச் சுற்றுச்சூழலை உடைய இப்பகுதிக்கு இந்தத் திட்டங்கள் லாஹவுல் மற்றும் பாங்கிப் பள்ளத்தாக்குகளுக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகும். இணைந்த இத்திட்டங்கள் ஐயாயிரம் மெகா வாட்ஸ் மின்சார உற்பத்தித் திறன் உடையன.

சிப்கோ இயக்கமும் காடுகளின் உரிமைகளும்

         கிராம மக்கள் அமைதியான முறையில் நடத்திய சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமே சிப்கோ இயக்கம் அல்லது போராட்டமாகும். முந்தைய ஒன்றுபட்ட உத்தரப்பிரதேச மாநிலத்தின் (தற்போது உத்தர்காண்டில் உள்ளது) டெஹ்ராடூன் மாவட்டத்தில் 1973ல் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் இந்தியாவின்

இமாலயப் பிராந்தியம் முழுவதும் விரைவில் பரவியது. பொருளாதார வணிகப்பயன்பாட்டிற்காக வனப்பகுதிகளை வளைத்துப் போட்டு, காடுகள் அழிப்பதை எதிர்த்து, (அப்படிப் பெருவணிகர்கள் மரங்களை வெட்ட வரும்போது) பெண்கள் மரத்தைக் கட்டி அணைத்து, வனங்களை அழிப்பதற்கு எதிராக அமைதியான முறையில் மிகப்பெரிய எதிர்ப்பைக் காட்டினார்கள். குறிப்பாக, டெஹ்ரி அணைக்கட்டு கட்டப்படுதற்கு எதிராக 1980கள் முழுவதும் பல போராட்டங்கள் நடந்தன. இத்தகைய மக்கள் போராட்டங்கள் மற்றும் சிப்கோ இயக்கத்தால் ‘வனப் பாதுகாப்புச் சட்ட’த்தை (1980) கொண்டு வரவும், காடுகளின் பாதுகாவலர்களாக மலைசாதி மக்களின் உரிமைகளைப் பாதுகாத்திட ‘2006 காடுகள் உரிமைச் சட்ட’மும் நிறைவேற்றப்பட வழிவகுத்தன.

நிபுணர்களின் கருத்துகளை நிராகரிக்கும் அரசு

          ஆறுகளை அளவுக்கதிகமாகப் பயன்படுத்தும் சுரண்டலும் நீர்மின் திட்டங்களுக்கான மனம்போன போக்கில் கட்டுப்பாடற்று அணைகளைக் கட்டுவதுமே சிமோலி அழிவுக்கு மிகப்பெரிய பொறுப்பு என விஞ்ஞானிகளும் நிபுணர்களும் உறுதியாக நம்புகிறார்கள். மிகநொய்மையான விரைவில் பாதிக்கப்படக்கூடிய இயற்கைச் சுற்றுச்சூழலை உடைய இமாயலப் பகுதியில் கட்டப்படும் நீர்மின் திட்டங்களை மிகக் கடுமையாக விமர்சித்தது, சார் தம் கமிட்டி மட்டுமே அல்ல. 2013 கேதார்நாத் வெள்ளத்தால் ஏற்பட்டப் பேரழிவு தொடர்பாக உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழுவும், இமாலத்தின் மேலடுக்குகளில் இனியும் எந்தவொரு நீர்மின் திட்டமும் கட்டப்படக் கூடாது எனக் கடுமையாக அதிகாரிகளை எச்சரித்தது. கேதார்நாத் நிபுணர் குழுவும்கூட பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் அளவுக்கதிகமாகச் சுரண்டுவதை எதிர்த்து உத்தர்காண்டில் திட்டமிடப்படும் நீர்மின்திட்டங்களை மீண்டும் ஆய்வு செய்து மறுமதிப்பீடுகளைச் செய்யுமாறு வலியுறுத்தியது. 2000மீட்டர் உயரத்தில் நீர்மின் திட்டங்களைக் கட்டுவதா என அறிக்கையில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த அறிக்கையில், உத்தர்காண்ட்டின் மாபெரும் நீர்மின் திட்டங்களால் ‘ஆற்றுப் படுகைகளின் இயல்பு’ மிகக் கடுமையான மாற்றத்துக்கு உள்ளாகியதைச் சுட்டிக்காட்டி இதனால் எதிர்காலத்தில் பேரளவிலான மோசமான அழிவுகள் ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளது.

          2013 கேதார்நாத் சோகத்திற்குப் பிறகும் தற்போதைய சமோலி பெருவெள்ள சேதாரங்களுக்குப் பிறகும், நிபுணர்களின் எச்சரிக்கைகளுக்குக் காது கொடுக்காமல் அவற்றைப் புறக்கணித்து, இயற்கையின் மிக நுட்பமான பகுதிகளிலும் தீவிரமாகக் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது மிகப் பெரிய துயரம். “நிபுணர் குழு அறிக்கைக்குப் பிறகு உத்தர்காண்டின் 24க்கும் மேற்பட்ட நீர்மின் திட்ங்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்க மறுத்து விட்டது” என சார்தம் குழுவின் உறுப்பினரான ஹெமந்த் தியானி கூறுகிறார். 

மின்சாரமின்றி இருளடைந்த கிராமங்கள்

          சமீபத்தில் மத்திய அரசு தம்பட்டமடித்தது: டெஹ்ரி பகுதியில் 100 சதவீதம் மின்வசதி வழங்கப்பட்டுள்ளது அரசின் வெற்றிச் சாதனையாம். ஆனால் அங்கே உண்மையில் 50 சதவீதம் மட்டுமே மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. சரித்திரத்தில் நமது அனுபவம் யாதெனில், பெரும் அணைக்கட்டுகளைக் கட்டுவது அப்பகுதியின் இயற்கை சுற்றுச்சூழலைக் கடுமையாகப் பாதிப்பதுடன், உள்ளூர் மக்களைக் கட்டாயமாக அங்கிருந்து வேரொடுபிடுங்கி அப்புறப்படுத்துவதுடன் அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது. மலைப்பகுதிகளின் தொலைதூர இடங்களுக்கு மின்சார வசதி வழங்குவதில் இடர்பாடுகள் உள்ளன என்பதால், அப்பகுதியின் சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு 25 மெகா வாட்ஸ் திறன் மட்டுமே உடைய சிறிய திட்டங்களை மேற்கொள்வதே உசிதமானதும், வரவேற்கக்கூடியதுமாகும்.

          உத்தர்காண்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு இன்னும் மோசமாகக் காரணம், அனுபவமற்ற தனியார் கம்பெனிகளின் தரக்குறைவான நீர்மின் திட்டக் கட்டுமானங்களே. இத்திட்டங்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் அல்லது தேவையெனில் முற்றாக கைவிடப்பட வேண்டும். நீரை அடிப்படையாகக் கொண்டு மின்சக்தி தயாரிப்பதில் இமாலய சுற்றுச்சூழல் பகுதியில் மிக கவனமாக இரண்டு அம்சங்களைச் சீர்தூக்கி சமப்படுத்தி செயல்படுத்த வேண்டிய தேவை உள்ளது. சுற்றுச்சூழலையும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தையும் விலையாகத் தந்து, பொருளாதார வளர்ச்சி காண்பதாக இருக்க முடியாது. அது கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவது போல, கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது போல.

          நல்லதொரு அறிவு நின்று செயல்படட்டும்! 

                   “எவ்வது உறைவது உலகம், உலகத்தோடு

                    அவ்வது உறைவது அறிவு”              (திருக்குறள் 426)

-- நன்றி: நியூஏஜ் (பிப்.28 –மார்ச் 6)

--தமிழில் : நீலகண்டன்,

தொடர்புக்கு 94879 22786

 

 

 

 

 

 

             

 

No comments:

Post a Comment