Sunday 21 February 2021

வளர்ச்சி மற்றும் இயற்கையின் இயக்கவியல் -- ஆழமான சுற்றுச் சூழல் கட்டுரை

 

வளர்ச்சி மற்றும் இயற்கையின் இயக்கவியல்

(உத்தர்காண்ட் சமோலி இயற்கைப் பேரிடரை முன்வைத்து)

--அனில் ரஜீம்வாலே

          மிகப்பெரும் விஞ்ஞான சிந்தனையாளர் பிடெரிக் ஏங்கல்ஸ் பல காலம் முன்பே எச்சரித்தார்: “இயற்கையின் மீது மனிதகுல வெற்றி பற்றி நம்மை நாமே முதுகில் தட்டிப் புகழ்ந்து கொள்ள வேண்டாம். நமது ஒவ்வொரு வெற்றிக்கும்

இயற்கை நம்மைப் பழி வாங்குகிறது. எடுத்த எடுப்பில் நாம் எதிர்பார்க்கும் பலன்களை ஒவ்வொரு வெற்றியும் கொண்டு வருகிறது என்பது உண்மையே; ஆனால் அடுத்தடுத்து இரண்டாவது, மூன்றாவது முறை விளைவு முற்றிலும் வேறாக, எதிர்பாராத பாதிப்புக்களோடு –முதலாவது பலன்களையும் வாரிச் சுருட்டிச் செல்லும் வகையில் – அமைந்து விடுகின்றன.”

          அந்த முன்னறிவித்த தீர்க்க தரிசனம் 21 நூற்றாண்டிற்காகவே சொல்லப்பட்டதோ! கோவிட் தொற்றின் காரணமாக உலகெங்கும் அமலான ஊரடங்கு இந்தியாவையும் முடக்கிப் போட்டதுடன், சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசரத் தேவையையும் அடிக்கோடிட்டு உணர வைத்துள்ளது. இயற்கை முதலில் பெரிய மனதோடு சிறிது மன்னித்து, நாம் எடுத்துக் கொண்ட (மண்) வளத்தினை மீண்டும் இட்டு நிரப்பி இயற்கை தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டு பூத்துச் சிரித்துச் சரிசெய்து கொள்கிறது. பனிப் பாறை குன்றுகள் பலநூறு கி.மீ. தொலைவில் கண்ணில்படுகிறது, நதிநீர் மீண்டும் மணிபோலத் தெளிவாகவும், முன்பு அவ்விடத்தில் காணப்படாத இடங்களில் விதவிதமான வண்ணப் பறவைகள் வந்து இறங்குகின்றன, மீண்டும் பச்சைப் பயிர்கள் செழிக்கத் தொடங்குகின்றன. பொதுவாக இயற்கை மேலும் தூய்மையானதாகி நமக்கும் ஒரு செய்தி சொல்கிறது: உங்கள் வளர்ச்சியின் செயல்பாடுகளை, திசை வழியை மாற்றிக் கொள்ளுங்கள!

உத்தர்காண்ட் தரும் படிப்பினைகள் :

பாசாங்குத்தனமான கொள்கையின் முரண்பாடுகள்

          சமீபத்திய உத்தர்காண்ட் மாநில சமோலி மாவட்ட இயற்கைப் பேரிடர், மலைகள் நமக்கு உரத்துத் தெளிவாக சொல்லும் செய்தியாகும். அப்பேரிடரின் பிழிவை நடுங்கும் குரலில் சுருக்கமாக ஒரு பெரிய இயந்திரத்தை இயக்கும் நபர் கூறினார். அவர் மண்ணை வெட்டித் தோண்டும் பெரிய எக்ஸவேட்டர் இயந்திரத்தை இயக்குபவர். ரிஷிகங்கா, விக்ரம் சௌகான் பகுதியில் சுரங்கப் பணிக்காக அதனைச் செய்யும் அவர் கூறினார்: “நான் ஒருநாளும் இயற்கையைப் பாதுகாத்தவன் இல்லை. ஆனால் வெள்ளத்தில் என்னை அடித்துச் செல்லாமல் ஒரு மரம்தாம் என் உயிரைக் காப்பாற்றியது!”. ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல’ (திருக்குறள் 151) தன்னை வெட்டும் மனிதனுக்கும் நிழல்தரும் மரம்போல அந்த மரம் மனித உயிரைக் காப்பாற்றியது.

          உண்மையில் நமக்கு லட்சக் கணக்கான மரங்கள் வேண்டும். உத்தர்காண்ட் மற்றும் பெரும்பான்மை இமாலயப் பகுதிகள் இரக்கமின்றி அழிக்கப்படுகின்றன, குறிப்பாக கார்ப்பரேட்டுகள் பேராசை லாபத்திற்காக. சிமெண்ட் ஆலைகள், அணைக்கட்டுகள், சாலைகள், கட்டடங்கள் ஹோட்டல்கள், மோட்டல்கள் (காரிலே வந்து  காரிலேயே உணவருந்தும் வசதி உள்ள பரந்துவிரிந்த உணவு விடுதிகள்) முதலிய பலவும் பணக்காரர்கள் வசதிக்காக அங்கே எழுந்த வண்ணம் உள்ளன, இமாலய மலைப் பகுதிகளின் ஆரோக்கியம் பற்றிய கவலை ஏதுமின்றி. இந்தியப் பழங்காலப் பாரம்பரிய பெருமிதங்கள் பற்றி போலி மத உணர்வையும் வகுப்புவாத உணர்வையும் எழுப்புகிறது இன்றைய ஆளும் தரப்பு; ஆனால் அவர்களே எந்த இயற்கை சக்திகள் பல கடவுள்கள், பெண் தெய்வங்கங்களின் ஆலயங்களை எழுப்பக் காரணமானவைகளோ, அதே இயற்கையை அழிக்கின்றனர். இங்கே அங்கே என்றில்லாமல் பெரும் உயரத்தில் நுட்பமான உணர்வுமிகுந்த கர்ண பிராயாகையில் கூட (இயற்கையை அழித்து) சாலைகள், இரயில்வே பாதைகள், பெரும்பாலும் தனியார் மயமான கான்கிரிட் கட்டுமானங்களைத் திணிக்கிறார்கள். (இரண்டு நதிகள் சங்கமிங்கும் இடம் பிரயாகை.  உத்தர்கண்ட் மாநிலத்தில் விஷ்ணு பிரயாகை, ருத்ர பிரயாகை, நந்த பிரயாகை, கர்ண பிரயாகை, தேவ பிரயாகை என்ற ”பஞ்ச பிரயாகை” உள்ளன. இவை அலக்நந்தா நதியுடன் வேறு ஐந்து நதிகள் சங்கமிக்கும் இடங்கள் ஆகும். கர்ண பிரயாகையும் சமோலி மாவட்டத்தில் உள்ளது. இது ’அலக்நந்தா’ நதியும் ‘பிண்டார்’ நதியும் சங்கமிக்கும் இடம். கர்ணன் தவம் செய்த இடமாதலால் அந்தப் பெயர் பெற்றது.) இத்தகைய செயற்கை கட்டுமானங்களால் மலைச் சரிதலும் பெரும் வெள்ளப் பெருக்கும் ஏற்படக் காரணமாகின்றன. போலி தேசியவாதத்தை ஆள்வோர் உதடுகள் உச்சரிக்கும்போது மேற்குலகைப் பார்த்து கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறது. பல இடங்களிலும் புதிய கட்டுமானங்களைக் கட்டவும், சுரங்கங்களைத் தோண்டவும் சட்டபூர்வமான தடைகள் உள்ளபோதும் இயற்கையை அழித்தல் தொடர்கிறது. இன்றைய தினம் நிலைகுலையாத இமாலயா பகுதிதான் மிகவும் ஆழமான அழுத்தத்திலும் இயற்கைத்தன்மை காயப்படுத்தப்பட்டு பாதிப்பு மாறுதலுக்கும் உள்ளாகும் நிலையில் உள்ளது.

          இரக்கமற்று மாபெரும் நதிகள் மாசுபடுத்தப்படுகின்றன; அதைச் சுற்றி ‘கங்கா மாதா’ போன்ற ‘மிகப் புனித’ அடையாளங்கள் என்றெல்லாம் பாசாங்குத்தனமான போலி மதவாதப் பிரச்சாரம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. கங்கா, யமுனா போன்ற நதிகளைச் சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் லட்சக் கணக்கான கோடி ரூபாய்களும் மறைந்து போனதற்குப் பிறகும் அந்த நதிகள் கழிவுநீர் கால்வாய்களாகத்தான் உள்ளன! இதுதான் முரண்பாடான ஆளும் வர்க்கத்தின் பிளவுபடுத்தும் கொள்கை; அதைப் பயன்படுத்திச் சுற்றுச்சூழலை மேலும் ஏகபோக நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் நலனுக்குப் பயன்படுத்துவது.

வளர்ச்சி : நேருவினது மாடலும் ‘காலனிய புத்தி கட்டமைப்பும்’

          ‘நேருவினது மாடலி’ல் அமைந்த பொதுத்துறைப் பிரிவு அடித்தளத்தைத் தாக்குவதற்கான புதிய ஆயுதமே சுற்றுச்சூழல். தற்போதைய பொருளாதார மற்றும்

சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கெல்லாம் அந்த  ‘மாடல்’தான் பொறுப்பு என வலதுசாரி பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. (படத்தில் என்எல்சி திறப்புவிழாவில் காமராஜருடன் நேரு) விடுதலைக்குப் பிறகு நாட்டில் ஏற்பட்ட அனைத்து சாதனைகளும் தற்போது  வலதுசாரி பிற்போக்குச் சக்திகளால் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. பழிவாங்குதல் உணர்வால் உந்தப்பட்ட அவர்களது நோக்கம், நேரு மாடல் நிர்மாணித்தப் படைப்பூக்கப் பொருளதாரத்தைப் பிய்த்து எறிவது என்பதே.  

          விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் ‘காலனிய புத்தி கட்டமைப்பு’ நிலவியதாகக் கூறி, அதுவே சுற்றுச்சூழல் இயற்கை அழிவதற்குக் காரணம் எனவும் குற்றம் சாட்டுகிறார்கள்! எப்படி இருக்கிறது? அது சரி, ‘காலனிய புத்தி கட்டமைப்பு’ என்பதுதான் என்ன? இயற்கையைக் கட்டுப்படுத்தும் அளப்பரிய ஆற்றல் தொழில்நுட்பத்திற்கு இருக்கிறது என்ற ‘எஃகு போன்ற நம்பிக்கை’தான் அது. அந்தக் குயிக்தியான தாக்குதல் திட்டத்தின் கீழ், பக்ரா

நங்கல் (படம் --பஞ்சாபில் உள்ள அணை), பொக்காரோ (ஜார்கண்ட் மாநில எஃகுத் தொழிற்சாலை), பரூனி (மத்திய பீகார் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் அனல்மின் நிலையம்), விசாகப்பட்டினம் எஃகுத் தொழிற்சாலை, இரயில்வே முதலாகத் துவங்கும் அனைத்துமே  இயற்கையின் அழிவுக்குக் காரணம் என்ற பிரச்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. தங்களைத் தாங்களே இயற்கையின் சிறந்த நண்பர்கள் எனப் புகழ்ந்து கொள்பவர்கள், தங்கள் ‘புதிய’ தொலைநோக்குக் கண்ணோட்டத்தை மக்களை நம்பச் செய்ய முயல்கிறார்கள்!

          விடுதலை பெற்றதிலிருந்து தேசம் பின்பற்றும் சுயேச்சையான சுயச்சார்பு வளர்ச்சிப் பாதையை நலிவடையச் செய்ய, ‘இயற்கை சார்ந்த’ (‘eco’) சுற்றுச்சூழல் பிரச்சனையையே மிகச் சாமர்த்தியமாக பயன்படுத்துகிறார்கள். உத்தர்காண்டில் 75 நீர்மின் திட்டங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன என்பதை நாம் குறித்துக் கொள்ள வேண்டும். அந்த எண்ணிக்கையை அளவிறந்து 171 ஆக உயர்த்த திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. (மாபெரும் பாதகமான) இதனைச் செய்வது, மிகவும் உரத்த குரலில் நேருவின் கட்டமைப்பை விமர்சனம் செய்யும் இன்றைய ஆட்சியாளர்களே!

சுதந்திர இந்தியாவும் வளர்ச்சி செயல்திட்ட அணுகுமுறையும்

          சரியான நோக்குநிலையில் விஷயங்களை வைத்து நாம் அணுகினால், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா, சுயசார்புள்ள -- பொதுத்துறை நிறுவனங்கள் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட  ‘தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிப் பாதை’யைப் பின்பற்றியது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். காலனியத்தால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டு பிற்போக்குநிலையில் இருந்த இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதாரச் சுதந்திரம் இவை இரண்டையும் பாதுகாக்க, இந்தப் பாதை நமக்குப் பேருதவியாக இருந்தது. இந்த வழிமுறையில்தான் இந்தியா கனரக இயந்திரங்கள் தயாரிக்க முடிந்தது, நவீனமான உற்பத்திச் சாதனங்கள் (சமூக மற்றும் பொருளாதார ரீதியில், குறிப்பிட்ட அரசியல் சூழ்நிலையில், பண்டங்களின் பொருளாதார மதிப்பை உருவாக்குவதற்குப் பயன்படும்-- மனித ஆற்றல், நிதி தவிர்த்த-- இதர மூலப் பொருள் வசதிகளை உற்பத்திச் செய்தல்) உருவாக்குவதற்கும், நவீன கட்டமைப்பைக் கட்டியெழுப்பவும் முடிந்தது. தொழில்நுட்ப அறிவு ஆற்றலைச் சோஷலிச நாடுகள், குறிப்பாக சோவியத் யூனியன் நமக்குத் தேவைப்பட்டபோதெல்லாம் வழங்கின. இப்படித்தான் இந்தியா வலிமையான சுயசார்புள்ள சுதந்திர தேசமாக இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது.

வளர்ச்சியும் சுற்றுச் சூழலும்

          இந்தச் சாதனைகளைத்தான் இன்றைய ஆட்சியாளர்கள் அழித்துவிடத் துடிக்கிறார்கள். சுற்றுச்சூழல் குறித்த கேள்விகளைச் சரியான நோக்குநிலையில் மட்டுமே அன்றி, அதற்கு வெளியே வைத்துப் பரிசீலிக்க முடியாது. பொதுத்துறை நிறுவனங்களை (பொருளாதார) அதிகாரத்தின் உச்சத்தில் தொடர்ந்து பேணவும், கார்ப்பரேட் நிதிமூலதன முதலாளிகளை ஓர் எல்லையில் வைக்கவும், அதே நேரம் சுற்றுச்சூழல் இயற்கையையும் பாதுகாப்பது எப்படி என்பதே இன்றைக்கு நம்முன் உள்ள கேள்வி. தொழில்மயப்படுத்துதல், வேளாண் வளர்ச்சி முன்னெடுக்கப்படுவதுகூட சுற்றுச்சூழல் அழிவதற்குக் காரணமாகின்றன என்பதில் சந்தேகமில்லை.  ஆனால் தனியார் கார்ப்பரேட்டுகளின் அபரிமித வளர்ச்சி என்பது சுற்றுச்சூழலின் மிகப்பெரிய எதிரி. சுற்றுச்சூழல் இயற்கையைப் பாதுகாக்கும் அதே வேளையில் வளர்ச்சியை எப்படி அடைவது என்பது பற்றிய விவாதத்திற்கு இதுதான் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.

          (அரசனை நம்பி புருஷனைக் கைவிடுதல் என்ற பழமொழிக்கேற்ப, கார்ப்பரேட்டுகளை நம்பி) பொதுத்துறை பிரிவை அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்து எறிவது இயற்கையைப் பாதுகாக்க உதவாது. அதானி, அம்பானி மற்றும் பிற நிதிமூலதனக் கார்ப்பரேட்டுகள் மற்றும் நிதி ஏகாதிபத்திய வணிகர்களுக்கு மிகப் பெரிய சலுகைகளை வழங்குவதால், அவர்கள் சுற்றுச் சூழலை அழிப்பதை இதற்குமுன் காணாத வகையில் விரைவுபடுத்துகிறார்கள். எந்தவித எதிர்ப்பும் தண்டனையும் இன்றி  (அரசின் ஆதரவோடு) சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களை ஒருசிறிதும் மதிக்காமல் காற்றில் பறக்கவிடுகிறார்கள். சுற்றுச்சூழல் கட்டுப்பாடு உள்ள இடங்களிலேயே நிதிக் குழுமங்களுக்கு அடிப்படைக் கட்டுமானங்களைக் கட்ட மனம்போன போக்கில் தன்னிச்சையான அனுமதிகள் வழங்கப்படுகின்றன; அங்கே அவர்கள் வங்கிச் செயல்பாடுகளையும் தங்கள் வேளாண் வணிக நலன்களையும் மேற்கொள்கிறார்கள் . கடந்த ஐந்து ஆண்டுகளைப் போல ஒருபோதும் நமது காடுகள், நதிகள், கடல்கள், மண் மற்றும் மலைகள் மிகப் பெரிய ஆபத்துக்கு உள்ளானதில்லை. கட்டுப்பாடற்ற வளர்ச்சிக்குச் சுற்றுச்சூழல் ஒரு தடையாக இருக்கிறது என அவர்கள் கருதிச் செயல்படுகிறார்கள்.

இயற்கையை நிதிமூலக் கார்ப்பரேட்டுகளின் தேவைக்காக வளைப்பது நிச்சயமாக ’காலனிய’ அணுகுமுறையே.

வளர்ச்சிக்கான நமது செயல்திட்ட அணுகுமுறையை மறுபரிசிலனை செய்து அதன் திசைவழியை நாம் நிச்சயம் மாற்றியமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அணைகளும் சாலைகளும் நமக்கு அவசியம் வேண்டும்; ஆனால் எப்போது, எங்கே மற்றும் எந்தவகையானது என்ற கேள்வியும் முக்கியம். வளர்ச்சிக்கு உத்தர்காண்ட் பகுதியில் 171 அணைகள் மிக அவசியமா? (2013 ஜூன் மாதம் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோரை பலிவாங்கிய) உத்தர்காண்ட் கேதார்நாத் துயத்திற்குப் பிறகு உச்சநீதிமன்ற நிபுணர்குழு அப்பகுதியில் மேலும் அணைகள் கட்டுவது பேரழிவுகளைத் தீவிரப்படுத்தும் எனக் கருத்து தெரிவித்து எச்சரித்தது. பாரா-கிளேசியல் பகுதிகளில் இனியொரு நீர்மின் திட்டமும் கட்டப்படக்கூடாது என்று அக்குழு தீர்மானகரமான பரிந்துரையும் செய்தது. (பாரா-கிளேசியல் என்பது, பனிக்குன்றுகள் உருகுவதால் அருகமைப் பகுதிகளில் வண்டல் மண் குவிந்து, புதிய நிலப்பரப்புகள் உருவாகி, மனிதப் பயன்பாட்டிற்கு ஏற்ற நில அமைப்புமுறை, நேரடியாக பனிக்குன்றுகள் உருவாவதாலும், உருகுவதாலும் அமைவது. இது இயற்கையான நிகழ்வு). கடல் மட்டத்திற்கு மேல் 11,500 அடி உயரத்தில் 1982ல் அமைக்கப்பட்ட உத்தர்காண்ட் மாநில நந்தாதேவி புவிக்கோள (பல்லுயிர் பெருக்க) சரணாலயம் (Nanda Devi Biosphere Reserve) பகுதியில் இனி எந்தவகையிலும் செயற்கையாக வெடிவைத்துத் தகர்ப்பது மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

உத்தர்காண்டில் பலநூறு கிராமங்களை இடப்பெயர்ச்சி செய்து வேறுஇடத்தில் ‘மறுநிர்மாணம்’ செய்வது சுற்றுச்சூழலை ஆபத்திற்கு உள்ளாக்கும். நொறுங்கிவிழும் நிலையில் உலகின் மிகப்பெரிய கங்கை நதிப்புறத்துச் சுந்தர்வனக் காடுகளின் சுற்றுச்சூழல் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன. அந்த அலையாத்தி சதுப்புநிலக் காடுகளிலிருந்து பல லட்சம் டன்கள் கார்பன்-டை- ஆக்ஸைடு வெளியிடப்படுகிறது. (அங்கே வன விலங்குகளின் வாழ்க்கையிலும், கடற்கரை பரிணாமத்திலும் உயிரியல் காரணிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. கடல்அலைகளை ஆத்தி அவற்றின் வீரியத்தைக் குறைத்து ஊருக்குள் கடல் புகாமல் தடுப்பதால் அலையாத்திக் காடு, கண்டல் –மாங்க்ரோ- காடு என்று

பெயர். சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரம் உலகின் இரண்டாவது பெரிய சதுப்புநில கண்டல்காடு --படம்) அந்தமான் வளர்ச்சித் திட்டம், சுற்றுலா வளர்ச்சி, பிரம்மாண்ட கப்பல் போக்குவரத்துத் திட்டங்களால் தடித்ததோல் போர்த்திய பிரம்மாண்ட ஆமைகள் --கடல் ஜீவராசிகளில் 2மீட்டர் நீளமும் 900 கிலோ எடையும் கொண்ட நீர்வாழ் பிராணி -- போன்றவை அபாயத்திற்கு உள்ளாகின்றன. இவையெல்லாம் பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகின்றன.

பொருளாதார –சுற்றுச்சூழல் செயல்திட்டம் :

தொழில்நுட்ப நோக்குநிலை மறுதகவமைத்தல்

          இயற்கையை இதற்கு மேலும் நாம் இழக்க முடியாது. இது, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்கள் ஒன்றொடு ஒன்று தொடர்புடைய உறவால் இணைத்து அணுகுக வேண்டிய பிரச்சனை. பிரம்மாண்ட ஏகாதிபத்திய வணிகக் குழுமங்களைக் கட்டுப்பாடின்றிச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தால், சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பற்றி ஒருசிறிதும் கவலைப்படாது தன்னிச்சையான வளர்ச்சியை நோக்கி அது செலுத்திவிடும்; குஜராத், கர்னாடகா முதலிய கடற்கரைப் பிரதேசங்கள் உட்பட இதுதான் நடந்தது; இயற்கை மீது மிக அதிகமான தாக்குதல் அங்கெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது; அது இமயமலைப் பகுதிகள், நதிகளை மாசுபடுத்தல் மற்றும் வற்றச்செய்தல், லாபத்திற்காக மண்ணைப் பாழாக்கி எரிவாயு எடுப்பது, மிகப்பிரம்மாண்டமான கட்டுமான வேலைகளை நிதிமூல நிறுவனங்களின் உதவியால் எழில்கொஞ்சும் இயற்கையை வெறும் குப்பைக் குவியல் மேடாக்கிக் கொண்டுள்ளன.

          கட்டுப்பாடற்ற நகரமயமாக்கல் பெரிய நகரங்களில்கூட அதிக அளவில் குப்பை குவிவதற்கு இடமாகிறது. இந்த அணுகுமுறையை மேற்கத்திய உலகமும் கண்டிக்கிறது.

          வளர்ச்சி என்பதை (மகாத்மா காந்தி கூறியதைப் போல தொழில்நகரங்களில் மையப்படுத்தி ராட்சச உற்பத்தியில் ஈடுபடுவதற்கு பதில்) சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSMEs) மாற்ற வேண்டும்; வீட்டிலேயே சிறு உற்பத்திக் கூடங்கள், வேளாண்மை முதலியவற்றைப் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிச் செயல்பாடுகளை உச்சபட்ச அதிகாரமுடையதாக ஆக்குவதன் மூலம் உள்ளூர் முயற்சிகளைத் துவக்க வேண்டும். பொருளாதாரத்தை மையத்தை நோக்கிக் குவிப்பதற்கு எதிராக, ஜனநாயகப்படுத்திப் பரவலாக்க வேண்டிய அவசியத் தேவை எழுந்துள்ளது. உற்பத்தி மையங்கள் என்பன இடிபாடுகளுடைய மிச்ச சொச்சங்களின் குப்பைக் குவியலாக மாறி, நிதிமூலதனமும் சேவைப்பிரிவு மட்டுமே வளர்ச்சி காண்கின்றன. புதிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் அவைகளை புதிய நோக்குநிலை மறுதகவமைப்பு செய்ய வேண்டியது அவசியம். நிதிமூலதனங்களின் லாபம் வளர்ச்சி அடையும் போதும், இயற்கை இரக்கமற்று அழிக்கப்படும்போதும் வளர்ச்சி ஒருநிலையில் நின்று போனதே. உற்பத்திக்குப் புதிய மற்றும் தூய்மையான தொழில்நுட்பப் பயன்படுத்துதலின் தேவையைக் கோவிட் ஊரடங்கு வலியுறுத்தியது; பேட்டரி போன்ற டிஜிடல் மற்றும் ஆன்-லைன் தொழில்நுட்பப் பயன்பாடு அதிகரிக்கப்பட வேண்டும். தூய்மையான மற்றும் பசுமையான தொழில்நுட்பம் வளர்ச்சிக்கான ஆற்றலையும் கொண்டுள்ளது, அதே நேரம் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கிறது.

          வேறுவிதமாகச் சொல்வதென்றால், அரசு / பொதுத்துறை பிரிவுகள் புதிய தொழில் நுட்பத்தின் அடிப்படையிலும், புதிய கடமைகளை முன்னிறுத்தியும் மீண்டும் துவங்கப்பட வேண்டும்; அவைகளின் செயல்பாட்டில் இயற்கையைப் பாதுகாப்பது முக்கிய பங்காற்றும். (ஒரு உதாரணம், வாடிக்கையாளர்கள் முழு திருப்தி அடையாவிட்டாலும் பொதுத்துறை பிஎஸ்என்எல் தொலைதொடர்பு நிறுவனம் தனது செல்கோபுரங்களின் திறனை உயிரினங்களின் உடல்நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விஞ்ஞானபூர்வமான சட்டப்படியான வரையறையில் கட்டுப்படுத்தி வைத்துள்ளபோது, தனியார் நிறுவனங்கள் லாபம் ஒன்றையே குறியாகக் கொண்டு அலைவரிசைத் திறனை –உயிரின உடல்நலன் பாதிப்புப் பற்றிக் கவலைப்படாது-- அதிகரிப்பதைச் சொல்லலாம். –மொழிபெயர்ப்பாளர் இணைத்தது).

அரசுக்குத்தான் இயற்கையைப் பாதுகாத்தல், பொருளாதாரத்தை வளர்ச்சி பெறச் செய்தல் என்ற இரட்டை பொறுப்புணர்வு உண்டு. திட்டங்களைச் சரியான திசைவழியில் செயல்படுத்துவதன் மூலம் இந்தக் கடமையை நிறைவேற்ற முடியும். பொதுத்துறை நிறுவனங்கள் மீண்டும் உச்சநிலை அடைய வேண்டும், நிதி முதலீடு பாய்வதைக் கட்டுப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் அதனது தொழில்நுட்ப அடித்தளத்தை மாற்றி ஏனைய பிரிவுகள் வளர்ச்சிக்கும் உதவ வேண்டும்.  பொதுத்துறை நிறுவனங்களின் பழைய தொழில்நுட்ப – பொருளாதாரக் கட்டமைப்பு இனியும் நன்கு செயல்பட முடியாது, அவை வழக்கொழிந்தவை. புதிய தொழில்நுட்பம் மக்களுக்கும் தனிநபர்களுக்கும் பயன்படுத்த நட்புரீதியானது. பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய பரிவான புரிதல் இவற்றின் இயக்கவியல் ரீதியான ஒன்றிணைப்பே காலத்தின் தேவை. 

          சுற்றுச்சூழல் வளர்ச்சிப் பாதையில் முக்கியமான தடைக்கல் மிகப் பெரிய நிதி ஏகாதிபத்தியங்கள். அவர்கள் புதிய மற்றும் தூய்மை தொழில் நுட்பம் பரவலாக்கப்படுவதில், சிறிய அளவு உற்பத்தி மற்றும் வணிகத்தில்கூட, தலையிட்டுத் தடுக்கிறார்கள். உதாரணத்திற்கு சூரிய சக்தி, பேட்டரி பேனல்கள் மற்றும் போக்குவரத்து அறிமுகப்படுத்துவதை அவர்கள் எதிர்க்கிறார்கள்.  

பேரழிவின் விளிம்பில் சுற்றுச்சூழல்  

          உலகம் சுற்றுச்சூழல் பேரழிவின் விளிம்பில் நிற்கிறது. பருவநிலை மாறுதல் சீர்குலைக்கப்பட்டு கவலைதருவதாக மாறுகிறது. துருவப் பிரதேசங்கள் விரைவாக உருகுகின்றன. காடுகள், பெருங்கடல்களின் கார்பன் உட்கிரகிப்புத் திறன் (Carbon sinks) தீவிரமாகக் குறைகிறது. (காடுகள் முக்கியமாக பெருங்கடல்கள் உலகின் 50 சதவீத கார்பன் வெளியேற்றத்தை உட்கிரகித்து, கார்பன் வளிமண்டலத்தில் சேராது காக்கும் இயற்கையான பெரும்பணியைச் செய்கின்றன. இல்லையெனில் கார்பன் அதிகரிப்பால் புவி வெப்பமயமாதல், துருவங்கள் உருகுதல், பெருவெள்ளம், வறட்சி, கடல்மட்டம் உயர்தல், வளிமண்டல ஓசோன் படலம் பாதிப்பு போன்ற எண்ணற்ற தீங்குகள் ஏற்படும்.கரோனா பாதிப்பும்கூட மனிதர்கள் இயற்கையைச் சீர்குலைத்ததன் விளைவே). நீர்நிலைகளும் காற்றலைகளும் மாசுபடுத்தப்பட்டு சீர்குலைவுக்கு உள்ளாகிறது. இயற்கையின் பல்லுயிர் சங்கிலித் தொடர் பலஇடங்களில் அறுபட்டு நிற்கிறது. எதிர்பார்த்தைவிட விரைவாக புவி வெப்பமயமாதல் உயர்கிறது. பல்லுயிர் பெருக்கம் பாதுகாப்பற்று ஒவ்வொரு நாளும் உயிரினங்கள் மறைகின்றன. பெருவெள்ளம், புயல்கள் மற்றும் வறட்சி பொதுவான சாதாரண நிகழ்வாக மாறுகிறது. சைபீரியா மற்றும் அலஸ்காவும் கூட அபாயகரமான வெப்பநிலை உயர்வால் பாதிக்கப்படுகின்றன. குளிர் பிரதேசத்திலேயே எப்போதும் நிலைத்த உறைபனி (permafrost) மறைந்து அங்கெல்லாம் பசும்புல் வளர்ச்சி தலைகாட்டுகிறது.

          திரும்பிச் செல்லமுடியாத ஓர் இடத்தில் நாம் வந்து நிற்கிறோம். இதற்குப் பொறுப்பு,  அமெரிக்காவால் தலைமை தாங்கப்படும் பெருநிதிமூலதன வணிகமும் ஏகாதிபத்தியமுமே என்பதில் சந்தேகமில்லை. நம் அனைவருக்கும்கூட, தனிநபர்கள் உட்பட, நமக்கான சொந்த பொறுப்பு உண்டு. இது ஒரு போராட்டம் – நாம் வாழும் புவியைக் காக்க, மனித குலத்தை மற்றும் அனைத்து உயிரின வடிவங்களையும் பாதுகாப்பதற்கான போராட்டம். மிக முக்கியமான ஜனநாயகக் கடமையாக வளர்ச்சி செயல்திட்டங்கள் மற்றும் இயற்கைச் செல்வங்களை மறுஆக்கம் செய்வது இவற்றின் சரியான இயக்கவியல் உறவை நாம் அவசியம் கண்டுபிடித்தாக வேண்டும். இது அவசர அவசியம்.

  “சுற்றுச்சூழல் சிதைத்து நாம் அழிவின் தொடக்கத்தில் உள்ளோம் ஆனால், உலகத் தலைவர்களே நீங்கள் பொருளாதாரத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் உங்களை நம்பப் போவதில்லை. எங்கள் கனவுகளை நீங்கள் களவாடிவிட்டீர்கள்!”

                                            --சுற்றுச்சூழல் இளம் போராளி கிரேட்டா துன்பர்க்

          ஐநா காலநிலை மாநாட்டு உரையிலிருந்து

--நன்றி : (நியூஏஜ் பிப்.21 –27)

-- தமிழில்: நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

No comments:

Post a Comment